|
||||||||
தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாக்கிவரும் நீச்சல்காரன் |
||||||||
நான் இயற்பியல் பட்டதாரி. கல்லூரி முடித்த காலக்கட்டத்தில் இணையம் ஓரளவிற்கு அறிமுகமாகியிருந்தது ஆனால் தமிழ் வலைப்பதிவு குறித்தோ, எழுத்துரு குறித்தோ, தமிழ் இலக்கணம் குறித்தோ, தமிழ்ச் செயலிகள் குறித்தோ எந்தவித அறிமுகமும் இல்லை. ஒரு மென்பொருள் சேவை நிறுவனத்தில் பிணையத் தொழிற்நுட்பத்தில் 2008-ல் பணியில் சேர்ந்தேன். பின்னர் கிடைத்த அலுவலகக் கணினி வழியில் தான் பல உலக இணையத்தளங்கள் அறிமுகமாகியது. tamil2friends.com (தற்போது tamilnanbargal.com) என்ற இணையத்தளத்தில் எழுதி பின்னர் எனக்குள் இருந்த சிறு ஆசையில் 2009 பிற்பகுதியில் எனது இயற்பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கி கவிதை என்கிற பெயரில் சில பதிவுகளை வெளியிட்டுயிருந்தேன். அப்போதைய நோக்கம் இந்த வசீகர உலகில் நானும் ஒரு அங்கமாக வேண்டும், எனது எழுத்துக்கள் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகள் என்னை இணையத்தில் இயங்கச் செய்தது. இணையம் என்ற மெய்நிகர் உலகம் எனக்குள் பெரிய அச்சரியத்தையும், வசீகரத்தையும் கொண்டிருந்த அதே நேரத்தில் அதன் ஆபத்துக்களையும் அறியத்தந்தது. எனக்குள் போடப்பட்ட வட்டத்திற்குள் மட்டும் எழுத முடிவு செய்தேன். அரசியல், விமர்சனம், சினிமா போன்றவைகள் எழுத தடைபோட்டுக் கொண்டேன்; அடையாளத்திற்காகவும், முகமூடியாகவும் புனைப்பெயரில் 2010 பிற்பகுதியில் புதிய வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி மாதம் ஒரு பதிவு என்கின்ற அளவில் பதிவு செய்து வந்தேன். வெறும் ரசனைக்கு மட்டுமே நான் எழுதிவந்த நேரத்தில் ஏதேனும் கற்ற ஒன்றை பிறருக்கும் அறியத்தந்து எழுதலாம் என நினைத்த போது எதிர்நீச்சல் என்ற ஒரு சகோதரத் தளத்தை உருவாக்கி இணையம் சார்ந்த கற்ற விசயங்களைப் பகிரத் தொடங்கினேன். அக்காலக் கட்டத்தில் தான் இணையத் தொழிற்நுட்ப மொழிகளைக் கற்க ஆரம்பித்தேன். பரிச்சித்தும் பார்க்கத் தொடங்கினேன். கணினி அறிவியல் என்பது இற்பியல், கணிதம், உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல் இல்லை. எந்த வயதிலும் யாரும் கற்கமுடியும். ஆர்வம் இருந்தால் யாரும் படைப்பாற்றல் கொண்டு மென்பொருட்களை உருவாக்கவும் முடியும். இணையம் தொடர்பாகக் கற்றலுக்கான ஆர்வமும், எழுத வேண்டும் என்ற எழுத்தார்வமும் இவ்விரு தளங்களில் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தேன். ஒன்றுக்கு ஒன்று துணையாக இருந்தது.
படிக்கும் ஆர்வம் இருந்ததால் தமிழ்ப்புள்ளி என்ற ஒரு பக்கத்தளத்தை ப்ளாக்ஸ்பாட்டில் உருவாக்கி அதில் பத்து திரட்டிகளை இணைத்திருந்தேன். பல திரட்டிகளை ஒரு பக்கத்தில் இருந்து பயன்படுத்தும் வகையான வசதியது. வலைப்பதிவில் தேவைப்படும் சில வசதிகளுக்கு அவ்வப்போது சில நிரல்கள் தயாரித்ததுண்டு. பெரும்பாலான தமிழ்த் தொழிற்நுட்பப் பதிவுகள் எல்லாம் வெறும் செய்திப் பதிவுகளாகவே இருப்பதை உணர்ந்தேன். பிற மொழி சார்ந்த நுட்பக் கருவிகள் பற்றியும் பிற கட்டுரைகளின் மொழி பெயர்ப்பும் மட்டுமே இருந்தது. தமிழர் சார்ந்த பதிவுகள், கருவிகள், ஆய்வுகள் பற்றி ஏதுமில்லை; அந்த வெற்றிடத்தை பயன்படுத்தத் தீர்மானித்தேன். பிறகு அகராதிகள், இலக்கியம் போன்ற சில தமிழ் கட்ஜெட்டுகள் செய்தேன். இம்மாதிரி புதிய கணினிக் கருவிகள் செய்வதில் விருப்பம் உருவானது. எனவே தமிழ்ப் புள்ளி என்ற தளத்தை வெறும் கருவிகளுக்கான தளமாக வளர்த்தேன். எங்கெல்லாம் தேவைகள் உள்ளன, எதற்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளன எனத் தேடினேன்.
மென்கோலம் விதவிதமான குறியீடுகளில் ஒரு தமிழ் எழுத்தை உருவாக்க உதவும் ஒரு கருவி இது. பிளாக்கர் மறுமொழிகளில் படங்களுடன் மறுமொழி இட ஒரு நீட்சி செய்திருந்தேன் அதன் அடுத்த வசதியாக மாறுபட்ட வடிவில் மறுமொழியிட ஒரு யோசனை வந்தது. வேண்டிய குறியீட்டைப் போட்டு தமிழில் எழுதினால் அக்குறியீடு கொண்டு தமிழில் மாற்றித்தரும் கருவி தான் அது. ஒரு புதுமையான கருவிதான் பேஸ்புக், வலைப்பதிவுகள் போன்ற இடங்களில் மறுமொழி போடும் போது புதுமையாக விளங்க இதைப் பயன்படுத்தலாம். ஓரளவிற்கு வந்த புதிதில் பலர் ஆர்வமுடன் பயன்படுத்தினர். இதுவெறும் அலங்காரக் கருவிதான்.
எழுத்துபெயர்ப்புக் கருவி பிற மொழி குறியீடுகளில் இருந்து தமிழ்க் குறியீட்டுக்கு மாற்றும் செயலியை வடிவமைத்தேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, தேவநாகரி(இந்தி), ஒரியா, வங்காளி, பஞ்சாபி போன்ற எழுத்துக்களை அதற்கு ஏற்ற தமிழ் எழுத்துக்களாக மாற்றும் கருவி அது. இதற்கான தேவை மிகவும் சொற்பம் எனப் பிறகு அறியப்பட்டது. ஆனால் இந்த முயற்சியில் பன்மொழி பற்றிய அனுபவம் வெகுவாகக் கிடைத்தது. புதிய டொமைன் வாங்கிய பிறகு இச்செயலியைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் இதன் மேம்பட்ட பயன்பாடுகள் வேறு வகையிலும் இருக்கிறது. உதாரணம் அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு கருவி செய்தேன். அக்கருவியானது மலையாளக் கட்டுரையை அப்படியே எழுத்துபெயர்த்துத் தமிழில் பதிந்து விடும். அம்மாதிரியான பயன்பாடுகளுக்கு அந்த முந்தய கருவி பயன்படுகிறது.
வாக்கிய ஒப்பீட்டுக் கருவி இரண்டு தொடர்களை ஒப்பிட்டு அதில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் அனைத்து மொழிக்கும் பொதுவான ஒரு கருவி இது. சில இதழ்களுக்கு நான் எழுதிய படைப்பை திருத்தி வெளியிட்டனர். வெட்டு விழுந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைக் கண்டுபிடிக்க ஒரு யோசனை வந்ததன் விளைவே இக்கருவி. ஆரம்பத்தில் தமிழுக்கான முயற்சிதான் பின்னர் இதன் பொதுத்தன்மையால் அனைத்து மொழிக்கும் பொதுவாக மாற்றிவிட்டேன். பதிப்புத் துறை, இரண்டு பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவும் என்றெல்லாம் யூகித்தேன். ஆனால் இதன் பயன்பாடும் வெகுவாக இல்லை.
தமிழ்த் தளங்கள் சேகரிப்பு அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் கூகிளின் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் என்ற ஒரு மொழி அறிமுகமானது. அதனைக் கொஞ்சம் கற்றபிறகு அதில் தானியங்கிகள் உருவாக்க முடியும் என்று அறியக் கிடைத்து. முதன் முதலாக தமிழ்த் தளங்களைத் திரட்டிவிடலாம் என முயன்று ஒரு நிரல் எழுதினேன். அதன் முலம் அன்று 6500 தளங்கள் பெயர்களைச் சேகரித்தேன். அன்றைக்கு அதுவே தமிழ்த் தளங்களின் பெரிய தொகுப்பு. தமிழ்க் கணிமைக்கான வெற்றிடங்கள் கண்ணில் படத்தொடங்கியான. முக்கியமானதாக ஒரு பிழைதிருத்தி தமிழுக்குத் தேவை என உணர்ந்தேன். ஆனால் இத்தனைக்கும் தமிழில் பிழைவிட்டே எழுதுபவனாகிய எனக்கு அது சிறிய காரியமாகப் படவில்லை.
திருத்திக்கான முதல்கட்ட முயற்சி சந்திப்பிழைக்கு என்று ஒரு திருத்தி செய்யத் தீர்மானித்தேன். அப்போது வழக்கில் உள்ள திருத்திகளைப் பற்றித் தேடினேன். ஓரிரு செயலிகள் கண்ணில் பட்டன ஆனால் அவை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததை உணர்ந்தேன். காரணம் தமிழில் சந்தி இலக்கணத்தைக் கணினிக்குப் புரியவைக்க முதலில் சொற்களைப் புரிந்துகொள்ளவேண்டும். சொற்களைக் கணினிக்குப் புரியவைக்க வேண்டுமென்றால் முதலில் நிரலாளர் தமிழிலக்கணத்தில் துல்லியமான தேர்ச்சி வேண்டும் அல்லது மொழி அறிஞரின் துணைவேண்டும். அப்போதைய நிலையில் என்னளவில் இது சாத்தியமில்லை. ஏதேனும் குறுக்குவழிகளில் அல்லது குறுகிய எல்லையில் ஒரு செயலி உருவாக்க முடியுமா என்று முயன்றேன். பிறகு சந்தி இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றேன், ஆனால் அதைக் கணினி பகுப்பாய்விற்கு மாற்ற யுக்திகள் கைகூடவில்லை. அவ்வப்போது முயல்வேன், பின்னர் விட்டுவிட்டு பிற கருவிகளில் கவனம் செலுத்தத் தொடங்குவேன். இப்படியே ஓராண்டு கழிந்தது.
கோலசுரபி தமிழர் சார்ந்து மற்றொரு செயலி மீது ஒரு ஆர்வமிருந்தது, கோலம் வரையும் செயலி அது. இணையத்தில் சிறிய அளவில் ஒரு கோலம் தயாரிக்கும் ஒரு செயலியைக் கண்டேன். கோகுல் என்பவரின் படைப்பு அது. அதில் பயன்படுத்திய துண்டுப் பட யுக்தி சிறப்பாகயிருந்தது. உடனே அதே யுக்தியைக் கொண்டு புதிய நிரல்களில் பெரிய அளவில் செய்யப்பட்டதுதான் கோலசுரபி. ஒரு வகையில் எனக்கு இதுவொரு சவாலான பணிதான். பெரிய சவால்கள் என்னை மேலும் பக்குவப்படுத்தும் என்று திடமாக நம்புகிறேன். மேலும் இதன் நீட்சியாக ஆடுபுலி ஆட்டத்தையும் ஒரு செயலி வடிவில் கொண்டுவந்து கணினியுடன் விளையாடும் விதத்தில் அமைத்தது மேலும் அனுபவங்களைத் தந்தன. இம்மாதிரி மென்பொருள் தர்க்கரீதியான அனுகுமுறைகளில் நான் வளரத் தொடங்கினேன், அவைதான் முடிவில் நாவி திருத்தியும் ஓர் நாள் நிறைவு பெற வைத்தது.
நாவி: "நாவி" என்பது ஒரு பெரிய திட்டத்தின் சிறிய ஒத்திகை என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன். அந்தப் பெரிய திட்டம் தான் முறையாகக் கணினிக்குச் சொல்பகுப்பாய்வைக் கற்றுக் கொடுப்பது. அதற்கு மேலும் தர்க்கரீதியாகவும் மொழியியல்ரீதியாகவும் அனுபவங்கள் தேவைப்பட்டது அந்தக் கற்றாலுக்கான காலம் மூன்றாண்டுகள். இதற்கிடையில் மேலும் சில சொற்புதிர் நீட்சி, தான்தோன்றி வாசக கட்ஜெட் ஆகியவை செய்தேன். பின்னர் விக்கிப்பீடியாவில் சில தானியங்கிகள் செய்ய தேவை ஏற்பட்டது. முறையாக அனைத்தும் ஒப்புதல்களும் வாங்கி தமிழ் மற்றும் இந்தியில் இரண்டு தானியங்கி தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேரடியாக தகவல்களை ஏற்ற அனுமதியில்லை ஆகையால் இந்தக் கருவிகள் புள்ளிவிபரக் கணக்கைச் சேகரித்து தருகிறது. அதன் விளைவாக தகவலுழவன் என்ற தன்னார்வலர் மூலம் விக்சனரிக்கான ஒரு கருவி தேவைப்பட்டது. இணையத்தில் முக்கிய அகராதிகளில் இருந்து சொற்களை எடுத்து விக்சனரியில் உள்ளிடவேண்டும். எனக்கு எடுப்பதோ, உள்ளிடுவதோ பிரச்சனையில்லை ஆனால் எடுத்தவற்றை சுத்தம் செய்ய மனிதவளம் தேவைப்பட்டது. எனவே சுமார் 1.1 லட்ச தமிழ்ச் சொற்களை எடுத்துமட்டும் அவரிடம் சீர்படுத்தி உள்ளிட்டுக் கொள்ளக் கொடுத்தேன்.
அந்தத் தரவு பின்னாளைய எனது எழுத்துப்பிழை திருத்திக்கான ஆய்விற்கு உதவியது. தமிழ்ச் சொற்பட்டியல் ஒன்று இல்லாமல் இருந்த நிலையில் இருந்து என்னாலேயே எடுக்கப் பட்ட சொற்பட்டியல்வரை நடந்துவிட்டது. இன்று முடியாதவொன்று நாளை முடியும் என்று தொழிற்நுட்பத்தில் நம்புகிறேன். ஆனால் எழுத்துப்பிழை திருத்திக்கான சொற்பட்டியல் போதியளவில் இன்னமும் இல்லை. ஏனெனில் முக்கிய அகராதிகள் எல்லாம் முக்கியச் சொற்களுக்கு கொடுத்திருப்பார்கள், ஆனால் புழக்கத்தில் வரும் புதிய வார்த்தைகள், கலைச்சொற்கள் போன்றவற்றிக்கு என்றுமே ஒரு தேடல் இருக்கும். அவை அந்தத் திருத்தி வெளிவந்தபிறகு குறிப்பிட்ட இடைவெளியில் புதிபித்துக் கொள்ளத் தீர்மானித்தேன். ஒன்றும் இல்லாதிருப்பதற்கு ஓன்று இருப்பது சிறப்புதானே, அதனாலே படிப்படியாக உருவாக்கி வருகிறேன்.
அந்தப் பிழை திருத்திக்கான முக்கிய ஆய்வுப் பணி வெற்றிகரமாகவே நிறைவு பெற்றது. எஞ்சிய ஆய்வுகளும், மென்பொருள் கட்டுமானப் பணிகளும் பாக்கியுள்ளன. சித்திரை மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில் பொருளாதாரமோ, நுட்பமோ, இலக்கணமோ எனது தடையில்லை, அவற்றை வழுவில்லாமல் கணினி வழி பகுப்பாய்வு செய்வதே சவால். இடையில் டிவிட்டரில் உள்ள சிறந்த கீச்சுகளைச் சேகரித்து வழங்க தானியங்கி ஒன்றைச் செய்தேன். இதன் மூலம் ஆரோக்கியமான சமூகத் தள உரையாடல்களுக்கு உதவவும் தமிழ்ப் பங்களிப்பை ஊக்குவிக்கவும் முயல்கிறேன். இதுவரை நேரடியாகவே சுமார் 700 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
இப்படி பயனர்களின் ஆதரவு இருப்பதாலேயே ஒருமுறை தமிழ்ப்புள்ளி என்ற தளத்தைத் தவறுதலாக(தடை செய்யப்பட்ட தளம் மீண்டும் கிடைத்தது) கூகிள் கருவியால் ஸ்பேம் என்று தடை செய்தது. உடனே சொந்தமாகக் களப்பெயர் (டொமைன்) ஒன்றை வாங்கினேன். அதில் அனைத்துவிதத் தளங்களையும் இணைத்து ஒரே முகவரியில் இயங்குகிறேன். இதனால் ஒரு தளம் தடைசெய்யப்பட்டாலும் அங்கு வரும் பயனர்கள் ஏமாற்றப்படாமல் சொந்த முகவரியால் வேறுவொரு தளத்தின் மூலம் சேவையைத் தொடர்ந்து வழங்க முடியும். இதுவரை
பிறமொழி எழுத்துரு ஆய்வு, தமிழிலக்கண ஆய்வு, சொற்திரிபு ஆய்வு, கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் நுட்ப ஆய்வு, தானியங்கி ஆய்வு என தன்னார்வ நிலையில் தொடர்ந்த போது பலப்பல தேவைகளை உணரத் தொடங்கினேன். ஆனால் அனைத்தும் அந்தப் பெரிய திட்டத்தின் முடிவைச் சுற்றிச் சுற்றியே வந்தன. இப்போதைய திட்டம், எழுத்துப் பிழை திருத்தி மட்டுமே. எதிர்காலத் திட்டம்/ஆய்வு, மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள் மாற்றி, எதிர்ச் சொல் மாற்றி மேலும் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வித மொழியியல் கணினி செயல்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதே. அதனுடன் புதிய மொழியியல் சார்ந்த வாய்ப்புகள் வந்தால் அவற்றையும் செய்ய விரும்புகிறேன். இன்னும் இலக்கண ரீதியாகக் கற்றே வருகிறேன்.
இவை அடிப்படை மொழிக் கட்டமைப்பிற்கு உதவுபவை. ஆனால் எனது எல்லை தமிழர் சார்ந்த கருவிகளாகையால் எங்கெல்லாம் நுட்பரீதியாகத் தமிழ்ப் பயன்பாடு அல்லது தமிழ்ப் பண்பாட்டுத் தளங்களில் உதவமுடியுமோ அங்கெல்லாம் உதவக் காத்திருக்கிறேன். அத்தகைய முயற்சியாகவே தமிழ்ப்புள்ளி தளத்தின் அத்தனைக் கருவிகளும் விளங்கும். சிறந்த ஆங்கில திருத்திகளில் உள்ள மொழியியல் கருவிகள் எழுத்துப்பிழை திருத்தி, இலக்கணப்பிழை திருத்தி, அருஞ்சொற்பொருள், மொழிமாற்றி ஆகும். முதலில் இக்கருவிகள் உருவாக்க ஆய்வுகள் வேண்டும், பின்னர் கருவிகள் வேண்டும், பின்னர் அனைத்துவித நுட்பத்திற்கு ஏற்ப வளரவேண்டும். இவற்றைச் செய்ய முயல்வது இவ்வரிசையில் எனது திட்டங்கள்.
அதே போல எழுத்துத் துறையில் எனது எல்லைக்கு ஏற்ப (அரசியல், சினிமா, தனிநபர் விமர்சனம் இன்றி) எழுதவும் நகைச்சுவை, கற்பனை உணர்வுகளை வளர்க்கவும் ஆவல் கொள்கிறேன். கவனிக்கும் போது சந்திப் பிழைக்கான தேவையின் விதை எனது எழுத்தில் தான் கிடைத்தது. அன்று கே.ஆர்.பி.செந்தில் எனது ஒரு பதிவில் சந்திப்பிழைகள் இருப்பதை சுட்டிய போதே மனதில் ஒரு வேட்கை குடிகொண்டது என்பதை மறக்க முடியாது. நேரம் கூடும் போது இணைய இதழ்களிலும், அச்சு இதழ்களிலும் தொடர்ந்து எழுதவும் ஆசை.
மொழி வளர்ச்சி இன்றைக்கு மொழி வளர்ச்சியின் முக்கிய அங்கங்களாக நான் பார்ப்பது அரசியல், பொருளாதாரம், ஊடகம். ஒரு மொழியால் எவ்வளவு பொருளாதாரம் நமக்குக்கிடைக்கும் என்பதைக் கொண்டே அம்மொழி வளர்வது கண்கூடு. உதாரணமாக ஆங்கிலம் என்ற பன்னாட்டு வணிகமொழியைக் குறிப்பிடலாம். இதைப் போல இந்த மொழி தெரிந்தால் தொழிற்பயன்பாடு இருக்கும் என்றால் அம்மொழி வளரும். அதற்காகத் தேவைக்கு மீறி மொழியைக் கட்டாயமாக்கி வணிகத்தில் தினிப்பதும் தவறு. எந்த மொழி அரசியல் நிர்வாகத்தில் பயன்படுகிறதோ அதுவே மக்களாலும் பயன்படுத்தப்படும். உதாரணமாக இந்தியை அலுவல் மொழியாக்குவதால் அம்மொழிப் பயன்பாடு அதிகரிக்கும். அதே போல ஊடகப் பயன்பாடு தற்காலக் கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் உலகம் சுருங்கிவிட்டது நேரமும் குறைந்துவிட்டது. தகவலைப் பரிமாற எது சிறந்த மொழியோ அதுவே பயன்பாட்டு மொழியாகிறது. சிறந்த உதாரணம் சமூகத் தளங்கள் கருவிகள் எல்லாம் ஆங்கில மயமானதால் ஆங்கிலத்திலேயே தொடர்பாடல்கள் நிகழ்கின்றதைக் காணலாம். தமிழில் சிறந்த திருத்திகள் இல்லாவிட்டால் வரும் தலைமுறைகள் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொள்வர். அந்தவகையில் தமிழ் இயற்கையாகவே மற்ற தெந்தியமொழிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது.
கணித்தமிழ் வளர்ச்சிக்கு நான்கு காராணிகள் தேவைப்படும் இணையத்தள வளங்கள்: ஒருமொழிக்கான அடிப்படை கொள்ளளவு கொண்ட விசயங்கள் இணையத்தில் இருக்க வேண்டும். இதில் முக்கியமான அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சமூகத்தளங்கள், கலைப்படைப்புகள் என பரவலாகவே உள்ளன. இந்தச் சமச்சீர் விகிதம் முக்கியமானவை. வெறும் சமூகத்தளங்கள் மட்டுமிருந்தால் இணையம் சுவாரசியமாகவோ, தகவல்பூர்வமாக இல்லாமல் போகியிருக்கும்.
பல்லூடகம்:எழுத்து, ஒலி,ஒளிக் கோப்புகள், காணொளிகள், சலனப்படம் என நவீன தொடர்பாடலில் கலந்த ஊடகத்தில் தமிழ் வேண்டும். ஆங்கிலச் சித்திரத்தைவிட தமிழ்ச் சித்திரம் கூடுதல் உணர்வைக் கூக்க வல்லது என்பது உணரக்கூடியதே. பல செய்தி ஊடகங்கள் தமிழில் வெளிவருகின்றன. மேலும் அதை அறியும் பொருட்டுத் தமிழ்த் தளங்களைச் சேகரிக்கும் முயற்சியும் செய்தேன். இன்றுவரை 14000 தமிழ்த் தளங்கள் கண்டு சேகரித்துள்ளேன். செய்தி ஊடகங்கள், இதழ்கள், தொலைக்காட்சி அலைவரிசையின் இணைய வெளியீடு ஆகியவை இவற்றிக்குப் பலம் சேர்ப்பவை.
தமிழ்ப்பயனர்: தமிழர்கள் என்பதைவிட தமிழைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு காரணம். பயனர்களே இல்லாமல் என்னதான் வளங்கள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது.
தொழிற்நுட்பம்: பயனர்களும், வளங்களும் இருந்தாலும் தங்களில் கருவியில் உள்ளிட முடியாவிட்டால் அம்மொழி வளர்ச்சி குறையும். எனவே வெளிவரும் கருவிகளுக்கான எழுத்துருப் பிரச்சனைகளுக்குத் தீர்வு, மொழி சார்ந்த திருத்திகள், இதர மொழி ஆதரவுடன் விளங்கும் இடைமுகங்கள் எனத் தொழிற்நுட்ப வளர்ச்சியும் வேண்டும்.
தமிழ்க் கணிமை வளர்ச்சி தமிழ் உட்பட (ஆங்கிலம் தவிர) மொழிரீதியான கருவிகளுக்கு வணிகரீதியான சந்தை இருக்கப்போவதில்லை, அப்படியென்றால் தன்னார்வளர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள், அரசின் ஆகிவற்றின் கையில்தான் மொழிசார்ந்த கணிமை வளர்ச்சி உள்ளன. பின்னருள்ள இரண்டில் நான் அங்கமில்லை எனவே தன்னார்வப் பங்களிப்பாக இதைச் செய்ய கடன்பட்டுள்ளேன்.
தடைகள் தன்னார்வளப் பணிக்கான தடைகள்:
அமைப்புகளின் பணிக்கான தடைகள்
அரசுப் பணிகளின் தடைகள்
விளையாட்டாக நுழைந்த இணையம் ஒரு கட்டத்தில் எனது தொழிலைவிட முக்கியமாகிய நிலைவரை வந்தது. ஆனால் அதிகப் பட்சம் ஏழாண்டுகள் வரைக்கும் எனது தொழில் தவிர மற்றொரு பணிக்காக முழு நேரம் செலவு செய்வதால் ஓய்வு நேரங்களை மட்டுமே இணையத்தில் தற்போது செலவிடமுடியும். ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று மட்டும் உறுத்தல் உள்ளது.
தொடர்புக்கு: neechalkaran@gmail.com தொகுப்பு : ஜோதிஜி, திருப்பூர் |
||||||||
by Swathi on 10 Mar 2014 0 Comments | ||||||||
Tags: Neechalkaran Neechalkaran Tamil Technology Contribution Tamil Neechalkaran தமிழ் நீச்சல் நீச்சல்காரன் தமிழ் மென் பொருள் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|