LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பிரபஞ்சன்

நீரதன் புதல்வர்

அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு முதல் அரசர் பணி செய்யும் பகுதி என்பதால், தெரு இருளாமல்பார்த்துக் கொள்வார்கள். ஆனால், தெருவில் நாய்கள் அதிகமாகி இருக்கின்றன. மனிதகுலத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அவைதான் எங்கு போகும்?

அவனுடைய நண்பன் செல்லில் வந்தான். வந்துகொண்டு இருப்பதாகவும் அலுவலகத்தில் இன்று வேலை அதிகம் என்றும் சொன்னான். ஆறு மணிக்கு வெளிப்பட்டிருந்தால், அலுவலக காரில் சென்று சோழ பஜாரில் இறங்கியிருப்பான். ஆட்டோ பேசி ஏறி அமர்ந்தான். 'ஆச்சர்யமா இருக்கு சார், நீங்கள்லாம் ஆட்டோவில் போறது... முதல் அரசருடன் நீங்கள் இருக்கிற நிறைய போட்டோவைப் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

''ஆட்டோ இல்லை தம்பி, பஸ்ஸில் போறதுதான் என் தகுதி. நண்பர் காத்திருக்கிறார். அதுக்காகத்தான்.''

சோழ பஜாரில், அந்தப் பழங்காலக் கட்டடத்தின் மேல் தளத்தில் நான்கு புத்தக விற்பனைக் கடைகள் இருந்தன. அதில் ஒன்று மூர்த்தியின் நண்பருடையது. மூர்த்தி உள்ளே போய் அமர்ந்ததும் சட்டென்று வெக்கை தாக்கியது. மேலே மொட்டை மாடி. வெயில் காலத்தில் வெக்கை, கோழி இறகுபோல் இறங்கும். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே அடுத்த கோடைக்குள் ஏ.சி. போட்டுடுவேன் என்று சொல்லிவருகிறான் பரிமேலழகன். கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஆர்.கே-வின் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். 'அருமையான புத்தகம்’ என்றான். அழகான தயாரிப்பு. ஆனால், ரேக்கில் இருந்த நான்கு புத்தகங்களும் அப்படியே இருந்தன.

கடையைச் சாத்திப் பூட்டிவிட்டுப் புறப்பட்டான் பரிமேலழகன். இரண்டு பேரும் சோழ பஜாரின் லேண்ட்மார்க்காக இருக்கும் அந்த ஹோட்டல் பாருக்குச் சென்றார்கள். கோடை காலத்தில் பார்கள் நிறைந்து வழிவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் மூர்த்தி. முடித்து எழுந்த இருவரின் இடத்தில் அவர்கள் அமர்ந்தார்கள்.

''என்ன சார் லேட்? வழக்கம் போலத்தானா?'' என்று விசாரித்தார் பாலு. அவர்கள் தலையசைத்தார்கள். பார் மிகவும் இரைச்சலாக இருந்தது.

''சாராயக் கடையில் இந்தச் சத்தம் இல்லை'' என்றான் மூர்த்தி.

''ஆனால், இங்கே வருகிறவர்கள் சற்று மேம்பட்டவர்கள் என்பது ஐதீகம்.''

''சாராயக் கடையில் பார்த்திருக்கிறேன். ஆயிரம் யோசனைகளுடன் வருவார்கள். சரக்கையும் பாக்கெட் வாட்டரையும் வாங்கிக் கொண்டு அப்படி ஒதுங்குவார்கள். என்ன காரணத்தாலோ குடித்து முடிப்பதில் அவசரம் காண்பிப்பார்கள். முன்னால் இருக்கும் சாராயக் குவளையை உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். உலகத்தில் ஒட்டுமொத்தக் கசப்பும் அந்தக் குவளையில் மிதப்பதை அவர் மட்டுமே அறிவார். குடிக்கிறது, எதையும் மறக்கிறதுக்கு இல்லை பரி. எல்லாத்தையும் நினைச்சுக்கிறதுக்கு!''

அவர்களுக்கு உரியது அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது. மற்றும் சுண்டல், முறுக்குகள். மூர்த்தி சிக்கனும் பரி மீனும் வாங்கிக்கொண்டார்கள். கூட்டம் குறைந்துகொண்டு இருந்தது. மேசைகளின் மேல் கவிழ்ந்து இருக்கும் பல்புகளைச் சுற்றும் புகையையே பார்த்துக்கொண்டு இருந்தான் மூர்த்தி. ஒளியூட்டப்பட்ட சிலந்தி வலையைப் போல இருந்த புகையின் சாம்பல் கோடுகள் மேலேயும் பக்கவாட்டிலும் கிளைத்து இருட்டில் கரைந்தது.

''ரொம்பக் களைப்பா இருக்குது. இன்னிக்கு வேலை அதிகம். ஆபீஸுக்குள் நுழைஞ்சவுடன் முன்னூறு பக்கப் புத்தகத்தைக் கொடுத்துட்டார் செகரெட்டரி. இன்னிக்குள்ள படிச்சு குறிப்புகள் எடுத்துக் கொடு. அரசர் டேபிளுக்கு ஏழு மணிக்குப் போகணும்னு சொல்லிட்டார்.''

''கிழக்கு ஆசியப் பிரச்னைகள். வென்டல்டாம் எழுதியது. நாளைக்கு தெற்கு ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் கோஷ்டி ஒண்ணு வருது. அவர்களைச் சந்திக்கணுமே அரசர்.''

அவர்கள் ரிபீட் பண்ணினார்கள்.

''இன்னிக்கு அ- நாட்டுத் தூதர் வந்திருந்தார். முதல் அரசரோட நட்புமுறையான சந்திப்பு...'' என்றபடிச் சிரிக்கத் தொடங்கினான் மூர்த்தி.

''எதாச்சும் தமாஷ் நடந்ததா?''

''சாதாரண தமாஷ் இல்லப்பா. சூப்பர் டூப்பர் தமாஷ்.''

தூதர் ஸ்டீபன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் நாடுகளின் தூதுவர். நாம் மேலே இருக்கிறோமா. நம்மை ஆள்பவர்கள் மட்டும்தான் மேலே இருக்கிறார்கள். அவர், இரவு நேரங்களில் நம் ஊரின் வெளிச்சத்தை வாரி அடிக்கும் கூட்டங்கள், கல்யாணம், ஊர்வலம், வயசுக்கு வந்த பெண்ணைக் காரில் ஏற்றி நடத்தும் பவனிகள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். மின்சாரம் குறைந்து இருட்டில் வாழும் அவர் நாட்டுக்கு, மின்சாரம் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. பேச்சு அதில் இருந்து தொடங்கியது.

''சார், உங்களுக்கு இந்த 'பவர்’ எங்கிருந்து வருகிறது. பவருக்கு எந்த முறையைக் கடைப்பிடித்துச் சேமிக்கிறீர்கள்?''

''பவர் என்று அந்தத் தூதுவர் சொன்னது... மின்சாரம் பற்றிதானே? மேலே சொல்.''

''நம் அரசர் என்ன சொன்னார் தெரியுமோ?''

'' 'என் பவர் இந்திரா காந்தியிடம் இருந்து மூப்பனார். மூப்பனாரில் இருந்து எனக்கு. இந்த நாட்டில் நான்தான் உச்ச பவர் உள்ளவன்’ என்றார். நான் சிரித்துவிட்டேன். அரசர் என்னைக் குழப்பத்தோடு பார்த்தார். அதைவிடப் பெரும் குழப்பத்தோடு அந்தத் தூதுவர் இருந்தார். பவர் என்கிற ஆங்கிலப் பதத்துக்கு என்னென்ன வேறு அர்த்தங்கள் இருக்குமோ என்கிற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார். சற்றும் அக்குழப்பத்துக்கு குறையாத மனோபாவத்தோடு இருந்தார்கள், அவரோடு வந்தவர்கள்.

தூதர் சிரித்துக்கொண்டார். கடினமான கேள்விகள், சூழல்கள் அவர் மேல் திணிக்கப்பட்டாலோ, அவருக்குத் தெரியாததைக் கேட்டாலோ, அவர் பதிலாகச் சிரிக்க வேண்டும் என்றே அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தூதர் மேலும் சிரித்துக்கொண்டார். வேறு விஷயத்துக்குத் தன்னை மாற்றிக்கொண்டார்.

''மதர் இறைவனடி சேர்ந்ததுபற்றி செய்திகளைப் பார்த்தோம். என்னுடையதும் எங்கள் நாட்டுடையதுமான வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் சார்.''

அரவிந்தர் ஆஸ்ரமத்து அன்னை சென்ற வாரம்தான் காலமாகி இருந்தார். ஆனால், நம் அரசரின் அம்மாவும் போன வாரம்தான் காலமாகி இருந்தார். உனக்குத் தெரியும்தானே பரி? தன் அம்மாவைப் பற்றித்தான் தூதர் வருத்தம் தெரிவிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நம் அரசர் பொங்கிவிட்டார். கேவிக் கேவி அழத் தொடங்கிவிட்டார்.

''பரதேவதை. போய்ச் சேர்ந்துட்டா. மூணு வருஷத்துக்கு முன்னால செத்துப்போன என் அப்பாவோடதான் என் அம்மா இருப்பா. பதினாறு குழந்தைங்க சார். நான் ஆறாவது, அப்பா கட்டட மேஸ்திரி. கொறைச்ச சம்பளம். எங்களை எல்லாம் ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பானு யோசியுங்க. வெச்சு ஆதரிச்சு மூணு வேளை கஞ்சி ஊத்த எனக்குக் கொடுத்துவைக்கலை.''

பக்கத்து மேசைக்காரர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது, அவர்கள் சிரிப்பு.

மூர்த்தி தொடர்ந்தான், ''ஆனாலும் பாரு, பல விஷயங்கள் எங்களுக்குள்ள நடந்திருக்கு. அதை நானும் மறக்கலை. முதல் அரசரும் மறக்கலை. உயிருக்கு உயிரா அவர் நேசிச்ச சொர்ணா வரச் சொன்னாள்னு, இவர் அவள் வீட்டுக்குப் போனப்ப, திடும்னு சொர்ணாவோட அப்பா வந்து ஏகப்பட்ட களேபரம். விஷயம் வெளியே கசிஞ்சு அவர் அரசியல் வாழ்க்கை வீணாகிடக் கூடாதுன்னு அதுக்கு மறுநாளே ரிஜிஸ்டர் ஆபீஸ்லவெச்சு என் செயின், வாட்ச், மோதிரம் எல்லாத்தையும் வித்து அவர் கல்யாணத்தை நான் நடத்தி வெச்சதை அவர் மறக்கலை. அதனாலதான் பதவிக்கு வந்ததும் என்னைக் கூப்பிட்டு நல்ல சம்பளம் கொடுத்து வெச்சுக்கிட்டார். அதே போல கட்சிப் போராட்டத்துல கலந்துக்கிட்டு நான் ஜெயிலுக்குப் போனப்ப, அது எனக்குக் கல்யாணம் ஆயிருந்த நேரம். ஆறு மாசம் என் குடும்பத்துக்கு அவர்தானே சோறுபோட்டார். நாங்க ரெண்டு பேருமே எங்களை மறக்கலை!''

பாரை விட்டு வெளியே வந்தார்கள். பரிக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

வீடு தூரத்தில் இல்லை. நடக்கலாம் என்றது, இரவுத் தெருவும் குளிர்ச்சியான காற்றும், மழை வரலாம் போலத் தோன்றும் சூழலும். இரவுகளில் மட்டும் வேறு முகம் காட்டும் வீடுகளிடம் அதுகுறித்து கேட்க வேண்டும். நிறைய நாய்கள் தெருவில் தென்பட்டன. சில தூக்கத்தில் இருந்தன. சில இவனை நண்பனைப் போலப் பார்த்தன. சில நாய்களின் பார்வையில் நெருப்பு கனன்றது. சில, இவனை அலட்சியப்படுத்தின. பூமியின் மேல் மூர்த்தி என்கிற மனிதன் பிறக்கவே இல்லை. அவன் நம் முன் நடக்கவே இல்லை என்பதுபோல அவனைப்பார்த்துக் கொண்டே அவனைப் புறக்கணித்தன.

குழந்தைகளின் விடுமுறைகளைக் கொண்டாட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும் மகாலட்சுமியை நினைத்துக்கொண்டான். வாசனைப் புல் போன்றது அவள் கூந்தல். முட்டை ஓடு போன்றவை நகங்கள். குழந்தைகள் அமைதியாக உறங்கிக்கொண்டு இருப்பார்கள். மகிழ்ச்சியாக நாளைய காலையை எதிர்கொள்வார்கள். விடுமுறைக் காலங்களில் மட்டும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். ஆபீஸ் சகா ரத்னாவுக்கு நாளை காலை புரோக்கரைப் பார்த்து வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். லேடீஸ் ஹாஸ்டல் வாழ்க்கை, ஷூக்களில் குடும்பம் நடத்துவது மாதிரி இருக்கிறது என்றாள். அற்பக் கணவன்... செயலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவா தற்காலிகமாக வைத்திருப்பது என்று அரசரிடம் சொல்லி, நிரந்தரப்படுத்த ஆவன செய்ய வேண்டும். நான் இப்போது அரசருக்கு நெருக்கம் என்று உலகமே நினைக்கிறது. அரசர் அடித்துச் சேர்த்த கஜானாவில் பாதி எனக்கானது என்று நினைக்கின்றன நட்பும் சுற்றமும். அலுவலக மேஜையைத் திறந்தால், தவளைகள் குதித்து வெளியேறுகின்றன. ஜன்னல் வழியாகப் பாம்புகள் நுழைந்து, அலுவலக அறைக்குள்ளேயே புற்று கட்டுகின்றன.

மூர்த்தி வீடு வந்து சேர்ந்தான். பாக்கெட்டைத் துழாவி, சாவியை எடுத்து, சிரமப்பட்டுக் கதவைத் திறந்தான். வீட்டு வாசலில் ஒரு பல்பைப் பொருத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டு, உள் விளக்குகளை எரியவிட்டான். தண்ணீர் குடித்தான். கைலிக்கு மாறினான். படுக்கையில் தலையணைகளை மேடாக அடுக்கிச் சாய்ந்துகொண்டு, படித்துக் குப்புறக் கவிழ்த்துவைத்து இருந்த 'காந்திக்குப் பிறகான இந்தியா’ என்ற புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினான்.

இரவு ஒரு மரவட்டையைப் போல மெள்ள மெள்ள ஊர்ந்துகொண்டு இருந்தது. திடுமென நாய் ஒன்று குரைத்து அடங்கியது.

அவசர நிலையின்போது ஆபத்துக்கு உள்ளானவற்றில் பத்திரிகைச் சுதந்திரமும் ஒன்று. முதல் வாரத்திலேயே அரசு, பத்திரிகைகளுக்கு முன் தணிக்கையை அறிமுகம் செய்தது. செய்திகள் எவையென்று அரசாங்கமே வகுப்பெடுத்தது. தணிக்கைக் குழுவில் இருந்த அறிவாளிகள், தக்காளி விலை ஏற்றம்பற்றிய செய்தியைக்கூட அபாயகரமான செய்தி என்றார்கள். சோ ராமசாமி அரசியல் சட்டத் திருத்தங்கள்பற்றிய, ஒரு தேசிய விவாதம்பற்றிய கேலிச் சித்திரத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். தேசிய விவாதத்தில் இரண்டு பேர், ஒருவர் இந்திராகாந்தி, மற்றவர் சஞ்சய் காந்தி மட்டுமே விவாதத்தில் கலந்துகொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். பெயர் அற்ற ஒரு ஜனநாயகவாதி, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில், மரண அறிவித்தல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 'D.E.M.O’ கிரேசி மரணம். வருத்தமுடன் அஞ்சலி செய்வோர், அவர் மனைவி டி.ருத் (Truth) மகன் எல்.ஐ. பெர்ட்டி (Liberty), மகள்கள் ஃபெய்த் (faith), ஹோப் மற்றும் ஜஸ்டிஸ்.

படித்துக்கொண்டு இருந்தவன், புத்தகத்தின் முக்கியமான பகுதியில் கோடிடுவதற்காக எழுந்து மேசை மேல் இருந்த பென்சிலை எடுத்தான். வெளியே நாய்கள் மிகப் பலமாகக் குறைத்தன. கூடவே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மூர்த்தி மணியைப் பார்த்தான். நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது காலம். சட்டையைப் போட்டுக்கொண்டு வந்து கதவைத் திறந்தான். மங்கிய வெளிச்சத்தில் ஒரு போலீஸ் உருவம் தென்பட்டது. அவனது தோளின் வழியாக, வாசலில் காவல் துறை வாகனங்கள் இரண்டும் போலீஸ்காரர்களும் நிற்பது தெரிந்தது.

''யார்?'' என்றான் மூர்த்தி.

''அண்ணே, நான் நாராயணசாமி.''

நினைவு வந்தது. அண்மையில் ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கி, மூர்த்தியின் காலைக் கட்டிக்கொண்டு அழுத கண்ணீரால் இரங்கி காப்பாற்றப்பட்ட துறையின் ஒரு திருகாணி அவன்.

''என்னப்பா, இந்த நேரத்துல... அரசர் கூப்பிட்டிருக்காரா.''

''இல்லண்ணே, உள்ள வாங்க சொல்றேன்.''

மூர்த்தி அமர்ந்தான். நாராயணசாமி நின்றபடி சொன்னான்.

''மேலிடத்து உத்தரவு அண்ணே... உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்.''

''மேலிடம்னா? அரசரா உத்தரவு போட்டார்?''

''அரசர் பக்கத்துல இருப்பவர் நீங்க. அவர் சொல்லாமே இது நடக்குமாண்ணே?''

தொடர்ந்து அவனே சொன்னான்.

''எனக்கு எஸ்.பி. உத்தரவு அண்ணே...''

''எதுக்குன்னு சொன்னாங்களா?''

''கஞ்சா கேஸ்தாண்ணே?''

''அது தெரிஞ்ச விஷயம்தானேப்பா... நாம், நமக்குப் பிடிக்காதவங்க மேல அந்த கேஸ்தானே போடுவோம். அதெல்ல நான் கேக்கறது. என்ன காரணத்துல அரசருக்கு என் மேல கோபமாம்?''

''சரியாத் தெரியலைண்ணே. அரசரைக் கேலி பண்ற மாதிரி அவர் முகத்துக்கு முன்னால, அதுவும் யாரோ வி.ஐ.பி. முன்னால...''

மூர்த்திக்கு நினைவு வந்தது.

அந்த பவர் டில்லியில் இருந்து முயல் குட்டி மாதிரி வருவது, அம்மாவுக்கு அதாவது மதருக்குக் கஞ்சி ஊத்தாத விவகாரம் நினைவுக்கு வந்தது.

''இப்படித்தான் அவர் முன்னால் சிரிச்சீங்களா?''

''ஆமா!''

''என்னண்ணே..?''

நாராயணசாமி, இடது பாக்கெட்டில் இருந்து சில பொட்டலங்களை எடுத்துவைத்தான்.

''கஞ்சாவை இப்படித்தான் பாக்கெட் பண்ணுவாங்களா?''

''ஆமாண்ணே.''

''நான் எத்தனை பொட்டலம் வெச்சிருந்தேனாம்?''

''நம்ம சண்முகம் நாலைஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பி இருக்காண்ணே. கிடைக்கிறதைப் பொறுத்து...''

''சரி... அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. முகம் கழுவிக்கிட்டு வந்துடறேன்.''

''பொறுமையா வாங்கண்ணே.''

திரும்பி வந்த மூர்த்தி, ஜோல்னா பையில் சில புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டான். 'காந்திக்குப் பிறகான இந்தியா’ புத்தகத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டான்.

''வாப்பா போகலாம்.''

அரசரின் மாளிகை ஓர் ஆற்றங்கரையில் இருந்தது. வெளிப்புறச் சுற்றுச் சுவர் தாண்டி காக்கைகள் பறக்கத் தயங்கின. சுவரில் முட்டிக்கொண்டு மூக்குடைந்த பறவைகள் அதிகம் இருந்தன. இருபுறமும் திறக்கத் தக்கதான இரு பெரும் கதவுகள் வாயிலை அடைத்தே இருக்கும். வாயிலுக்கு எதிரில் காவலர் துப்பாக்கியுடன் நிற்பார்கள். காலை ஒன்பதரை மணிக்கு இரண்டு பெரும் கதவுகளும் பெரும் சத்தத்துடன் திறக்கும். உள்ளிருந்து வரிசையாகப் புறப்பட்டு வரும் கார்கள், யுத்தக் களத்துக்குப் போவது மாதிரி உறுமிக்கொண்டு சீறிப் பாயும். அவற்றுக்கு முன் தெருவில் நாய், பூனை, ஈ., எறும்பு மற்றும் மனிதர்கள் யாரும் காணாதபடிக் காவலர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரை மணி முன்பாகவே, தெருவின் இருபுறமும் கடக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிடும். கல் பாவிய தெருவில், கானங்கள் மட்டும் மிதந்தபடி இருக்கும்.

வாயிலையும் தெருவையும் இணைக்கிற சிமென்ட்டு பால வளைவில் மக்கள் வேடிக்கை பார்க்கவும் வாழ்த்து கோஷம் போடவும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாகக் கைக்குழந்தையுடன் மகாலட்சுமி காணப்பட்டாள். காலை எட்டு மணிக்கே அவள் அங்கு வந்துவிடுவாள். கடும் வெயில் காரணமாகச் சமயங்களில் குழந்தை புழுங்கி அழும். சமயங்களில் அயர்ந்து உறங்கும். வெயிலில் இருந்து குழந்தையின் தலையைக் காக்க, தன் மேலையே போர்த்தியிருந்தாள்.

சில நாட்களில் ஒரு போலீஸ்காரன், தன் கைத்தடியால் மக்களை நெட்டித் தள்ளி, சத்தம் போட்டு, இல்லாத ஒழுங்கை உருவாக்கிவிட்டுப் போவான். மக்கள், அசைந்து அசைந்து மீண்டும் ஒரு புதுக் கும்பலை உருவாக்கிவிடுவார்கள். அரசர் கார் வளைந்து கடக்கும்போது, மகாலட்சுமி உடைந்து அழுவாள். அவள் அழுகையை அரசர் காண நேரும் என்று அவள் நம்பினாள். ஒரு நாள், ஒழுங்கை நிலைநாட்டும் அந்தக் காவலர், மகாலட்சுமியிடம் ''யாரும்மா நீ, என்ன வேணும்?'' என்றார்.

தன் கணவன் அரசரிடம் வேலை பார்த்ததையும் கஞ்சா வழக்கில் சிறையில் இருப்பதையும் அரசரிடம் மன்றாடித் தன் கணவரின் விடுதலை கோரவே, தான் அங்கு வருவதாகச் சொன்னாள். இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.

''மூர்த்தி சார் மனைவியா, நீங்க..?''

''உம்...''

''அடக் கடவுளே!''

சிமென்ட் பாலத்தின் தொடக்க முனையில், மரத்தடியில் தனியாக, அரசரின் கார் வெளி வரும்போது அவர் பார்வை படும்விதமாக மகாலட்சுமி நிற்க ஏற்பாடு செய்து தந்தார் காவலர். தொடர்ந்து முப்பத்தேழு நாட்கள், கோடை வானத்தின் கீழ் நின்று தினம் தோறும் அரசரின் காரைப் பார்த்ததும் அழுதாள் மகாலட்சுமி.

முந்தைய தினம் நள்ளிரவுக்கு மேல்தான் விடுதலை ஆனான் மூர்த்தி. ஜீப்பில் அவனைக் கொண்டு இறக்கிவிட்டுப் போனார்கள். களைப்பில் உறங்கிப்போனவன் காலை எட்டு மணிக்கு மேல் கண் விழித்தான்.

''நல்ல காபி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி'' என்றான் மகாலட்சுமியிடம்.

அவள் முகம் வாடியது. காபித்தூள் இல்லை. பால் இல்லை. காசும் இல்லை என்பதைப் புலப்படுத்தினாள் மகாலட்சுமி.

பத்து மணிக்கு மேல் பரிமேலழகனுக்குத் தொலைபேசினான் மூர்த்தி.

''பரி. விடுதலை ஆகி வீட்டில் இருக்கிறேன். வரியா சாயங்காலம் பேசுவோம். வீட்டுல பைசா இல்லை. இருக்கிறதை யாரிடமாவது கொடுத்து அனுப்பு. அவசரம்.''

அடுத்த அரை மணிக்குள் பரி, ஆட்டோவில் வந்து சேர்ந்தான். ''இதுல ரெண்டாயிரம் இருக்கு. இப்போதைக்குச் செலவுக்கு வெச்சுக்கோ.''


இருவரும் வெளியே கிளம்பிப் போய் காபி சாப்பிட்டுவிட்டு, காபியும் பலகாரமும் பார்சல் வாங்கிக்கொண்டுத் திரும்பினார்கள்.


குளித்து, ஒரு நூறு ரூபாயை மகாலட்சுமியிடம் வாங்கிக்கொண்டு, பஸ் பிடித்து அலுவலகம் போனான் மூர்த்தி. அவன் மேஜை சுத்தமாக இருந்தது. மேஜையில் ஏதோ ஓர் அறிக்கை இருந்தது. அதை மொழிபெயர்க்கச் சொன்னார் செயலர், தொலைபேசி வாயிலாக. அவன் குனிந்து வாசிக்கத் தொடங்கினான்.

சலசலப்பு கேட்டுத் தலை நிமிர்ந்தான் அவன். அரசர் வந்துகொண்டு இருந்தார். இவன் அருகில் வந்து நின்று, ''என்ன மூர்த்தி, நல்லா இருக்கியா...'' என்றார். அவன் தோளில் கை வைத்து.

''இருக்கண்ணே!''

''சரி, வேலையைப் பார்!'' என்றபடி நகர்ந்தார் அரசர்.

திடுமென அவன் அறையைச் சுற்றிலும் வெறுமை கவிழ்ந்தாற்போல இருந்தது.

அறிக்கையை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினான்!

by Swathi   on 02 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.