LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்

ஆறாம் வகுப்பில் அவள் மட்டும் அனைவரிலும் வேறுபட்டிருந்தாள். அந்த அழகிய கரிய கூந்தலில் எண்ணெய் தடவாமல் பளபளவென இருக்கும். எங்களுக்கோ தலையில் நன்றாக எண்ணெய் மொழுகி சடை போடப்பட்டிருக்கும். அவள் மிகவும் அமைதியாக இருப்பாள். நாங்களோ ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்போம். அவள் தந்தை பொறியியல் படித்து மின்சாரத்துறையில்(EB) நல்ல உத்தியோகத்தில் இருந்தார். எங்கள் தந்தைமாரோ கடைக்கு முதலாளி, ஆசிரியர் மற்றும் விவசாயி. அவளோ எதோ நகரத்திலிருந்து அவளது அப்பாவின் பணி நிமித்தம் இங்கு எங்கள் உயர்நிலைப்பள்ளியில் புதிதாய்ச் சேர்ந்திருந்தாள். நாங்களோ ஐந்து வரை துவக்கப்பள்ளியில் படித்து விட்டு இப்போது உயர்நிலைப்பள்ளிக்கு வந்திருக்கிறோம். எங்களின் எண்ணிக்கையோ  மிக அதிகம்.

இதோ அந்த எழுத்தர் அம்மா (writer) வந்து விட்டார். இப்போது கண்டிப்பாக எங்களுக்குத் திட்டு உண்டு. எங்கள்  பள்ளியின் பெயர் சொல்லி "ஆர்.சி எருமைமாடுகளா கொஞ்சம் அமைதியாயிருங்க. அந்த பொண்ணப்  பாருங்க  யாஸ்மின் எவ்வளவு அமைதி என ஒரு அர்ச்சனை செய்து விட்டு சென்றார்". எல்லார் முகமும் பொறாமையோடு யாஸ்மினேயே பார்த்தன. பாவம் அவள் என்ன செய்வாள்?

 முதல் தேர்வு வந்தது. எல்லாரும் போட்டி போட்டு படித்தோம். அந்த யாஸ்மின் முதல் மதிப்பெண் பெறக்கூடாது என்ற வெறியோடு...இருந்தாலும் இந்த முறை அவள் வெற்றி பெற்றாள். விடுவோமா ஒவ்வொரு முறையும் போட்டி போடுவோம். அடுத்த  முறை நான் முதல் மதிப்பெண். அந்தப் பள்ளியில எல்லோருக்கும் அவ கூட தோழியா இருக்கணும்னு ஆசப்பட்டாங்க. ஆனா இப்படி போட்டா போட்டி போட்டு  படித்ததனாலோ  என்னோவோ தெரியல நானும் யாஸ்மினும் தோழிகளாயிட்டோம்

பள்ளி ஆண்டு விழா வந்தது.  அவளும் பரத நாட்டியம் எல்லாம் படிக்கல. ஆனாலும்  எங்க இசை வகுப்பு ஆசிரியர் ஆண்டு விழாவுக்கு அவளையே நாட்டியத்திற்குத் தேர்வு செய்திருந்தார். எனக்கும் ஆட விருப்பம் தான். யார் சேர்ப்பது என புலம்பினவர்களில் நானும் ஒருத்தி. அப்படி இப்படியென வருடங்கள் ஓட...

பத்தாம் வகுப்பும் வந்து விட்டது.  எல்லாரும் நல்லா படிக்கிறாங்க. வழக்கம் போல யாஸ்மினும் நல்லா படிக்கிறாள். மற்ற ஆசிரியர்களின் குழந்தைகள், நான் என   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப்  போட்டா போட்டி

குணாதான் இப்பெல்லாம் சரியா படிக்கிறதில்ல. அத இப்ப நினைச்சா கூட கண்ணில தண்ணி வருது. அவ நல்லா படிச்சுடீச்சர்ஆகனும்னு ஆசைப்பட்ட அவுங்க அண்ணனை யாரோ இராத்திரி உறங்கினப்போ கொன்று விட அண்ணன்  உடலோடு தன் அண்ணனின்  ஆசையையும் குழி தோண்டி புதைச்சிட்டா குணா. அவளும் எனக்கு இன்னொரு தோழி . ஒரு தோழி இப்படி இருக்கிறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவகிட்ட எவ்வளோ எடுத்துச் சொல்லியும் அவளால அண்ணனோட இழப்பிலிருந்து மீளமுடியல என்பதுதான் உண்மை. புத்தகத்த திறந்து படிக்கும் போதெல்லாம் அண்ணா முகத்தான் நினைவுக்கு வருதுன்னு அவா சொல்லுறத நினைச்சா... அவளுக்கு அறிவுரை  சொல்ல போன எனக்கும்  அழுகழுகையா வந்திரும்.

இன்னும் இரண்டு மாதத்தில பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு...இடையில் இடைத்தேர்தல் மாதிரி வந்தது அந்த  பாழாப்போன பருவக்கோளாறு காதல்  பிரச்னை... சும்மா கோவிலுக்குப் போன இடத்தில...ஏதோ அவ பெயரு பக்கத்துல அவன் பெயரு...எனக்கும் ரொம்ப தெரியல...ஆனா புரிச்சுக்க முடிஞ்சுது.  அப்படி இப்படின்னு யாஸ்மின்  அதுல சம்மந்தப்படுத்தபட  போதாக்குறைக்குக் குணாவும் தூது போன வழக்குல மாட்டினதா கேள்விப் பட்டேன்.

இதுவரை எந்த விதக் கெட்ட பேரும் எடுக்காத யாஸ்மினுக்கு அது பெருத்த சோதனைக் காலம் போல இருந்தது. வழக்கம் போல நாங்க இருவரும் சேர்ந்து படிக்கும் போது ஒருமுறை யாஸ்மின்  "வளர், எனக்கு மிகவும் பயமாகவும் வருத்தமாகவும் உள்ளது”  எனக் கூறி வருத்தப்பட்டாள். அவள் விளக்கமாக சொல்லவில்லை என்றாலும் குணா அந்த விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தாள். அதனால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லி நமக்கு இப்போது படிப்பு தான் முக்கியம். நீ நல்லா படி. முதல் மதிப்பெண் வாங்க வேண்டுமல்லவா என்றெல்லாம் கூறி அவளைச் சமாதானப்படுத்தியது இப்போது பேசியது போல் ஞாபகம் இருக்கிறது.

விசயம் தலைமை ஆசிரியருக்குப்  போக...விசாரணை வைத்தார்கள். எல்லோருக்கும் எப்படி தெரியுமெனத் தனித்தனியாகப் பதில் அளிக்க வேண்டும். என் முறை வந்தது. நல்லா படிக்காதகுணாகூறி அறிந்து கொண்டேன் என்று சொன்னால் அவளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவார்களே என்ற பயத்தில் யாஸ்மின் என்னிடம் கூறியதாகக் கூறிவிட்டேன். தலைமை ஆசிரியருக்கு அப்போது  நான்  அளித்த பதிலை மறந்தும் விட்டேன். வழக்கம் போல் நானும் யாஸ்மினும் முழு வீச்சாகப் பொதுத் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தோம்.

 எனக்கும்  எங்க  வகுப்புல நிறைய பேருக்கும்  தமிழ் ஆசிரியர் மங்களம் ரொம்ப பிடிக்கும். பேரு  மட்டும் மங்களம் இல்ல. அவுங்க பேசுறது கூட அவ்வளவு மங்களகரமா இருக்கும். அவங்க எதிர்பாராத  விதமாக  விடுப்பில் செல்ல ஒரு புது ஆசிரியர் வந்திருந்தார்.  அவுங்க கொஞ்சம் குள்ளமா மிகவும் துடிப்போடு இருப்பாங்க. நாளைக்குதான்  அவர் வேலையோட கடைசி நாள் .   நானும் யாஸ்மினும் ஒரு ஓரத்திலே ஒதுங்கி உட்கார்ந்து   படித்துக்  கொண்டிருந்த  இடத்திற்கு வந்த அவர் , " யாஸ்மின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில தமிழில் முதல் மதிப்பெண் வாங்கணும் சரியா" என்று கூறிச் சென்றார். எனக்குச் சுருக்கென்றது. வெளியே அதைச் சொல்லவில்லை. அது தான் எனது நல்ல நேரம் போல. மனதிற்குள் ஒரு முடிவெடுத்தேன். நான் தான் தமிழில் முதல் மதிப்பெண் வாங்கவேண்டுமென. எங்களுக்குள் பொறாமை இல்லை. ஆனால் போட்டி உண்டு

எங்கள் பள்ளியில் பரிட்சை எழுத முடியாது, பக்கத்து எதிரி பள்ளிக்குத்தான் போயி எழுதுவோம். எங்க பள்ளிக்கும் அந்தப் பள்ளிக்கும் மதிப்பெண் போட்டி. அதனால எதிரி ஆயிட்டோம்.  தேர்வு தொடங்கிவிட்டது. அப்படியே  கண் மூடி திறப்பதற்குள் நாலு தேர்வுகள் முடிந்து விட்டன. அன்று கடைசித் தேர்வு.  இதோ தேர்வு முடித்து நானும் யாஸ்மினும் கையைப் பிடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்
"வளர்  பயமாயிருக்குது ஸ்கூல் பஸ்ட்  வாங்கணும்என யாஸ்மின்  கூற. கவலைப்படாத நிச்சயம் நடக்கும்", என்றேன்." 
“நாம இரண்டு பேரும்  450க்கு மேல கண்டிப்பா ஸ்கோர் பண்ணுவோம்",  என்றாள் அவள்.  
அதற்குப் பிறகு ஒரு மாத இடைவெளி. "கடவுளே நல்ல ரிசல்ட் வரணும். நான் தமிழ்ல முதல் மதிப்பெண் எடுக்கணும். யாஸ்மின் ஸ்கூல் பர்ஸ்ட் வாங்கணும்னு சாமிய வேண்டாத நாளே இல்ல".  நானும் அவளும் இடையில சந்திக்கிற வாய்ப்பே இல்லாம போயிடுச்சி.

 
இதோ ஆவலோடு எதிர் பார்த்திருந்த   பள்ளி முடிவுகள் வந்து விட்டன . யாஸ்மின் முதல் மதிப்பெண் 453. மலர் இரண்டாம் மதிப்பெண் 444. நான்  மூன்றாம் மதிப்பெண் 440.  நான் தமிழில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தேன். எனக்கு ஒரே மகிழ்ச்சி. கூடவே யாஸ்மினைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வேறு. அப்போதெல்லாம் எங்க வீட்டுல போன் கூடக் கிடையாது. எப்படிச் சந்திப்பது. மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்றேன்.  அவள் வந்து வாங்கி விட்டுச் சென்று விட்டதாகக் கூறினார்கள். மனது வலித்தது.

முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பஞ்சாயத்தில் பரிசு கொடுப்பதாகவும் அவள் வருவதாகவும் அறிந்து கொண்டேன். நானும் சென்றிருந்தேன். அவளும் வந்திருந்தாள். ஆனால் அவள் கையை நெருக்கமாகக்  கணக்கு  ஆசிரியரின் பொண்ணு அவளது ஒன்பதாம் வகுப்பு தோழி பிடித்திருந்தாள். முழுவதும்   அவள் அவளிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். என்னிடம் யாஸ்மின் சரியாகப் பேசவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏன் யாஸ்மின் அப்படி நடந்து கொண்டாள்? எனக்குள் வலியும் கேள்விகளும் இருந்தன. கேட்கத்தான் முடியவில்லை. அதுதான் நான் அவளைச் சந்தித்த கடைசி நாள். பின்பு அவள் மேல்நிலைபள்ளிப்  படிப்புக்காக வேறு ஊர் சென்று விட்டாள் . மீண்டும் ஒரு நாளாவது அவளைப் பார்க்க வேண்டுமென என் மனசு தவித்தது.

நாட்கள் நகர்ந்தன. நான் இப்போது 11 ஆம் வகுப்புஎங்க பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் பொண்ணு இப்பொது எனக்குத் தோழி. அவளுடன்  சேர்ந்து கணக்குப் பாடத்திற்கு டியூஷன் சென்றேன். அப்போது யாஸ்மின் பற்றி பேச்சு வந்தது. "நீயும் அவளும் ரொம்ப பிரண்ட்ஸ்ல; அம்மா சொன்னாங்க. அந்த லவ் மேட்டர்ல அவளே அத உங்கிட்ட சொன்னாளாமே? ஸ்ஃடாப் ரூம்ல தலைமை ஆசிரியர் சொன்னதா எல்லா ஆசிரியர்களும் பேசிக்கிட்டாங்களாம்" என்றாள். எனக்கு அப்போதுதான் தூக்கி வாரிப் போட்டது. ! இது யாஸ்மினுக்கும் தெரிந்திருக்குமோ? அதான் அவா நம்ம கூட சரியா பேசலையோ என ஒரு கணம் எண்ணத் தோன்றியது. ஒரு விதக்  குற்ற உணர்ச்சியும் என்னுள் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் காலம் கடந்து விட்டது. இப்போது யாஸ்மினை நான் சந்திக்க வாய்ப்பே இல்லாம போயிடுச்சு .

பன்னிரண்டாம் வகுப்பும் முடிச்சாச்சு . ஒருமுறை பஸ்சில் மலரைப்  பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் மேல்நிலைப்பள்ளிக்கு வெளியூர் சென்று விட்டாள் . பழைய கதைகளைப் புதிய அனுபவங்களைச் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவள் சித்தா கல்லூரியில் படிப்பதாகவும், தன்னுடன் யாஸ்மினும் படிப்பதாகக்  கூறினாள் .  "யாஸ்மின் முன்ன மாதிரியில்லாம் இல்ல வளர். அவ  ரொம்ப மாறிட்டா. ஒரு பையனோட தப்பா பேசினாங்களே அந்தப் பையன் இங்க மருத்துவப்படிப்பு படிக்கிறான். அவன் கூட அடிக்கடி பேசுவா. வெளியே கூட சேர்ந்து போவா " என்றாள் . கேட்கும் போது ஏனோ யாஸ்மின் மீது நான் வைத்த மரியாதை கொஞ்சம் குறைத்தது போல இருந்தது. ஆனாலும்  அந்த நட்பு குறையல. எப்படியாவது ஒருமுறையாவது  சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஏக்கத்தோடு எதிர்பார்த்திருந்தேன். சொல்ல மறந்திட்டேனே குணாவையும் ஒரு நாள் பேருந்து நிலையத்துல பார்த்தேன். தோட்டம் துரவுன்னு நல்லா  இருக்கா...

 
வருடங்கள் நகர்ந்தனயாஸ்மின்  பற்றிய இன்னொரு செய்தியும்  கேள்விப்பட்டேன். எங்க பக்கத்து வீட்டுப்  பையன் மாணிக்கத்தோட நண்பன் தான் அவள் காதலிக்கும் பையன். திருமணம் செய்து கொண்டதாக  என் தம்பி மூலம் தெரிந்து கொண்டேன்.  அந்தப் பக்கத்துக்கு வீட்டு மாணிக்கத்துக்கிட்டப் போயி யாஸ்மின் பார்த்தியா? எப்படி இருக்கா? ன்னு கேட்கத் தோணும். ஆனா அந்தப் பையனோடு பேச  நினைச்சா  இப்போக்கூட ஏதோ தடுக்குது... எனக்கும்  திருமணம் ஆகி பதினைந்து வருஷம் ஓடிடுச்சி. பிள்ளைங்க குட்டிங்க வெளிநாடு வாழ்க்கைன்னு பிஸியா சுத்துனாலும் அப்பப்ப முகநூலில் யாஸ்மின்  பேர போட்டுப் பார்ப்பேன். எங்கேயாவது கண்டு பிடுச்சிருவோமா என்ற நப்பாசைதான்.  இதயத்துல ஓரத்துல ஒரு சின்ன நம்பிக்கை இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்குது. அவளப்பார்க்கணும். பார்த்திடுவோம்னு... எங்கே?... எப்படி? ன்னு தான் தெரியல

by Swathi   on 28 Sep 2019  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
பழி உணர்ச்சி பழி உணர்ச்சி
சூழல், சூழல் சூழல், சூழல்
இளம் மாங்கன்று இளம் மாங்கன்று
குருவி குஞ்சு குருவி குஞ்சு
என்னோட சீட் என்னோட சீட்
கடல்அலை கடல்அலை
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
கருத்துகள்
27-Sep-2020 11:07:46 ISWARYA said : Report Abuse
கடவுள் தந்த உணர்வு என்னும் உச்சத்தின் ஒரு பகுதியை நிறைந்த அனுபவம். இருப்பினும் ஏன் இந்த ஏக்கம்
 
26-Aug-2020 13:13:57 wasimkhan said : Report Abuse
படிக்க ஆர்வமாக உள்ளது உண்மையாக இருப்பின் மகிழ்ச்சி 👍 கற்பனையாக இருப்பின் பெய‌ர் மா‌ற்ற‌ம் செ‌ய்து கொள்ளுங்கள்
 
27-Feb-2020 17:02:14 Adoor.R.venkatesan said : Report Abuse
வாழ்வியல் உணர்வுகளை தெளிவிக்கும் கதை. அருமை.
 
16-Nov-2019 09:25:57 பீட்டர் said : Report Abuse
எனக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறது . நிரந்தரம் இல்லாததுதான் வாழ்கை . இதுவும் கடந்து போகும் . எதுவும் கடந்து போகும்
 
01-Oct-2019 17:47:16 Rakul said : Report Abuse
நல்ல கதை. உங்களுடைய உண்மை கதையா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.