LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ராஜேஷ் குமார்

நேர்மைன்னா என்ன?

"அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு வாங்கி வச்சிருந்தா, இவனுங்க மாசாமாசம் கவர்மென்ட்டுக்கு கணக்குக் காட்றதுக்கும், மாசக்கடைசில கட்டிங் வாங்குறதுக்கும், நோ பார்க்கிங்னே போடாத முட்டுச்சந்துக்குள்ள விட்டுருக்க பைக்கக்கூட... கசாப்புக்கடையில கறிய வெட்டித்தூக்கிப் போட்றமாதி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, ஃபோர்க் லாக்கை, ஹேண்டில்பாரை, சைடு மிரரையெல்லாம் உடச்சி நம்ம பைக்க வண்டியில ஏத்திக்கிட்டு வருவானுங்களாம்... அதைப் போயி கேட்டா டோயிங் சார்ஜ் இருநூத்தி அறுபது ரூபா கட்டி எடுத்துட்டுப் போங்கன்னு சொல்லுவானுங்களாம்... அங்க நோ பார்க்கிங்னு போடவே இல்லையே சார்னு கேட்டா, வண்டிக்கி இன்சுரன்ஸ் இருக்கா, லைசன்ஸ் இருக்கா, ஆர்.சி புக்கு இருக்கான்னு மிரட்டுவானுங்க... எல்லாம் இருக்கு சார்ன்னு சொன்னா, ஹெட்லைட்டு ஏன் பொட்டு வக்கல?... அதுக்கு ஃபைன் ஐநூறு ரூபா கட்றியா?... இல்ல, டோயிங் சார்ஜ் வெறும் இருநூத்தி அறுபது ரூபா கட்டிட்டு எடுத்துட்டு போறியான்னு கேப்பானுங்க..."


இருந்த வயிற்றெரிச்சலையெல்லாம் பக்கத்தில் இருந்தவனிடம் கொட்டித் தீர்த்தேன்.
 

“என்ன பண்றது சார்?... கேட்டா ரூல்ஸ் பேசுவானுங்க... கேக்குறதக் குடுத்துத்தான் ஆகணும்... இவனுங்களுக்கு இதுதான் வேலை... நமக்கு ஆயிரம் வேலை இருக்கே... முதல்ல இருநூத்தி அறுபது ரூபா கேப்பானுங்க... இவ்வளவுதான் சார் இருக்குன்னு ஒரு நூறு ரூபா குடுங்க... வாங்கிட்டு உட்ருவானுங்க... வேற வழியே இல்ல...”

சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
 

என் மனம் ஆறவில்லை.
 

பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், நன்மைக்காகவும் செயல்படவேண்டிய துறைகளில் இப்படி பொதுமக்களின் இயலாமையைப் பயன்படுத்தித் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் இவர்கள் மாதிரியான மனித மிருகங்கள் இந்த உத்யோகத்துக்கு வந்ததைவிட வேறு ஏதாவது __________________ வேலைக்குப் போயிருக்கலாம்.
 

இன்னும் கூட என் மனம் கொதித்துக்கொண்டேதான் இருக்கிறது. நானும் என்னைப் போன்றவர்களும் துடிப்பதுபோல் இவர்களையும் துடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். எனக்கும் சில உயர் அதிகாரிகளைத் தெரியும்.

வெளியே வந்தேன்.

என்ன செய்ய நினைத்தேனோ அதை செய்தேன். ஒரு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்து அந்தக் கவரைக் கையில் எடுத்துக் கொண்டேன்.

நான் செய்வது சரியா தவறா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இதைச் செய்ததற்குப் பிறகு நடக்கப்போகும் பின்விளைவுகளைப் பற்றியும் கவலையில்லை.

நேராக அந்த அலுவலம் சென்றேன்.

உள்ளே இருந்த அந்த நேர்மையான அதிகாரிகள்(?) வந்தவர்களிடம் இருநூற்றி அறுபது ரூபாயும், சிலரிடம் நூறு ரூபாயும் வாங்கிய களைப்பில் இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வெளியே புகை பிடிக்கச் சென்றிருந்தார்கள். என்னுடன் நான்கைந்து பேர் அங்கு வந்து உள்ளே பார்த்தார்கள்.

சுற்றி முற்றிப் பார்த்தேன். கிட்டத்தட்ட அது மிச்சம் மீதி ஆன ஓலைகளால் ஆக்கப்பட்டிருந்த குடிசை. அந்தக் கவரை டேபிள்மீது வைத்துவிட்டு கூட வந்தவர்களுடன் சேர்ந்து வெளியே வந்தேன்.

எதிரில் இருந்த ஒரு டீக்கடையில் ஒரு டீ சொல்லிவிட்டு நின்றேன். டீக்கடையிலிருந்து பார்த்தால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். கொஞ்சம் உரக்கப் பேசினால் என்ன பேசுகிறார்கள் என்பதுகூடப் புரியும்.

சிறிது நேரத்தில் ஒரு அதிகாரி உள்ளே வந்தார். அவர் அந்தக் கவரைப் பார்க்கவில்லை. உண்ட மயக்கத்தில் சேரில் உட்கார்ந்து மல்லாந்து சாய்ந்தார். பாவம். நிறைய வேலை செய்து விட்டார் போலிருக்கிறது.

இன்னொருவர் வந்தார். அவரும் கவரைப் பார்க்காமல் பக்கத்தில் இருந்த ஒரு பெஞ்சில் படுத்து இரண்டே நிமிடத்தில் குறட்டை விட ஆரம்பித்தார்.

மூன்றாவதாக ஒருவர் வந்தார்.

நல்லவேளை அவராவது கவரைப் பிரித்துப் பார்த்தார்.

அடுத்த நிமிடம் அவர் முகம் அதிர்ச்சியானது.

பதைத்துப் போனார்.

சேரில் அண்ணாந்து குறட்டை விட்டவரையும், பக்கத்தில் படுத்துக்கொண்டு குறட்டை விட்டவரையும் தட்டி எழுப்பினார்.

இருவரும் எழுந்து கவரில் இருந்த பேப்பரைப் படித்துவிட்டு கண்ணில் ஒரு சொட்டுத் தூக்கம் கூட இல்லாமல் கலைந்து போய் விழித்தார்கள். ஒருவர் போனை எடுத்தார். அவரை இன்னொருவர் தடுத்தார். இப்ப என்ன செய்றது என்பதுபோல் த்வனியில் மற்றவர்களைப் பார்த்தார். மற்றவர்களும் லேசான குழப்பத்தில் இருந்தார்கள். பிறகு கையை ஆட்டி ஆட்டி ஏதேதோ பேசினார்கள். சரியா என்பது போல் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள, மற்றவர்களும் சரி என்பதுபோல் தலையசைத்தார்கள். சரி என்று தலையசைத்த ஒருவர் வேகமாக வெளியே வந்தார்.வெளியே வண்டியை திரும்ப எடுக்க நின்றிருந்தவர்களை நோக்கி வர ஆரம்பித்தார். நானும் டீக்கடையிலிருந்து வெளியே வந்து அங்கு நின்று கொண்டேன். எல்லோரையும் அழைத்தார்.

மூன்று பேரும் சேர்ந்து ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

“ஏம்பா... உன் வண்டி எது?...”

“ஹீரோ ஹோண்டா சார்...”

“இருநூத்தி அறுபது ரூபா இருக்கா?...”

அவன் இல்லை என்பது போல் யோசித்தான்.

“சரி எவ்வளவுதான் வச்சிருக்க?...”

அவன் ஐம்பதோ அறுபதோ காண்பித்தான். அதை அவசரமாக வாங்கிக்கொண்டு அனுப்பி பைக்கை எடுத்துக்கொள்ளச் சொல்லி ஹெல்பரை அனுப்பினார்.

இதே வேகத்தில் ஒவ்வொருவராய் அனுப்பிக் கொண்டிருக்க, கடைசியில் என்னுடைய முறை வந்தது.

“எவ்வளவுதான்பா வச்சிருக்க?..”

பேசாமல் சிரித்தபடி நின்றேன்.

“டீக்காவது வச்சிருக்கியா?...”

ஒரு கிழிந்த பத்து ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

"இத வாங்குறதுக்கு சும்மாவே இருந்துருவேன்..."

என்று முனகிவிட்டு அதையும் வாங்கிக்கொண்டுதான் விட்டார்.

“போய் எடுத்துக்க...”

நேராக வந்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

அப்படி அந்தக் கடிதத்தில் என்னதான் இருந்தது?...

மறுபடியும் சொல்கிறேன்.

நான் செய்தது சரியா தவறா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இதைச் செய்ததற்குப் பிறகு நடக்கப்போகும் பின்விளைவுகளைப் பற்றியும் கவலையில்லை.

அந்தக் காகிதத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது இதுதான்.

“பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர் சிலர் டைம் பாம் வைத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்த பைக் தற்போது உங்களால் அனுமதி இல்லாமல் தூக்கி வரப் பட்டிருக்கிறது. பாம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.”

பி.கு

இப்படி எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தைப் பார்த்தும் எங்கே நாமிருக்கும் இடத்தில் பாம் வெடித்துத் தொலையப் போகிறதோ என்ற பயத்திலும், வேறு எங்காவது வெடித்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணத்திலும் டோயிங் சார்ஜ்கூட(?) வேண்டாம் என்ற நோக்கத்தில் இருக்கும் இந்த நேர்மையான அதிகாரிகள்?...

கூடவே இன்னொரு விஷயத்தையும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த அவசரத்திலும் தங்கள் உழைப்புக்கான ஊதியமான அந்த ஐம்பது நூறுகளை வாங்காமல் விடவில்லை, அந்த அதிகாரிகளை என்ன செய்வது?...

யாராவது சொல்லுங்களேன்... 


by Rajeshkumar Jayaraman   on 16 Aug 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.