|
|||||
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? |
|||||
தமிழ்நாடு அரசிற்கான 2025 -26 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில் சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
"நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களைச் சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொதுச் சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்..." என்று தனது உரையில் தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
இந்தப் புதிய நகரத்தில் இடம் பெறும் வசதிகள்!
* தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்
* நிதி நுட்ப வணிக மண்டலங்கள்
* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள்
* உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்
* வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்
* வணிக வளாகங்கள்
* வர்த்தக மையங்கள்
* மாநாட்டுக் கூடங்கள்
* அரசு மற்றும் தனியார்த் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள்
* சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்தியத் தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள்
* விரிவான சாலைகள்
* தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள்
* பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புறச் சதுக்கங்கள்
* பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகள்
* சென்னை மாநகரை இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவுப் பேருந்துகள், மெட்ரோ இரயில் விரிவாக்கம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்படும்.
உலகத் தரத்துடன் கூடிய (Global City) முதற்கட்டப் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by hemavathi on 14 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|