|
||||||||||||||||||
நிலா நிலா ஓடி வா |
||||||||||||||||||
![]() நண்பர்களே, நான்தான் நிலா. வானிலா, வெண்ணிலா, வட்டநிலாணு பலபேர்ல நீங்கள் கூப்பிடற நான் ஒரு காலத்தில் உங்களாடதான் வாழ்ந்து வந்தேன். அப்படி பூமியிலே இருந்தவன் பூமியை விட்டுவிட்டு வானத்தில் தங்குவதற்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க?
உங்களைப்மாதிரி ஒரு குழந்தைதான்.
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலையின் மேலே ஏறி வா மல்கைப் பூ கொண்டு வா என்று உங்கள் தம்பி ,தங்கைகள் கூப்பிடும்போது கீழே இறங்கி வந்து உங்களோட சேர்ந்து விளையாடணும் என்று அவ்வளவு ஆசை வரும். ஆனால் பழைய நினைவுகள் என்னை வாட்டும். அதனால் இறங்கி வராமல் இங்கேயே இருந்திடுவேன்.
பல்லாண்டு... பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டுகளுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சி இது.
நான் எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருப்பேன். ஊர் எல்லையிலுள்ள ஆலமரத்தடிதான் எங்கள் விளையாட்டுத் திடல். தொட்டு விளையாடுவோம், கண்ணாமூச்சி விளையாடுவோம், நொண்டியடிச்சு விளையாடுவோம்... பொழுதுபோவதே தெரியாது. விளையாடும்போது நண்பர்கள்கூட ரொம்ப நெருக்கம் வரும்ணு உங்களுக்குத் தெரியும்தானே. அப்படி நெருக்கம் வந்ததினாலேதான் என்னை வீட்டுக்குக் வரும்படி கூப்பிட்டா கோமதி.
"எங்க வீட்டுக்கு வாயேன். உன்னைப் பார்த்தால் என் தங்கச்சி பாப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். உனக்கும் எங்கள் வீட்டைப் பார்த்தது மாதிரி இருக்கும்'' மாட்டேன்ணு சொன்னால் அவ மனசு சங்கடப்படும் என்று நினைத்து சரி என்று ஒத்துக்கிட்டேன். இரண்டு பேரும் அவள் வீட்டை பார்த்து நடக்கத் தொடங்கினோம்.
ரொம்ப நெருக்கமான தோழர்களோ, தோழிகளோ சேர்ந்து நடக்கிறதை நீங்க பார்த்திருக்கிறீங்களா? ஒருத்தரோட தோள் மேல ஒருத்தர் கைபோட்டபடிதானே நடப்பாங்க. அப்படி நடக்கும்போது அவர்களுக்கு ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும்.
அவளும் அப்படித்தான் நினைச்சா. என் தோள்மீது கைபோட முயற்சி செய்தாள். ஆனால் கை எட்டவில்லை. நான்தான் கொஞ்சம் குண்டாக இருப்பேனே! கோமதி மறுபடியும் முயற்சி செய்தாள். எட்டவே மாட்டேங்குது.
உடனே அவள் என்னைப் பாத்து "குண்டு கத்திரிக்காய், குண்டு கத்திரிக்காய்'' என்று கைகொட்டி சிரிச்சா நெருங்கிய தோழியைப் பார்த்து அப்படி கேலிசெய்யலாமா?''
எனக்குக் கொஞ்சம் கோபம் வந்திச்சு. ஆனா அத வெளியே காட்டாம அடக்கிக்கிட்டேன்.
கோமதி என் நெருங்கிய தோழியாச்சே? என் தோள்மேல கைபோட அவளால் முடியலையேணு நினைச்சேன். எனக்கு வருத்தமா போச்சு. நான் குண்டாக இருக்கறதாலதானே அவளுக்கு கை போடமுடியாமப் போச்சுணு நினைத்து வறுத்தப்பட்டேன். வருத்தம் மனசைப் பிசைஞ்சுது. வருத்தமோ துக்கமோ வந்தால் உடல் மெலியும்ணு உங்களுக்குத் தெரியுமா? அது சரிதான் வருத்தமோ துக்கமோ வந்தா நம்மோட உடம்பு ஒல்லியாயிரும். அதுமாதிரி என்னோட உடம்பு ஒல்லியாச்சு. அதுவும் ஒரு நொடிக்குள்ள... இப்ப நான் அப்படியே மெலிஞ்சு போய்ட்டேன்.
ரொம்ம மெலிஞ்சிருக்கிற என்னைப் பார்த்த கோமதி "ஆகா, இப்போது வசதியாக கை போடலாமே' ணு ஓடி வந்தா. ஓடி வந்து பலமாக என் தோள்மேல கைபோட்டாள். அவ கைபோட்ட வேகத்தில் நான் தடுமாறித் தரையில் விழுந்திட்டேன். அதுமட்டுமா முதல்நாள் பெய்த மழையால் தரையெல்லாம் சேறாயிருந்ததால் என் உடம்பு முழுவதும் சேறும் ,சகதியும் ஒட்டிகிச்சு.
தடுமாறி விழுந்த என்னைப் பார்த்து கோமதி விழுந்து விழுந்து சிரிச்சா. சிரிச்சாலும் பரவாயில்லை. கூடவே "கொத்தவரங்காய் கொத்தவரங்காய்''ணு கேலியும் செஞ்சா.
நீங்களே சொல்லுங்கள். தடுமாறி விழுந்தததாலே நானே கோபத்தில இருக்கேன். அது மட்டுமா உடம்பில் சேறு ஒட்டிக்கிட்டதால அந்தக் கோபம் கடுங்கோபமாக மாறியிருந்திச்சு ரொம்ப கோபமா இருக்கிற என்ன பாத்து கொத்தவரங்கா கொத்தவரங்காணு கேலிசெஞ்ச எப்படி தாங்க முடியுமா?
என் முகம் கடுகடுத்திச்சு. உதடு துடிதுடிச்சது. உடம்பு கோபத்தாலே வெடவெடவென நடுங்கிச்சு. நான் ஒரு வார்த்தை பேசாம அவளை விட்டுட்டு நடக்கத் தொடங்கினேன். நடந்தேன்... நடந்தேன்... நடந்துகிட்டே இருந்தேன். திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அப்படி நடந்து நடந்தது வடக்கே இமயமலைலைக்கே வந்திட்டேன்.
இமய மலையில் பனி மூடிக்கிடக்குது. நான் அதையெல்லாம் கவனிக்கவில்லை. மலைகளுக்கிடையே நுழைந்து நுழைந்து உச்சிக்கே வந்திட்டேன்.
அங்கிருந்து அப்படியே ஒரே தாவாத் தாவி வானத்துக்குப் போயிட்டேன். . வானத்தில் நிலையாகத் தங்கிட்டேன்.
பனிமலையோட இடுக்குகளுக்குள்ள நுழைந்து வந்தேன்ணு சொன்னேன் இல்லையா. அப்படி நுழைந்து வந்தபோது என் உடம்பில் ஒட்டியிருந்த கொஞ்சம் சேறு சுத்தமாச்சு. ஆனால் இன்னும் கொஞ்சச் சேறு மிச்சமிருக்கு.. அதை நீங்கள் பார்த்திருப்பீங்களே? அந்தச் சேறு உங்க கண்ணுக்குப் பலமாதிரியாத் தெரியுதல்லவா.
பாட்டி வடை சுடுகிறாள்; தாத்தா தடியை ஊணி நடக்கிறார்ணெல்லாம் நீங்கள் சொல்றது என் காதில் விழுந்திருக்கு.
என்னதான் வானக்கடல்லில் வெள்ளி ஓடமாக நீந்தி மகிழ்ந்தாலும் என் மனசில அடிக்கடி கோமதியின் ஞாபம் வரும். அவ என்னோட நெருங்கிய தோழியல்லவா? கத்தரிக்காய் கொத்தவரங்காய் என்றல்லாம் கேலிசெய்த அவளை மறக்க முடியுமா? அவளை நினைத்தால் அன்று நடந்தெல்லாம் மனசில் பளிச்சிணு சினிமாப்படம் மாதிரி ஓடும்.
ஐயோ அவளுக்கு கை போடமுடியலையேணு நினைப்பேன். அப்படியே மெலிஞ்சுபோகத் தொடங்குவேன். மெலிஞ்சு மெலிஞ்சு ஒரு நாள் காணாமலே போய்டுவேன். ஐயோ கோமதியைப் பார்க்கணுமே. அவ கூட விளையாடணுமேணு நினைப்பேன். மனதில் மகிழ்ச்சி பொங்கும். மகிழ்ச்சியாவோ ரொம்ப சந்தோஷமாவோ இருந்தா ஓடம்பு குண்டாகும்ணு உங்களுக்குத் தெரியுமில்லயா. சந்தோஷம் வந்ததும் நான் குண்டாகத் தொடங்குவேன். ஐயோ குண்டாக இருந்தால் கோமதிக்கு கைபோட முடியாதேணு நினைப்பேன். மனசில வருத்தம் வரும். அப்படியே மெலிஞ்சுபோகத் தொடங்குவேன். . மீண்டும் குண்டாவேன்.. . மெலிஞ்சு பேவேன். .. மீண்டும் குண்டாவேன்... மெலிஞ்சு பேவேன்...
கோமதி, என் அருமைத் தோழி. நெருங்கிய தோழி என்னை முதன் முதலாக வீட்டுக்கு கூப்பிட்ட என் அன்புத் தோழி. அவளை என் வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன். |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|