LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

நிலவும் இருளும்

                                        நிலவும் இருளும்

முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

     அந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த முத்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. "கல்யாணி! கல்யாணி! என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய்? கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய்? இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

     "நீ என்ன சொல்லப் போகிறாய்? என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா!" என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.

     "ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார்? நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான்! ஹா! ஹா! என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள்? இப்போது?"

     மறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் - அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் - அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான்! இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.

     ஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை! கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே? அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும்? அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.

 

*****

     இப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.

     அந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, "கல்யாணி! கல்யாணி! ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்!" என்றான்.

     கிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, "நானும் வரட்டுமா, சாமி?" என்று கேட்டான். "கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு! தெரிகிறதா?" என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ஓட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.

     முற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் "யார் அது?" என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், "ஐயோ! திருடன்!" என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி "சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்!" என்று சொல்லி விளக்கை அணைத்தான்.

     இதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.

     "சத்தம் போடாதே! நகைகளையெல்லாம் உடனே கழற்றிக்கொடு; இல்லாவிட்டால்..." என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். "என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா?" என்று கேட்டாள்.

     முத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்?...அது யாருடையது?

     டார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்! 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.