LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

நூறுநாற்காலிகள்

 

அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு ‘ராமன்பிள்ளைட்ட ஒருதடவை சரிபாத்துட்டு அனுப்பச்சொல்லு. இன்னைக்கே போனா நல்லது’ என்று பேனாவை வைத்தபோது இரட்டைக் கதவுக்கு அப்பால் அவன் தலையைக் கண்டேன். ‘என்ன விஷயம் குஞ்சன் நாயரே?’ என்றேன். அவன் ரமணியைக் கண்காட்டினான். நான் ரமணியிடம் போகலாம் என்று ஜாடைகாட்டி அவனை உள்ளே வரும்படி தலையசைத்தேன்
குஞ்சன்நாயர் ரமணி போவதைக் கவனித்துவிட்டு ரகசியமும் முக்கியத்துவமும் தொனிக்க சற்றே குனிந்து ‘ஸாருக்கு ஒரு காரியம் சொல்லணும். எப்பிடிச் சொல்லுகதுண்ணு தெரியேல்ல…நான் காலத்தே கேட்டதாக்கும். உச்சைக்கு சைக்கிளை எடுத்துக்கிட்டு கோட்டாறுக்குச் செண்ணு ஒருநடை பாத்துப்போட்டும் வந்தேன். சங்கதி உள்ளது, நான் ஆளைப்பாத்தேன். போதமில்லை. தீரே வய்யாத்த ஸ்திதியாக்கும்…’ என்றான்.
நான் ஊகித்துவிட்டிருந்தலும் அனிச்சையாக ‘யாரு?’ என்றேன். ‘ஸாறுக்க அம்மையாக்கும். கோட்டாறு ஷெட்டிலே பிச்சக்காரங்களுக்க ஒப்பரம் எடுத்து இட்டிருக்காவ. வெறும்தறையிலே ஒரு பாய்கூட இல்லாமலாக்கும் கிடப்பு. துணியும் கூதறயா கெடக்கு. நான் ஒரு அட்டெண்டர்கிட்ட சொல்லி ஒரு புல்பாயி வேங்கி கிடத்தச் சொல்லிட்டு வந்தேன்.. . கையிலே சக்கறம் இருந்தா அவன்கிட்ட குடுத்து ஒரு நல்ல துணி வேங்கி–’
நான் ‘எங்க?’ என்று எழுந்தேன். ‘ஸார்…கோட்டாறு வலிய ஆஸ்பத்திரியாக்கும். ஆஸ்பத்திரிண்ணு சொன்னா செரிக்கும் ஆஸ்பத்திரி இல்ல..இந்தால கழுதச்சந்த பக்கத்தில பழைய ஆஸ்பத்திரி உண்டுல்லா.. இடிஞ்ச ஷெட்டுகள் நாலஞ்சு… அதிலே மூணாமத்ததிலே வெளிவராந்தாவிலே அற்றத்து தூணுக்கு கீழேயாக்கும் கெடப்பு. நமக்க மச்சினன் ஒருத்தன் அங்க சாயக்கடை வச்சிட்டுண்டு. அவனாக்கும் சொன்னது…’ நான் பேனாவைச் சட்டையில் மாட்டி, கண்ணாடியை கூடில் போட்டு, சட்டைக்குள் வைத்துக் கிளம்பினேன்
குஞ்சன்நாயர் பின்னால் ஓடிவந்தான் ‘அல்ல, ஸாறு இப்பம் அங்க போனா…வேண்டாம் ஸார் .நல்லா இருக்காது. இங்க ஓரோருத்தன் இப்பமே வாயிநாறிப் பேசிட்டுக் கெடக்கான். என்னத்துக்கு அவனுகளுக்கு முன்ன நாம செண்ணு நிண்ணு குடுக்கது? இப்பம்வரை நான் ஆரிட்டயும் ஒரு அட்சரம் பேசல்ல பாத்துக்கிடுங்க. இவனுகளுக்க வாயும் நாக்கும் சீத்தயாக்கும்….நீங்க எடபடவேண்டாம். நான் பாத்துக்கிடுதேன். இருசெவி அறியாமல் எல்லாத்தையும் செய்யலாம். உள்ள காச எனக்க கையிலே தந்தா போரும். ஸாறு வீட்டுக்கு போங்க. ஒண்ணும் அறிஞ்சதா பாவிக்க வேண்டாம்…’ நான் கறாராக ‘நாயர் வீட்டுக்கு போங்க…நான் பாத்துக்கிடுறேன்’ என்றபின் வெளியே சென்றேன்
ஆபீஸ் வழியாக நான் நடந்து வெளியே செல்லும்போது என் முதுகில் கண்கள் திறந்தன. எப்போது நான் வெள்ளைச்சட்டை போட ஆரம்பித்தேனோ அப்போதே முளைத்த கண்கள் அவை. அங்கே இருந்த அத்தனைபேரும் முகத்தில் விரிந்த ஏளனச்சிரிப்புடன் திரும்பி என்னைப்பார்த்தபின் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். உதடு அசைய ஒலியில்லாமல் பேசிக்கொண்டார்கள். என்பின்னாலேயே வந்த நாயர் கைகளை ஆட்டி உதட்டை சுழித்து ஏதோ சொல்ல ரமணி வாயைப்பொத்திக்கொண்டு குனிந்து சிரித்தாள்.
நான் காரைத் திறந்து உள்ளே அமர்ந்தேன். குஞ்சன்நாயர் கார் அருகே குனிந்து ‘நான் வேணுமானா சைக்கிளிலே பொறமே வாறேன் சார்’ என்றான். ‘வேண்டாம்’ என்று கிளப்பினேன். அவன் மறைந்து, அலுவலகம் பின்னால் சென்று, சாலையின் பரபரப்பில் இறங்குவது வரை எனக்குள் இருந்த இறுக்கத்தை சாலைக்கு வந்ததும் என் கைகள் ஸ்டீரிங்கில் மெல்ல தளர்வதில் இருந்து அறிந்துகொண்டேன். பெருமூச்சு விட்டு என்னை இலகுவாக்கினேன். ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் சட்டையில், காரில் எங்கும் சிகரெட் இருக்காது. நான் சிகரெட் அதிகம்பிடிக்கிறேன் என்று சுபா விதித்த கட்டுப்பாடு
காரை செட்டிகுளம் ஜங்ஷனில் நிறுத்தி இறங்காமலேயே ஒரு பாக்கெட் வில்ஸ்கோல்ட் வாங்கிக்கொண்டேன். சிகரெட் புகையை ஊதியபோது என்னுடைய பதற்றமும் புகையுடன் வெளியே செல்வதுபோல இருந்தது. செட்டிகுளம் ஜங்ஷனில் நின்ற போலீஸ்காரர் என்னைப் பார்த்ததும் விரைப்பாகி சல்யூட் அடித்தார். கார் பள்ளத்தில் இறங்கிக் கோட்டாறு சந்திப்பை அடைந்தது. பக்கவாட்டில் திரும்பி கோட்டாறு ஆஸ்பத்திரி. அதையும் தாண்டித்தான் கழுதைச்சந்தை என்று கேட்டிருக்கிறேன். அங்கே சென்றதில்லை.
ஆஸ்பத்திரி வாசலில் என் கார் நின்றபோது பரபரப்புடன் முன்னால் நின்ற சிப்பந்திகள் உள்ளே ஓடினார்கள். அங்கும் இங்கும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் ஒலிகள். அதட்டல்கள். சிலர் ஓடும் சத்தம். உள்ளிருந்து இரு டாக்டர்கள் என் காரை நோக்கி ஓடி வந்தார்கள். நான் இறங்கியதும் ‘குடீவினிங் சார்’ என்றார் நடுத்தர வயதானவர். இன்னொருவன் இளைஞன். அவன் மிக மெல்ல ’குடீவ்னிங் செர்’ என்றான். ‘நான் இங்க ஒரு பேஷண்டைப் பாக்க வந்திருக்கேன்’ என்றேன் ‘இங்கேயா சார்?’ என்றார் டாக்டர். ‘இங்க இருக்காது சார்…இங்க–’ . நான் ‘இங்கதான்’ என்றேன்.
’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும். பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் டாக்டர். நான் ‘ம்’ என்றபின் ‘மூணாவது ஷெட் எங்க?’ என்றேன். ‘காட்டுறேன் சார்’ என்றபடி டாக்டர் கூடவே வந்தார் தயக்கமாக ‘எல்லாம் அத்துப்போன கேஸுங்க சார்… ட்ரீட்மெண்டெல்லாம் குடுக்கிறதில்லை. கொஞ்சம் தீனிகீனி குடுத்து ஜெனரல் ஆண்டிபயாட்டிக் குடுத்துப் பாப்போம். சிலசமயம் தேறும். மிச்சம் ஒருநாலஞ்சுநாளிலே போயிடும். ஃபண்ட்ல்லாம் ரொம்ப கம்மிசார். ஸ்டாஃபும் கெடையாது. இதுகளை தோட்டிங்க தவிர மத்த ஸ்டாஃப் தொட்டு எடுக்க மாட்டாங்க…’ என்றார்
நான் பேசாமல் நடந்தேன். ‘ இப்ப ஏகப்பட்ட கிரௌட் சார். மழைக்காலம் பாத்தீங்களா, அங்க இங்க ஈரத்திலே கெடந்து காய்ச்சலும் ஜன்னியும் வந்தெதெல்லாம் இங்க வந்திரும்… இதுகள்லாம் அனிமல்ஸ் மாதிரி. ஒண்ணு விளுந்தா இன்னொண்ணு கவனிக்காது. அப்டியே விட்டுட்டு போயிடும்.தோட்டிங்க தூக்கி இங்க கொண்டு போட்டிருவாங்க…’ அந்த வளாகம் முழுக்க பலவிதமான போஸ்களில் தெருநாய்கள் கிடந்தன. உண்ணி கடித்துக்கொண்டிருந்த ஒரு செவலை என்னை நோக்கி ர்ர் என்றது. கட்டிடங்களின் வராந்தாக்களிலும் நாய்கள் அலைந்தன.
அந்த கட்டிடத்தில் எங்கும் எந்த மரச்சாமான்களும் இல்லை. எப்போதோ எதற்காகவோ கட்டப்பட்ட ஓட்டுக்கொட்டகை. ஓடுகள் பொளிந்த இடைவெளிவழியாக உள்ளே தூண் தூணாக வெயில் இறங்கியிருந்தது. தரையில் போடப்பட்டிருந்த சிவப்புத் தரையோடுகள் தேய்ந்தும் இடிந்து பெயர்ந்தும் கரடுமுரடான குழிகளாக இருந்தன. அவற்றில் கருப்பட்டிசிப்பங்களுக்கான முரட்டு பனம்பாய்களிலும் உரச்சாக்குகளிலுமாக குப்பைகள் போல மனிதர்கள் கிடந்தார்கள். அவர்களின் நடுவே தெருநாய்கள் அலைந்தன
வற்றி ஒடுங்கிய கிழடுகள்தான் அதிகமும். சில பெண்களும்கூட இருந்தார்கள். சிதைந்த உடல்கள். நசுங்கிய உருகிய ஒட்டிய உலர்ந்த முகங்கள். பலர் நினைவில்லாமலோ தூங்கிக்கொண்டோ இருக்க, விழித்திருந்த சிலர் உரக்க கூச்சலிட்டுக்கொண்டும், முனகிக்கொண்டும், கைகால்களை ஆட்டிக்கொண்டும் இருந்தார்கள். வயிற்றை வாந்திக்காக உலுக்க வைக்கும் கடும் நாற்றம் அங்கே நிறைந்திருந்தது. அழுகும் மனிதச்சதையும், மட்கும் துணிகளும், மலமூத்திரங்களும் கலந்த நெடி. விம்ம்ம் என்று ஈக்கள் சுழன்று எழுந்து அடங்கின
நான் கர்ச்சீபால் முகத்தை மூடிக்கொண்டேன். ‘எல்லாம் முத்திப்பழுத்து மண்டை கழண்ட ஜீவன் சார்… படுத்த எடத்திலேயே எல்லாம் போயிடும்…ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் டாக்டர். அங்கே எங்கும் எந்த ஊழியர்களையும் காணவில்லை. நான் தேடுவதைப் பார்த்துவிட்டு ’தோட்டிங்க காலையிலே வந்து துப்புரவு பண்ணி மருந்தக் குடுத்துட்டு போறதோட சரி.சாயங்காலம் அவங்க வர்ரதில்லை. எல்லாம் போதைய போட்டிட்டு படுத்திருவாங்க’ டாக்டர் என்னிடம் ஒரு சுய விளக்கத்தை அளிக்க முயல்கிறார் என்று தெரிந்தது.
மூன்றாவது ஷெட்டின் கடைசித்தூணருகே என் அம்மா கிடப்பதைப் பார்த்துவிட்டேன். ஒரு பனம்பாயில் மல்லாந்து கிடந்தாள். பெரும்பாலும் நிர்வாணமாக. கரிய வயிறு பெரிதாக உப்பி எழுந்து ஒருபக்கமாக சரிந்திருந்தது. கைகால்கள் வீங்கித் தோல்சுருக்கங்கள் விரிந்து பளபளவென்றிருந்தன. முலைகள் அழுக்கு பைகள் போல இருபக்கமும் சரிந்து கிடந்தன. வாய் திறந்து கரிய ஒற்றைப்பல்லும் தேரட்டை போன்ற ஈறுகளும் தெரிந்தன. தலையில் முடி சிக்குப் பிடித்துச் சாணி போல ஒட்டியிருந்தது.
‘இவங்களுக்கு என்ன?’ என்றேன். ‘அது…ஆக்சுவலி என்னான்னு பாக்கலை சார். வந்து நாலஞ்சுநாளாச்சு. நினைவில்லை. வயசு அறுபது எழுபது இருக்கும்போல…’ என்றார். ‘நினைவிருக்கிறவங்களுக்குத்தான் மாத்திரை ஏதாவது குடுக்கிறது’ நான் அம்மாவையே பார்த்தேன். அம்மா ஆறடிக்குமேல் உயரம். சிறுவயதில் கரிய வட்டமுகத்தில் பெரிய வெண்பற்களுடன் பெரிய கைகால்களுடன் பனங்காய்கள் போல திடமான முலைகளுடன் இருப்பாள். உரத்த மணிக்குரல். அவளைத் தெருவில் கண்டால் சின்னப்பிள்ளைகள் அஞ்சி வீட்டுக்குள் ஓடிவிடும்.
ஒருமுறை அந்தியில் அம்மா பிடாரிக் கோயில் பின்பக்கம் ஓடை அருகே இருந்து என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆடையற்ற மேலுடலில் முலைகள் குலுங்க சிறிய ஊடுவழியில் வந்தபோது எதிரே தனியாக வந்த வைத்தியர் கிருஷ்ணன்குட்டி மாரார் அதிர்ந்து இரு கைகளையும் கூப்பியபடி ‘அம்மே! தேவீ’ என்று அப்படியே நடுங்கிக்கொண்டே நின்றதை பலமுறை பல கோணங்களில் தெளிவாக நினைவுகூர்ந்திருக்கிறேன். அம்மா அன்று எங்கோ எதையோ மதர்க்க தின்றிருந்ததனால் அவரை பொருட்படுத்தாமல் நிலம் அதிர காலடி எடுத்து வைத்து தாண்டிச்சென்றாள்.
’ஏதாவது கேஸா சார்?’ என்றார் டாக்டர். என் உதடுகள் சட்டென்று கல்லாக ஆகிவிட்டன. என் உயிர் அவற்றை எட்டவில்லை. சிலகணங்கள் முயற்சித்துவிட்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்தி தலையை அசைத்தேன். ‘வேணுமானா பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போய்டலாம் சார்… பஸ் ஸ்டாண்டிலே இருந்து பொறுக்கிட்டு வந்திருக்கானுக..’ அவர் அம்மாவின் வயிற்றை பார்த்துவிட்டு ‘நாலஞ்சுநாளா யூரின் போகலின்னு நெனைக்கறேன். இன்னர் ஆர்கன்ஸ் ஒண்ணொண்ணா போயிட்டிருக்கு… பெரிசா ஒண்ணும் பண்ணமுடியாட்டியும் யூரினை வெளியேத்தி அம்மோனியாவ கொஞ்சம் கொறைச்சா நெனைவு வர்ரதுக்கு சான்ஸ் இருக்கு…ஏதாவது தகவல் இருந்தா சொல்லவச்சுடலாம்’ என்றார்.
நான் ‘மிஸ்டர்-’ என்றேன். ‘மாணிக்கம் சார்’ என்றார். ‘மிஸ்டர் மாணிக்கம், இது-’ கத்தியால் என் நெஞ்சில்நானே ஓங்கிக் குத்தி இதயம்மீது இரும்புத்தகடை இறக்குவதுபோல சொன்னேன் ‘ இவங்க என் சொந்த அம்மா’ டாக்டர் புரியாமல் ‘சார்?’ என்றார். நான் ‘இவங்க என் அம்மா.. வீட்டைவிட்டுக் காணாமப் போய்ட்டாங்க…கொஞ்சம் மெண்டல் பிராப்ளம் உண்டு’ என்றேன். கொஞ்சநேரம் அவர் சொல்லிழந்து என்னையும் அம்மாவையும் மாறி மாறிப்பார்த்தார். பிறகு ‘ஐயம் ஸாரி சார்…ஆக்சுவல்லி’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
’பரவாயில்லை..இப்ப எனக்காக ஒரு காரியம் பண்ணுங்க. உடனே இவங்களோட டிரெஸ்ஸை மாத்தி அவசியமான டிரீட்மெண்ட் குடுத்து ரெடிபண்ணுங்க. நான் இவங்கள பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போறேன்…ஆம்புலன்ஸும் வரவழையுஙக..’ என்றேன் ‘ஷூர் சார்’ நான் என் பர்ஸை வெளியே எடுத்தேன். ‘சார் ப்ளீஸ்…நாங்க பாத்துக்கறோம்…இட் இஸ் எ ஆனர்…சாரி சார். எங்க நெலைய நீங்க புரிஞ்சுகிடணும்…நான் இந்த சிஸ்டத்திலே என்ன செய்ய முடியுமோ அதைச்செய்யறேன்.’ ‘ஓக்கே’ என்று நான் திரும்பி என் காருக்குச் சென்றேன்.
பத்து நிமிடத்தில் டாக்டர் என்னருகே ஓடிவந்தார். ‘க்ளீன் பண்ணிட்டிருக்காங்க சார். உடனே யூரின் வெளியேத்தி இஞ்செக்‌ஷன் போட்டிடலாம்…ஆனா ஹோப் ஒண்ணும் கெடையாது சார்’ ‘ஓக்கே ஓக்கே’ என்று சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். காருக்கு வெளியே நின்றவர் இன்னும் குனிந்து தணிந்த குரலில் ‘சார்’ என்றார். ‘எஸ்’ என்றேன். ‘சார் நான் என்னால முடிஞ்சத செஞ்சுட்டுதான்சார் இருக்கேன். என் மேலே தப்பே கெடையாதுன்னு சொல்லலை. ஆனா ஒண்ணூமே செய்யமுடியாதுசார். முனிசிப்பல் குப்பைகெடங்குக்கு குப்பைய கொண்டுபோறதுமாதிரித்தான் இங்க இந்த பிச்சக்காரங்கள கொண்டுவர்ராங்க..’
‘ஓக்கே…போய் செய்யவேண்டியதை செய்ங்க’ என்றேன். என் குரலில் தேவையற்ற ஒரு கடுமை எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அது என் மேலேயே எனக்கிருந்த கசப்பினால் ஆக இருக்கலாம். டாக்டர் சட்டென்று உடைந்த குரலில் ‘சார் நான் எஸ்சி சார். கோட்டால வந்தவன். என்னைய மாதிரி ஆளுங்களுக்கு இங்க எடமே இல்லசார். அருவருப்பா ஏதோ பூச்சிய மாதிரி பாக்கறாங்க. நான் சர்வீஸிலே நொழைஞ்சு இப்ப பதினெட்டு வருஷம் ஆகுது… நான் சீனியர் சார். ஆனா இப்ப வரைக்கும் எனக்கு கௌரவமா உக்காந்து நோயாளிகள பாக்கறது மாதிரி ஒரு வேலை எங்கயுமே குடுத்தது கெடையாது. செர்வீஸ் முழுக்க போஸ்ட்மார்ட்டம் பண்ணத்தான் விட்டிருக்காங்க சார். இல்லேன்னா இது…இங்க மேல்சாதிகாரங்க யாருமே இல்ல. சின்னவன் இருககானே அவனும் எங்காளுதான்…எங்க ரெண்டுபேரையும் -’ என்று பேச முடியாமல் விசும்பிவிட்டார்.
இறங்கி அவரைத் தள்ளிவிட்டுக் காலால் வெறிகொண்ட மாதிரி உதைத்து உதைத்து உதைத்து கூழாக்கி மண்ணோடு கலக்க வேண்டும் என்ற வேகம் எழுந்து என் கைகால்கள் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தன. சிகரெட் நுனி நடுங்கிச் சாம்பல் பாண்ட் தொடைமேல் விழுந்தது. அவர் கண்களை துடைத்தபடி ‘…பாழாப்போன பொழைப்புசார்… கிளினிக் வச்சா எங்க கிட்ட மேல்சாதிக்காரன் வர்ரதில்லை. எங்காளுங்களிலெயே காசிருக்கிறவன் வர்ரதில்லை. எனக்கு ஊரிலே தோட்டிடாக்டர்னு பேருசார். படிச்ச படிப்புக்கு வேற எந்த வேலைக்கு போனாலும் மானமா இருந்திருப்பேன். டாக்டரா ஆகணும்னு சொப்பனம் கண்டு ராப்பகலாப் படிச்சேன் சார். இப்ப இங்க தோட்டிகளோட தோட்டியா ஒக்கார வச்சிட்டாங்க…’
நான் பெருமூச்சு விட்டுக் கண்களை கையால் அழுத்திக்கொண்டேன். பின்பு ‘மாணிக்கம்’ என்றேன். என் குரல் அடைத்திருப்பது எனக்கு வினோதமாக ஒலித்தது. ‘மாணிக்கம்’ என்று மீண்டும் சொன்னேன். ‘வேற வேலைக்கு வந்தாலும் இதே கதிதான்.சிவில்சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன? நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி–’ டாக்டரின் வாய் திறந்தபடி நின்றது. நான் பேச்சை அங்கேயே முடித்துவிட எண்ணிச் சிகரெட்டை வீசினேன். ஆனால் என்னை மீறிச் சொற்கள் புண்ணிலிருந்து சீழ் போல வெளியே வழிந்தன.
‘பாத்திங்களா, இந்த உடம்ப இதுக்குள்ள ஓடுற ரத்தம் முழுக்க பிச்சைச்சோத்தில ஊறினது. அத நானும் மறக்கப்போறதில்லை. எனக்கு பிச்சை போட்ட எவனும் மறக்கப்போறதில்லை.. மறக்கணுமானா மொத்த ரத்தத்தையும் வெட்டி வடியச்செஞ்சுட்டு வேற ரத்தம் ஏத்தணும்….சிங்கம் புலி ஓநாய் அப்டி ஏதாவது நல்ல ரத்தம்…அது-’ மேலே சொல்ல சொற்களில்லாமல் நின்று ‘– போங்க…போய் அம்மாவ ரெடி பண்ணுங்க…’ என்று உரக்க சொன்னேன். அந்த உரத்த குரல் எனக்கே கேட்டபோது தன்னுணர்வு கொண்டு கூசித் தலையை வருடிக்கொண்டேன்.
பிரமித்து போனவராக தளர்ந்த நடையுடன் டாக்டர் செல்வதைப் பார்த்துக்கொண்டு இன்னொரு சிகரெட் பற்றவைத்தேன். இந்த ஆளிடம் எதற்காக பிச்சை எடுத்ததைப்பற்றிச் சொன்னேன்? இவன் மனதில் என்னைப்பற்றிய சித்திரம் என்ன ஆகும்? கண்டிப்பாக அது இந்நேரம் சிதைந்து தரையில் கிடக்கும். அவனுக்கு அவனைப்பற்றி எந்த மதிப்பும் இல்லை. இப்போது என்னை அவனைப்போன்ற ஒருவனாக எண்ண ஆரம்பித்திருப்பான். ஆகவே என்னைப்பற்றியும் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை. சிகரெட் ஒரேயடியாக கசந்தது. என் வழக்கத்திற்கு மாறாக நான் தொடர்ந்து சிகரெட்டாக இழுத்துக்கொண்டிருக்கிறேன்.
சிவில் சர்வீஸுக்கான நேர்முகத்தில் எட்டுபேர் கொண்ட குழுமுன் நான் அமர்ந்திருந்தபோது நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியே என் சாதியைப்பற்றித்தான். என் வியர்த்த விரல்கள் மேஜையின் கண்ணாடியில் மெல்ல வழுக்க விட்டுக்கொண்டு என் இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அறைக்குள் குளிர்சாதனக்கருவியின் ர்ர்ர் ஒலி. காகிதங்கள் புரளும் ஒலி. ஒருவர் அசைந்தபோது சுழல் நாற்காலியின் கிரீச். அவர் மீண்டும் என் படிவங்களைப் பார்த்துவிட்டு ‘நீங்கள் என்ன சாதி?’ மீண்டும் குனிந்து ‘பட்டியல்பழங்குடிகளில்…நாயாடி…’ என்று வாசித்து நிமிர்ந்து ’வெல்?’ என்றார்.
கைக்குழந்தையாக இருந்த காலம் முதல் ஒருநாளும் ஒரு நிமிடமும் என்னுடைய சாதியை நான் மறக்க எவரும் அனுமதித்ததில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக திவான்பேஷ்கார் நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலை மனப்பாடம்செய்த காலகட்டத்தில்தான் என் சாதியைப்பற்றி அறிந்துகொண்டென். 1906 ல் நாகம் அய்யா அவரது மானுவலை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னர் வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஆண்டபகுதிகளைப்பற்றி மானுவல்கள் எழுதியிருக்கிறார்கள். மதுரை பற்றிய ஜெ.எச்.நெல்சனின் மானுவல் ஒரு கிளாசிக். அதைப்போன்று எழுதப்பட்டது நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் மானுவல். அதே கறாரான விரிவான தகவல்கள், அதே துல்லியநடை , அதே திமிர்.
திருவிதாங்கூரின் எல்லாச் சாதிகளைப்பற்றியும் நாகம் அய்யா விரிவாகவே எழுதியிருக்கிறார். சாதிகளின் தொடக்கம் பற்றிய தொன்மங்கள், குடியேறிய சாதிகள் என்றால் அதைப்பற்றிய தகவல்கள், சாதிகளின் ஆசாரங்கள் பழக்க வழக்கங்கள், அவர்களின்சமூகப்படிநிலை எல்லாவற்றையும் சொல்கிறார். சாதிகளின் பொதுவான தோற்ற அமைப்பை வர்ணிக்கிறார். எட்கார் தர்ஸ்டனின் அடியொற்றி சாதிகளின் முக அமைப்பை மூக்கின் நீளத்தைக்கொண்டு வரையறுக்க முடியுமா என்று பார்க்கிறார்.
நெல்சனைப்போலவே ஒவ்வொரு சாதிக்கும் அதற்குரிய தனிக்குணம் உண்டு என்ற எண்ணம் அவருக்கும் இருந்திருக்கிறது. கம்பீரமான கட்டுபாடற்ற நாயர், சோம்பேறிகளும் புத்திசாலிகளுமான வெள்ளாளர், கடும் உழைப்பாளிகளான திமிர் கொண்ட நாடார், குடியும் கலகமும் கொண்ட ஈழவர் என்று அவர் இன்றைய ஜனநாயகச் சங்கடங்கள் ஏதுமில்லாமல் சொல்லிக்கொண்டே செல்கிறார். ஒவ்வொரு சாதியைப்பற்றியும் அன்றைய ஆளும்தரப்பு, அல்லது பிராமணத்தரப்பு என்ன நினைத்தது என்பதற்கான ஆவணம் அது.
அதில் மிகக்குறைவாக விவரிக்கப்பட்ட சாதி என்னுடையது. ‘நாயாடிகள். அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாடமுடியாது. இவர்களை நேரில் பார்த்துவிட்டால் உடனே சத்தம்போட்டு சூழ்ந்துகொண்டு கல்லால் அடித்து கொன்று அங்கேயே எரித்துவிடும் வழக்கம் இருந்தது. ஆகவே இவர்கள் பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தைகுட்டிகளுடன் பன்றிகள் போல ஒடுங்கிக்கொண்டு தூங்குவார்கள். இரவில் வெளியே கிளம்பி வேட்டையாடுவார்கள். இவர்கள் மூதேவியின் அம்சம் என்று நம்பபட்டமையால் இவர்களுக்கு தவிடு, மிஞ்சிய உணவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வெளியே பிச்சையாக தூக்கி வைக்கும் வழக்கம் உண்டு.
இவர்கள் கையில் அகப்பட்ட எதையும் தின்பார்கள். எலிகள், நாய்கள் ,பல்வேறு பூச்சிபுழுக்கள் , செத்த உயிரினங்கள் . எல்லாவகை கிழங்குகளயும் பச்சையாக உண்பார்கள். கமுகுப்பாளையால் பிறப்புறுப்புக்களை மறைத்திருப்பார்கள். இவர்கள் பொதுவாக நல்ல கரிய நிறமும் உயரமும் கொண்டவர்கள். நீளமான பெரிய பற்கள் உண்டு. இவர்களின் மொழி தமிழ்போன்று ஒலிப்பது. இவர்களுக்கு எந்தக் கைத்தொழிலும் தெரியாது. இவர்களிடம் அனேகமாக உடைமைகள் என ஏதும் இருப்பதில்லை. இவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை என்பதனால் குடில்கள் கட்டிக்கொள்வதில்லை. திருவிதாங்கூரில் இவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களால் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை’
நான் நாகம் அய்யா அவரது மானுவலில் என்ன சொல்கிறார் என்று ஒப்பிப்பது போல சொன்னேன். இன்னொருவர் என்னை கூர்ந்து பார்த்தபடி ’இப்போது உங்கள் சாதி எப்படி இருக்கிறது? முன்னேறிவிட்டதா?’ என்றார். ‘இல்லை, இன்றும் அனேகமாக எல்லாருமே பிச்சையெடுத்தும் பொறுக்கி உண்டும் தெருவில் திறந்த வெளிகளில்தான் வாழ்கிறார்கள்’ அவர் என்னை நோக்கி ‘நீங்கள் சிவில்சர்வீஸ் வரை வந்திருக்கிறீர்களே?’ என்றார். ‘எனக்கு ஒரு பெரியவரின் உதவி கிடைத்தது’ அவர்களில் ஒருவர் ‘அம்பேத்காரைப் போல?’ என்றார். நான் அவர் கண்களை உற்று நோக்கி ‘ஆமாம், அம்பேத்காரைப்போல’ என்றேன். சில கணங்கள் அமைதி.
மூன்றாமவர் என்னிடம் ‘இப்போது ஓர் ஊகக்கேள்வி. நீங்கள் அதிகாரியாக இருக்கும்வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒருபக்கம் நியாயம் இருக்கிறது, இன்னொருபக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள். என்ன முடிவெடுப்பீர்கள்?’ என்றார். மற்றவர்கள் அந்த கேள்வியால் மிகவும் தூண்டப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்தது. நாலைந்து நாற்காலிகள் முனகின. என் விரல்கள், காதுமடல்கள், கண்திரை எல்லாம் சூடான குருதி அழுத்திப்பாய்ந்து கொதித்தன. நான் சொல்ல வேண்டிய பதிலென்ன என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் நான் அந்தக்கணத்தில் சுவாமி பிரஜானந்தரை நினைத்துக்கொண்டேன்.
திடமான குரலில் ‘சார், நியாயம் என்றால் என்ன?’ என்றேன். ’ வெறும் சட்டவிதிகளும் சம்பிரதாயங்களுமா நியாயத்தை தீர்மானிப்பது? நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் இருந்தாகவேண்டும் அல்லவா? சமத்துவம்தான் விழுமியங்களிலேயே மகத்தானது, புனிதமானது. ஒருநாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருபக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிவிடுகிறான். அவன் என்ன செய்திருந்தாலும் அது நியாயப்படுத்தப்பட்டு விடுகிறது’
உடல்கள் மெல்லத் தளர நாற்காலிகள் மீண்டும் முனகின. சிலர் கைகளை கோர்த்துக்கொண்டார்கள். கேள்விகேட்டவர் ‘மிஸ்டர் தர்மபாலன், கொலை? கொலை செய்திருந்தால்?’ என்றார். அந்த வரியை அங்கே என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை ‘சார், கொலையே ஆனாலும் நாயாடிதான் பாதிக்கப்பட்டவன்’ என்றேன்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. தாள்கள் மட்டும் கரகரவென புரண்டன. பின் பெருமூச்சுடன் முதலாமவர் சில கேள்விகளைக் கேட்டார். பொது அறிவுத்தகவல்கள்தான். பேட்டி முடிந்தது. என் விதி தீர்மானமாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மனதுக்குள் நிறைவுதான் கனத்தது. நேராகச்சென்று சிறுநீர் கழித்தபோது உடலுக்குள் கொந்தளித்த அமிலமே ஒழுகிச் செல்வதுபோல இருந்தது. கைகால்கள் எல்லாம் மெல்ல மெல்லக் குளிர்ந்தன. கண்ணாடியில் முகம் கழுவிக்கொண்டேன். தலைசீவியபடி என் முகத்தைப்பார்த்தபோது அதிலிருந்த பதற்றம் எனக்கே புன்னகையை வரவழைத்தது
நேராக காண்டீன் சென்று ஒரு காபி வாங்கிக்கொண்டு கண்ணாடிச்சன்னலருகே கண்ணாடிமேஜைக்கு அருகில் சென்று அமர்ந்து உறிஞ்சினேன். கீழே அதல பாதாளத்தில் கார்களின் மண்டைகள் கரப்பாம்பூச்சிகள் போலத் தெரிந்தன. மனிதர்கள் செங்குத்தாக நடந்து சென்றார்கள். பச்சைச் செண்டுகள் போல நாலைந்து மரங்கள் காற்றில் குலைந்தன. சாலையில் சென்ற ஏதோ காரின் ஒளி என் கண்களை மின்னி விலகியது. என் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவரை முதலில் நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்பு தெரிந்தது, பேட்டி எடுத்தவர். அந்த நியாயம் பற்றிய கேள்வியைக் கேட்டவர்
‘ஐ யம் நவீன் சென்குப்தா’ என்றார். ‘ஹல்லோ சார்’ என்று கைநீட்டினேன். குலுக்கியபடி டீக்கோப்பையை சற்று உறிஞ்சினார். ‘பேட்டி மாலையிலும் இருக்கிறது. ஒரு சின்ன இடைவேளை’ என்றார். நான் அவரையே பார்த்தேன். ‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டீர்கள். ஒருவர் தவிர அத்தனைபேருமே உயர்மதிப்பெண் போட்டிருக்கிறார்கள்’ நான் அதை எதிர்பார்க்காததனால் அவரையே அர்த்தமில்லாமல் வெறித்தேன்.’.. இது இப்போதைக்கு அரசு ரகசியம். உங்கள் பதற்றத்தைக் கண்டதனால் சொன்னேன்’ என்றார்.
‘நன்றி சார்’ என்றேன். ‘பரவாயில்லை. நான் அந்தக் கேள்வியை சாதாரணமாகத்தான் கேட்டேன். அந்த வகையான கேள்வி எல்லாரிடமும் கேட்கப்படும். ஒரே வகையான பதில்கள்தான் எதிர்பார்க்கப்படும். நீங்கள் சொன்ன பதில் நிர்வாகக் கண்ணோட்டத்தில் மிகமிக தவறானது. ஆனால் ஆத்மார்த்தமாகச் சொன்னீர்கள். உணர்ச்சிகரமாக முன்வைத்தீர்கள்..’ அவர் மீண்டும் டீயை உறிஞ்சி ‘என்னைத்தவிர எவரும் நல்ல மதிப்பெண் போடமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒருவர் தவிர எல்லாருமே மிகச்சிறந்த மதிப்பெண் போட்டார்கள்..’சட்டென்று சிரித்து ‘நான் மதிப்பெண் போட்டதற்கான அதேகாரணம்தான் என்று நினைக்கிறேன்’ என்றார்
நான் என்ன என்பதுபோல பார்த்தேன். ‘என்னை மனிதாபிமானி என்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவன் என்றும் மொத்தத்தில் நவீனமனிதன் என்றும் அவர்கள் நினைக்கவேண்டும் என்று எண்ணினேன். அதாவது எதற்காக மதச்சின்னங்கள் அணிவதில்லையோ ஏன் மாட்டிறைச்சி தின்று மது அருந்துகிறேனோ அதே காரணம். பங்காலி பிராமணர்களும் பஞ்சாபி பிராமணர்களும் இந்த மனநிலையில் இருந்து வெளிவருவது கடினம்’ மிஞ்சிய டீயை குடித்துவிட்டு ‘- ஆனால் யாதவுக்கு அந்த சிக்கலே இல்லை. அவர் சாதாரணமாக பிற்போக்கு சாதியவாதியாக இருக்கலாம்.’ என்றார்.
’ஓக்கே’ என்று அவர் எழுந்துகொண்டார். ‘நீங்கள் என்னை எந்த தனிப்பட்ட உதவிக்காகவும் தொடர்பு கொள்ளலாம். நானும் முடிந்தவரை முற்போக்காக இருக்க முயற்சி செய்வேன்’ சட்டென்று உரக்கச் சிரித்து ‘அதாவது நீங்கள் என் சொந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள முயலாதவரை’. நானும் சிரித்துவிட்டேன். இரட்டைத்தாடை கொண்ட கொழுத்தமுகமும் சிறிய கண்களும் கொண்ட மனிதர். கொஞ்சம் மங்கோலியக்களை கொண்ட முகம். என் முதுகில் தட்டியபடி ‘இளைஞனே, நீ நிறையச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏராளமான மனமுறிவுகளும் சோர்வும் வரும். இந்த வேலைக்கு வந்ததற்காக வருத்தப்படவே உனக்கு வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் வாழ்த்துக்கள்’ என்றார்.
போகும் வழியில் திரும்பி ‘உன்னைப் படிக்க வைத்தவர் யார்?’ என்றார். ‘சுவாமி பிரஜானந்தர். நாராயணகுருவின் சீடரான சுவாமி எர்னஸ்ட் கிளார்க்கின் சீடர்…’ என்றேன். ’ஏர்னஸ்ட் கிளார்க்கா? வெள்ளையரா?’ ‘ஆமாம் .பிரிட்டிஷ்காரர்.தியஸபிகல் சொசைட்டிக்கு வந்தவர் நாராயணகுருவின் சீடரானார். குரு இறந்தபிறகு திருவனந்தபுரத்தில் நாராயணமந்திர் என்று ஒரு ஆசிரமம் நடத்தினார். 1942 வாக்கில் கோயம்புத்தூருக்குச் சென்று அங்கே ஒரு குருகுலத்தை நிறுவினார். நாராயணகுருவின் வேதாந்தத்தை விவாதிப்பதற்காக லைஃப் என்று ஒரு பத்திரிகை நடத்தினார்..எல்லாம் நான் வாசித்தறிந்ததுதான்’ என்றேன் ‘ பிரஜானந்தர் ஏர்னஸ்ட் கிளார்க்குடன் திருவனந்தபுரம் குருகுலத்தில் இருந்தார். அவர் போனபின் குருகுலத்தை பிரஜானந்தர் கொஞ்சகாலம் நடத்தினார்’
’பிரஜானந்தர் இப்போது இருக்கிறாரா?’ என்றார் சென்குப்தா. ‘இல்லை. இறந்துவிட்டார்’ ‘ஓ’ என்றார். ‘அவரது உண்மையான பெயர் கேசவப் பணிக்கர். ஏர்னஸ்ட் கிளார்க் அவருக்கு காவி கொடுத்து பிரஜானந்தராக ஆக்கினார்’ ‘ஏர்னஸ்ட் கிளார்க் சாமியாரா?’. ‘ஆமாம். நாராயணகுருவின் ஒரே அன்னியநாட்டு சீடர் அவர்தான். ஆனால் நாராயணகுரு ஏர்னஸ்ட் கிளார்க்கின் பெயரை மாற்றவில்லை’ . ‘ஆச்சரியம்தான்’ என்றார் சென்குப்தா
‘நாராயணகுரு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சென்குப்தா எழுந்தார். ‘ராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி இல்லையா?’. ‘ஆமாம்’. ‘வெல்…பட் -’ என்றபின் ‘ஓக்கே’ என்றார். ‘சொல்லுங்கள் சார்’. ‘இல்லை, உன்னைச் சோர்வடையச்செய்ய விரும்பவில்லை…’ ‘பரவாயில்லை’ ‘இல்லை நீ வேறேதாவது செய்திருக்கலாம். நல்ல கல்வியாளர் ஆகியிருக்கலாம். மருத்துவர் ஆகியிருக்கலாம். சமூக சேவைகூடச் செய்திருக்கலாம்…இது சரியான துறையா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது நீ நினைப்பது போல அல்ல…வெல்’ சட்டென்று கைகுலுக்கிவிட்டு நேராக நடந்து லிஃப்டை நோக்கிச் சென்றார்.
அவர் என்ன சொன்னார் என்பதை நான் அதன்பின் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன். எங்கும் எப்போதும் நான் வெளியே நிறுத்தப்பட்டேன். ஆட்சிப்பணி பயிற்சி என்பது ’நான் கட்டளையிடப்பிறந்தவன்’ என்று ஒருவனை நம்பவைப்பதற்கான எளிமையான மனவசியமன்றி வேறல்ல. ஆனால் என்னிடம் மட்டும் அப்படிச் சொல்லப்படவில்லை. என்னை நோக்கிய எல்லா சொற்களும் நீ வேறு என்பதாகவே இருந்தன. எங்கள் கருணையால், எங்கள் நீதியுணர்ச்சியால் நீ இங்கே அமர அனுமதிக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே எங்களிடம் நன்றியுடன் இரு, எங்களுக்கு விசுவாசமானவனாக இரு.
தமிழ்நாடு வட்டாரத்திற்கு நான் நியமிக்கப்பட்டு முதல்முறையாக சென்னையில் பணிக்குச் சேர்ந்தபோது முதல்நாளிலேயே நான் யாரென உணரச்செய்யப்பட்டேன். முந்தையநாள் நான் என் மேலதிகாரியிடம் என்னை அறிக்கையிட்டுவிட்டு என் இடத்திலிருந்து பிரிந்துசெல்லும் அதிகாரியைச் சம்பிரதாயமாகச் சென்று சந்தித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் அதே அறையில் நான் நுழைந்தபோது அங்கே ஏற்கனவே இருந்த உயரமான சிம்மாசனம்போன்ற நாற்காலி அகற்றப்பட்டு எளிமையான மரநாற்காலி போடப்பட்டிருந்தது. பலர் அமர்ந்து நார்ப்பின்னல் கூடைபோல தொய்ந்த பழைய நாற்காலி. ஏதோ குமாஸ்தாவுடையது. நான் அதைப்பார்த்தபடி சிலநிமிடங்கள் நின்றேன். என் பின்னால் நின்ற தலைமை குமாஸ்தாவிடம் அந்த பழைய நாற்காலி எங்கே என்று கேட்பதற்காக எழுந்த நாக்கை என் முழுச்சக்தியாலும் அடக்கிக்கொண்டு அதில் அமர்ந்தேன்.
சிலநிமிடங்கள் கழித்து உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்ன ஒவ்வொருவரின் பார்வையிலும் நான் அதைத்தான் உணர்ந்துகொண்டேன், அந்த இல்லாமல் போன நாற்காலி. மிதமிஞ்சிய பணிவு, செயற்கையான சரளத்தன்மை, அக்கறையற்ற பாவனை அனைத்துக்கு அடியிலும் அதுதான் இருந்தது. நான் சொன்ன அத்தனைச் சொற்களிலும் அது இருந்தது. கறாரான ஆனால் மென்மையான அதிகாரப்பேச்சுக்கு நான் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் என்ன செய்யவேண்டும்?
என் நாற்காலிக்காக நான் போராடலாம். ஆனால் அதை என்னுடைய அற்பத்தனத்தின் அடையாளமாகச் சித்தரித்துக்கொள்வார்கள். அதையே என் இயல்பாக ஆக்கி அழியாத முத்திரை ஒன்றை உருவாக்குவார்கள். மிஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் செல்லும் இடங்கள் முழுக்க அந்த முத்திரை கூடவே வரும். அதிகாரவராந்தாக்களில் உருவாகி நிலைபெறும் தொன்மக்கதைகளில் ஒன்றாக ஆகும். அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அது மேலும் இழிவுகளை என் மேல் சுமத்த நானே கொடுத்த அனுமதியாக ஆகும்.
சிலமணிநேரங்களுக்குப் பின் அதைப்பற்றிக் கேட்பதற்காக நான் தலைமைக்குமாஸ்தாவை உள்ளே அழைத்தேன். அவர் கண்களில் தெரிந்த திடத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது, அவர் எடுத்த முடிவல்ல அது. அவருக்குப் பின்னால் ஒரு அமைப்பே இருக்கிறது. அதனுடன் நான் மோதமுடியாது. நான் தன்னந்தனியானவன். மோதி இன்னும் சிறுமைப்பட்டால் என்னால் எழவே முடியாது. சாதாரணமாக ஏதோ கேட்டேன். அந்த சிறிய கண்களில் சிரிப்பு ஒன்று மின்னி மறைந்ததோ என எண்ணிக்கொண்டேன்.
ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்…அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன். ‘யூரின் வெளியே எடுத்தாச்சு சார்… டிரிப்ஸ் போகுது. கிட்னி வேலைசெய்றமாதிரியே தெரியலை. நாலஞ்சுநாளா எங்கியோ காய்ச்சல் வந்து கெடந்திருக்காங்க’ நான் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.
ஆஸ்பத்திரிக்குள் அம்மாவை கொண்டு செல்லும்போது கவனித்தேன். வயிறு நன்றாக சுருங்கியிருந்தது. வெண்ணிறமான உடை அணிந்திருந்தாள். வெண்ணிறப்போர்வையில் மஞ்சளாக குருதியோ நிணமோ வடிந்து பரவிக்கொண்டிருந்தது. டாக்டரே இறங்கிச்சென்று பேசி அம்மாவை உள்ளே கொண்டு சென்றார். நான் வரவேற்பறையில் காத்திருந்தேன். ஒருமணி நேரத்தில் டாக்டர் இந்திரா என்னை அவரது அறைக்குள் அழைத்தார். நான் அமர்ந்ததும் ‘ஸீ, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. மாணிக்கம் டோல்ட் எவ்ரிதிங். ஷி இஸ் சிங்கிங்..’ என்றார். நான் தலையசைத்தேன். ‘பாக்கிறோம். நினைவு திரும்பினா அதிர்ஷ்டம் இருக்குன்னு அர்த்தம்…இஸ் ஷி அவுட் ஆஃப் மைண்ட்?’ நான் தலையசைத்தேன். ‘வெல், சிலசமயம் கடைசி நினைவுகள் தெளிவா இருக்கும். பாக்கலாம்’
இரவாகிவிட்டிருந்தது. நான் எழுந்தேன். டாக்டர் ‘இங்க யாரும் இருக்கவேண்டியதில்லை. ஏதாவது இருந்தா நான் ஃபோன்பண்றேன்’ என்றார். வெளியே மாணிக்கம் இருந்தார். ‘நான் ஸ்டீபனை இங்க நிப்பாட்டியிருக்கேன் சார். அவரு பாத்துக்குவார்’ என்றார். ‘இல்லை மாணிக்கம். பரவாயில்லை. அவர் போகட்டும். இங்கேயே பாத்துக்குவாங்க’ என்றேன். காரைக் கிளப்பியபோதுதான் மூன்றுமணிநேரமாக நான் டீ கூடக் குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. உடனே பசிக்க ஆரம்பித்தது.
காரை நிறுத்திவிட்டு காரேஜில் இருந்தே உள்ளே நுழைந்தபோது சுபா வந்து ‘என்ன? சொல்லவேயில்லை’ என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து பூட்ஸ்களை கழற்றினேன். ‘சாப்பிடறீங்களா?’ ‘இல்லை குளிச்சிடறேன்’ அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உடைகளைக் கழற்றி அழுக்குக் கூடையில் போட்டுவிட்டு நேராக பாத்ரூம்சென்று ஷவரில் நின்றேன். ஈரத்தைத் துடைத்துக்கொண்டிருந்தபோது மனம் அமைதியாகிவிட்டதை உணர்ந்தேன்
டைனிங் டேபிளில் சுபா தட்டு பரப்பியிருந்தாள். ‘நீ சாப்பிடலையா?’ ‘இல்லை. குட்டி இவ்ளவு நேரம் இருந்தான். இப்பதான் தூங்கினான்’ நான் அமர்ந்ததும் அவளும் எதிரே அமர்ந்தாள். நாகம்மா சூடாகச் சப்பாத்தி போட்டு எடுத்துக்கொண்டு வந்து என் தட்டில் போட்டாள். ‘சுபா’ என்றேன். ‘அம்மாவைப் பாத்தேன்’ அவள் கண்கள் நிமிர்ந்து என்னை நோக்கி உறைந்திருந்தன. ’இங்க சர்க்கார் ஆஸ்பத்திரியிலே…பிச்சைக்காரங்களுக்கான கொட்டகையிலே’ அவள் ஒன்றும் சொல்லாமல் உதட்டை மட்டும் அசைத்தாள். ‘ரொம்ப மோசமான நெலைமை. பலநாள் எங்கியோ காய்ச்சலா கெடந்திருக்கா. எல்லா ஆர்கன்ஸும் செத்திட்டிருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ ஆயிடும்னு சொன்னாங்க’
‘எங்க இருக்காங்க?’ என்றாள். நான் ‘கோபாலபிள்ளையிலே சேத்திருக்கேன்’ அவள் பேசாமல் சரிந்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். நான் இரண்டாவது சப்பாத்தியை பாதியில் விட்டு எழுந்தேன். ‘நாகம்மா அய்யாவுக்கு பால் கொண்டா’ ‘வேண்டாம்’ என்றேன் ‘சாப்பிடுங்க அப்றம் காலம்பற அசிடிட்டி ஏறிடப்போகுது’ நான் ஒன்றும் சொல்லாமல் படுக்கையறைக்குச் சென்றேன். பாதி போர்த்திக்கொண்டு பிரேம் படுத்திருந்தான். நான் அவனருகே படுத்து அவன் கால்களை மெல்ல வருடிக்கொண்டு மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சுபா இரவு உடை அணிந்து கையில் பாலுடன் வந்தாள். என்னருகே டீபாயில் வைத்து ’குடிங்க’ என்று சொல்லிவிட்டு கண்ணாடிமுன் நின்று தலையை பெரிய சீப்பால் சீவி கொண்டை போட்டாள். நான் அவளுடைய வெண்ணிறமான பின்கழுத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி ‘என்ன?’ என்றாள். நான் இல்லை என்று தலையாட்டிவிட்டுப் பாலைக் குடித்தேன். எழுந்து பாத்ரூம் சென்று லேசாகப் பல்லைத்தேய்த்து கொப்பளித்துவிட்டு வந்தேன். அவள் படுக்கையில் படுத்துக்கொண்டு ‘நான் வரணுமா?’ என்றாள்.
நான் அவளை வெறுமே பார்த்தேன். ’நான் வந்தாகணும்னா வரேன். ஆனா வரதுக்கு எனக்கு விருப்பம் இல்லை’ எப்போதுமே அவள் மிகுந்த நடைமுறைத்தன்மையுடன் பேசுபவள். ‘எனக்கு நாளைக்கு ரெண்டு மீட்டிங் இருக்கு…ஒண்ணு மினிஸ்டரோட புரோக்ராம். அதை நான் ஒண்ணும் பண்ணமுடியாது. சாயங்காலம் வேணுமானா வர்ரேன்’ நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? ’ நான் ‘எனக்கு ஒண்ணும் தோணலை’ என்றேன்
‘இங்க பாருங்க, இதை ஒரு பெரிய இஷ்யூவா ஆக்கினா உங்களுக்குத்தான் பிரச்சினை. எப்டியும் அவங்க இன்னைக்கோ நாளைக்கோ போயிடுவாங்க கௌரவமா செய்யவேண்டியதைச் செஞ்சு முடிச்சிடலாம். நானும் வந்து இத ஒரு பெரிய ஷோவா ஆக்கினா அப்றம் எல்லாருக்கும் சங்கடம். துக்கம் விசாரிக்க வர ஆரம்பிச்சிருவாங்க. ஆளுக்கொண்ணா கேட்டிட்டிருப்பாங்க. உங்களுக்கும் சங்கடமா இருக்கும்’ நான் ‘சரி’ என்றேன். ’அப்ப பேசாம படுங்க. ஃபோன் வந்தா எழுப்பறேன். மாத்திரை போட்டுக்கங்க’ நான் பெருமூச்சுடன் மாத்திரை ஒன்றைப் போட்டுக்கொண்டேன்
‘குட்நைட்’ என்றாள் சுபா. நான் ‘ஒருவேளை அம்மா முழிச்சுகிட்டு பிரேமை பாக்க விரும்பினா?’ என்றதும் சுபா கோபமாக எழுந்து அமர்ந்துவிட்டாள். ‘நான்சென்ஸ்!’ என்றாள். ‘லுக் அவன் என் பிள்ளை. அந்த பிச்சைக்காரிதான் அவன் பாட்டின்னு அவன் மனசிலே ஏத்தறதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்’ நான் கொஞ்சம் கோபத்துடன் ‘என்ன சொல்றே? அவன் எனக்கும் மகன்தான். அந்த தெருப்பிச்சைக்காரி பெத்த பிள்ளைதான் நான்’
நான் கோபம் கொண்டால் உடனே நிதானமாக ஆவது அவள் இயல்பு. கண்களில் கூர்மை வந்தது. திடமான மெல்லிய குரலில் ‘இப்பச் சொன்னீங்களே, இதான். இதான் உங்க பிரச்சினை. எப்பவுமே உங்க பிறப்பும் வளர்ப்பும் சாதியும் உங்க மனசிலே இருந்திட்டிருக்கு. அந்த தாழ்வுணர்ச்சியாலதான் உங்க வாழ்க்கைய நீங்க நரகமா ஆக்கிட்டிருக்கீங்க. உங்க கெரியரை டோட்டலா ஸ்பாயில் பண்ணியிருக்கீங்க. அந்த தாழ்வுணர்ச்சிய பிரேம் மனசிலேயும் புகுத்தணுமா? அப்டீன்னா செய்ங்க’
நான் தளர்ந்து பின்னால் சரிந்தேன். ‘லூக், ஸ்டில் யூ கன் நாட் ஸிட் ஃபர்ம்லி இன் எ சேர்’ என்றாள் சுபா. ’உங்க படிப்பு, அறிவு ஒண்ணுமே பிரயோசனமில்லை. ஒருத்தர்கிட்ட கட்டளை போட நாக்கு வளையாது. ஒருத்தர் கண்ணைப்பாத்து பேசமுடியாது. எல்லாரும் முதுகுக்குப் பின்னாடி ஏதோ பேசி சிரிக்கிறாங்கன்னு எப்பவும் ஒரு காம்ப்ளெக்ஸ். என் பையனாவது அவன் ஜெனரேஷன்லே இதிலே இருந்து வெளியே வரட்டும். ப்ளீஸ். செண்டிமெண்ட் பேசி அவன் வாழ்க்கைய அழிச்சிராதீங்க. நீங்க படற சித்திரவதை அவனுக்கும் வரக்கூடாதுன்னா லீவ் ஹிம் அலோன்’
நான் ‘ஓக்கே’ என்றேன். சுபா கனிந்து என் நெற்றியில் கையை வைத்து ‘ஸீ..நான் உங்களப் புண்படுத்தறதுக்காகச் சொல்லலை. இட் இஸ் எ ஃபேக்ட். ப்ளீஸ்’ என்றாள். நான் ‘தெரியும்’ என்றேன். ‘அம்மா உங்களுக்கும் எனக்கும் எல்லா கெட்டபேரையும் வாங்கி குடுத்தாச்சு. சிரிக்க வேண்டியவங்க எல்லாரும் சிரிப்பா சிரிச்சாச்சு. இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமா அந்த சிரிப்பு இல்லாம போகட்டும்…’ என் தலை தூக்கத்தில் கனத்தது. ‘சரிதான்…ஓக்கே’ என்றபின் கண்களை மூடிக்கொண்டேன்.
காலையில் என் மனம் அலையற்றிருந்தது. ஆனால் கொஞ்சநேரம்தான். காலையில் ஆஸ்பத்திரிக்கு ஃபோன்செய்து விசாரித்தேன். அம்மா நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிந்தது. ஒன்பது மணிக்குக் கிளம்பி ஆஸ்பத்திரியை நெருங்க நெருங்க பதற்றம் ஏறி என் கைகள் ஸ்டீரிங்கில் வழுக்கின. சுந்தர ராமசாமியின் வீட்டு முகப்பை அடைந்தபோது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று கொஞ்சநேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைத்தேன். அவர் தன் முகப்பறைக்கு வந்து அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரம்தான்.பிறர் குரலைக் கூர்ந்து கேட்பதில் அவருக்கு நிகராக இன்னொருவரைக் கண்டதில்லை. எத்தனையோ பேர் எதையெதையோ முறையிட்டும் அந்தக் கவனம் அழியவில்லை
அவரது வீட்டுக்குள் இருந்து அவரது சீடனான இளம்எழுத்தாளன் லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்து கேட்டை பாதி திறந்து போட்டுக்கொண்டு செல்வதைக் கண்டேன். வடகேரளத்தில் காசர்கோட்டில் ஏதோ வேலைபார்ப்பவன். அவர் வீட்டு மாடியில்தான் தங்கியிருக்கிறான் போல. சுந்தர ராமசாமியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது சிலதடவை அவனும் கலந்துகொண்டிருக்கிறான். அப்போது அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்று ஆசைப்பட்டேன். உள்ளே செல்லவேண்டுமென நினைத்தாலும் கார் அதுவே செல்வதுபோல தாண்டிச்சென்று கோபாலபிள்ளை ஆஸ்பத்திரிமுன்னால் நின்றது.
டாக்டர் இந்திரா வரவில்லை. பயிற்சி டாக்டர் என்னை நோக்கி வந்து பணிவாக வணக்கம் சொன்னான். ’எப்டி இருக்காங்க?’ என்றேன். ‘அப்டியேதான் சார்’ என்றான். அம்மாவின் அறையில் இருந்து குஞ்சன்நாயர் என்னை நோக்கிப் பெருச்சாளி வருவது போலக் குனிந்தபடி ஓடிவந்தான். ‘நான் காலத்தே வந்திட்டேன் சார். அம்மைக்கு இப்பம் கொஞ்சம் கொள்ளாம். மூத்திரம் எடுத்த பிறகு முகத்தில் ஒரு ஐஸ்வரியம் உண்டு’ என்றான். நான் அவனிடம் ‘நீங்க ஆபீஸிக்குப்போய் நான் டிரேயிலே வச்சிருக்கிற பேப்பரை எல்லாம் எடுத்து கனகராஜ்ட்ட குடுங்க’ என்றேன். ‘நான் இங்க?’ என்றான். ‘நான் இருக்கேன்’ ‘அல்ல சார், நான் இங்க துணையாட்டு…’ ‘வேண்டாம்’ ‘ஓ’ என்று பின்னால் நகர்ந்தான்
அறைக்குள் சென்றேன். அம்மா அதேபோல படுத்திருந்தாள். கிட்டத்தட்ட சடலம்தான். சலைன் இறங்கிக்கொண்டிருந்தது. இன்னொருபக்கம் துளித்துளியாக சிறுநீர். அருகே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு அம்மாவையே பார்த்தேன். நெற்றியிலும் கன்னத்திலும் தோள்களிலும் கைகளிலும் முழுக்க ஏராளமான புண்ஆறிய வடுக்கள். சில வடுக்கள் மிக ஆழமானவை. நெற்றியில் ஒருவடு மண்டை ஓடே உடைந்தது போலிருந்தது. வாழ்நாளில் எப்போதுமே ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்க மாட்டாள். எல்லா புண்களும் பழுத்து சீழ்வைத்து சிலசமயம் புழுகூட வைத்து தானாக ஆறியிருக்கவேண்டும். நாய்களுடனும் சக மனிதர்களுடனும் சண்டையிட்ட காயங்கள். யார் யாரோ கல்லால் அடித்தவை, குச்சிகளால் அடித்தவை, டீக்கடைகளில் வெந்நீர் ஊற்றியவை..
நான் சுபாவை காதலிக்கும் நாட்களில் அந்தரங்கமான தருணம் ஒன்றில் என் சட்டையை கழற்ற நேர்ந்தபோது அவள் விக்கித்துப்போனாள். ‘மை குட்நெஸ்..இதென்ன இவ்ளவு காயம்?’ நான் வரண்ட சிரிப்புடன் ‘சின்னவயதிலே நான் புண்ணில்லாம இருந்ததே கெடையாது…’ என்றேன். அவள் என் முதுகில் இருந்த நீளமான தழும்பை விரலால் தொட்டு மெல்ல வருடினாள். ‘புறமுதுகு காயம்ல அது…. மார்பிலே நல்ல விழுப்புண் இருக்கு’ என்றேன். சட்டென்று அவள் விசும்பி அழுதபடி என்னை தழுவிக்கொண்டாள். என் தோள்களிலும் புஜங்களிலும் இருந்த வடுக்களில் முத்தமிட்டாள்.
ஏழுவயதில் முழு நிர்வாணமாக அம்மாவுடன் தெருவில் அலைந்துகொண்டிருந்தபோது என் உடம்பெங்கும் பொளிபொளியாக சொறியும் சிரங்கும் நிறைந்திருந்தன. விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இமைகள் ஒட்டி தோலே தெரியாதவனாக இருந்தேன். எந்நெரமும் பசியாலும் வலியாலும் சிணுங்கி அழுதுகொண்டு கண்ணுக்குப்பட்ட எதையும் எடுத்து வாயில் வைத்து சாப்பிடமுயன்றுகொண்டு நடந்தேன். எங்கோ ஒரு தாடிக்காரர் தெருப்பிள்ளைகளுக்குச் சோறு போடுகிறார் என்று கேள்விப்பட்டு அக்காவின் கையைப்பிடித்துக்கொண்டு சென்றிருந்தேன். பிரஜானந்தர் கரமனை ஆற்றின் கரையில் உருவாக்கியிருந்த குருகுல ஆசிரமம்.
ஏற்கனவே அங்கே ஏராளமான தெருப்பிள்ளைகள் கூடி நின்றார்கள். கரமனை ஆற்றில் இறங்கி குளித்து உடல்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு அவர்கள் தரும் நல்ல ஆடையை அணிந்துகொண்டு ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்து பிரார்த்தனைப்பாடல்களைப் பாட வேண்டும். ஒருமணிநேரம் அங்கே சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களைப் படிக்கவேண்டும். அதன்பின் சோறு போடுவார்கள். முன்னரே வந்த பிள்ளைகள் ஆற்றில் இறங்கி மணலை அள்ளி தேய்த்து குளித்தனர். காவிவேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கொண்டு நின்ற இளம் துறவி ஒருவர் ‘டே, அவன்…அவன் கறுப்பன்..அவன் நல்லா தேய்ச்சில்ல…தேய்க்கடே’ என்றெல்லாம் சத்தம் போட்டு அவர்களைக் குளிக்கச்செய்துகொண்டிருந்தார்.
நான் நீரைப்பார்த்ததுமே நின்று விட்டேன். அவர் என்னைத் திரும்பிப்பார்த்ததும் அலறியபடி திரும்பி ஓடினேன். ‘டே, அவனப் பிடிடே’ என்று அவர் சொன்னதும் நாலைந்து பெரிய பையன்கள் என்னைத் துரத்திப்பிடித்து மண்ணில் இழுத்தும் தூக்கியும் கொண்டுவந்து அவர் முன்னால் போட்டார்கள் . சுவாமி என் கையைப்பிடித்து கழுத்தளவு நீரில் தூக்கிப்போட்டார். மீன்கள் சரமாரியாக மொய்த்து என்னைக் கொத்த ஆரம்பித்தன. நான் கதறித் துடித்தேன். அவர் என்னைத் தூக்கிக் கல்லின்மேல் அமரச்செய்து தேங்காய்நாரால் தரதரவென்று தேய்த்தார். நான் அலறி விரைத்து அவரது கையை அழுத்திக்கடித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை
உடம்பெங்கும் ரத்தம் கொட்ட நின்ற என்னை கையை விடாமலேயே இழுத்துச்சென்று என் உடம்பெங்கும் நீலநிறமான ஏதோ திரவத்தைப் பூசினார். அது பட்டதும் முதல்கணம் குளிர்ந்து மறுகணம் தீப்பிடித்தார்போல எரிந்தது. கையை உதறிக்கொண்டு அழறியழுதபடி ஓடினேன். அவர் என் பின்னால் வந்து ‘ஓடினால் சோறு இல்லை…ஓடினால் சோறு இல்லை’ என்றார். நான் திகைத்து நின்றேன். மேலே கால் எடுத்துவைக்க என்னால் முடியவில்லை. ‘ காப்பய்க்கு சோறு வேணுமே.. சோறூ’ என்று அங்கே நின்று அழுதேன்.
என் உடம்பில் எரிச்சல் குறைய ஆரம்பித்தது. பல இடங்களில் அமர்ந்தும் நின்றும் மீண்டும் ஆசிரமத்தை நெருங்கி வந்து திண்ணையைப்பற்றிக்கொண்டு நின்று ‘தம்றா சோறு தா .. தம்றா சோறு தா.. தம்றா…’ என்றேன்.
சுவாமி என்னை நேராகத் தூக்கிக்கொண்டுசென்று உள்ளே ஒரு பெரிய கூடத்தில் அமரச்செய்தபின் என் முன் நானே படுக்கும் அளவுக்கு பெரிய இலையை விரித்து அதில் பெரிய சிப்பலால் சோற்றை அள்ளி வைத்தார். நான் ‘னின்னும்’ என்றேன். மேலும் வைத்தபோது உடனே ‘னின்னும்’ என்றேன் ‘இதை தின்னுடா தீக்குச்சி..அதுக்கு பிறகு தரும்’ என்றார் சுவாமி.
நான் இலையுடன் சோற்றை அள்ளிக்கொண்டு எழப்போனபோது என் மண்டையில் அடித்து ‘இருந்து தின்னுடா’ என்றார். அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன். சுவாமி ‘தின்னெடே’ என்றார். மீண்டும் அமர்ந்துகொண்டு கொதிக்க கொதிக்க அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டே இருந்தேன்.
சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. என் வயிறு பெரிய கலயம்போல பளபளவென்றிருந்தது. மீசைக்காரர் ஒருவர் ‘லே, தாயளி உனக்க வயறும் நிறைஞ்சு போச்சேலே… வயற்றிலே பேனு வச்சு நசுக்கலாம்ணு தோணுதே…’ என்றார்
நான் அவர் என்னை அடிக்கப்போகிறார் என்று எண்ணி எழுந்து ஓரமாக நகர்ந்தேன். ‘லே லே இரி…உன்ன ஒண்ணும் ஆரும் செய்ய மாட்டா. இருந்துக்கோ. இன்னும் சோறு வேணுமால?’ என்றார் ஆம் என்று தலையசைத்தேன். ‘இன்னும் சோறு திண்ணா நீ எலவங் காயி மாதிரி வெடிச்சு ஒடைஞ்சு சோறா வெளிய வரும் கேட்டியா? நாளைக்கு சோறு வேணுமா?’ ஆம் என்று தலையசைத்தேன். ‘நாளைக்கும் வா…இங்கவந்து சாமி சொல்லிக்குடுக்குத பாட்டும் அட்சரமும் படிச்சேண்ணாக்க நிறையச் சோறு தருவாரு…’
அவ்வாறுதான் நான் பிரஜானந்தரின் ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட தெருப்பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஆள்சேர்க்கவே அந்தச் சாப்பாடு போடப்பட்டது. அதில் மயங்கி வரும் பிள்ளைகளைச் சுவாமி போதானந்தர் பள்ளியில் சேர்த்துவிடுவார். சுவாமி பிரஜானந்தரால் நிறுவப்பட்டாலும் பள்ளியை நடைமுறையில் போதானந்தர்தான் நடத்திக்கொண்டிருந்தார். கன்னங்கரேலென்ற நீண்ட தாடியும் தோளில்புரளும் சுருண்ட குழலும் பயில்வான் போன்ற உடலும் கொண்ட குட்டையான இளைஞர்.
அவரது கைகளின் வலிமை அந்த வயதில் எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. என்னை முதலில் அவர் குளிப்பாட்டிய பின்னர் அவர் என்னை தூக்குவதற்காக எப்போதும் ஏங்கினேன். அவர் அருகே சென்று பார்த்துக்கொண்டு நிற்பேன். அவர் கவனிக்காவிட்டால் உடலில் மெல்ல உரசுவேன்.என்னை அவர் கவனித்தாரென்றால் சட்டென்று சிரித்துக்கொண்டே இடுப்பில் பிடித்து சட்டென்று மேலே தூக்கி இறக்குவார். எடையிழந்து பறவைபோல வானைநோக்கி பாய்ந்துசென்று மிதந்திறங்குவேன். சிரித்துக்கொண்டே ’னின்னும் னின்னும்’ என்று சிணுங்கியபடி அவர் பின்னால் செல்வேன்.
என்னை அவரது பள்ளியில் சேர்த்துக்கொண்டார் போதானந்தர். கொஞ்சநாள் பூஜைகளில் கலந்துகொண்டு ‘தெய்வமே காத்துகொள்க கைவிடாதிங்கு ஞங்ஙளே’ என்ற நாராயணகுருவின் பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். அதன்பின் பூஜை நடந்து அனைவருக்கும் சுண்டலோ சர்க்கரைப்பொங்கலோ தருவார்கள். பூஜைக்குமட்டும் சுவாமி பிரஜானந்தர் வந்து அமர்வார். சுருண்ட வெண்ணிறத்தாடி பூஜையில் வைக்கப்பட்டிருந்த பெரிய சங்கு போல அவர் முகத்தில் இருக்கும். கூந்தல் இரு தோளிலும் வெள்ளைத்துணி மாதிரித் துவண்டு கிடக்கும். மெலிந்த சின்ன உடல் கொண்ட மனிதர். மெல்லிய குரலில் பேசுவார்.
பிரஜானந்தரின் அந்தக் குருகுலம் வெற்றியா தோல்வியா என்று என்னால் சொல்லமுடியவில்லை. அங்கே எப்போதும் இருபது முப்பது பிள்ளைகள் இருந்தார்கள். தினமும் நூறுபேர்வரை சாப்பிட்டார்கள். ஆனால் தொடர்ச்சியாகப் பத்துபேர்கூடக் கல்விகற்கவில்லை. பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் வந்து சண்டைபோட்டு அவர்களைக் கூட்டிச்சென்றார்கள். சிலநாட்கள் தங்கியதும் சலித்துப்போய் பிள்ளைகளே தப்பி ஓடிவிட்டு கொஞ்சநாள் கழித்து உடலெங்கும் சொறியும் அழுக்கு உடையும் காந்தும் பசியுமாக திரும்பிவந்தார்கள்.
நான் அங்கே தங்க ஆரம்பித்த நான்காம்நாளே என் அம்மா வந்து என்னை இழுத்துச்சென்றுவிட்டாள். அவளுடன் நகரமெங்கும் அலைந்து திரிந்தேன். நகரம் முழுக்க ஒருகாலத்தில் எடுப்புக்கக்கூஸுக்காக இரண்டாள் செல்லும் அகலத்தில் சிறிய சந்துப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆற்றிலோ ஓடையிலோ ஆரம்பிக்கும் அந்த பாதை பெருவீதிகளுக்கு சமாந்தரமாக எல்லா வீடுகளுக்கும் பின்பக்கம் வழியாக ஓடி நகரையே சுற்றிவரும். எங்கள் ஆட்கள் முழுக்க அதன்வழியாகவே நடமாடுவார்கள். அங்கேதான் எங்களுக்கான உணவு முழுக்க கிடைத்தன. குப்பைகள், பெருச்சாளிகள், ஓட்டலின் எச்சில் இலைக்குவியல்கள்..
அந்தக்காலத்தில் திருவிதாங்கூரின் மொத்த நாயாடிகளும் திருவனந்தபுரத்திற்கே வந்துவிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. உண்மையில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது,நாயாடிகளுக்கேகூட. நாகம் அய்யா எங்கள் சாதியை கண்ணால் பார்த்து தீட்டுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. பிறரது மனப்பதிவுகளையே அவர் எழுதியிருக்கிறார். ஆனால் எங்களைப்பற்றி மிக விரிவான குறிப்பு அவருடையதே.எட்கார் தர்ஸ்டன் கூட சில வரிகளே எழுதியிருக்கிறார். 1940ல் மேலும் விரிவான மானுவலை தயாரித்த ’சதஸ்யதிலகன்’ திவான் வேலுப்பிள்ளை நாகம் அய்யாவின் அதே வரிகளை அப்படியே சேர்த்துக்கொண்டார். எண்ணிக்கையைமட்டும் எழுபதாயிரம் என்று கூட்டிக்கொண்டார்.
ஆனால் அப்போது எங்கள் சாதியில் பெரும்பாலானவர்கள் செத்து அழிந்திருக்கக்கூடும். அக்காலகட்டத்தில் காலராவால் திருவிதாங்கூரில் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். ஊரும் அடையாளமும் அரசுக்கு வரிக்கணக்கும் உள்ள மக்களே செத்து அனாதைப்பிணங்களாக நாறியபோது நாயாடிகளை யார் கவனித்திருக்கப் போகிறார்கள். மண்ணுக்கடியிலேயே செத்து அங்கேயே மட்கும் பெருச்சாளிகளைப்போல இறந்து மறைந்திருப்பார்கள்.
எஞ்சியவர்கள் திருவனந்தபுரம் கொல்லம் போன்ற பெருநகரங்களுக்கு குடியேறியிருந்திருக்க வேண்டும். அங்கே அவர்கள் ஏற்கனவே தெருவில் வாழ்ந்த பல்வேறு குறவச்சாதிகளில் ஒன்றானார்கள். பாதிக்குமேல் குடியேறிகளால் ஆன பெருநகர்களில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. பகல்ஒளியில் பிச்சை எடுக்க வாய்ப்புகிடைத்ததை பெரும் சமூகப்பாய்ச்சலாக எங்கள் முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். நகரம் குப்பைகளை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. அவர்கள் அதில் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்.
சிலநாட்கள் கழித்து சோறு நினைவு வந்து நான் அம்மாவிடமிருந்து தப்பி மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். போதானந்தர் மீண்டும் என்னைக் கரமனை ஆற்றில் தூக்கிப்போட்டு குளிப்பாட்டி இலைபோட்டுச் சோறுபரிமாறினார். கொஞ்சநாளில் அவருக்கு என்னிடம் ஒரு தனிப்பிரியம் உருவாகியது. நான் பாடலை விரைவிலேயே மனப்பாடம் செய்துவிட்டேன் என்பதே அதற்கான முதல் காரணம். எனக்கு ஆசிரமத்தில் தர்மபாலன் என்று பெயரிட்டார்கள். பிரார்த்தனைக்காக பிரஜானந்தர் வந்து அமர்ந்ததும் போதானந்தர் ’தர்மா பாடுடே’ என்று சொல்வார். நான் எழுந்து சென்று கைகளைக் கூப்பிக்கொண்டு உரக்க ‘தெய்வமே காத்துகொள்க’ என்று பாடுவேன்.
தொடர்ச்சியாக என் அம்மா என்னை வந்து கூட்டிச்செல்ல ஆரம்பித்தபோது போதானந்தர் தடுத்தார். அம்மா கைகளைக் கூப்பியபடி ‘சாமி புள்ளேயே தா சாமி’ என்று கதறியபடி ஆசிரமத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்துவிடுவாள். அவளிடம் என்ன சொன்னாலும் புரியாது. ’புள்ளேயே தா சாமீ’ என்று அழுதுகொண்டிருப்பாள். அவளுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்து பெரும்பாலும் இறந்துவிட்டன. நான் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்த என் அக்கா கூட ஒரு ஆடிமாத மழையில் கடைத்திண்ணை ஒன்றில் செத்துகிடந்திருக்கிறாள். ஆகவே என்னை விட்டுவிட அம்மாவுக்கு மனமில்லை.
அம்மாவுக்குத் தெரியாமல் என்னை நாராயணகுருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்திற்கும் அங்கிருந்து பாலக்காடு உறைவிடப்பள்ளிக்கும் அனுப்பினார்கள். சில வருடங்களில் நான் முழுமையாக மாறினேன். திடமான கைகால்களும் சுருண்டமுடியும் பெரிய பற்களும் கொண்டவனாக ஆனேன். என்னுடைய பசி முழுக்க படிப்பில் ஊன்றியது. பேசுவது அனேகமாக இல்லாமலாகியது. எனக்கு ‘மூங்கை’ என்றே பள்ளியில் பெயர் இருந்தது. அதாவது கூகை. விழித்துப்பார்த்துக்கொண்டு அசையாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் கரிய உருவம்.
போதானந்தர் கோழிக்கோடு கடற்கரையில் காலராவில் சிக்கியவர்களுக்குச் சேவைசெய்யச்சென்ற இடத்தில் மரணமடைந்தார். பிரஜானந்தரின் பள்ளி அரசாங்கத்தின் பழங்குடிநலத்துறையால் ஏற்றெடுக்கப்பட்டது. பிரஜானந்தரின் டிரஸ்டில் இருந்து மாதம்தோறும் சிறிய பணம் வந்தது. என்னுடைய சாதிக்குரிய உதவித்தொகையும் இலவசங்களும் இருந்தன. நான் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பழங்குடி விடுதியில் இருந்த அத்தனை பேரும் எதையாவது படித்துக்கொண்டுதான் இருந்தார்கள். படிப்பை நிறுத்திவிட்டால் வேலை தேடவேண்டியிருக்கும். படிக்கும்போது சோறு போடுவதாக இருந்த சாதி முத்திரை வேலைதேடும்போது தடையாக ஆகிவிடும். கிடைத்தால் அரசு வேலை, இல்லையேல் வேலையே இல்லை.
என் விடுதியிலும்கூட நான் தனியனாகவே இருந்தேன். பழங்குடிகளுக்கான விடுதியில் இருந்த ஒரே நாயாடி நான்தான். என்னுடன் அறையைப் பங்கிட்டுக்கொள்ளக்கூட எவருமில்லை. நான் மட்டும் கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் எழுந்து ரயில்பாதையோரமாக சென்று மீள்வேன். சிறுநீர் கழிப்பதற்குக் கூட அருகே உள்ள பொட்டலுக்குச் செல்வேன். என்னிடம் பேசும் எவரிடமும் இயல்பாகவே அதட்டல் தொனி உருவாகிவிடும். எந்த அதட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள நானும் பழகிவிட்டிருந்தேன்.
அந்நாட்களில் நான் என் அம்மாவை பார்த்ததே இல்லை. அவளைப்பற்றி நினைத்ததும் இல்லை. என்னை ஒரு எலிபோலவே உணர்ந்த நாட்கள் அவை. பதுங்கி ஒதுங்கி உயிர்வாழக் கொஞ்சம் இடத்தை தேடிக்கொண்டே இருக்கும் ஜீவன். ஓடும்போதுகூட பதுங்கிக்கொண்டே ஓடக்கூடியது. உடலே பதுங்கிக்கொள்வதற்காக கூன்முதுகுடன் படைக்கப்பட்டது. எப்படியாவது எவர் கண்ணிலும் கவனத்திலும் விழாமல் இருந்துகொண்டிருப்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.
பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்ததும் என்னை பிரஜானந்தர் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நான் திருவனந்தபுரம் சென்றேன். அவரது ஆசிரமத்தில் அதிக ஆட்கள் இல்லை. ஓரிரு வெள்ளையர் மட்டுமே கண்ணில் பட்டனர். வயதாகி முதிர்ந்த பிரஜானந்தரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பார்த்தேன். அவரை ஒரு வெள்ளை இளைஞன் தன் பெரிய கைகளால் பற்றிக் கிட்டத்தட்டத் தூக்கிக்கொண்டுவந்து நாற்காலியில் அமரச்செய்தான். அவரது தலை நடுங்கிக்கொண்டிருந்தது. முடி நன்றாகவே உதிர்ந்து வழுக்கை நிறைய மச்சங்களுடன் இருந்தது. கூன் காரணமாக முகம் முன்னால் உந்தி வந்து நின்றது. மூக்கு வாய்நோக்கி மடிந்து உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு மடிப்பு போல தெரிந்தது.
‘நல்லா வளர்ந்து போயாச்சு..இல்லியா?’ என்றார். நான் பேசுவது தமிழ் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. உண்மையில் என்ன காரணத்தாலோ நானும் என்னை முடிந்தவரை மலையாளத்தில் இருந்து விலக்கிக்கொண்டிருந்தேன். என் நிறமும் தோற்றமும் தமிழ்நாட்டுடன் என்னை அடையாளம் காணச்செய்திருக்கலாம். அவரது கைகளும் தலையும் வேகமாக ஆடிக்கொண்டே இருந்தன. அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் என்னிடம் ‘எம்.ஏ முடிவுகள் எப்போது வரும்?’ என்றார். நான் ‘ஜூனில்’ என்றேன். ‘என்ன செய்யப்போகிறாய்?’ நான் பேசாமல் நின்றேன். ‘நீ சிவில் சர்வீஸுக்கு போ’ என்றார். அவர் கையை தூக்கியபோது கிட்டத்தட்ட வலிப்புவந்தது போல கை ஆடியது. நான் பேசமுற்பட்டாலும் வார்த்தை வரவில்லை. ‘என்ன பேச்சே இல்லை?’ நான் ‘மன்னிக்க வேண்டும் குரு’ என்றேன்
‘ஆங்கிலம் உன் வாயில் வரவில்லை. அதுதான் உளறுகிறாய். ஆங்கிலம் பேசினால்தான் நீ மனிதன். சரளமாக ஆங்கிலம் பேசாவிட்டால் என்ன படித்தாலும் நீ வெறும் நாயாடிதான். நாராயண குருதேவன் எல்லாரிடமும் ஆங்கிலம் படிக்கச்சொன்னது சும்மா அல்ல. ஆங்கிலம் படி…முடிந்தால் நாற்பது வயதுக்குமேல் சம்ஸ்கிருதமும் படி…’ நான் சரி என்றேன். பேச்சின் அயற்சியால் அவரது கைகள் நன்றாக ஆடவே அவற்றைத் தொடைகளுக்கு அடியில் வைத்துக்கொண்டார். இப்போது இரு முழங்கைகளும் வெடவெடத்தன. ‘சிவில் சர்வீஸ் எழுது. சும்மா ஜெயித்தால் போதாது. ரேங்க் வேண்டும். எவனும் உன் விடைத்தாளைக் குனிந்து பார்க்கக்கூடாது’ ‘ஆகட்டும் குருதேவா’ என்றேன் ‘ஜேம்ஸிடம் சொல்லியிருக்கிறேன். டிரஸ்டில் இருந்து உனக்கு நான்குவருடங்களுக்கு பணம் கொடுப்பார்கள்’
நான் திடமாக ‘நான்கு வருடங்கள் தேவைப்படாது. இரண்டு வருடம் போதும்’ என்றேன். அவர் நான் சொல்வதை புரிந்துகொண்டு மெல்ல புன்னகை செய்தார். ஆமாம் என்பது போல தலையாட்டி, அருகே வரும்படிக் கையைக் காட்டினார். நான் அருகே சென்றதும் என்னைத் தோளில் தொட்டு மெல்ல கழுத்தில் கைசுழற்றி அணைத்துக்கொண்டார். அவரது கரம் என் தோளில் ஒரு முதிய பறவையின் இறகுதிர்ந்த சிறகு போல அதிர்ந்தது. நான் முழந்தாளிட்டு அவரது மடியில் என் தலையை வைத்துக்கொண்டேன். என் தலையை மெல்ல வருடி ஆடும்குரலில் ‘தைரியம் வேண்டும்’ என்றார். ‘நூறுதலைமுறையாக ஓடியாகிவிட்டது. இனிமேல் அமர வேண்டும்’ நான் விம்மிவிட்டேன். என் கண்களில் இருந்து அவரது மடியில் காவிவேட்டியில் கண்ணீர் கொட்டியது
அவரது கைகள் என் காதுகளை மெல்ல பிடித்து விட்டன. என் கன்னங்களை வருடின. ‘அம்மாவைக் கைவிடாதே. அம்மாவை வைத்துக்கொள். அம்மாவுக்கு இதுவரை நாம் செய்தது பெரிய பாவம். அவள் ஒன்றுமறியாத தூய மிருகம் போல. மிருகங்களின் துயரத்தை ஆற்றுவிக்கவே முடியாது. ஆகவே அது அடியில்லாத ஆழம் கொண்டது. அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ என்றார். நான் பெருமூச்சு விட்டு கண்களை துடைத்தேன். ‘நான் சீக்கிரமே குருபாதம் சேர்வேன். நீ வரவேண்டியதில்லை’ நான் நிமிர்ந்து அவரைப்பார்த்தேன். மெழுகுபோல உணர்ச்சிகளே இல்லாமலிருந்தது முகம். நான் ‘சரி’ என்றேன்.
அன்று திருவனந்தபுரத்தில் அம்மாவை தேடிக்கண்டுபிடித்தாலென்ன என்று எண்ணிய்படி இரவு முழுக்க நகரில் அலைந்தேன். அவளைத் தேடிப்பிடிப்பது மிக எளிமையானது. ஏதாவது ஒருநாயாடியிடம் கேட்டால் போதும். ஆனால் கண்டுபிடித்து என்ன செய்வதென்று தோன்றியது. மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தமையால் என்னால் எங்கும் நிற்கவோ அமர்ந்திருக்கவோ முடியவில்லை. விடிய விடிய தெருக்கள் தோறும் சந்துகள் தோறும் நடந்தேன். இருளில் மெல்லிய அசைவாகத்தெரிந்த ஒவ்வொரு உடலும் என்னை விதிர்க்கச் செய்தன. குழந்தையுடன் ஒருத்தி ஆழமான விரிந்த சாக்கடைக்குள் ஈரமில்லாத இடத்தில் படுத்திருந்தாள். குழந்தை நிமிர்ந்து மின்னும் சிறு கண்களால் என்னைப்பார்த்தது. என்னை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
விடிவதற்குள்ளாகவே நான் பாலக்காடு சென்றேன். அங்கிருந்து சென்னை. தேர்வு முடிந்து காத்திருந்த நாட்களில் மீண்டும் மீண்டும் சுவாமி சொன்ன சொற்கள் மீது சென்று மோதிக்கொண்டிருந்தது மனம். அம்மாவுக்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்ய முடியும்? நாட்கணக்காக வருடக்கணக்காக ஆறவேஆறாத துக்கத்துடன் என்னை தேடியிருப்பாள். ஆசிரமவாசலிலேயே கண்ணீருடன் பழிகிடந்திருப்பாள். எனக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு எப்படி புரியவைப்பதென்றறியாமல் அவர்கள் திகைத்திருப்பார்கள். ஆனால் நான் என்ன செய்யமுடியும்?
சுவாமி சாதாரணமாக எதையும் சொல்லவில்லை. வயதாகி உடல்குறுகியதுபோலவே அவரது சொற்களும் குறுகியிருந்தன. ஒவ்வொன்றையும் அவர் நெடுநாட்களாகச் சொல்ல எண்ணியதுபோலிருந்தது. எல்லா வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன். நான் நேர்முகத்திற்கு செல்லவேண்டிய நாளில் சுவாமி திருவனந்தபுரத்தில் சமாதியான செய்தி வந்தது. அவர் என்னை வரவேண்டாம் என்று சொன்னதற்குப் பொருள் புரிந்து திடுக்கிட்டேன். அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மேற்கொண்டு என் வாழ்நாளில் அர்த்தம் காணப்போகிறேன் என நினைத்தேன்.
மதுரையில் பதவி ஏற்ற மறு வாரமே திருவனந்தபுரம் வந்தேன். காவல்துறையைக்கொண்டு ஒரேநாளில் என் அம்மாவைத் தேடிப்பிடித்தேன். போலீஸ் ஜீப்பில் பின்பக்கம் ஒப்பாரி வைத்து அழுதபடி வந்த பங்கரையான கிழவிதான் என் அம்மா என்று கண்ட முதல்கணம் சட்டென்று அவளைதிருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை வெல்ல என் முழு ஆன்ம சக்தியும் தேவைப்பட்டது. செதிலடர்ந்த சருமமும் மெலிந்து ஒட்டிய உடலும் கந்தலாடையுமாக கைகூப்பி அழுதபடி அமர்ந்திருந்தவளை லத்தியால் ஓங்கி அடித்து ‘எறங்ஙெடீ சவமே’ என்று அதட்டினான் கான்ஸ்டபிள். அவள் ‘வேண்டா தம்றா …ஒன்னும் செய்யல்ல தம்றா…வேண்டா தம்றா..’என்று அலறி இருகைகளாலும் ஜீப்பின் கம்பியை பிடித்துக்கொண்டாள்.
‘வலிச்சு தாழே இடுடே’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘இதாக்குமா சார் அக்யூஸ்டு? சாருக்கு கண்டாலறியாமல்லோ?’ நான் தலையை அசைத்தேன். அவளை இரு கான்ஸ்டபிள்கள் இழுத்துக்கொண்டுவந்து என் விடுதியின் முன்னால் பூந்தொட்டிகளுக்கு அருகே போட்டார்கள். நோயுற்ற நாய்போல கையும் காலும் நடுங்க ‘தம்றா.. தம்றா, கொல்லாதே தம்றா’ என்று அழுதபடி கிடந்தாள். ‘நீங்க போலாம்’ என்றேன். ‘சார்..இந்த கேஸ்…’ ‘இத நான் பாத்துக்கறேன். யூ மே கோ’ என்று அனுப்பினேன். அவர்கள் சென்றபின் மெல்ல அம்மா அருகே அமர்ந்தேன்
நடுங்கிக்கொண்டு பூச்செடிகள் மேல் சாய்ந்து இலைகளுக்குள் ஒளிந்துகொள்பவள் போல பதுங்கினாள். ’அம்மா இது நானாக்கும். காப்பன்’ ‘தம்றா.. தம்றா’ என்று கைகூப்பி கண்ணீர் வழிய சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் அவள் கூப்பிய கையை தொட்டேன் . ‘அம்மா, இது நானாக்கும். நான் காப்பன். உனக்க மகன் காப்பன்..’ ‘தம்றா. பொன்னு. தம்றா’ என்று சொல்லி உடலை முடிந்தவரை சுருட்டிக்கொண்டாள். நான் பெருமூச்சுடன் எழுந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவளுடைய மகனாக நான் இருந்த நாட்களை நினைத்துக்கொண்டேன். எனக்குப் புரிந்த மொழி ஒன்றுதான். நான் உள்ளே சென்று வேலைக்காரனிடம் அம்மாவுக்கு இலைபோட்டு சோறு பரிமாறச்சொன்னேன். அவன் பெரிய இலையைக்கொண்டு அவள் முன் விரித்தபோது அவள் அழுகை நின்றது. திகைப்புடன் பார்த்தாள். வேலைக்காரன் கொண்டுவந்த சோற்றை அவள் முன் நானே கொட்டினேன். குழம்பு ஊற்றுவதற்குள் அவளே அள்ளி அள்ளி உண்ண ஆரம்பித்தாள். நடுவே இலையுடன் அள்ளியபடி எழப்போனவளை ’இரு..சாப்பிடு…சாப்பிடு’ என்று அமரச்செய்தேன்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் மெல்ல அமைதியானாள். நான் அவளை மெல்ல தொட்டு ‘அம்மா நான் காப்பன்’ என்றேன். சரி என்பது போல தலையாட்டி அங்கிருந்து வெளியே செல்லும் வழியைப் பார்த்தாள். ’அம்மா நான் காப்பன்…நான் காப்பன்’ அவள் கையை எடுத்து என் முகத்தில் வைத்தேன். என் முகத்தை அவள் கையால் வருடச்செய்தேன். கையை உருவிக்கொண்டு தலையைத் திருப்பியவள் சட்டென்று அதிர்ந்து என் முகத்தை மீண்டும் தொட்டாள். ஆவேசத்துடன் என் முகத்தை அவளுடைய நகம் சுருண்ட கரங்களால் வருடினாள். என் காதையும் மூக்கையும் பிடித்துப்பார்த்தாள். அலறல் போல ‘லே காப்பா’ என்றாள். சட்டென்று எம்பி என்னை ஆவேசமாக இறுக அணைத்து என் தலையை அவளுடைய மார்புமேல் அழுத்திக்கொண்டு என் பின்னந்தலையில் மாறி மாறி அடித்து ‘காப்பா! காப்பா!’ என்று கத்தினாள்.
அவள் என்னைத் தாக்குவதாக நினைத்து ஓடிவந்த வேலைக்காரன் நான் அழுவதைக்கண்டு நின்றுவிட்டான். நான் அவனைப் போ என்று சைகை காட்டினேன். அவள் என் கைகளைப் பிடித்துத்தன் முகத்தில் அறைந்தாள். என் தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள். சட்டென்று மீண்டும் வெறி எழுந்து என்னை கைகளாலும் கால்களாலும் அள்ளி அணைத்து இறுக்கிக்கொண்டாள். கழுத்து இறுக்கப்பட்ட ஆடுபோன்ற ஓர் ஒலியில் அழுதாள். என் கன்னத்தைக் கடித்து இறுக்கினாள். எச்சிலும் கண்ணீரும் கலந்த முகத்தால் என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். நான் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு அவளருகே அப்படியே வீழ்ந்துவிட்டேன். ஒரு மகத்தான வனமிருகத்தால் மிச்சமின்றி உண்ணப்பட்டவன் போல உணர்ந்தேன்.
வெளியே பேச்சுக்குரல் கேட்டது. சுபாதான். நான் எழுந்து சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டேன். டாக்டர் இந்திராவும் சுபாவும் பேசியபடியே உள்ளே வந்தார்கள். என்னைப்பார்த்ததும் டாக்டர் சிரித்து ‘நௌ ஐ காட் இட். அப்பவே எனக்கு சந்தேகம்தான்….’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அம்மாவைச் சோதனை போடும்போது நான் சுபாவைப் பார்த்தேன். அவள் சாதாரணமாக நின்றாள். டாக்டர் ’ஒண்ணுமே இம்ப்ரூவ்மெண்ட் இல்லை. பாப்போம்’ என்றபின் சுபாவின் கையைத் தொட்டுவிட்டு வெளியே சென்றாள்
நான் சுபாவிடம் ’மீட்டிங் இல்லியா?’ என்றேன். ‘மினிஸ்டர் வரலை’ என்று சுருக்கமாகச் சொல்லி ‘நீங்க முழு நேரம் இங்கியே இருக்க வேண்டியதில்லை…அதுவேற ஏதாவது காசிப் ஆயிடப்போறது. பேசாம ஆபீஸ் போங்கோ’ என்றாள். நான் தலையசைத்தேன். ‘நான் சொல்றதைக் கேளுங்க. இங்க உக்காந்து என்ன பண்ண போறீங்க? உங்க ஸ்டேடஸிலே ஒருத்தர் இங்க இருக்கிறது அவாளுக்கும் சங்கடம்.. ‘ ‘சரி’ என்றேன். அவள் மெல்ல ‘டோண்ட் பி ரிடிகுலஸ்…’ என்றாள். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
சுபா அம்மாவையே பார்த்தாள். ‘பூவர் லேடி. ரியலி ஐ காண்ட் அண்டர்ஸ்டேண்ட் ஹர்… ரியலி.. ஆல் த ஃபஸ் ஷி மேட்… மை காட்’ தோளைக்குலுக்கியபின் ‘நௌ ஐ யம் லீவிங். இப்ப முனிசிப்பல் ஆஃபீஸிலே ஒரு மீட்டிங் இருக்கு. ஸீ யூ’ என்றாள். அவளைத் தொடர்ந்து நானும் சென்று காரில் ஏற்றி விட்டுவிட்டு என் காரில் ஏறிக்கொண்டேன். ஆபீஸ் போகத்தான் நினைத்தேன். ஆனால் ஆபீஸை தாண்டி பார்வதிபுரம் சென்று அப்படியே வயல்களும் மலையடுக்குகளும் சூழந்த சாலையில் காரைச் செலுத்தினேன்.
அப்போது தோன்றியது திருவனந்தபுரம் சென்றால் என்ன என்று. அங்கே ஒன்றும் இல்லை. பிரஜானந்தரின் சமாதி அவரது குடும்ப மயானத்தில் இருக்கிறது. அங்கே ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். கவனிப்பாரில்லாமல் காட்டுக்கொடிகள் படர்ந்த ஒரு செங்கல் பீடம். அதன் மேல் எண்ணைக்கறை கறுத்த ஒரு சிறு மண் விளக்கு. சுற்றிலும் மரவள்ளியும் வாழையும் அடர்ந்திருந்தன. அவர் வாழ்ந்ததற்கான தடையங்களே இல்லாமலாகிவிட்டது. ஒருவேளை என்னைப்போன்ற சிலர் நினைக்கக்கூடும்.
காரை குமாரகோயில் வளைவில் செலுத்தி கோயில்வரைச் சென்றேன். கோயிலுக்குச் செல்லாமல் குளக்கரைக்குச் சென்று படிக்கட்டில் அமர்ந்துகொண்டேன். நீலச்சிற்றலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது உதிரி உதிரி எண்ணங்களாக மனம் ஓடிக்கொண்டிருந்தது. சிகரெட் தேடினேன், இல்லை. காருக்கு எழுந்து செல்லவும் தோன்றவில்லை. அம்மாவின் முகங்கள் நினைவில் தன்னிச்சையாக மாறிக்கொண்டிருந்தன. வேலைகிடைத்துத் திருவனந்தபுரம் சென்று முதல்முறையாக அம்மாவைப் பார்க்கும் வரை என் மனதில் இருந்த முகம் ஒன்று. அது வேறு வேறு முகங்களுடன் கலந்து தன்னிச்சையாகத் திரண்டுகொண்டே சென்றது. ஒரு மூர்க்கமான பெரிய தாய்ப்பன்றி போலத்தான் அவளை நினைத்திருந்தேன்.
அம்மாவை நேரில் பார்த்ததும் நான் கண்டது முற்றிலும் வேறு ஒருவரை. ஆனால் அந்த அம்மாவைக் கண்டகணமே அதுதான் அம்மா என்று என் அகம் புரிந்துகொண்டது. என்னை அவளும் அப்படித்தான் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டாள் போல. அதிர்ச்சியும் பரபரப்பும் தாளாமல் நிலைகொள்ளாமல் தத்தளித்தாள். ஏதெதோ புலம்பியவள் சட்டென்று கூச்சலிட ஆரம்பித்து அப்படியே மூர்ச்சையாகிவிட்டாள். பிராந்தியை குடிக்கச்செய்து தூங்க வைத்தேன். வேலைக்காரனை அனுப்பி புதியசேலை வாங்கி வரச்சொன்னேன். காலையில் அவள் எழுந்ததும் அவளை புதிய ஒரு பெண்ணாக ஆக்கி என்னுடன் கூட்டிச்செல்ல நினைத்தேன். அன்றிரவு முழுக்க நான் உருவாக்கிய பகற்கனவுகளை நினைத்தால் எப்போதும் என் உடம்பு கூசிக்கொள்ளும்.
அம்மா அந்த புடவையை உடுக்க பிடிவாதமாக மறுத்தாள். மாறாக நான் என் சட்டையை கழற்றிவிட்டு அவளுடன் வரவேண்டும் என்று சொன்னாள். ‘நாயாடிக்கு எந்தரிடே தம்ப்றான் களசம்? ஊரி இடுடே..வேண்டாடே.. ஊருடே…டே மக்கா’ என்று என் சட்டையை பிடித்து கிழிக்க வந்தாள். தன் குட்டிமேல் அன்னியமான ஒரு பொருள் ஒட்டியிருக்கக் கண்ட தாய்ப்பன்றி போல என்னை என் ஆடைகளில் இருந்து பிய்த்து மீட்க முயன்றாள். நான் அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. சொற்களை அவள் உள்வாங்கும் நிலையில் இல்லை. அவளுக்குத் திரும்பக்கிடைத்த குழந்தையுடன் மீண்டும் திருவனந்தபுரம் குப்பைமேடுகளுக்கு திரும்பிச்செல்ல நினைத்தாள்.
நான் பேசிக்கொண்டே சென்று நாற்காலியில் அமர்ந்ததும் பீதியுடன் பின்னால் ஓடி வெளியே சென்று எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிவந்து ’தம்பறான் கசேரிலே நீ இருப்பாடே? அய்யோ அய்யோ’ என்று பதறினாள். ’எளிடே..எளிடே மக்களே…கொந்நூடுவாருடே’ என்று கண்ணீருடன் கைகளால் மார்பில் அறைந்துகொண்டு தவித்தாள். மிகப்பெரிய தவறொன்றை நான் செய்துவிட்டது போல நினைக்கிறாள் என்று புரிந்துகொண்டேன். இருபது வருடங்களை மானசீகமாக தாண்டிப் பின்னால் சென்று அவளை புரிந்துகொள்ள முயன்றேன். சாக்கடைக்கு வெளியே வந்தாலே கல்லெறி கிடைக்கும் நாயாடிக்கு ஒரு நாற்காலி என்ன அர்த்தத்தை அளித்திருக்கும்? அவனை அடித்து உதைத்து அங்கே தள்ளும் அனைத்துக்கும் அது அடையாளம். குருதிவெறிகொண்ட ஒரு கொலைமிருகம் அது.
அன்று அம்மாவை நன்றாகக் குடிக்கச்செய்து நினைவற்ற நிலையில் உடைமாற்றச்செய்து மதுரைக்குக் கொண்டு வந்தேன். என்னுடன் பன்னிரண்டுநாட்கள்தான் இருந்தாள். கூண்டிலடைபட்ட காட்டுமிருகம்போல அலைமோதினாள். அவளை வெளியே விடக்கூடாதென்று சொல்லி கேட்கதவுகளை பூட்டிவிட்டு காவலுக்கும் சொல்லிவிட்டு ஆபீஸ் சென்றேன். ஆனாலும் இரண்டுமுறை தப்பி ஓடினாள். போலீஸை அனுப்பி தெருவிலிருந்து அவளைப் பிடித்துவந்தேன். அவளால் வீட்டுக்குள் தங்க முடியவில்லை. வீட்டில் சோறு தவிர எதிலும் அவளுக்கு ஆர்வமிருக்கவில்லை.
என்னைப்பார்க்காதபோது என் பெயர் சொல்லி கூச்சலிட்டபடி சுற்றிவந்தாள். மூடிய கதவுகளைப் படபடவென்று தட்டின் ஓசையிட்டாள். என்னைப் பார்த்ததும் சட்டையைக் கழற்றிவிட்டு அவளுடன் வரும்படிச் சொல்லிக் கெஞ்சினாள். நாற்காலியில் அமரவேண்டாம் என்று மன்றாடினாள். நான் நாற்காலியில் அமர்வதைக்கண்டால் அவள் உடல் ஜன்னி கண்டதுபோல அதிர ஆரம்பிக்கும். என்னுடைய சட்டை அணிந்த தோற்றம் அவளை ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தியது. என்னைக் கண்டதும் பயந்து சுவர்மூலையில் பதுங்குவாள். நான் சென்று அவளைத் தொட்டுப்பேசும்வரை அந்த பதற்றம் நீடிக்கும். தொடுகையில் என்னைச் சின்னக்குழந்தையாகத் தொட்ட்ட உணர்ச்சியை மீண்டும் அடைவாளோ என்னவோ ’காப்பா, காப்பா, மக்களே களசம் வேண்டா… கசேர வேண்டா மக்களே’ என்று கூச்சலிட்டு என் சட்டையை பிடித்து இழுத்து கிழிக்க ஆரம்பிப்பாள்.
பன்னிரண்டாம்நாள் அவள் மூன்றாம் முறையாகக் காணாமலாகி இரண்டுநாட்களாகியும் கிடைக்காதபோது நான் உள்ளூர ஆறுதல் கொண்டேன். அவளை என்னசெய்வதென்றே தெரியவில்லை. எவரிடம் கேட்டாலும் அவளை ஓர் அறையில் அடைக்கலாம் அல்லது ஏதாவது விடுதியில் சேர்க்கலாம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் எனக்கு அவள் தன் உலகில் எப்படி வாழ்வாள் என்று தெரியும். குப்பையை உண்டு தெருக்களில் தூங்கி வாழும் வாழ்க்கையில் அவளுக்கான உற்சாகங்களும் கொண்டாட்டங்களும் உண்டு. அவளுக்கு நெருக்கமானவர்கள் உண்டு. அது வேறு ஒரு சமூகம். சாக்கடையில் வாழும் பெருச்சாளிகள் போல உறவும்பகையுமாக நெய்யப்பட்ட பெரியதோர் சமூகம் அது.
பலநாட்களுக்குப் பின் அவள் மீண்டும் திருவனந்தபுரம் சென்றதை உறுதிசெய்துகொண்டேன். அவள் அத்தனைதூரம் சென்றதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்களுக்கான வழிகளும் தொடர்புகளும் முற்றிலும் வேறு. நான் அவளை என் நினைவுகளில் இருந்து மெல்ல அழித்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் எனக்கான சவால்களை நான் சந்தித்துக்கொண்டிருந்தேன் அப்போது. வெறும் ஒரு வருடத்தில் என் எல்லா கற்பனைகளும் கலைந்தன. அதிகாரம் என்ற மாபெரும் இயந்திரத்தின் முக்கியமே இல்லாத ஒரு சிறு உறுப்பாக என்னை மொத்த இயந்திரமும் சேர்த்து அழுத்தி உருமாற்றி அமரச்செய்தது.
அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும் தன்னால் கையாளப்படுவதாக உணரப்பட்டாலும்கூட அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான். உங்களால் அதிகாரம்செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல்கொண்ட கட்டாயம் இருக்கவேண்டும். ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல்திட்டத்துடன் சரியாக இணைந்துகொள்வதன்மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கைவருகிறது. தனித்துச்செல்லும்தோறும் அதிகாரம் இல்லாமலாகிறது
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காகத் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன. மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல முகமும்கூட பிறரைப்போல ஆகிவிடுகிறது.
ஆனால் நான் அந்த கூட்டு அதிகாரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. எனக்கிடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்யமுடியும் என்றும் ஒரு குமாஸ்தாவைக்கூட என்னால் ஏவமுடியாதென்றும் கண்டுகொண்டேன். எனக்கு மேலும் எனக்கு கீழும் இருந்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் என்னை வெளியே தள்ளியது. நான் சொல்லும் எந்தச் சொற்களும் அவர்களின் காதுகளில் விழவில்லை. சிலசமயம் நான் பொறுமையிழந்து வெறிகொண்டவனாக கத்தினால்கூட அந்த கண்ணாடித்திரைக்கு அப்பால் அவர்கள் மெல்லிய புன்னகையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நகர் நடுவே கூண்டில் கிடக்கும் பெயர் தெரியாத வனமிருகமாக ஆனேன்.சினம்கொண்டு எதிர்க்கும்தோறும் அது என் இயல்பான பண்பின்மையாகக் கண்டு மன்னிக்கப்பட்டது. போராடும்தோறும் அது என் அத்துமீறும் பேராசையாக கண்டு விலக்கப்பட்டது. என் நிலையை நான் அங்கீகரித்துக்கொண்டு பேசாமலிருந்தால் என் குலத்திற்கே உரிய இயலாமையாக விளக்கப்பட்டு அனுதாபத்துடன் அணுகப்பட்டது. என்னுடைய தன்னிரக்கமும் தனிமையும் உளச்சிக்கல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கணமும் நான் முட்டிமோதி என் சதைகளை பிய்த்துக்கொண்ட அந்த கூண்டு நான் எப்படியே எம்பிப்பிடித்து அமர்ந்துவிட்ட வானத்து உப்பரிகையாகச் சொல்லப்பட்டது.
நான் சுபாவை திருமணம் செய்துகொண்டதுகூட அந்த முட்டிமோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம். வெள்ளத்தில் எருமையைப்பற்றிக்கொண்டு ஆற்றைக்கடப்பதுபோல. அவள் என்னை அவளுடைய உலகத்திற்குள் இட்டுச்செல்வாள் என்று எண்ணினேன். அவளை நான் அடைந்தது அவளுடைய உலகம் மீதான ஒரு வெற்றியாக கருதப்படுமென நம்பினேன். மாலைநேரத்துக் கொண்டாட்டங்கள், தோட்டத்து விருந்துகள், திருமணங்கள், பிறந்தநாட்கள்…சிரிப்புகள், உபச்சாரங்கள், செல்லத்தழுவல்கள், உசாவல்கள்…
ஆனால் கருணை என்ற ஈவிரக்கமற்ற கொலைக்கருவியால் நான் எப்போதும் தோற்கடிக்கப்பட்டேன். அனுதாபத்துடன் என்னை பிரித்து எனக்குரிய இடத்தில் அமரவைப்பார்கள். சங்கடத்துடன் எழுந்தால் மேலும் கருணையுடன் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் ஏன் என்னைத் திருமணம் செய்துகொண்டாள் என்று நான் அப்போது யோசிக்கவில்லை. என்னுடைய ஆண்மையின் சான்றிதழாக, உலகம் அங்கீகரிக்காவிட்டாலும் என்னுள் இருக்கும் காதலனின் வெற்றியாக அப்போது அதை எடுத்துக்கொண்டேன். நான் என் வாழ்நாளில் பெருமிதத்தை உணர்ந்த ஒன்றரை மாதக்காலம் அது. அந்த மூடத்தனம் இல்லாமலிருந்தால் அந்த அற்ப மகிழ்ச்சியையும் இழந்திருப்பேன்.
அவளுக்கு முன்னால்செல்லவேண்டியிருந்தது. கைக்குச்சிக்கிய தெப்பம் நான். ஒரு எளிய கடைநிலை செய்திதொடர்பு அதிகாரியாக இருந்த அவள் இன்று அடைந்துள்ள அத்தனை முக்கியத்துவமும் என்னுடைய மூன்றெழுத்து அவளுக்கு அளித்தவை. அவள் செல்லும் தொலைவு இன்னும் அதிகம். அந்த கணக்குக்கு மேல் அவளே போர்த்திக்கொண்ட முற்போக்குப் பாவனை. பரந்த மனம்கொண்ட நவீன யுகத்துப்பெண். இனி ஒருபோதும் அவளே அந்த போர்வையை விலக்கி அவளைப்பார்க்கப்போவதில்லை.
அதிகாரத்திற்கான தார்மீகப்பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதிகாரமின்றி வாழும் நரகத்தில் நான் சென்று விழுந்தேன். நான் பணியாற்றிய ஒவ்வொரு அலுவலகத்திலும் எனக்கு கீழே ஒரு அதிகாரி இயல்பாக வந்தமைந்தார். அவர் அந்தப்பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆதிக்கசாதியினராக, அப்பகுதியின் ஆளும்கட்சிக்கோ அல்லது உயரதிகாரிகளுக்கோ வேண்டியவராக இருப்பார். சிலநாட்களிலேயே மொத்த அதிகாரமும் அவர் கைகளுக்குச் செல்லும். அவரது ஆணைகள் மட்டுமே நடக்கும். அவர் என்னிடம் ஒரு மெல்லியபணிவை, நான் அவருக்கு கட்டுப்பட்டவன் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுறுத்தும் தன்மை கொண்ட பணிவு அது, காட்டி எதற்கும் என்னுடைய அனுமதியையும் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வார்.
மதுரையில் வேலைபார்க்கும்போதுதான் பிரேம் பிறந்தான். அவனுக்கு எட்டு மாதமிருக்கும்போது மீண்டும் அம்மாவை சந்தித்தேன். அம்மாவும் இன்னொரு கிழவருமாக என்னை தேடி மதுரைக்கே வந்திருந்தார்கள். அம்மா என்னை அலுவலகத்திற்கு வந்து பார்த்தாள். நான் பொதுமக்கள் சந்திப்பு என்ற பெரும் வதையில் சிக்கி அமர்ந்திருதேன். கடவுளின் சன்னிதிக்கு வருபவர்கள் போல கைகூப்பி நடுங்கி அழுதபடி மனுக்களுடன் வருபவர்கள். காலில் குப்புற விழும் கிழவிகள். கைவிடப்பட்ட பெண்களின் கூசிச்சிறுத்த மௌனம். அநீதி இழைக்கப்பட்ட எளியவர்களின் ஆங்காரமமும் வன்மமும், நிலம் பிடுங்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டு என்ன ஏதென்றே தெரியாமல் எவராலோ கூட்டி வரப்பட்டு எவரோ எழுதிக்கொடுத்த மனுக்களை கையில் பிடித்தபடி நிற்கும் பழங்குடிகளின் வெற்றிலைச் சிரிப்பு, பெரிய கண்களுடன் வேடிக்கை பார்த்து பெற்றோரின் உடைகளை பிடித்துக்கொண்டு வரும் கைக்குழந்தைகள்….
வந்துகொண்டே இருப்பார்கள். என்னைச் சந்திக்கும்போதே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நம்புபவர்களைப்போல என் முன் முண்டியடிப்பார்கள். ’ஒவ்வொருத்தாராபோங்க…நெரிக்கப்படாது ஒவ்வொருத்தரா’ என்று மாயாண்டி கத்திக்கொண்டிருப்பார். அந்த ஒவ்வொரு முகமும் என்னைப் பதறச்செய்யும். ஒருவர் கண்களைக்கூட என்னால் ஏறிட்டுப்பார்க்க முடியாது. அவர்கள் அளிக்கும் காகிதங்களைப்பார்ப்பதுபோல அவர்களைச் சந்திப்பதை தவிர்ப்பேன். ’சரி’ ’சொல்லியாச்சுல்ல’ ’சரி’ ’பாக்கிறோம்’ ’செய்றோம்’ ’செய்றோம்மா போங்க’ என்று மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வேன். அச்சொற்களைச் சொல்லும் ஒரு இயந்திரமாக என்னை உணர்வேன்
அந்த மக்களுக்கு நான் எதுவுமே செய்யமுடியாதென்று அவர்களிடம் சொல்வதைப்பற்றி நான் பகற்கனவு கண்டநாட்கள் உண்டு. சொல்லி என்ன ஆகப்போகிறது என்று மீண்டும் தோன்றும். மீண்டும் மீண்டும் அடித்து ஒடுக்கப்பட்டு அள்ளிக்குவிக்கப்படும் குப்பைகள் போன்ற மனிதர்கள். எஞ்சியிருக்கும் நம்பிக்கைதான் அவர்களை வாழச்செய்யும் உயிர்ச்சக்தி. அதை நான் ஏன் ஊதி அணைக்கவேண்டும்? ஆனால் இந்த மனுக்களை வாங்கிக்கொள்வதன் வழியாக அவர்களின் நம்பிக்கைகளை நான் வளரச்செய்து கடையில் பெரிய முறிவையல்லவா அளிக்கப்போகிறேன்? காத்திருந்து, கண்ணீருடன் நம்பிக்கிடந்து, மீண்டும் கைவிடப்பட்டு…
ஆனால் அபப்டி இரக்கமேயில்லாமல் கைவிடப்படுவது அவர்களுளுக்கு பழக்கம்தானே. நூற்றாண்டுகளாக அபப்டித்தான். கெஞ்சி, மன்றாடி, பிச்சையெடுத்து, கால்களில் விழுந்து, கைகளை முத்தி, ’தம்புரானே’ ’எஜமானனே’ ’தெய்வமே’ ’உடையதே’ என்றெல்லாம் கூச்சலிட்டு, அள்ளிவீசப்படுவதை ஓடிப்பொறுக்கி, உயிர்வாழ்வதையே கேவலமான அவமதிப்பாக மாற்றிக்கொண்டு, வாழ்ந்து வாழ்ந்து தீர்த்த தலைமுறைகள் அல்லவா? அவர்களை என்னால் ஏறிட்டுப்பார்க்க முடிந்தால் நான் ஒருவேளை அங்கேயே என் சட்டையையும் பாண்டையும் கழட்டி வீசிவிட்டு கோவணத்துடன் எளிய நாயாடிக்குறவனாக தெருக்களில் இறங்கி வானத்துக்கு கீழே வெறும் மனிதனாக நின்றிருப்பேன் போல..
அப்போதுதான் கூட்டத்தில் இருந்து நெரிசலிட்டு வந்த என் அம்மா ‘அது எனக்க மோன்..எனக்க மோன் காப்பன்..லே காப்பா! மக்கா, லே காப்பா!’ என்று பெரிதாகக் கூச்சலிட்டாள். அவளுடன் வந்திருந்த இரு கிழவர்களும் சேர்ந்து, ’காப்பா காப்பா’ என்று கூச்சலிட போலீஸ்காரர் அதட்டியபடி ‘த,,, என்ன சத்தம் இங்க? வாயா மூடு த வாய மூடு…பொடதீல போட்டிருவேன்..வய மூடு நாயே’ என்று அதட்டினார். நான் ‘சண்முகம்..அவங்கள விடு’ என்றேன். அம்மா பளீரென்று ஏதோ கட்சிக்கொடியை முந்தானைபோல போட்டு நரிக்குறவர்களிடமிருந்து பெற்ற பழைய பாவாடையை அணிந்திருந்தாள். தங்கவண்ணம் பூசிய அலுமினிய மூக்குத்தியும் கம்மலும் அணிந்திருந்தாள். மூவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.
அம்மா உரக்க ‘இது எனக்க மோன் காப்பன், எனக்க மோனாக்கும்…எனக்க மோன்..லே காப்பா லே மக்கா’ என்று சொல்லி என் முகத்தை அள்ளிப்பிடித்து என் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். முத்தம் என்பது மெல்ல கடிப்பதுதான். என் முகத்தில் வெற்றிலை எச்சில் வழிந்தது. மொத்தக்கூட்டமும் திகிலடித்தது போல நின்றதைக் கண்டேன்.. ‘நீ உள்ள போய் இரு…நான் வாறேன்’ என்றேன். அம்மா ‘நீ வாலே…வாலே மக்கா..’ என்று என் கையைப்பற்றி இழுத்தாள். ஒரு கிழவர் திரும்பி கூட்டத்திடம் ‘இது காப்பனாக்கும். நாயாடிக்காப்பன். எங்க ஆளு…எல்லாரும் போங்க இண்ணைக்கினி இங்க சோறு கிட்டாது…சோறு இல்ல…போங்க’ என்று கையாட்டி ஆணையிட்டார்.
நான் எழுந்து அம்மாவை கரம்பிடித்து இழுத்துச்செல்ல மற்ற இருவரும் பின்னால் வந்தார்கள். ஒருவர் ‘நாங்க எங்கிட்டெல்லாம் தேடினோம். காப்பா நீ களசமெல்லாம் போட்டிருக்கேலே, அப்பம் நல்ல சோறு தருவாகளாடே?’ என்றார். ‘லே நீ சும்மா கெட, அவன் எம்பிடு தின்னாலும் இங்க ஒண்ணும் கேக்க மாட்டாக பாத்துக்க. அவன் ஆப்பீசறாக்கும் கேட்டையா’ என்றார் இன்னொருவர். நான் ‘அம்மா நீ இங்க இரு…இப்பம் வந்திருதேன் இங்க இரு’ என்று சொல்லி முகம் கழுவிவிட்டு மற்ற அறைக்கு வந்தேன். வந்து அமர்ந்ததுமே ஒன்றைக்கவனித்தேன். மொத்தக்கூட்டத்துக்கும் உடல்மொழி மாறிவிட்டது. நான் அதிகாரவர்க்கத்தின் துண்டு அல்ல என்று அத்தனைபேருக்கும் தெரிந்ததுபோல. ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் ஒருவர்கூட என்னிடம் ஏதும் கெஞ்சவில்லை. சிலர் மட்டுமே ஏதேனும் சொன்னார்கள். வெறுமே மனுவை மட்டும் தந்துவிட்டு சென்றார்கள்.
அம்மா அம்முறை இருபதுநாட்கள் என்னுடன் இருந்தார். அவர்கள் மூவருக்கும் என் பின்கட்டில் தங்க இடம் கொடுத்தேன். ஆனால் கூரைக்கு கீழே தங்க அவர்களுக்கு பழக்கமில்லை. காம்ப் ஆபீஸின் சைக்கிள் ஷெட்டிலேயே தங்கிக்கொண்டார்கள். இரவும் பகலும் உரத்தகுரலில் சண்டைபோட்டார்கள். ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டு சுற்றிலும் ஓடினார்கள். இரவில் தோட்டமெல்லாம் மலம் கழித்தார்கள். ஒவ்வொருநாளும் சுத்தம்செய்யும் அருணாச்சலம் மெல்லிய குரலில் தனக்குள் சாபமிட்டுக்கொள்வதை நான் கவனித்தேன்.
அம்மாவுக்கு சுபாவை முதல்பார்வையிலேயே கொஞ்சமும் பிடிக்கவில்லை சுபாவின் வெள்ளைநிறம் ஒரு நோய் அறிகுறிமாதிரியே அவளுக்கு தோன்றியது.அவளைப்பார்த்ததுமே அஞ்சி வீட்டுத்திண்ணையில் இருந்து இறங்கி ஓடி முற்றத்தில் நின்றுகொண்டு வாயில் கையை வைத்து பிதுங்கிய கண்களால் பார்த்தாள். சுபா ஏதோ சொன்னதும் தூ என்று காறித்துப்பினாள். ‘பாண்டன் நாயிலே லே அது பாண்டன்நாயிலே’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சுபா அம்மாவைபபர்க்கவே அஞ்சி உள்ளே ஒதுங்கிக்கொண்டாள். அம்மா அவளைப்பார்த்தால் கையில் எது இருக்கிறதோ அதை அவளை நோக்கி வீசினாள். உடையை தூக்கி மர்ம உறுப்பைக்காட்டி வசைபாடினாள்.சுபா ‘பால், பிளீஸ் என் மேலே கொஞ்சமாவது அன்பிருந்தா இவங்கள எங்கயாவது அனுப்பிருங்க. உங்கள நம்பி வந்தேன். அதுகாக நீங்க எனக்கு செய்ற லீஸ்ட் ஹெல்ப் இதுதான்…அவங்கள என்னால தாங்கிக்கவே முடியலை பால். ப்ளீஸ்’ என்று கதறி அழுது அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.
அவள் அழுவதை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றேன். பிரசவம முடிந்து அவள் வேலைக்கு போக ஆரம்பிக்கவில்லை. ‘சொல்லுங்க பால். சும்மா எதுக்கெடுத்தாலும் இப்டியே சிலைமாதிரி நின்னா எப்டி?’ என்றாள்.‘சுபா, ப்ளீஸ். நான் பாகக்றேன். ஏதாவது பண்றேன்…மெதுவா அனுப்பிச்சிடறேன்’ என்றேன். ‘நோ..நீங்க அனுப்ப மாட்டீங்க. ஸீ அவங்கள நீங்க நம்ம வழிக்கு கொண்டுவரமுடியாது. அவங்க ஒரு வாழ்க்கைக்கு பழகிட்டாங்க…இனிமே அவங்கள நம்மால மாத்த முடியாது. அவங்க எங்கயாவது சந்தோஷமா இருந்தா போதும். அதுக்கு என்ன வேணுமானாலும் செய்வோம்…’
நான் என்னிடம் பிரஜானந்தர் சொன்னதைத்தான் நினைத்துக்கோண்டிருந்தேன். அம்மாவுக்கு பெரிய அநீதி ஒன்றை நான் இழைத்துவிட்டேன், என் வாழ்நாளெல்லாம் நான் அதற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்றார். அவளுடைய ஆணையை நான் மீறலாகாது. அவளுடைய விருப்பமே அவள் ஆணை. ஆனால் அம்மா என்ன விரும்புகிறாள் என்றே தெரியவில்லை. என் வீட்டின் எதுவுமே அவளுக்கு தேவையிருக்கவில்லை. சோறுகூட கொஞ்சநாளில் அலுத்துவிட்டது. அதேசமயம் சுபா மீதான வெறுப்பு ஒரு வேகமாக மாறி அவளை இயக்கியது. அவளைப்போன்றவர்களின் பிரியம்போலவே வெறுப்பும் கரைகளற்றது. பின்னாளில் யோசித்துக்கொண்டேன், சுபாமேல் அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது என. எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு!
அம்மா சமையலறையில் புகுந்து கிடைத்ததை அள்ளி போட்டுத் தின்றாள். வீட்டின் எந்த மூலையிலும் வெற்றிலைபோட்டு துப்பி வைத்தாள். வீட்டுக்குள்ளேயே சிறுநீர் கழித்தாள். சுபாவின் புடவைகளையும் நைட்டிகளையும் ஜாக்கெட்டையும் பிராவையும் கூட எடுத்து அணிந்துகொண்டாள். ‘எடீ எனக்க மோன் காப்பனுக்குள்ளதாக்கும்டீ..நீ போடீ நீ உனக்க வீட்டுக்கு போடி பன்ன எரப்பே’ என்று ஒவ்வொருமுறையும் சுபாவின் அறைக்கு முன்னால் வந்து நின்று கத்துவாள். சுபா இருகைகளாலும் காதுகளைப்பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அமர்ந்திருப்பாள்.
ஆனால் அம்மா தன் அழுக்கு நிறைந்த கைகளால் பிரேமை தொட்டு தூக்குவதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குழந்தையை கொடுக்காமல் அதன் மேல் குப்புறவிழுந்து மூடிக்கொள்வாள். அம்மா அவள் முதுகை அடித்தும் அவள் கூந்தலைப்பிடித்து இழுத்தும் அவள் மேல் துப்பியும் பிராண்டியும் கூச்சலிடுவாள். நான் இரண்டுமுறை அம்மாவை அள்ளிப்பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே கொண்டுசென்று தள்ளி கதவைச்சாத்தினேன். கிறிஸ்துதாஸிடமும் செல்லத்திடமும் அம்மாவை குழந்தையை நெருங்கவிடக்கூடாது என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் எப்படியோ உள்ளே வந்து விடுவாள்.
வெளியே இருந்து அவள் எடுத்துக்கொண்டு வந்த ஏதோ அழுகலை ஒருமுறை குழந்தைக்கு ஊட்டிவிட்டாள். குளித்துவிட்டு வெளியே வந்த நான் அதைப் பார்த்து திடுக்கிட்டேன் . என் கைகால்கள் எல்லாம் பதற ஆரம்பித்தன. அம்மாவை இழுத்துச்சென்று வெளியேதள்ளி செல்லத்தை வாயில் வந்தபடி வசைபாடினேன். செல்லம் சமையலறைக்குள் நின்று என் காதில் படும்படி ஏதோ சொல்வதை கேட்டேன். ‘குறப்புத்தி’ என்ற சொல் காதில் விழுந்ததும் மந்திரக்கோலால் தொடப்பட்டு கல்லாக அனதுபோல என் உடல் செயலற்றது. பின் எல்லாச் சக்திகளையும் இழந்து முன் தளத்து சூழல்நாற்காலில்யில் அமர்ந்தேன்.
அம்மாவை நானே ஒருபோதும் துரத்திவிடக்கூடாது என்று நினைத்தேன். சென்றமுறை தப்பி ஓடியதுபோல இம்முறையும் சென்றுவிடுவாள் என்று காத்திருந்தேன். அப்படி அவள்சென்றால் என்னுடைய குற்றவுணர்ச்சி இல்லாமலாகும். சுவாமியின் வார்த்தையை நான் காப்பாற்றியவனாவேன். ஆனால் இம்முறை அம்மாவுக்கு அங்கே இருந்தாகவேண்டிய தூண்டுதலாக சுபா மேலுள்ள வெறுப்பு இருந்தது. சுற்றிச்சுற்றி வந்து சுபாவை வசைபாடினாள். வீட்டுக்கு வெளியே சாலையில் நின்றுகொண்டு ‘வெள்ளப்பன்னி, பாண்டன் நாயி..சுட்ட கெழங்குமாதிரி இருந்துட்டு எங்கிட்ட பேசுதியா? ஏட்டீ வெளிய வாடி நாயே’ என்று பெருங்குரலெடுத்து ஆரம்பித்தால் பலமணிநேரம் இடைவெளியே விடாமல் கத்திக்கொண்டிருப்பாள். அந்த கட்டற்ற உயிராற்றலே எனக்கு பிரமிப்பூட்டியது. நாய்கள் போன்றவை மணிக்கணக்காகக் கத்திக்கொண்டிருப்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த இரு கிழவர்களுக்கும் காசுகொடுத்து அவர்களிடம் அம்மாவை கூட்டிச்செல்லும்படிச் சொன்னேன். அவர்கள் பணத்துடன் அன்றே காணாமலானார்கள். அம்மா இன்னும் ஆங்காரம் கொண்டவளாக ஆனாள். இரவில் அவளே கிளம்பி நகரை சுற்றிவிட்டு விடியற்காலையில் ஏதேதோ குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பிவந்தாள். வீசியெறியப்பட்ட அழுகல் உணவுகள். பழைய துணிகள். மின்னக்கூடிய அத்தனை பொருட்களையும் கொண்டு வந்தாள். அவற்றை கார்ஷெட்டில் ஓரமாக குவித்து வைத்தாள். அழுகிப்போன ஓர் உணவுப்பொட்டலத்தைப்பிரித்து அவள் வழித்து வழித்துச் சாப்பிடுவதை ஒருமுறை சன்னல்வழியாகக் கண்ட சுபா ஓடிப்போய் அப்படியே வாந்தி எடுத்தாள்.
ஒருநாள் ஒரு பெருச்சாளியை அம்மா காகிதங்களையும் பிளாஸ்டிக்கையும் கொளுத்தி தீமூட்டி வாட்டுவதைக் கண்டபோது நானே வெளியே சென்று அதை பிடுங்கி வெளியே வீசி அவளை அதட்டினேன். அவள் திருப்பி என்னை அடிக்க வந்தாள். நான் அவளை பிடித்து தள்ளியபோது மல்லாந்து விழுந்தாள். பாத்ரூம் டர்க்கி டவல் ஒன்றை எடுத்து கட்டியிருந்தாள். அது அவிழ்ந்து நிர்வாணமாகக் கிடந்தவள் நிர்வாணமாகவே எழுந்து ஒரு கல்லை எடுத்து என்னைத் தாக்கினாள்.
அவளைப் பலம் கொண்டமட்டும் தள்ளி கார்ஷெட் அருகே உள்ள அறைக்குள் தள்ளிக் கதவைச்சாத்தினேன். மூச்சுவாங்க சில நிமிடங்கள் நின்றேன். சன்னல்கள் எல்லாம் கண்களாக என்னைபார்க்கின்றன என்று தெரிந்தது. நேராகக் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டு கதறி அழுதேன். நீர் கொட்டும் ஒலியில் என் அழுகை மறைந்தது. தலையிலும் முகத்திலும் அறைந்துகொண்டு தேம்பல்களும் விம்மல்களுமாக அழுது நானே ஓய்ந்தேன். பின்னர் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன்
சுபா மூச்சு வாங்க வெளியே நின்றிருந்தாள். ‘நான் போறேன்..என் பிள்ளையோட நான் எங்கையாவது போறேன்’ என்றாள். நான் பேசாமல் நடந்தேன். என் பின்னால் வந்தபடி ‘என்னால முடியாது…இனிமே இதப் பாத்திட்டிருக்க முடியாது. சிட்டியிலே இப்ப இதெல்லாம் தான் எல்லாருக்கும் பேச்சு. இனி நான் எங்க தல காட்டுவேன்? வேலைக்காரங்க பாத்து சிரிக்கிறாங்க…என்னால முடியல. நான் போறேன். ஒண்ணு நான் இல்லட்டி உங்க அம்மா’ என்றாள்.
நான் அவளிடம் ‘நான் எங்கம்மாவ விட்டுர முடியாது. அது என் குருவோட வார்த்தை. நீ போனா நான் வருத்தப்படுவேன். என்னால அதைத் தாங்க முடியாது. ஆனால் அம்மா அவளுக்கு என்ன புடிக்கிறதோ அதைத்தான் செய்வா’ என்றேன். தலைநடுங்க வீங்கிய கண்களுடன் ஈரக்கன்னங்களுடன் என்னை பார்த்து சில கணங்கள் நின்றுவிட்டு சடேலென்று மாறி மாறி தலையில் அறைந்துகொண்டு அபப்டியே தரையில் அமர்ந்து சுபா கதறி அழுதாள். நான் என் அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டேன். எழுத்துக்களைப் பாராமல் அவள் அழுகையையே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இரவுவரை அம்மா உள்ளேதான் கிடந்தாள். நான் வெளியே சென்று எங்கெங்கோ அர்த்தமில்லாமல் அலைந்துவிட்டு நள்ளிரவில் திரும்பி வந்தேன். உடைமாற்றிக்கொண்டு கார்ஷெட் அறைக்குச் சென்று கதவை திறந்தேன். உள்ளே இருந்து சிறுநீரும் மலமும் கலந்த வாடை குப்பென்று தாக்கியது. அம்மா எழுந்து என்னை தாக்குவாள் என எதிர்பார்த்தேன். அவள் மூலையில் கைகளை தலைக்கு வைத்து குப்புற குனிந்து அமர்ந்திருந்தாள் ‘அம்மா சோறு வேணுமா?’ என்றேன். தலையசைத்தாள்.
அவளுக்கு நானே சோறு போட்டேன். ஆவேசமாக அள்ளி அள்ளி அவள் விழுங்குவதைப்பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு கணம் நெஞ்சடைத்தது . மறுகணம் இடிவிழுந்த பனைபோல என் உடல் தீப்பற்றி எரிந்தது. ஒருநாளாவது பசிக்குப்பதில் ருசியை உணர்ந்திருப்பாளா? அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. சாப்பிட்டு நிறுத்த அவளுக்குத் தெரியாது. இலை காலியாக ஆவதையும் தாங்கிக்கொள்ள முடியாது. ‘போடு போடு’ என்று கையால் இலையை தட்டிக்கொண்டே இருந்தாள். இப்படித்தான் இருந்திருக்கிறேன் நானும். அந்த என் உடல் இந்த உடலுக்குள்தான் இருக்கிறது
சாப்பிட்டு முடித்து கையை உடலிலேயே தேய்த்தபின் அங்கேயே அவள் காலை நீட்டி படுத்துக்கொண்டாள். நான் உள்ளே சென்று கோப்பையில் அரைவாசி பிராந்தி எடுத்துவந்து கொடுத்தேன். வாங்கி அப்படியே மடமடவென்று உள்ளே கொட்டிக்கொண்டு பெரிய ஏப்பம் விட்டாள். வயிறு நிறைந்ததும் அதற்கு முந்தைய கணத்தை முற்றாக மறந்தவளாக ’என்னலே காப்பா?’ என்று என் கையை வருட ஆரம்பித்தாள். அவளிடம் என்னெனவோ சொல்லவும் கேட்கவும் நினைத்தேன். ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதே போதுமென்றிருந்தது.
‘லே மக்கா காப்பா, அந்த வெள்ளைப்பண்ணி பேயாக்கும்லே. அவ ஏன் அப்டி இருக்கா தெரியுமாலா? அவ உனக்க ரெத்தத்த உறிஞ்சி குடிக்கா பாத்துக்கோ… உனக்க குஞ்சாமணியிலே இருந்து..’ சட்டென்று என் ஆண்குறியை பிடித்து ‘லே..இதில அவ ரெத்தம் குடிக்காலே’ என்றாள். நான் விடுவித்துக்கொண்டேன். ‘மக்கா உனக்கு இந்த களசமும் சட்டெயும் வேண்டாம்லே.. நீ தம்றான்மாருக்க கசேரியிலே இருக்காதே…வேண்டாம். தம்றான்மார் உன்னைக் கொண்ணு போட்டிருவாங்கலே..நீ நாளைக்கு எங்கூட வந்திரு. நாம அங்க நம்ம ஊருக்கு போவலாம். நான் உன்னைய பொன்னு மாதிரி பாத்துக்கிடுவேன். வாறியா மக்கா? அம்மையில்லாலே விளிக்கேன்?’
கண் தளரும் வரை அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். திரும்பத்திரும்ப நாற்காலி வேண்டாம், தம்புரான்களின் நாற்காலியில் நீ அமர்ந்தால் உன்னை கொன்றுவிடுவார்கள், உன்னைக்கொல்லத்தான் இந்த வெள்ளைப்பேயை மந்திரித்து அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் புலம்பினாள். நான் எழுந்து என் அறைக்குச் சென்று ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மோட்டுவளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கிறுக்குத்தனமாகச் சொல்கிறாள் என்றாலும் அவள் சொல்வதிலும் உண்மை உண்டு என்று தோன்றியது. எஜமான்களின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனா? அதற்காக என்னை கொன்றுகொண்டிருக்கிறார்களா? இவள் என் குருதியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாளா? என்னுடைய மாயைகளுக்கு வெளியே நின்று, மனவசியங்களுக்கு அகப்படாத மிருகம்போல, அம்மா உண்மையை உணர்கிறாளா?
நான் திரும்ப என் அலுவலகத்திற்கு வந்தபோது நான்கரை மணி ஆகியிருந்தது. என் அறைக்குள் சென்று அமர்ந்து குஞ்சன்நாயரிடம் டிபன் வாங்கிவரச்சொன்னேன். என்னுடைய இயலாமைக்கு நான் காரணங்கள் தேடுகிறேனா? அப்படித்தான் சுபா சொல்வாள். என்னுடைய திறமையின்மைக்கு வெளியே காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் செயல்படக்கூடாது? நீ உணரும் தடைகள் எல்லாமே உனது கற்பனைகள். நீ செய்யவேண்டியதென்ன என்று உண்மையில் நீ உணர்ந்தவற்றை ஏன் செய்யாமலிருக்கிறாய்?செய்துபார்…
செய்யவேண்டும் என்றால் ஒன்றுதான். நான் என்னைப்போன்றவர்களின் குரலாகவும் கையாகவும் இந்த அமைப்புக்குள் இருக்க வேண்டும். என்னைப்போன்றவர்கள் என்றால் தோட்டிகளால் அள்ளிவரப்பட்டு மானுடக்குப்பைகளாக கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டவர்கள். பொதுச்சுகாதாரத்திற்காகக் கோடிகளைச் செலவிடும் இந்த அரசு அந்த உயிர்களுக்காக ஏன் கொஞ்சம் செலவிடக்கூடாது? அந்த டாக்டர்கள் ஏன் அவர்களையும் மனிதர்களாக நினைக்கும்படிச் செய்யக்கூடாது? முடியாது என்பவர்களைத் தண்டியுங்கள். உங்களில் ஒருவன் அந்த ஆஸ்பத்திரியில் கவனிக்கப்படவில்லை என்றால் உங்கள் குரல் எழுகிறதே, நீதியுணர்ச்சி எரிய ஆரம்பிக்கிறதே…
நான் கைகள் நடுங்க எழுத ஆரம்பித்தேன். பின் எழுந்து என்னுடைய அறிக்கையை தட்டச்சிட்டேன். கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் நான் பார்த்தவற்றை விரிவாக எழுதி உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தேன். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்றுநாட்களுக்குள் எனக்கு அறிக்கையிடவேண்டும். இல்லாவிட்டால் என் தனிப்பட்ட அதிகாரத்தால் தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தேன். மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு நேரடி பிரதியும் மாநில சுகாதாரச் செயலருக்கு நகலும் போட்டேன். பிள்ளையை உள்ளே அழைத்து உடனே அவற்றை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.
மாலையில் மீண்டும் ஒருமுறை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். டாக்டர் இந்திரா ‘எந்த டெவெலெப்மெண்டும் தெரியலை. வேணுமானா நாளைக்கு டயாலிஸிஸ் செஞ்சு பாக்கலாம்’ என்றார். அம்மா அதேபோல படுத்திருந்தாள். ஆஸ்பத்திரிக்குரிய பச்சை நிற உடை அணிவிக்கப்பட்டிருந்தது. கைகால்களில் வீக்கம் குறைந்து தோலில் நீர்வற்றிய சேறுபோல சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்ததுமே தூங்கிவிட்டேன். சுபா என்னிடம் அம்மாவைப்பற்றி விவாதிக்க விரும்பினாள். ஆனால் நான் அப்போது சொற்களை விரும்பவில்லை.
ஒருமணி நேரம் தூங்கியிருப்பேன், விழிப்பு வந்தது. சுபா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஏர்கண்டிஷனரும் கடிகாரமும் ராகமும் தாளமும் போல ஒலித்தன. வெளியே சென்று சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். சிகரெட் அதிகமானதனாலா தூக்கம் கெடுகிறது என்று எண்ணம் வந்தது. தூங்கும் முன்னால் கடைசி எண்ணமாக இருந்தது நாளை ஆபீஸ் போனதும் என் கடிதம் பற்றி டிஎம்ஓவிடம் நானே நேரில் பேசுவதைப்பற்றித்தான். என்ன செய்ய நினைக்கிறார் என்று கேட்கவேண்டும். முடிந்தால் ஊடகங்களுடன் ஒரு நேரடி விசிட் செய்து இவர்களை நாறடிக்கவும் தயங்கக்கூடாது.
என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும். இந்த ஒன்றரை வருடங்களில் நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். கௌரவம் அவமானம் என்ற சொற்களின் அர்த்தங்களையே என் மனம் இழந்துவிட்டது. அம்மா அவற்றின் கடைசித்தடயத்தையும் அழித்துவிட்டுத்தான் சென்றாள். மதுரையில் என்னுடன் இருந்தவள் ஒருநாள் காலையில் பிரேமை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள். சுபா மயக்கமாகி விழுந்துவிட்டாள். நான் எஸ்பியை கூப்பிட்டுச் சொன்னேன். நகரமெங்கும் போலீஸ் பாய்ந்தது. நாற்பத்தைந்து நிமிடங்களில் பிடித்துவிட்டார்கள். நகரின் முக்கியமான ஓட்டல் ஒன்றுக்குப் பின்னால் உள்ள எச்சில்குவியலில் மேய்ந்துகொண்டிருந்தாள். அகப்பட்ட எச்சிலையும் அழுகலையும் அவனுக்கும் ஊட்டிவிட்டிருந்தாள்.
சுபா உள்ளிருந்து குண்டுபட்ட மிருகம் போல வெளியே பாய்ந்து வந்து குழந்தையை எஸ்ஐ கையிலிருந்து பிடுங்கினாள். அதன் வாயும் மார்பும் எல்லாம் அழுகிய உணவு. அவள் அப்படியே அதை அணைத்து இறுக்கி முத்தமிட்டுக்கொண்டே தரையில் அமர்ந்துவிட்டாள். நான் செயலிழந்து நின்றேன். ஜீப்பிலிருந்து இறங்கி என்னைப்பார்த்து ‘ஏலே காப்பா’ என்றபடி வந்த அம்மாவை கண்டதும் என்னுள் இருந்து ஏதோ ஒன்று திமிறி வெளியே வந்தது. சட்டென்று கீழே குனிந்து அங்கே கிடந்த ஒரு ஹோஸ் பைப்பின் துண்டை எடுத்துக்கொண்டு ‘ஓடு ஓடுரீ…ஓடுரீ நாயே.. இனிமே இந்த வீட்டுக்குள்ள கால வைக்காதே ஓடு’ என்று ஓலமிட்டுக்கொண்டு அவளை மாறிமாறி அடித்தேன். அவள் அலறியபடி புழுதியில் விழுந்து கைகால்களை உதறித் துடித்தாள். அவளை எட்டி உதைத்தேன்.
என்னை எஸ்ஐ பிடித்துக்கொண்டார். அம்மா எழுந்து தெருவில் ஓடி நின்று ‘லே காப்பா…நீ நாசாமா போவே..சங்கடச்சு போவே…வெள்ளப்பண்ணி உனக்க ரெத்தத்த குடிப்பாலே…லே பாவி! நாயே, பாவி லே!’ என்று மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கூக்குரலிட்டு அழுதாள். இடுப்புத்துணியை அவிழ்த்து வீசி நிர்வாணமாக நடந்து காட்டி, கைகளை விரித்து விதவிதமான சைகைகளுடன் வசைபொழிந்தாள். ‘சார் நீங்க உள்ள போங்க’ என்றார் எஸ்.ஐ. நான் உள்ளே போய் என் அறைக்கதவை தாழிட்டுக்கொண்டதும் முதலில் நினைத்தது தூக்குமாட்டிக்கொள்வதைப்பற்றித்தான். என்னால் கொஞ்சம் தைரியம் கொள்ள முடிந்திருந்தால் இந்த அவஸ்தை அன்றே முடிந்திருக்கும்.
அன்று அம்மாவை எஸ்.ஐ பிடித்து ஜீப்பில் ஏற்றி நகரின் முக்கியமான கிறித்தவ நிறுவனத்தின் முதியோர் விடுதி ஒன்றில் கொண்டு சென்று சேர்த்து அவரே முன்பணமும் கட்டிவிட்டுச் சென்றார். நான் மறுநாள் பணம் கொடுத்தனுப்பினேன். மீண்டும் அம்மாவைப்பார்க்கும் துணிவே எனக்கு ஏற்படவில்லை. எனக்குள் ஒவ்வொரு கணமும் தீ எரிந்துகொண்டிருந்தது. என் உள்ளுறுப்புகள் எல்லாம் வெந்துருகி கொட்டி வயிற்றில் அமிலமாக கொப்பளித்தன. மறுநாள்முதல் பிரேமுக்கு ஆரம்பித்த வயிற்றுப்போக்கும் காய்ச்சலும் பல படிகளாக பன்னிரண்டு நாள் நீடித்தது. மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் பத்துநாள் இருந்தான். இருமுறை காய்ச்சல் உச்சத்துக்குச் சென்று அவன் உயிருக்குக் கூட ஆபத்திருப்பதாகச் சொன்னார்கள்.
சுபா அவனருகிலேயே இரவும் பகலும் தலைவிரிக்கோலமாகக் கிடந்தாள். அவளிடம் பேசவே நான் அஞ்சினேன். ஒரு சொல்லில் அவள் பாய்ந்து என் குரல்வளையை கடித்து துப்பிவிடுவாள் என்று அஞ்சினேன். பையனின் சிறிய குருத்துக்கால்களையும் காய்ச்சலில் சுண்டிய சிறு முகத்தையும் பார்த்துக்கொண்டு இரவெல்லாம் ஆஸ்பத்திரி வார்டில் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கைகளை விரித்து மார்பு ஏறி இறங்க தூங்கிக்கொண்டிருந்தான். சருமம் வரண்டு உடம்பு சிவந்திருந்தது. விலா எலும்புகள் புடைத்து மார்புகூடு மேலே வந்து வேறேதோ குழந்தை போலிருந்தான். மரணம் அவனை நெருங்கி வந்து சென்றிருக்கிறது. அறைக்குள் அது ஏதோ உருவில் இருந்துகொண்டே இருக்கிறதா என்ன? கொஞ்சம் கண்ணசந்தால் கைநீட்டி அவனை எடுத்துக்கொண்டு செல்லுமா என்ன?
அவனைப்பார்க்கும்போது அடிவயிற்றில் கனமான உலோகத்தகடு ஒன்று வெட்டி இறங்கியது போல தோன்றியது. ஆனால் அந்த வலி வேண்டியுமிருந்தது. அதை நிசப்தமாக அனுபவித்தேன். தராசின் ஒரு தட்டு போல அது மனதின் மறுபக்கத்தை அழுத்திய துயரமொன்றைச் சமன் செய்தது. சிகரெட்டாகப் புகைத்து தள்ளினேன். சிகரெட் புகைத்து என் உதடுகள் எரிந்தன. என் நெஞ்சு புகைந்து இருமலில் வறட்டுச் சளி வெளிவந்தது. எந்த உணவும் உக்கிரமான பசியின்போதுகூட இரண்டாம் வாயில் குமட்டியது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு மூச்சாக வெளியே விட்டு காலத்தை உந்தி நகர்த்தினேன்.
ஒருநாள் இரவில் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. இநத வயதில் நான் இதை தின்றுதானே வளர்ந்தேன். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். என்னோடொத்த பிள்ளைகள் பெரும்பாலும் மழைக்காலத்தில் செத்துப்போகும். என் அம்மா எபப்டியும் பத்து பிள்ளை பெற்றிருப்பாள். ஒன்பதும் செத்திருக்கின்றன. செத்த பிணங்களை காலில் பற்றி சுழற்றி தூக்கி பெருக்கெடுத்தோடும் கரமனை ஆற்றில் வீசுவார்கள். வீசப்படுவதற்காக கிடக்கும் என் தங்கையை நான் பார்த்திருக்கிறேன். சின்ன கரிய முகத்தில் அவள் கடைசியாக நினைத்தது இருந்தது ‘த்தின்ன.. த்தின்ன’ என்பாள். அந்த ஒரு சொல்லை மட்டும்தான் அவளால் பேசமுடியும். அந்தச் சொல் உதடுகளில் இருந்தது.
ஒருகணம் எழுந்த வன்மத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த வெள்ளைக்குழந்தை அந்த தீனியில் ஒருவாயை உண்டு சாவதென்றால் சாகட்டுமே. அங்கே மேலே பட்டினிகிடந்தும், கழிவுகளை தின்றும் செத்த குழந்தைகளுக்கான பிரம்மாண்டமான சொர்க்கத்தில் இதை எதிர்பார்த்து இதன் உறவினர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். மறுகணம் அந்தச் சிந்தனைக்காக என்னை நானே மண்டையில் அறைந்துகொண்டேன். கட்டிலில் அமர்ந்து என் கண்மணியின் கால்களை முத்தமிட்டு முத்தமிட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.
அம்மா விடுதியில் இருந்து சிலநாட்களிலேயே கிளம்பிச்சென்றாள் என்று தெரிந்தது. நான் கவலைப்படவில்லை. ஆனால் அன்றுமுதல் என் ஆளுமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நான் குரூரமானவனாக ஆனேன். மன்னிக்காதவனாக, எந்நேரமும் கோபம் கொண்டவனாக மாறினேன். தினமும் என் ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களையும் தண்டனை அறிவிப்புகளையும் கொடுத்தேன். அவர்கள் அதை எனக்குமேலே சென்று எளிதில் ரத்து செய்துகொண்டார்கள். என் முன்னால் ஏளனம் நிறைந்த முகத்துடன் நின்று இடது கையால் அவற்றை வாங்கிக்கொண்டார்கள். வெளியே சென்று உரக்கக் கேலிபேசிச் சிரித்தார்கள்.
சிலநாட்களில் என் அலுவலகச்சுவர்களில் எனக்கெதிரான போஸ்டர்கள் தென்பட்டன. என் அம்மா அவற்றில் கையில் ஒரு பிளாஸ்டிக் கோப்பையுடன் பிச்சை கோரி அமர்ந்திருந்தாள். பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்டுவிட்டு அதிகார சுகம் அனுபவிக்கும் கயவனிடமா மாவட்டத்தின் பொறுப்பு? நான் அந்த போஸ்டரை அலுவலகத்திற்குள் நுழையும்போதுதான் கவனித்தேன். வரிசையாக நிறைய ஒட்டியிருந்தார்கள். பலவற்றை தாண்டி வந்து திரும்பும்போதுதான் ஒன்றை வாசித்தேன். என் கால்கள் தளர்ந்தன. பிரேக்கை மிதிக்கவே முடியவில்லை. காரை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஓடி என் அறைக்குள் சென்றேன். செல்லும் வழியெங்கும் கண்கள் என் மேல் மொய்த்தன. என் வாசல் மூடியதும் ஆபீஸ் முழுக்க எழுந்த மெல்லிய சிரிப்பு பெரிய இரைச்சலாக மாறி என்மேல் மோதியது.
இரண்டுநாட்கள் கழித்து அம்மாவை மதியம் யாரோ என் ஆபீஸுக்கே கூட்டி வந்துவிட்டார்கள். அம்மா என் ஆபீஸ் முற்றத்தின் கொன்றை மரத்தடியில் அமர்ந்துகொண்டு, என் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டவர்கள் அளித்த மிச்சமீதிகளை ஒரு பாலிதீன் தாளில் குவித்து ஆனந்தமாக தின்றுகொண்டிருந்தாள். என் அறைச்சன்னல் வழியாக நான் பார்க்குமிடத்தில் அவளை அமரச்செய்திருந்தார்கள். சாப்பிட்டு கைகழுவ வாஷ் பேசினுக்குச் சென்ற நான் அதைப் பார்த்தேன். சில கணங்கள் நான் எங்கே நின்றேன் என்றே நான் அறியவில்லை. அங்கிருந்து இறங்கிக் காரைக்கூட எடுக்காமல் பைத்தியக்காரனைப்போல சாலைவழியாக ஓடினேன்.
காலையில் நான் அலுவலகம் சென்று தேங்கிய கோப்புகளை முழுக்க பார்த்துவிட்டு பத்தரை மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். நடுவே போன் செய்து கேட்டேன். அம்மாவின் நிலையில் மாற்றமில்லை என்றார்கள். நான் உள்ளே நுழையும்போது வராந்தாவில் டாக்டர் மாணிக்கம் நின்றிருந்தார். என்னுள் சட்டென்று உருவான அமைதியின்மை அவர் அருகே வந்து வணக்கம் சொன்னபோது அதிகரித்தது. ‘சொல்லுங்க மாணிக்கம்’ என்றேன். அவர் கண்ணீர் மல்கி மீண்டும் கும்பிட்டார். இங்கே நான் இன்னும் கடுமையானவனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்
‘சார் நான் சொன்னது ஒண்ணையும் நம்பலைண்ணு தெரியுது. நான் சாருக்கு செய்ததெல்லாம் சும்ம தப்பை மறைக்கிறதுக்காக செய்ததுண்ணு நினைக்கிறீங்க…அப்டி இல்ல சார். நான்’ அவர் குரல்வளை ஏறி இறங்கியது. ‘நான் எப்பவும் கடவுளுக்கு பயந்துதான் சார் எல்லாம் செய்திருக்கேன். அந்த எருக்குழியிலே என்னால முடிஞ்சவரைக்கும் பாடுபட்டிருக்கேன் சார். காலம்பற எட்டுமணிக்கு வந்தா சிலசமயம் வீடு போய்ச்சேர ராத்திரி ஒம்பது பத்து ஆயிடும்சார். மருந்து கெடையாது. மாத்திரை கெடையாது. புண்ணில வச்சு கெட்ட துணி கெடையாது. சார், சொன்னா நம்ப மாட்டீங்க, பக்கத்திலே வெட்னரி ஆஸ்பத்திரிக்கு போயி அங்க மிஞ்சிக் கெடக்குற ஆண்டிபயாட்டிக்குகள வாங்கிட்டு வந்து நான் இதுகளுக்குக் குடுக்கறேன். பக்கத்துவீடுகளுக்குப் பெண்டாட்டிய அனுப்பிக் கிளிஞ்ச சேலயும் துணியும் கலெக்ட் பண்ணிட்டு வந்து இதுகளுக்கு புண்ணு வச்சு கட்டிட்டு இருக்கேன்…ஒரு நாலஞ்சுநாள் மனசறிஞ்சு லீவு போட்டதில்லை’
நான் தணிவாக ‘நான் உங்களக் குறை சொல்லலை. நிலைமை எப்டி இருக்குன்னு அறிக்கை குடுத்தேன். அது என் கடமை தானே? அதை நான் செய்யலேண்ணா இப்டியே இருக்கட்டும்னு விட்டது மாதிரிதானே?’ என்றேன். ‘நீங்க நினைச்சது சரிதான் சார். நான் உங்களக் குறை சொல்லேல்ல. ஆனா- ‘ அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. ‘ஐயம் ஸாரி’ என்று அறைக்குள் செல்ல முயன்றேன். ‘நில்லுங்க சார். இதை மட்டும் கேளுங்க. கேட்டுட்டு போங்க. நீங்களும் என்னையமாதிரித்தானே. சார் எனக்கு ஏழு வருஷமா பிரமோஷன் டியூ. என்னென்னமோ குற்றமும் குறையுமாட்டு சொல்லி எக்ஸ்பிளனேஷன் மேலே எக்ஸ்பிளனேஷன் கேட்டு ஆறப்போட்டு ஊறப்போட்டு வச்சிருந்தாங்க. டிரிபூனல் வரைக்கும் போயி தீர்ப்பு வாங்கி தீர்ப்ப அப்ளை பண்றதுக்கு மறுபடியும் ஆடர் வாங்கி இப்பதான் காயிதம் வந்திருக்கு. நான் சீனியராக்கும் சார். இப்ப உங்க லெட்டரை காரணமாக் காட்டி என்னைச் சஸ்பெண்ட் பண்ணியாச்சு. இனி அந்த ஆர்டரை ரத்து பண்ணிட்டுதான் என்னை எடுப்பாங்க. மறுபடியும் பத்து வருஷம் ஆகுதோ அதுக்கு மேலே ஆகுதோ…வாறேன் சார்’
நான் ஏதும் சொல்வதற்குள் அவர் விடுவிடுவென சென்று விட்டார். நான் அவர் பின்னாலே நடந்தேன். அவர் வெளியே சென்று தன் பைக்கில் ஏறி சென்றுவிட்டார். சோர்ந்து போய் ஹாலில் அமர்ந்துகொண்டேன். இதுதான் நடக்கும், இது தவிர எது நடந்தாலும் ஆச்சரியம்தான். தெரிந்தும் ஏன் இதைச் செய்தேன்? எதை யாருக்கு நிரூபிப்பதற்காகச் செய்தேன்? எனக்கு கடந்த நாட்களில் வயிற்றில் ஏறிவிட்டிருந்த அமிலம் தொண்டையில் புளித்தது. வாந்தி எடுக்க வேண்டும் போலிருந்தது. தலையைக் கையால் தாங்கி அமர்ந்திருந்தேன்.
நர்ஸ் வந்து ‘சார் ‘என்றாள். நான் எழுந்தேன் ‘அவ்வோ கண்ணு முழுச்சாச்சு’ சிறு பரபரப்புடன் அம்மாவின் அறைக்குச் சென்றேன். அம்மா கண்ணை திறந்து எழுந்து அமர முயன்றாள். கையில் செருகப்பட்டிருந்த க்ளூகோஸ் குழாயை பிய்த்து எடுத்து போட்டிருந்தாள். செருகப்பட்ட ஊசி வழியாக குருதி வழிந்தது. நர்ஸ் ‘அய்யய்யோ…எடுக்கப்பிடாது…பாட்டி . படுத்துக்கிடுங்க’ என்று சொல்லிச் சென்று பிடித்தாள். அவளை அம்மா பிடித்து தள்ளினாள். அவள் கண்கள் பரவி அலைந்து என்னை பலமுறை தாண்டிச்சென்றன. ‘காப்பா லே காப்பா’ என்று அழைத்து எழப்போனாள்
நான் ‘அம்மா, நான்தான், அம்மா’ என்றேன். ‘காப்பா , லே, மக்கா..காப்பா…லே களசம் வேண்டாம்லே. தம்றான் கசேரிலே இரியாதலே மக்கா…காப்பா லே’ . அம்மாவின் கண்ணுக்கு நான் தென்படவே இல்லை. நர்ஸ் அவளை பிடித்து அழுத்தி படுக்கச் செய்தாள் அம்மா சட்டென்று வலிப்பு வந்து கைகால்களை இழுத்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள். வாய் ஒருபக்கமாக கோணிக்கொண்டு அதிர்ந்தது. நர்ஸ் ‘டாக்டரை விளிக்கேன்’ என்று வெளியே ஓடினாள். நான் அம்மாவைப் பிடித்து மெல்ல படுக்க வைத்தேன். கைகள் இறுக்கமாக இருந்தன. பின்னர் அவை மெல்லமெல்ல தொய்வடைய ஆரம்பித்தன. டாக்டர் வந்தபோது அம்மா மீண்டும் மயக்கமாகி விட்டிருந்தாள்.
நான் வெளியே நின்று காத்திருந்தேன். இந்திரா வெளியே வந்து ‘டயாலிஸிஸ் பண்ணினா நல்லது. ஷி இஸ் சிங்கிங்’ என்றார். ‘பண்ணுங்க’ என்றேன். ‘பண்ணினாலும் பெரிசா ஒண்ணும் நடக்காது. ஷி இஸ் அல்மோஸ்ட் இன் ஹர் ஃபைனல் மினிட்ஸ்’ நான் பெருமூச்சு விட்டேன். உள்ளே அவர்கள் கூடிக்கூடி பேசினார்கள். ஏதேதோ செய்தார்கள். நான் மீண்டும் கூடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டேன். தலையைக் கையால் அளைந்தேன். வாட்சை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டினேன்
சுபா போனில் அழைத்தாள். நான் ’ஹலோ’ என்றதும் ‘ஹவ் இஸ் ஷி?’ என்றார். ‘இன்னும் கொஞ்ச நேரத்திலேன்னு சொன்னாங்க’ அவள் ‘ஓ’ என்றாள்.’நான் இப்ப அங்க வரேன். ஒரு பத்து நிமிஷம் ஆகும்’ நான் போனை வைத்தேன். அந்த போன் கிளிக் என்று ஒலித்த கணம் ஒன்றை முடிவுசெய்தேன். ஆம், அதுதான். பிரஜானந்தர் சொன்னது அதைத்தான். அவரது சொற்கள் என் காதுகளுக்கு அருகே ஒலித்தன. ’அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ இதைத்தான் சொன்னாரா? இதை நான் செய்யமாட்டேன், எனக்கு அந்த துணிச்சலே வராது என்று நினைத்துத்தான் தைரியமாக இரு என்றாரா?
நான் எழுந்து சென்று அம்மாவை பார்த்தேன். உள்ளே ஒரு நர்ஸ் மட்டும் இருந்தாள். ’கண்ணமுழிச்சாங்களா?’ என்றேன். ‘இல்ல. டயாலிஸிஸ் பண்ணணும். இப்ப அங்க கொண்டு போயிருவோம்’ என்றாள். அம்மா கண்விழிக்கவேண்டும் என்று அக்கணம் என் முழு இருப்பாலும் ஆசைப்பட்டேன். பிரார்த்தனை செய்ய என் தலைக்குமேல் காதுகள் எதையும் உணர்ந்ததில்லை. அந்த தருணத்திடம், அந்த அறையில் நிறைந்த லோஷன் வாடைகொண்ட காற்றிடம், சாய்ந்து விழுந்த சன்னல் வெளிச்சத்திடம், அங்கே துளித்துளியாக கசிந்து சொட்டிய காலத்திடம் தீவிரமாக வேண்டிக்கொண்டேன்.அம்மா கண்விழிக்க வேண்டும். சில நிமிடங்கள் போதும்
அவளருகே அமர்ந்து அவள் கைகளை என் கைகளில் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டும். அவள் அத்தனை வருடம் ஆவேசமாக மன்றாடியதற்கு என் பதில். ’அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன். நான் உன் காப்பன்’
ஆனால் அம்மாவின் முகம் மேலும் மேலும் மெழுகுத்தன்மை கொண்டபடியே செல்வதைத்தான் கண்டேன். இன்னொரு பெண் வந்து அம்மாவின் உடைகளை மாற்றினாள். அப்போது அம்மாவின் உடல் சடலம் போலவே ஆடியது. அவளும் ஒரு சடலத்தைப்போலவே அம்மாவை கையாண்டாள்.
நேரம் சென்றது. அரைமணிநேரம் தாண்டியும் சுபா வரவில்லை. ஆனால் ஒயர்கூடையுடன் குஞ்சன் நாயர் வெற்றிலைச்சிரிப்பை காட்டியபடி தோளைச்சரித்து நடந்து வந்தான். ‘நமஸ்காரம் சார். ஆபீஸிலே போனேன். மெட்ராஸ் போன் வந்திருக்கு. எல்லாத்தையும் ரமணி குறிச்சு கையிலே குடுத்தனுப்பினா’ என்று ஒரு காகிதத்தை தந்தான். நான் அதை வாங்கி வாசிக்காமலேயே பைக்குள் செருகிக்கொண்டேன். அவனை அனுப்ப நினைத்த கணம் உள்ளே அம்மா ‘காப்பா’ என்றாள்
நான் உள்ளே நுழைவதற்குள் குஞ்சன்நாயர் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டு அம்மா சட்டென்று அதிர்ந்து கல்லைக்கண்ட தெருநாய் போல மொத்த உடலும் குறுகி பின்னாலிழுத்துக்கொள்ள இருகைகளையும் கூப்பி ‘தம்றானே, கஞ்சி தா தம்றானே’ என்று கம்மிய குரலில் இரந்தாள். அவள் உடல் ஒருகணம் அதிர்ந்தது. வலது கால் சம்பந்தமில்லாமல் நீண்டு விரைத்து மெல்ல தளர்ந்தது. எச்சில் வழிந்த முகம் தலையணையில் அழுத்தமாக பதிந்தது. நர்ஸ் அவளைப் பிடித்துச் சரித்தபின் நாடியைப் பார்த்தாள். அதற்குள் எனக்குத் தெரிந்துவிட்டது.
ஆம், பிரஜானந்தர் சொன்னது இதைத்தான்.. அமர வேண்டும். இந்த பிச்சைக்காரக் கிழவியை புதைத்து இவளது இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாகவேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறுநாற்காலிகள் வேண்டும்.

            அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு ‘ராமன்பிள்ளைட்ட ஒருதடவை சரிபாத்துட்டு அனுப்பச்சொல்லு. இன்னைக்கே போனா நல்லது’ என்று பேனாவை வைத்தபோது இரட்டைக் கதவுக்கு அப்பால் அவன் தலையைக் கண்டேன். ‘என்ன விஷயம் குஞ்சன் நாயரே?’ என்றேன். அவன் ரமணியைக் கண்காட்டினான். நான் ரமணியிடம் போகலாம் என்று ஜாடைகாட்டி அவனை உள்ளே வரும்படி தலையசைத்தேன்குஞ்சன்நாயர் ரமணி போவதைக் கவனித்துவிட்டு ரகசியமும் முக்கியத்துவமும் தொனிக்க சற்றே குனிந்து ‘ஸாருக்கு ஒரு காரியம் சொல்லணும். எப்பிடிச் சொல்லுகதுண்ணு தெரியேல்ல…நான் காலத்தே கேட்டதாக்கும். உச்சைக்கு சைக்கிளை எடுத்துக்கிட்டு கோட்டாறுக்குச் செண்ணு ஒருநடை பாத்துப்போட்டும் வந்தேன். சங்கதி உள்ளது, நான் ஆளைப்பாத்தேன். போதமில்லை. தீரே வய்யாத்த ஸ்திதியாக்கும்…’ என்றான்.

 

        நான் ஊகித்துவிட்டிருந்தலும் அனிச்சையாக ‘யாரு?’ என்றேன். ‘ஸாறுக்க அம்மையாக்கும். கோட்டாறு ஷெட்டிலே பிச்சக்காரங்களுக்க ஒப்பரம் எடுத்து இட்டிருக்காவ. வெறும்தறையிலே ஒரு பாய்கூட இல்லாமலாக்கும் கிடப்பு. துணியும் கூதறயா கெடக்கு. நான் ஒரு அட்டெண்டர்கிட்ட சொல்லி ஒரு புல்பாயி வேங்கி கிடத்தச் சொல்லிட்டு வந்தேன்.. . கையிலே சக்கறம் இருந்தா அவன்கிட்ட குடுத்து ஒரு நல்ல துணி வேங்கி–’நான் ‘எங்க?’ என்று எழுந்தேன். ‘ஸார்…கோட்டாறு வலிய ஆஸ்பத்திரியாக்கும். ஆஸ்பத்திரிண்ணு சொன்னா செரிக்கும் ஆஸ்பத்திரி இல்ல..இந்தால கழுதச்சந்த பக்கத்தில பழைய ஆஸ்பத்திரி உண்டுல்லா.. இடிஞ்ச ஷெட்டுகள் நாலஞ்சு… அதிலே மூணாமத்ததிலே வெளிவராந்தாவிலே அற்றத்து தூணுக்கு கீழேயாக்கும் கெடப்பு. நமக்க மச்சினன் ஒருத்தன் அங்க சாயக்கடை வச்சிட்டுண்டு. அவனாக்கும் சொன்னது…’ நான் பேனாவைச் சட்டையில் மாட்டி, கண்ணாடியை கூடில் போட்டு, சட்டைக்குள் வைத்துக் கிளம்பினேன்குஞ்சன்நாயர் பின்னால் ஓடிவந்தான் ‘அல்ல, ஸாறு இப்பம் அங்க போனா…வேண்டாம் ஸார் .நல்லா இருக்காது. இங்க ஓரோருத்தன் இப்பமே வாயிநாறிப் பேசிட்டுக் கெடக்கான். என்னத்துக்கு அவனுகளுக்கு முன்ன நாம செண்ணு நிண்ணு குடுக்கது? இப்பம்வரை நான் ஆரிட்டயும் ஒரு அட்சரம் பேசல்ல பாத்துக்கிடுங்க. இவனுகளுக்க வாயும் நாக்கும் சீத்தயாக்கும்….நீங்க எடபடவேண்டாம்.

 

        நான் பாத்துக்கிடுதேன். இருசெவி அறியாமல் எல்லாத்தையும் செய்யலாம். உள்ள காச எனக்க கையிலே தந்தா போரும். ஸாறு வீட்டுக்கு போங்க. ஒண்ணும் அறிஞ்சதா பாவிக்க வேண்டாம்…’ நான் கறாராக ‘நாயர் வீட்டுக்கு போங்க…நான் பாத்துக்கிடுறேன்’ என்றபின் வெளியே சென்றேன்ஆபீஸ் வழியாக நான் நடந்து வெளியே செல்லும்போது என் முதுகில் கண்கள் திறந்தன. எப்போது நான் வெள்ளைச்சட்டை போட ஆரம்பித்தேனோ அப்போதே முளைத்த கண்கள் அவை. அங்கே இருந்த அத்தனைபேரும் முகத்தில் விரிந்த ஏளனச்சிரிப்புடன் திரும்பி என்னைப்பார்த்தபின் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். உதடு அசைய ஒலியில்லாமல் பேசிக்கொண்டார்கள். என்பின்னாலேயே வந்த நாயர் கைகளை ஆட்டி உதட்டை சுழித்து ஏதோ சொல்ல ரமணி வாயைப்பொத்திக்கொண்டு குனிந்து சிரித்தாள்.நான் காரைத் திறந்து உள்ளே அமர்ந்தேன். குஞ்சன்நாயர் கார் அருகே குனிந்து ‘நான் வேணுமானா சைக்கிளிலே பொறமே வாறேன் சார்’ என்றான். ‘வேண்டாம்’ என்று கிளப்பினேன். அவன் மறைந்து, அலுவலகம் பின்னால் சென்று, சாலையின் பரபரப்பில் இறங்குவது வரை எனக்குள் இருந்த இறுக்கத்தை சாலைக்கு வந்ததும் என் கைகள் ஸ்டீரிங்கில் மெல்ல தளர்வதில் இருந்து அறிந்துகொண்டேன்.

 

      பெருமூச்சு விட்டு என்னை இலகுவாக்கினேன். ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் சட்டையில், காரில் எங்கும் சிகரெட் இருக்காது. நான் சிகரெட் அதிகம்பிடிக்கிறேன் என்று சுபா விதித்த கட்டுப்பாடுகாரை செட்டிகுளம் ஜங்ஷனில் நிறுத்தி இறங்காமலேயே ஒரு பாக்கெட் வில்ஸ்கோல்ட் வாங்கிக்கொண்டேன். சிகரெட் புகையை ஊதியபோது என்னுடைய பதற்றமும் புகையுடன் வெளியே செல்வதுபோல இருந்தது. செட்டிகுளம் ஜங்ஷனில் நின்ற போலீஸ்காரர் என்னைப் பார்த்ததும் விரைப்பாகி சல்யூட் அடித்தார். கார் பள்ளத்தில் இறங்கிக் கோட்டாறு சந்திப்பை அடைந்தது. பக்கவாட்டில் திரும்பி கோட்டாறு ஆஸ்பத்திரி. அதையும் தாண்டித்தான் கழுதைச்சந்தை என்று கேட்டிருக்கிறேன். அங்கே சென்றதில்லை.ஆஸ்பத்திரி வாசலில் என் கார் நின்றபோது பரபரப்புடன் முன்னால் நின்ற சிப்பந்திகள் உள்ளே ஓடினார்கள். அங்கும் இங்கும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் ஒலிகள். அதட்டல்கள். சிலர் ஓடும் சத்தம். உள்ளிருந்து இரு டாக்டர்கள் என் காரை நோக்கி ஓடி வந்தார்கள். நான் இறங்கியதும் ‘குடீவினிங் சார்’ என்றார் நடுத்தர வயதானவர். இன்னொருவன் இளைஞன். அவன் மிக மெல்ல ’குடீவ்னிங் செர்’ என்றான்.

 

     ‘நான் இங்க ஒரு பேஷண்டைப் பாக்க வந்திருக்கேன்’ என்றேன் ‘இங்கேயா சார்?’ என்றார் டாக்டர். ‘இங்க இருக்காது சார்…இங்க–’ . நான் ‘இங்கதான்’ என்றேன்.’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும். பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் டாக்டர். நான் ‘ம்’ என்றபின் ‘மூணாவது ஷெட் எங்க?’ என்றேன். ‘காட்டுறேன் சார்’ என்றபடி டாக்டர் கூடவே வந்தார் தயக்கமாக ‘எல்லாம் அத்துப்போன கேஸுங்க சார்… ட்ரீட்மெண்டெல்லாம் குடுக்கிறதில்லை. கொஞ்சம் தீனிகீனி குடுத்து ஜெனரல் ஆண்டிபயாட்டிக் குடுத்துப் பாப்போம். சிலசமயம் தேறும். மிச்சம் ஒருநாலஞ்சுநாளிலே போயிடும். ஃபண்ட்ல்லாம் ரொம்ப கம்மிசார். ஸ்டாஃபும் கெடையாது. இதுகளை தோட்டிங்க தவிர மத்த ஸ்டாஃப் தொட்டு எடுக்க மாட்டாங்க…’ என்றார்நான் பேசாமல் நடந்தேன். ‘ இப்ப ஏகப்பட்ட கிரௌட் சார். மழைக்காலம் பாத்தீங்களா, அங்க இங்க ஈரத்திலே கெடந்து காய்ச்சலும் ஜன்னியும் வந்தெதெல்லாம் இங்க வந்திரும்… இதுகள்லாம் அனிமல்ஸ் மாதிரி. ஒண்ணு விளுந்தா இன்னொண்ணு கவனிக்காது. அப்டியே விட்டுட்டு போயிடும்.தோட்டிங்க தூக்கி இங்க கொண்டு போட்டிருவாங்க…’ அந்த வளாகம் முழுக்க பலவிதமான போஸ்களில் தெருநாய்கள் கிடந்தன.

 

         உண்ணி கடித்துக்கொண்டிருந்த ஒரு செவலை என்னை நோக்கி ர்ர் என்றது. கட்டிடங்களின் வராந்தாக்களிலும் நாய்கள் அலைந்தன.அந்த கட்டிடத்தில் எங்கும் எந்த மரச்சாமான்களும் இல்லை. எப்போதோ எதற்காகவோ கட்டப்பட்ட ஓட்டுக்கொட்டகை. ஓடுகள் பொளிந்த இடைவெளிவழியாக உள்ளே தூண் தூணாக வெயில் இறங்கியிருந்தது. தரையில் போடப்பட்டிருந்த சிவப்புத் தரையோடுகள் தேய்ந்தும் இடிந்து பெயர்ந்தும் கரடுமுரடான குழிகளாக இருந்தன. அவற்றில் கருப்பட்டிசிப்பங்களுக்கான முரட்டு பனம்பாய்களிலும் உரச்சாக்குகளிலுமாக குப்பைகள் போல மனிதர்கள் கிடந்தார்கள். அவர்களின் நடுவே தெருநாய்கள் அலைந்தனவற்றி ஒடுங்கிய கிழடுகள்தான் அதிகமும். சில பெண்களும்கூட இருந்தார்கள். சிதைந்த உடல்கள். நசுங்கிய உருகிய ஒட்டிய உலர்ந்த முகங்கள். பலர் நினைவில்லாமலோ தூங்கிக்கொண்டோ இருக்க, விழித்திருந்த சிலர் உரக்க கூச்சலிட்டுக்கொண்டும், முனகிக்கொண்டும், கைகால்களை ஆட்டிக்கொண்டும் இருந்தார்கள். வயிற்றை வாந்திக்காக உலுக்க வைக்கும் கடும் நாற்றம் அங்கே நிறைந்திருந்தது. அழுகும் மனிதச்சதையும், மட்கும் துணிகளும், மலமூத்திரங்களும் கலந்த நெடி. விம்ம்ம் என்று ஈக்கள் சுழன்று எழுந்து அடங்கினநான் கர்ச்சீபால் முகத்தை மூடிக்கொண்டேன்.

 

         ‘எல்லாம் முத்திப்பழுத்து மண்டை கழண்ட ஜீவன் சார்… படுத்த எடத்திலேயே எல்லாம் போயிடும்…ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் டாக்டர். அங்கே எங்கும் எந்த ஊழியர்களையும் காணவில்லை. நான் தேடுவதைப் பார்த்துவிட்டு ’தோட்டிங்க காலையிலே வந்து துப்புரவு பண்ணி மருந்தக் குடுத்துட்டு போறதோட சரி.சாயங்காலம் அவங்க வர்ரதில்லை. எல்லாம் போதைய போட்டிட்டு படுத்திருவாங்க’ டாக்டர் என்னிடம் ஒரு சுய விளக்கத்தை அளிக்க முயல்கிறார் என்று தெரிந்தது.மூன்றாவது ஷெட்டின் கடைசித்தூணருகே என் அம்மா கிடப்பதைப் பார்த்துவிட்டேன். ஒரு பனம்பாயில் மல்லாந்து கிடந்தாள். பெரும்பாலும் நிர்வாணமாக. கரிய வயிறு பெரிதாக உப்பி எழுந்து ஒருபக்கமாக சரிந்திருந்தது. கைகால்கள் வீங்கித் தோல்சுருக்கங்கள் விரிந்து பளபளவென்றிருந்தன. முலைகள் அழுக்கு பைகள் போல இருபக்கமும் சரிந்து கிடந்தன. வாய் திறந்து கரிய ஒற்றைப்பல்லும் தேரட்டை போன்ற ஈறுகளும் தெரிந்தன. தலையில் முடி சிக்குப் பிடித்துச் சாணி போல ஒட்டியிருந்தது.‘இவங்களுக்கு என்ன?’ என்றேன். ‘அது…ஆக்சுவலி என்னான்னு பாக்கலை சார். வந்து நாலஞ்சுநாளாச்சு. நினைவில்லை.

 

         வயசு அறுபது எழுபது இருக்கும்போல…’ என்றார். ‘நினைவிருக்கிறவங்களுக்குத்தான் மாத்திரை ஏதாவது குடுக்கிறது’ நான் அம்மாவையே பார்த்தேன். அம்மா ஆறடிக்குமேல் உயரம். சிறுவயதில் கரிய வட்டமுகத்தில் பெரிய வெண்பற்களுடன் பெரிய கைகால்களுடன் பனங்காய்கள் போல திடமான முலைகளுடன் இருப்பாள். உரத்த மணிக்குரல். அவளைத் தெருவில் கண்டால் சின்னப்பிள்ளைகள் அஞ்சி வீட்டுக்குள் ஓடிவிடும்.ஒருமுறை அந்தியில் அம்மா பிடாரிக் கோயில் பின்பக்கம் ஓடை அருகே இருந்து என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆடையற்ற மேலுடலில் முலைகள் குலுங்க சிறிய ஊடுவழியில் வந்தபோது எதிரே தனியாக வந்த வைத்தியர் கிருஷ்ணன்குட்டி மாரார் அதிர்ந்து இரு கைகளையும் கூப்பியபடி ‘அம்மே! தேவீ’ என்று அப்படியே நடுங்கிக்கொண்டே நின்றதை பலமுறை பல கோணங்களில் தெளிவாக நினைவுகூர்ந்திருக்கிறேன். அம்மா அன்று எங்கோ எதையோ மதர்க்க தின்றிருந்ததனால் அவரை பொருட்படுத்தாமல் நிலம் அதிர காலடி எடுத்து வைத்து தாண்டிச்சென்றாள்.’ஏதாவது கேஸா சார்?’ என்றார் டாக்டர். என் உதடுகள் சட்டென்று கல்லாக ஆகிவிட்டன. என் உயிர் அவற்றை எட்டவில்லை. சிலகணங்கள் முயற்சித்துவிட்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்தி தலையை அசைத்தேன்.

 

      ‘வேணுமானா பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போய்டலாம் சார்… பஸ் ஸ்டாண்டிலே இருந்து பொறுக்கிட்டு வந்திருக்கானுக..’ அவர் அம்மாவின் வயிற்றை பார்த்துவிட்டு ‘நாலஞ்சுநாளா யூரின் போகலின்னு நெனைக்கறேன். இன்னர் ஆர்கன்ஸ் ஒண்ணொண்ணா போயிட்டிருக்கு… பெரிசா ஒண்ணும் பண்ணமுடியாட்டியும் யூரினை வெளியேத்தி அம்மோனியாவ கொஞ்சம் கொறைச்சா நெனைவு வர்ரதுக்கு சான்ஸ் இருக்கு…ஏதாவது தகவல் இருந்தா சொல்லவச்சுடலாம்’ என்றார்.நான் ‘மிஸ்டர்-’ என்றேன். ‘மாணிக்கம் சார்’ என்றார். ‘மிஸ்டர் மாணிக்கம், இது-’ கத்தியால் என் நெஞ்சில்நானே ஓங்கிக் குத்தி இதயம்மீது இரும்புத்தகடை இறக்குவதுபோல சொன்னேன் ‘ இவங்க என் சொந்த அம்மா’ டாக்டர் புரியாமல் ‘சார்?’ என்றார். நான் ‘இவங்க என் அம்மா.. வீட்டைவிட்டுக் காணாமப் போய்ட்டாங்க…கொஞ்சம் மெண்டல் பிராப்ளம் உண்டு’ என்றேன். கொஞ்சநேரம் அவர் சொல்லிழந்து என்னையும் அம்மாவையும் மாறி மாறிப்பார்த்தார். பிறகு ‘ஐயம் ஸாரி சார்…ஆக்சுவல்லி’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார்.’பரவாயில்லை..இப்ப எனக்காக ஒரு காரியம் பண்ணுங்க. உடனே இவங்களோட டிரெஸ்ஸை மாத்தி அவசியமான டிரீட்மெண்ட் குடுத்து ரெடிபண்ணுங்க. நான் இவங்கள பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போறேன்…ஆம்புலன்ஸும் வரவழையுஙக..’ என்றேன் ‘ஷூர் சார்’ நான் என் பர்ஸை வெளியே எடுத்தேன். ‘சார் ப்ளீஸ்…நாங்க பாத்துக்கறோம்…இட் இஸ் எ ஆனர்…சாரி சார். எங்க நெலைய நீங்க புரிஞ்சுகிடணும்…நான் இந்த சிஸ்டத்திலே என்ன செய்ய முடியுமோ அதைச்செய்யறேன்.’

 

        ‘ஓக்கே’ என்று நான் திரும்பி என் காருக்குச் சென்றேன்.பத்து நிமிடத்தில் டாக்டர் என்னருகே ஓடிவந்தார். ‘க்ளீன் பண்ணிட்டிருக்காங்க சார். உடனே யூரின் வெளியேத்தி இஞ்செக்‌ஷன் போட்டிடலாம்…ஆனா ஹோப் ஒண்ணும் கெடையாது சார்’ ‘ஓக்கே ஓக்கே’ என்று சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். காருக்கு வெளியே நின்றவர் இன்னும் குனிந்து தணிந்த குரலில் ‘சார்’ என்றார். ‘எஸ்’ என்றேன். ‘சார் நான் என்னால முடிஞ்சத செஞ்சுட்டுதான்சார் இருக்கேன். என் மேலே தப்பே கெடையாதுன்னு சொல்லலை. ஆனா ஒண்ணூமே செய்யமுடியாதுசார். முனிசிப்பல் குப்பைகெடங்குக்கு குப்பைய கொண்டுபோறதுமாதிரித்தான் இங்க இந்த பிச்சக்காரங்கள கொண்டுவர்ராங்க..’‘ஓக்கே…போய் செய்யவேண்டியதை செய்ங்க’ என்றேன். என் குரலில் தேவையற்ற ஒரு கடுமை எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அது என் மேலேயே எனக்கிருந்த கசப்பினால் ஆக இருக்கலாம். டாக்டர் சட்டென்று உடைந்த குரலில் ‘சார் நான் எஸ்சி சார். கோட்டால வந்தவன். என்னைய மாதிரி ஆளுங்களுக்கு இங்க எடமே இல்லசார். அருவருப்பா ஏதோ பூச்சிய மாதிரி பாக்கறாங்க. நான் சர்வீஸிலே நொழைஞ்சு இப்ப பதினெட்டு வருஷம் ஆகுது… நான் சீனியர் சார். ஆனா இப்ப வரைக்கும் எனக்கு கௌரவமா உக்காந்து நோயாளிகள பாக்கறது மாதிரி ஒரு வேலை எங்கயுமே குடுத்தது கெடையாது. செர்வீஸ் முழுக்க போஸ்ட்மார்ட்டம் பண்ணத்தான் விட்டிருக்காங்க சார். இல்லேன்னா இது…இங்க மேல்சாதிகாரங்க யாருமே இல்ல.

 

       சின்னவன் இருககானே அவனும் எங்காளுதான்…எங்க ரெண்டுபேரையும் -’ என்று பேச முடியாமல் விசும்பிவிட்டார்.இறங்கி அவரைத் தள்ளிவிட்டுக் காலால் வெறிகொண்ட மாதிரி உதைத்து உதைத்து உதைத்து கூழாக்கி மண்ணோடு கலக்க வேண்டும் என்ற வேகம் எழுந்து என் கைகால்கள் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தன. சிகரெட் நுனி நடுங்கிச் சாம்பல் பாண்ட் தொடைமேல் விழுந்தது. அவர் கண்களை துடைத்தபடி ‘…பாழாப்போன பொழைப்புசார்… கிளினிக் வச்சா எங்க கிட்ட மேல்சாதிக்காரன் வர்ரதில்லை. எங்காளுங்களிலெயே காசிருக்கிறவன் வர்ரதில்லை. எனக்கு ஊரிலே தோட்டிடாக்டர்னு பேருசார். படிச்ச படிப்புக்கு வேற எந்த வேலைக்கு போனாலும் மானமா இருந்திருப்பேன். டாக்டரா ஆகணும்னு சொப்பனம் கண்டு ராப்பகலாப் படிச்சேன் சார். இப்ப இங்க தோட்டிகளோட தோட்டியா ஒக்கார வச்சிட்டாங்க…’நான் பெருமூச்சு விட்டுக் கண்களை கையால் அழுத்திக்கொண்டேன். பின்பு ‘மாணிக்கம்’ என்றேன். என் குரல் அடைத்திருப்பது எனக்கு வினோதமாக ஒலித்தது. ‘மாணிக்கம்’ என்று மீண்டும் சொன்னேன். ‘வேற வேலைக்கு வந்தாலும் இதே கதிதான்.சிவில்சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன? நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி–’ டாக்டரின் வாய் திறந்தபடி நின்றது.

 

      நான் பேச்சை அங்கேயே முடித்துவிட எண்ணிச் சிகரெட்டை வீசினேன். ஆனால் என்னை மீறிச் சொற்கள் புண்ணிலிருந்து சீழ் போல வெளியே வழிந்தன.‘பாத்திங்களா, இந்த உடம்ப இதுக்குள்ள ஓடுற ரத்தம் முழுக்க பிச்சைச்சோத்தில ஊறினது. அத நானும் மறக்கப்போறதில்லை. எனக்கு பிச்சை போட்ட எவனும் மறக்கப்போறதில்லை.. மறக்கணுமானா மொத்த ரத்தத்தையும் வெட்டி வடியச்செஞ்சுட்டு வேற ரத்தம் ஏத்தணும்….சிங்கம் புலி ஓநாய் அப்டி ஏதாவது நல்ல ரத்தம்…அது-’ மேலே சொல்ல சொற்களில்லாமல் நின்று ‘– போங்க…போய் அம்மாவ ரெடி பண்ணுங்க…’ என்று உரக்க சொன்னேன். அந்த உரத்த குரல் எனக்கே கேட்டபோது தன்னுணர்வு கொண்டு கூசித் தலையை வருடிக்கொண்டேன்.பிரமித்து போனவராக தளர்ந்த நடையுடன் டாக்டர் செல்வதைப் பார்த்துக்கொண்டு இன்னொரு சிகரெட் பற்றவைத்தேன். இந்த ஆளிடம் எதற்காக பிச்சை எடுத்ததைப்பற்றிச் சொன்னேன்? இவன் மனதில் என்னைப்பற்றிய சித்திரம் என்ன ஆகும்? கண்டிப்பாக அது இந்நேரம் சிதைந்து தரையில் கிடக்கும். அவனுக்கு அவனைப்பற்றி எந்த மதிப்பும் இல்லை. இப்போது என்னை அவனைப்போன்ற ஒருவனாக எண்ண ஆரம்பித்திருப்பான். ஆகவே என்னைப்பற்றியும் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை. சிகரெட் ஒரேயடியாக கசந்தது. என் வழக்கத்திற்கு மாறாக நான் தொடர்ந்து சிகரெட்டாக இழுத்துக்கொண்டிருக்கிறேன்.

 

      சிவில் சர்வீஸுக்கான நேர்முகத்தில் எட்டுபேர் கொண்ட குழுமுன் நான் அமர்ந்திருந்தபோது நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியே என் சாதியைப்பற்றித்தான். என் வியர்த்த விரல்கள் மேஜையின் கண்ணாடியில் மெல்ல வழுக்க விட்டுக்கொண்டு என் இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அறைக்குள் குளிர்சாதனக்கருவியின் ர்ர்ர் ஒலி. காகிதங்கள் புரளும் ஒலி. ஒருவர் அசைந்தபோது சுழல் நாற்காலியின் கிரீச். அவர் மீண்டும் என் படிவங்களைப் பார்த்துவிட்டு ‘நீங்கள் என்ன சாதி?’ மீண்டும் குனிந்து ‘பட்டியல்பழங்குடிகளில்…நாயாடி…’ என்று வாசித்து நிமிர்ந்து ’வெல்?’ என்றார்.கைக்குழந்தையாக இருந்த காலம் முதல் ஒருநாளும் ஒரு நிமிடமும் என்னுடைய சாதியை நான் மறக்க எவரும் அனுமதித்ததில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக திவான்பேஷ்கார் நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலை மனப்பாடம்செய்த காலகட்டத்தில்தான் என் சாதியைப்பற்றி அறிந்துகொண்டென். 1906 ல் நாகம் அய்யா அவரது மானுவலை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னர் வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஆண்டபகுதிகளைப்பற்றி மானுவல்கள் எழுதியிருக்கிறார்கள்.

 

     மதுரை பற்றிய ஜெ.எச்.நெல்சனின் மானுவல் ஒரு கிளாசிக். அதைப்போன்று எழுதப்பட்டது நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் மானுவல். அதே கறாரான விரிவான தகவல்கள், அதே துல்லியநடை , அதே திமிர்.திருவிதாங்கூரின் எல்லாச் சாதிகளைப்பற்றியும் நாகம் அய்யா விரிவாகவே எழுதியிருக்கிறார். சாதிகளின் தொடக்கம் பற்றிய தொன்மங்கள், குடியேறிய சாதிகள் என்றால் அதைப்பற்றிய தகவல்கள், சாதிகளின் ஆசாரங்கள் பழக்க வழக்கங்கள், அவர்களின்சமூகப்படிநிலை எல்லாவற்றையும் சொல்கிறார். சாதிகளின் பொதுவான தோற்ற அமைப்பை வர்ணிக்கிறார். எட்கார் தர்ஸ்டனின் அடியொற்றி சாதிகளின் முக அமைப்பை மூக்கின் நீளத்தைக்கொண்டு வரையறுக்க முடியுமா என்று பார்க்கிறார்.நெல்சனைப்போலவே ஒவ்வொரு சாதிக்கும் அதற்குரிய தனிக்குணம் உண்டு என்ற எண்ணம் அவருக்கும் இருந்திருக்கிறது. கம்பீரமான கட்டுபாடற்ற நாயர், சோம்பேறிகளும் புத்திசாலிகளுமான வெள்ளாளர், கடும் உழைப்பாளிகளான திமிர் கொண்ட நாடார், குடியும் கலகமும் கொண்ட ஈழவர் என்று அவர் இன்றைய ஜனநாயகச் சங்கடங்கள் ஏதுமில்லாமல் சொல்லிக்கொண்டே செல்கிறார். ஒவ்வொரு சாதியைப்பற்றியும் அன்றைய ஆளும்தரப்பு, அல்லது பிராமணத்தரப்பு என்ன நினைத்தது என்பதற்கான ஆவணம் அது.அதில் மிகக்குறைவாக விவரிக்கப்பட்ட சாதி என்னுடையது. ‘நாயாடிகள். அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாடமுடியாது. இவர்களை நேரில் பார்த்துவிட்டால் உடனே சத்தம்போட்டு சூழ்ந்துகொண்டு கல்லால் அடித்து கொன்று அங்கேயே எரித்துவிடும் வழக்கம் இருந்தது. ஆகவே இவர்கள் பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தைகுட்டிகளுடன் பன்றிகள் போல ஒடுங்கிக்கொண்டு தூங்குவார்கள்.

 

         இரவில் வெளியே கிளம்பி வேட்டையாடுவார்கள். இவர்கள் மூதேவியின் அம்சம் என்று நம்பபட்டமையால் இவர்களுக்கு தவிடு, மிஞ்சிய உணவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வெளியே பிச்சையாக தூக்கி வைக்கும் வழக்கம் உண்டு.இவர்கள் கையில் அகப்பட்ட எதையும் தின்பார்கள். எலிகள், நாய்கள் ,பல்வேறு பூச்சிபுழுக்கள் , செத்த உயிரினங்கள் . எல்லாவகை கிழங்குகளயும் பச்சையாக உண்பார்கள். கமுகுப்பாளையால் பிறப்புறுப்புக்களை மறைத்திருப்பார்கள். இவர்கள் பொதுவாக நல்ல கரிய நிறமும் உயரமும் கொண்டவர்கள். நீளமான பெரிய பற்கள் உண்டு. இவர்களின் மொழி தமிழ்போன்று ஒலிப்பது. இவர்களுக்கு எந்தக் கைத்தொழிலும் தெரியாது. இவர்களிடம் அனேகமாக உடைமைகள் என ஏதும் இருப்பதில்லை. இவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை என்பதனால் குடில்கள் கட்டிக்கொள்வதில்லை. திருவிதாங்கூரில் இவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களால் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை’நான் நாகம் அய்யா அவரது மானுவலில் என்ன சொல்கிறார் என்று ஒப்பிப்பது போல சொன்னேன். இன்னொருவர் என்னை கூர்ந்து பார்த்தபடி ’இப்போது உங்கள் சாதி எப்படி இருக்கிறது? முன்னேறிவிட்டதா?’ என்றார். ‘இல்லை, இன்றும் அனேகமாக எல்லாருமே பிச்சையெடுத்தும் பொறுக்கி உண்டும் தெருவில் திறந்த வெளிகளில்தான் வாழ்கிறார்கள்’ அவர் என்னை நோக்கி ‘நீங்கள் சிவில்சர்வீஸ் வரை வந்திருக்கிறீர்களே?’ என்றார். ‘எனக்கு ஒரு பெரியவரின் உதவி கிடைத்தது’ அவர்களில் ஒருவர் ‘அம்பேத்காரைப் போல?’ என்றார். நான் அவர் கண்களை உற்று நோக்கி ‘ஆமாம், அம்பேத்காரைப்போல’ என்றேன். சில கணங்கள் அமைதி.மூன்றாமவர் என்னிடம் ‘இப்போது ஓர் ஊகக்கேள்வி.

 

        நீங்கள் அதிகாரியாக இருக்கும்வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒருபக்கம் நியாயம் இருக்கிறது, இன்னொருபக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள். என்ன முடிவெடுப்பீர்கள்?’ என்றார். மற்றவர்கள் அந்த கேள்வியால் மிகவும் தூண்டப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்தது. நாலைந்து நாற்காலிகள் முனகின. என் விரல்கள், காதுமடல்கள், கண்திரை எல்லாம் சூடான குருதி அழுத்திப்பாய்ந்து கொதித்தன. நான் சொல்ல வேண்டிய பதிலென்ன என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் நான் அந்தக்கணத்தில் சுவாமி பிரஜானந்தரை நினைத்துக்கொண்டேன்.திடமான குரலில் ‘சார், நியாயம் என்றால் என்ன?’ என்றேன். ’ வெறும் சட்டவிதிகளும் சம்பிரதாயங்களுமா நியாயத்தை தீர்மானிப்பது? நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் இருந்தாகவேண்டும் அல்லவா? சமத்துவம்தான் விழுமியங்களிலேயே மகத்தானது, புனிதமானது. ஒருநாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருபக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிவிடுகிறான். அவன் என்ன செய்திருந்தாலும் அது நியாயப்படுத்தப்பட்டு விடுகிறது’உடல்கள் மெல்லத் தளர நாற்காலிகள் மீண்டும் முனகின. சிலர் கைகளை கோர்த்துக்கொண்டார்கள். கேள்விகேட்டவர் ‘மிஸ்டர் தர்மபாலன், கொலை? கொலை செய்திருந்தால்?’ என்றார். அந்த வரியை அங்கே என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை ‘சார், கொலையே ஆனாலும் நாயாடிதான் பாதிக்கப்பட்டவன்’ என்றேன்.

 

      கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. தாள்கள் மட்டும் கரகரவென புரண்டன. பின் பெருமூச்சுடன் முதலாமவர் சில கேள்விகளைக் கேட்டார். பொது அறிவுத்தகவல்கள்தான். பேட்டி முடிந்தது. என் விதி தீர்மானமாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மனதுக்குள் நிறைவுதான் கனத்தது. நேராகச்சென்று சிறுநீர் கழித்தபோது உடலுக்குள் கொந்தளித்த அமிலமே ஒழுகிச் செல்வதுபோல இருந்தது. கைகால்கள் எல்லாம் மெல்ல மெல்லக் குளிர்ந்தன. கண்ணாடியில் முகம் கழுவிக்கொண்டேன். தலைசீவியபடி என் முகத்தைப்பார்த்தபோது அதிலிருந்த பதற்றம் எனக்கே புன்னகையை வரவழைத்ததுநேராக காண்டீன் சென்று ஒரு காபி வாங்கிக்கொண்டு கண்ணாடிச்சன்னலருகே கண்ணாடிமேஜைக்கு அருகில் சென்று அமர்ந்து உறிஞ்சினேன். கீழே அதல பாதாளத்தில் கார்களின் மண்டைகள் கரப்பாம்பூச்சிகள் போலத் தெரிந்தன. மனிதர்கள் செங்குத்தாக நடந்து சென்றார்கள். பச்சைச் செண்டுகள் போல நாலைந்து மரங்கள் காற்றில் குலைந்தன. சாலையில் சென்ற ஏதோ காரின் ஒளி என் கண்களை மின்னி விலகியது. என் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவரை முதலில் நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்பு தெரிந்தது, பேட்டி எடுத்தவர். அந்த நியாயம் பற்றிய கேள்வியைக் கேட்டவர்‘ஐ யம் நவீன் சென்குப்தா’ என்றார். ‘ஹல்லோ சார்’ என்று கைநீட்டினேன். குலுக்கியபடி டீக்கோப்பையை சற்று உறிஞ்சினார். ‘பேட்டி மாலையிலும் இருக்கிறது. ஒரு சின்ன இடைவேளை’ என்றார். நான் அவரையே பார்த்தேன்.

 

       ‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டீர்கள். ஒருவர் தவிர அத்தனைபேருமே உயர்மதிப்பெண் போட்டிருக்கிறார்கள்’ நான் அதை எதிர்பார்க்காததனால் அவரையே அர்த்தமில்லாமல் வெறித்தேன்.’.. இது இப்போதைக்கு அரசு ரகசியம். உங்கள் பதற்றத்தைக் கண்டதனால் சொன்னேன்’ என்றார்.‘நன்றி சார்’ என்றேன். ‘பரவாயில்லை. நான் அந்தக் கேள்வியை சாதாரணமாகத்தான் கேட்டேன். அந்த வகையான கேள்வி எல்லாரிடமும் கேட்கப்படும். ஒரே வகையான பதில்கள்தான் எதிர்பார்க்கப்படும். நீங்கள் சொன்ன பதில் நிர்வாகக் கண்ணோட்டத்தில் மிகமிக தவறானது. ஆனால் ஆத்மார்த்தமாகச் சொன்னீர்கள். உணர்ச்சிகரமாக முன்வைத்தீர்கள்..’ அவர் மீண்டும் டீயை உறிஞ்சி ‘என்னைத்தவிர எவரும் நல்ல மதிப்பெண் போடமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒருவர் தவிர எல்லாருமே மிகச்சிறந்த மதிப்பெண் போட்டார்கள்..’சட்டென்று சிரித்து ‘நான் மதிப்பெண் போட்டதற்கான அதேகாரணம்தான் என்று நினைக்கிறேன்’ என்றார்நான் என்ன என்பதுபோல பார்த்தேன். ‘என்னை மனிதாபிமானி என்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவன் என்றும் மொத்தத்தில் நவீனமனிதன் என்றும் அவர்கள் நினைக்கவேண்டும் என்று எண்ணினேன். அதாவது எதற்காக மதச்சின்னங்கள் அணிவதில்லையோ ஏன் மாட்டிறைச்சி தின்று மது அருந்துகிறேனோ அதே காரணம். பங்காலி பிராமணர்களும் பஞ்சாபி பிராமணர்களும் இந்த மனநிலையில் இருந்து வெளிவருவது கடினம்’ மிஞ்சிய டீயை குடித்துவிட்டு ‘- ஆனால் யாதவுக்கு அந்த சிக்கலே இல்லை. அவர் சாதாரணமாக பிற்போக்கு சாதியவாதியாக இருக்கலாம்.’ என்றார்.’ஓக்கே’ என்று அவர் எழுந்துகொண்டார்.

 

       ‘நீங்கள் என்னை எந்த தனிப்பட்ட உதவிக்காகவும் தொடர்பு கொள்ளலாம். நானும் முடிந்தவரை முற்போக்காக இருக்க முயற்சி செய்வேன்’ சட்டென்று உரக்கச் சிரித்து ‘அதாவது நீங்கள் என் சொந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள முயலாதவரை’. நானும் சிரித்துவிட்டேன். இரட்டைத்தாடை கொண்ட கொழுத்தமுகமும் சிறிய கண்களும் கொண்ட மனிதர். கொஞ்சம் மங்கோலியக்களை கொண்ட முகம். என் முதுகில் தட்டியபடி ‘இளைஞனே, நீ நிறையச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏராளமான மனமுறிவுகளும் சோர்வும் வரும். இந்த வேலைக்கு வந்ததற்காக வருத்தப்படவே உனக்கு வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் வாழ்த்துக்கள்’ என்றார்.போகும் வழியில் திரும்பி ‘உன்னைப் படிக்க வைத்தவர் யார்?’ என்றார். ‘சுவாமி பிரஜானந்தர். நாராயணகுருவின் சீடரான சுவாமி எர்னஸ்ட் கிளார்க்கின் சீடர்…’ என்றேன். ’ஏர்னஸ்ட் கிளார்க்கா? வெள்ளையரா?’ ‘ஆமாம் .பிரிட்டிஷ்காரர்.தியஸபிகல் சொசைட்டிக்கு வந்தவர் நாராயணகுருவின் சீடரானார்.

 

        குரு இறந்தபிறகு திருவனந்தபுரத்தில் நாராயணமந்திர் என்று ஒரு ஆசிரமம் நடத்தினார். 1942 வாக்கில் கோயம்புத்தூருக்குச் சென்று அங்கே ஒரு குருகுலத்தை நிறுவினார். நாராயணகுருவின் வேதாந்தத்தை விவாதிப்பதற்காக லைஃப் என்று ஒரு பத்திரிகை நடத்தினார்..எல்லாம் நான் வாசித்தறிந்ததுதான்’ என்றேன் ‘ பிரஜானந்தர் ஏர்னஸ்ட் கிளார்க்குடன் திருவனந்தபுரம் குருகுலத்தில் இருந்தார். அவர் போனபின் குருகுலத்தை பிரஜானந்தர் கொஞ்சகாலம் நடத்தினார்’’பிரஜானந்தர் இப்போது இருக்கிறாரா?’ என்றார் சென்குப்தா. ‘இல்லை. இறந்துவிட்டார்’ ‘ஓ’ என்றார். ‘அவரது உண்மையான பெயர் கேசவப் பணிக்கர். ஏர்னஸ்ட் கிளார்க் அவருக்கு காவி கொடுத்து பிரஜானந்தராக ஆக்கினார்’ ‘ஏர்னஸ்ட் கிளார்க் சாமியாரா?’. ‘ஆமாம். நாராயணகுருவின் ஒரே அன்னியநாட்டு சீடர் அவர்தான். ஆனால் நாராயணகுரு ஏர்னஸ்ட் கிளார்க்கின் பெயரை மாற்றவில்லை’ . ‘ஆச்சரியம்தான்’ என்றார் சென்குப்தா‘நாராயணகுரு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சென்குப்தா எழுந்தார். ‘ராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி இல்லையா?’. ‘ஆமாம்’. ‘வெல்…பட் -’ என்றபின் ‘ஓக்கே’ என்றார். ‘சொல்லுங்கள் சார்’. ‘இல்லை, உன்னைச் சோர்வடையச்செய்ய விரும்பவில்லை…’ ‘பரவாயில்லை’ ‘இல்லை நீ வேறேதாவது செய்திருக்கலாம். நல்ல கல்வியாளர் ஆகியிருக்கலாம். மருத்துவர் ஆகியிருக்கலாம். சமூக சேவைகூடச் செய்திருக்கலாம்…இது சரியான துறையா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது நீ நினைப்பது போல அல்ல…வெல்’ சட்டென்று கைகுலுக்கிவிட்டு நேராக நடந்து லிஃப்டை நோக்கிச் சென்றார்.அவர் என்ன சொன்னார் என்பதை நான் அதன்பின் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன்.

 

         எங்கும் எப்போதும் நான் வெளியே நிறுத்தப்பட்டேன். ஆட்சிப்பணி பயிற்சி என்பது ’நான் கட்டளையிடப்பிறந்தவன்’ என்று ஒருவனை நம்பவைப்பதற்கான எளிமையான மனவசியமன்றி வேறல்ல. ஆனால் என்னிடம் மட்டும் அப்படிச் சொல்லப்படவில்லை. என்னை நோக்கிய எல்லா சொற்களும் நீ வேறு என்பதாகவே இருந்தன. எங்கள் கருணையால், எங்கள் நீதியுணர்ச்சியால் நீ இங்கே அமர அனுமதிக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே எங்களிடம் நன்றியுடன் இரு, எங்களுக்கு விசுவாசமானவனாக இரு.தமிழ்நாடு வட்டாரத்திற்கு நான் நியமிக்கப்பட்டு முதல்முறையாக சென்னையில் பணிக்குச் சேர்ந்தபோது முதல்நாளிலேயே நான் யாரென உணரச்செய்யப்பட்டேன். முந்தையநாள் நான் என் மேலதிகாரியிடம் என்னை அறிக்கையிட்டுவிட்டு என் இடத்திலிருந்து பிரிந்துசெல்லும் அதிகாரியைச் சம்பிரதாயமாகச் சென்று சந்தித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் அதே அறையில் நான் நுழைந்தபோது அங்கே ஏற்கனவே இருந்த உயரமான சிம்மாசனம்போன்ற நாற்காலி அகற்றப்பட்டு எளிமையான மரநாற்காலி போடப்பட்டிருந்தது. பலர் அமர்ந்து நார்ப்பின்னல் கூடைபோல தொய்ந்த பழைய நாற்காலி. ஏதோ குமாஸ்தாவுடையது. நான் அதைப்பார்த்தபடி சிலநிமிடங்கள் நின்றேன்.

 

        என் பின்னால் நின்ற தலைமை குமாஸ்தாவிடம் அந்த பழைய நாற்காலி எங்கே என்று கேட்பதற்காக எழுந்த நாக்கை என் முழுச்சக்தியாலும் அடக்கிக்கொண்டு அதில் அமர்ந்தேன்.சிலநிமிடங்கள் கழித்து உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்ன ஒவ்வொருவரின் பார்வையிலும் நான் அதைத்தான் உணர்ந்துகொண்டேன், அந்த இல்லாமல் போன நாற்காலி. மிதமிஞ்சிய பணிவு, செயற்கையான சரளத்தன்மை, அக்கறையற்ற பாவனை அனைத்துக்கு அடியிலும் அதுதான் இருந்தது. நான் சொன்ன அத்தனைச் சொற்களிலும் அது இருந்தது. கறாரான ஆனால் மென்மையான அதிகாரப்பேச்சுக்கு நான் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் என்ன செய்யவேண்டும்?என் நாற்காலிக்காக நான் போராடலாம். ஆனால் அதை என்னுடைய அற்பத்தனத்தின் அடையாளமாகச் சித்தரித்துக்கொள்வார்கள். அதையே என் இயல்பாக ஆக்கி அழியாத முத்திரை ஒன்றை உருவாக்குவார்கள். மிஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் செல்லும் இடங்கள் முழுக்க அந்த முத்திரை கூடவே வரும். அதிகாரவராந்தாக்களில் உருவாகி நிலைபெறும் தொன்மக்கதைகளில் ஒன்றாக ஆகும். அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அது மேலும் இழிவுகளை என் மேல் சுமத்த நானே கொடுத்த அனுமதியாக ஆகும்.சிலமணிநேரங்களுக்குப் பின் அதைப்பற்றிக் கேட்பதற்காக நான் தலைமைக்குமாஸ்தாவை உள்ளே அழைத்தேன். அவர் கண்களில் தெரிந்த திடத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது, அவர் எடுத்த முடிவல்ல அது. அவருக்குப் பின்னால் ஒரு அமைப்பே இருக்கிறது. அதனுடன் நான் மோதமுடியாது. நான் தன்னந்தனியானவன்.

 

       மோதி இன்னும் சிறுமைப்பட்டால் என்னால் எழவே முடியாது. சாதாரணமாக ஏதோ கேட்டேன். அந்த சிறிய கண்களில் சிரிப்பு ஒன்று மின்னி மறைந்ததோ என எண்ணிக்கொண்டேன்.ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்…அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன். ‘யூரின் வெளியே எடுத்தாச்சு சார்… டிரிப்ஸ் போகுது. கிட்னி வேலைசெய்றமாதிரியே தெரியலை. நாலஞ்சுநாளா எங்கியோ காய்ச்சல் வந்து கெடந்திருக்காங்க’ நான் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.ஆஸ்பத்திரிக்குள் அம்மாவை கொண்டு செல்லும்போது கவனித்தேன். வயிறு நன்றாக சுருங்கியிருந்தது. வெண்ணிறமான உடை அணிந்திருந்தாள். வெண்ணிறப்போர்வையில் மஞ்சளாக குருதியோ நிணமோ வடிந்து பரவிக்கொண்டிருந்தது. டாக்டரே இறங்கிச்சென்று பேசி அம்மாவை உள்ளே கொண்டு சென்றார். நான் வரவேற்பறையில் காத்திருந்தேன். ஒருமணி நேரத்தில் டாக்டர் இந்திரா என்னை அவரது அறைக்குள் அழைத்தார். நான் அமர்ந்ததும் ‘ஸீ, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

 

         மாணிக்கம் டோல்ட் எவ்ரிதிங். ஷி இஸ் சிங்கிங்..’ என்றார். நான் தலையசைத்தேன். ‘பாக்கிறோம். நினைவு திரும்பினா அதிர்ஷ்டம் இருக்குன்னு அர்த்தம்…இஸ் ஷி அவுட் ஆஃப் மைண்ட்?’ நான் தலையசைத்தேன். ‘வெல், சிலசமயம் கடைசி நினைவுகள் தெளிவா இருக்கும். பாக்கலாம்’இரவாகிவிட்டிருந்தது. நான் எழுந்தேன். டாக்டர் ‘இங்க யாரும் இருக்கவேண்டியதில்லை. ஏதாவது இருந்தா நான் ஃபோன்பண்றேன்’ என்றார். வெளியே மாணிக்கம் இருந்தார். ‘நான் ஸ்டீபனை இங்க நிப்பாட்டியிருக்கேன் சார். அவரு பாத்துக்குவார்’ என்றார். ‘இல்லை மாணிக்கம். பரவாயில்லை. அவர் போகட்டும். இங்கேயே பாத்துக்குவாங்க’ என்றேன். காரைக் கிளப்பியபோதுதான் மூன்றுமணிநேரமாக நான் டீ கூடக் குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. உடனே பசிக்க ஆரம்பித்தது.காரை நிறுத்திவிட்டு காரேஜில் இருந்தே உள்ளே நுழைந்தபோது சுபா வந்து ‘என்ன? சொல்லவேயில்லை’ என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து பூட்ஸ்களை கழற்றினேன். ‘சாப்பிடறீங்களா?’ ‘இல்லை குளிச்சிடறேன்’ அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உடைகளைக் கழற்றி அழுக்குக் கூடையில் போட்டுவிட்டு நேராக பாத்ரூம்சென்று ஷவரில் நின்றேன். ஈரத்தைத் துடைத்துக்கொண்டிருந்தபோது மனம் அமைதியாகிவிட்டதை உணர்ந்தேன்டைனிங் டேபிளில் சுபா தட்டு பரப்பியிருந்தாள். ‘நீ சாப்பிடலையா?’ ‘இல்லை. குட்டி இவ்ளவு நேரம் இருந்தான். இப்பதான் தூங்கினான்’ நான் அமர்ந்ததும் அவளும் எதிரே அமர்ந்தாள்.

 

        நாகம்மா சூடாகச் சப்பாத்தி போட்டு எடுத்துக்கொண்டு வந்து என் தட்டில் போட்டாள். ‘சுபா’ என்றேன். ‘அம்மாவைப் பாத்தேன்’ அவள் கண்கள் நிமிர்ந்து என்னை நோக்கி உறைந்திருந்தன. ’இங்க சர்க்கார் ஆஸ்பத்திரியிலே…பிச்சைக்காரங்களுக்கான கொட்டகையிலே’ அவள் ஒன்றும் சொல்லாமல் உதட்டை மட்டும் அசைத்தாள். ‘ரொம்ப மோசமான நெலைமை. பலநாள் எங்கியோ காய்ச்சலா கெடந்திருக்கா. எல்லா ஆர்கன்ஸும் செத்திட்டிருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ ஆயிடும்னு சொன்னாங்க’‘எங்க இருக்காங்க?’ என்றாள். நான் ‘கோபாலபிள்ளையிலே சேத்திருக்கேன்’ அவள் பேசாமல் சரிந்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். நான் இரண்டாவது சப்பாத்தியை பாதியில் விட்டு எழுந்தேன். ‘நாகம்மா அய்யாவுக்கு பால் கொண்டா’ ‘வேண்டாம்’ என்றேன் ‘சாப்பிடுங்க அப்றம் காலம்பற அசிடிட்டி ஏறிடப்போகுது’ நான் ஒன்றும் சொல்லாமல் படுக்கையறைக்குச் சென்றேன். பாதி போர்த்திக்கொண்டு பிரேம் படுத்திருந்தான். நான் அவனருகே படுத்து அவன் கால்களை மெல்ல வருடிக்கொண்டு மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.சுபா இரவு உடை அணிந்து கையில் பாலுடன் வந்தாள். என்னருகே டீபாயில் வைத்து ’குடிங்க’ என்று சொல்லிவிட்டு கண்ணாடிமுன் நின்று தலையை பெரிய சீப்பால் சீவி கொண்டை போட்டாள். நான் அவளுடைய வெண்ணிறமான பின்கழுத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி ‘என்ன?’ என்றாள்.

 

       நான் இல்லை என்று தலையாட்டிவிட்டுப் பாலைக் குடித்தேன். எழுந்து பாத்ரூம் சென்று லேசாகப் பல்லைத்தேய்த்து கொப்பளித்துவிட்டு வந்தேன். அவள் படுக்கையில் படுத்துக்கொண்டு ‘நான் வரணுமா?’ என்றாள்.நான் அவளை வெறுமே பார்த்தேன். ’நான் வந்தாகணும்னா வரேன். ஆனா வரதுக்கு எனக்கு விருப்பம் இல்லை’ எப்போதுமே அவள் மிகுந்த நடைமுறைத்தன்மையுடன் பேசுபவள். ‘எனக்கு நாளைக்கு ரெண்டு மீட்டிங் இருக்கு…ஒண்ணு மினிஸ்டரோட புரோக்ராம். அதை நான் ஒண்ணும் பண்ணமுடியாது. சாயங்காலம் வேணுமானா வர்ரேன்’ நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? ’ நான் ‘எனக்கு ஒண்ணும் தோணலை’ என்றேன்‘இங்க பாருங்க, இதை ஒரு பெரிய இஷ்யூவா ஆக்கினா உங்களுக்குத்தான் பிரச்சினை. எப்டியும் அவங்க இன்னைக்கோ நாளைக்கோ போயிடுவாங்க கௌரவமா செய்யவேண்டியதைச் செஞ்சு முடிச்சிடலாம். நானும் வந்து இத ஒரு பெரிய ஷோவா ஆக்கினா அப்றம் எல்லாருக்கும் சங்கடம். துக்கம் விசாரிக்க வர ஆரம்பிச்சிருவாங்க. ஆளுக்கொண்ணா கேட்டிட்டிருப்பாங்க. உங்களுக்கும் சங்கடமா இருக்கும்’ நான் ‘சரி’ என்றேன். ’அப்ப பேசாம படுங்க. ஃபோன் வந்தா எழுப்பறேன். மாத்திரை போட்டுக்கங்க’ நான் பெருமூச்சுடன் மாத்திரை ஒன்றைப் போட்டுக்கொண்டேன்‘குட்நைட்’ என்றாள் சுபா. நான் ‘ஒருவேளை அம்மா முழிச்சுகிட்டு பிரேமை பாக்க விரும்பினா?’ என்றதும் சுபா கோபமாக எழுந்து அமர்ந்துவிட்டாள். ‘நான்சென்ஸ்!’ என்றாள்.

 

 

          ‘லுக் அவன் என் பிள்ளை. அந்த பிச்சைக்காரிதான் அவன் பாட்டின்னு அவன் மனசிலே ஏத்தறதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்’ நான் கொஞ்சம் கோபத்துடன் ‘என்ன சொல்றே? அவன் எனக்கும் மகன்தான். அந்த தெருப்பிச்சைக்காரி பெத்த பிள்ளைதான் நான்’நான் கோபம் கொண்டால் உடனே நிதானமாக ஆவது அவள் இயல்பு. கண்களில் கூர்மை வந்தது. திடமான மெல்லிய குரலில் ‘இப்பச் சொன்னீங்களே, இதான். இதான் உங்க பிரச்சினை. எப்பவுமே உங்க பிறப்பும் வளர்ப்பும் சாதியும் உங்க மனசிலே இருந்திட்டிருக்கு. அந்த தாழ்வுணர்ச்சியாலதான் உங்க வாழ்க்கைய நீங்க நரகமா ஆக்கிட்டிருக்கீங்க. உங்க கெரியரை டோட்டலா ஸ்பாயில் பண்ணியிருக்கீங்க. அந்த தாழ்வுணர்ச்சிய பிரேம் மனசிலேயும் புகுத்தணுமா? அப்டீன்னா செய்ங்க’நான் தளர்ந்து பின்னால் சரிந்தேன். ‘லூக், ஸ்டில் யூ கன் நாட் ஸிட் ஃபர்ம்லி இன் எ சேர்’ என்றாள் சுபா. ’உங்க படிப்பு, அறிவு ஒண்ணுமே பிரயோசனமில்லை. ஒருத்தர்கிட்ட கட்டளை போட நாக்கு வளையாது. ஒருத்தர் கண்ணைப்பாத்து பேசமுடியாது. எல்லாரும் முதுகுக்குப் பின்னாடி ஏதோ பேசி சிரிக்கிறாங்கன்னு எப்பவும் ஒரு காம்ப்ளெக்ஸ். என் பையனாவது அவன் ஜெனரேஷன்லே இதிலே இருந்து வெளியே வரட்டும். ப்ளீஸ். செண்டிமெண்ட் பேசி அவன் வாழ்க்கைய அழிச்சிராதீங்க. நீங்க படற சித்திரவதை அவனுக்கும் வரக்கூடாதுன்னா லீவ் ஹிம் அலோன்’நான் ‘ஓக்கே’ என்றேன்.

 

        சுபா கனிந்து என் நெற்றியில் கையை வைத்து ‘ஸீ..நான் உங்களப் புண்படுத்தறதுக்காகச் சொல்லலை. இட் இஸ் எ ஃபேக்ட். ப்ளீஸ்’ என்றாள். நான் ‘தெரியும்’ என்றேன். ‘அம்மா உங்களுக்கும் எனக்கும் எல்லா கெட்டபேரையும் வாங்கி குடுத்தாச்சு. சிரிக்க வேண்டியவங்க எல்லாரும் சிரிப்பா சிரிச்சாச்சு. இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமா அந்த சிரிப்பு இல்லாம போகட்டும்…’ என் தலை தூக்கத்தில் கனத்தது. ‘சரிதான்…ஓக்கே’ என்றபின் கண்களை மூடிக்கொண்டேன்.காலையில் என் மனம் அலையற்றிருந்தது. ஆனால் கொஞ்சநேரம்தான். காலையில் ஆஸ்பத்திரிக்கு ஃபோன்செய்து விசாரித்தேன். அம்மா நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிந்தது. ஒன்பது மணிக்குக் கிளம்பி ஆஸ்பத்திரியை நெருங்க நெருங்க பதற்றம் ஏறி என் கைகள் ஸ்டீரிங்கில் வழுக்கின. சுந்தர ராமசாமியின் வீட்டு முகப்பை அடைந்தபோது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று கொஞ்சநேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைத்தேன். அவர் தன் முகப்பறைக்கு வந்து அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரம்தான்.பிறர் குரலைக் கூர்ந்து கேட்பதில் அவருக்கு நிகராக இன்னொருவரைக் கண்டதில்லை.

 

       எத்தனையோ பேர் எதையெதையோ முறையிட்டும் அந்தக் கவனம் அழியவில்லைஅவரது வீட்டுக்குள் இருந்து அவரது சீடனான இளம்எழுத்தாளன் லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்து கேட்டை பாதி திறந்து போட்டுக்கொண்டு செல்வதைக் கண்டேன். வடகேரளத்தில் காசர்கோட்டில் ஏதோ வேலைபார்ப்பவன். அவர் வீட்டு மாடியில்தான் தங்கியிருக்கிறான் போல. சுந்தர ராமசாமியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது சிலதடவை அவனும் கலந்துகொண்டிருக்கிறான். அப்போது அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்று ஆசைப்பட்டேன். உள்ளே செல்லவேண்டுமென நினைத்தாலும் கார் அதுவே செல்வதுபோல தாண்டிச்சென்று கோபாலபிள்ளை ஆஸ்பத்திரிமுன்னால் நின்றது.டாக்டர் இந்திரா வரவில்லை. பயிற்சி டாக்டர் என்னை நோக்கி வந்து பணிவாக வணக்கம் சொன்னான். ’எப்டி இருக்காங்க?’ என்றேன். ‘அப்டியேதான் சார்’ என்றான். அம்மாவின் அறையில் இருந்து குஞ்சன்நாயர் என்னை நோக்கிப் பெருச்சாளி வருவது போலக் குனிந்தபடி ஓடிவந்தான். ‘நான் காலத்தே வந்திட்டேன் சார். அம்மைக்கு இப்பம் கொஞ்சம் கொள்ளாம். மூத்திரம் எடுத்த பிறகு முகத்தில் ஒரு ஐஸ்வரியம் உண்டு’ என்றான். நான் அவனிடம் ‘நீங்க ஆபீஸிக்குப்போய் நான் டிரேயிலே வச்சிருக்கிற பேப்பரை எல்லாம் எடுத்து கனகராஜ்ட்ட குடுங்க’ என்றேன். ‘நான் இங்க?’ என்றான். ‘நான் இருக்கேன்’ ‘அல்ல சார், நான் இங்க துணையாட்டு…’ ‘வேண்டாம்’ ‘ஓ’ என்று பின்னால் நகர்ந்தான்அறைக்குள் சென்றேன். அம்மா அதேபோல படுத்திருந்தாள்.

 

        கிட்டத்தட்ட சடலம்தான். சலைன் இறங்கிக்கொண்டிருந்தது. இன்னொருபக்கம் துளித்துளியாக சிறுநீர். அருகே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு அம்மாவையே பார்த்தேன். நெற்றியிலும் கன்னத்திலும் தோள்களிலும் கைகளிலும் முழுக்க ஏராளமான புண்ஆறிய வடுக்கள். சில வடுக்கள் மிக ஆழமானவை. நெற்றியில் ஒருவடு மண்டை ஓடே உடைந்தது போலிருந்தது. வாழ்நாளில் எப்போதுமே ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்க மாட்டாள். எல்லா புண்களும் பழுத்து சீழ்வைத்து சிலசமயம் புழுகூட வைத்து தானாக ஆறியிருக்கவேண்டும். நாய்களுடனும் சக மனிதர்களுடனும் சண்டையிட்ட காயங்கள். யார் யாரோ கல்லால் அடித்தவை, குச்சிகளால் அடித்தவை, டீக்கடைகளில் வெந்நீர் ஊற்றியவை..நான் சுபாவை காதலிக்கும் நாட்களில் அந்தரங்கமான தருணம் ஒன்றில் என் சட்டையை கழற்ற நேர்ந்தபோது அவள் விக்கித்துப்போனாள். ‘மை குட்நெஸ்..இதென்ன இவ்ளவு காயம்?’ நான் வரண்ட சிரிப்புடன் ‘சின்னவயதிலே நான் புண்ணில்லாம இருந்ததே கெடையாது…’ என்றேன். அவள் என் முதுகில் இருந்த நீளமான தழும்பை விரலால் தொட்டு மெல்ல வருடினாள். ‘புறமுதுகு காயம்ல அது…. மார்பிலே நல்ல விழுப்புண் இருக்கு’ என்றேன். சட்டென்று அவள் விசும்பி அழுதபடி என்னை தழுவிக்கொண்டாள். என் தோள்களிலும் புஜங்களிலும் இருந்த வடுக்களில் முத்தமிட்டாள்.ஏழுவயதில் முழு நிர்வாணமாக அம்மாவுடன் தெருவில் அலைந்துகொண்டிருந்தபோது என் உடம்பெங்கும் பொளிபொளியாக சொறியும் சிரங்கும் நிறைந்திருந்தன.

 

      விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இமைகள் ஒட்டி தோலே தெரியாதவனாக இருந்தேன். எந்நெரமும் பசியாலும் வலியாலும் சிணுங்கி அழுதுகொண்டு கண்ணுக்குப்பட்ட எதையும் எடுத்து வாயில் வைத்து சாப்பிடமுயன்றுகொண்டு நடந்தேன். எங்கோ ஒரு தாடிக்காரர் தெருப்பிள்ளைகளுக்குச் சோறு போடுகிறார் என்று கேள்விப்பட்டு அக்காவின் கையைப்பிடித்துக்கொண்டு சென்றிருந்தேன். பிரஜானந்தர் கரமனை ஆற்றின் கரையில் உருவாக்கியிருந்த குருகுல ஆசிரமம்.ஏற்கனவே அங்கே ஏராளமான தெருப்பிள்ளைகள் கூடி நின்றார்கள். கரமனை ஆற்றில் இறங்கி குளித்து உடல்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு அவர்கள் தரும் நல்ல ஆடையை அணிந்துகொண்டு ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்து பிரார்த்தனைப்பாடல்களைப் பாட வேண்டும். ஒருமணிநேரம் அங்கே சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களைப் படிக்கவேண்டும். அதன்பின் சோறு போடுவார்கள். முன்னரே வந்த பிள்ளைகள் ஆற்றில் இறங்கி மணலை அள்ளி தேய்த்து குளித்தனர். காவிவேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கொண்டு நின்ற இளம் துறவி ஒருவர் ‘டே, அவன்…அவன் கறுப்பன்..அவன் நல்லா தேய்ச்சில்ல…தேய்க்கடே’ என்றெல்லாம் சத்தம் போட்டு அவர்களைக் குளிக்கச்செய்துகொண்டிருந்தார்.நான் நீரைப்பார்த்ததுமே நின்று விட்டேன். அவர் என்னைத் திரும்பிப்பார்த்ததும் அலறியபடி திரும்பி ஓடினேன். ‘டே, அவனப் பிடிடே’ என்று அவர் சொன்னதும் நாலைந்து பெரிய பையன்கள் என்னைத் துரத்திப்பிடித்து மண்ணில் இழுத்தும் தூக்கியும் கொண்டுவந்து அவர் முன்னால் போட்டார்கள் . சுவாமி என் கையைப்பிடித்து கழுத்தளவு நீரில் தூக்கிப்போட்டார்.

 

          மீன்கள் சரமாரியாக மொய்த்து என்னைக் கொத்த ஆரம்பித்தன. நான் கதறித் துடித்தேன். அவர் என்னைத் தூக்கிக் கல்லின்மேல் அமரச்செய்து தேங்காய்நாரால் தரதரவென்று தேய்த்தார். நான் அலறி விரைத்து அவரது கையை அழுத்திக்கடித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தவில்லைஉடம்பெங்கும் ரத்தம் கொட்ட நின்ற என்னை கையை விடாமலேயே இழுத்துச்சென்று என் உடம்பெங்கும் நீலநிறமான ஏதோ திரவத்தைப் பூசினார். அது பட்டதும் முதல்கணம் குளிர்ந்து மறுகணம் தீப்பிடித்தார்போல எரிந்தது. கையை உதறிக்கொண்டு அழறியழுதபடி ஓடினேன். அவர் என் பின்னால் வந்து ‘ஓடினால் சோறு இல்லை…ஓடினால் சோறு இல்லை’ என்றார். நான் திகைத்து நின்றேன். மேலே கால் எடுத்துவைக்க என்னால் முடியவில்லை. ‘ காப்பய்க்கு சோறு வேணுமே.. சோறூ’ என்று அங்கே நின்று அழுதேன்.என் உடம்பில் எரிச்சல் குறைய ஆரம்பித்தது. பல இடங்களில் அமர்ந்தும் நின்றும் மீண்டும் ஆசிரமத்தை நெருங்கி வந்து திண்ணையைப்பற்றிக்கொண்டு நின்று ‘தம்றா சோறு தா .. தம்றா சோறு தா.. தம்றா…’ என்றேன்.சுவாமி என்னை நேராகத் தூக்கிக்கொண்டுசென்று உள்ளே ஒரு பெரிய கூடத்தில் அமரச்செய்தபின் என் முன் நானே படுக்கும் அளவுக்கு பெரிய இலையை விரித்து அதில் பெரிய சிப்பலால் சோற்றை அள்ளி வைத்தார்.

 

        நான் ‘னின்னும்’ என்றேன். மேலும் வைத்தபோது உடனே ‘னின்னும்’ என்றேன் ‘இதை தின்னுடா தீக்குச்சி..அதுக்கு பிறகு தரும்’ என்றார் சுவாமி.நான் இலையுடன் சோற்றை அள்ளிக்கொண்டு எழப்போனபோது என் மண்டையில் அடித்து ‘இருந்து தின்னுடா’ என்றார். அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன். சுவாமி ‘தின்னெடே’ என்றார். மீண்டும் அமர்ந்துகொண்டு கொதிக்க கொதிக்க அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டே இருந்தேன்.சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. என் வயிறு பெரிய கலயம்போல பளபளவென்றிருந்தது. மீசைக்காரர் ஒருவர் ‘லே, தாயளி உனக்க வயறும் நிறைஞ்சு போச்சேலே… வயற்றிலே பேனு வச்சு நசுக்கலாம்ணு தோணுதே…’ என்றார்நான் அவர் என்னை அடிக்கப்போகிறார் என்று எண்ணி எழுந்து ஓரமாக நகர்ந்தேன். ‘லே லே இரி…உன்ன ஒண்ணும் ஆரும் செய்ய மாட்டா. இருந்துக்கோ. இன்னும் சோறு வேணுமால?’ என்றார் ஆம் என்று தலையசைத்தேன். ‘இன்னும் சோறு திண்ணா நீ எலவங் காயி மாதிரி வெடிச்சு ஒடைஞ்சு சோறா வெளிய வரும் கேட்டியா? நாளைக்கு சோறு வேணுமா?’ ஆம் என்று தலையசைத்தேன்.

 

        ‘நாளைக்கும் வா…இங்கவந்து சாமி சொல்லிக்குடுக்குத பாட்டும் அட்சரமும் படிச்சேண்ணாக்க நிறையச் சோறு தருவாரு…’அவ்வாறுதான் நான் பிரஜானந்தரின் ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட தெருப்பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஆள்சேர்க்கவே அந்தச் சாப்பாடு போடப்பட்டது. அதில் மயங்கி வரும் பிள்ளைகளைச் சுவாமி போதானந்தர் பள்ளியில் சேர்த்துவிடுவார். சுவாமி பிரஜானந்தரால் நிறுவப்பட்டாலும் பள்ளியை நடைமுறையில் போதானந்தர்தான் நடத்திக்கொண்டிருந்தார். கன்னங்கரேலென்ற நீண்ட தாடியும் தோளில்புரளும் சுருண்ட குழலும் பயில்வான் போன்ற உடலும் கொண்ட குட்டையான இளைஞர்.அவரது கைகளின் வலிமை அந்த வயதில் எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. என்னை முதலில் அவர் குளிப்பாட்டிய பின்னர் அவர் என்னை தூக்குவதற்காக எப்போதும் ஏங்கினேன். அவர் அருகே சென்று பார்த்துக்கொண்டு நிற்பேன். அவர் கவனிக்காவிட்டால் உடலில் மெல்ல உரசுவேன்.என்னை அவர் கவனித்தாரென்றால் சட்டென்று சிரித்துக்கொண்டே இடுப்பில் பிடித்து சட்டென்று மேலே தூக்கி இறக்குவார். எடையிழந்து பறவைபோல வானைநோக்கி பாய்ந்துசென்று மிதந்திறங்குவேன். சிரித்துக்கொண்டே ’னின்னும் னின்னும்’ என்று சிணுங்கியபடி அவர் பின்னால் செல்வேன்.என்னை அவரது பள்ளியில் சேர்த்துக்கொண்டார் போதானந்தர். கொஞ்சநாள் பூஜைகளில் கலந்துகொண்டு ‘தெய்வமே காத்துகொள்க கைவிடாதிங்கு ஞங்ஙளே’ என்ற நாராயணகுருவின் பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். அதன்பின் பூஜை நடந்து அனைவருக்கும் சுண்டலோ சர்க்கரைப்பொங்கலோ தருவார்கள்.

 

         பூஜைக்குமட்டும் சுவாமி பிரஜானந்தர் வந்து அமர்வார். சுருண்ட வெண்ணிறத்தாடி பூஜையில் வைக்கப்பட்டிருந்த பெரிய சங்கு போல அவர் முகத்தில் இருக்கும். கூந்தல் இரு தோளிலும் வெள்ளைத்துணி மாதிரித் துவண்டு கிடக்கும். மெலிந்த சின்ன உடல் கொண்ட மனிதர். மெல்லிய குரலில் பேசுவார்.பிரஜானந்தரின் அந்தக் குருகுலம் வெற்றியா தோல்வியா என்று என்னால் சொல்லமுடியவில்லை. அங்கே எப்போதும் இருபது முப்பது பிள்ளைகள் இருந்தார்கள். தினமும் நூறுபேர்வரை சாப்பிட்டார்கள். ஆனால் தொடர்ச்சியாகப் பத்துபேர்கூடக் கல்விகற்கவில்லை. பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் வந்து சண்டைபோட்டு அவர்களைக் கூட்டிச்சென்றார்கள். சிலநாட்கள் தங்கியதும் சலித்துப்போய் பிள்ளைகளே தப்பி ஓடிவிட்டு கொஞ்சநாள் கழித்து உடலெங்கும் சொறியும் அழுக்கு உடையும் காந்தும் பசியுமாக திரும்பிவந்தார்கள்.நான் அங்கே தங்க ஆரம்பித்த நான்காம்நாளே என் அம்மா வந்து என்னை இழுத்துச்சென்றுவிட்டாள். அவளுடன் நகரமெங்கும் அலைந்து திரிந்தேன். நகரம் முழுக்க ஒருகாலத்தில் எடுப்புக்கக்கூஸுக்காக இரண்டாள் செல்லும் அகலத்தில் சிறிய சந்துப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆற்றிலோ ஓடையிலோ ஆரம்பிக்கும் அந்த பாதை பெருவீதிகளுக்கு சமாந்தரமாக எல்லா வீடுகளுக்கும் பின்பக்கம் வழியாக ஓடி நகரையே சுற்றிவரும். எங்கள் ஆட்கள் முழுக்க அதன்வழியாகவே நடமாடுவார்கள். அங்கேதான் எங்களுக்கான உணவு முழுக்க கிடைத்தன.

 

           குப்பைகள், பெருச்சாளிகள், ஓட்டலின் எச்சில் இலைக்குவியல்கள்..அந்தக்காலத்தில் திருவிதாங்கூரின் மொத்த நாயாடிகளும் திருவனந்தபுரத்திற்கே வந்துவிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. உண்மையில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது,நாயாடிகளுக்கேகூட. நாகம் அய்யா எங்கள் சாதியை கண்ணால் பார்த்து தீட்டுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. பிறரது மனப்பதிவுகளையே அவர் எழுதியிருக்கிறார். ஆனால் எங்களைப்பற்றி மிக விரிவான குறிப்பு அவருடையதே.எட்கார் தர்ஸ்டன் கூட சில வரிகளே எழுதியிருக்கிறார். 1940ல் மேலும் விரிவான மானுவலை தயாரித்த ’சதஸ்யதிலகன்’ திவான் வேலுப்பிள்ளை நாகம் அய்யாவின் அதே வரிகளை அப்படியே சேர்த்துக்கொண்டார். எண்ணிக்கையைமட்டும் எழுபதாயிரம் என்று கூட்டிக்கொண்டார்.ஆனால் அப்போது எங்கள் சாதியில் பெரும்பாலானவர்கள் செத்து அழிந்திருக்கக்கூடும். அக்காலகட்டத்தில் காலராவால் திருவிதாங்கூரில் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். ஊரும் அடையாளமும் அரசுக்கு வரிக்கணக்கும் உள்ள மக்களே செத்து அனாதைப்பிணங்களாக நாறியபோது நாயாடிகளை யார் கவனித்திருக்கப் போகிறார்கள். மண்ணுக்கடியிலேயே செத்து அங்கேயே மட்கும் பெருச்சாளிகளைப்போல இறந்து மறைந்திருப்பார்கள்.எஞ்சியவர்கள் திருவனந்தபுரம் கொல்லம் போன்ற பெருநகரங்களுக்கு குடியேறியிருந்திருக்க வேண்டும். அங்கே அவர்கள் ஏற்கனவே தெருவில் வாழ்ந்த பல்வேறு குறவச்சாதிகளில் ஒன்றானார்கள்.

 

        பாதிக்குமேல் குடியேறிகளால் ஆன பெருநகர்களில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. பகல்ஒளியில் பிச்சை எடுக்க வாய்ப்புகிடைத்ததை பெரும் சமூகப்பாய்ச்சலாக எங்கள் முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். நகரம் குப்பைகளை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. அவர்கள் அதில் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்.சிலநாட்கள் கழித்து சோறு நினைவு வந்து நான் அம்மாவிடமிருந்து தப்பி மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். போதானந்தர் மீண்டும் என்னைக் கரமனை ஆற்றில் தூக்கிப்போட்டு குளிப்பாட்டி இலைபோட்டுச் சோறுபரிமாறினார். கொஞ்சநாளில் அவருக்கு என்னிடம் ஒரு தனிப்பிரியம் உருவாகியது. நான் பாடலை விரைவிலேயே மனப்பாடம் செய்துவிட்டேன் என்பதே அதற்கான முதல் காரணம். எனக்கு ஆசிரமத்தில் தர்மபாலன் என்று பெயரிட்டார்கள். பிரார்த்தனைக்காக பிரஜானந்தர் வந்து அமர்ந்ததும் போதானந்தர் ’தர்மா பாடுடே’ என்று சொல்வார். நான் எழுந்து சென்று கைகளைக் கூப்பிக்கொண்டு உரக்க ‘தெய்வமே காத்துகொள்க’ என்று பாடுவேன்.தொடர்ச்சியாக என் அம்மா என்னை வந்து கூட்டிச்செல்ல ஆரம்பித்தபோது போதானந்தர் தடுத்தார். அம்மா கைகளைக் கூப்பியபடி ‘சாமி புள்ளேயே தா சாமி’ என்று கதறியபடி ஆசிரமத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்துவிடுவாள். அவளிடம் என்ன சொன்னாலும் புரியாது. ’புள்ளேயே தா சாமீ’ என்று அழுதுகொண்டிருப்பாள். அவளுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்து பெரும்பாலும் இறந்துவிட்டன.

 

        நான் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்த என் அக்கா கூட ஒரு ஆடிமாத மழையில் கடைத்திண்ணை ஒன்றில் செத்துகிடந்திருக்கிறாள். ஆகவே என்னை விட்டுவிட அம்மாவுக்கு மனமில்லை.அம்மாவுக்குத் தெரியாமல் என்னை நாராயணகுருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்திற்கும் அங்கிருந்து பாலக்காடு உறைவிடப்பள்ளிக்கும் அனுப்பினார்கள். சில வருடங்களில் நான் முழுமையாக மாறினேன். திடமான கைகால்களும் சுருண்டமுடியும் பெரிய பற்களும் கொண்டவனாக ஆனேன். என்னுடைய பசி முழுக்க படிப்பில் ஊன்றியது. பேசுவது அனேகமாக இல்லாமலாகியது. எனக்கு ‘மூங்கை’ என்றே பள்ளியில் பெயர் இருந்தது. அதாவது கூகை. விழித்துப்பார்த்துக்கொண்டு அசையாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் கரிய உருவம்.போதானந்தர் கோழிக்கோடு கடற்கரையில் காலராவில் சிக்கியவர்களுக்குச் சேவைசெய்யச்சென்ற இடத்தில் மரணமடைந்தார். பிரஜானந்தரின் பள்ளி அரசாங்கத்தின் பழங்குடிநலத்துறையால் ஏற்றெடுக்கப்பட்டது. பிரஜானந்தரின் டிரஸ்டில் இருந்து மாதம்தோறும் சிறிய பணம் வந்தது. என்னுடைய சாதிக்குரிய உதவித்தொகையும் இலவசங்களும் இருந்தன. நான் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பழங்குடி விடுதியில் இருந்த அத்தனை பேரும் எதையாவது படித்துக்கொண்டுதான் இருந்தார்கள். படிப்பை நிறுத்திவிட்டால் வேலை தேடவேண்டியிருக்கும். படிக்கும்போது சோறு போடுவதாக இருந்த சாதி முத்திரை வேலைதேடும்போது தடையாக ஆகிவிடும். கிடைத்தால் அரசு வேலை, இல்லையேல் வேலையே இல்லை.என் விடுதியிலும்கூட நான் தனியனாகவே இருந்தேன்.

 

        பழங்குடிகளுக்கான விடுதியில் இருந்த ஒரே நாயாடி நான்தான். என்னுடன் அறையைப் பங்கிட்டுக்கொள்ளக்கூட எவருமில்லை. நான் மட்டும் கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் எழுந்து ரயில்பாதையோரமாக சென்று மீள்வேன். சிறுநீர் கழிப்பதற்குக் கூட அருகே உள்ள பொட்டலுக்குச் செல்வேன். என்னிடம் பேசும் எவரிடமும் இயல்பாகவே அதட்டல் தொனி உருவாகிவிடும். எந்த அதட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள நானும் பழகிவிட்டிருந்தேன்.அந்நாட்களில் நான் என் அம்மாவை பார்த்ததே இல்லை. அவளைப்பற்றி நினைத்ததும் இல்லை. என்னை ஒரு எலிபோலவே உணர்ந்த நாட்கள் அவை. பதுங்கி ஒதுங்கி உயிர்வாழக் கொஞ்சம் இடத்தை தேடிக்கொண்டே இருக்கும் ஜீவன். ஓடும்போதுகூட பதுங்கிக்கொண்டே ஓடக்கூடியது. உடலே பதுங்கிக்கொள்வதற்காக கூன்முதுகுடன் படைக்கப்பட்டது. எப்படியாவது எவர் கண்ணிலும் கவனத்திலும் விழாமல் இருந்துகொண்டிருப்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்ததும் என்னை பிரஜானந்தர் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நான் திருவனந்தபுரம் சென்றேன். அவரது ஆசிரமத்தில் அதிக ஆட்கள் இல்லை.

 

      ஓரிரு வெள்ளையர் மட்டுமே கண்ணில் பட்டனர். வயதாகி முதிர்ந்த பிரஜானந்தரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பார்த்தேன். அவரை ஒரு வெள்ளை இளைஞன் தன் பெரிய கைகளால் பற்றிக் கிட்டத்தட்டத் தூக்கிக்கொண்டுவந்து நாற்காலியில் அமரச்செய்தான். அவரது தலை நடுங்கிக்கொண்டிருந்தது. முடி நன்றாகவே உதிர்ந்து வழுக்கை நிறைய மச்சங்களுடன் இருந்தது. கூன் காரணமாக முகம் முன்னால் உந்தி வந்து நின்றது. மூக்கு வாய்நோக்கி மடிந்து உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு மடிப்பு போல தெரிந்தது.‘நல்லா வளர்ந்து போயாச்சு..இல்லியா?’ என்றார். நான் பேசுவது தமிழ் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. உண்மையில் என்ன காரணத்தாலோ நானும் என்னை முடிந்தவரை மலையாளத்தில் இருந்து விலக்கிக்கொண்டிருந்தேன். என் நிறமும் தோற்றமும் தமிழ்நாட்டுடன் என்னை அடையாளம் காணச்செய்திருக்கலாம். அவரது கைகளும் தலையும் வேகமாக ஆடிக்கொண்டே இருந்தன. அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் என்னிடம் ‘எம்.ஏ முடிவுகள் எப்போது வரும்?’ என்றார். நான் ‘ஜூனில்’ என்றேன். ‘என்ன செய்யப்போகிறாய்?’ நான் பேசாமல் நின்றேன். ‘நீ சிவில் சர்வீஸுக்கு போ’ என்றார். அவர் கையை தூக்கியபோது கிட்டத்தட்ட வலிப்புவந்தது போல கை ஆடியது.

 

      நான் பேசமுற்பட்டாலும் வார்த்தை வரவில்லை. ‘என்ன பேச்சே இல்லை?’ நான் ‘மன்னிக்க வேண்டும் குரு’ என்றேன்‘ஆங்கிலம் உன் வாயில் வரவில்லை. அதுதான் உளறுகிறாய். ஆங்கிலம் பேசினால்தான் நீ மனிதன். சரளமாக ஆங்கிலம் பேசாவிட்டால் என்ன படித்தாலும் நீ வெறும் நாயாடிதான். நாராயண குருதேவன் எல்லாரிடமும் ஆங்கிலம் படிக்கச்சொன்னது சும்மா அல்ல. ஆங்கிலம் படி…முடிந்தால் நாற்பது வயதுக்குமேல் சம்ஸ்கிருதமும் படி…’ நான் சரி என்றேன். பேச்சின் அயற்சியால் அவரது கைகள் நன்றாக ஆடவே அவற்றைத் தொடைகளுக்கு அடியில் வைத்துக்கொண்டார். இப்போது இரு முழங்கைகளும் வெடவெடத்தன. ‘சிவில் சர்வீஸ் எழுது. சும்மா ஜெயித்தால் போதாது. ரேங்க் வேண்டும். எவனும் உன் விடைத்தாளைக் குனிந்து பார்க்கக்கூடாது’ ‘ஆகட்டும் குருதேவா’ என்றேன் ‘ஜேம்ஸிடம் சொல்லியிருக்கிறேன். டிரஸ்டில் இருந்து உனக்கு நான்குவருடங்களுக்கு பணம் கொடுப்பார்கள்’நான் திடமாக ‘நான்கு வருடங்கள் தேவைப்படாது. இரண்டு வருடம் போதும்’ என்றேன். அவர் நான் சொல்வதை புரிந்துகொண்டு மெல்ல புன்னகை செய்தார். ஆமாம் என்பது போல தலையாட்டி, அருகே வரும்படிக் கையைக் காட்டினார். நான் அருகே சென்றதும் என்னைத் தோளில் தொட்டு மெல்ல கழுத்தில் கைசுழற்றி அணைத்துக்கொண்டார். அவரது கரம் என் தோளில் ஒரு முதிய பறவையின் இறகுதிர்ந்த சிறகு போல அதிர்ந்தது. நான் முழந்தாளிட்டு அவரது மடியில் என் தலையை வைத்துக்கொண்டேன்.

 

         என் தலையை மெல்ல வருடி ஆடும்குரலில் ‘தைரியம் வேண்டும்’ என்றார். ‘நூறுதலைமுறையாக ஓடியாகிவிட்டது. இனிமேல் அமர வேண்டும்’ நான் விம்மிவிட்டேன். என் கண்களில் இருந்து அவரது மடியில் காவிவேட்டியில் கண்ணீர் கொட்டியதுஅவரது கைகள் என் காதுகளை மெல்ல பிடித்து விட்டன. என் கன்னங்களை வருடின. ‘அம்மாவைக் கைவிடாதே. அம்மாவை வைத்துக்கொள். அம்மாவுக்கு இதுவரை நாம் செய்தது பெரிய பாவம். அவள் ஒன்றுமறியாத தூய மிருகம் போல. மிருகங்களின் துயரத்தை ஆற்றுவிக்கவே முடியாது. ஆகவே அது அடியில்லாத ஆழம் கொண்டது. அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ என்றார். நான் பெருமூச்சு விட்டு கண்களை துடைத்தேன். ‘நான் சீக்கிரமே குருபாதம் சேர்வேன். நீ வரவேண்டியதில்லை’ நான் நிமிர்ந்து அவரைப்பார்த்தேன். மெழுகுபோல உணர்ச்சிகளே இல்லாமலிருந்தது முகம். நான் ‘சரி’ என்றேன்.அன்று திருவனந்தபுரத்தில் அம்மாவை தேடிக்கண்டுபிடித்தாலென்ன என்று எண்ணிய்படி இரவு முழுக்க நகரில் அலைந்தேன். அவளைத் தேடிப்பிடிப்பது மிக எளிமையானது. ஏதாவது ஒருநாயாடியிடம் கேட்டால் போதும். ஆனால் கண்டுபிடித்து என்ன செய்வதென்று தோன்றியது. மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தமையால் என்னால் எங்கும் நிற்கவோ அமர்ந்திருக்கவோ முடியவில்லை. விடிய விடிய தெருக்கள் தோறும் சந்துகள் தோறும் நடந்தேன். இருளில் மெல்லிய அசைவாகத்தெரிந்த ஒவ்வொரு உடலும் என்னை விதிர்க்கச் செய்தன.

 

     குழந்தையுடன் ஒருத்தி ஆழமான விரிந்த சாக்கடைக்குள் ஈரமில்லாத இடத்தில் படுத்திருந்தாள். குழந்தை நிமிர்ந்து மின்னும் சிறு கண்களால் என்னைப்பார்த்தது. என்னை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.விடிவதற்குள்ளாகவே நான் பாலக்காடு சென்றேன். அங்கிருந்து சென்னை. தேர்வு முடிந்து காத்திருந்த நாட்களில் மீண்டும் மீண்டும் சுவாமி சொன்ன சொற்கள் மீது சென்று மோதிக்கொண்டிருந்தது மனம். அம்மாவுக்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்ய முடியும்? நாட்கணக்காக வருடக்கணக்காக ஆறவேஆறாத துக்கத்துடன் என்னை தேடியிருப்பாள். ஆசிரமவாசலிலேயே கண்ணீருடன் பழிகிடந்திருப்பாள். எனக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு எப்படி புரியவைப்பதென்றறியாமல் அவர்கள் திகைத்திருப்பார்கள். ஆனால் நான் என்ன செய்யமுடியும்?சுவாமி சாதாரணமாக எதையும் சொல்லவில்லை. வயதாகி உடல்குறுகியதுபோலவே அவரது சொற்களும் குறுகியிருந்தன. ஒவ்வொன்றையும் அவர் நெடுநாட்களாகச் சொல்ல எண்ணியதுபோலிருந்தது. எல்லா வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன். நான் நேர்முகத்திற்கு செல்லவேண்டிய நாளில் சுவாமி திருவனந்தபுரத்தில் சமாதியான செய்தி வந்தது. அவர் என்னை வரவேண்டாம் என்று சொன்னதற்குப் பொருள் புரிந்து திடுக்கிட்டேன். அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மேற்கொண்டு என் வாழ்நாளில் அர்த்தம் காணப்போகிறேன் என நினைத்தேன்.மதுரையில் பதவி ஏற்ற மறு வாரமே திருவனந்தபுரம் வந்தேன்.

 

     காவல்துறையைக்கொண்டு ஒரேநாளில் என் அம்மாவைத் தேடிப்பிடித்தேன். போலீஸ் ஜீப்பில் பின்பக்கம் ஒப்பாரி வைத்து அழுதபடி வந்த பங்கரையான கிழவிதான் என் அம்மா என்று கண்ட முதல்கணம் சட்டென்று அவளைதிருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை வெல்ல என் முழு ஆன்ம சக்தியும் தேவைப்பட்டது. செதிலடர்ந்த சருமமும் மெலிந்து ஒட்டிய உடலும் கந்தலாடையுமாக கைகூப்பி அழுதபடி அமர்ந்திருந்தவளை லத்தியால் ஓங்கி அடித்து ‘எறங்ஙெடீ சவமே’ என்று அதட்டினான் கான்ஸ்டபிள். அவள் ‘வேண்டா தம்றா …ஒன்னும் செய்யல்ல தம்றா…வேண்டா தம்றா..’என்று அலறி இருகைகளாலும் ஜீப்பின் கம்பியை பிடித்துக்கொண்டாள்.‘வலிச்சு தாழே இடுடே’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘இதாக்குமா சார் அக்யூஸ்டு? சாருக்கு கண்டாலறியாமல்லோ?’ நான் தலையை அசைத்தேன். அவளை இரு கான்ஸ்டபிள்கள் இழுத்துக்கொண்டுவந்து என் விடுதியின் முன்னால் பூந்தொட்டிகளுக்கு அருகே போட்டார்கள். நோயுற்ற நாய்போல கையும் காலும் நடுங்க ‘தம்றா.. தம்றா, கொல்லாதே தம்றா’ என்று அழுதபடி கிடந்தாள். ‘நீங்க போலாம்’ என்றேன். ‘சார்..இந்த கேஸ்…’ ‘இத நான் பாத்துக்கறேன். யூ மே கோ’ என்று அனுப்பினேன். அவர்கள் சென்றபின் மெல்ல அம்மா அருகே அமர்ந்தேன்நடுங்கிக்கொண்டு பூச்செடிகள் மேல் சாய்ந்து இலைகளுக்குள் ஒளிந்துகொள்பவள் போல பதுங்கினாள். ’அம்மா இது நானாக்கும்.

 

      காப்பன்’ ‘தம்றா.. தம்றா’ என்று கைகூப்பி கண்ணீர் வழிய சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் அவள் கூப்பிய கையை தொட்டேன் . ‘அம்மா, இது நானாக்கும். நான் காப்பன். உனக்க மகன் காப்பன்..’ ‘தம்றா. பொன்னு. தம்றா’ என்று சொல்லி உடலை முடிந்தவரை சுருட்டிக்கொண்டாள். நான் பெருமூச்சுடன் எழுந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.அவளுடைய மகனாக நான் இருந்த நாட்களை நினைத்துக்கொண்டேன். எனக்குப் புரிந்த மொழி ஒன்றுதான். நான் உள்ளே சென்று வேலைக்காரனிடம் அம்மாவுக்கு இலைபோட்டு சோறு பரிமாறச்சொன்னேன். அவன் பெரிய இலையைக்கொண்டு அவள் முன் விரித்தபோது அவள் அழுகை நின்றது. திகைப்புடன் பார்த்தாள். வேலைக்காரன் கொண்டுவந்த சோற்றை அவள் முன் நானே கொட்டினேன். குழம்பு ஊற்றுவதற்குள் அவளே அள்ளி அள்ளி உண்ண ஆரம்பித்தாள். நடுவே இலையுடன் அள்ளியபடி எழப்போனவளை ’இரு..சாப்பிடு…சாப்பிடு’ என்று அமரச்செய்தேன்.அவள் சாப்பிட்டு முடித்ததும் மெல்ல அமைதியானாள். நான் அவளை மெல்ல தொட்டு ‘அம்மா நான் காப்பன்’ என்றேன். சரி என்பது போல தலையாட்டி அங்கிருந்து வெளியே செல்லும் வழியைப் பார்த்தாள். ’அம்மா நான் காப்பன்…நான் காப்பன்’ அவள் கையை எடுத்து என் முகத்தில் வைத்தேன். என் முகத்தை அவள் கையால் வருடச்செய்தேன். கையை உருவிக்கொண்டு தலையைத் திருப்பியவள் சட்டென்று அதிர்ந்து என் முகத்தை மீண்டும் தொட்டாள். ஆவேசத்துடன் என் முகத்தை அவளுடைய நகம் சுருண்ட கரங்களால் வருடினாள். என் காதையும் மூக்கையும் பிடித்துப்பார்த்தாள்.

 

         அலறல் போல ‘லே காப்பா’ என்றாள். சட்டென்று எம்பி என்னை ஆவேசமாக இறுக அணைத்து என் தலையை அவளுடைய மார்புமேல் அழுத்திக்கொண்டு என் பின்னந்தலையில் மாறி மாறி அடித்து ‘காப்பா! காப்பா!’ என்று கத்தினாள்.அவள் என்னைத் தாக்குவதாக நினைத்து ஓடிவந்த வேலைக்காரன் நான் அழுவதைக்கண்டு நின்றுவிட்டான். நான் அவனைப் போ என்று சைகை காட்டினேன். அவள் என் கைகளைப் பிடித்துத்தன் முகத்தில் அறைந்தாள். என் தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள். சட்டென்று மீண்டும் வெறி எழுந்து என்னை கைகளாலும் கால்களாலும் அள்ளி அணைத்து இறுக்கிக்கொண்டாள். கழுத்து இறுக்கப்பட்ட ஆடுபோன்ற ஓர் ஒலியில் அழுதாள். என் கன்னத்தைக் கடித்து இறுக்கினாள். எச்சிலும் கண்ணீரும் கலந்த முகத்தால் என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். நான் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு அவளருகே அப்படியே வீழ்ந்துவிட்டேன். ஒரு மகத்தான வனமிருகத்தால் மிச்சமின்றி உண்ணப்பட்டவன் போல உணர்ந்தேன்.வெளியே பேச்சுக்குரல் கேட்டது. சுபாதான். நான் எழுந்து சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டேன். டாக்டர் இந்திராவும் சுபாவும் பேசியபடியே உள்ளே வந்தார்கள். என்னைப்பார்த்ததும் டாக்டர் சிரித்து ‘நௌ ஐ காட் இட். அப்பவே எனக்கு சந்தேகம்தான்….’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அம்மாவைச் சோதனை போடும்போது நான் சுபாவைப் பார்த்தேன். அவள் சாதாரணமாக நின்றாள். டாக்டர் ’ஒண்ணுமே இம்ப்ரூவ்மெண்ட் இல்லை. பாப்போம்’ என்றபின் சுபாவின் கையைத் தொட்டுவிட்டு வெளியே சென்றாள்நான் சுபாவிடம் ’மீட்டிங் இல்லியா?’ என்றேன். ‘மினிஸ்டர் வரலை’ என்று சுருக்கமாகச் சொல்லி ‘நீங்க முழு நேரம் இங்கியே இருக்க வேண்டியதில்லை…அதுவேற ஏதாவது காசிப் ஆயிடப்போறது. பேசாம ஆபீஸ் போங்கோ’ என்றாள்.

 

         நான் தலையசைத்தேன். ‘நான் சொல்றதைக் கேளுங்க. இங்க உக்காந்து என்ன பண்ண போறீங்க? உங்க ஸ்டேடஸிலே ஒருத்தர் இங்க இருக்கிறது அவாளுக்கும் சங்கடம்.. ‘ ‘சரி’ என்றேன். அவள் மெல்ல ‘டோண்ட் பி ரிடிகுலஸ்…’ என்றாள். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.சுபா அம்மாவையே பார்த்தாள். ‘பூவர் லேடி. ரியலி ஐ காண்ட் அண்டர்ஸ்டேண்ட் ஹர்… ரியலி.. ஆல் த ஃபஸ் ஷி மேட்… மை காட்’ தோளைக்குலுக்கியபின் ‘நௌ ஐ யம் லீவிங். இப்ப முனிசிப்பல் ஆஃபீஸிலே ஒரு மீட்டிங் இருக்கு. ஸீ யூ’ என்றாள். அவளைத் தொடர்ந்து நானும் சென்று காரில் ஏற்றி விட்டுவிட்டு என் காரில் ஏறிக்கொண்டேன். ஆபீஸ் போகத்தான் நினைத்தேன். ஆனால் ஆபீஸை தாண்டி பார்வதிபுரம் சென்று அப்படியே வயல்களும் மலையடுக்குகளும் சூழந்த சாலையில் காரைச் செலுத்தினேன்.அப்போது தோன்றியது திருவனந்தபுரம் சென்றால் என்ன என்று. அங்கே ஒன்றும் இல்லை. பிரஜானந்தரின் சமாதி அவரது குடும்ப மயானத்தில் இருக்கிறது. அங்கே ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். கவனிப்பாரில்லாமல் காட்டுக்கொடிகள் படர்ந்த ஒரு செங்கல் பீடம். அதன் மேல் எண்ணைக்கறை கறுத்த ஒரு சிறு மண் விளக்கு. சுற்றிலும் மரவள்ளியும் வாழையும் அடர்ந்திருந்தன. அவர் வாழ்ந்ததற்கான தடையங்களே இல்லாமலாகிவிட்டது. ஒருவேளை என்னைப்போன்ற சிலர் நினைக்கக்கூடும்.காரை குமாரகோயில் வளைவில் செலுத்தி கோயில்வரைச் சென்றேன். கோயிலுக்குச் செல்லாமல் குளக்கரைக்குச் சென்று படிக்கட்டில் அமர்ந்துகொண்டேன். நீலச்சிற்றலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது உதிரி உதிரி எண்ணங்களாக மனம் ஓடிக்கொண்டிருந்தது. சிகரெட் தேடினேன், இல்லை.

 

         காருக்கு எழுந்து செல்லவும் தோன்றவில்லை. அம்மாவின் முகங்கள் நினைவில் தன்னிச்சையாக மாறிக்கொண்டிருந்தன. வேலைகிடைத்துத் திருவனந்தபுரம் சென்று முதல்முறையாக அம்மாவைப் பார்க்கும் வரை என் மனதில் இருந்த முகம் ஒன்று. அது வேறு வேறு முகங்களுடன் கலந்து தன்னிச்சையாகத் திரண்டுகொண்டே சென்றது. ஒரு மூர்க்கமான பெரிய தாய்ப்பன்றி போலத்தான் அவளை நினைத்திருந்தேன்.அம்மாவை நேரில் பார்த்ததும் நான் கண்டது முற்றிலும் வேறு ஒருவரை. ஆனால் அந்த அம்மாவைக் கண்டகணமே அதுதான் அம்மா என்று என் அகம் புரிந்துகொண்டது. என்னை அவளும் அப்படித்தான் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டாள் போல. அதிர்ச்சியும் பரபரப்பும் தாளாமல் நிலைகொள்ளாமல் தத்தளித்தாள். ஏதெதோ புலம்பியவள் சட்டென்று கூச்சலிட ஆரம்பித்து அப்படியே மூர்ச்சையாகிவிட்டாள். பிராந்தியை குடிக்கச்செய்து தூங்க வைத்தேன். வேலைக்காரனை அனுப்பி புதியசேலை வாங்கி வரச்சொன்னேன். காலையில் அவள் எழுந்ததும் அவளை புதிய ஒரு பெண்ணாக ஆக்கி என்னுடன் கூட்டிச்செல்ல நினைத்தேன். அன்றிரவு முழுக்க நான் உருவாக்கிய பகற்கனவுகளை நினைத்தால் எப்போதும் என் உடம்பு கூசிக்கொள்ளும்.அம்மா அந்த புடவையை உடுக்க பிடிவாதமாக மறுத்தாள். மாறாக நான் என் சட்டையை கழற்றிவிட்டு அவளுடன் வரவேண்டும் என்று சொன்னாள். ‘நாயாடிக்கு எந்தரிடே தம்ப்றான் களசம்? ஊரி இடுடே..வேண்டாடே.. ஊருடே…டே மக்கா’ என்று என் சட்டையை பிடித்து கிழிக்க வந்தாள். தன் குட்டிமேல் அன்னியமான ஒரு பொருள் ஒட்டியிருக்கக் கண்ட தாய்ப்பன்றி போல என்னை என் ஆடைகளில் இருந்து பிய்த்து மீட்க முயன்றாள். நான் அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. சொற்களை அவள் உள்வாங்கும் நிலையில் இல்லை. அவளுக்குத் திரும்பக்கிடைத்த குழந்தையுடன் மீண்டும் திருவனந்தபுரம் குப்பைமேடுகளுக்கு திரும்பிச்செல்ல நினைத்தாள்.

 

           நான் பேசிக்கொண்டே சென்று நாற்காலியில் அமர்ந்ததும் பீதியுடன் பின்னால் ஓடி வெளியே சென்று எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிவந்து ’தம்பறான் கசேரிலே நீ இருப்பாடே? அய்யோ அய்யோ’ என்று பதறினாள். ’எளிடே..எளிடே மக்களே…கொந்நூடுவாருடே’ என்று கண்ணீருடன் கைகளால் மார்பில் அறைந்துகொண்டு தவித்தாள். மிகப்பெரிய தவறொன்றை நான் செய்துவிட்டது போல நினைக்கிறாள் என்று புரிந்துகொண்டேன். இருபது வருடங்களை மானசீகமாக தாண்டிப் பின்னால் சென்று அவளை புரிந்துகொள்ள முயன்றேன். சாக்கடைக்கு வெளியே வந்தாலே கல்லெறி கிடைக்கும் நாயாடிக்கு ஒரு நாற்காலி என்ன அர்த்தத்தை அளித்திருக்கும்? அவனை அடித்து உதைத்து அங்கே தள்ளும் அனைத்துக்கும் அது அடையாளம். குருதிவெறிகொண்ட ஒரு கொலைமிருகம் அது.அன்று அம்மாவை நன்றாகக் குடிக்கச்செய்து நினைவற்ற நிலையில் உடைமாற்றச்செய்து மதுரைக்குக் கொண்டு வந்தேன். என்னுடன் பன்னிரண்டுநாட்கள்தான் இருந்தாள். கூண்டிலடைபட்ட காட்டுமிருகம்போல அலைமோதினாள். அவளை வெளியே விடக்கூடாதென்று சொல்லி கேட்கதவுகளை பூட்டிவிட்டு காவலுக்கும் சொல்லிவிட்டு ஆபீஸ் சென்றேன். ஆனாலும் இரண்டுமுறை தப்பி ஓடினாள். போலீஸை அனுப்பி தெருவிலிருந்து அவளைப் பிடித்துவந்தேன். அவளால் வீட்டுக்குள் தங்க முடியவில்லை. வீட்டில் சோறு தவிர எதிலும் அவளுக்கு ஆர்வமிருக்கவில்லை.என்னைப்பார்க்காதபோது என் பெயர் சொல்லி கூச்சலிட்டபடி சுற்றிவந்தாள்.

 

         மூடிய கதவுகளைப் படபடவென்று தட்டின் ஓசையிட்டாள். என்னைப் பார்த்ததும் சட்டையைக் கழற்றிவிட்டு அவளுடன் வரும்படிச் சொல்லிக் கெஞ்சினாள். நாற்காலியில் அமரவேண்டாம் என்று மன்றாடினாள். நான் நாற்காலியில் அமர்வதைக்கண்டால் அவள் உடல் ஜன்னி கண்டதுபோல அதிர ஆரம்பிக்கும். என்னுடைய சட்டை அணிந்த தோற்றம் அவளை ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தியது. என்னைக் கண்டதும் பயந்து சுவர்மூலையில் பதுங்குவாள். நான் சென்று அவளைத் தொட்டுப்பேசும்வரை அந்த பதற்றம் நீடிக்கும். தொடுகையில் என்னைச் சின்னக்குழந்தையாகத் தொட்ட்ட உணர்ச்சியை மீண்டும் அடைவாளோ என்னவோ ’காப்பா, காப்பா, மக்களே களசம் வேண்டா… கசேர வேண்டா மக்களே’ என்று கூச்சலிட்டு என் சட்டையை பிடித்து இழுத்து கிழிக்க ஆரம்பிப்பாள்.பன்னிரண்டாம்நாள் அவள் மூன்றாம் முறையாகக் காணாமலாகி இரண்டுநாட்களாகியும் கிடைக்காதபோது நான் உள்ளூர ஆறுதல் கொண்டேன். அவளை என்னசெய்வதென்றே தெரியவில்லை. எவரிடம் கேட்டாலும் அவளை ஓர் அறையில் அடைக்கலாம் அல்லது ஏதாவது விடுதியில் சேர்க்கலாம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் எனக்கு அவள் தன் உலகில் எப்படி வாழ்வாள் என்று தெரியும். குப்பையை உண்டு தெருக்களில் தூங்கி வாழும் வாழ்க்கையில் அவளுக்கான உற்சாகங்களும் கொண்டாட்டங்களும் உண்டு. அவளுக்கு நெருக்கமானவர்கள் உண்டு. அது வேறு ஒரு சமூகம். சாக்கடையில் வாழும் பெருச்சாளிகள் போல உறவும்பகையுமாக நெய்யப்பட்ட பெரியதோர் சமூகம் அது.பலநாட்களுக்குப் பின் அவள் மீண்டும் திருவனந்தபுரம் சென்றதை உறுதிசெய்துகொண்டேன். அவள் அத்தனைதூரம் சென்றதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்களுக்கான வழிகளும் தொடர்புகளும் முற்றிலும் வேறு.

 

           நான் அவளை என் நினைவுகளில் இருந்து மெல்ல அழித்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் எனக்கான சவால்களை நான் சந்தித்துக்கொண்டிருந்தேன் அப்போது. வெறும் ஒரு வருடத்தில் என் எல்லா கற்பனைகளும் கலைந்தன. அதிகாரம் என்ற மாபெரும் இயந்திரத்தின் முக்கியமே இல்லாத ஒரு சிறு உறுப்பாக என்னை மொத்த இயந்திரமும் சேர்த்து அழுத்தி உருமாற்றி அமரச்செய்தது.அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும் தன்னால் கையாளப்படுவதாக உணரப்பட்டாலும்கூட அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான். உங்களால் அதிகாரம்செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல்கொண்ட கட்டாயம் இருக்கவேண்டும். ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல்திட்டத்துடன் சரியாக இணைந்துகொள்வதன்மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கைவருகிறது. தனித்துச்செல்லும்தோறும் அதிகாரம் இல்லாமலாகிறதுநிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காகத் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.

 

        மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல முகமும்கூட பிறரைப்போல ஆகிவிடுகிறது.ஆனால் நான் அந்த கூட்டு அதிகாரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. எனக்கிடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்யமுடியும் என்றும் ஒரு குமாஸ்தாவைக்கூட என்னால் ஏவமுடியாதென்றும் கண்டுகொண்டேன். எனக்கு மேலும் எனக்கு கீழும் இருந்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் என்னை வெளியே தள்ளியது. நான் சொல்லும் எந்தச் சொற்களும் அவர்களின் காதுகளில் விழவில்லை. சிலசமயம் நான் பொறுமையிழந்து வெறிகொண்டவனாக கத்தினால்கூட அந்த கண்ணாடித்திரைக்கு அப்பால் அவர்கள் மெல்லிய புன்னகையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நகர் நடுவே கூண்டில் கிடக்கும் பெயர் தெரியாத வனமிருகமாக ஆனேன்.சினம்கொண்டு எதிர்க்கும்தோறும் அது என் இயல்பான பண்பின்மையாகக் கண்டு மன்னிக்கப்பட்டது. போராடும்தோறும் அது என் அத்துமீறும் பேராசையாக கண்டு விலக்கப்பட்டது. என் நிலையை நான் அங்கீகரித்துக்கொண்டு பேசாமலிருந்தால் என் குலத்திற்கே உரிய இயலாமையாக விளக்கப்பட்டு அனுதாபத்துடன் அணுகப்பட்டது. என்னுடைய தன்னிரக்கமும் தனிமையும் உளச்சிக்கல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கணமும் நான் முட்டிமோதி என் சதைகளை பிய்த்துக்கொண்ட அந்த கூண்டு நான் எப்படியே எம்பிப்பிடித்து அமர்ந்துவிட்ட வானத்து உப்பரிகையாகச் சொல்லப்பட்டது.நான் சுபாவை திருமணம் செய்துகொண்டதுகூட அந்த முட்டிமோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம். வெள்ளத்தில் எருமையைப்பற்றிக்கொண்டு ஆற்றைக்கடப்பதுபோல. அவள் என்னை அவளுடைய உலகத்திற்குள் இட்டுச்செல்வாள் என்று எண்ணினேன். அவளை நான் அடைந்தது அவளுடைய உலகம் மீதான ஒரு வெற்றியாக கருதப்படுமென நம்பினேன்.

 

            மாலைநேரத்துக் கொண்டாட்டங்கள், தோட்டத்து விருந்துகள், திருமணங்கள், பிறந்தநாட்கள்…சிரிப்புகள், உபச்சாரங்கள், செல்லத்தழுவல்கள், உசாவல்கள்…ஆனால் கருணை என்ற ஈவிரக்கமற்ற கொலைக்கருவியால் நான் எப்போதும் தோற்கடிக்கப்பட்டேன். அனுதாபத்துடன் என்னை பிரித்து எனக்குரிய இடத்தில் அமரவைப்பார்கள். சங்கடத்துடன் எழுந்தால் மேலும் கருணையுடன் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் ஏன் என்னைத் திருமணம் செய்துகொண்டாள் என்று நான் அப்போது யோசிக்கவில்லை. என்னுடைய ஆண்மையின் சான்றிதழாக, உலகம் அங்கீகரிக்காவிட்டாலும் என்னுள் இருக்கும் காதலனின் வெற்றியாக அப்போது அதை எடுத்துக்கொண்டேன். நான் என் வாழ்நாளில் பெருமிதத்தை உணர்ந்த ஒன்றரை மாதக்காலம் அது. அந்த மூடத்தனம் இல்லாமலிருந்தால் அந்த அற்ப மகிழ்ச்சியையும் இழந்திருப்பேன்.அவளுக்கு முன்னால்செல்லவேண்டியிருந்தது. கைக்குச்சிக்கிய தெப்பம் நான். ஒரு எளிய கடைநிலை செய்திதொடர்பு அதிகாரியாக இருந்த அவள் இன்று அடைந்துள்ள அத்தனை முக்கியத்துவமும் என்னுடைய மூன்றெழுத்து அவளுக்கு அளித்தவை. அவள் செல்லும் தொலைவு இன்னும் அதிகம். அந்த கணக்குக்கு மேல் அவளே போர்த்திக்கொண்ட முற்போக்குப் பாவனை. பரந்த மனம்கொண்ட நவீன யுகத்துப்பெண். இனி ஒருபோதும் அவளே அந்த போர்வையை விலக்கி அவளைப்பார்க்கப்போவதில்லை.

 

         அதிகாரத்திற்கான தார்மீகப்பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதிகாரமின்றி வாழும் நரகத்தில் நான் சென்று விழுந்தேன். நான் பணியாற்றிய ஒவ்வொரு அலுவலகத்திலும் எனக்கு கீழே ஒரு அதிகாரி இயல்பாக வந்தமைந்தார். அவர் அந்தப்பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆதிக்கசாதியினராக, அப்பகுதியின் ஆளும்கட்சிக்கோ அல்லது உயரதிகாரிகளுக்கோ வேண்டியவராக இருப்பார். சிலநாட்களிலேயே மொத்த அதிகாரமும் அவர் கைகளுக்குச் செல்லும். அவரது ஆணைகள் மட்டுமே நடக்கும். அவர் என்னிடம் ஒரு மெல்லியபணிவை, நான் அவருக்கு கட்டுப்பட்டவன் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுறுத்தும் தன்மை கொண்ட பணிவு அது, காட்டி எதற்கும் என்னுடைய அனுமதியையும் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வார்.மதுரையில் வேலைபார்க்கும்போதுதான் பிரேம் பிறந்தான். அவனுக்கு எட்டு மாதமிருக்கும்போது மீண்டும் அம்மாவை சந்தித்தேன். அம்மாவும் இன்னொரு கிழவருமாக என்னை தேடி மதுரைக்கே வந்திருந்தார்கள். அம்மா என்னை அலுவலகத்திற்கு வந்து பார்த்தாள். நான் பொதுமக்கள் சந்திப்பு என்ற பெரும் வதையில் சிக்கி அமர்ந்திருதேன். கடவுளின் சன்னிதிக்கு வருபவர்கள் போல கைகூப்பி நடுங்கி அழுதபடி மனுக்களுடன் வருபவர்கள். காலில் குப்புற விழும் கிழவிகள். கைவிடப்பட்ட பெண்களின் கூசிச்சிறுத்த மௌனம். அநீதி இழைக்கப்பட்ட எளியவர்களின் ஆங்காரமமும் வன்மமும், நிலம் பிடுங்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டு என்ன ஏதென்றே தெரியாமல் எவராலோ கூட்டி வரப்பட்டு எவரோ எழுதிக்கொடுத்த மனுக்களை கையில் பிடித்தபடி நிற்கும் பழங்குடிகளின் வெற்றிலைச் சிரிப்பு, பெரிய கண்களுடன் வேடிக்கை பார்த்து பெற்றோரின் உடைகளை பிடித்துக்கொண்டு வரும் கைக்குழந்தைகள்….வந்துகொண்டே இருப்பார்கள். என்னைச் சந்திக்கும்போதே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நம்புபவர்களைப்போல என் முன் முண்டியடிப்பார்கள்.

 

        ’ஒவ்வொருத்தாராபோங்க…நெரிக்கப்படாது ஒவ்வொருத்தரா’ என்று மாயாண்டி கத்திக்கொண்டிருப்பார். அந்த ஒவ்வொரு முகமும் என்னைப் பதறச்செய்யும். ஒருவர் கண்களைக்கூட என்னால் ஏறிட்டுப்பார்க்க முடியாது. அவர்கள் அளிக்கும் காகிதங்களைப்பார்ப்பதுபோல அவர்களைச் சந்திப்பதை தவிர்ப்பேன். ’சரி’ ’சொல்லியாச்சுல்ல’ ’சரி’ ’பாக்கிறோம்’ ’செய்றோம்’ ’செய்றோம்மா போங்க’ என்று மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வேன். அச்சொற்களைச் சொல்லும் ஒரு இயந்திரமாக என்னை உணர்வேன்அந்த மக்களுக்கு நான் எதுவுமே செய்யமுடியாதென்று அவர்களிடம் சொல்வதைப்பற்றி நான் பகற்கனவு கண்டநாட்கள் உண்டு. சொல்லி என்ன ஆகப்போகிறது என்று மீண்டும் தோன்றும். மீண்டும் மீண்டும் அடித்து ஒடுக்கப்பட்டு அள்ளிக்குவிக்கப்படும் குப்பைகள் போன்ற மனிதர்கள்.

 

        எஞ்சியிருக்கும் நம்பிக்கைதான் அவர்களை வாழச்செய்யும் உயிர்ச்சக்தி. அதை நான் ஏன் ஊதி அணைக்கவேண்டும்? ஆனால் இந்த மனுக்களை வாங்கிக்கொள்வதன் வழியாக அவர்களின் நம்பிக்கைகளை நான் வளரச்செய்து கடையில் பெரிய முறிவையல்லவா அளிக்கப்போகிறேன்? காத்திருந்து, கண்ணீருடன் நம்பிக்கிடந்து, மீண்டும் கைவிடப்பட்டு…ஆனால் அபப்டி இரக்கமேயில்லாமல் கைவிடப்படுவது அவர்களுளுக்கு பழக்கம்தானே. நூற்றாண்டுகளாக அபப்டித்தான். கெஞ்சி, மன்றாடி, பிச்சையெடுத்து, கால்களில் விழுந்து, கைகளை முத்தி, ’தம்புரானே’ ’எஜமானனே’ ’தெய்வமே’ ’உடையதே’ என்றெல்லாம் கூச்சலிட்டு, அள்ளிவீசப்படுவதை ஓடிப்பொறுக்கி, உயிர்வாழ்வதையே கேவலமான அவமதிப்பாக மாற்றிக்கொண்டு, வாழ்ந்து வாழ்ந்து தீர்த்த தலைமுறைகள் அல்லவா? அவர்களை என்னால் ஏறிட்டுப்பார்க்க முடிந்தால் நான் ஒருவேளை அங்கேயே என் சட்டையையும் பாண்டையும் கழட்டி வீசிவிட்டு கோவணத்துடன் எளிய நாயாடிக்குறவனாக தெருக்களில் இறங்கி வானத்துக்கு கீழே வெறும் மனிதனாக நின்றிருப்பேன் போல..அப்போதுதான் கூட்டத்தில் இருந்து நெரிசலிட்டு வந்த என் அம்மா ‘அது எனக்க மோன்..எனக்க மோன் காப்பன்..லே காப்பா! மக்கா, லே காப்பா!’ என்று பெரிதாகக் கூச்சலிட்டாள்.

 

        அவளுடன் வந்திருந்த இரு கிழவர்களும் சேர்ந்து, ’காப்பா காப்பா’ என்று கூச்சலிட போலீஸ்காரர் அதட்டியபடி ‘த,,, என்ன சத்தம் இங்க? வாயா மூடு த வாய மூடு…பொடதீல போட்டிருவேன்..வய மூடு நாயே’ என்று அதட்டினார். நான் ‘சண்முகம்..அவங்கள விடு’ என்றேன். அம்மா பளீரென்று ஏதோ கட்சிக்கொடியை முந்தானைபோல போட்டு நரிக்குறவர்களிடமிருந்து பெற்ற பழைய பாவாடையை அணிந்திருந்தாள். தங்கவண்ணம் பூசிய அலுமினிய மூக்குத்தியும் கம்மலும் அணிந்திருந்தாள். மூவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.அம்மா உரக்க ‘இது எனக்க மோன் காப்பன், எனக்க மோனாக்கும்…எனக்க மோன்..லே காப்பா லே மக்கா’ என்று சொல்லி என் முகத்தை அள்ளிப்பிடித்து என் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். முத்தம் என்பது மெல்ல கடிப்பதுதான். என் முகத்தில் வெற்றிலை எச்சில் வழிந்தது. மொத்தக்கூட்டமும் திகிலடித்தது போல நின்றதைக் கண்டேன்.. ‘நீ உள்ள போய் இரு…நான் வாறேன்’ என்றேன். அம்மா ‘நீ வாலே…வாலே மக்கா..’ என்று என் கையைப்பற்றி இழுத்தாள். ஒரு கிழவர் திரும்பி கூட்டத்திடம் ‘இது காப்பனாக்கும். நாயாடிக்காப்பன். எங்க ஆளு…எல்லாரும் போங்க இண்ணைக்கினி இங்க சோறு கிட்டாது…சோறு இல்ல…போங்க’ என்று கையாட்டி ஆணையிட்டார்.நான் எழுந்து அம்மாவை கரம்பிடித்து இழுத்துச்செல்ல மற்ற இருவரும் பின்னால் வந்தார்கள். ஒருவர் ‘நாங்க எங்கிட்டெல்லாம் தேடினோம்.

 

       காப்பா நீ களசமெல்லாம் போட்டிருக்கேலே, அப்பம் நல்ல சோறு தருவாகளாடே?’ என்றார். ‘லே நீ சும்மா கெட, அவன் எம்பிடு தின்னாலும் இங்க ஒண்ணும் கேக்க மாட்டாக பாத்துக்க. அவன் ஆப்பீசறாக்கும் கேட்டையா’ என்றார் இன்னொருவர். நான் ‘அம்மா நீ இங்க இரு…இப்பம் வந்திருதேன் இங்க இரு’ என்று சொல்லி முகம் கழுவிவிட்டு மற்ற அறைக்கு வந்தேன். வந்து அமர்ந்ததுமே ஒன்றைக்கவனித்தேன். மொத்தக்கூட்டத்துக்கும் உடல்மொழி மாறிவிட்டது. நான் அதிகாரவர்க்கத்தின் துண்டு அல்ல என்று அத்தனைபேருக்கும் தெரிந்ததுபோல. ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் ஒருவர்கூட என்னிடம் ஏதும் கெஞ்சவில்லை. சிலர் மட்டுமே ஏதேனும் சொன்னார்கள். வெறுமே மனுவை மட்டும் தந்துவிட்டு சென்றார்கள்.அம்மா அம்முறை இருபதுநாட்கள் என்னுடன் இருந்தார். அவர்கள் மூவருக்கும் என் பின்கட்டில் தங்க இடம் கொடுத்தேன். ஆனால் கூரைக்கு கீழே தங்க அவர்களுக்கு பழக்கமில்லை. காம்ப் ஆபீஸின் சைக்கிள் ஷெட்டிலேயே தங்கிக்கொண்டார்கள். இரவும் பகலும் உரத்தகுரலில் சண்டைபோட்டார்கள். ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டு சுற்றிலும் ஓடினார்கள்.

 

        இரவில் தோட்டமெல்லாம் மலம் கழித்தார்கள். ஒவ்வொருநாளும் சுத்தம்செய்யும் அருணாச்சலம் மெல்லிய குரலில் தனக்குள் சாபமிட்டுக்கொள்வதை நான் கவனித்தேன்.அம்மாவுக்கு சுபாவை முதல்பார்வையிலேயே கொஞ்சமும் பிடிக்கவில்லை சுபாவின் வெள்ளைநிறம் ஒரு நோய் அறிகுறிமாதிரியே அவளுக்கு தோன்றியது.அவளைப்பார்த்ததுமே அஞ்சி வீட்டுத்திண்ணையில் இருந்து இறங்கி ஓடி முற்றத்தில் நின்றுகொண்டு வாயில் கையை வைத்து பிதுங்கிய கண்களால் பார்த்தாள். சுபா ஏதோ சொன்னதும் தூ என்று காறித்துப்பினாள். ‘பாண்டன் நாயிலே லே அது பாண்டன்நாயிலே’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.சுபா அம்மாவைபபர்க்கவே அஞ்சி உள்ளே ஒதுங்கிக்கொண்டாள். அம்மா அவளைப்பார்த்தால் கையில் எது இருக்கிறதோ அதை அவளை நோக்கி வீசினாள். உடையை தூக்கி மர்ம உறுப்பைக்காட்டி வசைபாடினாள்.சுபா ‘பால், பிளீஸ் என் மேலே கொஞ்சமாவது அன்பிருந்தா இவங்கள எங்கயாவது அனுப்பிருங்க. உங்கள நம்பி வந்தேன். அதுகாக நீங்க எனக்கு செய்ற லீஸ்ட் ஹெல்ப் இதுதான்…அவங்கள என்னால தாங்கிக்கவே முடியலை பால்.

 

      ப்ளீஸ்’ என்று கதறி அழுது அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.அவள் அழுவதை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றேன். பிரசவம முடிந்து அவள் வேலைக்கு போக ஆரம்பிக்கவில்லை. ‘சொல்லுங்க பால். சும்மா எதுக்கெடுத்தாலும் இப்டியே சிலைமாதிரி நின்னா எப்டி?’ என்றாள்.‘சுபா, ப்ளீஸ். நான் பாகக்றேன். ஏதாவது பண்றேன்…மெதுவா அனுப்பிச்சிடறேன்’ என்றேன். ‘நோ..நீங்க அனுப்ப மாட்டீங்க. ஸீ அவங்கள நீங்க நம்ம வழிக்கு கொண்டுவரமுடியாது. அவங்க ஒரு வாழ்க்கைக்கு பழகிட்டாங்க…இனிமே அவங்கள நம்மால மாத்த முடியாது. அவங்க எங்கயாவது சந்தோஷமா இருந்தா போதும். அதுக்கு என்ன வேணுமானாலும் செய்வோம்…’நான் என்னிடம் பிரஜானந்தர் சொன்னதைத்தான் நினைத்துக்கோண்டிருந்தேன். அம்மாவுக்கு பெரிய அநீதி ஒன்றை நான் இழைத்துவிட்டேன், என் வாழ்நாளெல்லாம் நான் அதற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்றார். அவளுடைய ஆணையை நான் மீறலாகாது. அவளுடைய விருப்பமே அவள் ஆணை. ஆனால் அம்மா என்ன விரும்புகிறாள் என்றே தெரியவில்லை. என் வீட்டின் எதுவுமே அவளுக்கு தேவையிருக்கவில்லை.

 

       சோறுகூட கொஞ்சநாளில் அலுத்துவிட்டது. அதேசமயம் சுபா மீதான வெறுப்பு ஒரு வேகமாக மாறி அவளை இயக்கியது. அவளைப்போன்றவர்களின் பிரியம்போலவே வெறுப்பும் கரைகளற்றது. பின்னாளில் யோசித்துக்கொண்டேன், சுபாமேல் அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது என. எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு!அம்மா சமையலறையில் புகுந்து கிடைத்ததை அள்ளி போட்டுத் தின்றாள். வீட்டின் எந்த மூலையிலும் வெற்றிலைபோட்டு துப்பி வைத்தாள். வீட்டுக்குள்ளேயே சிறுநீர் கழித்தாள். சுபாவின் புடவைகளையும் நைட்டிகளையும் ஜாக்கெட்டையும் பிராவையும் கூட எடுத்து அணிந்துகொண்டாள். ‘எடீ எனக்க மோன் காப்பனுக்குள்ளதாக்கும்டீ..நீ போடீ நீ உனக்க வீட்டுக்கு போடி பன்ன எரப்பே’ என்று ஒவ்வொருமுறையும் சுபாவின் அறைக்கு முன்னால் வந்து நின்று கத்துவாள். சுபா இருகைகளாலும் காதுகளைப்பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அமர்ந்திருப்பாள்.ஆனால் அம்மா தன் அழுக்கு நிறைந்த கைகளால் பிரேமை தொட்டு தூக்குவதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குழந்தையை கொடுக்காமல் அதன் மேல் குப்புறவிழுந்து மூடிக்கொள்வாள். அம்மா அவள் முதுகை அடித்தும் அவள் கூந்தலைப்பிடித்து இழுத்தும் அவள் மேல் துப்பியும் பிராண்டியும் கூச்சலிடுவாள். நான் இரண்டுமுறை அம்மாவை அள்ளிப்பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே கொண்டுசென்று தள்ளி கதவைச்சாத்தினேன். கிறிஸ்துதாஸிடமும் செல்லத்திடமும் அம்மாவை குழந்தையை நெருங்கவிடக்கூடாது என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் எப்படியோ உள்ளே வந்து விடுவாள்.

 

         வெளியே இருந்து அவள் எடுத்துக்கொண்டு வந்த ஏதோ அழுகலை ஒருமுறை குழந்தைக்கு ஊட்டிவிட்டாள். குளித்துவிட்டு வெளியே வந்த நான் அதைப் பார்த்து திடுக்கிட்டேன் . என் கைகால்கள் எல்லாம் பதற ஆரம்பித்தன. அம்மாவை இழுத்துச்சென்று வெளியேதள்ளி செல்லத்தை வாயில் வந்தபடி வசைபாடினேன். செல்லம் சமையலறைக்குள் நின்று என் காதில் படும்படி ஏதோ சொல்வதை கேட்டேன். ‘குறப்புத்தி’ என்ற சொல் காதில் விழுந்ததும் மந்திரக்கோலால் தொடப்பட்டு கல்லாக அனதுபோல என் உடல் செயலற்றது. பின் எல்லாச் சக்திகளையும் இழந்து முன் தளத்து சூழல்நாற்காலில்யில் அமர்ந்தேன்.அம்மாவை நானே ஒருபோதும் துரத்திவிடக்கூடாது என்று நினைத்தேன். சென்றமுறை தப்பி ஓடியதுபோல இம்முறையும் சென்றுவிடுவாள் என்று காத்திருந்தேன். அப்படி அவள்சென்றால் என்னுடைய குற்றவுணர்ச்சி இல்லாமலாகும். சுவாமியின் வார்த்தையை நான் காப்பாற்றியவனாவேன். ஆனால் இம்முறை அம்மாவுக்கு அங்கே இருந்தாகவேண்டிய தூண்டுதலாக சுபா மேலுள்ள வெறுப்பு இருந்தது. சுற்றிச்சுற்றி வந்து சுபாவை வசைபாடினாள். வீட்டுக்கு வெளியே சாலையில் நின்றுகொண்டு ‘வெள்ளப்பன்னி, பாண்டன் நாயி..சுட்ட கெழங்குமாதிரி இருந்துட்டு எங்கிட்ட பேசுதியா? ஏட்டீ வெளிய வாடி நாயே’ என்று பெருங்குரலெடுத்து ஆரம்பித்தால் பலமணிநேரம் இடைவெளியே விடாமல் கத்திக்கொண்டிருப்பாள். அந்த கட்டற்ற உயிராற்றலே எனக்கு பிரமிப்பூட்டியது. நாய்கள் போன்றவை மணிக்கணக்காகக் கத்திக்கொண்டிருப்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த இரு கிழவர்களுக்கும் காசுகொடுத்து அவர்களிடம் அம்மாவை கூட்டிச்செல்லும்படிச் சொன்னேன். அவர்கள் பணத்துடன் அன்றே காணாமலானார்கள்.

 

          அம்மா இன்னும் ஆங்காரம் கொண்டவளாக ஆனாள். இரவில் அவளே கிளம்பி நகரை சுற்றிவிட்டு விடியற்காலையில் ஏதேதோ குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பிவந்தாள். வீசியெறியப்பட்ட அழுகல் உணவுகள். பழைய துணிகள். மின்னக்கூடிய அத்தனை பொருட்களையும் கொண்டு வந்தாள். அவற்றை கார்ஷெட்டில் ஓரமாக குவித்து வைத்தாள். அழுகிப்போன ஓர் உணவுப்பொட்டலத்தைப்பிரித்து அவள் வழித்து வழித்துச் சாப்பிடுவதை ஒருமுறை சன்னல்வழியாகக் கண்ட சுபா ஓடிப்போய் அப்படியே வாந்தி எடுத்தாள்.ஒருநாள் ஒரு பெருச்சாளியை அம்மா காகிதங்களையும் பிளாஸ்டிக்கையும் கொளுத்தி தீமூட்டி வாட்டுவதைக் கண்டபோது நானே வெளியே சென்று அதை பிடுங்கி வெளியே வீசி அவளை அதட்டினேன். அவள் திருப்பி என்னை அடிக்க வந்தாள். நான் அவளை பிடித்து தள்ளியபோது மல்லாந்து விழுந்தாள். பாத்ரூம் டர்க்கி டவல் ஒன்றை எடுத்து கட்டியிருந்தாள். அது அவிழ்ந்து நிர்வாணமாகக் கிடந்தவள் நிர்வாணமாகவே எழுந்து ஒரு கல்லை எடுத்து என்னைத் தாக்கினாள்.அவளைப் பலம் கொண்டமட்டும் தள்ளி கார்ஷெட் அருகே உள்ள அறைக்குள் தள்ளிக் கதவைச்சாத்தினேன். மூச்சுவாங்க சில நிமிடங்கள் நின்றேன். சன்னல்கள் எல்லாம் கண்களாக என்னைபார்க்கின்றன என்று தெரிந்தது. நேராகக் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டு கதறி அழுதேன்.

 

       நீர் கொட்டும் ஒலியில் என் அழுகை மறைந்தது. தலையிலும் முகத்திலும் அறைந்துகொண்டு தேம்பல்களும் விம்மல்களுமாக அழுது நானே ஓய்ந்தேன். பின்னர் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன்சுபா மூச்சு வாங்க வெளியே நின்றிருந்தாள். ‘நான் போறேன்..என் பிள்ளையோட நான் எங்கையாவது போறேன்’ என்றாள். நான் பேசாமல் நடந்தேன். என் பின்னால் வந்தபடி ‘என்னால முடியாது…இனிமே இதப் பாத்திட்டிருக்க முடியாது. சிட்டியிலே இப்ப இதெல்லாம் தான் எல்லாருக்கும் பேச்சு. இனி நான் எங்க தல காட்டுவேன்? வேலைக்காரங்க பாத்து சிரிக்கிறாங்க…என்னால முடியல. நான் போறேன். ஒண்ணு நான் இல்லட்டி உங்க அம்மா’ என்றாள்.நான் அவளிடம் ‘நான் எங்கம்மாவ விட்டுர முடியாது. அது என் குருவோட வார்த்தை. நீ போனா நான் வருத்தப்படுவேன். என்னால அதைத் தாங்க முடியாது. ஆனால் அம்மா அவளுக்கு என்ன புடிக்கிறதோ அதைத்தான் செய்வா’ என்றேன். தலைநடுங்க வீங்கிய கண்களுடன் ஈரக்கன்னங்களுடன் என்னை பார்த்து சில கணங்கள் நின்றுவிட்டு சடேலென்று மாறி மாறி தலையில் அறைந்துகொண்டு அபப்டியே தரையில் அமர்ந்து சுபா கதறி அழுதாள். நான் என் அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டேன். எழுத்துக்களைப் பாராமல் அவள் அழுகையையே கேட்டுக்கொண்டிருந்தேன்.இரவுவரை அம்மா உள்ளேதான் கிடந்தாள். நான் வெளியே சென்று எங்கெங்கோ அர்த்தமில்லாமல் அலைந்துவிட்டு நள்ளிரவில் திரும்பி வந்தேன்.

 

       உடைமாற்றிக்கொண்டு கார்ஷெட் அறைக்குச் சென்று கதவை திறந்தேன். உள்ளே இருந்து சிறுநீரும் மலமும் கலந்த வாடை குப்பென்று தாக்கியது. அம்மா எழுந்து என்னை தாக்குவாள் என எதிர்பார்த்தேன். அவள் மூலையில் கைகளை தலைக்கு வைத்து குப்புற குனிந்து அமர்ந்திருந்தாள் ‘அம்மா சோறு வேணுமா?’ என்றேன். தலையசைத்தாள்.அவளுக்கு நானே சோறு போட்டேன். ஆவேசமாக அள்ளி அள்ளி அவள் விழுங்குவதைப்பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு கணம் நெஞ்சடைத்தது . மறுகணம் இடிவிழுந்த பனைபோல என் உடல் தீப்பற்றி எரிந்தது. ஒருநாளாவது பசிக்குப்பதில் ருசியை உணர்ந்திருப்பாளா? அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. சாப்பிட்டு நிறுத்த அவளுக்குத் தெரியாது. இலை காலியாக ஆவதையும் தாங்கிக்கொள்ள முடியாது. ‘போடு போடு’ என்று கையால் இலையை தட்டிக்கொண்டே இருந்தாள். இப்படித்தான் இருந்திருக்கிறேன் நானும். அந்த என் உடல் இந்த உடலுக்குள்தான் இருக்கிறதுசாப்பிட்டு முடித்து கையை உடலிலேயே தேய்த்தபின் அங்கேயே அவள் காலை நீட்டி படுத்துக்கொண்டாள். நான் உள்ளே சென்று கோப்பையில் அரைவாசி பிராந்தி எடுத்துவந்து கொடுத்தேன். வாங்கி அப்படியே மடமடவென்று உள்ளே கொட்டிக்கொண்டு பெரிய ஏப்பம் விட்டாள். வயிறு நிறைந்ததும் அதற்கு முந்தைய கணத்தை முற்றாக மறந்தவளாக ’என்னலே காப்பா?’ என்று என் கையை வருட ஆரம்பித்தாள். அவளிடம் என்னெனவோ சொல்லவும் கேட்கவும் நினைத்தேன். ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதே போதுமென்றிருந்தது.‘லே மக்கா காப்பா, அந்த வெள்ளைப்பண்ணி பேயாக்கும்லே. அவ ஏன் அப்டி இருக்கா தெரியுமாலா? அவ உனக்க ரெத்தத்த உறிஞ்சி குடிக்கா பாத்துக்கோ… உனக்க குஞ்சாமணியிலே இருந்து..’ சட்டென்று என் ஆண்குறியை பிடித்து ‘லே..இதில அவ ரெத்தம் குடிக்காலே’ என்றாள். நான் விடுவித்துக்கொண்டேன்.

 

          ‘மக்கா உனக்கு இந்த களசமும் சட்டெயும் வேண்டாம்லே.. நீ தம்றான்மாருக்க கசேரியிலே இருக்காதே…வேண்டாம். தம்றான்மார் உன்னைக் கொண்ணு போட்டிருவாங்கலே..நீ நாளைக்கு எங்கூட வந்திரு. நாம அங்க நம்ம ஊருக்கு போவலாம். நான் உன்னைய பொன்னு மாதிரி பாத்துக்கிடுவேன். வாறியா மக்கா? அம்மையில்லாலே விளிக்கேன்?’கண் தளரும் வரை அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். திரும்பத்திரும்ப நாற்காலி வேண்டாம், தம்புரான்களின் நாற்காலியில் நீ அமர்ந்தால் உன்னை கொன்றுவிடுவார்கள், உன்னைக்கொல்லத்தான் இந்த வெள்ளைப்பேயை மந்திரித்து அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் புலம்பினாள். நான் எழுந்து என் அறைக்குச் சென்று ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மோட்டுவளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கிறுக்குத்தனமாகச் சொல்கிறாள் என்றாலும் அவள் சொல்வதிலும் உண்மை உண்டு என்று தோன்றியது. எஜமான்களின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனா? அதற்காக என்னை கொன்றுகொண்டிருக்கிறார்களா? இவள் என் குருதியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாளா? என்னுடைய மாயைகளுக்கு வெளியே நின்று, மனவசியங்களுக்கு அகப்படாத மிருகம்போல, அம்மா உண்மையை உணர்கிறாளா?நான் திரும்ப என் அலுவலகத்திற்கு வந்தபோது நான்கரை மணி ஆகியிருந்தது. என் அறைக்குள் சென்று அமர்ந்து குஞ்சன்நாயரிடம் டிபன் வாங்கிவரச்சொன்னேன். என்னுடைய இயலாமைக்கு நான் காரணங்கள் தேடுகிறேனா? அப்படித்தான் சுபா சொல்வாள்.

 

            என்னுடைய திறமையின்மைக்கு வெளியே காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் செயல்படக்கூடாது? நீ உணரும் தடைகள் எல்லாமே உனது கற்பனைகள். நீ செய்யவேண்டியதென்ன என்று உண்மையில் நீ உணர்ந்தவற்றை ஏன் செய்யாமலிருக்கிறாய்?செய்துபார்…செய்யவேண்டும் என்றால் ஒன்றுதான். நான் என்னைப்போன்றவர்களின் குரலாகவும் கையாகவும் இந்த அமைப்புக்குள் இருக்க வேண்டும். என்னைப்போன்றவர்கள் என்றால் தோட்டிகளால் அள்ளிவரப்பட்டு மானுடக்குப்பைகளாக கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டவர்கள். பொதுச்சுகாதாரத்திற்காகக் கோடிகளைச் செலவிடும் இந்த அரசு அந்த உயிர்களுக்காக ஏன் கொஞ்சம் செலவிடக்கூடாது? அந்த டாக்டர்கள் ஏன் அவர்களையும் மனிதர்களாக நினைக்கும்படிச் செய்யக்கூடாது? முடியாது என்பவர்களைத் தண்டியுங்கள். உங்களில் ஒருவன் அந்த ஆஸ்பத்திரியில் கவனிக்கப்படவில்லை என்றால் உங்கள் குரல் எழுகிறதே, நீதியுணர்ச்சி எரிய ஆரம்பிக்கிறதே…நான் கைகள் நடுங்க எழுத ஆரம்பித்தேன். பின் எழுந்து என்னுடைய அறிக்கையை தட்டச்சிட்டேன். கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் நான் பார்த்தவற்றை விரிவாக எழுதி உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தேன். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்றுநாட்களுக்குள் எனக்கு அறிக்கையிடவேண்டும். இல்லாவிட்டால் என் தனிப்பட்ட அதிகாரத்தால் தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தேன்.

 

           மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு நேரடி பிரதியும் மாநில சுகாதாரச் செயலருக்கு நகலும் போட்டேன். பிள்ளையை உள்ளே அழைத்து உடனே அவற்றை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.மாலையில் மீண்டும் ஒருமுறை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். டாக்டர் இந்திரா ‘எந்த டெவெலெப்மெண்டும் தெரியலை. வேணுமானா நாளைக்கு டயாலிஸிஸ் செஞ்சு பாக்கலாம்’ என்றார். அம்மா அதேபோல படுத்திருந்தாள். ஆஸ்பத்திரிக்குரிய பச்சை நிற உடை அணிவிக்கப்பட்டிருந்தது. கைகால்களில் வீக்கம் குறைந்து தோலில் நீர்வற்றிய சேறுபோல சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்ததுமே தூங்கிவிட்டேன். சுபா என்னிடம் அம்மாவைப்பற்றி விவாதிக்க விரும்பினாள். ஆனால் நான் அப்போது சொற்களை விரும்பவில்லை.ஒருமணி நேரம் தூங்கியிருப்பேன், விழிப்பு வந்தது. சுபா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஏர்கண்டிஷனரும் கடிகாரமும் ராகமும் தாளமும் போல ஒலித்தன. வெளியே சென்று சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். சிகரெட் அதிகமானதனாலா தூக்கம் கெடுகிறது என்று எண்ணம் வந்தது. தூங்கும் முன்னால் கடைசி எண்ணமாக இருந்தது நாளை ஆபீஸ் போனதும் என் கடிதம் பற்றி டிஎம்ஓவிடம் நானே நேரில் பேசுவதைப்பற்றித்தான். என்ன செய்ய நினைக்கிறார் என்று கேட்கவேண்டும். முடிந்தால் ஊடகங்களுடன் ஒரு நேரடி விசிட் செய்து இவர்களை நாறடிக்கவும் தயங்கக்கூடாது.என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும். இந்த ஒன்றரை வருடங்களில் நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். கௌரவம் அவமானம் என்ற சொற்களின் அர்த்தங்களையே என் மனம் இழந்துவிட்டது.

 

            அம்மா அவற்றின் கடைசித்தடயத்தையும் அழித்துவிட்டுத்தான் சென்றாள். மதுரையில் என்னுடன் இருந்தவள் ஒருநாள் காலையில் பிரேமை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள். சுபா மயக்கமாகி விழுந்துவிட்டாள். நான் எஸ்பியை கூப்பிட்டுச் சொன்னேன். நகரமெங்கும் போலீஸ் பாய்ந்தது. நாற்பத்தைந்து நிமிடங்களில் பிடித்துவிட்டார்கள். நகரின் முக்கியமான ஓட்டல் ஒன்றுக்குப் பின்னால் உள்ள எச்சில்குவியலில் மேய்ந்துகொண்டிருந்தாள். அகப்பட்ட எச்சிலையும் அழுகலையும் அவனுக்கும் ஊட்டிவிட்டிருந்தாள்.சுபா உள்ளிருந்து குண்டுபட்ட மிருகம் போல வெளியே பாய்ந்து வந்து குழந்தையை எஸ்ஐ கையிலிருந்து பிடுங்கினாள். அதன் வாயும் மார்பும் எல்லாம் அழுகிய உணவு. அவள் அப்படியே அதை அணைத்து இறுக்கி முத்தமிட்டுக்கொண்டே தரையில் அமர்ந்துவிட்டாள். நான் செயலிழந்து நின்றேன். ஜீப்பிலிருந்து இறங்கி என்னைப்பார்த்து ‘ஏலே காப்பா’ என்றபடி வந்த அம்மாவை கண்டதும் என்னுள் இருந்து ஏதோ ஒன்று திமிறி வெளியே வந்தது. சட்டென்று கீழே குனிந்து அங்கே கிடந்த ஒரு ஹோஸ் பைப்பின் துண்டை எடுத்துக்கொண்டு ‘ஓடு ஓடுரீ…ஓடுரீ நாயே.. இனிமே இந்த வீட்டுக்குள்ள கால வைக்காதே ஓடு’ என்று ஓலமிட்டுக்கொண்டு அவளை மாறிமாறி அடித்தேன். அவள் அலறியபடி புழுதியில் விழுந்து கைகால்களை உதறித் துடித்தாள். அவளை எட்டி உதைத்தேன்.என்னை எஸ்ஐ பிடித்துக்கொண்டார்.

 

         அம்மா எழுந்து தெருவில் ஓடி நின்று ‘லே காப்பா…நீ நாசாமா போவே..சங்கடச்சு போவே…வெள்ளப்பண்ணி உனக்க ரெத்தத்த குடிப்பாலே…லே பாவி! நாயே, பாவி லே!’ என்று மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கூக்குரலிட்டு அழுதாள். இடுப்புத்துணியை அவிழ்த்து வீசி நிர்வாணமாக நடந்து காட்டி, கைகளை விரித்து விதவிதமான சைகைகளுடன் வசைபொழிந்தாள். ‘சார் நீங்க உள்ள போங்க’ என்றார் எஸ்.ஐ. நான் உள்ளே போய் என் அறைக்கதவை தாழிட்டுக்கொண்டதும் முதலில் நினைத்தது தூக்குமாட்டிக்கொள்வதைப்பற்றித்தான். என்னால் கொஞ்சம் தைரியம் கொள்ள முடிந்திருந்தால் இந்த அவஸ்தை அன்றே முடிந்திருக்கும்.அன்று அம்மாவை எஸ்.ஐ பிடித்து ஜீப்பில் ஏற்றி நகரின் முக்கியமான கிறித்தவ நிறுவனத்தின் முதியோர் விடுதி ஒன்றில் கொண்டு சென்று சேர்த்து அவரே முன்பணமும் கட்டிவிட்டுச் சென்றார். நான் மறுநாள் பணம் கொடுத்தனுப்பினேன். மீண்டும் அம்மாவைப்பார்க்கும் துணிவே எனக்கு ஏற்படவில்லை. எனக்குள் ஒவ்வொரு கணமும் தீ எரிந்துகொண்டிருந்தது. என் உள்ளுறுப்புகள் எல்லாம் வெந்துருகி கொட்டி வயிற்றில் அமிலமாக கொப்பளித்தன. மறுநாள்முதல் பிரேமுக்கு ஆரம்பித்த வயிற்றுப்போக்கும் காய்ச்சலும் பல படிகளாக பன்னிரண்டு நாள் நீடித்தது. மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் பத்துநாள் இருந்தான். இருமுறை காய்ச்சல் உச்சத்துக்குச் சென்று அவன் உயிருக்குக் கூட ஆபத்திருப்பதாகச் சொன்னார்கள்.சுபா அவனருகிலேயே இரவும் பகலும் தலைவிரிக்கோலமாகக் கிடந்தாள். அவளிடம் பேசவே நான் அஞ்சினேன். ஒரு சொல்லில் அவள் பாய்ந்து என் குரல்வளையை கடித்து துப்பிவிடுவாள் என்று அஞ்சினேன்.

 

         பையனின் சிறிய குருத்துக்கால்களையும் காய்ச்சலில் சுண்டிய சிறு முகத்தையும் பார்த்துக்கொண்டு இரவெல்லாம் ஆஸ்பத்திரி வார்டில் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கைகளை விரித்து மார்பு ஏறி இறங்க தூங்கிக்கொண்டிருந்தான். சருமம் வரண்டு உடம்பு சிவந்திருந்தது. விலா எலும்புகள் புடைத்து மார்புகூடு மேலே வந்து வேறேதோ குழந்தை போலிருந்தான். மரணம் அவனை நெருங்கி வந்து சென்றிருக்கிறது. அறைக்குள் அது ஏதோ உருவில் இருந்துகொண்டே இருக்கிறதா என்ன? கொஞ்சம் கண்ணசந்தால் கைநீட்டி அவனை எடுத்துக்கொண்டு செல்லுமா என்ன?அவனைப்பார்க்கும்போது அடிவயிற்றில் கனமான உலோகத்தகடு ஒன்று வெட்டி இறங்கியது போல தோன்றியது. ஆனால் அந்த வலி வேண்டியுமிருந்தது. அதை நிசப்தமாக அனுபவித்தேன். தராசின் ஒரு தட்டு போல அது மனதின் மறுபக்கத்தை அழுத்திய துயரமொன்றைச் சமன் செய்தது. சிகரெட்டாகப் புகைத்து தள்ளினேன். சிகரெட் புகைத்து என் உதடுகள் எரிந்தன. என் நெஞ்சு புகைந்து இருமலில் வறட்டுச் சளி வெளிவந்தது. எந்த உணவும் உக்கிரமான பசியின்போதுகூட இரண்டாம் வாயில் குமட்டியது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு மூச்சாக வெளியே விட்டு காலத்தை உந்தி நகர்த்தினேன்.ஒருநாள் இரவில் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. இநத வயதில் நான் இதை தின்றுதானே வளர்ந்தேன். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். என்னோடொத்த பிள்ளைகள் பெரும்பாலும் மழைக்காலத்தில் செத்துப்போகும். என் அம்மா எபப்டியும் பத்து பிள்ளை பெற்றிருப்பாள். ஒன்பதும் செத்திருக்கின்றன.

 

       செத்த பிணங்களை காலில் பற்றி சுழற்றி தூக்கி பெருக்கெடுத்தோடும் கரமனை ஆற்றில் வீசுவார்கள். வீசப்படுவதற்காக கிடக்கும் என் தங்கையை நான் பார்த்திருக்கிறேன். சின்ன கரிய முகத்தில் அவள் கடைசியாக நினைத்தது இருந்தது ‘த்தின்ன.. த்தின்ன’ என்பாள். அந்த ஒரு சொல்லை மட்டும்தான் அவளால் பேசமுடியும். அந்தச் சொல் உதடுகளில் இருந்தது.ஒருகணம் எழுந்த வன்மத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த வெள்ளைக்குழந்தை அந்த தீனியில் ஒருவாயை உண்டு சாவதென்றால் சாகட்டுமே. அங்கே மேலே பட்டினிகிடந்தும், கழிவுகளை தின்றும் செத்த குழந்தைகளுக்கான பிரம்மாண்டமான சொர்க்கத்தில் இதை எதிர்பார்த்து இதன் உறவினர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். மறுகணம் அந்தச் சிந்தனைக்காக என்னை நானே மண்டையில் அறைந்துகொண்டேன். கட்டிலில் அமர்ந்து என் கண்மணியின் கால்களை முத்தமிட்டு முத்தமிட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.அம்மா விடுதியில் இருந்து சிலநாட்களிலேயே கிளம்பிச்சென்றாள் என்று தெரிந்தது. நான் கவலைப்படவில்லை. ஆனால் அன்றுமுதல் என் ஆளுமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நான் குரூரமானவனாக ஆனேன். மன்னிக்காதவனாக, எந்நேரமும் கோபம் கொண்டவனாக மாறினேன். தினமும் என் ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களையும் தண்டனை அறிவிப்புகளையும் கொடுத்தேன். அவர்கள் அதை எனக்குமேலே சென்று எளிதில் ரத்து செய்துகொண்டார்கள். என் முன்னால் ஏளனம் நிறைந்த முகத்துடன் நின்று இடது கையால் அவற்றை வாங்கிக்கொண்டார்கள். வெளியே சென்று உரக்கக் கேலிபேசிச் சிரித்தார்கள்.சிலநாட்களில் என் அலுவலகச்சுவர்களில் எனக்கெதிரான போஸ்டர்கள் தென்பட்டன.

 

         என் அம்மா அவற்றில் கையில் ஒரு பிளாஸ்டிக் கோப்பையுடன் பிச்சை கோரி அமர்ந்திருந்தாள். பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்டுவிட்டு அதிகார சுகம் அனுபவிக்கும் கயவனிடமா மாவட்டத்தின் பொறுப்பு? நான் அந்த போஸ்டரை அலுவலகத்திற்குள் நுழையும்போதுதான் கவனித்தேன். வரிசையாக நிறைய ஒட்டியிருந்தார்கள். பலவற்றை தாண்டி வந்து திரும்பும்போதுதான் ஒன்றை வாசித்தேன். என் கால்கள் தளர்ந்தன. பிரேக்கை மிதிக்கவே முடியவில்லை. காரை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஓடி என் அறைக்குள் சென்றேன். செல்லும் வழியெங்கும் கண்கள் என் மேல் மொய்த்தன. என் வாசல் மூடியதும் ஆபீஸ் முழுக்க எழுந்த மெல்லிய சிரிப்பு பெரிய இரைச்சலாக மாறி என்மேல் மோதியது.இரண்டுநாட்கள் கழித்து அம்மாவை மதியம் யாரோ என் ஆபீஸுக்கே கூட்டி வந்துவிட்டார்கள். அம்மா என் ஆபீஸ் முற்றத்தின் கொன்றை மரத்தடியில் அமர்ந்துகொண்டு, என் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டவர்கள் அளித்த மிச்சமீதிகளை ஒரு பாலிதீன் தாளில் குவித்து ஆனந்தமாக தின்றுகொண்டிருந்தாள். என் அறைச்சன்னல் வழியாக நான் பார்க்குமிடத்தில் அவளை அமரச்செய்திருந்தார்கள். சாப்பிட்டு கைகழுவ வாஷ் பேசினுக்குச் சென்ற நான் அதைப் பார்த்தேன். சில கணங்கள் நான் எங்கே நின்றேன் என்றே நான் அறியவில்லை. அங்கிருந்து இறங்கிக் காரைக்கூட எடுக்காமல் பைத்தியக்காரனைப்போல சாலைவழியாக ஓடினேன்.

 

        காலையில் நான் அலுவலகம் சென்று தேங்கிய கோப்புகளை முழுக்க பார்த்துவிட்டு பத்தரை மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். நடுவே போன் செய்து கேட்டேன். அம்மாவின் நிலையில் மாற்றமில்லை என்றார்கள். நான் உள்ளே நுழையும்போது வராந்தாவில் டாக்டர் மாணிக்கம் நின்றிருந்தார். என்னுள் சட்டென்று உருவான அமைதியின்மை அவர் அருகே வந்து வணக்கம் சொன்னபோது அதிகரித்தது. ‘சொல்லுங்க மாணிக்கம்’ என்றேன். அவர் கண்ணீர் மல்கி மீண்டும் கும்பிட்டார். இங்கே நான் இன்னும் கடுமையானவனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்‘சார் நான் சொன்னது ஒண்ணையும் நம்பலைண்ணு தெரியுது. நான் சாருக்கு செய்ததெல்லாம் சும்ம தப்பை மறைக்கிறதுக்காக செய்ததுண்ணு நினைக்கிறீங்க…அப்டி இல்ல சார். நான்’ அவர் குரல்வளை ஏறி இறங்கியது. ‘நான் எப்பவும் கடவுளுக்கு பயந்துதான் சார் எல்லாம் செய்திருக்கேன். அந்த எருக்குழியிலே என்னால முடிஞ்சவரைக்கும் பாடுபட்டிருக்கேன் சார். காலம்பற எட்டுமணிக்கு வந்தா சிலசமயம் வீடு போய்ச்சேர ராத்திரி ஒம்பது பத்து ஆயிடும்சார். மருந்து கெடையாது. மாத்திரை கெடையாது. புண்ணில வச்சு கெட்ட துணி கெடையாது. சார், சொன்னா நம்ப மாட்டீங்க, பக்கத்திலே வெட்னரி ஆஸ்பத்திரிக்கு போயி அங்க மிஞ்சிக் கெடக்குற ஆண்டிபயாட்டிக்குகள வாங்கிட்டு வந்து நான் இதுகளுக்குக் குடுக்கறேன். பக்கத்துவீடுகளுக்குப் பெண்டாட்டிய அனுப்பிக் கிளிஞ்ச சேலயும் துணியும் கலெக்ட் பண்ணிட்டு வந்து இதுகளுக்கு புண்ணு வச்சு கட்டிட்டு இருக்கேன்…ஒரு நாலஞ்சுநாள் மனசறிஞ்சு லீவு போட்டதில்லை’நான் தணிவாக ‘நான் உங்களக் குறை சொல்லலை.

 

         நிலைமை எப்டி இருக்குன்னு அறிக்கை குடுத்தேன். அது என் கடமை தானே? அதை நான் செய்யலேண்ணா இப்டியே இருக்கட்டும்னு விட்டது மாதிரிதானே?’ என்றேன். ‘நீங்க நினைச்சது சரிதான் சார். நான் உங்களக் குறை சொல்லேல்ல. ஆனா- ‘ அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. ‘ஐயம் ஸாரி’ என்று அறைக்குள் செல்ல முயன்றேன். ‘நில்லுங்க சார். இதை மட்டும் கேளுங்க. கேட்டுட்டு போங்க. நீங்களும் என்னையமாதிரித்தானே. சார் எனக்கு ஏழு வருஷமா பிரமோஷன் டியூ. என்னென்னமோ குற்றமும் குறையுமாட்டு சொல்லி எக்ஸ்பிளனேஷன் மேலே எக்ஸ்பிளனேஷன் கேட்டு ஆறப்போட்டு ஊறப்போட்டு வச்சிருந்தாங்க. டிரிபூனல் வரைக்கும் போயி தீர்ப்பு வாங்கி தீர்ப்ப அப்ளை பண்றதுக்கு மறுபடியும் ஆடர் வாங்கி இப்பதான் காயிதம் வந்திருக்கு. நான் சீனியராக்கும் சார். இப்ப உங்க லெட்டரை காரணமாக் காட்டி என்னைச் சஸ்பெண்ட் பண்ணியாச்சு. இனி அந்த ஆர்டரை ரத்து பண்ணிட்டுதான் என்னை எடுப்பாங்க. மறுபடியும் பத்து வருஷம் ஆகுதோ அதுக்கு மேலே ஆகுதோ…வாறேன் சார்’நான் ஏதும் சொல்வதற்குள் அவர் விடுவிடுவென சென்று விட்டார். நான் அவர் பின்னாலே நடந்தேன். அவர் வெளியே சென்று தன் பைக்கில் ஏறி சென்றுவிட்டார். சோர்ந்து போய் ஹாலில் அமர்ந்துகொண்டேன். இதுதான் நடக்கும், இது தவிர எது நடந்தாலும் ஆச்சரியம்தான். தெரிந்தும் ஏன் இதைச் செய்தேன்? எதை யாருக்கு நிரூபிப்பதற்காகச் செய்தேன்? எனக்கு கடந்த நாட்களில் வயிற்றில் ஏறிவிட்டிருந்த அமிலம் தொண்டையில் புளித்தது. வாந்தி எடுக்க வேண்டும் போலிருந்தது.

 

         தலையைக் கையால் தாங்கி அமர்ந்திருந்தேன்.நர்ஸ் வந்து ‘சார் ‘என்றாள். நான் எழுந்தேன் ‘அவ்வோ கண்ணு முழுச்சாச்சு’ சிறு பரபரப்புடன் அம்மாவின் அறைக்குச் சென்றேன். அம்மா கண்ணை திறந்து எழுந்து அமர முயன்றாள். கையில் செருகப்பட்டிருந்த க்ளூகோஸ் குழாயை பிய்த்து எடுத்து போட்டிருந்தாள். செருகப்பட்ட ஊசி வழியாக குருதி வழிந்தது. நர்ஸ் ‘அய்யய்யோ…எடுக்கப்பிடாது…பாட்டி . படுத்துக்கிடுங்க’ என்று சொல்லிச் சென்று பிடித்தாள். அவளை அம்மா பிடித்து தள்ளினாள். அவள் கண்கள் பரவி அலைந்து என்னை பலமுறை தாண்டிச்சென்றன. ‘காப்பா லே காப்பா’ என்று அழைத்து எழப்போனாள்நான் ‘அம்மா, நான்தான், அம்மா’ என்றேன். ‘காப்பா , லே, மக்கா..காப்பா…லே களசம் வேண்டாம்லே. தம்றான் கசேரிலே இரியாதலே மக்கா…காப்பா லே’ . அம்மாவின் கண்ணுக்கு நான் தென்படவே இல்லை. நர்ஸ் அவளை பிடித்து அழுத்தி படுக்கச் செய்தாள் அம்மா சட்டென்று வலிப்பு வந்து கைகால்களை இழுத்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள். வாய் ஒருபக்கமாக கோணிக்கொண்டு அதிர்ந்தது. நர்ஸ் ‘டாக்டரை விளிக்கேன்’ என்று வெளியே ஓடினாள். நான் அம்மாவைப் பிடித்து மெல்ல படுக்க வைத்தேன். கைகள் இறுக்கமாக இருந்தன. பின்னர் அவை மெல்லமெல்ல தொய்வடைய ஆரம்பித்தன. டாக்டர் வந்தபோது அம்மா மீண்டும் மயக்கமாகி விட்டிருந்தாள்.நான் வெளியே நின்று காத்திருந்தேன்.

 

        இந்திரா வெளியே வந்து ‘டயாலிஸிஸ் பண்ணினா நல்லது. ஷி இஸ் சிங்கிங்’ என்றார். ‘பண்ணுங்க’ என்றேன். ‘பண்ணினாலும் பெரிசா ஒண்ணும் நடக்காது. ஷி இஸ் அல்மோஸ்ட் இன் ஹர் ஃபைனல் மினிட்ஸ்’ நான் பெருமூச்சு விட்டேன். உள்ளே அவர்கள் கூடிக்கூடி பேசினார்கள். ஏதேதோ செய்தார்கள். நான் மீண்டும் கூடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டேன். தலையைக் கையால் அளைந்தேன். வாட்சை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டினேன்சுபா போனில் அழைத்தாள். நான் ’ஹலோ’ என்றதும் ‘ஹவ் இஸ் ஷி?’ என்றார். ‘இன்னும் கொஞ்ச நேரத்திலேன்னு சொன்னாங்க’ அவள் ‘ஓ’ என்றாள்.’நான் இப்ப அங்க வரேன். ஒரு பத்து நிமிஷம் ஆகும்’ நான் போனை வைத்தேன். அந்த போன் கிளிக் என்று ஒலித்த கணம் ஒன்றை முடிவுசெய்தேன். ஆம், அதுதான். பிரஜானந்தர் சொன்னது அதைத்தான். அவரது சொற்கள் என் காதுகளுக்கு அருகே ஒலித்தன. ’அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ இதைத்தான் சொன்னாரா? இதை நான் செய்யமாட்டேன், எனக்கு அந்த துணிச்சலே வராது என்று நினைத்துத்தான் தைரியமாக இரு என்றாரா?நான் எழுந்து சென்று அம்மாவை பார்த்தேன். உள்ளே ஒரு நர்ஸ் மட்டும் இருந்தாள். ’கண்ணமுழிச்சாங்களா?’ என்றேன். ‘இல்ல. டயாலிஸிஸ் பண்ணணும். இப்ப அங்க கொண்டு போயிருவோம்’ என்றாள். அம்மா கண்விழிக்கவேண்டும் என்று அக்கணம் என் முழு இருப்பாலும் ஆசைப்பட்டேன்.

 

           பிரார்த்தனை செய்ய என் தலைக்குமேல் காதுகள் எதையும் உணர்ந்ததில்லை. அந்த தருணத்திடம், அந்த அறையில் நிறைந்த லோஷன் வாடைகொண்ட காற்றிடம், சாய்ந்து விழுந்த சன்னல் வெளிச்சத்திடம், அங்கே துளித்துளியாக கசிந்து சொட்டிய காலத்திடம் தீவிரமாக வேண்டிக்கொண்டேன்.அம்மா கண்விழிக்க வேண்டும். சில நிமிடங்கள் போதும்அவளருகே அமர்ந்து அவள் கைகளை என் கைகளில் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டும். அவள் அத்தனை வருடம் ஆவேசமாக மன்றாடியதற்கு என் பதில். ’அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன். நான் உன் காப்பன்’ஆனால் அம்மாவின் முகம் மேலும் மேலும் மெழுகுத்தன்மை கொண்டபடியே செல்வதைத்தான் கண்டேன். இன்னொரு பெண் வந்து அம்மாவின் உடைகளை மாற்றினாள். அப்போது அம்மாவின் உடல் சடலம் போலவே ஆடியது. அவளும் ஒரு சடலத்தைப்போலவே அம்மாவை கையாண்டாள்.நேரம் சென்றது. அரைமணிநேரம் தாண்டியும் சுபா வரவில்லை. ஆனால் ஒயர்கூடையுடன் குஞ்சன் நாயர் வெற்றிலைச்சிரிப்பை காட்டியபடி தோளைச்சரித்து நடந்து வந்தான். ‘நமஸ்காரம் சார். ஆபீஸிலே போனேன். மெட்ராஸ் போன் வந்திருக்கு. எல்லாத்தையும் ரமணி குறிச்சு கையிலே குடுத்தனுப்பினா’ என்று ஒரு காகிதத்தை தந்தான். நான் அதை வாங்கி வாசிக்காமலேயே பைக்குள் செருகிக்கொண்டேன்.

 

            அவனை அனுப்ப நினைத்த கணம் உள்ளே அம்மா ‘காப்பா’ என்றாள்நான் உள்ளே நுழைவதற்குள் குஞ்சன்நாயர் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டு அம்மா சட்டென்று அதிர்ந்து கல்லைக்கண்ட தெருநாய் போல மொத்த உடலும் குறுகி பின்னாலிழுத்துக்கொள்ள இருகைகளையும் கூப்பி ‘தம்றானே, கஞ்சி தா தம்றானே’ என்று கம்மிய குரலில் இரந்தாள். அவள் உடல் ஒருகணம் அதிர்ந்தது. வலது கால் சம்பந்தமில்லாமல் நீண்டு விரைத்து மெல்ல தளர்ந்தது. எச்சில் வழிந்த முகம் தலையணையில் அழுத்தமாக பதிந்தது. நர்ஸ் அவளைப் பிடித்துச் சரித்தபின் நாடியைப் பார்த்தாள். அதற்குள் எனக்குத் தெரிந்துவிட்டது.ஆம், பிரஜானந்தர் சொன்னது இதைத்தான்.. அமர வேண்டும். இந்த பிச்சைக்காரக் கிழவியை புதைத்து இவளது இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாகவேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறுநாற்காலிகள் வேண்டும்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.