LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 971 - குடியியல்

Next Kural >

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும்,மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே. ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவன் பெருமையை 'ஒளி' என்றும், அப்பெருமைக்குக் காரணமாகிய அருஞ்செயற்கு ஏதுவான ஊக்கமிகுதியை அதன் மும்மடிக் கருமியமாகிய ஒளியொடு சார்த்தியும் கூறினார். ஒளி,இளி என்பன இங்கு ஒன்றிற்கொன்று எதிராகவந்த சொற்கள் "செயற்கரிய" என்று முற்கூறியது (குறள். 26) துறவு பற்றிய தென்றும், இங்குக் கொள்வது புரவு பற்றிய தென்றும்,வேறுபாடறிக. வெறுக்கை- செல்வம். அது இங்கு மிகுதியைக் குறித்தது. வெறுத்தல் செறிதல், புரவு பற்றிய அருவினைகள் ஈகையும் ஒப்பரவும், 'வாழ்தல்' என்னும் பன்மை நெஞ்சோடு கிளத்தல்பற்றிய எண் வழுவமைதி, இக்குறளாற் பெருமைக்கு ஏது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.
Translation
The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'
Explanation
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).
Transliteration
Olioruvarku Ulla Verukkai Ilioruvarku Aqdhirandhu Vaazhdhum Enal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >