- முனைவர் கி.செம்பியன்
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்;றாக் கடை (469)
(நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு----வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்; அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை---அவரவர் குணங்களை யாராய்ந் தறிந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்---பரிமேலழகர்)
அவரவர் பண்பினையறிந்து அதற்கேற்பச் செயல்;படாவிட்டால், நல்ல செயல்கள்கூடத் தவறானவையாகிவிடும்!
நல்லன தீயனவாகும்!
மருந்து கொடுத்துக் காப்பாற்ற நினைப்பது நல்;ல செயல்தான், அவர் உடலுக்கு இந்த மருந்து ஒவ்வுமா என்பதை ஆராயாது கொடுத்தால், அதுவே தீமையாகிவிடும்! காப்பாற்ற நினைத்து உயிரைப் போக்கிவிடலாமா?
இன்சொல் பேசுவதும் சிரிப்பதும் நல்ல செயல்கள்தாம். எதிரியின் இயல்பறியாமல் நடந்தால் இன்சொல்லும் சிரிப்பும் தீமை பயக்கும்!
மின் கம்பியைத் தொட்டுவிட்டான்; அலறுகிறான்; காப்பாற்ற எண்ணுவது நற்செயல்தான்; இவனும் ஓடிப்போய்த் தொட்டுவிட்டான்!
அவரவர் பண்பறிந்து!
அந்த அந்த நேரத்தின் பண்பறிந்து!
ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவனைக் காப்பாற்றக் கருதுவது நன்று ஆற்றல்தான்; நீரின் வேகமும், தனது பலமும் தெரியாமல் குதித்துவிட்டால் காரியம் என்னாகும்? உயர்ந்த சேவைக்கான சான்றிதழைக் குடியரசுத் தலைவர் கையால் பெறலாம், குதித்தவர்தம் பெற்றோர்!
காந்தியை எச்சரித்தனராம், ஆபத்து இருக்கிறதென்று! தொழுகையில் கலந்துகொள்ள நினைத்தது நல்லதுதான்; நாட்டின் பண்பறியவில்லை; சுடப்பட்டார்!
பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றிபெற விரும்புவது உயர்ந்த சிந்தனைதான்!
மக்களின் பங்கோ வாங்குவது!
தோற்கடிக்கப்படுவீர், எச்சரிக்கை!
பண்பறிந்து கொடுங்கள்; பணமாகக், குடமாக, மூக்குத்தியாக!
நலிந்தவர்க்கு இலவச சேலை கொடுப்பது நற்செயலே; நம் நாட்டில் கூட்டமோ கூட்டம் என்னும் பண்பறியாமல் கொடுத்த்தால், நெரிசலில சிக்கிப் பெண்களில பலர் மாண்டனர்! தர்மம் செய்யப்போய்ச் சாகடிப்பதா?
விநாயகர் சிலைகளைக் கடலில் கரைப்பது நற்செயலே; கடலின் பண்பறிந்து மண்ணால் செய்து கரை!
வடநாட்டுக்காரர் தமிழ்நாட்டிற்கு வந்தார்;; ஒரு பருவப் பெண் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள்; பதறிய வடநாட்டுக்காரர் ஓடிப்போய்த் தொட்டுத் தூக்கினார்; அந்தப் பெண்ணோ, எப்படி என்னைத் தொடலாம் எனக் கோபித்தாள்! வடநாட்டுக்காரருக்குப் புரியவில்லை! அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை!
மேலாடை அணிவது நல்லதுதான்; ஆனால், கேரளாவின் குருவாயூர்க் கோவிலுக்கு;ள் அது ஆகாது!
எச்சிலைத் துப்பிடவேண்டியது நற்செயல்தான்!
நம்நாட்டில்........!
சிங்கப்பூரில், அமெரிக்காவில்.........!
நாட்டின் பண்பறிந்து ஆற்றாக்கடை!
நாடே குப்பையாக இருக்கும்போது குப்பையைச் சுதந்தரமாகப் போடலாம்!
தூய்மையான நாட்டில்.......!
அமெரிக்க நடிகர் இந்தியாவிற்கு வந்தார்; இந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்;தாள்; பொதுமேடையில் இந்தி நடிகையைக் கட்டிப்பிடித்தார்; முத்தங்கொடுத்தார்; பண்பாடு கெட்டது!
முத்தம் நல்ல செயல்தான்!
அந்த அந்த நாட்டின் பண்பறிந்து ஆற்றாக்கடை!
ஒலியெழுப்புவது நல்ல செயல்தான்!
நாட்டின் பண்பறிந்து ஆற்றாக்கடை!
அழைப்பிதழ் கொடுப்பது நல்ல செயல்தான்!
வீட்டிலா, வீதியிலா, யாரிடம் கொடுத்து.......!
அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை!
பொதுமேடையில் காலில் விழுவது..........
ஒரு தலைவருக்குச் சினம் மூண்டுவிட்டது!
அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை!
பிச்சையிடுவது நற்செயல்தான்....
இராவணனின் பண்பறிந்து பிச்சையிடவில்லை!
அவன் பண்பறிந்து ஆற்றாக்கடை!
சூர்ப்பணகையின் காதல் நற்செயல்தான்!
ஒருத்தியொடு வாழும் கொள்கை இராமனைக் காதலிப்பது!
இராமன் பண்பறிந்து.....!
கையூட்டு வாங்காமலிருப்பது நற்செயல்தான்!
ஆனால், பதவி உயர்வு வேறொருவருக்குப் போய்விட்டது!
நாட்டின் பண்பறிந்து......!
நல்லன எல்லாம் தீயவாம்!
உணவே நஞ்சாம்; அப்பொழுதைய உடல்நிலை அறிந்து உண்ணாவிடில்!
எப்பொழுது நல்லன நல்லனவாகும்?
காலம், இடம், நாடு, பண்பாடு, குணம், இயல்பு, சூழ்நிலை ஆகியவற்றின் பண்பறிந்தால்!
எமக்கொரு பலமான ஐயம்!
நீவிர் திருக்குறள் எழுதியது நல்ல செயல்தான்; தமிழ் மக்களின் பண்பறிந்தா எழுதினீர்?
வணக்கம் வள்ளுவரே!
|