LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

ஊருக்காக செய்த உதவி

பொன்னாச்சியூர் என்னும் ஒரு சிறு கிராமம், ஒரு காலத்தில் நல்ல பசுமையுடன்,இருந்திருக்கிறது. காலப்போக்கில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சி அதிகமாகி அந்த ஊர் மக்கள் பெரும்பான்மையோர் ஊரை விட்டு காலி செய்து சென்று விட்டனர்.

இப்பொழுது அந்த கிராமத்தில் ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். அவர்களும் பொருளாதாரத்தில் மிகவும் கீழ் தட்டில் இருந்தார்கள். காரணம் ஊரை சுற்றி ஒரே வறட்சி. புல் பூண்டு கூட முளைப்பதற்கு தயங்கும், அந்தளவுக்கு வறட்சி. இவர்களுக்கு அங்கு நிலங்கள் இருந்தாலும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாது, அதனால் காலையில் எழுந்து பல மைல் தூரம் நடந்து சென்று பக்கத்து பக்கத்து ஊர்களில் உள்ள வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் எல்லோரும் வேலைக்கு போன பின்னால், அந்த ஊரில் உள்ள குடிசைகளில் வயதானவர்களும், ஒரு சில குழந்தைகள் மட்டுமே அங்கிருக்கும். பத்து பதினைந்து சிறுவர் சிறுமிகள் நடந்து சென்று தொலை தூரத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பர். அதுவும் ஐந்தாவது வரைக்கும்தான் படிப்பர், அதற்கு மேல் அவர்க்ளை அவர்கள் பெற்றோர்கள் தங்களுடன் வேலைக்கு கூட்டி கொண்டு போய் விடுவார்கள். இதனால் படிப்பறிவும் கிடைக்காமல், சரி வர வேலையும் கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

      ஒரு நாள் பகல் இரண்டு மணி அளவில் ஒருவர் அந்த வழியாக நடந்து வந்தார்.அவர் பார்ப்பதற்கு நன்கு படித்தவர் போல் இருந்தார். ஆனால் தமிழ் நாட்டுக்காரர் போல் தெரியவில்லை. அங்கு வந்து ஒவ்வொரு குடிசையின் முன் நின்று சத்தம் போட்டார். அங்கு ஆட்களே இல்லாததால் ஒருவரும் வரவில்லை.ஒரு சில வயதானவர்கள் மட்டும் எட்டிப்பார்த்தனர். அவர் ஏதோ சொன்னார், அவர்களுக்கு விளங்கவில்லை. வந்தவருக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை.

      அப்பொழுது அங்கிருந்த ஒரு குடிசையில் இருந்து ஒரு சிறுவன் எட்டி பார்த்தான். வந்தவர் இவனை கண்டவுடன் முகம் பிரகாசமாகி, அவனை அருகில் அழைத்தார். அவன் வர் மறுத்தான். அவர் பல முறை அவனை கூப்பிட்டும் அவன் வெளியே வராத்தால், அவர் அந்த குடிசைக்கு வந்தார். பையன் உடனே உள்ளே ஓடினான். அவர் அப்பொழுதுதான் அவனை கவனித்தார், உடையில்லாமல் இருந்தான். அவன் வெளியே வராத காரணத்தை புரிந்து கொண்டவர் என்ன செய்வது என்று யோசித்தவர் சட்டென தன் சட்டையை கழட்டி அவனை கூப்பிட்டு அதனை போட்டுக்க சொன்னார். முதலில் தயங்கிய அவன் பின் மெல்ல வந்து அவரிடமிருந்து சட்டையை வாங்கி போட்டு கொண்டான். வந்தவர் இப்பொழுது பனியனுடன் இருந்தார். பையன் அவர் சட்டையை போட்டதால் அவன் முழங்கால் வரைக்கும் சட்டை இருந்தது. அதுவும் தொள தொளவென்று இருந்தது. இப்பொழுது பையன் வெளியே வந்தான்.

      இவர் அவனிடம் பேசியது அவனுக்கு புரியவில்லை, என்றாலும் என்னுடன் வா என்று சைகை காட்டியதை புரிந்து கொண்டவன் அவர் பின்னாலேயே வந்தான். சிறிது தூரம் இவர்கள் நடந்து சென்றனர். சற்று தூரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இருவரும் கார் அருகில் சென்றனர். உள்ளே ஒரு வயதான மாது உட்கார்ந்து கொண்டிருந்தார்.

      இவர் பையனிடம் கார் டயர் ஒன்று பஞ்சாராகி இருப்பதை காட்டினார். இங்கு எங்காவது டயர் பஞ்சர் போட்டு தருவார்களா? என்று சைகையிலே கேட்டார். இவன்

அவரிடம், கொஞ்சம் இருங்கள் என்று சைகை காட்டி விட்டு ஓட ஆரம்பித்தான். சட்டை பெரிதாக இருந்ததால் அவனால் வேகமாக ஓட முடியவில்லை. சட்டையை சுருட்டி பிடித்துக்கொண்டு அரை நிர்வாணத்தில் ஓடினான்.

      பதினைந்து நிமிடங்களில் ஒரு சைக்கிள் அங்கு வேகமாக வந்து நின்றது. அதை ஓட்டி வந்த ஒரு இளைஞனும், பின்னால் இந்த பையனும், அவன் கையில் ஒரு பையுடன் உட்கார்ந்திருந்தான். இருவரும், சைக்கிளை விட்டிறங்கினர். அவன் கையில் இருந்த பையை பிரித்து அதிலிருந்த சக்கரத்தை கழற்ற பயன்படுத்தப்படும் பொருட்களை வெளியே எடுத்து மள மள வென வேலையை ஆரம்பித்தனர். காரின் அடியில் இரண்டு பெரிய கற்களை உருட்டி வந்து  இடையில் முட்டு கொடுத்து அந்த இளைஞனும், பையனும் சுறு சுறுப்பாய் வேலை செய்து அந்த டயரை கழட்டினர்.

      மீண்டும் அந்த டயரை எடுத்துக்கொண்டு சைக்கிளில் இருவரும் பறந்தனர். இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது.அவர்கள் திரும்பி வர. கையோடு கொண்டு வந்த டயரை கஷ்டப்பட்டு இருவரும், மாட்டினர். பின் முட்டு கொடுத்த கல்லை அகற்றிவிட்டு அவரிடம் வந்து நின்றனர்.

      இதுவரை அவர்கள் இருவரின் வேலைகளை காருக்கு உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்த வயதான மாது இவரை அழைத்து எதோ சொன்னார். இவரும் தலையாட்டிக் கொண்டு, அந்த இளைஞனையும், பையனையும் அழைத்து அவர்களுக்கு கை நிறைய பணத்தை எடுத்து கொடுத்தார். அந்த இளைஞனும், பையனும், பணத்தை வாங்க மறுத்து விட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ சொன்னார்கள்.

அது இவருக்கு புரியவில்லை, அதே நேரத்தில் அவர்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்று நினைத்தவர், அவர்கள் இருவரையும், காரில் ஏறும்படி கூறினார். இளைஞன், தான் சைக்கிளில் வருவதாக சைகை காட்டினான். பையனை காரில் ஏற்றிக்கொண்டவர், சைக்கிளில் இந்த இளைஞனை முன் செல்ல சொன்னார். கார் அவனை தொடர்ந்தது. காரில் உட்கார்ந்திருந்த பையனுக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது, இது வரை காரையே பார்க்காதவன் இப்பொழுது காருக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறான்.

      சைக்கிளை கொண்டு சென்று நிறுத்திய இளைஞன், மீண்டும் இவர் அருகில் வர அவனையும் காரில் ஏற்றிக்கொண்டவர் பக்கத்து டவுனை நோக்கி விரைந்தார்.

இருவரையும் நன்றாக சாப்பிட வைத்து துணிமணிகள் வாங்கி கொடுத்தார். மீண்டும் அவர்களை அழைத்து கொண்டு அங்கிருந்த அரசு அலுவலகம் நோக்கி காரை செலுத்தினார்.

      அலுவலகத்துக்குள் காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவர் அங்கிருந்த ஊழியர்களிடம் ஏதோ சொன்னார். அவர்கள் தட தடவென அவருக்கு வணக்கம் சொன்னவர்கள் வெளியே வந்தனர். அவர் அந்த பையனையும், இளைஞனையும் அழைத்து இவர்களிடம் சொல்லுங்கள் என்ன வேண்டுமென்று என்று சொன்னார்.

      அந்த சிறுவனும், இளைஞனும், பத்து நிமிடம் அந்த அரசாங்க ஊழியர்களிடம் பேசியதை அந்த அலுவலர்கள் இவரிடம் மொழி பெயர்த்து சொன்னார்கள். இவர் அந்த பையனையும், இளைஞனையும் தட்டி கொடுத்து, சரி என்று தலையாட்டி விட்டு அவர்கள் இருவரையும் மீண்டும் கிளம்பிய இடத்தில் விட்டு விட்டு சென்றார்.

      மறு நாள் காலை ஒன்பது மணி அளவில் அங்கு அரசாங்க அலுவலக வண்டிகள் வந்து நின்றன. அதிலிருந்து அதிகாரிகள் இறங்கினர். அவர்களுக்குள் பேசிக்கொண்டு, நான்கைந்து இடங்களில் குறியிட்டு சென்றனர்.

        மறு நாள் காலை அந்த ஊரில் தட வென சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென்று விழித்து பார்க்க ஒரு பெரிய இயந்திர வண்டி நின்று கொண்டு, நேற்று அவர்கள் குறியிட்டு சென்ற இடங்களில் துளையிட்டு கொண்டிருந்தன. அங்கு அந்த பையனும், இளைஞனும் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தார்கள்.

      ஒரு வாரத்தில் அந்த ஊரில் நான்கைந்து ஆழ் துளை கிணறுகள் போடப்பட்டு தண்ணீர் வசதி செய்து முடித்திருந்தார்கள். அது மட்டுமல்ல, ஊரிலிருந்த அனைவரையும் அழைத்த அரசு விவசாய பண்ணை அலுவலர்கள், இந்த ஊரை சுற்றியுள்ள அவர்களுக்கு உரிமையுள்ள நிலங்களில் விவசாய உற்பத்தி செய்து தர அரசாங்க உதவிகள் செய்து தருவதாகவும், முன்னேற்பாடாக அவர்களுக்கு முதலில் முன் தொகை கொடுத்து, உழவு செய்தல், கிணற்றை தூர் வாறுதல், மற்றும், நில பராமத்து இவைகளுக்கு ஏற்பாடு செய்ய சொன்னது.

      இதைவிட அந்த ஊர் மட்டுமல்லாமல் அருகில் இதை போன்ற வறட்சியான கிராமங்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியான் செய்தியும் வந்தது, பக்கத்து நகரில் இருக்கும் அணையில் இருந்து வாய்க்கால் போடப்பட்டு வாய்க்கால் பாசன வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும் என அறிவித்தனர்.

      இத்தனைக்கும் காரணமான அந்த பையனும், இளைஞனும் நாங்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அங்கு வந்த அரசு ஊழியர்கள் எல்லோரிடமும் சொல்லி விட்டனர். அன்று கலெக்டர் அவர்கள், தன் தாயாருடன் வந்து கொண்டிருந்த பொழுது கார் சக்கரம் பழுதாகி நின்று விட, அப்பொழுது உதவி செய்த இவர்கள் இருவரும், எங்களுக்கு எந்த பணமும் தேவையில்லை, எங்கள் ஊரில் விவசாயமும், தண்ணீர் வசதியும் செய்து கொடுத்தால் போதும் என்று கேட்டுக்கொண்டனர்.

      அவர்களின் வேண்டுகோளை கலெகடர் “தனக்கு உதவி செய்தவர்கள்” என்று சொந்த காரணத்துக்காக அந்த ஊருக்கு உதவி செய்யாமல், உண்மையிலேயே அந்த ஊரும், மக்களும் எந்தளவுக்கு வறுமையில் இருந்திருக்கிறார்கள் என்பதை அந்த பையன் ஆடையில்லாமல் பள்ளிக்கு செல்லமுடியாமல் இருந்ததையும், அந்த இளைஞன், அந்த ஊர் பையனாய் இருந்தும் படிக்க ஆசையிருந்தும் படிக்க வசதி இல்லாமல் பக்கத்து ஊரில் கல் உடைத்து கொண்டிருந்தவன், இந்த சிறுவன் கூப்பிட்டான் என்று சைக்கிளை இரவல் பெற்று வந்து உதவி செய்திருக்கிறான்.

      அப்படி உதவி செய்தும், அவர்கள் கேட்டது ஒன்றே ஒன்றுதான் எங்கள் ஊர் வறட்சியை தீர்த்து கொடுங்கள் என்றுதான். ஐந்தே வருடங்களில் அந்த ஊர் பசுமையாய் ஆகியிருந்தது, இன்னும் ஐந்து வருடங்களில் ஓரளவுக்கு வறுமையும் ஒழிந்திருக்கும் என்று நம்புவோம்.

இன்னும் ஒரு செய்தி அந்த ஊரில் தொடக்க பள்ளி ஒன்றும் வந்து விட்டது. காரணம் வறட்சியினால் அந்த ஊரை விட்டு போனவர்கள் பாதி பேர் மீண்டும் அந்த ஊருக்கே வந்து விட்டதால் அவர்களின் குழந்தைகள் கற்பதற்கு வசதியாக முதலில் தொடக்க பள்ளியை தொடக்கி விட்டனர்.

Help for Village
by Dhamotharan.S   on 05 Sep 2018  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
20-Jan-2019 17:10:06 Visagan said : Report Abuse
arumaiyana kadhai nalla karuthu
 
09-Jan-2019 07:47:38 kayalvizhi said : Report Abuse
indha kadhaiyil ulladhai ponru nadandhal anaithu grammam matrum nagaram nalla nilamaiyil irukkum enbadhu ennudaya karuthu ippadiku kayalvizhi
 
08-Nov-2018 12:15:49 Ramkumar said : Report Abuse
அருமையான கதை உண்மையில் நடந்தால் நன்றாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.