|
|||||
மனைவியிடம் பேசுங்கள்...!!! திருச்சி சிவாவின் உணர்வுப்பூர்வமான பகிர்விற்கு கவிஞர் தாமரையின் கருத்து |
|||||
திருச்சி சிவா பா.உ (திமுக) அவர்களின் துணைவியார் இழப்பிற்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருச்சி சிவா அவர்கள் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இதுதான் அவர் தன் வாழ்நாளிலேயே பேசிய/எழுதிய மிகச் சிறந்த பேச்சு /எழுத்து என்று கருதுகிறேன்..யார் எவரென்று அறியாமல் கைப்பிடித்து, கணவனே இனி எல்லாம் என்று நம்பி மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு வரலாறு.. அவளாலேயே அந்தக் குடும்பம் வளர்கிறது,தழைக்கிறது. அவள் தடுமாறினால் அந்தக் குடும்பம் வீழ்கிறது.. நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்குப் பெரிய தெரிவுகள் கிடையாது..
‘இல்லத்தரசிகள்’ என்ற பெயர் கிடைக்கிறது அவ்வளவுதான்.. ’அரசிகள்’ என்பதெல்லாம் சும்மா... உண்மையில் பலசமயம் ‘இல்லத்தடிமைகள்’ . இன்றைக்கும் நம் சமூகத்தில் குடும்பங்கள் - குடும்ப அமைப்பாகவே கட்டுக்கோப்பாக இருந்து கொண்டிருப்பதற்கு இது போன்ற கோடிக்கணக்கான மனைவிமார்களே காரணம்.. சிவா அவர்கள் சொல்வது போல வாழும் காலத்தில் அவர்கள் அருமை உணரப்படுவது இல்லை.. காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை அவர்கள் தங்களை உருக்கிக் கொள்வதாலேயே அந்த வீட்டின் அன்றாடம் நல்லபடியாகப் போகிறது..ஆனால் காலப்போக்கில் வீட்டில் உள்ள மேசை, நாற்காலி, செருப்பு அலமாரி போன்று ‘அசையாப் பொருள்’ ஆகி விடுகிறார்கள்.. மேடைக்கலைத் துறையில் இதை ‘Set Property' என்பார்கள்.
அடுத்த காட்சித்தொடர்புக்கு தேவை என்பதால் அங்கே ’அது ‘ கட்டாயம் இருந்தாக வேண்டும்..இந்த ’மேடைச்சொத்து’ அன்றாடம் செய்யும் - காலையில் பால் காய்ச்சுவது , உணவு தயாரிப்பது , குழந்தைகளைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்புவது , அவர்களின் உணர்வுகளுக்கு ஈடுகொடுத்து வழிநடத்துவது, துணிமணிகள் பராமரிப்பது, வீட்டுச் சுத்தம், விருந்தினர் உபசாரம், உறவுகள் பேணுவது தொடங்கி அத்தனை பணிகளையும் பட்டியலிட்டால் மாளாது. அன்றாடத்தின் நூறு நூறு பணிகளில் ஒன்றைத் தவற விட்டாலும் அந்த வீட்டின் சமநிலை கெடும்.. ஆனால் இது ‘அன்றாடம்’ ஆகி விட்ட காரணத்தினாலேயே அது அவர்களின் ‘கடமை’ யாகவும் ஆகி விட்டது..‘கடமை’யைச் செய்வதற்கு யார் பாராட்டப் போகிறார்கள் ????. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது கீதை.. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு கீதை ‘கடமை’யைச் செய்து கொண்டேயிருப்பதால்தான் அந்த வீடுகளில் ‘குருசேத்திரங்கள்’ தவிர்க்கப் படுகின்றன... இந்தப் பாவப்பட்ட பெண்மணிகள் இதற்காக அதிகம் போனால் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா ?. அட, உங்கள் பட்டுப்புடவை, அட்சயதிருதியை , அல்வா, மல்லிகைபூவையெல்லாம் ஓரங்கட்டுங்கள்.. இதற்கு வழி இல்லாத இடங்களில் கூட கணவன் தன் ‘அன்றாட வேலை’களைப் புரிந்து, அங்கீகரித்து ஓர் அன்புப் புன்னகை பூக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு வார்த்தை வாய் விட்டுப் பாராட்டி விட்டால் அது Bonus !!. பல வீடுகளில் கணவன்மார்களுக்குத் தங்களின் குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. தெரியாதது மட்டுமல்ல, வீட்டுக்கு வருபவர்களிடம் அது குறித்த ‘பெருமை’ வேறு...எதுவுமில்லாமல் இப்படி உழைத்து உழைத்து உருக்குலைந்து மாண்டே போகும் பெண்கள் வாழ்நாள் முழுக்க மன அழுத்தத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.. இயந்திரமாகவே வாழ்வதில் காலப்போக்கில் சிறு உணர்வையும் வெளிக்காட்ட மறுப்பவர்களாகிறார்கள்..இப்போதுதான் ஆண்கள் சிலர் வெளிப்படையாக முன்வந்து மனைவிகளைத் தாங்கள் நடத்திய விதத்தை ஒப்புக்கொண்டு ஈடு ஏதேனும் செய்ய முடியுமா என்று ஏங்குகிறார்கள்.. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திரு சிவகுமார் அவர்கள் ஒரு மேடையில் பகிரங்கமாக கிட்டத்தட்ட இதே போன்று ’ஒப்புதல் வாக்குமூலம்’ தந்து மனமுருகினார். அதில் எந்த நடிப்பும் இல்லை.. ஆண்கள் மனைவிகளின் உணர்வுகளை அறிந்தே ஆக வேண்டிய கால கட்டம் வந்து விட்டது என்று கருதுகிறேன். அதிலும் இப்போது வேலைக்குச் செல்லும் பெண்கள் விழுக்காடு கூடி விட்டதில் பெண்களுக்கான சுமை பல மடங்கு பெருகி விட்டது. அவர்களுக்கான ‘அன்பு’ அங்கீகாரத்தை நீங்கள் அளித்தே ஆக வேண்டும்.சாதாரண ’இல்லதரசர்கள்’ தவிர்த்து பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்பேற்கக் கடமைப்பட்டுள்ளார்கள். மேடைகளில் எத்தனை பேர் ‘ மனித உரிமை, மனித உரிமை’ என்று முழங்குகிறார்கள். இவர்கள் வீடுகளில் எல்லாம் ‘ மனித உரிமை’ என்ன பாடுபடுகிறது என்று ஒரு கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே இந்த வட்டாரங்களில் புழங்கும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்..
இந்த மேடைப் போராளிகள் பலரும் வீடுகளில் தத்தம் மனைவியரோடு பல நாட்கள் பேசுவது கூடக் கிடையாது, இன்னும் சிலருக்கு சுத்தமாகப் பேச்சுவார்த்தையே கிடையாது.. வருவார்கள், சமைத்து வைத்திருப்பதைச் சாப்பிடுவார்கள், நீட்டிப் படுப்பார்கள், மறுபடியும் கூட்டம் பேசப் போய்விடுவார்கள். இப்படி வாய்ச்சவடால் பேசும் இவர்களாலா சமூகத்தில் ‘சமநிலை’ காக்கப் படுகிறது ???.... இல்லவே இல்லை மடையர்களா, ' என்னை மனுசியாக நடத்துங்கள் ‘ என்று கடைசி வரை மனதிற்குள்ளேயே அழுது மாண்டு போகும் அந்தத் தங்கங்களால்தான் சமூகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.. உங்களாலும் இறுதி வரை ‘ மேடைப் பேச்சு’ களிலேயே காலம் தள்ள முடிகிறது...இந்த் அரிய கடிதத்தின் மூலம் திருச்சி சிவா அவர்கள் ஒரு கல் எறிந்திருக்கிறார். அது தமிழ்ச் சமூகத்தின் கணவர்கள் அனைவரின் மேலும் எறியப்பட்ட கல்லாகக் கருதி ,இதுவரை மூடி வைத்திருந்த கண்,காது, தோல் அனைத்தையும் திறந்து மனைவிகளின் வாழ்க்கைக்குள் காற்று வர உதவுங்கள்... மேடைப்பேச்சுகள் காத்திருக்கும், காலம் காத்திருக்காது... |
|||||
by Swathi on 17 Aug 2014 1 Comments | |||||
Tags: திருச்சி சிவா கவிஞர் தாமரை Trichy Siva Kavignar Thamarai | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|