LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆதவன்

ஒரு தற்கொலை

 

கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான். பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை.
‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும் சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையி லிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை. அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் செய்து கொண்டிருக்க வேண்டும். ‘இந்த உலகம், இந்த மனிதர்கள், தலைவிதி தன்னுடைய வாழ்க்கையின் போக்கு…’ தூங்கி விழிக்கும் நேரத்தில்தான் எண்ணங்கள் தெளிவாகவும் நிர்ப்பய மாகவும், தளைகள் இன்றி வரையரையின்றி சுயேச்சையாக மேய்ந்து திரிகின்றன.
படபடவென்று மீண்டும் சத்தம். சே, என்ன தொந்தரவு! ரகு எழுந்தான். “ம்ம்ம்ம்ம்…அம்மாடி!” பிரமாண்டமான சோம்பல் முறிப்பு; பகலில் தூக்கம், இரவில் தூக்கம். தூக்கம், தூக்கம் – சுத்தச் சோம்பேறியாகப் போயாகிவிட்டது.
லடக்கென்று தாழ்ப்பாளைத் திறந்தான். அகிலா அவனுடைய தங்கை. இப்போது அவளுக்கு பரீட்சை நடக்கிறது. சீக்கிரம் வந்து விடுகிறாள். பள்ளி இறுதிப் பரீட்சை.
ரேடியோ ஸ்விட்சைப் போட்டுவிட்டு, ரகு பாத்ரூமுக்குச் சென்றான். சோப், நுரை, தண்ணீர், டவல்-ரேடியோ சளபுளவென்று இரையத் தொடங்கியது. ஓடி வந்து ஸ்டேஷனில் திருப்பி வைத்தான்- சினிமா பாட்டு.
சமையலறையில் அகிலாவும் அம்மாவும் பேசிக் கொண டிருந்தார்கள். “த்சு, த்சு, ஐயோ பாவம். அக்கிரமமாக இருக்கிறதே!” என்றாள் அம்மா.
“யாரு பாவம்? எது அக்கிரமம்?” என்றவாறு ரகு அங்கு சென்றான்.
“இவள் கிளாஸிலே படிக்கிற ஒரு பெண், தற்கொலை பண்ணிக் கொண்டு விட்டாளாம்டா!”
“நிஜமாவா?”
“ஆமாண்டா. நேற்றுக் காலையில்தான்-சீ பாவம்” என்றாள் அகிலா.
“உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் விட்டுக் கொண்டு, கொளுத்திக் கொண்டு விட்டாள்”.
“இஸ்ஸ், பகவானே!” என்றான் ரகு. கேட்கும்போதே என்னவோ செய்தது. என்ன கொடுமை, என்ன பயங்கரம். திகுதிகுவென்று பற்றியெரியும் ஒரு பெண்-தங்கையின் வயதே ஆன சிறு பெண்-அவன் கற்பனையில் தோன்றினாள்.
“எதற்காக இப்படிப் பண்ணினாள்?” என்று ரகு மெதுவாய்க் கேட்டான். அந்தப் பெண்ணின் தற்கொலை தன் மனத்தை மிகவும் உலுக்கி விட்டது என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள முயலுபவனைப் போல அவன் தங்கையிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். “பரீட்சை கிரீட்சை சரியாக எழுதவில்லையா?”
“அதெல்லாம் ஒன்றுமில்லையடா. அவளுடைய சித்தி அவளை ரொம்பக் கொடுமைப்படுத்துவாள். அது தாங்காமல் தான்”.
தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அந்தப் பெண்தான் செய்யுமாம் (என்று அகிலா சொன்னாள்) விருந்தாளிகள் வரும்போது மட்டும் சித்திதான் எல்லா வேலைகளையும் செய்வதாகக் காட்டிக் கொள்வாளாம். இந்தப் பெண் துணிகளையெல்லாம் துவைத்துப் பிழிந்து வைக்குமாம். பிழிந்த துணிகளை சித்தி வெளியே கொண்டு உலர்த்து வாளாம்- பார்க்கிறவர்கள் இவள்தான் துவைத்தாள் என்று நினைத்துக் கொள்வதற்காக.
அந்தப் பெண் வெளியே வந்தால் குற்றமாம். நாலு பேரிடம் பேசினால் குற்றமாம். சிநேகிதிகள் அவளைப் பார்க்கச் சென்றால், சித்தியும் கூடவே இருந்து பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாளாம்.
“நல்லவேளை, பள்ளிக்கூடத்துக்குப் போவதையாவது தடுக் காமல் இருந்தார்களே”.
பள்ளிக்கூடத்தில் கூட இந்தப் பெண் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடும், பாவம்!” என்றாள் அகிலா. “வீட்டில் நாளெல்லாம் வேலை செய்த களைப்பு. பரீட்சை சமயத்தில் கூட அவளுடைய சித்தி படிக்க விட மாட்டாளாம். படிக்க உட்கார்ந்தால் வேலை ஏவுவாளாம். ‘எரிஞ்சு போயேண்டி, எரிஞ்சு போயேண்டி’ என்று வைவாளாம். நேற்றுக் காலையில் இவள் பாத்ரூமுக்குச் சென்று இப்படி நிஜமாகவே தன்னை எரித்துக் கொண்டு விட்டாள், பாவம். ஏதோ புகை வருகிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தார்களாம். அவசரமாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். கொஞ்சம் ஸ்மரணை வந்ததாம். ஆனால் நேற்று சாயங்காலம் உயிர் போய் விட்டது. போலீசுக்கு வாக்குமூலம் கொடுத்தபோது கூட,’அப்பா மேலேயோ சித்தி மேலேயோ எந்தத் தப்புமில்லல் என்மேலேதான் தப்பு” என்று சொன்னாளாம்.
அகிலா பேசிக் கொண்டே போனாள். ‘இன்று அகிலாவுக்கு நல்ல ஆடியன்ஸ்’ என்று ரகு நினைத்தான். அம்மா கடைசி அகப்பை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றினாள். ‘இஸ்ஸ்…’ என்ற மாவின் முறையீடு. சூடு பொறுக்காமல் தவித்து ஒலியெழுப்புகிறதோ? அந்தப் பெண்ணுக்குச் சூடு பொறுத்திருக்குமா? தலைமயிர், கண், உடல், நகம், இதெல்லாம் எரியும்போது எப்படியிருந்திருக்குமோ? ஆனாலும் அந்தப் பெண் கத்தவில்லையாமே! என்ன தைரியம், என்ன பொறுமை! ரகுவுக்குப் புல்லரித்தது.
இரண்டு தோசைதான் தின்ன முடிந்தது.
“ஸ்டவ்வை அணைத்து விடு” என்றாள் அம்மா. ரகு திரிகளின் உயரத்தை இறக்கி, பூ, பூ வென்று ஊதினான். அணையவில்லை. “இந்தத் திரிஸ்டவ்வில் இதுதான் கஷ்டம்” என்றாள் அம்மா. ரகு பலத்தையெல்லாம் திரட்டி மீண்டும் ஊதினான். பொக்கென்று ஸ்டவ் அணைந்தது. வாயெல்லாம் மண்ணண்ணெய் நெடி. இலேசாகக் குமட்டியது. அந்தப் பெண் தலை வழிய மண்ணெண்ணெயைக் கொட்டிக் கொண்டாளாம். என்ன தைரியம்! ரகுவின் உடல் இலேசாக நடுங்கியது; ஹாலுக்கு வந்தான். ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அநதப் பெண் என்றாவது விச்ராந்தியாக ரேடியோ கேட்டிருக்குமோ என்னவோ இருந்த நாளெல்லாம் வேலை செய்து கொண்டேயிருந்தது. பிறகு ஒருநாள் அல்பாயுசில் தன்னை மாய்த்துக் கொண்டது. ஒரு சிறு பெண்ணின் சோகக் கதை.
பட்டென்று ரேடியோவை அணைத்தான்.
சட்டை, பாண்ட், செருப்பு,ரகு வீட்டைவிட்டு வெளியே வந்தான். வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மேற்கே, மாலைச் சூரியன் மேகப் பெண்களுடன் ஏதோசல்லாபித்தவாறே அவர்கள் மேல் செம்மை படருவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். நாணத்தில் மேனி முழுதும் சிவக்கும்படி அப்படியென்ன சொல்லியிருப்பான்? வானத்தின் மறுகோடியில், அடுத்துவரும் தன்னுடைய காட்சிக்காக மேடைக்குப் பின்னால் காத்திருக்கும் நடிகன் போலச் சந்திரன் மங்கலாகத் தெரிந்தான். சந்திரனுடைய பொறுமையைச் சோதிப்பதே போலச் சூரியன் மேகப் பெண்களுடன் தன் சல்லாபத்தை நீடித்துக்கொண்டே சென்றான்.
கீச்சு பீச்சு என்று கிளிக் கூட்டம் ஒன்று பறந்து சென்றது. ரகு சாலையில் நடக்கத் தொடங்கினான். மார்ச் மாத பிற்பகுதி. மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகள் சாலை மேல் பாய் விரித்திருந்தன. சருகுகள் உதிரட்டும், பரவாயில்லை. ஆனால் பச்சைப் பசேலென்ற இளந்தளிரை வெடுக்கென்று பறித்துவிட்டாயே, கடவுளே. இதெந்ன விளையாட்டு?
ஏன் இப்படி?ஏன்?
உலக நினைவே இன்றிக் கைகோத்துச் செல்லும் காதல் ஜோடிகள், தம்பதிகள்; ஐஸ் ப்ரூட் சப்பிக் கொண்டு சென்ற கான்வென்ட் சிறுமிகள்; பேரனின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் ஒரு தாத்தா; ஹாக்கிக் கம்புகளைச் சுழற்றிக் கொண்டு வரும் முரட்டுச் சீக்கிய இளைஞர்கள்; ஹனுமார் கோயிலருகே கச புசவென்று பேசிக் கொண்டு சரக் புரக்கென்று நடந்து போன பாவாடை மேலாக்கு கும்பல்; ‘ரிவோலி’ வாசலில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான சரீரங்களிலிருந்து விலை யுயர்ந்த ஒப்பனைச் சாமக்கிரியைகளின் நறுமணம் கமழ, பளபளக்கும் கார்களிலிருந்து இறங்கி தியேட்டரின் குளுமையை நோக்கி மிதந்து சென்ற மேல் சொஸைட்டி ராணிகளும் ராஜாக்களும், காதி நிலையத்துக்கு வெளியே பாலிஷ்காரனிடம் ஷூவை ஒப்படைத்து நின்ற கணவரும், பக்கத்தில் பூக்காரனிடம் பூ வாங்கிக் கொண்டிருந்த அவர் மனைவியும்; ‘ஸ்டாண்டார்டு’க்குள்ளிருந்து, ஒரு கையில் புதிதாக வாங்கிய மதுப் புட்டிகளுடன், இன்னொரு கையால் நாயைப் பிடித்தபடி வந்த வெளிநாட்டு இளைஞர்-ரகுவுக்கு எதைப் பார்த்தாலுமே எரிச்சலாக இருந்தது.
சீச்சீ! என்ன உலகம் இது! ஒவ்வொருவருக்கும் தங்கள் குறுகிய வாழ்க்கைகளைப் பற்றித்தான் கவலை; தங்கள் சொந்த சுகங்கள்தான் பெரிது. மற்றவர்கள் எப்படிப் போனாலும் அக்கறையில்லை.
அந்தப் பெண்?
பாவம், ஐயோ பாவம், ரொம்பப் பாவம். ‘பெண்ணே, பெண்ணே சமத்துப் பெண்ணே, அநியாயமாகச் செத்துப் போனாயே சின்னப் பெண்ணே! இப்படியும் ஒரு வாழ்க்கையா?’
ரகு காப்பி ஹவுஸ்ஸுக்குள் நுழைந்து, இங்குமங்கும் பார்த்தவாறே மேஜைகளுக்கிடையில் நடந்தான்.
“ஹலோ!” என்ற குரல்.
ரகு திரும்பிப் பார்த்தான். கிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான். “ரொம்ப நேரமாக இருக்கிறாயா?” என்று ரகு புன்னகையுடன் அவனருகே இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தான்.
“பத்து நிமிஷமாச்சு-மத்தப் பசங்கள் எங்கே?”
“வந்து விடுவார்கள்” என்று ரகு சுற்றிலும் நோட்டம் விட்டான். வழக்கமான கூட்டம். அதே மனிதர்கள், அதே முகங்கள். போர், போர், போர். உடுப்புகளை மாற்றிக் கொள்வதுபோல முகங்களையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளட்டுமே! வாழ்க்கையில் கொஞ்சம் மாருதல் இருக்கும்.
கிருஷ்ணன், ரகு, இன்னும் சில சினேகிதர்கள் எல்லோருமாகத் தினசரி மாலையில் காப்பி ஹவுஸில் கூடுவார்கள். உலகத்துப் பிரச்னைகளையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு பரிவோடும் கவலையோடும் அலசுவார்கள்; காப்பி, சிகரெட், பேச்சு, காப்பி, சிகரெட், பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு.
சே!
இன்று ரகு பேசும் ‘மூடில்’ இல்லை. அங்குமிங்கும் அலைந்தாடும் வெயிட்டர்களைப் பார்த்தான். பரிதாபமாக இருந்தது. வெயிட்டரின் கையிலிருந்த தட்டைத் தன் கையில் வாங்கிக் கொண்டு அவனை நாற்காலியில் உட்காரச் சொல்லலாம் போலிருந்தது.
“என்ன, பேசமாட்டேன் என்கிறாயே?” என்றான் கிருஷ்ணன்.
“த்சு-பேச ஒன்றுமில்லை”.
“அதோ சந்திரனும் பாஸ்கரனும் வருகிறார்கள்”.
சந்திரனும் பாஸ்கரனும் வந்து உட்கார்ந்தார்கள்.
“என்ன இவ்வளவு லேட்?” என்றான் கிருஷ்ணன்.
“உன்னைப் போல அரசாங்க உத்தியோகமா? வேலையை முடித்துவிட்டுத்தான் வரமுடியும்” என்றான் பாஸ்கர். அவன் ஒரு டிராவல் ஏஜன்ஸியில் வேலை பார்த்து வந்தான்.
“மேலும் காபி ஹவுஸில் நாம் கழிக்கும் நேரத்தைக் குறைப்பது நல்லதுதான்” என்றான் சந்திரன்.
“ஏனோ?”
“யூஸீ, மேல் நாடுகளில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியாகி விட்டது. அவர்கள் ஹோட்டலில் இளைப்பாறலாம், மணிக்கணக்காகப் பேசலாம். ஆனால் நம்மிடம் அவ்வளவு நேரமில்லை; நாம் கடுமையாக உழைக்க வேண்டும், ஒவ்வொரு நிமிடமும்”.
“ஹியர், ஹியர்” என்றான் கிருஷ்ணன்.
“ரகுப் பாப்பா ஏன் பேசமாட்டேன்கிறது?” என்றான் பாஸ்கர்.
“என்னிடம் பேச நேரமில்லை; மேல்நாட்டு இளைஞர்கள்தான் பேசலாம்” என்று ரகு கண்ணைச் சிமிட்டினான்.
எல்லோரும் சிரித்தார்கள்.
“நீ வந்து ரொம்ப நேரமாகிறதோ?” என்று பாஸ்கர் ரகுவைக் கேட்டான்.
“முதலில் நான் வந்தேன். பிறகு அவன் வந்தான்” என்றான் கிருஷ்ணன்.
“ஆனால் நான்தான் தினம் முதலில் வருகிறேன் – ஞாபகமிருக்கட்டும்” என்றான் ரகு.
“உனக்கென்னப்பா. அதிர்ஷ்டசாலி. நினைத்தபோதெல் லாம் வரலாம்”.
“வஞ்சகப் புகழ்ச்சியா?” என்றான் ரகு.
ரகு இஞ்சினியரிங் பரீட்சை எழுதிவிட்டு இதுவரை வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான். ஒரு நல்ல வேலைக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனு டைய அப்பாவும் காத்துக்கொண்டிருந்தார்.
“வேலை தேவை – ஓர் இளம் இஞ்சினியரிங் கிராஜுவேட்டுக்கு. ஆரம்பச் சம்பளம் ஆயிரம் ரூபாய். நல்ல காப்பி ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ள இடத்தில் போட்டால் நல்லது. பகலில் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் பையன் வஞ்சனை இல்லாமல் வேலை செய்வான். அறையில் ஏர் கண்டிஷனர் இயங்கும்போதோ, ரேடியோ பாடும்போதோ கூட பையனால் தொடர்ந்து வேலை செய்ய முடியும்; பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளலாம். நல்ல குணம் நல்ல மானர்ஸும் உள்ளவன். மேலதிகாரி காப்பியோ சிகரெட்டோ அளித்தால் தட்டமாட்டான். (மேலதிகாரிகள் தங்கள் பிராண்டுகளைக் குறிப்பிடவும்).
பையன் சிவப்பாக, லட்சணமாக இருப்பான். எந்த ஆபீஸுக்கும் சோபை தரக்கூடிய ஆள். லேடி ஸ்டெனோக்கள் உள்ள கம்பெனிகள் (ஐரோப்பியனாக இருந்தால் நல்லது) மட்டுமே விண்ணப்பிக்கவும்”.
“ஐரோப்பிய ஸ்டெனோவா, ஐரோப்பிய கம்பெனியா?”
“எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்”.
“எக்‌ஸலன்டுடா! நாளைக்கே உன் பேப்பரில் போட்டு விடு” என்றான் கிருஷ்ணன். சந்திரன் ஒரு நியூஸ் பேப்பரில் ரிப்போர்ட்டராக இருந்தான்.
“எனக்குச் சிரிப்பே வரவில்லை” என்றான் ரகு.
“கிச்கிச்சு மூட்டட்டுமாம்மா?” என்றான் பாஸ்கர்.
வெயிட்டர் வந்தான்.
“வெயிட்டர், நாலு காப்பி சுடச் சுட சீக்கிரம்!”
ஆமாம், சீக்கிரம், சீக்கிரம். அழகான இளமைப் பருவம்; உடல் முழுவதும் சக்தி; மனம் முழுவதும் சந்தோஷம். எங்கே எதைப் பார்த்தாலும் குதூகலம், கோலாகலம். அனுபவிக்க வேண்டிய பருவமே இதுதான். பருவம் தீருவதற்குள் அனுபவிக்கலாம். சீக்கிரம் கொண்டு வா வெயிட்டர், சுடச் சுடக் கொண்டு வா.
பாஸ்கர் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.
“சிகரெட்?”
சிகரெட் பட்டுவாடா; சந்திரனுக்கு ஒன்று, கிருஷ்ணனுக்கு ஒன்று, ரகுவுக்கு ஒன்று. சற்றே தயங்கிவிட்டு ரகு சிகரெட்டை எடுத்துக் கொண்டான். ‘சரக்’ என்று பாஸ்கர் நெருப்புக் குச்சியை உரசினான். நெருப்பு…ரகுவுக்குத் திடீரென்று தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பெண், எரிந்து போன அந்தப் பெண்! அமிழ்ந்திருந்த அவள் நினைவு இப்போது மீண்டும் மேலே எழும்பியது. எரியும் தீக்குச்சி தன் வாயருகே வரும்போது ரகு உதட்டில் பொருத்திய சிகரெட்டைச் சட்டென்று அகற்றினான்.
“டேய், என்ன ஆச்சுடா?”
“நான் ஸ்மோக் பண்ணவில்லை”.
“ஏன்?”
“வேண்டாம்”.
“சரி தான் குடிடா”.
“நோ, நோ”
“குடிக்க மாட்டே?”
“ஊகூம்”.
“திடீர்னு என்னடா உனக்கு?”
“என்னவோ, இப்போ குடிக்கணும் போல இல்லைடா”.
“வேறே எப்படி இருக்கு?”
“………………..”
“படுத்தாதேடா கண்ணு. குடிச்சுடும்மா. சமர்த்து இல்லை?”
“எனக்கு வேண்டாம்டா பாஸ்கர். ப்ளீஸ், தொந்தரவு பண்ணாதே”.
தீக்குச்சியில் நெருப்பு விரலை நெருங்கி விட்டது. பாஸ்கர் அவசரமாகத் தன் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு குச்சியை எறிந்து விட்டு விரலை உதறினான். அந்த விரலை வாய்க்குள் விட்டு உமிழ்நீரால் தைலமிட்டான். இந்தச் சூடே இவனுக்குத் தாங்கவில்லையே! அப்படியானால் அந்தப் பெண்ணின் சாதனை! ஈசுவரா, பயங்கரம்!
காப்பி வந்து எல்லோரும் பருகத் தொடங்கும்வரை ரகு காத்திருந்தான். பிறகு,”இன்று சோகமான ஒரு நிகழ்ச்சி நடந்தது” என்று தொடங்கினான். தன் மனச் சுமையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினான் அவன். “என் தங்கையின் வகுப்பு சிநேகிதி சிறு பெண்…என்று அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறிக் கொண்டு போனான்.
உணர்ச்சி வசப்பட்டவனாய், தான் கேள்விப்பட்ட வற்றையும், தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையும் ஒன்றுவிடாமல் சொன்னான் ரகு. ஆனால் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர்களுடைய முகங்களைப் பார்க்கும்போது அவனுக்கு ஏமாற்றந்தான் உண்டாயிற்று. அந்தப் பெண்ணின் தற்கொலை அவனைப் பாதித்தது. அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அல்லது ஒருவேளை அவர் களுடைய நெஞ்சைத் தொடும் விதமாய் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ!
“அவ்வளவுதான் கதை. ஒரு சிறு பெண், அநியாயமாகச் செத்துப் போனாள்” என்று ரகு கூறி முடித்தான்.
“சே சே! மோசம்” என்றான் பாஸ்கர்.
“சில பேருக்கு இதயமே கிடையாதப்பா” என்றான் கிருஷ்ணன்.
“இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்ட அப்பாதான் குற்றவாளி. இரண்டாவது மனைவியும் சிறு பெண்தானே. அவளுக்கு இது முதல் கல்யாணம். கணவனுடைய அன்பு முழுவதையும் பங்கு போட்டுக் கொள்ளாமல், முதல் மனைவியின் குழந்தைகளுக்குக் கூடப் பங்கு தராமல், தானே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு, பொறாமை” என்று சந்திரன் விவரித்தான்.
பிறகு சிறிது நேரம் மௌனம். அது ஒரு சோகமான நிகழ்ச்சி என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் இப்படியொரு விஷயத்தை அவன் பிரஸ்தாபித்து மாலை நேர மகிழ்ச்சியைக் கெடுத்திருக்க வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதாக ரகு உணர்ந்தான். “இந்த உலகமே துன்பங்கள் நிறைந்த பயங்கர சமுத்திரமடா ரகு; அதற்காக நீ என்ன செய்ய முடியும், நாங்கள் தான் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் கேட்பது போலிருந்தது.
“தற்கொலை செய்வது கோழைத்தனமா? அல்லது துணிச்சலான செயலா?” என்று மௌனத்தைக் கலைத்தான்.
“கோழைத்தனம்தான்” என்றான் கிருஷ்ணன்.
“அப்படிச் சொல்லிவிட முடியாது” என்றான் பாஸ்கர். “ஒரு தனி மனிதனின் தற்கொலை சில சமயங்களில் கம்பீரமும் வலிமையும் தூய்மையும் அழகும் நிரம்பியதாக இருக்கக் கூடும். தன் நெஞ்சில் அவன் கொண்டிருந்த ஓர் உறுதியான நம்பிக்கையைத் தனக்காகவும் மற்றவர்களுக்காவும் நிரூபிக்கக் கூடிய ஒரே சாதனமாகத் தற்கொலைதான் மிஞ்சி இருக்கக் கூடும். டைரக்டர், ‘பெர்க்மானி’ன் ஒரு படத்தில், ‘ஐயோ சீனர்கள், அணுகுண்டு தயாரிக்கிறார்களாமே. பொறுப்புடன் நடந்து கொள்வார்களோ என்னவோ, இனி உலகத்தின் கதி என்ன? என்ற கவலையிலேயே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்”.
பாஸ்கர் பேசிக் கொண்டே போனான். சினிமாவைப் பற்றிப் பேசாவிட்டால் இவனுக்குத் தூக்கம் வராதென்று ரகு நினைத்தான். பெர்க்மான், குரஸோவா, ஃபெலினி, பொலன்ஸ்கி, ரே, முதலிய சர்வதேச டைராக்டர்களின் பெயர் அவன் பேச்சில் சர்வசாதாரணமாக அடிபடும். தானும் ஒரு சினிமா டைரக்டராகப் போக வேண்டுமென்ற ஆசை பாஸ்கருக்கு இருந்தது. ஆனால் வாழ்நாளை ஸ்டூடியோக்களில் கழிக்காமல் ஏதோ ஒரு டிராவல் ஏஜன்ஸியில் கழித்துக் கொண்டிருந்தான். உலகத்துக்கு ஓர் இளம் டைரக்டர் நஷ்டம்.
“பாஸ்கர் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றான் சந்திரன்.
“தன்னை வெறும் கவர்ச்சிப் பொம்மையாக நினைக் கிறார்களே, உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உள்ள நடிகை மரிலின் மன்றோ ஏங்கினாள். கடைசியில் அவளை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். டால்ஸ்டாயின் அன்னகரீனாவும், ஃபிளாபர்ட்டின் மேடம் பொவேரியும் தற்கொலை செய்து கொள்வதாகப் படிக்கும்போது நமக்கு வருத்தம் உண்டானாலும் கூடவே ஒரு மனநிறைவும் பரவசமும் ஏற்படவில்லையா? ஹெமிங்க்வே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இந்தத் தலைமுறையின் முரட்டுத்தனத்தையும் அர்த்தமின்மையையும் தன் எழுத்தில் நிரூபித்தது போலவே தன் சாவின் மூலமும் அவர் நிரூபித்துவிட்டார்”.
பெரிய வார்த்தைகள், பெரிய சர்ச்சைகள் “அந்தச் சிறு பெண்ணைப் பற்றி நினைத்துப் பாருங்கள்” என்றான் ரகு. “வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்காமல் சிறு வயதி லேயே இறந்து விட்ட பெண்-துன்பத்திலே வாழ்ந்து துன்பத்திலேயே இறந்தவள்-அவளைப் பற்றி எழுத வேண்டும், சினிமா எடுக்க வேண்டும்”.
“எடுக்கலாம்” என்றான் பாஸ்கர். “நமக்குப் பிடிக்காத ஒரு நடிகைக்கு அந்தப் பெண்ணின் வேஷத்தைக் கொடுத்து, நிஜமாகவே கொளுத்தி விடலாம். ரியலிஸத்துக்கு ரியலிஸமும் ஆச்சு!”
“சித்தி கொடுமைப் படுத்துவதெல்லாம் பழைய ‘தீம்’ அப்பா, இதையெல்லாம் வைத்து எவ்வளவு தடவைகள் தான் எழுதுவது?” என்றான் சந்திரன்.
சந்திரன் முன்பெல்லாம் நிறைய எழுதுவான். இப்போதெல்லாம் எழுதுவது இல்லை. எழுதியதொன்றும் பிரசுரமாகாத ஏமாற்றம் கசப்பாக மாறிவிட்டது. இலக்கியத்தையும், இலக்கிய ஆசிரியர்களையும் கேலி செய்யத்தான் இப்போது அவனுக்குத் தெரிகிறது.
இனி அவர்களுடன் பேசிப் பயனில்லை. ரகு பேசாமல் இருந்தான். ‘அந்தப் பெண் இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வந்திருப்பாளோ? எஸ்பிரஸோ காப்பி குடித்திருப்பாளோ? ‘டூட்டி ப்ரூட்டி’ ஐஸ்கிரீம் தின்றிருப்பாளோ? கனாட்பிளேஸ், குதுப்மினார், ஜூ, 70 எம்.எம். சினிமா இதெல்லாம் பார்த்திருப்பாளோ?’
இரவில் சாப்பிட்டு விட்டு அவன் வராந்தாவில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானம் முழுவதும் நட்சத்திரங்கள். அந்தப் பெண் ஒரு நட்சத்திரமாக மாறியிருப்பாள். அல்லது, சொர்க்கத்தில் ஆதரவாக அணைத்துக் கொள்வார்கள். அன்பைச் சொரிந்து திணற அடிப்பார்கள். விதவிதமான உடைகளும் நகைகளும்-இனி அந்தப் பெண்ணுக்கு யோகந்தான்.
தங்கையின் இங்கிலீஷ் புத்தகத்தில் ஆன்டர்ஸன் எழுதிய ‘தீப்பெட்டிச் சிறுமி’ என்ற கதை இருக்கிறது. தீப்பெட்டி விற்கும் ஓர் இளஞ்சிறுமி சாலையோரத்தில் குளிர் இரவைக் கழிக்க நேருகிறது. கிறிஸ்துமஸ் சமயம். பனி பெய்கிறது. அந்தப் பெண் குளிர் காய்வதற்காக தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகக் கிழிக்கிறாள். ஒவ்வொரு தீக்குச்சி எரியும் போதும் பல அழகிய காட்சிகள் அவளுக்குத் தெரிகின்றன. அவள் விலையுயர்ந்த உடைகள் உடுத்தி யிருப்பது போலவும், மாளிகையில் நடனமாடுவது போலவும், விருந்து சாப்பிடுவது போலவும்-இப்படியே இரவு முழுவதும் பல இன்ப அனுபவங்கள். பொழுது விடிந்ததும் சாலையில் போகும் மக்கள், ஒரு சிறுமி இறந்து கிடப்பதையும் சுற்றிலும் தீக்குச்சிகள் இறைந்திருப்பதையும்தான் பார்க்கிறார்கள். அவள் கண்ட அழகிய காட்சிகளை இவர்கள் எங்கே கண்டார்கள்? ஒரு வேளை இந்தப் பெண்ணும் பாத்ரூமில் தன்னைப் பற்ற வைத்துக் கொண்ட கணத்திலிருந்து ஒரு புதிய இன்ப உலகத்தில் பிரவேசித்திருக்கலாம்; யார் கண்டது?
உள்ளே அகிலா அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றித்தான். ரகுவும் பேச்சில் கலந்து கொண்டான். ‘இன்று பரீட்சை ஹாலில் அந்தப் பெண்ணின் நாற்காலி காலியாக இருந்திருக்கும்; இல்லையா?” என்றான்.
“ஊஹும் இல்லை. அவளுடைய நாற்காலியை எடுத்துவிட்டு, மற்ற நாற்காலிகளைக் கொஞ்சம் நகர்த்திப் போட்டுவிட்டார்கள்”.
ரகுவுக்குச் சுருக்கென்றது. இதுதான் நியதி, உலகத்தின் பயங்கர நியதி. அப்படியொரு பெண் இருந்ததாகவே நினைவில்லாததுபோல், தன் பாட்டில் இயங்கிக் கொண் டிருக்கும். பரீட்சை அட்டென்டன்ஸ் தாளில் முதல் இரண்டு நாட்கள் பிரஸன்ட், பிறகு ஆப்ஸென்ட், ரிஜிஸ்தர்களில் அவள் பெயருக்கு எதிராக ஒரு சிவப்புக் கோடு-ஒரு சிறு பெண் இந்த உலகத்தில் வாழ்ந்தாள், ஸ்கூல் பைனல் வரக் படித்தாள் என்பதற்கு மிஞ்சக் கூடிய சான்றுகள் இவைதான்.
பேப்பரில் ரிசல்ட் வரும். அந்தப் பெண்ணின் பெயர் இருக்காது. அகிலா காலேஜில் சேருவாள். பி.ஏ., படிப்பாள். எம்.ஏ., படிப்பாள். கறுப்பு கவுன் அணிந்து போட்டோ எடுத்துக் கொள்வாள். பிறகு ஒரு நாள் கூறைப் புடவை அணிந்து போட்டோ எடுத்துக் கொள்ளும் தருணமும் வரும். கல்யாணம், கணவன், குழந்தைகள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு கட்டங்கள்! ஆனால் அந்தப் பெண்தான் பாவம், எதையுமே பார்க்காமல் அனுபவிக்காமல் போய்விட்டது.
அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தாலே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவனுடைய நண்பர்களுக்கு ஏனோ அது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை?
‘நான் வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதால் இதைப் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்கிறேன் போலிருக்கிறது. ஒருவேளை, நானும் வேலைக்கு போகத் தொடங்கிய பிறகு…”
வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு மனிதர்கள் அவனைக் கவர்ந்திருந்தார்கள். பெரியவனான பிறகு அவர்களைப் போலத் தானும் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறான். ஐந்து வயதில் இஞ்ஜின் அல்லது பஸ் டிரைவர்கள், பத்து வயதில் அவனுடைய ‘லெஃப்டினன்ட்’ அத்திம்பேர், பதினைந்து வயதில் அவனுடைய அடுத்த வீட்டு ஓவியர், அவர் படம் வரைவதைப் பார்த்து, அவனும் படம் வரையத் தொடங்கினான். ஓவியர் மிகவும் சந்தோஷப் பட்டார். “டாலன்ட் இருக்கிறது. ‘டெவலப்’ பண்ணு” என்று சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தப் பதினைந்து வயது ஆசை உண்மையான ஆசை, மனப்பூர்வமாக அவனால் உணரப்பட்ட ஆசை, ரகு ஆர்ட் ஸ்கூலில் சேர விரும்பினான். ஒரு கலைஞனின் வாழ்க்கை அவனை மிகவும் கவர்ந்தது.
ஆனால் அப்பாதான் சம்மதிக்கவில்லை. தற்செயலாக, தான்தோன்றியாக, மனதுக்கிசைந்தவாறு அமைக்கப்படும் ஒரு வாழ்க்கையின் சந்தோஷங்கள் அவருக்குப் புரியவில்லை. உலகத்தில் தன் கடைசி நாள் வரை, ஒவ்வொரு நாளுக்காகவும் முன் ஜாக்கிரதையாகத் திட்டங்கள் போட்டு வைக்கும் மனப்பான்மை அவருக்கு. குழந்தையைத் தன் போக்கில் தனியே நடக்க விட்டால் தடுக்கி விழுந்தால்கூட அழாது. இதை அவர் உணரவில்லை.
நான் தடுக்கி விழவில்லை. இனித் தடுக்கி விழவே மாட்டேன். இன்று நான் இஞ்சினியர். ஆனால் இது எனக்கு லாபமா, நஷ்டமா? என்று ரகு சிந்தித்தான். சில வருஷங்கள் முன்வரை அவன் மனத்தில் எண்ணற்ற உணர்வுகளும் ஏண்ணங்களும் வண்ணச் சேர்க்கைகளும் தோற்றங்களும் தோன்றிய வண்ணமிருந்தன. ஏதேதோ படமெழுத வேண்டுமென்ற வெறி இருந்தது. இப்போது உணர்வுகள் தான் மிச்சம்; வெறி இல்லை. இன்னும் சில வருடங்களில் உணர்வுகளும் மறைந்துவிடுமோ? அப்போது யாரோ ஒரு தற்கொலை செய்து கொண்டாள், அது என்னை அவ்வளவாகப் பாதிக்காதோ என் சிநேகிதர்களைப் போல எனக்கும் அனுதாபம், பிரிவு முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கி விடுமோ?
பிறகு சந்திரனைப் போலவும் பாஸ்கரைப் போலவும் நானும் சும்மா கலையைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் வறட்டுக் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருப்பேன். உயிர் இருக்காது, உணர்ச்சிகள் இருக்காது, இலட்சியங்கள் இருக்காது. தேஜோமயமாக என்னுள்ளே நிரம்பியுள்ள உணர்வுகள் செத்துக் கொண்டே போகும்.
இதுவும் தற்கொலைதானே?
ரகுவிற்குத் தன் இதயத்தை யாரோ அழுத்திப் பிசைவது போலிருந்தது. மண்டையில் சம்மட்டிகளால் பளார் பளார் என்று ஓங்கி அறைவது போலிருந்தது. வெட்ட வெளிக்கு வேகமாக ஓடிப் போய்க் கோவென்று கதறியழலாம் போல் இருந்தது இதுவும் தற்கொலைதான், இதுவும் தற்கொலை தான். கலை உணர்வுகளுக்கும் மென்மையான இலட்சியங் களுக்கும் மதிப்பில்லாத சமூகத்தில் இது போல எவ்வளவு தற்கொலைகள்.
வாழ்க்கையை முழுவதும் உணராமலேயே அந்தப் பெண் செத்து விட்டாள். மெல்ல மெல்ல செத்துக் கொண்டே போவதை உணராமல், நாங்கள் வாழ்ந்து கொண்டே-யிருப்போம்.

         கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான். பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை.‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும் சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையி லிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை. அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் செய்து கொண்டிருக்க வேண்டும். ‘இந்த உலகம், இந்த மனிதர்கள், தலைவிதி தன்னுடைய வாழ்க்கையின் போக்கு…’ தூங்கி விழிக்கும் நேரத்தில்தான் எண்ணங்கள் தெளிவாகவும் நிர்ப்பய மாகவும், தளைகள் இன்றி வரையரையின்றி சுயேச்சையாக மேய்ந்து திரிகின்றன.படபடவென்று மீண்டும் சத்தம். சே, என்ன தொந்தரவு! ரகு எழுந்தான். “ம்ம்ம்ம்ம்…அம்மாடி!” பிரமாண்டமான சோம்பல் முறிப்பு; பகலில் தூக்கம், இரவில் தூக்கம். தூக்கம், தூக்கம் – சுத்தச் சோம்பேறியாகப் போயாகிவிட்டது.

 

        லடக்கென்று தாழ்ப்பாளைத் திறந்தான். அகிலா அவனுடைய தங்கை. இப்போது அவளுக்கு பரீட்சை நடக்கிறது. சீக்கிரம் வந்து விடுகிறாள். பள்ளி இறுதிப் பரீட்சை.ரேடியோ ஸ்விட்சைப் போட்டுவிட்டு, ரகு பாத்ரூமுக்குச் சென்றான். சோப், நுரை, தண்ணீர், டவல்-ரேடியோ சளபுளவென்று இரையத் தொடங்கியது. ஓடி வந்து ஸ்டேஷனில் திருப்பி வைத்தான்- சினிமா பாட்டு.சமையலறையில் அகிலாவும் அம்மாவும் பேசிக் கொண டிருந்தார்கள். “த்சு, த்சு, ஐயோ பாவம். அக்கிரமமாக இருக்கிறதே!” என்றாள் அம்மா.“யாரு பாவம்? எது அக்கிரமம்?” என்றவாறு ரகு அங்கு சென்றான்.“இவள் கிளாஸிலே படிக்கிற ஒரு பெண், தற்கொலை பண்ணிக் கொண்டு விட்டாளாம்டா!”“நிஜமாவா?”“ஆமாண்டா. நேற்றுக் காலையில்தான்-சீ பாவம்” என்றாள் அகிலா.“உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் விட்டுக் கொண்டு, கொளுத்திக் கொண்டு விட்டாள்”.“இஸ்ஸ், பகவானே!” என்றான் ரகு. கேட்கும்போதே என்னவோ செய்தது.

 

        என்ன கொடுமை, என்ன பயங்கரம். திகுதிகுவென்று பற்றியெரியும் ஒரு பெண்-தங்கையின் வயதே ஆன சிறு பெண்-அவன் கற்பனையில் தோன்றினாள்.“எதற்காக இப்படிப் பண்ணினாள்?” என்று ரகு மெதுவாய்க் கேட்டான். அந்தப் பெண்ணின் தற்கொலை தன் மனத்தை மிகவும் உலுக்கி விட்டது என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள முயலுபவனைப் போல அவன் தங்கையிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். “பரீட்சை கிரீட்சை சரியாக எழுதவில்லையா?”“அதெல்லாம் ஒன்றுமில்லையடா. அவளுடைய சித்தி அவளை ரொம்பக் கொடுமைப்படுத்துவாள். அது தாங்காமல் தான்”.தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அந்தப் பெண்தான் செய்யுமாம் (என்று அகிலா சொன்னாள்) விருந்தாளிகள் வரும்போது மட்டும் சித்திதான் எல்லா வேலைகளையும் செய்வதாகக் காட்டிக் கொள்வாளாம். இந்தப் பெண் துணிகளையெல்லாம் துவைத்துப் பிழிந்து வைக்குமாம். பிழிந்த துணிகளை சித்தி வெளியே கொண்டு உலர்த்து வாளாம்- பார்க்கிறவர்கள் இவள்தான் துவைத்தாள் என்று நினைத்துக் கொள்வதற்காக.அந்தப் பெண் வெளியே வந்தால் குற்றமாம். நாலு பேரிடம் பேசினால் குற்றமாம். சிநேகிதிகள் அவளைப் பார்க்கச் சென்றால், சித்தியும் கூடவே இருந்து பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாளாம்.“நல்லவேளை, பள்ளிக்கூடத்துக்குப் போவதையாவது தடுக் காமல் இருந்தார்களே”.

 

        பள்ளிக்கூடத்தில் கூட இந்தப் பெண் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடும், பாவம்!” என்றாள் அகிலா. “வீட்டில் நாளெல்லாம் வேலை செய்த களைப்பு. பரீட்சை சமயத்தில் கூட அவளுடைய சித்தி படிக்க விட மாட்டாளாம். படிக்க உட்கார்ந்தால் வேலை ஏவுவாளாம். ‘எரிஞ்சு போயேண்டி, எரிஞ்சு போயேண்டி’ என்று வைவாளாம். நேற்றுக் காலையில் இவள் பாத்ரூமுக்குச் சென்று இப்படி நிஜமாகவே தன்னை எரித்துக் கொண்டு விட்டாள், பாவம். ஏதோ புகை வருகிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தார்களாம். அவசரமாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். கொஞ்சம் ஸ்மரணை வந்ததாம். ஆனால் நேற்று சாயங்காலம் உயிர் போய் விட்டது. போலீசுக்கு வாக்குமூலம் கொடுத்தபோது கூட,’அப்பா மேலேயோ சித்தி மேலேயோ எந்தத் தப்புமில்லல் என்மேலேதான் தப்பு” என்று சொன்னாளாம்.அகிலா பேசிக் கொண்டே போனாள். ‘இன்று அகிலாவுக்கு நல்ல ஆடியன்ஸ்’ என்று ரகு நினைத்தான். அம்மா கடைசி அகப்பை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றினாள். ‘இஸ்ஸ்…’ என்ற மாவின் முறையீடு. சூடு பொறுக்காமல் தவித்து ஒலியெழுப்புகிறதோ? அந்தப் பெண்ணுக்குச் சூடு பொறுத்திருக்குமா? தலைமயிர், கண், உடல், நகம், இதெல்லாம் எரியும்போது எப்படியிருந்திருக்குமோ? ஆனாலும் அந்தப் பெண் கத்தவில்லையாமே! என்ன தைரியம், என்ன பொறுமை! ரகுவுக்குப் புல்லரித்தது.

 

       இரண்டு தோசைதான் தின்ன முடிந்தது.“ஸ்டவ்வை அணைத்து விடு” என்றாள் அம்மா. ரகு திரிகளின் உயரத்தை இறக்கி, பூ, பூ வென்று ஊதினான். அணையவில்லை. “இந்தத் திரிஸ்டவ்வில் இதுதான் கஷ்டம்” என்றாள் அம்மா. ரகு பலத்தையெல்லாம் திரட்டி மீண்டும் ஊதினான். பொக்கென்று ஸ்டவ் அணைந்தது. வாயெல்லாம் மண்ணண்ணெய் நெடி. இலேசாகக் குமட்டியது. அந்தப் பெண் தலை வழிய மண்ணெண்ணெயைக் கொட்டிக் கொண்டாளாம். என்ன தைரியம்! ரகுவின் உடல் இலேசாக நடுங்கியது; ஹாலுக்கு வந்தான். ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அநதப் பெண் என்றாவது விச்ராந்தியாக ரேடியோ கேட்டிருக்குமோ என்னவோ இருந்த நாளெல்லாம் வேலை செய்து கொண்டேயிருந்தது. பிறகு ஒருநாள் அல்பாயுசில் தன்னை மாய்த்துக் கொண்டது. ஒரு சிறு பெண்ணின் சோகக் கதை.பட்டென்று ரேடியோவை அணைத்தான்.சட்டை, பாண்ட், செருப்பு,ரகு வீட்டைவிட்டு வெளியே வந்தான். வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மேற்கே, மாலைச் சூரியன் மேகப் பெண்களுடன் ஏதோசல்லாபித்தவாறே அவர்கள் மேல் செம்மை படருவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். நாணத்தில் மேனி முழுதும் சிவக்கும்படி அப்படியென்ன சொல்லியிருப்பான்? வானத்தின் மறுகோடியில், அடுத்துவரும் தன்னுடைய காட்சிக்காக மேடைக்குப் பின்னால் காத்திருக்கும் நடிகன் போலச் சந்திரன் மங்கலாகத் தெரிந்தான். சந்திரனுடைய பொறுமையைச் சோதிப்பதே போலச் சூரியன் மேகப் பெண்களுடன் தன் சல்லாபத்தை நீடித்துக்கொண்டே சென்றான்.கீச்சு பீச்சு என்று கிளிக் கூட்டம் ஒன்று பறந்து சென்றது.

 

         ரகு சாலையில் நடக்கத் தொடங்கினான். மார்ச் மாத பிற்பகுதி. மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகள் சாலை மேல் பாய் விரித்திருந்தன. சருகுகள் உதிரட்டும், பரவாயில்லை. ஆனால் பச்சைப் பசேலென்ற இளந்தளிரை வெடுக்கென்று பறித்துவிட்டாயே, கடவுளே. இதெந்ன விளையாட்டு?ஏன் இப்படி?ஏன்?உலக நினைவே இன்றிக் கைகோத்துச் செல்லும் காதல் ஜோடிகள், தம்பதிகள்; ஐஸ் ப்ரூட் சப்பிக் கொண்டு சென்ற கான்வென்ட் சிறுமிகள்; பேரனின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் ஒரு தாத்தா; ஹாக்கிக் கம்புகளைச் சுழற்றிக் கொண்டு வரும் முரட்டுச் சீக்கிய இளைஞர்கள்; ஹனுமார் கோயிலருகே கச புசவென்று பேசிக் கொண்டு சரக் புரக்கென்று நடந்து போன பாவாடை மேலாக்கு கும்பல்; ‘ரிவோலி’ வாசலில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான சரீரங்களிலிருந்து விலை யுயர்ந்த ஒப்பனைச் சாமக்கிரியைகளின் நறுமணம் கமழ, பளபளக்கும் கார்களிலிருந்து இறங்கி தியேட்டரின் குளுமையை நோக்கி மிதந்து சென்ற மேல் சொஸைட்டி ராணிகளும் ராஜாக்களும், காதி நிலையத்துக்கு வெளியே பாலிஷ்காரனிடம் ஷூவை ஒப்படைத்து நின்ற கணவரும், பக்கத்தில் பூக்காரனிடம் பூ வாங்கிக் கொண்டிருந்த அவர் மனைவியும்; ‘ஸ்டாண்டார்டு’க்குள்ளிருந்து, ஒரு கையில் புதிதாக வாங்கிய மதுப் புட்டிகளுடன், இன்னொரு கையால் நாயைப் பிடித்தபடி வந்த வெளிநாட்டு இளைஞர்-ரகுவுக்கு எதைப் பார்த்தாலுமே எரிச்சலாக இருந்தது.சீச்சீ! என்ன உலகம் இது! ஒவ்வொருவருக்கும் தங்கள் குறுகிய வாழ்க்கைகளைப் பற்றித்தான் கவலை; தங்கள் சொந்த சுகங்கள்தான் பெரிது. மற்றவர்கள் எப்படிப் போனாலும் அக்கறையில்லை.அந்தப் பெண்?பாவம், ஐயோ பாவம், ரொம்பப் பாவம். ‘பெண்ணே, பெண்ணே சமத்துப் பெண்ணே, அநியாயமாகச் செத்துப் போனாயே சின்னப் பெண்ணே! இப்படியும் ஒரு வாழ்க்கையா?’ரகு காப்பி ஹவுஸ்ஸுக்குள் நுழைந்து, இங்குமங்கும் பார்த்தவாறே மேஜைகளுக்கிடையில் நடந்தான்.“ஹலோ!” என்ற குரல்.ரகு திரும்பிப் பார்த்தான்.

 

          கிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான். “ரொம்ப நேரமாக இருக்கிறாயா?” என்று ரகு புன்னகையுடன் அவனருகே இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தான்.“பத்து நிமிஷமாச்சு-மத்தப் பசங்கள் எங்கே?”“வந்து விடுவார்கள்” என்று ரகு சுற்றிலும் நோட்டம் விட்டான். வழக்கமான கூட்டம். அதே மனிதர்கள், அதே முகங்கள். போர், போர், போர். உடுப்புகளை மாற்றிக் கொள்வதுபோல முகங்களையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளட்டுமே! வாழ்க்கையில் கொஞ்சம் மாருதல் இருக்கும்.கிருஷ்ணன், ரகு, இன்னும் சில சினேகிதர்கள் எல்லோருமாகத் தினசரி மாலையில் காப்பி ஹவுஸில் கூடுவார்கள். உலகத்துப் பிரச்னைகளையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு பரிவோடும் கவலையோடும் அலசுவார்கள்; காப்பி, சிகரெட், பேச்சு, காப்பி, சிகரெட், பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு.சே!இன்று ரகு பேசும் ‘மூடில்’ இல்லை. அங்குமிங்கும் அலைந்தாடும் வெயிட்டர்களைப் பார்த்தான். பரிதாபமாக இருந்தது. வெயிட்டரின் கையிலிருந்த தட்டைத் தன் கையில் வாங்கிக் கொண்டு அவனை நாற்காலியில் உட்காரச் சொல்லலாம் போலிருந்தது.“என்ன, பேசமாட்டேன் என்கிறாயே?” என்றான் கிருஷ்ணன்.“த்சு-பேச ஒன்றுமில்லை”.“அதோ சந்திரனும் பாஸ்கரனும் வருகிறார்கள்”.சந்திரனும் பாஸ்கரனும் வந்து உட்கார்ந்தார்கள்.“என்ன இவ்வளவு லேட்?” என்றான் கிருஷ்ணன்.“உன்னைப் போல அரசாங்க உத்தியோகமா? வேலையை முடித்துவிட்டுத்தான் வரமுடியும்” என்றான் பாஸ்கர். அவன் ஒரு டிராவல் ஏஜன்ஸியில் வேலை பார்த்து வந்தான்.“மேலும் காபி ஹவுஸில் நாம் கழிக்கும் நேரத்தைக் குறைப்பது நல்லதுதான்” என்றான் சந்திரன்.“

 

           ஏனோ?”“யூஸீ, மேல் நாடுகளில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியாகி விட்டது. அவர்கள் ஹோட்டலில் இளைப்பாறலாம், மணிக்கணக்காகப் பேசலாம். ஆனால் நம்மிடம் அவ்வளவு நேரமில்லை; நாம் கடுமையாக உழைக்க வேண்டும், ஒவ்வொரு நிமிடமும்”.“ஹியர், ஹியர்” என்றான் கிருஷ்ணன்.“ரகுப் பாப்பா ஏன் பேசமாட்டேன்கிறது?” என்றான் பாஸ்கர்.“என்னிடம் பேச நேரமில்லை; மேல்நாட்டு இளைஞர்கள்தான் பேசலாம்” என்று ரகு கண்ணைச் சிமிட்டினான்.எல்லோரும் சிரித்தார்கள்.“நீ வந்து ரொம்ப நேரமாகிறதோ?” என்று பாஸ்கர் ரகுவைக் கேட்டான்.“முதலில் நான் வந்தேன். பிறகு அவன் வந்தான்” என்றான் கிருஷ்ணன்.“ஆனால் நான்தான் தினம் முதலில் வருகிறேன் – ஞாபகமிருக்கட்டும்” என்றான் ரகு.“உனக்கென்னப்பா. அதிர்ஷ்டசாலி. நினைத்தபோதெல் லாம் வரலாம்”.“வஞ்சகப் புகழ்ச்சியா?” என்றான் ரகு.ரகு இஞ்சினியரிங் பரீட்சை எழுதிவிட்டு இதுவரை வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான். ஒரு நல்ல வேலைக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனு டைய அப்பாவும் காத்துக்கொண்டிருந்தார்.“வேலை தேவை – ஓர் இளம் இஞ்சினியரிங் கிராஜுவேட்டுக்கு. ஆரம்பச் சம்பளம் ஆயிரம் ரூபாய். நல்ல காப்பி ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ள இடத்தில் போட்டால் நல்லது. பகலில் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் பையன் வஞ்சனை இல்லாமல் வேலை செய்வான். அறையில் ஏர் கண்டிஷனர் இயங்கும்போதோ, ரேடியோ பாடும்போதோ கூட பையனால் தொடர்ந்து வேலை செய்ய முடியும்; பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளலாம். நல்ல குணம் நல்ல மானர்ஸும் உள்ளவன்.

 

          மேலதிகாரி காப்பியோ சிகரெட்டோ அளித்தால் தட்டமாட்டான். (மேலதிகாரிகள் தங்கள் பிராண்டுகளைக் குறிப்பிடவும்).பையன் சிவப்பாக, லட்சணமாக இருப்பான். எந்த ஆபீஸுக்கும் சோபை தரக்கூடிய ஆள். லேடி ஸ்டெனோக்கள் உள்ள கம்பெனிகள் (ஐரோப்பியனாக இருந்தால் நல்லது) மட்டுமே விண்ணப்பிக்கவும்”.“ஐரோப்பிய ஸ்டெனோவா, ஐரோப்பிய கம்பெனியா?”“எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்”.“எக்‌ஸலன்டுடா! நாளைக்கே உன் பேப்பரில் போட்டு விடு” என்றான் கிருஷ்ணன். சந்திரன் ஒரு நியூஸ் பேப்பரில் ரிப்போர்ட்டராக இருந்தான்.“எனக்குச் சிரிப்பே வரவில்லை” என்றான் ரகு.“கிச்கிச்சு மூட்டட்டுமாம்மா?” என்றான் பாஸ்கர்.வெயிட்டர் வந்தான்.“வெயிட்டர், நாலு காப்பி சுடச் சுட சீக்கிரம்!”ஆமாம், சீக்கிரம், சீக்கிரம். அழகான இளமைப் பருவம்; உடல் முழுவதும் சக்தி; மனம் முழுவதும் சந்தோஷம். எங்கே எதைப் பார்த்தாலும் குதூகலம், கோலாகலம். அனுபவிக்க வேண்டிய பருவமே இதுதான். பருவம் தீருவதற்குள் அனுபவிக்கலாம். சீக்கிரம் கொண்டு வா வெயிட்டர், சுடச் சுடக் கொண்டு வா.பாஸ்கர் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.“சிகரெட்?”சிகரெட் பட்டுவாடா; சந்திரனுக்கு ஒன்று, கிருஷ்ணனுக்கு ஒன்று, ரகுவுக்கு ஒன்று.

 

          சற்றே தயங்கிவிட்டு ரகு சிகரெட்டை எடுத்துக் கொண்டான். ‘சரக்’ என்று பாஸ்கர் நெருப்புக் குச்சியை உரசினான். நெருப்பு…ரகுவுக்குத் திடீரென்று தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பெண், எரிந்து போன அந்தப் பெண்! அமிழ்ந்திருந்த அவள் நினைவு இப்போது மீண்டும் மேலே எழும்பியது. எரியும் தீக்குச்சி தன் வாயருகே வரும்போது ரகு உதட்டில் பொருத்திய சிகரெட்டைச் சட்டென்று அகற்றினான்.“டேய், என்ன ஆச்சுடா?”“நான் ஸ்மோக் பண்ணவில்லை”.“ஏன்?”“வேண்டாம்”.“சரி தான் குடிடா”.“நோ, நோ”“குடிக்க மாட்டே?”“ஊகூம்”.“திடீர்னு என்னடா உனக்கு?”“என்னவோ, இப்போ குடிக்கணும் போல இல்லைடா”.“வேறே எப்படி இருக்கு?”“………………..”“படுத்தாதேடா கண்ணு. குடிச்சுடும்மா. சமர்த்து இல்லை?”“எனக்கு வேண்டாம்டா பாஸ்கர். ப்ளீஸ், தொந்தரவு பண்ணாதே”.தீக்குச்சியில் நெருப்பு விரலை நெருங்கி விட்டது. பாஸ்கர் அவசரமாகத் தன் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு குச்சியை எறிந்து விட்டு விரலை உதறினான். அந்த விரலை வாய்க்குள் விட்டு உமிழ்நீரால் தைலமிட்டான். இந்தச் சூடே இவனுக்குத் தாங்கவில்லையே! அப்படியானால் அந்தப் பெண்ணின் சாதனை! ஈசுவரா, பயங்கரம்!காப்பி வந்து எல்லோரும் பருகத் தொடங்கும்வரை ரகு காத்திருந்தான்.

 

         பிறகு,”இன்று சோகமான ஒரு நிகழ்ச்சி நடந்தது” என்று தொடங்கினான். தன் மனச் சுமையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினான் அவன். “என் தங்கையின் வகுப்பு சிநேகிதி சிறு பெண்…என்று அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறிக் கொண்டு போனான்.உணர்ச்சி வசப்பட்டவனாய், தான் கேள்விப்பட்ட வற்றையும், தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையும் ஒன்றுவிடாமல் சொன்னான் ரகு. ஆனால் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர்களுடைய முகங்களைப் பார்க்கும்போது அவனுக்கு ஏமாற்றந்தான் உண்டாயிற்று. அந்தப் பெண்ணின் தற்கொலை அவனைப் பாதித்தது. அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அல்லது ஒருவேளை அவர் களுடைய நெஞ்சைத் தொடும் விதமாய் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ!“அவ்வளவுதான் கதை. ஒரு சிறு பெண், அநியாயமாகச் செத்துப் போனாள்” என்று ரகு கூறி முடித்தான்.“சே சே! மோசம்” என்றான் பாஸ்கர்.“சில பேருக்கு இதயமே கிடையாதப்பா” என்றான் கிருஷ்ணன்.“இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்ட அப்பாதான் குற்றவாளி. இரண்டாவது மனைவியும் சிறு பெண்தானே. அவளுக்கு இது முதல் கல்யாணம். கணவனுடைய அன்பு முழுவதையும் பங்கு போட்டுக் கொள்ளாமல், முதல் மனைவியின் குழந்தைகளுக்குக் கூடப் பங்கு தராமல், தானே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு, பொறாமை” என்று சந்திரன் விவரித்தான்.பிறகு சிறிது நேரம் மௌனம். அது ஒரு சோகமான நிகழ்ச்சி என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் இப்படியொரு விஷயத்தை அவன் பிரஸ்தாபித்து மாலை நேர மகிழ்ச்சியைக் கெடுத்திருக்க வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதாக ரகு உணர்ந்தான்.

 

         “இந்த உலகமே துன்பங்கள் நிறைந்த பயங்கர சமுத்திரமடா ரகு; அதற்காக நீ என்ன செய்ய முடியும், நாங்கள் தான் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் கேட்பது போலிருந்தது.“தற்கொலை செய்வது கோழைத்தனமா? அல்லது துணிச்சலான செயலா?” என்று மௌனத்தைக் கலைத்தான்.“கோழைத்தனம்தான்” என்றான் கிருஷ்ணன்.“அப்படிச் சொல்லிவிட முடியாது” என்றான் பாஸ்கர். “ஒரு தனி மனிதனின் தற்கொலை சில சமயங்களில் கம்பீரமும் வலிமையும் தூய்மையும் அழகும் நிரம்பியதாக இருக்கக் கூடும். தன் நெஞ்சில் அவன் கொண்டிருந்த ஓர் உறுதியான நம்பிக்கையைத் தனக்காகவும் மற்றவர்களுக்காவும் நிரூபிக்கக் கூடிய ஒரே சாதனமாகத் தற்கொலைதான் மிஞ்சி இருக்கக் கூடும். டைரக்டர், ‘பெர்க்மானி’ன் ஒரு படத்தில், ‘ஐயோ சீனர்கள், அணுகுண்டு தயாரிக்கிறார்களாமே. பொறுப்புடன் நடந்து கொள்வார்களோ என்னவோ, இனி உலகத்தின் கதி என்ன? என்ற கவலையிலேயே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்”.பாஸ்கர் பேசிக் கொண்டே போனான். சினிமாவைப் பற்றிப் பேசாவிட்டால் இவனுக்குத் தூக்கம் வராதென்று ரகு நினைத்தான்.

 

        பெர்க்மான், குரஸோவா, ஃபெலினி, பொலன்ஸ்கி, ரே, முதலிய சர்வதேச டைராக்டர்களின் பெயர் அவன் பேச்சில் சர்வசாதாரணமாக அடிபடும். தானும் ஒரு சினிமா டைரக்டராகப் போக வேண்டுமென்ற ஆசை பாஸ்கருக்கு இருந்தது. ஆனால் வாழ்நாளை ஸ்டூடியோக்களில் கழிக்காமல் ஏதோ ஒரு டிராவல் ஏஜன்ஸியில் கழித்துக் கொண்டிருந்தான். உலகத்துக்கு ஓர் இளம் டைரக்டர் நஷ்டம்.“பாஸ்கர் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றான் சந்திரன்.“தன்னை வெறும் கவர்ச்சிப் பொம்மையாக நினைக் கிறார்களே, உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உள்ள நடிகை மரிலின் மன்றோ ஏங்கினாள். கடைசியில் அவளை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். டால்ஸ்டாயின் அன்னகரீனாவும், ஃபிளாபர்ட்டின் மேடம் பொவேரியும் தற்கொலை செய்து கொள்வதாகப் படிக்கும்போது நமக்கு வருத்தம் உண்டானாலும் கூடவே ஒரு மனநிறைவும் பரவசமும் ஏற்படவில்லையா? ஹெமிங்க்வே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இந்தத் தலைமுறையின் முரட்டுத்தனத்தையும் அர்த்தமின்மையையும் தன் எழுத்தில் நிரூபித்தது போலவே தன் சாவின் மூலமும் அவர் நிரூபித்துவிட்டார்”.பெரிய வார்த்தைகள், பெரிய சர்ச்சைகள் “அந்தச் சிறு பெண்ணைப் பற்றி நினைத்துப் பாருங்கள்” என்றான் ரகு. “வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்காமல் சிறு வயதி லேயே இறந்து விட்ட பெண்-துன்பத்திலே வாழ்ந்து துன்பத்திலேயே இறந்தவள்-அவளைப் பற்றி எழுத வேண்டும், சினிமா எடுக்க வேண்டும்”.“எடுக்கலாம்” என்றான் பாஸ்கர்.

 

       “நமக்குப் பிடிக்காத ஒரு நடிகைக்கு அந்தப் பெண்ணின் வேஷத்தைக் கொடுத்து, நிஜமாகவே கொளுத்தி விடலாம். ரியலிஸத்துக்கு ரியலிஸமும் ஆச்சு!”“சித்தி கொடுமைப் படுத்துவதெல்லாம் பழைய ‘தீம்’ அப்பா, இதையெல்லாம் வைத்து எவ்வளவு தடவைகள் தான் எழுதுவது?” என்றான் சந்திரன்.சந்திரன் முன்பெல்லாம் நிறைய எழுதுவான். இப்போதெல்லாம் எழுதுவது இல்லை. எழுதியதொன்றும் பிரசுரமாகாத ஏமாற்றம் கசப்பாக மாறிவிட்டது. இலக்கியத்தையும், இலக்கிய ஆசிரியர்களையும் கேலி செய்யத்தான் இப்போது அவனுக்குத் தெரிகிறது.இனி அவர்களுடன் பேசிப் பயனில்லை. ரகு பேசாமல் இருந்தான். ‘அந்தப் பெண் இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வந்திருப்பாளோ? எஸ்பிரஸோ காப்பி குடித்திருப்பாளோ? ‘டூட்டி ப்ரூட்டி’ ஐஸ்கிரீம் தின்றிருப்பாளோ? கனாட்பிளேஸ், குதுப்மினார், ஜூ, 70 எம்.எம். சினிமா இதெல்லாம் பார்த்திருப்பாளோ?’இரவில் சாப்பிட்டு விட்டு அவன் வராந்தாவில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானம் முழுவதும் நட்சத்திரங்கள். அந்தப் பெண் ஒரு நட்சத்திரமாக மாறியிருப்பாள். அல்லது, சொர்க்கத்தில் ஆதரவாக அணைத்துக் கொள்வார்கள். அன்பைச் சொரிந்து திணற அடிப்பார்கள்.

 

         விதவிதமான உடைகளும் நகைகளும்-இனி அந்தப் பெண்ணுக்கு யோகந்தான்.தங்கையின் இங்கிலீஷ் புத்தகத்தில் ஆன்டர்ஸன் எழுதிய ‘தீப்பெட்டிச் சிறுமி’ என்ற கதை இருக்கிறது. தீப்பெட்டி விற்கும் ஓர் இளஞ்சிறுமி சாலையோரத்தில் குளிர் இரவைக் கழிக்க நேருகிறது. கிறிஸ்துமஸ் சமயம். பனி பெய்கிறது. அந்தப் பெண் குளிர் காய்வதற்காக தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகக் கிழிக்கிறாள். ஒவ்வொரு தீக்குச்சி எரியும் போதும் பல அழகிய காட்சிகள் அவளுக்குத் தெரிகின்றன. அவள் விலையுயர்ந்த உடைகள் உடுத்தி யிருப்பது போலவும், மாளிகையில் நடனமாடுவது போலவும், விருந்து சாப்பிடுவது போலவும்-இப்படியே இரவு முழுவதும் பல இன்ப அனுபவங்கள். பொழுது விடிந்ததும் சாலையில் போகும் மக்கள், ஒரு சிறுமி இறந்து கிடப்பதையும் சுற்றிலும் தீக்குச்சிகள் இறைந்திருப்பதையும்தான் பார்க்கிறார்கள். அவள் கண்ட அழகிய காட்சிகளை இவர்கள் எங்கே கண்டார்கள்? ஒரு வேளை இந்தப் பெண்ணும் பாத்ரூமில் தன்னைப் பற்ற வைத்துக் கொண்ட கணத்திலிருந்து ஒரு புதிய இன்ப உலகத்தில் பிரவேசித்திருக்கலாம்; யார் கண்டது?உள்ளே அகிலா அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றித்தான். ரகுவும் பேச்சில் கலந்து கொண்டான். ‘இன்று பரீட்சை ஹாலில் அந்தப் பெண்ணின் நாற்காலி காலியாக இருந்திருக்கும்; இல்லையா?” என்றான்.

 

        “ஊஹும் இல்லை. அவளுடைய நாற்காலியை எடுத்துவிட்டு, மற்ற நாற்காலிகளைக் கொஞ்சம் நகர்த்திப் போட்டுவிட்டார்கள்”.ரகுவுக்குச் சுருக்கென்றது. இதுதான் நியதி, உலகத்தின் பயங்கர நியதி. அப்படியொரு பெண் இருந்ததாகவே நினைவில்லாததுபோல், தன் பாட்டில் இயங்கிக் கொண் டிருக்கும். பரீட்சை அட்டென்டன்ஸ் தாளில் முதல் இரண்டு நாட்கள் பிரஸன்ட், பிறகு ஆப்ஸென்ட், ரிஜிஸ்தர்களில் அவள் பெயருக்கு எதிராக ஒரு சிவப்புக் கோடு-ஒரு சிறு பெண் இந்த உலகத்தில் வாழ்ந்தாள், ஸ்கூல் பைனல் வரக் படித்தாள் என்பதற்கு மிஞ்சக் கூடிய சான்றுகள் இவைதான்.பேப்பரில் ரிசல்ட் வரும். அந்தப் பெண்ணின் பெயர் இருக்காது. அகிலா காலேஜில் சேருவாள். பி.ஏ., படிப்பாள். எம்.ஏ., படிப்பாள். கறுப்பு கவுன் அணிந்து போட்டோ எடுத்துக் கொள்வாள். பிறகு ஒரு நாள் கூறைப் புடவை அணிந்து போட்டோ எடுத்துக் கொள்ளும் தருணமும் வரும். கல்யாணம், கணவன், குழந்தைகள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு கட்டங்கள்! ஆனால் அந்தப் பெண்தான் பாவம், எதையுமே பார்க்காமல் அனுபவிக்காமல் போய்விட்டது.அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தாலே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவனுடைய நண்பர்களுக்கு ஏனோ அது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை?‘நான் வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதால் இதைப் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்கிறேன் போலிருக்கிறது.

 

         ஒருவேளை, நானும் வேலைக்கு போகத் தொடங்கிய பிறகு…”வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு மனிதர்கள் அவனைக் கவர்ந்திருந்தார்கள். பெரியவனான பிறகு அவர்களைப் போலத் தானும் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறான். ஐந்து வயதில் இஞ்ஜின் அல்லது பஸ் டிரைவர்கள், பத்து வயதில் அவனுடைய ‘லெஃப்டினன்ட்’ அத்திம்பேர், பதினைந்து வயதில் அவனுடைய அடுத்த வீட்டு ஓவியர், அவர் படம் வரைவதைப் பார்த்து, அவனும் படம் வரையத் தொடங்கினான். ஓவியர் மிகவும் சந்தோஷப் பட்டார். “டாலன்ட் இருக்கிறது. ‘டெவலப்’ பண்ணு” என்று சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தப் பதினைந்து வயது ஆசை உண்மையான ஆசை, மனப்பூர்வமாக அவனால் உணரப்பட்ட ஆசை, ரகு ஆர்ட் ஸ்கூலில் சேர விரும்பினான். ஒரு கலைஞனின் வாழ்க்கை அவனை மிகவும் கவர்ந்தது.ஆனால் அப்பாதான் சம்மதிக்கவில்லை. தற்செயலாக, தான்தோன்றியாக, மனதுக்கிசைந்தவாறு அமைக்கப்படும் ஒரு வாழ்க்கையின் சந்தோஷங்கள் அவருக்குப் புரியவில்லை. உலகத்தில் தன் கடைசி நாள் வரை, ஒவ்வொரு நாளுக்காகவும் முன் ஜாக்கிரதையாகத் திட்டங்கள் போட்டு வைக்கும் மனப்பான்மை அவருக்கு. குழந்தையைத் தன் போக்கில் தனியே நடக்க விட்டால் தடுக்கி விழுந்தால்கூட அழாது. இதை அவர் உணரவில்லை.நான் தடுக்கி விழவில்லை. இனித் தடுக்கி விழவே மாட்டேன்.

 

          இன்று நான் இஞ்சினியர். ஆனால் இது எனக்கு லாபமா, நஷ்டமா? என்று ரகு சிந்தித்தான். சில வருஷங்கள் முன்வரை அவன் மனத்தில் எண்ணற்ற உணர்வுகளும் ஏண்ணங்களும் வண்ணச் சேர்க்கைகளும் தோற்றங்களும் தோன்றிய வண்ணமிருந்தன. ஏதேதோ படமெழுத வேண்டுமென்ற வெறி இருந்தது. இப்போது உணர்வுகள் தான் மிச்சம்; வெறி இல்லை. இன்னும் சில வருடங்களில் உணர்வுகளும் மறைந்துவிடுமோ? அப்போது யாரோ ஒரு தற்கொலை செய்து கொண்டாள், அது என்னை அவ்வளவாகப் பாதிக்காதோ என் சிநேகிதர்களைப் போல எனக்கும் அனுதாபம், பிரிவு முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கி விடுமோ?பிறகு சந்திரனைப் போலவும் பாஸ்கரைப் போலவும் நானும் சும்மா கலையைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் வறட்டுக் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருப்பேன். உயிர் இருக்காது, உணர்ச்சிகள் இருக்காது, இலட்சியங்கள் இருக்காது. தேஜோமயமாக என்னுள்ளே நிரம்பியுள்ள உணர்வுகள் செத்துக் கொண்டே போகும்.இதுவும் தற்கொலைதானே?ரகுவிற்குத் தன் இதயத்தை யாரோ அழுத்திப் பிசைவது போலிருந்தது. மண்டையில் சம்மட்டிகளால் பளார் பளார் என்று ஓங்கி அறைவது போலிருந்தது. வெட்ட வெளிக்கு வேகமாக ஓடிப் போய்க் கோவென்று கதறியழலாம் போல் இருந்தது இதுவும் தற்கொலைதான், இதுவும் தற்கொலை தான். கலை உணர்வுகளுக்கும் மென்மையான இலட்சியங் களுக்கும் மதிப்பில்லாத சமூகத்தில் இது போல எவ்வளவு தற்கொலைகள்.வாழ்க்கையை முழுவதும் உணராமலேயே அந்தப் பெண் செத்து விட்டாள். மெல்ல மெல்ல செத்துக் கொண்டே போவதை உணராமல், நாங்கள் வாழ்ந்து கொண்டே-யிருப்போம்.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.