LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17

அவள் பெயர் ரம்யா


அந்தப் பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். அதுவொரு பெரிய ஹால் போன்ற அமைப்பில் இருந்தது. பக்கவாட்டில் துணிகளைக் 'கட்டிங்' செய்யப் பயன்படும் மேஜைகளும் அதனை ஓட்டி 'செக்கிங்' பெண்கள் தங்கள் பணியைச் செய்ய உதவும் தொடர்ச்சியான மேஜைகளும் இருந்தன. பேக்டரி மேனேஜருக்கென்று அந்த ஹாலின் மூலையில் தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு இருந்தது.


அந்த அறையின் உள்ளே நான் இருந்தேன். அறையைச் சுற்றிலும் இருந்த கண்ணாடி வழியே மொத்த ஹாலில் நடக்கும் வேலைகளைக் கண்காணிக்க முடியும். பேக்டரி மேனேஜர் பதட்டத்துடன் அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார். நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணைக் கண்ணாடி வழியே பார்த்தேன். எனக்கு அந்தப் பெண் யாரென்று அடையாளம் தெரிந்தது, கல்லூரி முடித்த அடுத்த வருடத்தில் திருப்பூர் வந்து சேர்ந்திருந்தார். திருப்பூர் நிறுவனங்கள் குறித்து எவ்வித அனுபவமும் இல்லை. முன் அனுபவம் குறித்து யோசிக்காமல் ஆர்வத்துடன் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார்.


ஆங்கில இலக்கியத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற அவரின் கனவு சிதைக்கப்பட்டு அவசர கதியில் தகுதியில்லாத நபருக்கு மனைவியாக பதினெட்டு வயதிலேயே மாற்றப்பட்டுயிருந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திருமணமும் முடிந்திருந்தது. இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு கணவருடன் திருப்பூர் வந்து சேர்ந்திருந்த போதும் தனது கல்வி குறித்த ஆசையை மனதிற்குள் பொத்தி வைத்திருந்தார். பணியில் சேர்ந்திருந்த போதும் அஞ்சல் வழியே தன் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார்.


வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட காரணத்தால் தன்னைச் சுற்றிலும் இருந்த திமிங்கிலம், சுறாக்களை அடையாளம் காணத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தான் அலுவலகத்தில் என் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

 

Tirupur Textile Factories


நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த போது பழைய நபராக அலுவலகத்தில் இருந்தார். நான் நுழைந்த முதல் இரண்டு நாளில் இவர் விடுமுறையில் இருக்க வருகைப் பதிவேட்டில் அவர் பெயரைப் பார்த்து யாரிந்த பெண்? என்று மற்றவர்களிடம் கேட்ட போது அவர் வகித்துக் கொண்டிருந்த பதவியின் பெயரைச் சொன்னார்கள். அவர் இந்த நிறுவனத்தில் கோ-ஆர்டினேட்டர் பதவியில் இருந்தார்.


இதுவொரு வித்தியமான ஆனால் சவாலான பதவி. அரசாங்கத்தில், அரசியல் கட்சிகளில் மக்கள் தொடர்பாளர் என்றொரு பதவி இருக்குமே? அதைப் போல ஆயத்த ஆடைத் துறையிலும் இது போன்ற சில பதவிகள் உண்டு. இதில் உள்ள ஒவ்வொரு பெரிய துறையையும் ஒருங்கிணைக்க தொடர்பாளர்கள் இருப்பார்கள்.


தொழிற்சாலை என்றால் அதற்கு தலைமைப் பொறுப்பு பேக்டரி மேனேஜர். அவரிடமிருந்து தான் உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களையும் வாங்க முடியும். அவரிடம் ஒரே சமயத்தில் பலதுறைகளில் உள்ளவர்கள் அடுத்தடுத்து தொடர்பு கொள்ளும் போது உருவாகும் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பெண்ணைப் போன்ற தொடர்பாளர்கள் இருப்பார்கள்.

அதாவது தொழிற்சாலையில் ஒரு நாளில் நடக்கும் மொத்த தகவல்களையும் ஒரே நபர் மூலம் திரட்டப்பட்டு அதனடிப்படையில் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் செயல்படுவது. மொத்த நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய தகுதியான பதவியிது. இதற்குப் "பேக்டரி மெர்சன்டைசர்" என்றும் அழைப்பர்.


தொழிற்சாலையில் ஒரு நாள் முழுக்க உற்பத்தியாகின்ற ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை, அதில் முழுமையடைந்த மற்றும் முழுமையடையாத ஆடைகளின் எண்ணிக்கை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். இது தவிர தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் குறித்த விபரங்கள், விடுமுறை எடுத்தவர்களின் பட்டியல் போன்ற பலவற்றைப் புள்ளி விபரத்தோடு தினந்தோறும் ஒவ்வொன்றையும் தனித்தனி அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும். 


மிகப் பெரிய நிறுவனங்களில் மனித வளத்துறை என்று இதற்கென்று தனியாக ஒரு படை பட்டாளம் இருப்பார்கள்.  தொழிலாளர்கள் நலன் சார்ந்த அனைத்து விசயங்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சி போன்ற அனைத்தையும் இந்தத் துறையில் உள்ளவர்களே கவனிப்பார்கள். ஆனாலும் கோ- ஆர்டினேட்டர் பதவியில் உள்ளவர்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் அன்றைய தினத்தில் வருகை தந்துள்ளார்கள் என்ற கணக்கு அவசியமாக தேவைப்படும்.


கோ-ஆர்டினேட்டர் பொறுப்பில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே தொழிற்சாலையில் உள்ள குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரிபவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அவர்கள் கூறிய தகவல்கள் சரியானது தானா? என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அதனை முதலாளி, மற்றும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பார்வைக்குக் கணினி வழியே காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


இதன் மூலம் ஒரு ஒப்பந்தம் திட்டமிட்டபடி அதன் இலக்கை நோக்கி நகர்கின்றதா? குறிப்பிட்ட நாளில் கப்பலுக்கு அனுப்பி விட முடியுமா? போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். இவர் தினந்தோறும் சமர்பிக்கும் அறிக்கை முக்கியமானது.  எல்லாவற்றையும் விட பணம் சம்மந்தப்பட்ட காரணத்தால் மிகக் கவனமாக கையாள வேண்டும்.


எனவே இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் மிக முக்கியமானவர்களாக இருக்க வேண்டும். அலுவலகம் செயல்படும் நேரம் என்பது தொழிற்சாலை இயங்கும் நேரத்தை விடச் சற்று வித்தியாசமாக இருக்கும். அலுவலகத்தில் ஒரு கட்டமைப்பு இருக்கும். ஆனால் தொழிற்சாலையில் அதனை எதிர்பார்க்க முடியாது.

 

Tiruppur Jothiji Factory


அவசரமென்றால் நள்ளிரவு வரைக்கும் செயல்பட வேண்டியதாக இருக்கும். சனிக்கிழமை என்றால் அடுத்த நாள் காலை வரைக்கும் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டியதாக இருக்கும். இது போன்ற சமயங்களில் மனிதாபிமானம் பற்றி யோசித்துக் கொண்டிருக்க முடியாது. முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான பணம் மட்டுமே முதலாளியின் கண்களுக்குத் தெரியும். முதலாளிக்கு மட்டுமல்ல முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அந்த ஒப்பந்தம் கப்பலுக்குச் சென்று வரைக்கும் தூக்கம் வராது.


காலை வேலையில் அலுவலகம் ஒன்பது மணிக்கு மேலே தான் தொடங்கும். அதே போல மாலை ஏழு மணிக்கே முடிந்து விடும். ஆனால் தொழிற்சாலை காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடும். இரவு எட்டரை மணி வரைக்கும் இருக்கும். அலுவலகத்திற்கும் தொழிற்சாலைக்கும் உண்டான நேர வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு மொத்த தகவல்களையும் சேகரித்து விடக் கூடிய கெட்டிக்காரத்தனம் இந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும். அலுவலகத்தில் மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் தங்கள் பணியைத் தொடங்கியாக வேண்டும்.


மற்றவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் குறுக்குக் கேள்விகள் மூலம் சொல்லப்பட்ட தகவல்கள் சரியானதா? என்பதை யூகிக்க தெரிந்து இருக்க வேண்டும். சேகரித்த தகவல்களை இனம் பிரித்துக் கொள்ள வேண்டும்.


எந்த இடம் பிரச்சனைக்குரியது? அந்தப் பிரச்சனை எங்கே கொண்டு போய் நிறுத்தும்? என்பதை அடிக்கோடிட்டு காட்டத் தெரிந்து இருக்க வேண்டும். தங்கள் நச்சரிப்பைப் பார்த்து ஒவ்வொருவரும் அடையும் எரிச்சலை பொறுத்துக் கொள்ள வேண்டும். பலருடைய கோபத்தை எதிர் கொண்ட போதிலும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று இடைவிடாது அடுத்து என்ன? என்ற நோக்கத்திலே ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.


முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் மனோநிலையைப் புரிந்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும். எவருக்குக்கெல்லாம் இந்த அறிக்கை தினந்தோறும் அனுப்பப்படுகின்றதோ அவர்கள் கேட்கும் குறுக்குக் கேள்விகளைச் சமாளிக்கத் தெரிய வேண்டும். முழுமையாகப் படிக்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டுத் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் பிரகஸ்பதிகளைச் சமாளிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.


முக்கிய பதவியில் இருப்பவர்கள் பலரும் பல  சமயம் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் அவசரகதியில் எடுக்கப்பட வேண்டிய அன்றைய பொழுதின் நிர்வாகம் சார்ந்த பல விசயங்கள் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். இது போன்ற சமயத்தில் சமயம் பார்த்து இவற்றைச் சம்மந்தப்பட்டவருக்கு இவரைப் போன்றவர்கள் நினைவூட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

 

Oru Tholitchalaiyin Kurippugal - Part 17


இதற்கு மேலாகத் தொழிற்சாலையின் செலவீனங்களை ஒப்பிட்டு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை வைத்து நிர்வாகம் திட்டமிட்ட செலவீனத்திற்குள் அடங்குகின்றதா? இல்லை எகிறிக் குதிக்கின்றதா? என்பதைப் புள்ளி விபரத்தோடு சுட்டிக் காட்டத் தெரிந்து இருக்க வேண்டும்.  அதற்கான காரணத்தை விசாரித்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காரணம் உண்மையானது தானா? என்பது சோதித்து பார்த்திருக்க வேண்டும்.


தொழிற்சாலை நிர்வாகத்தில் சில சங்கடங்களும் பல தவிர்க்க முடியாத பிரச்சனைகளும் உண்டு. உள்ளே வந்து பணிபுரிபவர்களுக்குரிய சம்பளம் என்பது வேலை நடந்தால் தான் கொடுக்க வேண்டியதாக இருக்கும். வேலை இல்லை என்றால் அனுப்பி விடலாம்.


ஆனால் ஒரு தொழிற்சாலையின் நிரந்தரச் செலவீனங்கள் என்பது மின்சாரம், பெட்ரோல், டீசல், தண்ணீர் என்று தொடங்கி ஊழியர்களின் மாதச்சம்பளம், வாடகை சமாச்சாரங்கள் என்பது தனியாகத் தவிர்க்க முடியாததாக இருக்கும். தொழிற்சாலை இயங்கினாலும் இயங்காமல் நின்று போயிருந்தாலும் இந்தச் செலவீனங்கள் என்பது மாதந்தோறும் அப்படியே தான் இருக்கும். ஒரு மாதம் தொழிற்சாலை செயல்படாமல் போனாலும் அடுத்த மாத கணக்கில் இந்த செலவீனங்கள் ஏறி நிற்கும். அடுத்த மாதத்தில் இந்த செலவீனங்களை சமாளிக்கும் அளவிற்கு அந்த மாத உற்பத்தியை அதிகப்படுத்தியாக வேண்டும்.


ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒரு லட்சம் ஆடைகள் உற்பத்தி ஆகின்றது என்றால் அதற்கான அடிப்படை செலவீனங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப் படுகின்றது என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். உற்பத்திக்கான செலவு. உற்பத்தி செய்வதற்கான மற்ற செலவு.


உற்பத்திக்கான செலவில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் சம்பளம் வந்து விடும். உற்பத்திக்கான மற்ற செலவில் மேலே குறிப்பிட்ட பல செலவீனங்கள் வந்து சேர்ந்து விடும். இது தவிர ஒரு ஆடை உருவாக்கத்திற்குத் தேவைப்படும் துணிக்கான செலவு முதல் கப்பல் வரைக்கும் கொண்டு சேர்க்கக் கூடிய செலவு வரைக்கும் அடக்கும் போது பல லட்சங்கள் தினந்தோறும் கரைந்து கொண்டேயிருக்கும்.


"கரணம் தப்பினால் மரணம்" என்பார்களே? அதைப் போலத்தான் தொழிற்சாலை வைத்து நடத்தும் காரியம். இவை அனைத்தும் ஒரு அறிக்கை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அந்த அறிக்கையைத் தயாரிப்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?


நன்றாகப் பேசத் தெரிந்து இருக்க வேண்டும். சமயோஜிதப் புத்தியுள்ளவராக இருக்க வேண்டும். மொத்தத்தில் கடுமையான உழைப்புடன் கூடிய அர்பணிப்பு உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.


இந்த நிறுவனத்தில் நான் நுழைந்த இரண்டாவது நாளில் இவரைச் சந்தித்தேன். இவரை மற்றொருவர் திட்டிக் கொண்டிருந்தார். இவர் தலையைக் குனிந்தபடி அழுது கொண்டிருந்தார். காரணம் ஒரு நாள் விடுமுறை கேட்டுச் சென்றவர் மூன்று நாள் கழித்து வந்த காரணத்தால் பாதி வேலைகள் முடியாத காரணத்தை வைத்துக் கொண்டு "நீ வீட்டுக்குப் போ?" என்று பேசிக் கொண்டிருந்தார். சப்தம் அதிகமாகக் கேட்க நான் இவர் இருந்த இருக்கைக்குச் சென்று "என்ன பிரச்சனை?" என்று கேட்டேன்.


அவரிடம் விபரங்களை முழுமையாகக் கேட்டதும் "இப்படித்தான் இங்கே ஒவ்வொருவிதமாக இருப்பார்கள். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இனியாவது சரியாக நடந்து கொள்" என்று சொல்லிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்.


அன்று நான் எதார்த்தமாகச் சொல்லிய ஆறுதல் வார்த்தைகள் இவர் மனதில் மிகப் பெரிய நம்பிக்கை அளித்திருந்ததை அடுத்தச் சில வாரங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சில தினங்களில் அவரை நான் என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன். அவர் தகுதிக்குரிய ஒவ்வொரு வேலையாகப் பிரித்துக் கொடுத்து ஒரு வேலையை எப்படித் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கச் சொன்னபடியே சில வாரங்களில் அவரிடமிருந்த ஒவ்வொரு திறமையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் துவங்கியது.


எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம். இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது. சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது. பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது? என்பதை அறியாமலேயே "கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை" என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள்.


வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றார்கள். சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர். எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. என் குடும்பம் சரியில்லை. என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை. என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை.


சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது. இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை. ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன்.


இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல.  அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி.


சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும்.


பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது. பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது. எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது. அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர். என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர். பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர். நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர். அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன்.

 

Oru Tholitchalaiyin Kurippugal - Part 17


கொடுக்கும் போது தான் எதையும் பெற முடியும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தேன். நான் ஒவ்வொரு முறையும் கொடுத்த போது பலவிதங்களில் வேறு வடிவங்களில் என்னைத் தேடி வந்தது. எனக்காக தேடிக் கொடுத்தவர்கள் எப்போதும் போல என்னை விடப் பலபடிகள் கீழே தான் இருந்தார்கள். ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும், உருவான வளர்ச்சியின் மூலம் கிடைத்த மரியாதையை அவர்களுக்கும் சேர்ந்து சமர்ப்பித்தேன். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.


இங்கே ஒவ்வொருவரும் அங்கீகாரத்தைத் தான் முதன்மையாக எதிர்பார்க்கின்றார்கள். ஆறுதல் வார்த்தைகளைத் தான் அதிகமாக விரும்பு கின்றார்கள். ஆனால் இங்கே ஒவ்வொரு மனிதனும் குப்பைகளைத் தான் தங்கள் மனதில் நிரப்பி வைத்துள்ளனர். வக்கிரத்தை தாங்கள் அணியும் ஆடைகள் போல வைத்துள்ளனர்.


சக மனிதர்களிடம் இயல்பான வார்த்தைகளைக் கூட உச்சரிக்க மனசில்லாமல் வக்கிரத்தை வெளிக்காட்ட திரும்ப வந்து தாக்குகின்றது. இதன் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் மனித உறவுகள் பாழ்படுகின்றது. இந்த விசயத்தில் மிகக் கவனமாக இருந்தேன். இந்தப் பெண்ணிடமும் அப்படித்தான் நடந்து கொண்டேன். நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த இரண்டாவது வாரத்தில் ஒரு கோரிக்கையுடன் என்னை வந்து சந்தித்தார்.


"என் வீடு நம் பேக்டரிக்கு அருகே உள்ளது. இங்கே இருந்து மூன்று பேரூந்து மாறி தினந்தோறும் வீட்டுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகின்றது. ஏற்கனவே உங்கள் பதவியில் இருந்தவரிடம் சொல்லியபோது உதவத் தயாராக இல்லை. நீங்களாவது எனக்கு உதவ வேண்டும்" என்று பேசிய போது முழுமையாக அவரைக் கவனித்தேன். ரசிக்கக்கூடிய வகையில் இருந்தார்.


ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஆண்களை விடப் பெண்களை மட்டும் தான் பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதுகின்றார்கள். நாம் காணும் திரைப்படங்களில் தொடங்கிச் சாதாரண விளம்பரம் வரைக்கும் பெண்களை அறிமுகப்படுத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காமத்தின் குறியீடாகத்தான் காட்சிப்படுத்துகின்றார்கள்.


ஒவ்வொரு நிமிடமும் ஆணுக்கு கிளர்ச்சியை உருவாக்குவதற்காகவே பெண்களைப் படைத்தது போல நம் முன்னால் பெண்கள் என்ற உருவத்தை உருவகப் படுத்துகின்றார்கள்.


எல்லா உயிரினங்களுக்கும் இனப்பெருக்கம் என்பது அதுவொரு இயல்பான விசயம். காலம் மாறியதும், தக்க பருவத்தில் துணையுடன் கூடி அதன் கடமையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றது.  குறிப்பாகப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ தங்களை உணர்ந்து கொள்ள வழியில்லாமல் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செய்யக் கூடிய காரியங்களில் கவனம் செலுத்து கின்றார்கள். அவர்களின் அதிகப்படியான ஆர்வம் அவர்களுக்கு இறுதியில் அவஸ்த்தைகளைத் தான் கொண்டு வந்து சேர்க்கின்றது.


இன்று இது போன்ற அவஸ்த்தையில் தான் இந்தப் பெண்ணும் சிக்கியுள்ளார். அன்று அலுவகத்தில் என்னிடம் கேட்ட இவர் கோரிக்கையை நிறைவேற்றியது தவறோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் தனிப்பட்ட பயிற்சியின் காரணமாகத் தொழிற்சாலையில் இவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பினேன். குடும்ப ரீதியான பிரச்சனைகள் இல்லாதபட்சத்தில் இவரின் தனித்திறமை இன்னமும் மேம்படும் என்ற கணக்கில் அவருக்கு உதவினேன். அது பல விதங்களில் சிக்கலை உருவாக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.


இந்தப் பெண்ணின் கதையும் இப்படித் தான் தொடங்கியுள்ளது. வெகுளி என்பதற்கு எப்படி அர்த்தம் சொல்வீர்களோ? எனக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பெண் வெகுளித்தனத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்தது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார்.  இருபது வயதிற்குள் திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கின்றான் என்றால் எவரும் நம்பமாட்டார்கள்.  இதற்கு மேலாகப் பலருடனும் பேசியாகவேண்டிய சூழ்நிலையில் இருந்த காரணத்தால் பேசிய ஒவ்வொருவரும் இவர் பேசி முடித்து சென்றதும் தனது வக்கிர எண்ணத்தை வடிகாலாக மாற்றிவிட அது ஒவ்வொரு இடமாக பரவி  உள்ளது. அதுவே இவரின் தனிப்பட்ட  வாழ்க்கையை பாதித்து கணவன் காதுக்குச் செல்ல அது குடும்ப ரீதியான பிரச்சனையை உருவாக்கி உள்ளது.


இவரின் நடத்தையைக் கேள்விக்குறியாகக் கேலிக்குறியதாக மாற்றியுள்ளது. இந்தப் பெண்ணின் குற்றமல்ல. ஆசைப்பட்டவர்களின் எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் உருவான ஆதங்கத்தின் விளைவு இது.

இதுவே தான் தொழிற்சாலையில் பணிபுரிந்த பலருக்கும் குறுகுறுப்பை உருவாக்கி கணவன் வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது. "என் மனைவியை எப்படி நீ தப்பாகப் பேசலாம்?" என்கிற அளவுக்குப் பிரச்சனை திசைமாறி கணவனை பலருடனும் தொழிற் சாலையின் உள்ளே வந்து சண்டை போட வைத்துள்ளது.


கடந்த சில வாரங்களாகத் தொழிற்சாலைக்கு வெளியே நடந்து கொண்டிருந்ததைப் பேக்டரி மேனேஜர் உணரத் தவறியதால் ஒருவர் மற்றொருவரை கூட்டணி சேர்ந்து கணவனைத் தாக்க அது தீப்பொறி போலப் பரவியுள்ளது. கணவன் தரப்பில் பல ஆட்கள் சேர ஒன்றோடு ஒன்று சேர்ந்து இன்று தொழிற்சாலையே நிற்கும் அளவிற்குப் போயுள்ளது.


இங்கே காலங்காலமாகப் பெண்களை வீட்டுக்குள் மட்டும் அழகு பார்த்த சமூகமிது. பெண்களுக்க வீட்டு வாசல் தான் எல்லைக்கோடாக இருந்தது. ஆனால் இன்று காலமும் சூழலும் மாறி விட்டது. நவீன தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கின்றது.  ஒவ்வொரு வசதியையும் தானும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. அதுவே ஆசைகளை வளர்க்கின்றது. இதற்காகவே வாழ வேண்டும் என்றை அக்கறையை உருவாக்குகின்றது. பணம் குறித்த ஆசையை, எண்ணத்தை மேம்படுத்துகின்றது. எத்தனை எண்ணங்கள் மாறினாலும் பெண்கள் குறித்த எண்ணங்கள் மட்டும் இங்கே எவரிடமும் மாறவில்லை.


ஆண்கள் எத்தனை பேர்களிடத்திலும் பேசினாலும் குற்றமில்லை. எந்த இடத்தில் வைத்து பேசிய போதும் அவர் தரப்பு நியாயங்களைத்தான் இந்தச் சமூகம் வசதியாக எடுத்து வைக்கின்றது. ஆனால் ஒரு பெண் கடைகளில், அலுவலகத்தில், தொழிற்சாலையில் பணியாற்றினாலும் பெண் ஒருவருடன் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக நின்று பேசிக் கொண்டிருந்தால் அதன் மீது தப்பான அர்த்தம் தான் கற்பிக்கப்படுகின்றது.


இது போன்ற தப்பிதங்கள் இவரைச் சிங்கக்கூட்டத்திற்குள் சிக்கிய புள்ளிமான் போல தடுமாற வைத்துள்ளது. முழுமையாக அந்தப் பெண் தரப்பு நியாயங்களைக் கேட்டு முடித்த பின்பு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.


"ஏனம்மா இப்படி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி விட்டாய்? எனக்குக் கொடுத்த பரிசா இது?" என்றேன், அதற்கு அவர் தந்த பதில் என்னை திடுக்கிட வைத்தது. 


குறிப்புகள் தொடரும்...

by Swathi   on 20 Nov 2014  6 Comments
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில்   திருப்பூர் ஜோதிஜி   Tiruppur Textile Industry   Tiruppur Jothiji   Aval Peyar   Ramya   அவள் பெயர்  
 தொடர்புடையவை-Related Articles
போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !! போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !!
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
கருத்துகள்
24-Nov-2014 22:42:32 மா.RAVINDRAN said : Report Abuse
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் management தியரியில் வருவதை அழகாக தமிழில் தருகிறீர்கள். தன்னுடைய நிலையை தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் அடுத்தவர்களுடைய நிறைகுறைகளை உங்களால் இனம் கண்டுகொண்டு அவர்களை வழிநடத்தி வேலை வாங்க உங்களால் முடிகிறது. மற்றவர்களை போல நீங்களும் சுற்றி நடக்கும் தவறான செயல்களில் விழுந்திருந்தால் உங்களால் இவ்வளவு தெளிவான கண்ணோட்டம் கிடைத்திருக்காது. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் ஏற்கெனெவே எழுதியபடி நீங்கள் வளர்ந்து வந்த விதம் அப்படி. அருமை. அருமை. நீங்கள் எழுதும் வார்த்தைகளை கட் & பேஸ்ட் செய்ய முடியவில்லை. இருந்தால் நான் படித்து ரசித்த வரிகளை ஹைலைட் செய்யலாம். மிகவும் ரசித்து படித்து வருகிறேன். என்றும் அன்புடன் ம.ரவீந்திரன் மதுரை
 
23-Nov-2014 05:26:36 டி.என் முரளிதரன் said : Report Abuse
மனித எண்ணங்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் அலசுவது ஒரு உளவியல் தொடர் போலவே உள்ளது அவர் என்ன பதில் சொலி இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..
 
22-Nov-2014 20:43:00 நிகழ்காலத்தில் சிவா said : Report Abuse
ஏம்மா..இப்படிப் பண்றீங்களேம்மா...
 
22-Nov-2014 05:29:23 krishmoorthy said : Report Abuse
வெகு அற்புதமாக , பெண்கள் மேல் ஆண்களுக்கு உள்ள வக்கிர ஈர்ப்பு முடிச்சை சொல்லி அதை உங்களுக்குள்ளும் தோய்த்து வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .அதென்னவோ தெரியவில்லை சார் தம்முடைய உணர்வுக்கு அடி பணியாத பெண்ணை பற்றி முடிவு பண்ண விரும்பும் ஆண் எல்லோரின் மனம் எனும் காசும் சுண்டி மேலே வீசி கீழே விழும்போது எப்போதுமே அவள் கேட்காத ராஜாதான் விழுகிறார் .
 
22-Nov-2014 00:43:43 வினோத் said : Report Abuse
ஒரு திரை கதாசிரியருக்கான அனைத்து தகுதிகளூடன் விரைந்த முன்னேற்றத்தை காண்கினேறேன். வாழ்த்துகள், வினோத்
 
20-Nov-2014 22:45:58 கருணாகரன் said : Report Abuse
அருமையாக போகின்றது. suspense வச்சி முடிச்சிடிங்க. திரும்பவும் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.