LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு - அத்தியாயம் 8

பலி கொடுத்து விடு!


ஒவ்வொரு துறையிலும் மாடசாமிகள் போல உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்த பிறவிகள் உண்டு. இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க பிறருக்காகவே தங்களை அர்ப்பணித்து விட்டு தனக்கென்று எதையும் பார்த்துக் கொள்ள விரும்பாமல் மடிந்தும் போய்விடுகின்றார்கள். 


ஆனால் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் வரம் தரும் சாமியான முதலாளிகளைக் காலி செய்யக்கூடிய ஆசாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.


இவனைப் பலிகொடுத்தால் தான் நாம் இனி பிழைக்க முடியும்? என்று யோசிக்க வைக்கக் கூடிய மோசமான நபர்களும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தானே செய்கின்றார்கள்? திருப்பூர் போன்ற கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஊர்களில் ஒவ்வொரு இடத்திலும் திருட்டுத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்திற்குப் போடப்படுகின்ற விலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஐந்து சதவிகிதம் என்று தனியாகக் கட்டம் கட்டி வைத்து விடுவார்.


காரணம் நிறுவனத்திற்குள் நடக்கின்ற திருட்டுத்தனத்தை ஓரளவுக்கும் மேல் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதாகக் காரணம் சொல்கின்றார். அந்த ஐந்து சதவிகிதத்திற்குள் திருட்டுத்தனம் நடந்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விடுவார். இதைப் போல ஒவ்வொரு ஆய்த்த ஆடை நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

 

Oru Tholitchalaiyin Kurippugal


எந்த நிறுவனமாக இருந்தாலும் பத்துப் பேர்கள் இருந்தால் சில கட்டுப்பாடுகள் மூலம் மொத்த நிர்வாகத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதுவே எண்ணிக்கை நூற்றைத் தாண்டும் போது இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் ஐநூறு பேர்கள் இருந்தால் திறமையான நிர்வாகமாக இருந்தாலும் திருட்டுத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது கடினமே.


எனது ஆயத்த ஆடைத் துறையின் இருபது வருட அனுபவத்தில் பலவற்றையும் பார்த்துள்ளேன். சில சமயம் மிரட்சியும் பல சமயம் பயத்தில் நடுக்கத்தையும் உருவாக்கும் அளவிற்குப் பல அனுபவங்களை அவஸ்த்தைகளுடன் கடந்து வந்துள்ளேன்.


இவரா? இப்படியா? என்று ஆச்சரியமாகப் பார்க்க வைக்கும் பல நபர்களை இந்தத் துறையில் சந்தித்துள்ளேன்.


ஒவ்வொரு திருட்டுத்தனத்திற்குப் பின்னாலும் ஒரு சிறப்பான சிந்தனை இருப்பதை மறுக்க முடியாது.  


அது நம்முடைய பார்வையில் கேவலமாகத் தெரிந்தாலும் திருடிப்பிழைப்பவர்களின் மனதில் எந்தக் குற்ற உணர்ச்சியையும் உருவாக்குவதில்லை.


திருடுபவர்களின் சித்தாந்தம் எளிதானது. 'எனக்குத் திருட முடிகின்றது. நீ திருட வாய்ப்பு கொடுப்பதால் தானே?' என்பதாகத்தான் உள்ளது.


தர்மம், நியாயம், அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காக, தன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது.


அவன் கோடீஸ்வரன் தானே? அவனுக்கென்ன பிரச்சனை? என்று நீங்கள் பொறாமை படலாம்? நெட்டி முறிக்கலாம்? ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டும் கோடீஸ்வரன் நடத்துகின்ற நிறுவனத்தில் அவர் எத்தனை கேடிகளை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கின்றார்? என்பதை உள்ளே நுழைந்து பார்த்தால் தான் அவரின் வலியும் வேதனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்?


காரணம் இங்கே ஒவ்வொரு முதலாளியும் தங்களின் தொழிலை வளர்க்கக்கூடிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதை விடத் தாங்கள் நடத்துகின்ற தொழிலை எப்படி நீண்ட காலத்திற்கு நடத்திச் செல்வது? என்பதில் தான் பல நடைமுறை சவால்களைச் சந்திக்கின்றார்கள். அரசாங்க அதிகாரிகளின் தொந்தரவு ஒரு பக்கம். மற்றொரு புறம் உள்ளே இருப்பவர்களின் அரிப்பு போன்றவற்றைச் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


ஏழை, பணக்காரன் என்ற பெரிய இடைவெளி என்ற பள்ளத்தாக்கின் ஆழமும் அகலமும் நாளுக்கு நாள் இங்கே அதிகமாகிக் கொண்டே போகின்றது. இந்த இடைவெளியில் எந்த நம்பிக்கையையும் இட்டு நிரப்பமுடியாத அளவுக்கு மனிதர்களின் அவநம்பிக்கைகள் காலந்தோறும் அளவு கடந்து போய்க் கொண்டேயிருக்கின்றது என்பது நாம் அறிந்தது தானே?.


இதுவே இன்றைய சூழ்நிலையில் கெட்ட விசயங்கள் அனைத்தும் நல்ல விசயங்களாக மாறியுள்ளது.  நல்ல விசயங்கள் அனைத்தும் ஏளனமாக பார்க்கப்படுகின்றது.


எவர் சொல்லும் அறிவுரையும் எடுபடுவதில்லை. அப்படியே சொன்னாலும் நீ ரொம்ப யோக்கியமா? என்று எதிர்மறை கேள்வி வந்து தாக்குகின்றது. தர்மத்திற்குப் புறம்பான அனைத்து விசயங்களும் குறிப்பிட்ட சொல்லால் சிலாகித்துப் பேசப்படுகின்றது.


'கட்டிங்' என்ற வார்த்தை இரண்டு இடங்களில் இயல்பான வார்த்தையாக மாறியுள்ளது. ஒன்று மதுக்கடைகளில் மற்றொன்று கமிஷன் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை சமாச்சாரத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.


அரசியலில் தொடங்கி அதிகாரவர்க்கத்தினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் 'கையூட்டு' என்ற வார்த்தை என்பது குற்ற உணர்ச்சியை உருவாக்காத அளவிற்குப் புரையோடிப் போய்விட்டது. கடைசியாக லஞ்சம் வாங்கத் தெரியாதவன் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று தூற்றப்படுவதால் 'நான் நேர்மையுடன் வாழ வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவனின் சிந்தனையை சமூகத்தால் மெதுவாக மழுங்கடிக்கப் படுகின்றது. 

 

Oru Tholitchalaiyin Kurippugal


மொத்த சமூகமும் பன்றிக்கூட்டமாக மாறிய பின்பு நாம் மட்டும் ஏன் பசுவாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரவர் மனதிலும் மேலோங்குகின்றது.


இங்கே ஒரு பதவியில் இருக்கும் தனி நபர் நேர்மையான எண்ணத்துடன் வாழ்வது எளிது. ஆனால் "வாழ்க்கை என்பது வெல்வதற்காக மட்டுமே. வெற்றி பெற்றவர்களுக்கே இங்கே மரியாதை". அந்த வெற்றி என்பது பணத்தால் மட்டுமே கிடைக்கும்.  எனவே நேர்மை என்பது தேவையில்லை என்பதாக நினைப்பில் வாழும் கூட்டத்தோடு வாழந்தாக வேண்டிய சூழ்நிலையில் தான் இங்கே பலதும் மாறிவிடத் தொடங்குகின்றது.


இது போன்ற சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எதிர்கொள்வது தான் இன்றைய காலகட்டத்தில் மிகச் சவாலான விசயமாக உள்ளது. இதனால் தான் இன்று பலரும் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கி போய்க் கொண்டேயிருக்கின்றார்கள்.  இது போன்ற சமாச்சாரங்கள் தான் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத்துறையில் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றது.


ஆயத்த ஆடைத்துறையில் MERCHANDISER என்றொரு பதவியுண்டு. இதிலும் சீனியர், ஜுனியர் போன்ற பிரிவுகள் உண்டு. இதுவொரு முக்கியமான பதவியாகும். இந்தப் பதவியில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் கொடுப்பவர்களுக்கும் தாங்கள் பணிபுரிகின்ற நிர்வாகத்திற்கும் இடையே இருந்து செயல்படுபவர்களாக இருக்கின்றார்கள்.


இந்தப் பதவியில் உள்ளவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மிக முக்கியமானது. ஒரு குழந்தை கருவாகி, உருவாகி, சுகப்பிரசவம் பார்ப்பது போல ஒரு ஆடையின் அளவுகள், வடிவமைப்புகள், அந்த ஆடையில் வர வேண்டிய பிரிண்டிங், எம்பிராய்ட்ரி, வண்ண வேலைப்பாடுகள் தொடங்கி அனைத்தையும் மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டிய நபராக இருப்பார்கள்.


இந்தப் பதவியில் இருப்பவர்களைச் சுற்றிலும் பல துறைகள் உள்ளது. ஒவ்வொரு துறையும் ஒரு கடல் போன்றது. தனியான ராஜாங்கம், தனித்தனியான சட்டதிட்டங்கள் உண்டு. ஆனால் மெர்சன்டைசர் பதவியில் இருப்பவர்கள் தங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு துறையில் உள்ளவர்களையும் வேலை வாங்க வேண்டிய நிலையில் இருப்பதால் திரைப்படத்துறையில் உள்ள இயக்குநர் போன்று செயல்பட வேண்டியவர்களாக இருப்பார்கள்.


குறிப்பாக ஆடைகளில் வர வேண்டிய சமாச்சாரங்களை இவர்கள்  சரியாகக் கவனிக்காத பட்சத்தில் முதலாளியின் பணம் குப்பைத்துணிக்கு முதலீடு போட்டது போல மாறிவிடும் ஆபத்துள்ளது.  எந்த துறை தவறு செய்தது என்பது முதலாளிக்கு தேவையிருக்காது? நீ ஏன் கவனிக்கவில்லை? என்ற கேள்வி தான் மெர்சன்டைசரை நோக்கி வரும்.


நான் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்தில் இந்தப் பதவியில் இருந்த போது நடந்த கதையிது. அது வளர்ந்து கொண்டிருந்த நிறுவனம். வருடாந்திர வரவு செலவு பல நூறு கோடிகளுக்கு மேல் எகிறிக் கொண்டிருந்தது. அந்த வருடம் முதல் இடத்தை பெற வேண்டும் என்று பல முஸ்தீபுகளை நிறுவன முதலாளி  செயல்படுத்திக் கொண்டிருந்தார்.


திருப்பூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த நிறுவனத்தில் முதலாளி செய்ய விரும்பும் முதல் காரியம் "ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளையும்" கொண்டு வந்து விட வேண்டும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபடுவார்.  பெரிய முதலீடுகளை முடக்க வேண்டியதாக இருக்கும். பணத்தை வாரி இறைக்க வேண்டும். வங்கியில் தவமாய் தவமிருக்க வேண்டும். வங்கி சார்ந்த அத்தனை நபர்களின் கருணைப் பார்வைக்காக தன்மானத்தை இழந்து பொறுமை காக்க வேண்டும். தான் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு துறைக்கும் தகுதியான நபர்களை உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். பணியில் நியமிக்கப்பட்டவர்களை கண்காணித்தல் வேண்டும். 


நிர்வாக வடிவமைப்பை உருவாக்க வேண்டும். நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களை ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்றார்களா? என்பதையும் இரவு பகல் பாராது கண்காணித்துக் கொண்டே வர வேண்டும்.


ஒரு முதலாளி ஒரு ஆயத்த ஆடை உருவாக்கத்தில் பங்கு பெறுகின்ற அனைத்து பிரிவுகளையும் தன் நிறுவனத்திற்குள்ளே உருவாக்க விரும்புவதற்கான காரணத்திற்குப் பின்னால் இரண்டு விசயங்கள் உள்ளது.


வெளிநாடுகளில் இருந்து ஒரு ஒப்பந்தம் காகித வடிவில் உள்ளே வருகின்றது. முதலில் நூல் வாங்க வேண்டும். அதன் பிறகு அந்த நூல் நிட்டிங் என்ற அறவு எந்திரத்தை நோக்கி நகர்கின்றது. துணியாக மாறுகின்றது. அதன் பிறகு அந்தத் துணி சாயப்பட்டறைக்குச் செல்கின்றது. வெள்ளை அல்லது குறிப்பிட்ட நிறத்திற்கு அந்தத் துணி மாற்றம் பெறுகின்றது.


அந்த துணியில் முழுமையாக பிரிண்டிங் தேவைப்படும் பட்சத்தில் பிரிண்ட்டிங் வசதிகள் உள்ள நிறுவனத்திற்குச் செல்கின்றது. மீண்டும் நிறுவனத்தின் உள்ளே வந்து தேவையான அளவிற்கு வெட்டப்பட்டு தைக்கப்படுகின்றது.  ஒரு வேளை அந்த ஆடைகளில் எம்பிராய்ட்ரி சமாச்சாரங்கள் இருந்தால் மீண்டும் அது போன்ற வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனத்திற்குச் செல்கின்றது.  அதற்கு மேலும் பாசி மணிகள் கோர்க்கப்பட வேண்டியதாக இருந்தால் அதற்காக அந்த ஆடைகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வந்த பிறகே கடைசியில் தரம் பார்க்கப்பட்டு சரியான அளவு பார்த்து தேய்க்கப்பட்டு (அயரன்) பெட்டிகளுக்குப் போகின்றது.


ஒரு ஆடை முழுமை பெற பல துறைகள் சம்மந்தப்படுவதால் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த பட்சம் பத்து சதவிகிதம் லாபம் என்று வைத்துக் கொண்டாலும் பத்து இடத்திற்கு சென்று வந்தால் நூறு சதவிகித லாபத்தை துணை நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையிருப்பதால் இந்த லாபத்தை தனது நிறுவனம் பெற வேண்டும் என்பதற்காக 'ஒரே கூரையின் கீழ்' இத்தனை வசதிகளையும் ஒவ்வொரு முதலாளிகளும் கொண்டு வர விரும்புகின்றார்கள்.


இது தவிர துணை நிறுவனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்காது. கால தாமதத்தை தவிர்க்க முடியும்.


நான் அந்த நிறுவனத்தில் நுழைந்த சமயத்தில் ஐரோப்பிய நாட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் வந்து சேர்ந்து இருந்தது. அது மிகப் பெரிய ஒப்பந்தம். மாதம் ஐந்து லட்சம் ஆடைகள் அனுப்ப வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்கெனத் தனியாக ஒரு குழுவினர் அமைக்கும் பொருட்டு ஆட்களை தேர்ந்தெடுத்த போது தான் நான் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் உள்ளே சீனியர் மெர்சன்டைசர் என்ற பதவியோடு நுழைந்தேன்.

 

Oru Tholitchalaiyin Kurippugal


ஒரு மெர்சன்டைசரின் முக்கியப் பணி என்பது எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கவனித்த ஒவ்வொன்றையும் உள்வாங்கத் தெரிய வேண்டும். உள்வாங்கியதில் எது முதன்மையானது? எப்போது முக்கியமானது என்பதையும் உணர்ந்து வைத்திருக்கத் தெரிந்துருக்க வேண்டும். இடைவிடாத கவனிப்புக் கட்டாயம் இருக்க வேண்டும். அசராத உழைப்பாளியாக இருந்தே ஆக வேண்டும். 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைப்பு வரும் என்பதையும் உணர்ந்து இருப்பவராக வேண்டும். இத்தனை தகுதிகளுடன் இருந்தால் மட்டும் போதாது. உடன் பணிபுரிந்து கொண்டே குழிபறிக்கும் குள்ளநரிகளைத் தந்திரமாகக் கையாளத் தெரிந்து இருக்க வேண்டும். கட்டாயம் சொல்லிக் கொள்ளும் அளவிற்காகவது ஆங்கில அறிவு வேண்டும்.


நான் உள்ளே நுழைந்த சமயம் என்னைப் போலப் பல புதிய முகங்களும் ஒரே சமயத்தில் உள்ளே வந்து இருந்தனர். இது தவிர அங்கே இருந்த அலுவலகத்தில் மிகப்பெரிய பட்டாளமே இருந்தது. தலையா? அலையா? என்பது போல எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒவ்வொரு துறையிலும் முதன்மைப் பதவிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு துறையிலும் உள் பிரிவுகள் இருக்க பெரிய கடல் போலவே அந்த நிர்வாகம் இருந்தது. மொத்தத்தில் சமுத்திரத்தில் ஊற்றிய சொம்புத்தண்ணீர் போல ஆகிப் போனேன்.


திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. நேர்முகத் தேர்வில் எந்தப் பதவிக்கு உங்களைத் தேர்ந்து எடுக்கின்றார்களோ அந்தப் பதவிக்கு உள்ளே நுழைந்ததும் அமர வைத்து விட மாட்டார்கள். உங்கள் திறமைகளைச் சோதித்து, தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் இருப்பவரா? என்பதைப் பல விதங்களில் பரிசோதித்து விட்டே குறிப்பிட்ட பதவி கிடைக்கும். அவர்கள் கொடுக்கும் வேலையில் உங்கள் திறமையைக் காட்ட வேண்டும். குறிப்பாக உங்கள் உழைப்பை காட்டியே ஆக வேண்டும். அதன்பிறகே உங்களைப் பற்றி நிர்வாகம் யோசிக்கும் .


சிலருக்கு அவர்கள் நினைத்து வந்த பதவி என்பது உள்ளே நுழைந்த அடுத்த மாதமே கிடைக்கும். பலருக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். சிலரால் தாக்குப் பிடிக்க முடியாமல் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்குத் தாவி விடுவார்கள். புதிதாக ஒரு நிறுவனத்தில் நுழைபவர்கள் மேலும் ஒரு பிரச்சனையைச் சந்தித்தே ஆக வேண்டும்.


நிறுவனத்தில் பழம் தின்று கொட்டை போட்டு உள்ளே சம்மணம் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களைச் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். பெருச்சாளிகள் போலப் பலரும் இருப்பர். இது தவிர அல்லக்கை நபர்கள் பல வடிவங்களில் உள்ளே இருப்பார்கள். எடுபிடியாகக் காலம் தள்ளிக் கொண்டிருப்பவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களும் 'நல்லதும் கெட்டதுமாக'க் கவனித்துத் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமாக்களைப் போன்ற பலரையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கும். இத்தனையையும் மீறிப் புதிதாக வந்தவர்கள் தங்களை உள்ளே நிலைப்படுத்திக் கொண்டாக வேண்டும்.


உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளை வெளியே காட்ட சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் உங்களை உண்டு இல்லை என்று படுத்தி எடுக்கக் காத்திருக்கும் பிரகஸ்பதிகளைச் சமாளிக்கத் தெரிந்தால் நீங்கள் தகுதியான நபர் என்று உங்களுக்கு நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். காரணம் நீங்கள் எத்தனை வருடங்கள் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றினாலும் உங்களை ஈ காக்கை கூடப் பாராட்டாது.


உங்கள் முதுகில் உள்ள சந்தேகக் கண் எப்போதும் மாறாது. உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களில் எவர் நல்லவர்? எவர் கெட்டவர்? என்பதையே உங்களால் அடையாளம் காண முடியாத அளவிற்குத் தந்திரசாலிகளால் நிறைந்திருக்கும்.  மனம் விட்டு எவருடனும் பழக முடியாது. அதற்கான வாய்ப்பே அமையாது. உங்கள் வாழ்க்கை யோசிக்கவே முடியாத அளவிற்கு மாறி விடும்.


இவற்றையெல்லாம் கடந்து முதலாளியின் பார்வையில் உங்களின் திறமை தெரிந்துவிட்டால் அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு ராஜபாட்டைக் காத்திருக்கும்.


அந்த நிறுவனத்தில் என்னை எடுத்த பதவிக்கும் நியமித்த பதவிக்கும் சம்மந்தம் இல்லாமல் சில வாரங்கள் எடுபிடியாக மாற்றி வேலை வாங்கிக் கொண்டிருந்தனர். யாருக்கு கீழே நான் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகம் கட்டளை பிறப்பித்து இருந்ததோ அவர் தான் இந்த அத்தியாயத்தின் கதாநாயகன்.


காரணம் இந்தக் கதாநாயகனின் மச்சினனும் உள்ளே வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் மாப்பிளை மச்சினர் என்பது எனக்குக் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தெரியாமலே இருந்தது. நான் நுழைந்த மூன்றாவது மாதத்தில் நம்மால் இங்கே இனி தொடர்ந்து பணியாற்ற முடியாது என்ற நிலைவந்த போது தான் முக்கிய முடிவை எடுத்தேன்.


அப்போது தான் என் மூலம் அந்த நிறுவனத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அந்தக் குண்டு முக்கியப் பதவிகளில் இருந்த பலரையும் காவு வாங்கியது.  ஒருவரின் உயிரும் போனது.

 

குறிப்புகள் தொடரும்.......

by Swathi   on 18 Sep 2014  11 Comments
Tags: திருப்பூர் ஜோதிஜி   கார்மெண்ட்ஸ்   திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்கள்   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   Oru Tholitchalaiyin Kurippugal   Tiruppur Jothiji   Tirupur Textile Industry Problems  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
07-Nov-2014 06:01:27 கருணாகரன் said : Report Abuse
சார், படிக்கவே பயமா இருக்கு. இவ்ளோ திர்ல்லிங்க வேலை செயனுமா. உங்களின் எழுத்து ஓட்டம் அருமை. வாழ்த்துக்கள். கருணாகரன், சென்னை
 
20-Sep-2014 19:28:12 balakrishnan said : Report Abuse
இந்த தொழிலின் நல்லவை அல்லவைகளைத் தெளிந்த நீரோடை போல் எழுதி உள்ளீர்கள். நன்றி.
 
20-Sep-2014 14:30:35 குறும்பன் said : Report Abuse
ஒன்பதாவது அத்தியாயத்திற்கு காத்துக்கொண்டுள்ளேன்.
 
20-Sep-2014 09:53:29 செந்தில்குமார் said : Report Abuse
இதை மாதிரி மாமன் மச்சான் பிரச்சனையை நான் மும்பை சந்தித்தேன் ஆவலுடன் உங்கள் அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்
 
20-Sep-2014 05:37:18 ரத்னவேல் நடராஜன் said : Report Abuse
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...... எட்டாவது அத்தியாயம்.= ஜோதிஜி திருப்பூர் - ஒரு தொழிற்சாலையில் உள்ள அரசியல், பிரச்னைகள் பற்றி அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
 
20-Sep-2014 05:23:37 நிகழ்காலத்தில் சிவா said : Report Abuse
திருப்பூரின் தொழில்துறையில் மறைந்திருக்கும் பல அவலங்களையும் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்..ஒரு வார்த்தை கூட கூடவே குறையவோ இல்லாமல் அப்படியே படம் பிடித்தாற்போல் எழுத்து வடிவம் பெற்றிருக்கிறது..வாழ்த்துகள்..தொடருங்கள்
 
20-Sep-2014 05:23:34 நிகழ்காலத்தில் சிவா said : Report Abuse
திருப்பூரின் தொழில்துறையில் மறைந்திருக்கும் பல அவலங்களையும் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்..ஒரு வார்த்தை கூட கூடவே குறையவோ இல்லாமல் அப்படியே படம் பிடித்தாற்போல் எழுத்து வடிவம் பெற்றிருக்கிறது..வாழ்த்துகள்..தொடருங்கள்
 
20-Sep-2014 02:49:03 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
இந்தப் பகுதியின் முடிவில் பயங்கரமான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்களே! என்னவாயிற்றோ என்று படிக்கக் காத்திருக்கிறேன்.
 
19-Sep-2014 19:03:52 டி,என்.முரளிதரன் said : Report Abuse
தொழிற் சாலை நடைமுறைகளையும் அதன் பின்னர் ஒளிந்திருக்கும் நியாய அநியாயங்களையும் விறுவிறுப்பாக தங்களுக்கே உரிய நடையில் சொல்வது சிறப்பு.
 
19-Sep-2014 18:33:18 மைதிலி கஸ்தூரி ரெங்கன் said : Report Abuse
நிதர்சனம் தலை கவிழ செய்கிறது , இப்படி கொதிக்கும் பதிவிற்கு இடையே கண்ணை குளிர்விக்கும் அழகு படங்கள் போடும் உங்கள் பாணியே பாணி!!!
 
18-Sep-2014 23:32:27 கே.அழகேசன். said : Report Abuse
அருமை. உங்களின் ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் ஒரு த்ரில்..அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று காத்திருக்க வைக்கிறது.. இனியும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும்.. பெங்களுரு கேஸ் போல...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.