LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18

பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்


" தன் மனைவி வேலைக்குப் போக வேண்டும். ஆனால் யாருடனும் பேசக்கூடாதுன்னு சொல்ற எத்தனை ஆண்கள் இங்கே யோக்கியவான்களாக வாழ்கின்றார்கள் சார்? எல்லா ஆண்களுமே தாங்கள் பார்க்கின்ற அத்தனை பெண்களுடனும் பேச, பழகத்தானே செய்கின்றார்கள். அதுவே நாங்கள் பேசினால் மட்டும் ஏன் சார் இவங்களுக்கு இத்தனை எரிச்சலா வருது? அப்புறம் ஏன் சார் தங்கள் மனைவிகளை வேலைக்கு அனுப்புறாங்க? ஒரு பெண் காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தது முதல் இரவு வீட்டுக்கு திரும்புகின்ற வரைக்கும் தெருவில் பார்க்கின்ற நாய்கள் குறைப்பதையும், முறைப்பதையும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எங்களைப் போன்ற பெண்கள் அறைக்குள் பூட்டிக் கொண்டு உள்ளே வாழ வேண்டியது தான். நான் பத்தினியா இல்லையான்னு இவங்க முடிவு செய்ய யாரு சார்? இவங்கள பாத்து நான் பயந்துக்கிட்டே இருந்தால் என் வாழ்க்கையை எப்படிச் சார் நான் வாழ முடியும்?" என்று கேட்டு விட்டு என்னைக் கூர்மையாகப் பார்த்தார்.


என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் சற்று நேரம் அமைதி காக்க இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.


"நீங்க தான் பெண்கள் கம்பீரமாக இருக்கனும். யாரையும் சார்ந்து வாழாத அளவுக்குச் சுய ஓழுக்கமாய் முன்னேறிச் செல்லனும்ன்னு சொன்னீங்க? இப்ப நீங்களே வந்து என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேக்குறீங்க?" என்ற போது என் பதவியின் பொறுப்புணர்வு என்னைச் சுட்டது.


"ஏம்மா நீ எப்படி வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் தைரியசாலியாக இருக்கலாம். அதற்காக உன் நடவடிக்கைகள் இங்கே மொத்த உற்பத்தியையும் நிறுத்தும் அளவுக்கு உன்னாலே பிரச்சனை உருவான பிறகு உன்னை எப்படி நான் இங்கே வைத்துக் கொள்ள முடியும்?" என்றேன்.


"என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அவரின் சிரிப்பு ஆயிரம் அர்த்தம் தருவதாக இருந்தது. பலருடன் பழகிப் பழகி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்துடன் உருமாறியிருந்தார். சொல்லப்போனால் நான் இந்தச் சமயத்தில் தடுமாற்றத்தில் இருந்தேன்.


இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது "என்னை மாதிரி மற்றொரு பெண் இந்தப் பதவிக்கு வந்தாலும் அவங்கள மட்டும் இங்கே இருக்கின்ற ஆண்கள் மரியாதையாக நடத்துவாங்கன்னு நினைக்கிறீங்களா? எந்தச் சமயத்தில் அவளை அனுபவிக்க இவர்கள் காத்துக்கிட்டுருப்பாங்க? அவங்களால பிரச்சனை என்றால் அடுத்தப் பெண்ணைக் கொண்டு வருவீங்களா?" என்று விடாமல் கேட்க அந்தப் பெண்ணின் தைரியமும் கேட்ட கேள்விகளும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த போது மற்றொருவர், தன்னை அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்ததற்காகத் திட்டிய போது அழுது கொண்டே அமைதியாக இருந்த பெண் இப்போது வெளுத்து வாங்குவதை மனதில் ரசித்துக் கொண்டாலும் நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.


என் மனசுக்குள் பல கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து நின்றது.


இந்த நிறுவனத்தின் முதலாளி கேவலமான எண்ணம் கொண்டவர். இது வரையிலும் என் மேல் ஏராளமான கோபம் இருந்தாலும் என் தனிப்பட்ட குணாதிசியத்தில் ஒழுக்க ரீதியான செயல்பாட்டில் எந்தக் குறையையும் காணமுடியாமல் இருப்பவர். ஒரு முதலாளி தனக்குக் கீழே பணிபுரிபவர் எத்தனை தெனாவெட்டான ஆளாக இருந்தாலும் நிர்வாக விசயத்தில், நிறுவனத்தின் லாபம் சார்ந்த விசயத்தில் பாராட்டக்கூடிய வகையில் இருந்து விட்டால் அனுசரித்து வைத்துக் கொள்ளத் தான் விரும்புவர்கள். நான் தான் அவரை மிரட்டும் நிலைமையில் இருந்தேன். முதலாளி என்ற ஈகோ எப்போதும் அவரை உறுத்தலில் வைத்துக் கொண்டே தான் இருந்தது. நான் உணர்ந்து இருந்த போதிலும் என் பாணியைத் தான் அவருக்கு ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன்.

 

Oru Tholitchalaiyin Kurippugal 57


ஆனால் என்னைப் பழிவாங்க எப்போது வாய்ப்பு வரும் என்று காத்துக் கொண்டிருப்பவருக்கு இது போன்ற நிகழ்வுகள் தொழிற்சாலையில் நடந்துள்ளது என்று அவர் பார்வைக்குச் செல்லும் பட்சத்தில் இதை வைத்து கதை, திரைக்கதை எழுதி அவருக்கு விருப்பப்படி வசனத்தை எழுதி என்னைக் குற்றவாளியாக மாற்றி விடுவார்.


மனதில் ஓடிய எண்ணங்களை அந்தப் பெண்ணிடம் காட்டிக் கொள்ள முடியுவில்லை. அந்தப் பெண் மேல் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சூழ்நிலை உருவாக்கிய குற்றவாளியாக மாறியிருந்தார். இவரை இந்தச் சமயத்தில் பலி கொடுத்தே ஆக வேண்டும்.


அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும். இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை. இவரை மேலும் இங்கே வைத்திருந்தால் இவரை வைத்து பலரும் பரமபதம் விளையட பலரும் காத்திருப்பார்கள்.


ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களும் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் முதலாளி வர்க்கம் நம் செயல்பாடுகளை உளவு பார்க்க அவர்களுக்கென்று படை பட்டாளங்களை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருப்பார்கள்.


ஆடு, புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். எவர் நம்மை வெட்டுவார்கள்? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம்? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும். இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை, காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

 

Oru Tholitchalaiyin Kurippugal - Part 18


இது தொழில் வாழ்க்கை. அதுவும் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில். கோடிகள் புழங்கும் எந்தத் தொழிலும் மேம்பட்ட பதவியில் இருப்பவர்களும், முதலாளிகளும் அடிப்படையில் கேடிகளாகத் தான் இருப்பார்கள். சிலர் அதனை வெளியே தெரியாதாவாறு மறைத்து வாழ கற்று இருப்பார்கள். வெளியே முலாம் பூசம்பபட்ட தங்க நகை போலத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.


ஆனால் அவரவருக்குண்டான தர்மநியாயங்கள் தான் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை நகர்த்தும். எண்ணங்கள் முழுக்க வக்கிரத்தை சுமந்தவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பெண்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிவார்கள். வயது வித்தியாசமோ, உறவு சார்ந்த உறுத்தல்களோ தோன்றாது. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கப் பிணத்தைக் கூட விலை பேசத்தான் தோன்றும்.


ஒரு முதலாளி யோக்கியவானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கோடிக்கணக்கான முதலீடு போட்டவனின் வலியென்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனின் இழப்புகளை எவரும் பங்கு போட்டுக் கொள்ள வர மாட்டார்கள். ஆனால் குறைந்த பட்சம் நாணயமானவனாகத்தான் வாழ்ந்தாக வேண்டிய அவசியமுண்டு. நா நயம் என்பது ஒரு கட்டம் வரைக்கும் நகர்த்தும். வாழ்க்கை முழுக்க வாயால் கப்பல் ஓட்டுபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பது கடைசி வரைக்கும் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும்.


ஒருவனுக்குப் பணம் சேரச் சேர எதிரிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். போட்டி போட முடியாதவர்கள், போட்டிக்குத் தயாராக இல்லாமல் பொறாமையுடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், கூடப் பழகிக் கொண்டே குழி பறிக்கக் காத்திருப்பவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களைச் சமாளித்தே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது முதலாளிக்கு உண்டான எதிரிகளைப் போல முக்கியப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஏராளமான எதிரிகள் உண்டு. சிலர் காரணம் இல்லாமல் தோன்றுவார்கள். பலரோ காரணக் காரியத்தோடு கவிழ்க்க காத்திருப்பார்கள். இருக்கும் எதிரிகளைச் சமாளிப்பது எளிது. ஆனால் மேலும் எதிரிகள் உருவாகாமல் இருப்பது தான் ஒரு நிர்வாகியின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும்.

 

Tiruppur Jothiji Factory 59


என்னளவில் அந்த விசயத்தில் மட்டும் கவனமாக இருந்தேன். ஒரு நிறுவனத்திற்குத் தகுந்த பதவியில் சரியான நபர்கள் அமைவது என்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமாக இருப்பதால் இந்தப் பெண்ணை வெளியே அனுப்பவும் தோன்றவில்லை.


சட்டென்று முடிவெடுத்து மீண்டும் அலுவலகப் பணிக்கு அனுப்பி வைத்தேன். "இப்போதைக்கு நீ வேலையை விட்டு சென்று விட்டாய் என்று இங்கிருப்பவர்கள் நம்பும் அளவிற்குச் சில வாரங்கள் விடுமுறையில் இருந்து விடு" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தேன். என் மேல் உள்ள மரியாதையின் பொருட்டு அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டு அப்பொழுதே கிளம்பினார்.


அவரை அனுப்பியதும் மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் இருந்தது. இனி இந்தப் பொறுப்பில் சரியான நபர்களை அமர வைக்க வேண்டும் என்ற கவலையிருந்தாலும் நாளை அது குறித்து யோசிக்கலாம் என்ற எண்ணத்தில் தொழிற்சாலையைச் சுற்றி வர கிளம்பினேன்.


மூன்று மாதங்களுக்கு முன் இந்தத் தோட்டத்திற்குள் நான் நுழைந்த போது ஒரு ஈ காக்கை பறக்க யோசித்துக் கொண்டிருந்ததைப் போல மயான அமைதி நிலவி கொண்டிருந்தது. ஆனால் இன்றோ எங்குப் பார்த்தாலும் எந்திரங்களின் இரைச்சலும், ஆட்களின் நடமாட்டமும் தொழிற்சாலையின் முகமே மாறியிருந்தது. ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவை நான்கு விரல்களுக்குள் அடக்கி விடலாம்.


"கட்டிங்" "பவர் டேபிள்" "செக்கிங்" "அயரன் மற்றும் பேக்கிங்".


கட்டிங் என்ற துறை துணிகளைக் குறிப்பிட்ட அளவில் வெட்டிக் கொடுப்பவர்கள். பவர் டேபிள் என்பது வெட்டிய துணிகளைச் சரியான வடிவமைப்பில் தைத்துக் கொடுப்பவர்கள், செக்கிங் என்பது தைத்த ஆடைகளைத் தரம் பிரித்துக் கொடுப்பவர்கள். கடைசியாக அயரன் மற்றும் பேக்கிங் துறையில் தான் சரியான அளவில் அந்த ஆடையைத் தேய்த்து அதனைப் பாலிபேக்கிங் செய்து அட்டைப் பெட்டியில் போட்டு முடிப்பவர்கள்.


நான் முதலில் நுழைந்த பகுதி அயரன் துறை. ஆயத்த ஆடைத்துறையில் இதுவொரு வித்தியாசமான துறையாகும். இதனைப் பற்றி விரிவாகப் பார்த்து விடலாமே?

 

Tiruppur Factory Ironing Section


திருப்பூர் என்ற ஊர் குறித்து உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று பட்டியலிடச் சொன்னால் உங்களால் பணம் சார்ந்து, பனியன் சார்ந்த சிலவற்றைச் சொல்லிவிடுவீர்கள். ஆனால் திருப்பூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொழில் நகரங்களும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதோடு மொத்தமாகச் சமூக மாற்றத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா?


நம் சமூகத்தில் காலங்காலமாக ஊறிப்போன சாதிப் பிரச்சனையை அடித்துத் துவைத்த ஊர் திருப்பூர். எப்படி என்கிறீர்களா?


இங்குள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேர்கள் பணிபுரிகின்றார்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றார்கள். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளனர். அவர்கள் இந்தச் சாதியில் பிறந்தவர்கள், இந்த வேலைக்கு மட்டும் தான் தகுதியானவர்கள் என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு அவர்களின் திறமை மட்டும் தான் இங்கே பேசு பொருளாக மாறி விடுகின்றது. ஒருவரின் உழைப்பு அவர்களுக்குண்டான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றது. அவர்களின் ஆர்வம் அதை உறுதிப்படுத்துகின்றது. அதில் காட்டக்கூடிய தனிப்பட்ட ஈடுபாடு என்பது அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களின் தனித்தன்மையாகக் காட்டுகின்றது, இதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் படிப்படியாக வளர்கின்றார்கள்.


தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் நன்றாகத் தைக்கக் கூடிய டைலர் என்றாலும் அவரின் சாதி முக்கியமல்ல. அவர் திறமை தான் அங்கே முக்கியம். அவர் வீடு வரைக்கும் சென்று வண்டியில் வைத்து அழைத்து வரும் அவசர உலகில் இன்றைய திருப்பூர் ஓடிக் கொண்டு இருக்கின்றது.


கடந்த இருபது வருடத்திற்குள் இங்கே சமூகம் சார்ந்த பழைய விதிகளும் உடைக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே இங்கே இருந்த எல்லைக் கோடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது.


நீங்கள் வாழ்ந்த ஊரில் துணி துவைப்பவர்களை, உங்கள் துணிகளைத் தேய்த்து மடிப்புக் கலையாமல் தருபவர்களை எப்படி அழைப்பீர்கள்? எந்தச் சாதிக்குள் வைத்து அவரை மரியாதை செலுத்துவீர்கள்? ஆனால் திருப்பூரில் இந்தத் துறையில் பிராமணர்கள் உள்ளார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?


ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த வேலைகளிலும் அனைத்து வித சாதி சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.


கடந்த ஐந்தாண்டுகளில் தொழிலாளர்களுக்குரிய மரியாதை பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களுக்குண்டான வசதிகளை நிர்வாகம் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளது. சட்டங்கள் கண் துடைப்பாக இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வட்டத்திற்குள் நின்று ஆகவேண்டிய அவசர அவசியத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கு பலதரப்பட்ட நிர்ப்பந்தங்கள் உள்ளது என்பதை அறிவீர்களா? இங்குள்ள ஒவ்வொரு தொழிலாளர்களும் அவரவர் நிறுவனத்திற்கு முக்கியமானவர்கள். திறமையுள்ள எவரையும் எந்த நிறுவனமும் இழக்கத் தயாராக இல்லை. வருடந்தோறும அடிமாடு கணக்காகப் பல மாநிலங்களில் இருந்து பலரையும் கொண்டு வரப்பட்டாலும் இருக்கும் நபர்களைக் காப்பாற்றிக் கொள்வதில் ஒவ்வொரு நிறுவனமும் பாடு படுகின்றது.


தொழில் சமூகம் என்பது மாற்றங்களை உள்வாங்கினால் மட்டுமே அந்தத் தொழிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். முன்பு வருடந்தோறும் மாற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் இன்றோ மாதந்தோறும் மாறிக் கொண்டே வருகின்றது. புதுப்புது எந்திரங்கள் ஒரு பக்கம். நம்பமுடியாத விலை வீழ்ச்சி மறுபக்கம். போட்டிகள் அதிகமாகும் அதிகமான திட்டமிடுதல் தேவைப்படுகின்றது. குறிப்பிட்ட லாபத்தை அடைய எல்லாவழிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியதாக உள்ளது. தற்போது முதலாளி என்பவர் முதலைப் போட்டு விட்டுத் தொழிலாளர்களை அனுசரித்து வாழப் பழக வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர். தொழிலாளர் என்பவர் உன் லாபத்தை விட என் லாபம் எனக்குப் பெரிது என்று மிரட்டுபவர். இப்படித்தான் இன்றைய திருப்பூர் தொழில் உலகம் உள்ளது.


இருபது ஆண்டுகளுக்கு முன் இங்கே அடிமை கலாச்சாரம் எங்கும் இருந்தது. சாதீயக் கொடுமைகளை வைத்துச் சாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அதற்கான வாய்ப்பும் இல்லை. நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. சட்டங்கள் ஒரு பக்கம். சமானியனின் கேள்விக் கணைகள் மறு பக்கம். எல்லாப் பக்கங்களிலும் உள்ள கதவுகள் அகல திறந்து விட்டக் காரணத்தால் எல்லாத் தொழிலும் உள்ள சந்தை என்பது பொதுவானதாக மாறியுள்ளது. ஒவ்வொரு வாயப்புகளையும் திறமையுள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தான் மாறிப் போயுள்ளது.


ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை கவிழப் போகின்றது என்றால் இரண்டு துறைகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அர்த்தம். ஒன்று கட்டிங் துறை. மற்றொன்று அயரன் துறை. ஒரு ஆடைக்குத் தேவைப்படும் துணி உள்ளே வந்ததும் அதனைச் சரியான வடிவமைப்பில் வெட்டுபவர்கள் கையில் தான் ஒரு நிறுவனத்தின் லாபம் உள்ளது. சரியான அளவை விடக் கூட ஒரு இன்ச் வெட்டும் போது பத்தாயிரம் ஆடைகள் வெட்டி முடிக்கும் போது லாபத்தின் ஐந்து சதவிகிதம் அப்பொழுதே காணாமல் போய் விடும். தேவையில்லாமல் வெட்டிய துணி குப்பைக்குப் போய்விடும். “ஏன் இப்படி வெட்டினாய்?” என்று கட்டிங் மாஸ்டர்களை மிரட்ட முடியாது. “எனக்குக் கொடுத்த அட்டையை வைத்து வெட்டினேன்” என்று தெனாவெட்டாகப் பதில் வரும்.


அதே போலத் தைத்து முடித்துத் தரம் பார்த்து வரும் ஆடைகளை அயரன் துறையில் இருப்பவர்கள் பார்த்து எப்படித் தேய்த்து முடிக்கின்றார்களோ அதனைப் பொறுத்து தான் அந்த ஆடையின் உண்மையான தரம் வெளியே வரும். வெளிநாட்டுக்காரர்கள் ஒரு நிறுவனத்தின் தரம் சார்ந்த விசயங்களில் அதிகக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார்கள். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு அடுத்த ஒப்பந்தத்தைத் தருகின்றார்கள். தரம் இல்லையேல் தங்கம் கூடத் தகரமாகத்தான் மதிக்கப்படும்.


மொத்தத்தில் அயரன் துறை என்பது ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தின் ஜீவநாடி. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது இந்தத் துறையில் பணிபுரியும் அயர்ன் மாஸ்டர்களின் கைகளில் தான் உள்ளது. நான் எப்போதும் கவனம் செலுத்துவதும் அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுப்பதும் அயரன் மாஸ்டர்களுக்கே. இவர்களை அனுசரித்து வைத்துக் கொண்டால் தவறான ஆடைகள் நிச்சயம் பேக்கிங் வரைக்கும் செல்லாமல் தவிர்க்கப்பட்டு விடும்.


நீங்கள் ஊரில் பார்த்து வளர்ந்த, நீங்கள் பழகிய படிப்பறிபில்லாதவர்கள் மற்றும் வாழ்க்கையில் கீழ் நிலையில் உள்ளவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் போல இந்தத் துறையில் இங்கே எவரையும் பார்க்க முடியாது. பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த அயரன் துறை என்பது வேறு. இப்போது திருப்பூரில் உள்ள அயரன் துறை என்பது வேறு.


அன்று உலர்த்தப்பட்ட மரக்கட்டை கரிகளை வேக வைத்து பயன்படுத்தினார்கள்.


அன்று ஒவ்வொருவரும் பயன்படுத்திய அயரன் பாக்ஸ் என்பது குறைந்தபட்சம் இரண்டு கிலோ அளவுக்கு இருந்தது. ஒரு நாள் முழுக்க ஒவ்வொரு ஆடைகளையும் தேய்த்து முடிக்கும் போது தோள்பட்டை கழன்று விடும். குதிகால் வலியில் தடுமாறி விடும். ஆனால் இன்றோ டீசல் பாய்லர், மின்சாரப் பாய்லர் என்று தொடங்கி இதன் முகமே மாறிவிட்டது. லைட் வெயிட் உள்ள பலதரப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அயரன் பாக்ஸ் தான் இந்தத் துறையில் உள்ளது. பணிபுரிபவர்களுக்குக் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போலத் தங்கள் பணிகளைச் செய்கின்றார்கள். இதைப் போல இந்தத்துறையில் பணிபுரிபவர்களின் பணியின் தன்மையும் முற்றிலும் மாறிவிட்டது.


பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிங் மாஸ்டர்களின் விரல்களைப் பார்த்தால் நிரந்தர புண் மற்றும் அந்த இடமே காய்ந்து போய் மொட்டு போல அசிங்கமான அடையாளமாக இருக்கும். கத்திரியை பிடித்து அழுந்த வெட்டியதால், தொடர்ச்சியாக இதே வேலையை தினந்தோறும் 12 மணி நேரம் செய்து கொண்டிருந்த காரணத்தால்  இப்படிப்பட்ட அடையாளம் உருவாகியிருக்கும்.


டைலர்களுக்கு நவீன ரக எந்திரங்கள் அறிமுகமாக போது அவர்களின் பணி சொல்ல முடியாத அளவுக்கு துயரமாய் இருக்கும். கால் வலியும், கால் வீக்கமும் நிரந்தரமாக இருக்கும். செங்கிங் பெண்களுக்கு எந்த வரையறையும் இல்லை.  எவரிடம் எந்த சமயத்தில் திட்டு வாங்க வேண்டும் என்பதே அறியாமல் வந்தவர் போனவர் அத்தனை பேர்களும் கொச்சை வார்த்தையில் பேசி தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வார்கள். இன்று அனைத்தும் மாறிவிட்டது.

 

Tiruppur  Packing Section


பட்டதாரிகள், மேற்படிப்புப் படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்று அத்தனை பேர்களும் கலந்து கட்டி வேலை செய்கின்றார்கள். உழைக்கத் தகுதியிருக்கும் அத்தனை பேர்களுக்கும் இங்குள்ள ஒவ்வொரு துறையும் காமதேனு பசுப் போல வருமானத்தைத் தந்து கொண்டே இருக்கின்றது.


நான் இந்தத் தொழிற்சாலையைச் சீரமைக்கும் நேரத்தில் இந்தத் துறையைக் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கியிருந்தேன்.


"சார் நல்லாயிருக்கீங்களா?" என்ற ஒரு குரல் கேட்டது. பின்னால் திரும்பிப் பார்த்த போது இந்தத் துறையின் ஒப்பந்தக்காரர் நின்று கொண்டிருந்தார்.


பத்தாண்டுகளுக்கு முன் திருப்பூரில் "பீஸ் ரேட்" (PCS. RATE) என்பது மிக மிகக் குறைவாக இருந்தது. எல்லா இடங்களிலும் "ஷிப்ட் ரேட்" (SHIFT RATE) என்ற நிலையில் தான் இருந்தது. ஷிப்ட் ரேட்டில் தொழிலாளர்கள் பணிபுரியும் போது, அதனைச் சரியான முறையில் கண்காணித்தால் முதலாளிகளுக்கு லாபத்தின் சதவிகிதம் பல நூறு மடங்கு அதிகமாகக் கிடைக்கும்.


ஆனால் இன்று ஆயத்த ஆடை உலகமென்பது "பீஸ் ரேட்" உலகமாக மாறி விட்டது. "நான் ஒரு ஆடை தைத்துக் கொடுத்தால் எனக்கு இந்த ஊதியம் தர வேண்டும்" என்று எழுதப்படாத ஒப்பந்தம் போலப் பேசி தங்கள் வேலையை ஒவ்வொருவரும் தொடங்குகின்றார்கள்.


இன்று இங்குள்ள ஒவ்வொரு துறையையும் ஒரு ஒப்பந்தக்காரர் குத்தகை எடுத்துக் கொள்கின்றார். அவரை CONTRACTOR என்கிறார்கள்.அவர் தனக்குக் கீழே பலரையும் வைத்து வேலை வாங்குகின்றார். சிலரோ நூறு பேர்களைக்கூட வைத்து வேலை வாங்கி குட்டி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி போல திகழ்கின்றார். முதலாளிக்கு கப்பலில் சரக்கை ஏற்றி அனுப்பி வைத்து சில மாதங்கள் காத்திருந்தது தான் அவர் லாபத்தை கண்களில் பார்க்க முடியும். ஆனால் இவர்களுக்கோ அந்த வாரமே அவர்களின் லாபம் கைக்கு கிடைத்து விடும். ஒரு ஆடையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட வேலை என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விலை.


இது தவிர மொத்த வேலையை முடித்துத் தர, என்று பலதரப்பட்ட குட்டி உலகம் இதற்குள் உள்ளது. நானும் இந்த நிறுவனத்தில் இப்படிப்பட்ட ஒப்பந்தக்காரர்களைத்தான் ஒவ்வொரு துறையிலும் நியமித்து இருந்தேன். பல தொல்லைகளில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. தைத்தால் காசு. இல்லையேல் இல்லை.


நான் இப்போது உள்ளே நுழைந்த அயரன் துறையில் உள்ள ஒப்பந்தக்காரர் தான் என்னை அழைத்தார். ஒப்பந்தக்காரர் என்று அவரை மரியாதையுடன் சொல்கின்றேன் என்பதை வைத்து வயதில் பெரியவராக இருப்பாரோ? என்று எண்ணி விடாதீர்கள். இருபத்தி மூன்று வயது இளைஞன்.  


அவன் பெயரை அடுத்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றேன். ஆனால் ஒரே ஒரு தகவலை மட்டும் நீங்க அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் கடந்த ஐந்து வருடத்தில் இந்தத் துறையில் உழைத்ததன் மூலம் சம்பாரித்த வருமானம் பதினைந்து லட்சம். அதாவது சராசரியாக வருடத்திற்கு மூன்று லட்சம்.


குறிப்புகள் தொடரும்....

(அடுத்தச் சில அத்தியாயங்களுடன் இத் தொடர் நிறைவுக்கு வருகின்றது, ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் முன் கூட்டிய நன்றி) 

by Swathi   on 27 Nov 2014  5 Comments
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில்   திருப்பூர் ஜோதிஜி   Tiruppur Textile Industry   Tiruppur Jothiji   Porulatharam   Avatharangal   பொருளாதாரம்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
18-Dec-2014 17:12:26 ரங்கநாதன் புருஷோத்தமன் said : Report Abuse
நல்ல கருத்துச் செறிவும் சொல்லாடலும் வாய்ந்த ஆய்வுக் கட்டுரை - மிக நேர்த்தியாக அமைத்துள்ளீர்கள். முழுவதும் படித்தேன், பல தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
 
01-Dec-2014 09:32:22 nagarajan said : Report Abuse
நான் இதே ஊரில் பிறந்து அதுவும் பனியன் கம்பனியிலேயே பிறந்து வளர்ந்து சுமார் 35 வருடங்களை இந்த தொழிலிலேயே உழைத்து அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறேன் ஆனாலும் உங்கள் பார்வையில் இதை படிக்கும் போது அடடா இப்படி ஒரு கோணம் உள்ளதா என்றே நினைக்கும் போது கிரேட் ,அப்புறம் அன்றைய அயரன் பாக்ஸ் 8கிலோ 2 கிலோஅல்ல ,
 
29-Nov-2014 18:09:58 முருகபூபதி said : Report Abuse
தங்களின் எழுத்து நடை நாங்களும் உடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.
 
28-Nov-2014 08:02:18 பா.தங்கமரிமுத்து said : Report Abuse
அருமையான அனுபவ பதிவு வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் வரும் பதிவுகளை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் நன்றி பா. தங்கமரிமுத்து ச.ஆலங்குளம் மதுரை-17
 
28-Nov-2014 06:12:32 krishmoorthy said : Report Abuse
நண்பர் ஒருவர் சொல்வார் இந்த ஊர் எதுவும் சபிக்கபட்டதற்க்கு எதுவும் வரலாறு இருக்குமோ என்னமோ ,சொந்த ஊரில் மாசம் 1500 சம்பாதித்து வாழ்க்கை நடத்தும்போது இருந்தது இங்கு அதைவிட 100 மடங்கு சம்பாத்தித்தும் வர மாட்டேங்கிறது .ஒரு குறிப்பிட்ட காலத்துல கொஞ்சம் சேர்த்துட்டு ஊர் பக்கம் போயிறனும் இது கடைசி காலத்துக்கு சரிப்படாது என்பார் ஒரு கட்டத்தில் போயும் விட்டார் (சேர்த்துட்டு போனாரா தெரியவில்லை ! ) இங்கு 60% சதம் மக்கள் நிம்மதியாக இருப்பதாக எனக்கும் படவில்லை .சொந்த ஊரிலிருந்து வறுமையை எதிர்க்க , குற்றத்தில் இருந்து தப்பிக்க ,குழந்தைகளை கட்டி கொடுக்க காசு சேர்க்க ,வீட்டை பிடிக்காமல் , முரட்டு தனமான சுதந்திரத்தை விரும்பி , குடும்ப பிரச்சனை தாங்காமல் இப்படி பல குறையை கட்டி கொண்டு வருவதாளோ என்னவோ நான் பார்க்கும் எல்லா முகத்திலும் ஒரு கதை அப்பட்டமாக தெரிகிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.