LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 649 - அமைச்சியல்

Next Kural >

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.)
மணக்குடவர் உரை:
பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - தாம் கருதியவற்றைக் குற்ற மில்லாத சில சொற்களால் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர்; மன்ற - தேற்றமாக (நிச்சயமாக) ; பல சொல்லக்காமுறுவர் - வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர். குற்றங்களாவன: "குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை." (நன். பொதுப்பாயிரம், 12). 'மன்ற' தேற்றப்பொரு ளிடைச் சொல். "மன்றஎன் கிளவி தேற்றஞ் செய்யும்." (தொல். இடை. 17)
கலைஞர் உரை:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்
சாலமன் பாப்பையா உரை:
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
Translation
Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to pain.
Explanation
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
Transliteration
Palasollak Kaamuruvar Mandramaa Satra Silasollal Thetraa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >