LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1234 - கற்பியல்

Next Kural >

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள்- தம் துணைவர் நீங்கியதனால் அவராற்பெற்ற செயற்கை யழகேயன்றிப் பழைய இயற்கை யழகு மிழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்- தம் பருமை குன்றியதனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும். 'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. முதலொடு சினைக்குள்ள ஒற்றுமைபற்றித் 'துணை நீங்கி' என்றாள். அன்று அவர் பிரிந்தாரென்று அவரது அன்பின்மையை உணர்த்தின; இன்று அவர் குறித்த பருவத்து வந்திலரென்று அவரது பொய்ம்மையை உணர்த்துகின்றன. இங்ஙனம் அவர் மேற் குறைகூறுதற்கு அவரே இடந்தந்துள்ளார் என்பதாம்.
கலைஞர் உரை:
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
Translation
When lover went, then faded all their wonted charms, And armlets' golden round slips off from these poor wasted arms.
Explanation
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
Transliteration
Panaineengip Paindhoti Sorum Thunaineengith Tholkavin Vaatiya Thol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >