LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 573 - அரசியல்

Next Kural >

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து. ('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)
மணக்குடவர் உரை:
பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து. இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பாடற்கு இயைபு இன்றேல் பண்என் ஆம்- பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் பண்ணால் என்ன ஆகும் ?; கண்ணோட்டம் இல்லாத கண் கண் என் ஆம் -அதுபோலக் கண்ணோட்டமில்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்? கண்பார்வையின் சிறந்த பயன் கண்ணோட்டமே என்பது கருத்து. பண் என்பது இசைவகை. அது பாலையாழ் முதலிய நாற்பெரும் பண்ணின் வகையான நூற்று மூன்று பண்களின் விரியாக நரப்படைவா லுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள். (சிலப்.அரங்.45, அருஞ்சொல்லுரை). அவை ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் ஆக முரல்(சுரம்)உடைமைபற்றி, பண்(சம்பூரணம்), பண்ணியல்(ஷாடவம்), திறம்(ஒளடவம்), திறத்திறம்(சுராந்தியம்) என நால்வகைப் பாகுபாடுடையன. பாடற்றொழில்கள்: "சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா முச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை யேயுங்கா லோசை யியம்பு". "உள்ளாளம் விந்து வுடனாத மொலியுருட்டுத் தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல் கம்பித்தல் குடிலம் ஒருபதின்மே லொன்றென் றுரை." (இசைமரபு) "கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்திருவ ருள்ளாளப் பாடலுரை". (இசைமரபு) என்பவற்றால் அறியப்படும். நாதம் -அரவம். கம்பிதம் - நடுக்கம். இசைக்கருவிகளுள் தலைமையான யாழை இயக்கும் முறைகள் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல் , தைவரல் , செலவு , விளையாட்டு, கையூழ் ,குறும்போக்கு என்னும் எண்வகை இசையெழாலும் ; வார்தல் , வடித்தல் ,உந்தல் ,உறழ்தல் , உருட்டல் , தெருட்டல் , அள்ளல் , பட்டடை என்னும் எண்வகைக் கரணமுமாம். கண்கண்ட வழி நிகழ்தலாற் கண்ணோட்டத்தைக் கண்ணின் பண்பாகக் கூறினர். இறுதியிலுள்ள 'கண்' காலங்குறித்து வந்த இடப்பெயர்.பண் பாடற்கியைபின்மை , ஆளத்தி (ஆலாபனை) செய்ய முடியாவாறும் இன்பந்தராவாறும் ஆரோசை அமரோசைகளில் (ஆரோக அவரோகணங்களில்) பகைமுரல் கலப்பதால் நேர்வதாம்.
கலைஞர் உரை:
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.
Translation
Where not accordant with the song, what use of sounding chords? What gain of eye that no benignant light affords?.
Explanation
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.
Transliteration
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam Kannottam Illaadha Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >