|
||||||||||||||||||
பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - சந்திரிகா சுப்ரமண்யன் |
||||||||||||||||||
தந்தைக்கு நன்றிக்கடன்: பெண்கள் படிக்கவே கூடாது என்ற எண்ணம் படைத்த காலகட்டத்தில் பிறந்த திருமதி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய தந்தையின் முயற்சியால் படிக்கச் சென்றார். படிப்பதற்குத் தேவையான போதுமான பொருளாதார வசதிகள் இல்லாத நிலையிலும், பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்தார். இன்று வரையிலும் தன்னுடைய தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் புதியதாகப் படித்துக் கொண்டும், படிப்பதன் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறார். பொழுதுபோக்காகிய படிப்பு: இளங்கலை, முதுகலை ஆங்கிலத்தில் பயின்றவர். தற்போது நான்கு முதுகலை படிப்புகளையும், இரட்டை முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். புத்தகங்கள் வாசிப்பது போல, படிப்பதும் இவருக்கு ஒரு பொழுது போக்கே ஆகும். ஊடகத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஆஸ்திரேலியாவில் சென்று சட்டம் பயின்றவர். வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர். சிறு சிறு அறிவு சார்ந்த வேலைகளைச் செய்து, அவற்றைக் கற்றுக் கொண்டு பல தடைகளைத் தாண்டி இன்று வழக்குரைஞராகவும், சமூக செயல்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார். இயற்றிய நூல்கள்: இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ளார். மேலும் பல நூல்கள் அச்சில் உள்ளன. ஒரு துறையைச் சார்ந்து மட்டும் இல்லாது பல துறைகளில் எழுதியுள்ளார். தமிழ், ஆன்மீகம், பெண்கள், சிறுவர்கள், ஊடகம், சட்டம் போன்ற பல துறைகளைச் சார்ந்து நூல்களை இயற்றியுள்ளார். தென்னகத் திருக்கோயில்கள், மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும், தில்லை என்னும் திருத்தலம், இணையக் குற்றங்களும் இணையவழி சட்டங்களும், முதல் மொழி தமிழ், கொசு வீட்டுப் பாயசம், அம்மா, முருகன், கற்பக விநாயகர், அபிவிருத்தி இதழியல், தலைமைப் பொறுப்பேற்கலாம், சட்டமும் அறமும் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். வழக்குரை காதை: சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வழக்குரை காதையானது இன்றைய ஆங்கில நீதிமன்றங்களில் எவ்வாறு வழக்கு நடக்குமோ அத்தகைய முறைமையை அந்த காலகட்டத்திலேயே காட்டி இருக்கிறது. அடிப்படையில் ஆங்கிலம் படித்த இவர் தமிழில் பல நூல்கள் எழுதினாலும், ஆங்கிலத்தின் வழி தமிழ் மொழியை எவ்வாறு வளர்க்கலாம் என்றே எண்ணிச் செயல்பட்டு வருகிறார். ஊடகத்துறை: தொடக்கத்தில் ஊடகத்துறையிலேயே பகுதி நேரமாக பணியாற்றினார். இதனால் ஊடகம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இன்று இணைய ஊடகமானது அச்சு ஊடகத்தைச் சற்று பின்னுக்குத் தள்ளியிருந்தாலும் அச்சு ஊடகம் என்றும் தோற்றுப் போகாது. அச்சுப் பிரதிக்கு அழிவு என்பதே கிடையாது. அது காலத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வாசகர்களை தன் பக்கம் அறிவு சார்ந்து ஈர்க்க வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் சவால்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் அதன் உள்ளடக்கம், தொழில்நுட்பம் போன்றவை மாற்றியமைக்கப்பட வேண்டும். சட்டத்துறை: சட்டம் பயின்றுள்ளதால் இவர் சட்டங்கள் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்கிறார். சட்டமும் அறமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய அதே நேரத்தில் சிறிதளவு வேறுபட்டவை. திருமதி. சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிலம்பில் சட்டமும் அறமும், கம்பனின் சட்டமும் அறமும், இணையத்தில் சட்டமும் அறமும் போன்ற நூல்களை எழுதியுள்ளார். மேலும் ஊடகத்தில் அறம் என்று நூலை எழுத ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். ‘அறமானது ஒருநாளும் பயப்படாது, அறத்தைப் பின்பற்றுவோரும் ஒருநாளும் பயப்பட மாட்டார்கள்’ என்று கூறுகிறார். தலைமைப் பொறுப்பேற்பு: பெண்களுக்காக எழுதப்பட்டதே ‘தலைமைப் பொறுப்பேற்கலாம்’ என்ற நூலாகும். பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக எழுதப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் மேலேயே நம்பிக்கை வேண்டும் என்கிறார். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும், அச்சத்தைக் கடந்து செல்ல வேண்டும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் மீறித் தான் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும், தன்னை தனித்துவமாக அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார். ஆஸ்திரேலியாவின் விருதுகள்: ஆஸ்திரேலியாவில் தமிழை வளர்க்க வேண்டிக் கடந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சி சார்ந்த மாநாடுகளை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்தத் தமிழரும் பெறாத விருதினை இவர் பெற்றுள்ளார். அமைதிக்கும், நல்லிணக்கத்திற்குமான விருது, சிறந்த சாதனை பெண்மணிக்கான விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். |
||||||||||||||||||
by Lakshmi G on 29 Sep 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|