LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

(28. 05. 1914 - 09. 06. 1981)

முனைவர் மு.இளங்கோவன்,

பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி, muelangovan@gmail.com

 

“பண்ணாராய்ச்சி வித்தகர்” எனவும் “ஏழிசைத் தலைமகன்” எனவும் “திருமுறைச் செல்வர்” எனவும் போற்றப்பட்ட குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும், இவர்தம் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

“தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை” என்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும், ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் முன்வரவேண்டும். குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் தமிழ் , தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் எனப் பன்மொழி அறிவும், தமிழ்ப்பற்றும் கொண்டவர். பாடுதுறை வல்லுநர். எளிமையும் அடக்கமும் கொண்டவர். தமிழிசை நினைவில் மூழ்கித் திளைத்தவர். ஆராய்ந்து உண்மைகண்டவர். சைவ சமய ஈடுபாடு நிறைந்தவர். சிவநேயச் செல்வராக விளங்கியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், பொது அரங்குகளில் தம் இசைத்திறனால் மக்களிடம் தமிழிசை குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழிசை மீட்சிக்கும், வளர்சிக்கும் பாடுபட்ட இவர்தம் வாழ்க்கை வரலாறு தமிழிசை வரலாற்றில் என்றும் நின்று நிலவும் பெருமைக்கு உரியது.

குடந்தை .சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்

தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோருக்கு இவர் தலைமகனார் என்பதால் தாயின் பிறந்த ஊரான சீர்காழியில் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். பெற்றோர் இளம் அகவையில் நகைக்கடையொன்றில் பணியில் சேர்த்தனர். இவரிடம் இருந்த இசையார்வம் இசைத்தட்டுகளைக் கேட்டு இசையறிவு பெறும் வாய்ப்பை உண்டாக்கியது. பள்ளிப்படிப்பு இவருக்கு வாய்க்காமல் போனாலும் பல நூல்களைத் தாமே கற்று அறிவுபெற்றார், இசையீடுபாட்டால் ஆபிரகாம் பண்டுவரின் கருணாமிர்தசாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் கற்று இசையறிவைச் செழுமை செய்துகொண்டார். இளமை முதல் நிறைவுக்காலம் வரையில் குடந்தை (கும்பகோணம்), பேட்டை நாணயக்காரத் தெருவில் குடிக்கூலிக்கு வாழ்ந்தவர்.

திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப. சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார். ப.சுந்தரேசனார் அவர்களுடன் சுவாமிமலை சானகிராமன், ஐயாசாமி முதலானவர்கள் உடன் பயின்றுள்ளனர். வி. பி. இராசேசுவரி என்பவரும் உடன்பயின்றவர்.
ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார். இவர்களுக்கு இல்லறப் பயனாய் வாய்த்த மழலைச் செல்வங்கள் இளமையிலேயே மறைந்தனர்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் செட்டியார் அவர்கள் இப்பணியில் முன்னின்றார்.

திருவையாறு அரசர் கல்லூரியில் இசையாசிரியராக அறிஞர் ப. சுந்தரேசனார் பணியாற்றிய பொழுது ஒவ்வொரு கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையில் தொடர்வண்டியில் ஏறி, இரவு பத்து மணியளவில் ஆடுதுறை வந்து, இரவும் மறுநாள்களும் பெரியபுராணம், தேவாரம் பயிற்றுவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு மூன்றாண்டுகள் ஆடுதுறையில் பெரியபுராணத்தை விரிவுரை செய்துள்ளார். இருநாள் வகுப்புகளுக்குப் பிறகு திங்கள் கிழமை வைகறையில் ஆடுதுறையில் புறப்பட்டுக் காலையில் தஞ்சாவூர் வரை தொடர்வண்டியில் பயணித்துத் திருவையாற்றை அடைவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவ்வாறு ஆண்டுக்கணக்கில் திருமுறைகளைப் பயிற்றுவித்ததால் பின்னாளில் ஆடுதுறை வைத்தியலிங்கம் அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு 1975 இல் மணிவிழாவை நடத்தி, தங்கத்தால் அமைந்த அக்கத்தை (கௌரிசங்கர்) இரண்டரை பவுனில் பரிசளித்தார். சுந்தரேசனாரின் மனைவிக்கு மங்கல அணியும் வழங்கி மகிழ்ந்தனர்.

நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். இந்தப் பொழிவில் அரங்கேற்று காதை, கானல்வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவையில் இடம்பெற்றுள்ள இசைப்பகுதிகள் விளக்கப்பட்டன.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் (இலால்குடி) ப. சு. நாடுகாண் குழு செயல்படுகின்றது. இங்கும் தொடர்ப்பொழிவுகள் தமிழிசை குறித்து நடந்துள்ளது. திருமழபாடியிலும், கீழைப்பழூவூரிலும், திருமானூரிலும், வடுவூரிலும், கோவையிலும் இவர்தம் தமிழிசைப்பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பண்ணாராய்ச்சி குறித்த இவர்தம் முடிவுகளை மரபுவழியில் பாடும் ஒதுவார்கள் ஏற்காமலும், இவர்தம் தேவாரப் பணிகளுக்கு ஆதரவு நல்காமலும் இருந்தமையால் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேற நேர்ந்தது. அதன்பிறகு சுந்தரேசனார் சிதம்பரம் செல்ல நேர்ந்தாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்வதில்லை என்ற முடிவுடன் வாழ்ந்துள்ளார். பணியிழந்த ப.சுந்தரேசனார் பல ஊர்களுக்கும் சென்று பள்ளி, கல்லூரி, கோயில்கள், இலக்கிய அமைப்புகளில் இசைச்சொற்பொழிவு செய்து வறுமையோடு வாழ்ந்து வரலானார்

பொதுமக்களிடம் இசையைக்கொண்டு செல்லும் பொழுது மக்கள் விரும்பும்வண்ணம் நகைச்சுவையுடன் உரையாற்றும் திறனில் வல்லவரானார். மிகவும் அரிய செய்திகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக வெளிப்படுத்தியதால் இவர் புகழ்  குமரி முதல்  வடவேங்கடம் வரை பரவியது.

அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார் (எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. டாக்டர் கலைஞர் அவர்கள் ப. சுந்தரேசனாரின் மணிவிழாவுக்கு வாழ்த்து அனுப்பியதாகவும் அறியமுடிகின்றது.

ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.

இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் பேராசிரியர் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள். குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.

சிலப்பதிகாரத்தின் இசையழகு விளங்கும் இடங்களைப் பாடிக்காட்டும் பொழுது தமிழக மக்கள் தங்களின் அரிய பெருஞ்செல்வம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தனர். சமய நூல்களைப் பண்ணோடு பாடியதாலும் பழம் பண்களின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்ததாலும் ப.சுந்தரேசனார்க்குப் பல்வேறு சிறப்புகளைத் தமிழக மக்கள் செய்தனர்.அவருக்குப் பல்வேறு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தனர். அவற்றுள் பண்ணாராய்ச்சி வித்தகர்(மதுரை ஆதீனம்). திருமுறைக் கலாநிதி (தருமையாதீனம்), ஏழிசைத் தலைமகன் (குன்றக்குடி ஆதீனம்), இசையமுது உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கன. பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி) என்னும் அமைப்பு இவரை உயர்வாகப்போற்றி மதித்தது.

இலால்குடி (திருத்தவத்துறை) ப.சு.நாடுகாண்குழு அன்பர்கள் திருமுருகாற்றுப்படை, சிவபுராணம் உள்ளிட்ட ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளமைக்கு இத்தமிழ்கூர் நல்லுலகம் என்றும் அவர்களை நன்றியுடன் போற்றும்.

ப.சுந்தரேசனார் பாடியுள்ளனவாகப் பல ஒலிநாடாக்கள் பற்றிய விவரம் தெரியவருகின்றன. வெளிநாட்டுஅறிஞர் ஒருவர் பரிபாடல் என்னும் இலக்கியத்தைப் ப.சுந்தரேசனார் வழியாகப் பாடச்செய்து பதிவுசெய்துள்ளதை அறியமுடிகிறது. அதுபோல் வானொலி நிலையங்களில் அவர் பாடிய ஒலிப்பதிவுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கோவைப்பகுதியில் ப.சுந்தரேசனார் அவர்களை அழைத்துப் பாடச்செய்த அன்பர்களிடமும் இருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல அன்பர்களிடமும் இருக்கும் ஒலிநாடாக்களத் திரட்டி வெளியிடுவது தமிழுக்கு மிகப்பெரிய ஆக்கமாக அமையும்.

ப.சுந்தரேசனார் அவர்கள் நித்திலம் என்னும் ஏட்டிலும், கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் தமிழர்நாடு என்னும் ஏட்டிலும் எழுதியுள்ளார். இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செயலாகும். இவருக்குப் போதிய ஒத்துழைப்போ,ஊதியமோ அமையாததால் எண்ணியவாறு பல பணிகளைச் செய்யமுடியாமல் போனது.

 மதுரையில் இவர் பணியின் நிமித்தம் விடுதியில் தங்கியிருந்தபொழுது மஞ்சள்காமாலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.அன்பர்களின் உதவியால் திருச்சிராப்பள்ளியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரல்பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவம் பயனளிக்காது என மருத்துவர் கைவிரித்தனர். எனவே குடந்தையில் உள்ள ப.சுந்தரேசனார் இல்லத்தில்(கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்) அன்பர்கள் இவருக்கு விருப்பமான திருவையாற்றுப் பதிகத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாட, அன்னாரின் உயிர் 09.06.1981 இல் பிரிந்தது. தமிழகம் எங்கும் இசைத்தமிழைப் பரப்பிய தமிழிசைத்தென்றல் குடந்தையில் அடங்கித் தமிழுலகம் மதிக்கும்வண்ணம் புகழ்வாழ்வு வாழ்ந்துவருகிறது.  இவர்தம் தமிழிசைப்பணியைப் போற்றும் வண்ணம் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ப.சுந்தரேசனார் மறைவுக்குப் பிறகு அவர்தம் மனைவிக்கு நிதியுதவி செய்தமை நன்றியுடன் குறிப்பிடத்தகுந்ததது.

குடந்தை.சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு  2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,  3.முதல் ஐந்திசை நிரல்,

4.முதல் ஆறிசை நிரல், 5.முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர்.

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

தமிழிசை குறித்த .சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.

3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.

4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.

5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன

8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.   

 

 

 

.


.


by Swathi   on 19 May 2014  0 Comments
Tags: ப. சுந்தரேசனார்   பண்ணாராய்ச்சி   வித்தகர்   Pa.Sundharesanar           
 தொடர்புடையவை-Related Articles
பெரியார் திடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல் பெரியார் திடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்
இலண்டனில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் ஆவணப்படம் அறிமுகம் இலண்டனில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் ஆவணப்படம் அறிமுகம்
புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் நிகழ்ச்சி புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் நிகழ்ச்சி
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.