|
||||||||||||||||||
பாரம் சுமக்கும் மனசு - சு.மு.அகமது |
||||||||||||||||||
பள்ளிக்கூட மணியடித்தது.வீட்டுக்கு செல்ல தனது புத்தகப்பையை தூக்கி தோள்களில் பொருத்தி பையை முதுகின் மீது வாகாய் வைத்துக்கொண்டான் பாசில்.
புத்தகப்பை மூட்டையாய் கனத்தது. காலையிலிருந்தே மனம் கனத்துப்போனதாய் எதையோ இழந்ததை போல் பாரமாய் இருந்தது சோம்பல் படிந்து எதிலுமே நாட்டமில்லாமல் போயிருந்தது.நண்பர்கள் விளையாட அழைத்த போதும் ஒதுங்கியே இருந்து கொண்டான்.எப்பொழுதாவது ஒருமுறை இப்படி நிகழ்வதுண்டு.ஆனால் இன்று அது சற்று கூடுதலாக இருப்பதாய் உணர்ந்தான்.
வீட்டுக்கு கூட வர யாரும் துணையில்லாது போனதால் தனியே நடக்க ஆரம்பித்தான்.மூட்டை கனத்தது.என்னதான் இருந்தாலும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சுமக்க வேண்டிய பொதியாய் அது மிகவும் அதிகமாகத்தான் தெரிந்தது.தோள்கள் அழுந்தி வயிற்றுப்பகுதி உள்ளிழுத்து முதுகு மேடேறி சற்றே கூனனாகிப்போனவனாய் நடை தளர்ந்து தான் நடந்து கொண்டிருந்தான்.
காலை நேரமாய் இருந்திருந்தால் அம்மாவோ இல்லை அப்பாவோ வந்து பள்ளியில் விட்டு செல்வார்கள்.தாத்தா வீட்டில் இருந்தால் டி.வி.எஸ்.50-ல் வேகமாய் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவான்.ஒருவித பெருமிதம் கலந்திருக்கும் அன்றைய தினம் மட்டும்.ஆனால் மாலையில் தனி ஆவர்த்தனம் தான்.பொதுமனே இது நிகழ்வது தான்.
வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் வெகு தூரமில்லை.கூப்பிடு தூரமாய் குறுகாதும் கால் ஒடியும் தொலைவாய் நெடிந்திராதும் இருந்தது.நடந்தான்.தெரு முனையில் வளைந்து திரும்பியதும் கண்களில் வீடு தென்பட்டது.தாத்தாவின் டி.வி.எஸ்-50யை வீட்டுக்கு முன்பு பார்த்ததும் தெம்பாய் புதிதாய் பிறந்தவனாக நடையில் வேகம் கூட்டினான்.நான்கு எட்டு எடுத்து வைப்பதற்குள் எதிரே ஓடி வந்தாள் சுவாதி.இன்று அவள் பள்ளிக்கு வராததால் நாளைய பள்ளி வேலைகளை பற்றி அறிந்திடும் ஆவலில் ஓடி வருவதாய் எண்ணினான்.அருகில் ஓடி வந்து மூச்சிரைக்க நின்றாள்.
“பாசில்...பாசில்.உங்க தாத்தா செத்துட்டாரு”என்பதாய் போட்டாள் குண்டு.
விஷயத்தை ஜீரணிக்கும் பக்குவம் இன்னும் வாய்க்கப்பெறாத நிலையிலிருந்த பாசிலுக்கு உண்மையிலேயே எதையோ இழந்துவிட்டதை மட்டும் உணர முடிந்தது.நடை முன்பை விட மிகவும் தளர்ந்து போனது.
வீட்டை அடைந்த போது டி.வி.எஸ்.-50 அநாதரவாக நிற்பது போல் தெரிந்தது.பெட்ரோல் என்ஜின் ஆயிலின் தீய்ந்த கலவை கருமையாக சொட்டிக்கொண்டிருந்தது.வண்ணங்களை பிரதிபலித்தபடியே தரையில் படர்ந்திருந்தது ஆயில்.வேறொரு சமயமாயிருந்தால் தரையில் படர்ந்திருந்த ஆயிலின் ஏழுவர்ணக்கலவையினை குச்சியால் கிளறி மேலும் அது வண்ணக்கலவையாய் படரும் அழகை நின்று ரசித்திருப்பான்.மனம் ஏனோ ஒப்பவில்லை இப்போது.மனம் பாரமாகி இறுகியிருந்ததால் சுமந்து கொண்டிருந்த புத்தகப்பையின் கனம் பெரிதாய் படவில்லை இப்போது அவனுக்கு.காற்று லேசாய் வீசியது. டி.வி.எஸ்.-50 மொபெட்டின் இருக்கை மீது தூசி படியத்துவங்கியது...
ஞாயிற்றுக்கிழமை.
அழைப்பு மணியடித்தது.பாசில் கதவை திறந்தான்.தாத்தா கையில் காய்கறி பையோடு நின்றிருந்தார்.
“இன்னிக்கி சிக்கன் மட்டும் தான் இர்ந்திச்சி.ரெண்டு கிலோ சரியா போயிடும்ல?” கேட்டவாறு பாட்டியிடம் பையை கொடுத்துவிட்டு இவனிடம் வந்தார்.
“பாசில் இந்தா...” என்று அவர் நீட்டின சாக்லெட் பொட்டலத்தை இவன் வாங்கிக்கொண்டான்.இவ்வளவும் தனக்கே தான் என்று நினைக்கும் போதே இனித்தது.
அப்பா உள்ளேயிருந்து வந்தார்.
“டேய்...இவ்ளோத்தையும் ஒண்ணா சாப்ட்டுட போற...”. சொல்லிக்கொண்டே ஒரு சாக்லெட்டை இவனிடமிருந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டே சென்றுவிட்டார்.
இவனுக்கு பெருமிதமாக இருந்தது.மீசை கூட சரியாக முளைக்காத இவர் என் அப்பா.இன்னும் இவரது செய்கைகளில் சிறுபிள்ளைத்தனம் மிகுந்திருந்தது.
அப்பா சாக்லெட்டை தன்னிடமிருந்து வாங்கி தின்பதை நினைத்து பெருமிதம் ஒருபுறம் ஊற்றெடுக்க பொட்டலத்தை எடுத்துக்கொண்டு அம்மாவை தேடியபடி சமையலறைக்குள் வந்தான்.
அம்மா அப்பாவின் தலைக்கு எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். அம்மா எனக்கு அம்மாவா இல்லை அப்பாவுக்கா? என்ற எண்ணம் மேலெழ,
“அம்மா..”என்றழைத்தான்.
“என்னடா...”.
“இந்தா சாக்லெட்”.
“கையிலே எண்ணெயா இருக்கு.அப்பிடி வச்சிட்டு போ” என்றவள் “உங்க தாத்தாவுக்கு வேற வேலையே இல்ல” என்று பழித்தாள்.
அப்பா இவனை பார்த்தார் வாயில் அதப்பிய சாக்லெட்டுடன்.
மெதுவாக வெளியே வந்தான்.
பாட்டி தாத்தாவின் அருகில் அமர்ந்தபடி ஏதோ குசுகுசுத்துக் கொண்டிருந்தார்.
“அதாங் அவ எரிஞ்சி விழறாளே...எதுக்கு சாக்லெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறீங்க.பல்லு கெட்டுட போவுது”.
மருமகளை பற்றின அங்கலாய்ப்பு தான்.
“டேய் அவ்ளத்தையும் சாப்பிட்றாதே.இங்க குடு.நான் சாயங்காலமா குடுக்கிறேன்”.
பொட்டலத்தை வாங்கி வைத்துக்கொண்டார் பாட்டி.
“எப்பிடிடா இருக்கு சாக்லெட்” என்று கேட்டபடி ஒரு சாக்லெட்டை வாயில் போட்டுக்கொண்டார்.
“அல்லாஹ்வின் மெஹர்பானி.சுகர் கம்ப்ளெய்ண்ட் இல்லை”என்றபடி பொட்டலத்தை டி.வி.பெட்டி மீது வைத்த பாட்டியையும் என்னையும் மாறி மாறி தாத்தா பார்த்தார்.லேசான சிரிப்பிழை அவரது உதடுகளில் தவழ்ந்தது.
டி.வி.யில் ‘தேவுடா தேவுடா...’ பாடிக்கொண்டிருந்தது.
நினைவலைகளை கலைக்கும் விதமாக,
“பாசில் வந்துட்டான்” என்ற யாருடைய குரலோ கேட்டது.
வீட்டின் உள்ளேயிருந்து அழுகுரல் ஏதும் கேட்கவில்லை.பல ஜோடி செருப்புகள் மட்டும் வாசற்படிக்கு அருகில் கிடந்தன.புதிய செருப்புகள்.புதியவர்களின் செருப்புகள்.தாத்தாவின் டார்க் பிரவுன் பாட்டா ஜிப்ஸி செருப்பு ஒரு ஓரமாய் கிடந்தது.
உள்ளே நுழைந்து புத்தகப்பையை கீழே வைத்துவிட்டு ஷூக்களை வேகமாக கழட்டி எறிந்தான்.வீட்டின் நடுவறைக்குள் நுழைந்தான்.மர பெஞ்சின் மீது வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டு உடல் கிடத்தப்பட்டிருந்தது.
அறைக்குள் புதிய முகங்கள்.லேசான சோகம் அப்பின முகங்கள்.எல்லோரது பார்வையும் இவன் மீதேயிருந்தது.இவன் பாட்டியை தேடினான்.பாட்டி மர பெஞ்சின் மறுபுறம் அமர்ந்திருந்தார். கண்கள் சிவந்திருந்தன.நிறைய அழுதிருப்பார் போலிருக்கிறது. அழுகை வற்றிப்போய் பதிலியாய் கண்கள் மட்டும் சிவந்து மீந்திருந்தது சோகம்.
இவனை ஏறிட்டு பார்த்தார்.கண்களால் அழைத்தது போலிருக்கவே மெதுவாக தயங்கித்தயங்கி அருகில் சென்றான்.உள்ளுக்குள் புதுவிதமான ஏதோவொன்று உருவாகி அடிவயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைவதாய் பட்டது.மென்று விழுங்கினான்.
டி.வி. பெட்டியின் மீது சாக்லெட் பொட்டலம் படபடத்தது.
பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான்.பாட்டி இவனது கையை பிடித்துக்கொண்டார்.மெதுவாக இவனது கையை அழுத்தினார். பாட்டியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.எந்த வித பதட்டமுமில்லை.
“பாசில் வந்திருக்கான்.யாராவது மூஞ்சியை மூடியிருக்கிற துணியை கொஞ்சம் தொறந்து காட்டுங்களேன்”என்றார்.
மரபெஞ்சின் கீழே அரிசி நிறைத்த பாத்திரத்தில் கட்டுகட்டாய் ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது.அரிசியின் மீது சாம்பல் படிந்திருந்தது.சுற்றிலும் அமர்ந்திருந்த பெண்களில் சிலர் கைகளில் முக்கடலையை வைத்துக்கொண்டு (தஸ்பிஹ்) ஜபித்து கொண்டிருந்தனர்.
ஆம்பூரிலிருந்து அத்தை வந்துவிட்டிருந்தார்.அவர் எழுந்து உடலை மூடியிருந்த வெள்ளைத்துணியின் முகப்பகுதியை மட்டும் திறந்து,
“பாசில்..வா” என்றழைத்தார்.
இவனுக்கு என்னவோ போலிருந்தது.எழுந்து முகத்தை பார்க்கும் திராணியற்றவனாய் ஆகிப்போயிருந்தான்.பாட்டி தான் கண்களால் பார்க்கும்படி சைகை செய்தார்.சற்று சுதாரித்து எழும்பும் போது பக்கத்தில் நிழலாடியது.திரும்பி பார்த்தான்.
தாத்தா...!!சாட்சாத் இவனின் தாத்தாவே நின்றிருந்தார்.
தலையை கோதிவிடும் கைகள்.இவனின் கண்கள் விரிந்தன.நம்ப முடியவில்லை.கைகளில் லேசான நடுக்கம் குடிகொண்டது.அப்படியே தாவி தாத்தாவின் இடுப்பை கெட்டியாக பிடித்தபடி “ஓ”வென சத்தமிட்டு அழ ஆரம்பித்தான்.அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“புள்ள பயப்புடுது. அழாத..அழாத.பயப்படாதே...”. குரல்கள். அந்நியக் குரல்கள். பரிச்சயமில்லாத புதுக்குரல்கள்.
தாத்தா இவனை தூக்கிக்கொண்டார்.அவரது தோளில் அப்படியே வாகாய் சாய்ந்து கொண்டான்.இப்போது மெதுவாக திரும்பி மரபெஞ்சின் மீது முகம் திறக்கப்பட்டு கிடந்த உடலை பார்த்தான்.சதா பீடியை புகைத்தபடியிருந்து “பீடி தாத்தா” என்று செல்லமாய் இவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட இவனது பாட்டியின் அப்பா புன்சிரிப்பு மாறாத பொக்கை வாயுடன் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து நிறைய பேர் வந்தார்கள்.பார்த்தார்கள். சென்றார்கள்.
பாசில் அம்மாவை தேடினான்.காணவில்லை.சமையலறையில் இருக்கலாம் என எண்ணினான்.
தாத்தா இவனை கீழே இறக்கிவிட்டார்.இறங்கினவன் பக்கத்திலிருந்த படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான்.அங்கே இவனது அப்பா உட்கார்ந்திருந்தார்.அவரது முகத்தில் எப்போதுமே கண்டிராத ஒரு சோகம் அப்பியிருந்ததை இவனால் காண முடிந்தது.படுக்கையில் ஏறி படுத்துக்கொண்டான்.அப்படியே உறங்கி போனான்.கனவில் திடீரென தாடியும் மீசையும் முளைத்து பெரிய மனிதரை போல அப்பா காட்சி தந்தார்.
“என் தாத்தா செத்துட்டாரு.பீடி தாத்தா செட்துட்டாரு...”என்றபடி அருகில் வருகிறார்.அவரது வாயிலிருந்து சாக்லெட் வாசம் இவன் நாசிக்குள் புக ஆரம்பிக்கிறது. இவனது உடல் ஒரு முறை குலுங்கியது.
ஆதரவாக முதுகை யாரோ வருடினார்கள்.கண்களை திறந்தான்.அப்பா தான்.மெதுவாக திரும்பி அப்பாவின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டான்.மனசு லேசாகி பஞ்சாய் பறப்பது போல் உணர்ந்தான்.
- சு.மு.அகமது |
||||||||||||||||||
by Swathi on 08 May 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|