LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 13

ஒரு நாள் காலை, சமார் ஏழு மணி இருக்கும். காப்பி சாப்பிட்டு முடிந்த சமயம். கட்டை குட்டையாக ஒரு கனவான் விட்டுக்குள் வந்து நுழைந்தார்; “ பாரதி ” என்று உரக்கச் சத்தம் போட்டுக்கொண்டு, நமஸ்காரம் செய்த, பாரதியாரை இறுகத் தழுவிக்கொண்டார். பாரதியாரும் மெய்மறந்துபோய் வந்தவரைக் கட்டிக் கொண்டார். இரண்டொரு நிமிஷங்கள் கழிந்தன. இருவர் முகங்களிலும் கண்ணீர் வராத குறைதான்.

பாரதியாரின் உடலைத் தீண்டிச் சொந்தம் கொண்டாடியவர் எவரையும் நான் அதுவரையில் கண்டதே இல்லை. எனக்கு இந்தச் சம்பவம் வெகு ஆச்சரியமாக இருந்தது. வந்தவர் யாராயிருக்கலாம் என்று ஊகிக்க ஆரம்பித்தேன். பாரதியாரின் வெளியூர் நண்பர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், வந்தவர் இன்னாரென்று அனேகமாய் ஊகம் செய்யலாம். நான் அதிகமாய் கேள்விப்பட்டதில்லை.

“ பாரதி! உன்னை எங்கே பார்க்க முடியாமல் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன். நான் விடுதலையடைந்து இரண்டு மாதகாலமாகிறது எங்கேயெல்லாமோ சற்றி அலைந்தேன்; உன்னைப் பார்க்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். நீ சௌக்கியமாயிருக்கிறாயா – ” என்றார் வந்தவர்.

ஜெயிலாம்! விடுதலையாம்! பாரதியாரைப் பார்ப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டிரந்தாராம்! பார்க்காமல் விடுவதில்லை என்கிறார்! பாரதியாரை, ‘நீ, நீ’ என்று ஏகவசனமாக அழைக்கிறார்! இவர் யார்! இவர் எந்தச் சிறையிலிருந்த விடுதலையடைந்தார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை.

“ ஜெயில் உனக்குச் சௌக்கியமாயிருந்ததா? உன் உடம்பு பார்வைக்கு அவ்வளவு நன்றாயிருக்கவில்லையே! உன் உடம்பே ஜெயிலில் இவ்வளவு இரக்கம் காணுவதென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம். முதலிலே ஏதாவது சாப்பிடு ” என்றார் பாரதியார்.

வந்தவர் பல் விளக்குவதற்காகக் கொல்லைப்புறம் சென்றிருக்கையில் , “ஓய்! இவரை உனக்குத் தெரியுமா?” என்று பாரதியார் என்னைக் கேட்டார். தெரியாதென்றேன். “இவர்தான் சுரேந்திர நாத் ஆர்யா, இவர் தெலங்கில் அபூர்வமாகப் பிரசங்கம் செய்வார்; என் சென்னைத் தோழர்களுள் ஒருவர். ஆறு வருஷம் இவருக்குக் கடுங்காவல்” என்று பாரதியார் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, ஆர்யா அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.

ஏதோ பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும், “பாரதி! உனக்கு ஒரு சேதி தெரியாதே! நான் கிறிஸ்தவன் ஆகிவிட்டேன். சிறையிலும் வெளியிலும் டேனிஷ் மிஷன் பாதிரிமார்கள் எனக்குப் பரிவு காட்டிச் செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச் சொல்வது? நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா.

“இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு, நீ என்ன செய்வார்? ஹிந்து சமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது; உயிர் அற்ற ஜன சமூகம்!” என்று பாரதியார் பதறிக்கொண்டே சொன்னார்.

“ஜெயிலிலிருந்து நான் வெளி வந்த பிறகு என்னிடம் ஒருவரும் பேசத்துணியவில்லையே! எங்கே போனாலும் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். பாதிரிமார்கள் தாம் என்னிடம் நல்ல முகம் காண்பித்து, எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள். பிரசங்கத்திலே கை தட்டுகிறதும், வீட்டுக்குப் போனதும் பயப்படுகிறதுந்தான் ஹிந்துக்களின் வேலை. இந்தக் கூட்டத்திற்குள் இருக்க எனக்குச் சற்றுகூடப் பிடிக்கவில்லை. நான் கிறிஸ்தவனானதில் உனக்கு வருத்தமோ!” என்றார் சுரேந்திராநாத் ஆர்யா.

பாரதியார் ஒன்றுமே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்; பிறகு சொன்னார் : “ மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு ஹிந்துவும், அதுவும் புத்தியும் தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு ஹிந்துவும் ஜனகமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்க முடியாமல், வேறு மதத்துக்குப் போய்விட்டால், அந்த ஹிந்துஜன சமூகத்தின் கதி என்னவாகும்! புருஷன் செய்த தவறுக்காக மனைவி தற்கொலை செய்துகொள்வதும், மனைவியின் தவறுக்காகப் புருஷன் சன்னியாசம் வாங்கிக் கொள்வதும் சகஜமாய்ப் போனால், குடும்ப வாழ்க்கை என்பதைப் பற்றியே பேச முடியாது. இனி, நீ பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்க வேண்டியவன். உன்னுடைய தீவிர தேசபக்தியை (இந்த இடத்தில் பாரதியார் கண்ணீர் விட்டார்) அவர்கள் மதப்பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும். உனக்கு நான் உபதேசம் செய்வது தவறு.”

இவ்வாறு பாரதியார் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, ஆர்யா பொலபொலவென்று கண்ணீர் சொரிந்துவிட்டார்.

எனக்கு இன்னது செய்வதென்று தோன்றவில்லை. தாயுமானவர் கூறும் “மத்த கஜங்கள்” கண் கலங்குவதென்றால், அப்பபொழுது சின்னப் பிள்ளையாயிருந்த என்னைப்பற்றி ஒன்றுமே சொல்லத் தேவையில்லை.

ஒரு நிமிஷம் பொறுத்துச் சொன்னார்: “ பாரதி, நான் அமெரிக்காவுக்குப் போகப்போகிறேன். பாதிரிமார்கள் எனக்கு ஒத்தாசை செய்வதாகச் சொல்லுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்வது உசிதம் என்று எனக்குத் தோன்றிற்று. இந்தத் தேசத்திலேயே கௌரவம் இருந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். நான் அமெரிக்கவுக்குப் போய் வருகிறேன். போவதற்கு முன் உன்னைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று இங்கே வந்தேன். உன்னைப் போல உயர்ந்த கவியாயிருந்தாலும் பரவாயில்லை; அப்பொழுது நான் அயல் நாட்டுக்குப் போகவேண்டா.”

பாரதியாரின் முகத்திலே ஈயாடவில்லை. அவர் சொன்னார்: “உன் தீர்மனத்தை மாற்ற நான் ஆசைப்படவில்லை. ஆனால் ஒருவன் செய்த உதவிக்காக நன்றி பாராட்டுவது மனித இயற்கை. அதை ஒப்புக்கொள்ளுகிறேன். அந்த இயற்கை இல்லாமற்போனால் உலகம் கட்டுக்கொள்ளாது. ஆனால், நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்டா?

“ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள். கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். அவைகளை ஒழிக்க முடியாது என்று பயந்து, வேறு மதத்தில் சரண் புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி, எல்லா மதங்களிலும் உண்மை உண்டு.

“நம் ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம் வரலாம். அதற்காக அவர்களை ஒழிக்க, அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க, நாம் எண்ணலாகாது அவ்வப்போது எத்தனையோ ஆச்சாரியார்களும் பக்தர்களும் தோன்றி, ஹிந்துக்களின் வாழ்க்கைப் புனிதப்படுத்த முயன்றிருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள் அந்த கூட்டத்தில் சேரத்தகுந்தவர்கள். நீ கிறிஸ்தவனானது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

“அமெரிக்காவிலோ வேறு அயல் நாடுகளிலோ படிக்கப் போன நமது இளைஞர்கள் பலர், வெள்ளை மனைவிகளுடன் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார்கள். நமது தேசம் இப்பொழுது இருக்கிற நிலையில், அது கூடாது என்பது என் எண்ணம். ஐம்பது வருஷங்களுக்குப் பின் அந்த மாதிரி நடந்தாலும் பாதகமில்லை.

“உனக்கு உபதேசம் செய்வதாக நீ எண்ணிக்கொள்ளாதே; ஏதோ, என் மனதுக்கு உண்மை என்று தோன்றியதைச் சொல்லிவிட்டேன்; சொல்லலாம் என்ற பாத்தியத்துடன்தான் சொன்னேன். உனக்கு மனத்திலே ஆயாசமே வரப்படாது. அமேரிக்காவுக்குப் போ; என்ன வேண்டுமானாலும் செய்; தேசத்தை மட்டும் ஒரு நாளும் மறக்காதே.”

ஆர்யா விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். பாரதியாருக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. “தேசத்துக்காக உழைத்துப் பாடுபட முன்வருபவர்களை இந்தத்தேசம் காப்பாற்ற முடியாமல் போனால், இதற்கு விமோசனம் ஏற்படப் போகிறதா? ஆர்யா எவ்வளவு யோக்கியன்! என்ன தீரன்! எதைக் கண்டும் அலுத்துக் கொள்ள மாட்டானே! அவனுக்கு அலுப்பும் மனக்கசப்பும் வருகிறதென்றால்! பராசக்தி! நீதான் இந்தத் தேசத்தை காப்பாற்ற வேண்டும்!” என்று தாமே பேசிக்கொண்டார்.

“வரால் மீனுக்கும் மீசை இருக்கிறது; உங்களுக்கும் மீசை இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?” என்று திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பிரங்கத்தில் துடுக்காக ஜனங்களைக் கேட்ட தீரன் இந்த ஆர்யாதான். அமெரிக்காவில் டாக்டர் பட்டம் – வைத்திய டாக்டர் அல்ல, தத்துவ டாக்டர் பட்டம் – பெற்று இந்தியாவுக்குத் திரும்பி வந்து, சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்த அர்யா இவர்தான். இவர் பாரதியாருக்கு ஆதிகால நண்பர்.

பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து நூற்றக்கணக்கான போலீசார் புதுச்சேரிக்கு வந்து முகாம் போட்டார்கள் என்று சொல்லியிருந்தேன். இந்தப் போலீசாரால் ‘சுதேசி’களுக்கு, அதாவது அரவிந்தர், பாரதியார் உள்ளிட்ட தேசபக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கண்டும் கேட்டும், புதுச்சேரிவாசிகள் வெகுவாக மனமிரங்கினார்கள்.

புதுச்சேரியிலிருந்த ‘சுதேசி’களை எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும் என்று போலீசார் நிரம்பவும் பிரயத்தனம் செய்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மயற்சியும் பயனற்றுப் போய்விட்டது. முதல்படியாக அவர்கள் புதுச்சேரிவாசிகளின் துணையை நாடினார்கள். போலீசாரின் நய பய வார்த்தைகளைப் புதுச்சேரிவாசிகள் ஏற்கவில்லை.

‘சுதேசி’களின் சக்தியும் செல்வாக்கும் நாளுக்கு நாள் விருத்தியடைந்துகொண்டே வந்தன. புதுச்சேரி ஒதியஞ்சாலை என்றவிடத்தில் ஸ்தாபிக்கப்பட்ட “ஸர்க்கிள் ஸ்போர்டிப்” என்ற இளைஞர் கூட்டத்தார் அரவிந்தரை மொய்க்கத் தொடங்கினார்கள். பாரதியாருக்குப் புதுச்சேரி முழுமையும் கீர்த்தி.

பொதுஜனங்கள் ஆதவைப் பெறாத போலீசார் வேறொரு யுக்தி செய்தார்; பிரெங்சு அரசாங்கத்தின் உதவியை நாடினார்கள். புதச்சேரி பிரெஞ்ச் கவர்னர் அவர்களைப் பெரிய போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி பேட்டி கண்டடார்கள். இவர்கள் கவர்னரோடு செய்த சம்பாஷணையின் சாரம், அவ்வப்போது ‘சுதேசி‘களின் காதுக்கு எப்படியோ எட்டிவிடும்.

எவ்வித அரசியலைபும் விரும்பாதவர்களுக்கு அராஜகர்கள் என்று பெயர். அவர்களுக்கு எவ்வித அரசியல் முறையும் கூடாது. அவர்களுக்கு ஐரோப்பாவில் “அனார்க்கிஸ்ட்”, “நிஹிலிஸ்ட்” என்று பெயர்கள் வழங்கி வந்தன.

இந்தக் கூட்டத்தின் தனி நபர்களுக்கோ, இந்தக் கூட்டத்துக்கோ, ஐரோப்பாவில் எந்த அரசாங்கமும் இடங்கொடுப்பதில்லை. நாட்டை விட்டுத் துரத்திவிடுவார்கள். அனார்க்கிஸ்டாயிருப்பது ஐரோப்பாவிலே பயங்கரமான குற்றமாகப் பாவிக்கப்பட்டு வந்தது.

புதுச்சேரியில் வசித்து வந்த ‘சுதேசி‘கள் அராஜகர்கள் என்று போலீசார், பிரெஞ்சுக் கவர்னருக்கு மந்திரோபதேசம் செய்தார்கள். ருசு வேண்டும் என்றார் கவர்னர், ருசுவுக்குப் போலீசார் எங்கே போவது? புதுச்சேரியிலிருந்து ‘சுதேசி‘களை நாடு கடத்த முடியாது என்று கவர்னர் சொல்லிவிட்டார்.

ஏதோ ஒரு ஜந்துவுக்கு ஆயிரம் உபாயங்கள் தெரியும் என்று சொல்வார்கள். போலீசாரின் இந்த யுக்தி பலிக்காமல் போனால் அவர்கள் வசம் வேறு உபாயங்கள் இல்லையா? பண்டை காலத்துப் போர்களிலே, ஓர் அஸ்திரம் பலிக்காமல் போனால், வீரர்கள் வேறு அஸ்திரங்களைப் பிரயோகம் செய்ததில்லையா?

போலீசார் வேறு உபாயத்தை நாடினார்கள். ‘சுதேசி‘கள் யாவரும் அந்நியர்களல்லவா? அவர்களுக்குப் பிரெஞ்சுப் புதுச்சேரியில் குடியிருப்புப் பாத்தியம் இல்லாமல் அடித்துவிடவேண்டும் என்பது போலீசாரின் புதிய முயற்சி.

அதன்பொருட்டு, பிரெஞ்சு இந்திய சட்டசபையில் ‘ அந்நியர் சட்டம்’ என்று ஒரு புதிய சட்டம் செய்யுமாறு பிரெஞ்சு அரசாங்கத்தைத் தூண்டினார்கள். இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தால், எப்படியேனும் ‘சுதேசி‘களை வெளியேற்றிவிடலாம் என்பது போலீசாரின் கருத்து.

இத்தகைய சட்மொன்று உண்டாக்க, பிரெஞ்சுக் கவர்னர் சம்மதித்தார். அந்நியர்களின் தூண்டுதலின் பேரில், எந்த அரசாங்கமாவது சட்டம் செய்யுமா என்று கேட்கலாம்; பிரெஞ்சு இந்தியாவின் நிலைமை அப்படியிருந்தது.

1911 – 1912 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் தேசத்திதன் நிலைமை மிகவும் கேவலமாயிருந்தது. பக்கத்திலே, ஜன்ம விரோதிகளான ஜெர்மானியர்களுக்குத் தலைவர் கெய்ஸர். கெய்ஸர் செய்த காரியங்களெல்லாம் தங்களை அவமானப்டுத்தும்பொருட்டே செய்தார் என்பது பிரெஞ அரசாங்கத்தாரின் கருத்து.

மொராக்கோ தேசத்தில், அகாதிர் என்ற துறைமுகத்திலே, கெய்ஸர் தமது யுத்தக்கப்பலை நிறுத்தி அட்டஹாசம் செய்தது பழங்கதை. இதையும் கெய்ஸரின் ஏனைய செயல்களையும் கண்டு, பிரெஞ்அரசாங்கத்தார் வெகுண்ட போனர்கள். இங்கிலாந்தின் உதவியைப் பெற்றாலொழிய, ஜெர்மனியரின் அதிக்கிரமத்தைச் சமாளிக்க முடியாது என்று பிரெஞ்சு அந்நிய நாட்டு மந்திரி தீர்மானங்கொண்டார்.

எனவே, பிரெஞ்சு அரசியலார் தமது பழைய பகைமையை மறந்து, இங்கிலாந்தினிடம் காதல்கொண்டு உறவாட ஆரம்பித்தார்கள், இங்கிலீஷ்காரர்களின் மனம் கோணாத வகையில் நடந்தக்கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கொண்டாகள், பிரெஞ்சு அரசியல் நிர்வாகிகள்.

இந்த நிலைமைதான், பிரெஞ்சுக் கவர்னரைப் புதிய சட்டத்துக் இசையத் தூண்டியது. ‘சுதேசி‘களை அடியோடு கெடுத்துவிடப் புதுச்சேரி சட்டசபை மெம்பர்கள் துணியவில்லை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த தேதிக்கு முன்னால், ஒரு வருஷ காலம் புதுச்சேரியில் வசித்திருக்கும் அந்நியர்கள், ஐந்து ஆனரரி மாஜிட்ரேட்டுகளிடமிருந்து கையெழுத்து வாங்கி பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொண்டால், அவர்கள் குடியிருக்கலாம் என்ற ஷரத்து அந்தச் சட்டத்தில் புகுத்தப்பட்டது.

இந்தச் சிறிய ஷரத்து அந்தச் சட்டத்தில் புகுவதற்குச் ‘சுதேசி‘கள் என்ன மயற்சி செய்யவேண்டியிருந்தது என்பத இப்பொழுது யாருக்குத் தெரியும்? பிரெஞ்சுக் கவர்னரைத் தூண்டுவதோ பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம். ‘சுதேசி‘களோ பஞ்சைப் பேர்வழிகள் என்று கருதப்படுபவர்கள். பிரெஞ்சுக் கவர்னர் இங்கிலீஷ்காரர்களின் சொல்லைக் கேட்பாரா, ‘சுதேசி‘ சொல்லைக் கேட்பாரா?

மேற்சொன்ன திருத்தத்தைப் பிரிட்டிஷ் போலீசார் பெரிதாக மதித்து லட்சியம் செய்யவில்லை. ஏன்? ஐந்து கௌரவ மாஜிஸ்ட்ரேட்டுகளின் கையெழுத்துகள் (அத்தாட்சிகள்) ‘சுதேசி‘களுக்கு அகப்படாமல் செய்து விடலாம் என்பது அவர்களுடைய தைரியம்.

சென்ற ஐரோப்பியப் போரில், இங்கிலீஷ் சேனைகளைப்பற்றிக் கேவலமாக எண்ணிய கெய்ஸர் என்ன வாழ்ந்தார்? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பெரியோர்கள் சொல்லுவதை ஏளனம் செய்யலாகாது.

அந்நியர் சட்டம் அமலுக்கு வந்த சில தினங்களுக்குள், ‘சுதேசி’கள் (அந்நியர்களானபடியால்) பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஐந்து ஆனரரி மாஜிஸ்ட்ரேட்டுகளை எங்குக் கண்டு பிடிப்பது ?

உள்ளபடியே எந்தக் காலத்திலும் பணக்காரர்கள், பதவிகள் பெற்றவர்கள் அரசாங்கத்தின் சார்பாகத்தானிருப்பார்கள். இதை நம்பித்தான் மேற்சொன்ன சிறு திருத்தத்துக்குப் பிரிட்டிஷ் போலீசார் இணங்கியது.

இந்தத் தடவை, ‘சுதேசி’கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் வர்க்கத்தாருக்கு ஆனந்தம். எல்லா ஆனரரி மாஜிஸ்ட்ரேட்டுகளையும் அவர்கள் கண்டு பேசியாகிவிட்டது. வெற்றி அவர்களுக்குத்தான் என்று முடிவு கட்டிக்கொண்டு, அவர்கள் உல்லாசமாய்க் காலம் போக்கிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு வருஷ ஷரத்து இருக்கிறதே, அததான் ‘சுதேசி’களுக்குக் கடைசி அடைக்கலமாகும். எப்படியாவது ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளைப் பிடிக்க வேண்டும். யார் யார் கௌரவ மாஜிஸ்ட்ரேட் என்பரே ‘சுதேசி’களுக்குத் தெரியாது. யாரைப் போய்ப் பார்ப்பது?

‘சுதேசி’கள் முகவாட்டத்துடனிருந்தார்கள். அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார் முதலிய பெரியவர்கள் அரவிந்தரின் பங்களாவில் இதைப்பற்றிக் கூடிப் பேசுவார்கள். யோசனை புலப்படவில்லை. எல்லோருக்கும் சிறிது மனக்கலக்கம் என்று சொல்லத் தேவையில்லை.

“ சரி! நாளைக்குச் சாயங்காலம் பேசிக்கொள்ளுவோம் ” என்றார் பாரதியார். இரவு ஒன்பது மணியிருக்கும். பாரதியார் வீட்டுக்குத் திரும்பிப் போனார். அப்பொழுது அரவிந்தர் பங்களாவில் எனக்கு ஜாகை.

‘ ஓய் ’ என்று என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, நாளைக்குக் காலமே எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வாரும் ! ” என்று சொல்லிவிட்டுப் பாரதியார் போய்விட்டார்.

மறுநாள் காலையில் குறித்த நேரத்துக்கு, நான் பாரதியாரின் வீட்டுக்குப் போனதும், “புறப்படவோமா?” என்றார் பாரதியார். முதல் நாளிரவு பாரதியாரின் முகத்தில் காணப்பட்ட அதைரியம் அப்போது இருந்தவிடம் தெரியவில்லை.

“எங்கே போகிறது ?” என்றேன். “கேள்வி கேட்காமல் கூட வரணும்” என்றார் பாரதியார்.

கேள்வி கேட்காமல், ஒன்றும் பேசாமல் கூட எதற்குப் போகிறது என்று எனக்கு விளங்கவில்லை. எனக்குக் கொஞ்சம் ஆத்திரம் வந்தது. ஆத்திரம் வந்து பிரயோசனம் என்ன? கூடவே மௌனமாய்ப் போனேன்.

சிறிது தூரம் சென்றதும், ‘சபாஷ்’ என்று என்னைப் பாரதியார் தட்டிக்கொடுத்தார். ஆகாயத்திலிருந்து விழும் மழைத்துளிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சாதகப்பட்சியின் நிலைமை என்னுடையது. எனக்குச் சற்று முன் வந்த ஆத்திரம், வந்த வழி, போன வழி தெரியவில்லை.

இரண்டு பேரும் கலவலா சங்கர செட்டியாரின் விட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். செட்டியார் நடுக்கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.

“சுவாமி” என்று எழுந்து நின்று கும்பிட்டார் செட்டியார்.

“நீங்கள் எல்லாரும் இருந்தும், நாங்கள் புதுச்சேரியை விட்டுப் போக வேண்டுமா? புதுச்சட்டம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ ?” என்றார் பாரதியார்.

சட்டம் செய்யும் காலத்தில் செட்டியார் புதச்சேரியில் இல்லை. அவர் சென்னைக்குச் சென்றிருந்தார். யாதொரு தகவலும் அவருக்குத் தெரியாது.

பாரதியார் அந்நியர் சட்டத்தின் ஷரத்துகளை எடுத்து விரிவாகச் சொன்னர். “இவ்வளவுதானே!” என்றார் செட்டியார்.

நான் சின்னப் பிள்ளை. இதைக் கேட்டதும் எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. “ என்ன செய்யலாம்?” என்றார் பாரதியார்.

“ஐந்து பேர் கையெழுத்துகளும் வாங்கித் தருகிறேன், பிரமாதமான காரியமில்லை. நானும் ஒரு கௌரவ மாஜிஸ்ட்ரேட்தான்” என்றார் செட்டியார்.

“ நல்லது. இன்றைக்குள் முடியுமா?“ என்றார் பாரதியார்.

“இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் காரியம் முடிந்துவிடும். கையெழுத்து வாங்க வேண்டிய தஸ்தாவேஜியை எழுதி என்னிடம் கொடுங்கள். நான் இரண்டு மணி நேரத்துக்குள் உங்களை உங்கள் வீட்டில் வந்து பார்க்கிறேன்” என்றார் செட்டியார்.

ஞாபகம் வந்தது போல “புதுப்பாட்டு ஏதாவது பாடுங்களேன் ” என்றார் செட்டியார். ” ஜயமுண்டு பயமில்லை மனமே ” என்ற பாட்டைப் பாடினார் பாரதியார். அப்பொழுதுதான் அதைக் கவனம் செய்தார் என்று நான் சொல்லவரவில்லை. அதை இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் புதிதாகப் பாடியிருக்கவேண்டும்.

கையெழுத்தாகி, அன்று பிற்பகல் மூன்று மணிக்குள் அரவிந்தர், அய்யர், பாரதியார், சினிவாசாச்சாரியார், மற்றும் நாங்கள் எல்லோரும் பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொண்டோம்.

எங்கள் தஸ்தாவேஜிகளைப் பிரெஞ்சுப் போலீசார் ஒப்புக்கொண்டார்கள். தொல்லை தீர்ந்தது. அன்று எங்கள் பின்னே வந்த பிரிட்டிஷ் இந்தியப் போலீசாரின் முகத்தில் ஈ ஆடவில்லை. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? ஆண்டவன் இருக்கிறதை அவர்கள் மறந்தார்கள் போலும்! அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வி.

சில்லறை உபாயங்கள் பயன்படாமல் போகவே, பெரிய யோசனையொன்று செய்தாகள். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதீனத்துக்குள்ளிருந்த இடங்களை இங்கிலீஷ்காரர்கள் வாங்கிக்கொண்டு, அதற்குப் பரிவர்த்தனையாக, மேற்கு இந்தியத் தீவுகளில் சிலவற்றைப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்துவிடுவது என்று இங்கிலாந்து மந்திரிகள் பேரம் பேசினார்கள்.

இதற்குப் பிரெஞ்சு ஆரசாங்கத்தார் அனேகமாய்ச் சம்மதிப்பார்கள் போல் இருந்தது. பாரிஸ் நகரத்திலிருந்த லா போர்த், போல் புளூஸன் முதலிய பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார்.

பாரதியாரின் நண்பரான பொன்ன முருகேசம் பிள்ளைக்குச் செல்வாக்குள்ள பல பிரெஞ்சுக்காரர்களைப் பாரிஸ் நகரிலும் ஏனைய நகரங்களிலும் கடிதப் போக்குவரத்து மூலமாய்த் தெரியும். சில பிரபல வியாபாரிகளையும் அவருக்குத் தெரியும்.

பிரான்சிலே, மந்திரிகள் மாறகிற சமயம். இந்த யோசனையை எப்படியாவது காலங்கடத்த வேண்டும் என்பது ‘சுதேசி’களின் கருத்து. பாரதியார், பொன்னு முருகேசம் பிள்ளையையும் ஏனைய நண்பர்களையும் பிரான்சுக்குக் கடிதம் எழுதும்படி செய்தார்.

பரிவர்த்தனை செய்யப்படாது என்று புதுச்சேரியயில் கூட்டம் போட்டுத் தீர்மானம் செய்ததாகக்கூட என் நிநைவு; நிச்சயமாய்ச் சொல்ல முடியாது.

லா போர்த், போல் புளூஸன் முதலியவர்கள் இந்த விஷயமாக அரும்பாடு பட்டார்கள். அவர்களுடைய முயற்சிகளும் பயன்படாமட்ல போகுமோ என்று பயமாயிருந்தது. இந்தச் சமயத்தில் பிரெஞ்சு மந்திரி சபையில் மாறுதல் எற்பட்டது.

ப்வாங்கரே அவர்கள் பிரெஞ்சு முதல் மந்திரியானார். (இந்தப் பெயரை “ பாயின் சேகர் ” என்று தமிழ்நாட்டில் த்வறாக எழுதுகிறார்கள், உச்சரிக்கிறார்கள்.)

ப்வாங்கரே முதல் மந்திர்யானதும், கணீர் என்று ஒரு வார்த்தை சொன்னார்: “பிரெஞ்சு கொடி பறக்கும் எந்த நாட்டையும் பரிவர்த்தனை செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். பிரெஞ்சு ரத்தம் சிந்திய மண் எனக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் புனிதமானது, அதுவும் துய்ப்ளெக்ஸ் உருவச்சிலை நிற்கும் புதுச்சேரியயை, யாருக்கும் பரிவர்த்தனை செய்யப் பிரெஞ்சுக் காரர்கள் இடக்கொடுக்கலாகாது” என்று பிரெஞ்சு டெபுடிகளின் சேம்பரில் (பார்லிமெண்டு சபையில்) பேசினார்.

புதுச்சேரியில் வசித்து வந்த ’ சுதேசி’களின் மனக்கலக்கம் ஒருவாறு ஒழிந்தது. ஆனால், பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் பிடிவாதக்காரர்கள், அவர்கள் தங்கள் தோல்வியைப் பொறுத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவார்கள்?

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.