LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- தியாக பூமி

நான்காம் பாகம் - இளவேனில் - தீர்ப்பு

                                                    தீர்ப்பு

 சென்னை ஹைகோர்ட்டின் சரித்திரத்தில், இந்த உமாராணி-ஸ்ரீதரன் வழக்கைப்போல் ஜனங்களின் மனத்தைக் கவர்ந்த வழக்கு வேறு நடந்ததில்லையென்று சொல்லலாம். நாலுபேர் கூடுமிடங்களிலெல்லாம் இதே பேச்சாகத்தான் இருந்தது. கேஸ் நடக்கும் தினங்களில் மாலை வேளையில் கடற்கரைக்குப் போனால், வெண் மணலில் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களுடைய பேச்சில் உமாராணி-ஸ்ரீதரன் என்ற பெயர்கள் அடிக்கடி கேட்கக் கூடிய நிலையில் இருந்தன. அநேகம் பேர், கையில் அன்று வந்த பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தினசரிகளில் 'லீகல் காலம்' என்று சொல்லப்படும் கோர்ட் நடவடிக்கைகள் பிரசுரிக்கும் பத்திக்கு இவ்வளவு முக்கியம் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.

     இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு விஷயத்தில் ஸ்திரீகள் காட்டிய சிரத்தையேயாகும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்மணிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால், உடனே உமாராணியின் பேச்சுத்தான் கிளம்பும். அபிப்பிராய பேதங்கள் வாதப் பிரதி வாதங்கள் இல்லாமலில்லை. பொதுவாக, இளம் பெண்கள் எல்லாரும் உமாராணியின் கட்சி பேசினார்கள். "ஆமாம்; அவள் கேட்பது நியாயந்தானே? புருஷர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், அதற்குக் கேள்வி முறை கிடையாது; பொம்மனாட்டிகள் மட்டும் எப்போதும் அடிமையாயிருக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? அது என்ன நியாயத்தில் சேர்ந்தது? நன்றாய்ச் சொன்னாள், 'புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறே'னென்று!" - இம்மாதிரி படித்த யுவதிகளும், மாதர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாது சிரோமணிகளும் பேசினார்கள். பழைய கர்நாடகத்தில் பற்றுள்ள வயதான ஸ்திரீகளோ, "இது என்ன அநியாயம்? புருஷனுக்குப் பெண்டாட்டி ஜீவனாம்சம் கொடுக்கிறதாமே? அப்படி அந்த உமாராணி நடுக்கோர்ட்டிலே சொன்னாளாமே? என்ன இருந்தாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் ஆகுமோ?" என்றார்கள். இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தன.

     சுதந்திர ஸ்திரீ சமாஜத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் சிலர் உமாராணியிடம் அநுதாபம் காட்டுவதற்காகப் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டுமென்றும், உமாராணியின் பக்கம் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதாக நீதிபதிக்கு ஒரு மகஜர் அனுப்ப வேண்டுமென்றும் முயற்சி செய்தார்கள். இம்மாதிரியெல்லாம் செய்வது 'கண்டெம்ப்ட் ஆப் கோர்ட்', அதாவது கோர்டை அவமதிக்கும் குற்றமாகும் என்று சிலர் எடுத்துக் காட்டியதன் மேல் மேற்படி முயற்சி கைவிடப்பட்டது.

     இப்படி ஜனங்களிடையில் அளவில்லாத ஆவலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியிருந்த வழக்கில் கடைசியாகத் தீர்ப்புச் சொல்லும் நாள் வந்தது. அன்று சாயங்காலம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, காந்திமகான் கைதியான அன்று ஏற்பட்ட கிராக்கிக்குச் சமமாக இருந்தது.

     நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் சாங்கோபாங்கமாக எடுத்து அலசி ஆராய்ந்து விட்டுக் கடைசியில் பின் வருமாறு தீர்ப்பை முடித்திருந்தார்.

     "பிரதிவாதியாகிய ஸ்ரீமதி உமாராணி தம்முடைய கட்சியை மிகவும் பாராட்டத் தக்க முறையில் எடுத்துச் சொன்னார். அவருடைய வாழ்க்கை வரலாறு கல் நெஞ்சையும் உருக்கக் கூடியதாகும். ஹிந்து சமூக வாழ்க்கையிலுள்ள அநீதிகளுக்கு அவர் ரொம்பவும் உள்ளானவர் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. எல்லாவிதத்திலும் அவர் நம்முடைய அநுதாபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறார். தர்மமும் நியாயமும் பிரதிவாதியின் கட்சியில் தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, சட்டம் அவர் கட்சியில் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேணுமென்று அவர் கேட்பது தர்ம நியாயமாயிருக்கலாம்; ஆனால் அவருடைய கோரிக்கையை இப்போதுள்ள சட்டம் அங்கீகரிக்கவில்லை. சட்டம் பிசகானதாயிருந்தால், அதைத் திருத்த வேண்டியது சட்ட நிபுணர்கள் - அரசியல் வாதிகள் இவர்களுடைய கடமை. நான் இப்போது அமுலிலுள்ள சட்டத்தின்படிதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சாதாரணமாக, ஒரு புருஷன் தன்னுடைய மனைவி தன்னுடன் வசிக்க வேண்டுமென்று கோருவதற்குப் பாத்தியதை உண்டென்று சட்டம் சொல்கிறது. இந்த வழக்கில் பிரதிவாதியை வாதி கொடூரமாக ஹிம்ஸித்ததாய் ருசுவாகவில்லை. ஆகவே, உமாராணி என்கிற சாவித்திரி அம்மாள் அவளுடைய புருஷன் ஸ்ரீதரன் என்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்பளிக்கிறேன்."

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.