LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 7

 1905 ஆம் வருஷம் இந்தியாவின் சரித்திரத்தில் ஓர் எல்லை. ஸ்மரணையற்றுத் தூங்கிக்கொண்டிருந்த இந்தியர்கள், அந்த வருஷம் கண் விழித்துக்கொண்டார்கள். 1907 ஆம் வருஷம் முதல் நாட்டாருடைய தேச பக்தியின் போக்கு மாறிற்று. இவ்விரண்டுக்கும் வங்காளப் பிரிவினையும், லோகமான்ய திலகரும் காரணங்கள்.

1906 ஆம் ஆண்டுக்குமுன் இந்தியர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும், அவை சுய மதிப்பை வளர்க்கும் கஷ்டங்கள் அல்ல.

நமக்கு நேரும் கஷ்டங்கள் இருவகை; நம்மமையறியாமலே வரும் கஷ்டங்கள்; நாம் வருவித்துக்கொள்ளும் கஷ்டங்கள். வண்டியிலே பூட்டின மாடு கணடத்தை அனுபவிக்கிறது. எதிரி மாட்டை எதிர்த்துச் சண்டை போட்டாலும் கஷ்டமனுபவிக்கிறது. மாட்டின் முதல் கஷ்டம் அதன் சுய மதிப்புக்கும் சுதந்தர வாழ்வுக்கும் பாதகமான கஷ்டம். பிந்திய கஷ்டம் அதன் சுய மதிப்பையும் சந்தோஷத்தையும் வளர்க்கும் கஷ்டம்.

கஷ்டத்தைக் கண்டோ, காணாமலோ அஞ்சுகிற மனிதன் எந்த வேலையையும் உருவாகச் செய்து முடிக்க முடியாது. கீர்த்திக்கு நிலைத்த வழி கஷ்டத்தை அனுபவிக்கக்கூடிய சக்திதான். விருப்புடன் வரவழைத்துக்கொண்ட கஷ்டம் மனிதனுக்குப் பொறுப்பையும் குர்த்தியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மனிதன் கஷ்டப்படும்பொழுது அனுபவிக்கும் ஆனந்தந்தான் சிறந்தது.

சூரத் காங்கிரஷ் உடைபட்டுப் போனது மட்டும் விசேஷமல்ல; இன்னொரு விநோத சம்பவமும் நேர்ந்தது.

1906ஆம் வருஷம், லாலா லஜபதிராயும், ஸர்தார் அஜீத்சிங்கும் பஞ்சாபிலிருந்து பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். லஜபதியின் பிரலாபம் என்று பாரதியார் பாடியிருக்கிரே, அந்தப் பாட்டு லஜபதியின் தேசப் பிரஷ்ட வாழ்வைக் குறித்துத்தான்.

1907ஆம் வருஷக் காங்கிரஸுக்கு லஜபதியைத் தலைவராக்க வேண்டும் என்பது திலகர் கோஷ்டியாரின் கருத்து, அரசாங்கத்தாரின் கோபத்துக்கு அஞ்சி, மிதவாதிகள் இந்த யோசனைக்கு இடங்கொடுக்கவில்லை. பின்னர் லஜபதி விடுதலையடைந்து நேரே சூரத் காங்கிரஸுக்குப் போய்ச் சேர்ந்தார்.

கொள்கையில், லஜபதிக்குத் திலகரிடம் பக்தி, மிகவாத சிரேட்டரான கோகலேயிடம் லஜபதிக்குப் பிரியம். இவர்களிருவரையும் இவர்களுடைய கூட்டத்தார்களையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்று லஜபதி அரும்பாடு பட்டார்; பயன்படவில்லை.

இந்தக் காலத்தில் இந்திய மந்திரியாக இருந்தவர் ஜான் மால்லி என்ற பெரியார். மிண்டோ பிரவு இந்தியாவுக்கு வைஸிராய். மிதவாதிகளை அணைத்துக் கொள்ளுங்கள் என்ற இந்தியா மந்திர மார்லி சீமையிலிருந்து வைஸிராய்க்குத் தந்தியனுப்பினார். இது கோகவே உள்ளிட்டவர்க்குத் தெரியும்.

மிதவாதிகளை எதிர்த்து நிற்கும் கோஷ்டியாரைச் சர்க்கார் மடக்கிச் சிறை புகுத்துவது நிச்சயம் என்று கோகலே, 7ஜபதியின் மூலமாய், திலகருக்கச் செய்தி அனுப்பிவைத்தார். லஜபதி இந்தச் செய்தியைத் திலகருக்குச் சொல்லியதும், அரவிந்தர் முதலியவர்களைக் கலந்து திலகர் பதில் கொடுத்ததும் ஆன இந்த ஸீனை அரவிந்தர் வாயால் வர்ணிக்கக் கேட்டால், மயிர்க் கூச்செறியும்.

மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்படவில்லை என்பது சரித்திரம். திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக்கொண்ட தீர்மானமாகும். இந்தத் தீர்மானமே, நமது நாட்டாரின் மனோபாவத்தை அடியோடு மாற்றிய தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர்.

பாரதியாருடைய வாழ்வின் போக்குக்கு, இந்தச் சம்பவங்கள் சிறப்பான காரணங்கள். பாரதியார் ஒப்பற்ற கவி என்ற முறையிலே, கவி ரவீந்திரரைப் போல் அரசியல் கிளர்ச்சியில் தீவிரமாகக் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் அரசியலில் தீவிரமாகக் கலந்து கொண்டதற்குத் திலகர், அரவிந்தர், விபின்பாபு – இவர்கள் காரணம் என்று சொல்லலாம்.

பாரதியார் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும் வழியையும் ஆதரித்து, இந்தியா பத்திரிகையில் சண்டப் பிரண்டமாய் எழுத ஆரம்பித்தார். 1908ஆம் வருஷம் திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலகர் கோஷ்டியைச் சேர்ந்த பெரிய மரங்களை ஒவ்வொன்றாய் அரசாங்கத்தார் சாய்க்கத் தொடங்கினார்கள்.

சர்க்காரின் முதல் அடி, தேசியக் கூட்டத்தாரைக் கலகலக்கும்படி செய்துவிட்டது. அடுத்தது யார் என்று ஜனங்கள் பேர ஆரம்பித்தார்கள். பாரதியார் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையின் எழுத்து, சென்னை சர்க்காருக்குப் பிடிக்கவில்லை. முதல் பாணம், இந்தியா பத்திரிகையைப் பிரசுரிப்பவர் பேரில் பாய்ந்தது. அடுத்த பாணம் பாரதியாரின்பேரில் பாயும் என்று அவரது நண்பர்களுக்குத் தெரியும்.

பாரதியாரின் வாழ்விலே இது ரொம்ப நெருக்கடியான சந்தர்ப்பம், நண்பர்கள் ஒன்று கூடி யோசித்தார்கள். இந்தச் சமயத்தில் பாரதியார் சிறை செல்வது உசிதமல்ல என்பது சில நண்பர்களின் யோசனை. பாரதியாருக்குத் தேச பக்தர், கவி என்ற இரண்டு வகையிலும் பெருமை.

பாரதியாரின் சிறைச் சேவையைக்காட்டிலும் கவிதைத் தொண்டு உயர்ந்தது என்பது இலக்கியச் சுவை கொண்ட நண்பர்களின் கட்சி. சிறை செல்ல வேண்டும் என்பது சிலரின் வாதம்.

இந்தப் பகுதியை நான் ஏன் விஸ்தாரமாக எழுத வேண்டும் என்பதற்குக் காரணம் உண்டு. உள்ளே நடந்த சம்பவங்களைக் கவினிக்காமல், பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள்.

பாரதியார் பயங்கொள்ளி அல்ல, ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியாரின் எழுத்திலே அச்சத்தை தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவர் அவர் அல்லர் என்பதற்கு ஒரு சம்பவத்தைப் பின்னால் சொல்லுகிறேன்.

பாரதியார் புதுச்சேரிக்குப் போவதற்குக் காரணம் அவருடைய நண்பர்கள். இதை விவரமாக இப்பொழுது சொல்லத் தேவையில்லை. நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதியாருக்கு எல்லையற்ற நம்பிக்கை. பாரதியாரின் கவிதைத் தொண்டு நாட்டுக்குத் தேவை என்று நண்பர்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள்.

மனிதனுக்குத் தருமசங்கட நிலைமை ஏற்படுதென்றால், இப்படித்தான் ஏற்படும். கடமை இரண்டு அம்சங்களாகக் கண்ணில் தோன்றம். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலவும் தோன்றும். எதைத் தள்ளுவது, எதைக் கொள்ளுவது என்பதிலேதான் தருமசங்கடம்.

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதியார் பட்ட கஷ்டங்கள், சிறைக்கஷ்டங்களைக்காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல் ஆயிற்று பாதியாரின் புதுச்சேரி வாசம்.

1908ஆம் வருஷத்தில் பாரதியார் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தார். புதுச்சேரி ஓர் ஆபத்தான ஊர். பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியாவிலே மிச்சப்பட்டிருக்கும் துளித்துளி இடங்களில் புதுச்சேரி ஒன்று. 1870 ஆம் வருஷத்து பிராங்கோ-ஜெர்மன் யுத்தத்திற்கப் பிறக, பிரெஞ்சுக்காரர்கள், இங்கிலீஷ்காரர்களின் தயவை நாடும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். எனவே !தயவை எதிர் பார்த்து; இந்திய ராஜாங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் புதுச்சேரித் துரைத்தனத்தார்.

அந்தக் காலத்தில் புதுச்சேரியில், தக்க ஜனத் தலைவர்கள் இல்லை. ஜனங்களும் பிரெஞ்சு சுகபோக நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஜனங்களுக்குள் கட்டுப்பாடு அதிகமில்லை. இந்த நிலைமையில் பாரதியாரின் கவித்திறன் அவர்களுக்கு எவ்வாறு அர்த்தமாகும்?

அரசாங்கத்துக்குப் பயந்து, பாரதியார் ஓடிவந்துவிட்டார் என்ற புதுச்சேரிவாசிகளில் சிலர், யோசனையின்றித் தொடக்கத்தில் ஏளனம் செய்தார்கள். பாரதியாருக்கு ஒத்தாசை செய்யாததற்கு,. இந்தக் காரணமே போதாதா? நிரம்ப சக்தி படைத்த சர்க்காரை எதிர்த்த கலகக்காரர் பாரதியார் என்று நினைத்து, மற்றும் பெரும்பான்மையோர் பயந்து போனார்கள். இவர்கள் பாரதியாரிடத் கிட்டே அணுகுவார்களா? இவர்களிடமிருந்து பாரதியார் எவ்வித ஒத்தாசையை எதிர்பார்க்க முடியும்?

ஊர் புதிதது; கையில் பசை அதிகமில்லை; சர்க்கார் பகையும் கூடவே இருக்கிறது. இப்படி நிலைமை ஒருக்குமாயின், பாரதியாரின் வாழ்வு பஞ்சு மெத்தைமேல் படுத்துறங்கும் வாழ்வாக இருக்க முடியுமா? முதன் முதலாக ஈசுவரன் தர்மராஜா கோயிலைச் சுற்றியிருக்கிற வீதியொன்றில், ஓர் அய்யங்கார் வீட்டில் பாரதியார் குடி புகுந்தார்.

தனித்துப் புதுச்சேரிக்கு வந்த பாரதியார், சம்பாஷணை நட்புக்குத் திண்டாடிப் போனார், கடன் கொடுக்க நிர்வாகமில்லாதவர்கள் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தால், அவர்களை யாருமே கவனிக்க மாட்டார்கள். நூற்றோடு நூற்றொன்று என்று சேர்த்துக்கொள்ளுவார்கள். அதற்குமேலே, உள்ளத்தில் ஒன்றுமே பரபரப்பு ஏற்படாது.

பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றதும், அவரை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிந்துகொள்ளவே, ஏற இறங்கப் பார்த்தார்கள். கடற்கரையில் அமைக்கப் பெற்றிருக்கும் இரும்புப் பாலத்தில், பாரதியார் ஒரு பெஞ்சியின்மேல் உட்காரப்போய் வேறு எவரேனும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தால் அவர்கள் பெஞ்சியைக் காலி செய்துவிட்டு, சொல்லிக்கொள்ளாமல் அப்பால் நகர்ந்து போய்விடுவார்கள்; இது மரியாதையால் அல்ல; மிதமிஞ்சின பயத்தால்.

இந்த வாழ்வு, சிறையிலே தனிக்காவல் இருப்பதைக் காட்டிலும் கேவலமானதாகும். பசிக்கிற ஒருவனுக்கு நாலாப்பக்கங்களிலும் பக்குவமான ஆகாரங்கள் நிறைந்திருந்தாலும், உண்ண வகையில்லாமல் போனால், அவன் நிலைமை எப்படியிருக்கும்? இத்தனை ஜனங்களும் முதலில் பாரதியாரை அனுபவிக்க முடியாமல் போனதைப் பற்றி என்ன சொல்வது?

எல்லாரும் வீர்களாயிருக்க வேண்டும் என்பதில்லை. வீர்களாயிருக்க முடியாமல் போனால், எல்லாரும் கோழைகளாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? பயப்படுவதற்கும் ஓர் எல்லை இல்லையா? அதுவும் புதுச்சேரி வாசிகள் பயப்படுவதற்கு எல்லை நிச்சயமாய் இருக்கலாம்; இருக்க முடியும். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தாலும், அதில் வசிப்பவர்கள் இந்தியர்கள்தானே. தமிழரகள்தானே! அச்சத்தை லட்சணமாய்ப் பழகிக் கொண்டிருக்கிறவர்களுக்கு அதற்கு எல்லை போடாவிட்டால், லட்சணம் அவலட்சணமாய்ப் போய்விடாதா?
பாரதியார் புதுச்சேரிக்கும் போய்ச் சேர்ந்த சிறிது காலத்துக்குப் பிறகு மண்டையம் சீனிவாஸழச்சாரியாரும் புதுச்சேரிக்கும் போய்ச் சேர்ந்தார். புதுச்சேரியிலிருந்தே இந்தியா பத்திரிகையை வெளியிட வேண்டும் என்பது தேசபக்தர்களின் யோசனை.

யந்திரம் முதலிய யாவும் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் வந்து சேர்ந்தன. ரூ துய்ப்ளெக்ஸ்! தூப்ளோ வீதி; என்ற ரோடிலிருந்த ஒரு கட்டத்தை வாடகைக்குப் பேசினார். அங்கிருந்து இந்தியா வெளி வந்து கொண்டிருந்தது. இதற்கு, பாரதியார் பேரிலும் வாரண்டு.

பாரதியாரை அரசாங்கத்தாரின் கண்ணில் குற்றவாளியாகத் தொன்றும்படி செய்தது. இந்திய வில் பிரசுரமான எந்த எழுத்துத் தெரியுமா? ஓர் எழுத்து எனக்கு நினைவு இருக்கிறது. என்று தணியும் இந்தச் சுதந்தர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று பாரதியார் ஆரம்பித்திருக்கிறாரே, அந்தக் கிருஷ்ண ஸ்தோத்திரம் தான்.

எனக்குப் பசுக்களைக் கொடு; தேக ஆரோக்கியத்தைக் கொடு. என் குடும்பமும் நானும் ஷேமமாயிருப்பதற்கு அருள் புரிவாயாக! உன் பாத மலர் என்றைக்கு என் கண்ணில் படுமோ? யம தூதர்கள் என்னை வேதனை செய்யாமல் தடுப்பாயாக! என்று கடவுளை ஸ்தோத்திரம் செய்தால் அது பழைய கதை; மிகப் பழைய வேதம்.

இந்தத் துதியை யாரும் ஏற்பார்கள்; அரசாங்கத்தாரும் ஒப்பக்கூடம். தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் தனியாக மௌனமாகக் கடவுளை ஸ்தோத்திரம் செய்தால், அதை யார் கவனிக்கப் போகிறார்கள்? எங்கள் அடிமையில் மோகம் என்று பாரதியார் சொன்னால், அதனால் பொது ஜனங்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் கோபம் வராதா?

எங்கள் அடிமையில் மோகம் என்று சொல்வதற்குப் பாரதியார் யார் என்று ஜனங்களும் அரசாங்கத்தாரும் கேட்கத்தானே செய்வர்? குத்துகிறாப் போல ஸ்தோத்திரம் செய்தது ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. வளர்த்துக்கொண்டே, புதிய வகையில் மாற்றிக்கொண்டே வந்தாலாழிய, ஜனசமூக வாழ்வு நாசமாய்ப்போகும் என்ற உண்மையை அறிந்த அரசாங்கத்தால், பாரதியாரின் புதுப் பேச்சையும், உயிர் நிறைந்த புது சிருஷ்டியையும் காணப் பொறுக்கவில்லை.

இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து எவ்வளவு காலம் வெளி வந்துகொண்டிருக்க முடியும்? ஜனங்களின் பயமும் அரசாங்கத்தாரின் கோபமும் ஒன்று சேர்ந்தால், நல்ல பத்திரிகைக்கு அல்ப ஆயுள்தான். பெரும்பாலும், அந்தப் பத்திரிகை தானாகத் தற்கொலை செய்து கொண்டு மடிய வேண்டிய நிலைமைக்கு வந்துவிடும்.

இருந்தாலும் இந்தியா பத்திரிகைக்குச் செல்வாக்கு இருந்தது; அதாவது கள்ளக்காதல். கள்ளக்காதல் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? கள்ளக்க காதலுக்கு உயிரும் மோகமும், அது பகிரங்கமாகாதிருக்கும் வரையிலேதான். வெளிப்படுப்போனால், அந்தக் காதலைத் தாங்கி, கஷ்டங்களை அனுபவிக்கக்கூடிய தைரியம் பெரும்பான்மையான காதலர்களிடம் இருப்பதில்லை.

தேசபக்தியும், ஒரு நிலைமையில் கள்ளக் காதலைப் போலவே இருக்கும். அரசாங்கத்தார் பயமுறுத்தாத வரையில், தேசபக்தி ராஜபாட்டையில் செல்லும். கஷ்டங்கள் நேராத வரையில் எல்லோரும் தேசபக்தர்கள்தான். எல்லோரும் வந்தேமாதரக் கூச்சல் போடுவார்கள். இந்த இடத்தில் கோஷம் என்ற நல்ல வார்த்தையைப் பிரயோகம் செய்வது தவறாகும்.

பாரதியார் இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்து நடத்திவந்த காலத்தில், இந்தக் கள்ளக்காதல் தேசபக்திதான் முழக்கம். இந்தியா பத்திரிகையை வாங்கிப் படிக்கும் தமிழர்கள் அதைப் பகிரங்கமாகப் படிக்கமாட்டார்கள். பறிமுதலான புஸ்தகத்துக்கு கிடைக்கும் இரகசிய மரியாதைதான் இந்தியா பத்திரிகைக்குக் கிடைத்தது.
மனிதன் ஆபத்தினால் அநேகமாய்ச் சாவதில்லை. ஆபத்து வருமே என்ற எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய்விடுகிறான். இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்து வரவொட்டாமல் சென்னை சர்க்கார் தடுத்து விடுவார்களோ என்று ஜனங்கள் நினைக்க ஆரம்பித்தபொழுதே இந்தியாவின் ஆயுள் காலம் குறுகிவிட்டது என்று சொல்லலாம்.

இந்தியா பத்திரிகை நின்று போவதற்கு முன்னர் அதை நடத்திவந்த அன்பர்கள் !பாரதியார் உள்பட) பட்ட கஷ்டங்களைச் சொல்லி முடியாது. நல்ல முயற்சிக்குப் பணக்கஷ்டம் எல்லாத் தேசங்களிலுமுண்டு. ஆனால், நம்முடைய நாட்டில் அந்தக் கஷ்டத்துக்கு எல்லை கோல முடியாது.

நாய் வேஷம் போட்டுக்கொள்ளுகிறவன்தானே குரைத்துத் தீரவேண்டும்? மற்றவர்கள் அதைப் பார்த்து நற்சாட்சிப் பத்திரம் கொடுப்பார்கள்; பணத்தால் சன்மானம் செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் எழை எளியவர்கள்தான் தேசபக்தர்களாக இருப்பார்கள்.

அவர்கள் கையில் பணமேது? சிறைமுதல் தூக்குமேடை வரையில் செல்ல அவர்கள்தான் தயாராயிருக்க வேண்டும். இடையே ஜீவனத்துக்கு நல்ல வழியில் முயற்சி செய்ய வேண்டும். கற்பனையும் தேச பக்தியும் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்; விஸ்தாரமாகச் சொல்லத் தேவையில்லை.

இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து சரிவர வெளியூர்களுக்குப் போய்ச் சேராது. இந்தியா காரியாலயத்துக்கு வந்துசேர வேண்டிய பணம் சரிவர வந்து சேராது. தபாலாபீசிலும் சதா சில்லறைத் தகாராறுகள் நேர்ந்துகொண்டிருந்தன. ஆக, மொத்தம் பாரதியார் பட்டினி; காரியாலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கஷ்டம். மொத்தத்தில் எல்லோருக்கும் கற்பனை செய்துகொள்ள முடியாத தொல்லை.

முயற்சி திருவினையாக்கும் என்றார் வள்ளுவர். முயற்சி என்ற சொல்லுக்குப் பதிலாக, உணர்ச்சி என்ற சொல் பிரயோகம் செய்யலாமே என்று நான் யோசிக்கிறேன். தேச பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்ச்சிதான் வற்றாத ஊற்று; குறையாத பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தைக் கொண்டீதான், பாரதியாரும், அவரது அருமை நண்பர்களும் இந்தியா பத்திரிகையை நடத்தி வந்தார்கள்.

பத்திரிகையை நடத்துவது சுளுவான வேலைதானே என்று நீங்கள் சிரிக்கவும் கூடும். அலை ஓய்ந்து நீராடுவது என்பது என்றைக்குமே சாத்தியப்படாத சங்கதியாகும். எல்லோரும் தேசபக்தர்களாகி, அவர்கள் யாவரும் தனவந்தர்களாகவும் ஆன பின்னர் நாட்டின் சுதந்தர முயற்சிகிளில் ஈடுபட வேண்டும் என்று வேதாந்தம் பேசினால் அந்தப் பேச்சு கதைக்கு உதவுமா?

இந்தியா பத்திரிகை நிற்பதற்கு முன்னமே பாரதியார் தமது வீட்டை மாற்றிக்கொண்டார்; ஈசுவரன் தர்மராஜ கோயில் வீதிக் கோடியில் விளக்கெண்ணெய் செட்டியாரின் வீட்டுக்குக் குடி மாற்றிக்கொண்டார். இந்தத் தங்கமான செட்டியாரைப்பற்றித்தான் தொடக்கத்தில் நான் பிரஸ்தாபம் செய்தது.
விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் உண்மையான பெயர் எனக்கு ஞாபகமில்லை. காந்தி அன்புடன் அளித்த ஹரிஜன் என்ற திருநாமத்துக்குப் பிறகு, ஆதித் திராவிடர் என்ற அர்த்தமற்ற பெயரில் யாருக்கு ஆசை இருக்கும்? விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் வீடு இல்லாமல் போனால், பாரதியாரின் புதுச்சேரி வாசம் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும்.

நானறிந்து செட்டியார் பாரதியாரை வாடகைப்பணம் கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார்; பாரதியார் பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார்; பிறகு மௌனமாய் வெளியே போவார். பாரதியார் பேச்சுக்கொடுத்தாலொழிய, செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார். செட்டியார் வருவார், நிற்பார், போவார். வீட்டுக்குச் சொந்தக்காரர் வாடகைக்காக, அதுவும் ஆறு மாத வாடகைக்காக, கால் கடுக்க நின்றுகொண்டிருப்பது அதிசயமல்லவா?

விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் வீடு சங்கப் பலகை, கானமந்திரம், அபய விடுதி, சுதந்தர உணர்ச்சிக் களஞ்சியம், அன்னதான சத்திரம், மோட்ச சாதன வீடு, ஞானோபதேச அரங்கம். இத்தனைக் காரியங்களும் அங்கே நடைபெற்றன என்று சொல்லுவது மிகையாகாது. இவைகள் நடைபெறும் காலங்களில் பாரதியார் எல்லாவற்றிற்கும் சாசுவதத் தலைவர். போட் எடுத்து, தலைமைப் பதவி பெறவில்லை. மணித்திரு நாட்டின் தவப்புதல்வர் அவர் என்ற உரிமை ஒன்றே போதாதா?

இதனிடையே, அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்தது 1910 ஆம் ஆண்டில் என்பது என் நினைவு. மானிக்டோலா வெடிகுண்டு வழக்கில் விடுதலையடைந்த பின்னர். அரவிந்தர் கர்ம யோகின் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையைக் கல்கத்தாவில் நடத்தி வந்தார். சுமார் நாற்பது மலர்கள் வெளிவந்தன. அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து மறையுமுன்னவே கர்மயோகின் பத்திரிகை மறைந்து போயிற்று.

அரவிந்தரின் பத்திரிகையைத் தழுவி, பாரதியார் கர்மயோகி என்ற தமிழ்ப் பத்திரிகையை வெளியிட்டார். அது புதுச்சேரியில் ஸெய்கோன் சின்னையா அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. அச்சு முத்துமுத்தாய் அழகாயிருக்கும், அந்தப் பத்திரிகையில் எழுத்துப் பிழை ஒன்றும் காண முடியாது.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.