LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு

இரண்டாம் பாகம்-தந்தையும் மகளும்!

 குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். 
   இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம் பேச்சாயிருந்தது. ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம் சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள். 
   பிறகு, சக்கரவர்த்தியே குந்தவிக்குத் தாயும் தகப்பனுமாயிருந்து அவளை வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தப்புரத்தில் குந்தவிக்குப் பாட்டிமார்கள்- மகேந்திரவர்மருடைய பத்தினிகள் சிலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் குந்தவிக்கும் அவ்வளவாக மனப் பொருத்தம் ஏற்படவில்லை. குந்தவி தாயாரைக் குறித்து "தெற்கத்தியாள்" என்று அவர்கள் குறை கூறியதையும் சிவகாமி தேவியைப் பலவிதமான நிந்தை செய்ததையும் குந்தவி குழந்தைப் பருவத்தில் கேட்டிருந்தாள். இதனாலேயே பாட்டிமார்களிடத்தில் அவளுக்குப் பற்றுதல் உண்டாகவில்லை. குந்தவியின் நடை உடை பாவனைகளும், அவள் எதேச்சையாகச் செய்த காரியங்களும் அந்தப் பாட்டிமார்களுக்குப் பிடிக்கவில்லை. நரசிம்மவர்மர் இந்தப் பெண்ணுக்கு ரொம்பவும் இடங்கொடுத்துக் கெடுத்து வருகிறார் என்ற குறையும் அவர்களுக்கு உண்டு. 
   இக்காரணங்களினால் குந்தவிக்குத் தன் தந்தையிடமுள்ள இயற்கையான பாசம் பன்மடங்கு வளர்ந்திருந்தது. அப்பாவுடன் இருக்கும்போதுதான் அவளுக்குக் குதூகலம்; அவருடன் வார்த்தையாடுவதில்தான் அவளுக்கு உற்சாகம். அவருடன் சண்டை பிடிப்பதில்தான் அவளுக்கு ஆனந்தம். அவர் தன்னை உடன் அழைத்துப் போகாமல் ராஜரீகக் காரியங்களுக்காக வெளியூர்களுக்குப் போயிருந்தால், அவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருக்கும். 
   சக்கரவர்த்திக்கோ அவருடைய பிராணனே குந்தவியாக உருக்கொண்டு வெளியில் நடமாடுகிறது என்று கருதும்படி இருந்தது. அவருடைய விசால இருதயமானது ஓரானொரு காரணத்தினால் பல ஆண்டுக் காலம் வறண்டு பசையற்றுப் பாலைவனமாயிருந்தது. அப்படிப்பட்ட இருதயத்தில் குந்தவியின் காரணமாக மீண்டும் அன்பு தளிர்த்து ஆனந்தம் பொங்கத் தொடங்கியது. குந்தவியின் ஒவ்வொரு சொல்லும், செயலும், நோக்கும், சமிக்ஞையும் சக்கரவர்த்திக்குப் புளகாகிதம் உண்டாக்கின. 
   தந்தையின் வரவை எதிர்நோக்கிக் குந்தவி தேவி அரண்மனை உப்பரிகையில் நிலா மாடத்தில் உட்கார்ந்திருந்தாள். பௌர்ணமிக்குப் பிறகு மூன்று நாள் ஆகியிருக்கலாம். கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான். மற்ற நாட்களாயிருந்தால் அழகு மிகுந்த இந்த வானக் காட்சியின் வனப்பில் ஈடுபட்டு மெய் மறந்திருப்பாள். ஆனால், இன்று இரவு அவளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. வீதியில் குதிரைமீது வைத்துச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போகப்பட்ட இராஜகுமாரனுடைய ஞாபகமாகவே அவள் இருந்தாள். அவனைப் பற்றி விசாரிப்பதற்காகவே தந்தையின் வருகையை வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 
   கடைசியாக, நரசிம்மவர்மரும் வந்து சேர்ந்தார். குந்தவி அவரை ஓடி வரவேற்று, அவருடைய விசாலமான இரும்புத் தோள்களைத் தன் இளங் கரங்களினால் கட்டிக் கொண்டு தொங்கினாள். "ஏன் அப்பா, இன்றைக்கு இத்தனை நேரம்?" என்று கேட்டாள். என்றுமில்லாத அவளுடைய பரபரப்பையும் ஆர்வத்தையும் பார்த்து நரசிம்மவர்மர் ஆச்சரியப்பட்டுப் போனார். அப்படியொன்றும் நேரமாகிவிடவில்லை அம்மா! தினம் போலத் தானே வந்திருக்கிறேன். ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார். 
   குந்தவி ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள். "ஒரு விசேஷம் இருக்கிறது அப்பா! ஆனால் இப்போது சொல்லமாட்டேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள், சபையில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டாள். 
   "ஆமாம்; உண்டு இலங்கையிலிருந்து இன்றைக்குச் செய்தி வந்தது; அங்கே நடந்த பெரும் போரில் நமது சைன்யங்கள் மகத்தான வெற்றியடைந்தனவாம். 'இலங்கை மன்னன் சமாதானத்தைக் கோருகிறான்; என்ன செய்யட்டும்?' என்று உன் தமையன் ஓலை அனுப்பியிருக்கிறான்." 
   "ரொம்ப சந்தோஷம், அப்பா! அப்படியானால் அண்ணா சீக்கிரம் திரும்பி வந்து விடுவானோ இல்லையோ?" 
   "கொஞ்ச காலம் கழித்துத்தான் வருவான். மதுரையில் உன் மாமாவுக்குக் கொஞ்ச நாளாகத் தேக அசௌகர்யமாயிருக்கிறதாம்; அங்கே போய்க் கொஞ்ச காலம் இருந்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீயும் வேணுமானால் மதுரைக்குப் போய் வருகிறாயா, குழந்தாய்! உன் மாமா உன்னைப் பார்க்க வேணுமென்று எவ்வளவோ ஆசைப்படுகிறாராம்." 
   "அதெல்லாம் முடியாது; நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். இருக்கட்டும். இன்னும் ஏதாவது விசேஷம் உண்டா, அப்பா!" 
   "உண்டு; சோழ நாட்டில்" 
   "சோழநாட்டில்" என்றதும் குந்தவியின் உடம்பில் படபடப்பு உண்டாயிற்று. இதைக் பார்த்த சக்கரவர்த்தி மிகவும் வியப்படைந்தவராய் "என்ன குந்தவி! உனக்கு என்ன உடம்பு?" என்று கேட்டார். 
   "ஒன்றுமில்லை, அப்பா! சோழ நாட்டில் என்ன விசேஷம்! சொல்லுங்கள்" என்றாள் குந்தவி. 
   "சோழ நாட்டில் காழி என்னும் ஊரில் ஒரு இளம் பிள்ளை தெய்வ சாந்நித்யம் பெற்று மகா ஞானியாய் விளங்குகிறாராம். சிவபெருமான் பேரில் தீந்தமிழ்ப் பாடல்களைத் தேனிசையாய்ப் பொழிகிறாராம். தீராத வியாதிகள் எல்லாம் அவர் கையினால் திருநீறு வாங்கி இட்டுக் கொண்டால் தீர்ந்து விடுகிறதாம். ஞானசம்பந்தர் என்று பெயராம்!" 
   "நன்றாயிருக்கிறது போங்கள். யமனுக்கு அப்படி ஒரு விரோதி கிளம்பியிருக்கிறாரா? அந்தப் பிள்ளை திருநீறு கொடுத்து வியாதிகள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொண்டு போனால், யமலோகமல்லவா சூனியமாய்ப் போய்விடும்? நீங்களுந்தான் இப்போதெல்லாம் யுத்தம் செய்வதையே நிறுத்திவிட்டீர்கள்!" என்றாள் குந்தவி. 
   "எல்லாம் உன்னாலேதான்! நீ என் கழுத்தைக்கட்டிக் கொண்டு விடமாட்டேனென்றால், நான் யுத்தத்துக்குப் போவது எப்படி? உன்னை வேறொருவன் கழுத்தில் கட்டிவிட்டால், அப்புறம்...." 
   "அப்புறம் அவன் பாடு அதோ கதிதான்! அது கிடக்கட்டும், அப்பா! இன்றைக்கு வேறு விசேஷம் ஒன்றுமில்லையா!" என்றாள் குந்தவி. 
   "ஆமாம், இன்னும் ஒரே ஒரு விசேஷம் இருக்கிறது. கடல் மல்லைக்கு நாம் போயிருந்தபோது உறையூரிலிருந்து ஒரு தூதன் வந்தானே, ஞாபகம் இருக்கிறதா? நீ கூட விஷயத்தைக் கேட்டு விட்டு, 'அந்தச் சோழ ராஜகுமாரனை நன்றாய்த் தண்டிக்க வேண்டும்' என்று சொன்னாயே? அவனைச் சிறைப்பிடித்து இன்றைக்கே கொண்டு வந்துசேர்த்தார்கள்..." 
   "அப்பா! அவனைச் சங்கிலிகளால் கட்டிக் குதிரை மேல் வைத்துக் கொண்டு வந்தார்களா?" என்று குந்தவி கேட்டாள். 
   "ஆமாம்; உனக்கு எப்படித் தெரிந்தது" என்றார் சக்கரவர்த்தி. 
   "மத்தியானம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது வீதியில் பார்த்தேன்." 
   குந்தவியிடம் வழக்கமில்லாத படபடப்பு அன்று ஏற்பட்டிருந்ததின் காரணத்தை நரசிம்மவர்மர் அப்போது அறிந்து கொண்டார்.
   "ஒருவேளை அவனாய்த்தானிருக்கும். அது போகட்டும். குழந்தாய்! நமது அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றைப் பாடு பார்க்கலாம்!" என்றார் சக்கரவர்த்தி. 
   "அப்பா இந்த இராஜ குமாரனை இராத்திரி எங்கே வைத்திருப்பார்கள்?" என்று குந்தவி கேட்டாள். 
   "வேறு எங்கே வைத்திருப்பார்கள்? காராக்கிரகத்தில் வைத்திருப்பார்கள்!" 
   "ஐயையோ!" 
   "என்ன குழந்தாய்! எதைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று நரசிம்மவர்மர் தூக்கி வாரிப் போட்டாற்போல் எழுந்து நாலாபுறமும் பார்த்தார். 
   குந்தவி அவரைக் கீழே அமர்த்தி, "ஒன்றுமில்லை, அப்பா! காராக்கிரகத்திலிருந்து அந்த ராஜ குமாரன் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்கிறது என்று பயந்தேன்!" என்றாள். 
   "இவ்வளவுதானே!" என்று சக்கரவர்த்தி புன்னகை செய்து "அந்த மாதிரியெல்லாம் பயப்படாதே! பல்லவ ராஜ்யாதிகாரம் இன்னும் அவ்வளவு கேவலமாய்ப் போய்விடவில்லை. விக்கிரமன் தப்ப முயன்றானானால் அந்த க்ஷணமே பல்லவ வீரர்களின் பன்னிரண்டு ஈட்டி முனைகள் அவன் மீது ஏக காலத்தில் பாய்ந்து விடும்!" என்று சொன்னார். 
   இந்தக் கடூரமான வார்த்தைகளைக் கேட்டு, குந்தவியின் உடம்பு இன்னும் அதிகமாகப் பதறிற்று. 
   "அப்பா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா?" என்றாள் குந்தவி. 
   "நான் கேட்காவிட்டால் நீ என்னை விடத்தான் போகிறாயா?" என்றார் சக்கரவர்த்தி. 
   "அந்த இராஜ குமாரனுடைய முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் பொல்லாதவனாகத் தோன்றவில்லை. அப்பா! யாரோ துஷ்ட மனிதர்கள் அவனுக்குத் துர்ப்போதனை செய்து இப்படி அவனை உங்களுக்கு விரோதமாய்க் கிளப்பி விட்டிருக்க வேண்டும்." 
   "நீ சொல்லுவது ரொம்ப வாஸ்தவம். நான் கூட அவ்வாறு தான் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு சிவனடியார் அடிக்கடி இந்த விக்கிரமனையும் அவனுடைய தாயாரையும் போய்ப் பார்ப்பதுண்டாம். அந்த வேஷதாரி தான் விக்கிரமனை இப்படிக் கெடுத்திருக்க வேண்டுமென்று தகவல் கிடைத்திருக்கிறது." 
   "பார்த்தீர்களா? நான் எண்ணியது சரியாய்ப் போயிற்றே! உறையூரில் என்னதான் நடந்ததாம்? பெரிய சண்டை நடந்ததோ? ரொம்பப் பேர் செத்துப் போனார்களோ?" 
   "பெரிய சண்டையுமில்லை; சின்னச் சண்டையுமில்லை; இந்த அசட்டுப் பிள்ளை ஏமாந்து அகப்பட்டுக் கொண்டதுதான் லாபம். மாரப்ப பூபதி என்று இவனுக்கு ஒரு சித்தப்பன் இருக்கிறான். அவன் பெரிய படைகளைத் திரட்டிக்கொண்டு வருகிறேன் என்று இந்த பிள்ளையிடம் ஆசை காட்டியிருக்கிறான். அவன் அன்றைக்குக் கிட்டவே வரவில்லை. அதோடு நமது தளபதி அச்சுதவர்மரிடம் சமாசாரத்தையும் தெரியப்படுத்தி விட்டான். அன்று பல்லவ வீரர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள். வெளியூர்களிலிருந்து வந்த சில ஜனங்களை ஊருக்கு வெளியிலேயே வளைத்துக் கொண்டு விரட்டி விட்டார்கள். விக்கிரமனோடு கடைசியில் சேர்ந்தவர்கள் ஒரு கிழக் கொல்லனும், ஒரு படகோட்டியும் இன்னும் நாலைந்து பேருந்தான். கிழவன் அங்கேயே செத்து விழுந்து விட்டான். மற்றவர்களையெல்லாம் சிறைப்படுத்தி விக்கிரமனை மட்டும் என் கட்டளைப்படி இங்கே அனுப்பினார்கள். 
   "ஐயோ பாவம்!" என்றாள் குந்தவி. 
   "எதற்காகப் பரிதாப்படுகிறாய், அம்மா! இராஜத் துரோகம் ஜயிக்கவில்லையே என்று பரிதாபப்படுகிறாயா?" 
   "இல்லை, இல்லை, இந்த இராஜ குமாரன் இப்படி ஏமாந்து போய்விட்டானே என்றுதான். ஆமாம் அப்பா! இந்த மாதிரி நடக்கப்போகிறதென்று உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருக்கிறதே அது எப்படி?" 
   "என்னிடந்தான் மந்திர சக்தி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமே? ஆமாம், அப்பர் பெருமானின் பதிகம் பாடப் போகிறாயா, இல்லையா?" என்று மீண்டும் சக்கரவர்த்தி கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றார். 
   "அப்பா எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தத் தடவை மட்டும் அந்த இராஜகுமாரனை நீங்கள் மன்னித்து விட்டால்...." 
   "என்ன சொன்னாய் குந்தவி! பெண்புத்தி என்பது கடைசியில் சரியாய்ப் போய்விட்டதே! அன்றைக்கு அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றாயே! அதனால்தான் பெண்களுக்கு இராஜ்ய உரிமை கிடையாதென்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள்..." 
   "சுத்தப் பிசகு! பெண்களுக்கு இராஜ்ய உரிமை இருந்தால் உலகத்தில் சண்டேயேயிராது. அந்த இராஜ குமாரனை மட்டும் நான் சந்தித்துப் பேசினேனானால் அவனுடைய மனத்தை மாற்றி விடுவேன். முடியுமா முடியாதா என்று பார்க்கலாமா, அப்பா?" 
   "முடியலாம்! குழந்தாய் முடியலாம். அவனுடைய மனத்தை மாற்றுவது உன்னால் முடியாத காரியம் என்று நான் சொல்லவில்லை. உனக்கு முன்னால் எத்தனையோ ஸ்திரீகள் புத்திசாலிகளை அசடுகளாக்கியிருக்கிறார்கள். வைராக்கிய சீலர்களைப் பைத்தியமாக்கியிருக்கிறார்கள். வீரர்களைக் கோழைகளாக்கியிருக்கிறார்கள். இதற்கு மாறாக சாதாரண மனுஷ்யர்களைப் புத்திசாலிகளாகவும், வைராக்கிய புருஷர்களாகவும், வீரர்களாகவும் செய்த ஸ்திரீகளும் இருந்திருக்கிறார்கள். பெண் குலத்துக்கு இந்தச் சக்தி உண்டு. உண்மைதான்; நீ நினைத்தாயானால், விக்கிரமனைச் சுதந்திரம் என்ற பேச்சையே மறந்துவிடும்படி செய்து விடலாம். ஆனால் உன்னுடைய சாமர்த்தியத்தை நீ கொஞ்சம் முன்னாலேயே காட்டியிருக்க வேண்டும். அவன் குற்றம் செய்வதற்கு முன் உன் பிரயத்தனத்தைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் பிரயோஜனமில்லை அம்மா! குற்றவாளியைத் தண்டித்தே தீரவேண்டும். இன்று விக்கிரமனைச் சும்மா விட்டு விட்டால் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் கலகம் செய்யக் கிளம்புவான். அப்புறம் இராஜ்யம் போகிற வழி என்ன?" 
   இந்த வார்த்தைப் புயலில் அகப்பட்ட குந்தவி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள். சற்று நேரம் பொறுத்து, "அப்பா! அவனுக்கு என்ன தண்டனை விதிப்பீர்கள்?" என்று கேட்டாள். 
   "இப்போது சொல்ல முடியாது குந்தவி! நாளைக்கு தர்மாசனத்தில் உட்கார்ந்து விசாரணை செய்யும் போது என்ன தண்டனை நியாயமென்று தோன்றுகிறதோ, அதைத் தான் அளிப்பேன். நியாயத்திலிருந்து ஒரு அணுவளவேனும் தவறினார்கள் என்ற அவச்சொல் இதுவரையில் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதில்லை; இனிமேலும் ஏற்படாது" என்றார் சக்கரவர்த்தி.

 குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள்.    இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம் பேச்சாயிருந்தது. ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம் சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள். 

by Swathi   on 17 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.