LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

மூன்றாம் பாகம்-எரிமலை-இன்னொருவர் இரகசியம்

 

 மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில்கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். "கல்கத்தாவுக்கு எப்போதுகிளம்புவதாக உத்தேசம்?" என்று தாரிணி கேட்டாள். "இன்றைக்கே புறப்பட்டாலும்புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?" என்று சூரியா வினவினான். "இல்லை; நான்பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின்அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார்நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம்.அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது.ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலேநடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்." 
 
     "ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?" "தனியாகப் போனால்என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?" "அப்படியா நினைக்கிறீர்கள்? ஒருசமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலேபோய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள்என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச்சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை.அப்புறம் அவர்கள் உண்மையாகவேஅப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்." "இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்?போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கேஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப் பார்களோ!" "அதெல்லாம் இல்லை;அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்றுநினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்கவேண்டும்." 
 
      தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, "நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழிகிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப்பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்" என்றாள். "இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சிநடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப்போகட்டும்!" என்றான் சூரியா. "எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தைவேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப்பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லதுஎன்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?" "அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள்உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது. 
 
     சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது!" "அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்றுஇரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றிரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றாள் தாரிணி. "சீதா சொல்லிநான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகுதான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்." பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச்சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும்குடிகொண்டன. "இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான்நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை.""யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடையகலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?" "பிறத்தியாருடையகாரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின்தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள்தலையிட்டிருக்கக் கூடாது." 
 
      "இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்குஅழைத்துக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டான் சூரியா. "சீதாவின் வாழ்க்கையில் நீங்கள்தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம்.நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்" என்றாள் தாரிணி. "இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன. "அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இது என்ன விபரீதம்!உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?" "என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவிஎனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டுநாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான்பம்பாய்க்குப் பிரயாணமாவேன்." 
 
      "உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டுசி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன." "நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக்கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேகநிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும்அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்.""சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்." "என்னை நான்பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவுசெய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி." "அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப்பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!" "எனக்கு மட்டும்ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப்போகிறேன்." "தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில்நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?" "அவள் புரட்சி வீரர் சூரியாவின்அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?" 
 
     "என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடையஉயிரைக் காப்பாற்றத் தோன்றி யிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம்பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்." "உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்கவேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச்சொல்லக் கூடாது" என்றாள் தாரிணி. "போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவுஅக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும் போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவதுதகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின்நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்." "சூரியா!ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால்அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச்சீதா அறிந்தால் சந்தோஷப் படவும் மாட்டாள்." சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல்குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியாநினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத்தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது. "தாரிணி! கீழே ஒரு மௌல்விசாகிப் உட்கார்ந்து குரான் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?"என்று கேட்டான். "சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபுதான் என்னுடையதகப்பனார்!... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?"என்றாள் தாரிணி.

 மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில்கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். "கல்கத்தாவுக்கு எப்போதுகிளம்புவதாக உத்தேசம்?" என்று தாரிணி கேட்டாள். "இன்றைக்கே புறப்பட்டாலும்புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?" என்று சூரியா வினவினான். "இல்லை; நான்பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின்அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார்நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம்.அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது.ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலேநடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்."       "ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?" "தனியாகப் போனால்என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?" "அப்படியா நினைக்கிறீர்கள்? ஒருசமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலேபோய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள்என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச்சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை.அப்புறம் அவர்கள் உண்மையாகவேஅப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்." "இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்?போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கேஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப் பார்களோ!" "அதெல்லாம் இல்லை;அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்றுநினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்கவேண்டும்."        தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, "நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழிகிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப்பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்" என்றாள். "இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சிநடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப்போகட்டும்!" என்றான் சூரியா. "எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தைவேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப்பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லதுஎன்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?" "அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள்உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது.       சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது!" "அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்றுஇரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றிரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றாள் தாரிணி. "சீதா சொல்லிநான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகுதான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்." பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச்சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும்குடிகொண்டன. "இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான்நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை.""யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடையகலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?" "பிறத்தியாருடையகாரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின்தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள்தலையிட்டிருக்கக் கூடாது."        "இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்குஅழைத்துக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டான் சூரியா. "சீதாவின் வாழ்க்கையில் நீங்கள்தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம்.நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்" என்றாள் தாரிணி. "இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன. "அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இது என்ன விபரீதம்!உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?" "என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவிஎனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டுநாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான்பம்பாய்க்குப் பிரயாணமாவேன்."        "உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டுசி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன." "நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக்கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேகநிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும்அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்.""சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்." "என்னை நான்பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவுசெய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி." "அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப்பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!" "எனக்கு மட்டும்ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப்போகிறேன்." "தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில்நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?" "அவள் புரட்சி வீரர் சூரியாவின்அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?"       "என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடையஉயிரைக் காப்பாற்றத் தோன்றி யிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம்பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்." "உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்கவேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச்சொல்லக் கூடாது" என்றாள் தாரிணி. "போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவுஅக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும் போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவதுதகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின்நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்." "சூரியா!ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால்அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச்சீதா அறிந்தால் சந்தோஷப் படவும் மாட்டாள்." சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல்குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியாநினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத்தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது. "தாரிணி! கீழே ஒரு மௌல்விசாகிப் உட்கார்ந்து குரான் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?"என்று கேட்டான். "சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபுதான் என்னுடையதகப்பனார்!... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?"என்றாள் தாரிணி.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.