|
||||||||
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் - சாமி. சிதம்பரனார் |
||||||||
![]() நூல் விளக்கம்
பழந்தமிழ் இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்குஎன்று வரிசையாக வழங்கப் படுகின்றன. இவை தொகை நூல்கள் என்று கூறப்படும். பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள். பத்துநூல்களைக் கொண்டது பத்துப்பாட்டு; எட்டு நூல்களைக் கொண்டது எட்டுத் தொகை; பதினெட்டு நூல்களைக் கொண்டதுபதினெண்கீழ்க்கணக்கு.
சங்க நூல்களா?
இத்தொகை நூல்களிலே பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் சங்ககால இலக்கியங்கள்; பதினெண் கீழ்க்கணக்கு சங்க காலத்திற்குப் பின்தோன்றிய நூல்கள். சங்ககாலம் என்பது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் சங்ககாலம் என்று கருதப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்தோன்றிய நூல்களே சங்க இலக்கியங்களாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறுவோர் உண்டு.
1. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்னும் தொகை நூல்களின் வரிசையிலே பதினெண் கீழ்க்கணக்கும் ஒன்று.
2. இறையனார் அகப்பொருளிலே காணப்படும் சங்க நூல்களின் வரிசையிலே பத்துப்பாட்டு காணப்படவில்லை. ‘‘அவர்களால் பாடப்பட்டன.(கடைச் சங்கப் புலவர்களால்) நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்ற இத் தொடக்கத்தன’’ இது இறையனார் அகப்பொருள் உரை. இது கடைச் சங்ககாலத்து நூல்களைக் குறித்தது. இதனுள்வரும் இத்தொடக்கத்தன என்ற சொற்றொடரைக் கொண்டே பத்துப் பாட்டும் சங்கநூல் என்று கொள்ளுகின்றனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சங்க நூல்களேயென்பதையும், அச் சொற்றொடராலேயே கொள்ளலாம்.
3. கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்களிலே, கபிலர், கூடலூர் கிழார், பொய்கையார் முதலியவர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் சங்ககாலப் புலவர்கள். ஆகையால் இவர்களால் இயற்றப்பட்ட நூல்கள் சங்க காலநூல்களாகத்தான் இருக்கவேண்டும்.
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல் பாடல்கள் எல்லாம் வெண்பாக்களே. சங்க காலத்தில் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா, ஆகிய நால்வகைப் பாடல்களிலேதான் நூல்கள் இயற்றப்பட்டன. ஆதலால் பதினெண் கீழ்க்கணக்கும் சங்க நூல்கள்தாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் சங்ககால இலக்கியங்கள் தாம் என்பதற்கு இவ்வாறு காரணங்காட்டுகின்றனர்.
சங்கத் தொகை நூல்களோடு சேர்த்து எண்ணப்படுவதனால் மட்டும் சங்க நூல்கள் என்று தீர்மானித்துவிட முடியாது. பிற்காலத்தினர், தங்கள்காலத்திற்கு முன்னிருந்த நூல்களைக் குறிக்கவே, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று வரிசையாக வழங்கினர்.
சங்க நூல்களுக்குப் பிற்பட்டவை
பத்துப் பாட்டிலே காணப்படும் பழக்க வழக்கங்களும், எட்டுத் தொகை நூல்களிலே காணப்படும் பழக்க வழக்கங்களும் ஒத்திருக்கின்றன. ஆதலால், அத்தொகுதி சங்ககால நூல் என்பதில் ஐயம் இல்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே சங்ககாலத் தமிழர்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளாத சில பகுதிகள் காணப்படுகின்றன. ஆதலால் இத்தொடக்கத்தன என்பதனால் பத்துபபாட்டைச் சங்க இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளுவது பொருந்தும்; பதினெண் கீழ்க்கணக்கையும் ஏற்றுக் கொள்ளுவது பொருந்தாது.
பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களிலே மதுபானமும், புலால் உணவும் கண்டிக்கப்படவில்லை. பண்டைத் தமிழர்கள் இவற்றைச் சிறந்த உணவாகவே உண்டனர். ஆண்கள் பரத்தையர்களை விரும்பித்திரியும் வழக்கத்தைச் சங்க இலக்கியங்கள் கடிந்து கூறவில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே கள், புலால் உணவு, வேசையர் நட்பு இவைகள் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. கொல்லா விரதம் போற்றப்படுகின்றது. இவை போன்ற பல செய்திகளைக் கொண்டு பதினெண் கீழ்க்கணக்கின் காலம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதுதான் என்று முடிவு கட்டுகின்றனர். இதைப் பற்றிப் பின்னால் திருக்குறளைப்பற்றி எழுதுமிடத்திலும் விளக்கப்பட்டிருக்கின்றது.
ஒரே பெயருள்ள புலவர்கள் பல காலங்களில் இருந்திருக்கின்றனர் ஆதலால் பெயர் ஒற்றுமையைக்கொண்டு ஒரு நூலின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது. ஒளவையார் என்ற பெயர் படைத்த புலவர்கள் மூவர்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றனர். கபிலர் என்ற பெயருள்ளவர் பலர் உண்டு; பொய்கையார் என்ற பெயர் படைத்தவர் பலர் உண்டு. ஆகையால் சங்ககாலத்துப் புலவர்களின் பெயர்கள் சில, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்களின் பெயர்களாகக் காணப்படுவதனால் பதினெண் கீழ்க்கணக்கைச் சங்க நூல்களின் வரிசையிலே சேர்த்துவிட முடியாது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் தோன்றிய நூல்கள் அல்ல. அவைகள் சங்க காலத்திற்குப் பின்னும், காவிய காலத்திற்கு முன்னும் தோன்றிய நூல்களாக இருக்கலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் வெண்பாவினாலேயே பாடப்பட்டிருக்கின்றன. காவியங்கள் தோன்றிய காலத்திலே விருத்தப்பாக்கள் பிறந்துவிட்டன.
சிலப்பதிகாரத்திலே விருத்தப்பாக்கள் உண்டு;சிந்தாமணி விருத்தப்பாக்களாலேயே ஆனது. வெண்பாவை விட விருத்தப்பாக்களினால் எடுத்துக்கொண்ட பொருளை விளக்கமாகக் கூறமுடியும். பதினெண் கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் காலத்திலே, விருத்தப்பாக்கள் தமிழிலே பெருவழக்காக வழங்கவில்லை. வழங்கியிருக்குமானால், அவர்கள் விருத்தப்பாக்களிலும் நூல்கள் இயற்றியிருப்பார்கள். ஆதலால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னும் என்று தீர்மானிக்கலாம். இந்த இடைக்காலமாகிய நானூறு ஆண்டுகளிலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியிருக்கலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே முன்னே தோன்றிய நூல் எது? பின்னே எழுந்த நூல் எது? என்று முடிவுகட்டுவது அவ்வளவு எளிதன்று.
மேற்கணக்கு-கீழ்க்கணக்கு
பிற்காலத்தினர் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும், கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் மேல்வரிசை நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்வரிசை நூல்கள்.
குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களையுடைய நூல்களுக்குக் கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் வைத்தனர். நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களைக் கொண்ட நூல்களை மேற்கணக்கு நூல்கள் என்று கூறினர்.
மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். அவைகளின் எண்ணிக்கையும் பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களும் பதினெட்டு.
மேற்கணக்கு நூல்கள் எல்லாம், பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும் ஆசிரியப் பாக்களால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாடல்கள் கொண்ட நூல்களும் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டு அடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவைகளே.
பாட்டின் பெருக்கம், சுருக்கம் கருதியே கீழ்க்கணக்கு மேற்கணக்கு என்று நூல்களைப் பிரித்தனர். நூல்களில் உள்ள பொருட்சிறப்பைக் கருதிக் கீழ், மேல் என்று பிரிக்கப்படவில்லை. இது குறிப்பிடத்தக்கது.
நூல்கள் யாவை?
கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைக் குறிக்கும் வெண்பா ஒன்று உண்டு.
நாலடி, நான்மணி, நால் நாற்பது, ஐந்திணை, முப்பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், இன்னிலைசொல் காஞ்சியுடன். ஏலாதி, என்பனவே கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு
இதுவே அப்பாடல். ‘‘நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை அறுபது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இனிய நிலையை எடுத்துக்கூறுகின்ற முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பவைகளே ஒழுக்க நிலையைக் கூறுகின்றனவாகிய கீழ்க்கணக்கு நூல்களாகும்.’’
இச்செய்யுளில் உள்ள ஐந்திணை என்பதற்கு ஐந்து திணை நூல்கள் என்பதே பொருள். இவ்வாறு பொருள் பண்ணாமல் ஐந்து திணைகளைப் பற்றிக் கூறுகின்ற நூல்கள்; அவை: திணைமொழி ஐம்பது; ஐந்திணை ஐம்பது; ஐந்திணை எழுபது; திணைமாலை நூற்றைம்பது என்று பொருள் பண்ணுவர். இவர்கள் இன்னிலை என்பது மற்றொரு நூல் என்றும், கைந்நிலை என்பது மற்றொரு நூல் என்றும் கூறுவர். இதனால் இன்னிலை பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்ததா? கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்ததா? என்ற ஐயம் எழுகின்றது.
இன்னிலை என்றொரு நூல் உண்டு; அது அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக்கூறுவது. அதுவே பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சேர்ந்தது என்று எண்ணினர். கைந்நிலை என்ற பெயருடன் ஐந்திணை அறுபது வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்நூல் வெளி வந்தபின், கைந்நிலைதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும் என்பது பெரும்பாலோரின் முடிவு. இதுவே சரியான முடிவுமாகும். இதைக் கைந்நிலையென்று கூறுவதைவிட ஐந்திணை அறுபது என்று அழைத்துவிட்டால் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல்இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயத்திற்கே இடமில்லை. ஆதலால் ஐந்திணை என்பதற்கு ஐந்து திணை நூல்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் இந்த வெண்பா, நூல்களின் பெயர்களைக் குறிப்பதற்காகவே பாடப்பட்டதாகும். பதினெட்டு நூல்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளுவதற்காகவே எழுதப்பட்டதாகும். நூல்களின் சிறப்பைக் கருதி அவைகள் வரிசைப்படுத்திப் பாடப்படவில்லை. நூல்களின் ஏற்றத் தாழ்வு கருதி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைத்துப் பாடப்பட்டிருக்குமானால் முப்பால் என்பதையே முதலில் வைத்துப் பாடியிருப்பர். முப்பால் திருக்குறள், இதைவிடச் சிறந்த நூல் வேறில்லை. இது பதினொரு நூல்களுக்குப் பின் பன்னிரண்டாவதாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இப்பாட்டில் உள்ள வரிசையைக் கொண்டு நூலின் ஏற்றத் தாழ்வுகளை மதிப்பிடுதல் தவறாகும். இருவகை நூல்கள்
இப்பதினெட்டு நூல்களிலே ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை. ஏனையபன்னிரண்டு நூல்களும் புறப்பொருள் பற்றியவை. இப்பன்னிரண்டு நூல்களிலே முப்பாலிலும், நாலடியிலும் அகப்பொருள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன. ஆயினும் இவைகளிலே புறப்பொருள் பற்றிய செய்திகளே மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. ஆதலால் இவற்றைப் புறப்பொருள் நூல்களின் தொகுதியிலே சேர்ப்பதுதான் சிறந்ததாகும். 1. திணைமொழி ஐம்பது; 2. ஐந்திணை ஐம்பது; 3. ஐந்திணை அறுபது (கைந்நிலை); 4.ஐந்திணை எழுபது; 5. திணைமாலை நூற்றைம்பது; 6. கார் நாற்பது; இவ்வாறு நூல்களும் அகப்பொருள் பற்றியவை. இவைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்றஐந்து நிலத்தின் இயல்புகளைக் கூறுவன; அந்நிலத்திலே நடைபெறும் காதலன் காதலிகளின் ஒழுக்கங்களைப் பற்றி உரைப்பன. இன்பப் பகுதி ஒன்றைப் பற்றியே இவைகள்உரைக்கின்றன.
மற்றைய பன்னிரண்டு நூல்களிலே பதினொரு நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றியும் உரைப்பன. இப்பதினொரு நூல்களிலே தலைசிறந்தது முப்பால்; அதாவது திருக்குறள். இதற்கு அடுத்தப்படியாக நாலடியும், பழமொழியும் ஆகும். இவைகள் உயர்ந்த அறங்களை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும், மனித சமுதாயமும் பின் பற்றவேண்டிய ஒழுக்க முறைகளை விரிவாகக் கூறுகின்றன. இவைகளே அறநூல்கள் நீதி நூல்கள், ஒழுக்க நூல்கள் ஆகும்.
இந்நூல்களைப் படிப்பதன் மூலம் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம்; அவர்களுடைய சமுதாய அமைப்பை அறியலாம்; அவர்களுடைய அரசியல் முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். தமிழர்களின் உயர்ந்த நாகரித்தையும் பண்பாட்டையும் அறிவதற்கு இந்தப் பதினொரு நூல்களும் துணை செய்கின்றன.
1. முதுமொழிக் காஞ்சி; 2. திரிகடுகம்; 3. இன்னாநாற்பது;4. இனியவை நாற்பது; 5.நான்மணிக்கடிகை; 6. சிறுபஞ்சமூலம்; 7. ஏலாதி; 8. ஆசாரக் கோவை; 9. நாலடியார்; 10. பழமொழி நானூறு; 11. முப்பால் என்னும் திருக்குறள். இவைகளே அந்நூல்கள். களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பற்றி மட்டும் பாடப்பட்டிருப்பது. சோழ மன்னன் ஒருவன் போரிலே பெற்ற வெற்றியைப் புகழ்வது. இந்நூலைப் படிக்கும்போது போர்க்களத்தின் பயங்கரமான காட்சியைக் காணலாம்; வளர்ந்துவரும் மனித சமுதாயத்திலே போர் என்பது ஒரு அநாகரிகம் என்ற உணர்ச்சியை இந்நூல் ஊட்டாமல் போகாது.
முப்பால்-திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கும் முப்பால் என்பது திருக்குறள் அன்று என்று கூறுவோர் சிலர். முப்பால் என்பது திருக்குறள் அன்று வேறு ஏதோ ஒரு சிறு நூலாக இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து.
திருக்குறள் தமிழ் நூல்களிலே மிகப் பழமையான நூல். சங்க காலத்து நூல்; மிகச்சிறந்த நூல்; ஒப்புயர்வற்ற நூல்; ஆதலால் அதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்வரிசையிலே சேர்ப்பது தவறு; இது திருக்குறளுக்குப் பெருமையளிப்பதாகாது என்பதே இவர்கள் கருத்து. இக்கருத்து தவறானது என்பதைத் திருக்குறளைப் பற்றிக்கூறும் இடத்திலே விளக்கப்பட்டிருக்கின்றது. முப்பால் என்பது திருக்குறள் தான் என்பதிலே ஐயம் இல்லை. பண்டைப் புலவர்கள் பலரும் திருக்குறளை முப்பால் என்ற பெயரால் குறிப்பிட்டிருக்கின்றனர். இதற்குத் திருவள்ளுவமாலை ஒன்றே போதுமான சான்றாகும்.
வள்ளுவனார்,முப்பால் மொழிந்த மொழி (மாமூலனார்)
பாமுறைதேர் வள்ளுவர் முப்பால் (சீத்தலைச் சாத்தனார்)
வள்ளுவர் முப்பால் (மருத்துவன் தாமோதரனார்)
வள்ளுவனார் முப்பால் மொழி
(நாகன் தேவனார்)
வள்ளுவனார் முப்பாலை
(கோதமனார்)
வள்ளுவனார் முப்பாலின்
(முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்)
முப்பால் மொழிந்த முதற்பாவலர்
(ஆசிரியர் நல்லந்துவனார்)
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்
(கீரந்தையார்)
வள்ளுவர்தாம் செப்பவரு முப்பாற்கு
(பாரதம் பாடிய பெருந்தேவனார்)
பிணக்கிலா, வள்ளுவர் வாய்மொழி முப்பால்
(உருத்திரசன்ம கண்ணர்)
திருவள்ளுவர்,குறள் வெண்பாவில் சிறந்திடு முப்பால்
(உறையூர் முதுகூத்தனார்)
முப்பாலின் ஓதும், தருமம் முதல் நான்கும்
(களத்தூர் கிழார்)
வள்ளுவர் முப்பால்
(அக்காரக்கனி நச்சுமனார்)
முப்பாலில் தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறள்
(தேனீக்குடிக் கீரனார்)
வண்தமிழின் முப்பால்
(ஆலங்குடி வங்கனார்)
இவைகள் திருவள்ளுவ மாலையில் காண்பவை. இவ்வாறு பதினைந்து புலவர்கள் திருக்குறளை முப்பால் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதலால் முப்பால் என்பது திருக்குறளே என்பது உறுதி. திருக்குறள் சங்க காலத்திற்குப் பின் பிறந்தது என்பதனால் அதன் பெருமை குன்றிவிடாது.
நூல்களின் சிறப்பு
பத்துப் பாட்டு எட்டுத்தொகை நூல்களைப் போலவே தமிழர்களின் பண்டை வரலாற்றைக் காணப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் துணை செய்கின்றன. தமிழர்களின் படிப்படியாக வளர்ந்து வந்த உயர்ந்த பண்பாட்டை இந்நூல்களிலே காணலாம். தமிழர்கள் தனித்தனிக்குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப் பொருள் நூல்கள் சாட்சிகளாகும். அவர்கள் ஆன்மீகத் துறையிலும், அரசியல் முதலிய புறத் துறைகளிலும் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் பற்றிய நூல்கள் சாட்சிகளாகும்.
சுருங்கக் கூறினால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழி காட்டும் உயர்ந்த நூல்கள் என்று உரைக்கலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு எவையும் இல்லை. ஆதலால் தமிழர்களின் பண்டைப் பண்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையெல்லாம் படிக்க வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் பல உண்மைகளை நாம் காணலாம். இனி அந்நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுவோம்.
|
||||||||
by Swathi on 11 Apr 2013 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|