|
||||||||
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா -ந.க.இராஜ்குமார் |
||||||||
![]() அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில், தமிழ் நண்பர்கள் இணைந்து நடத்திய தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா செப்டம்பர் - 29 , 2018 அன்று காலை 11 மணி முதல் மாலை 6 .30 மணி வரை வெகு விமர்சையாக நடைப் பெற்றது. இனிய விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. நிகழ்வில் மாணவ மாணவியர்களுக்கு தந்தை பெரியாரின் உருவப்படத்தை மையப்படுத்தி ஓவியப்போட்டியும் அதனை தொடர்ந்து இரு பெரும் தலைவர்களின் வாழ்வியலை முன்னிலைப்படுத்தி வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாணாக்கர்கள் ஆர்வத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் பங்கேற்று எழுப்பிய வினாக்களுக்கு விரைவாகவும் மிகச்சரியாகவும் பதிலளித்த விதம் விழா நோக்கத்தை வெற்றிகரமாக்கியது. இந்நிகழ்வைத் தொடர்ந்து பெரியோர்களுக்கான பேச்சுப்போட்டி “பகுத்தறிவு பகலவன் பெரியார்”, “கடமை கண்ணியம் கட்டுப்பாடு - பேரறிஞர் அண்ணா” மற்றும் “அமெரிக்காவும் தமிழ்நாடும் - சமூகநீதி ஓர் ஒப்புமைப் பார்வை” என்கிற தலைப்புகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் இருபெரும் தலைவர்களான பெரியார், அண்ணா அவர்களின் உயரிய பண்பு நலன்களையும், சிறப்புகளையும் அனைவரின் இதயத்திலும் கொண்டு வந்து நிறுத்தினர். போட்டியின் முடிவில் திருமிகு. செல்வகுமார், திருமிகு. பிரசில்லா, திருமிகு. விஜயலட்சுமி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இந்நிகழ்வில் தமிழ் பண்பாட்டை இனிதே வெளிப்படுத்தும் வகையில் மகளிர் பங்கேற்ற கும்மி அடித்தல் நிகழ்வு பெரும் குதூகலத்தைத் தந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டின் சின்னமான பறை இசையை நண்பர்கள் வெகு சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார். பறை, கும்மி இரண்டும் இவ்விழாவினுடைய சிறப்பம்சமாக அமைந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் ஆரவாரம் செய்து இன்புற்றனர். இதனைத் தொடர்ந்து "சமூக நீதி காவலர்கள் பெரியார் அண்ணா" என்கிற தலைப்பில் திருமிகு.பிரசாத் பாண்டியன் அவர்கள் நெறியாள்கையில் சிறப்பானதோர் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பகுத்தறிவு தலைப்பில் திருமிகு. தீபன், சுயமரியாதை தலைப்பில் திருமிகு. அல்லி நடேஷ், பெண்ணுரிமை தலைப்பில் திருமிகு.மெர்லின், சமூகநீதி தலைப்பில் திருமிகு. கிருஷ்ணன் மற்றும் சமத்துவம் தலைப்பில் திருமிகு.தேவநாதன் அவர்களும் பெருமைக்குரிய இரண்டு தலைவர்களும் சமுதாய உயர்வுக்காக ஆற்றிய பணிகளையும், அவர்களது சிந்தனைகளையும் அவைக்கு அப்படியே படம்பிடித்து காட்டினர். நெறியாள்கை செய்த திருமிகு. பிரசாத் அவர்கள் பெரியார், அண்ணாவைப் பற்றி சிறப்பாகப் பேசி, தன் பேச்சுத் திறனால் அரங்கத்தில் உள்ள அத்தனை போரையும் ஆட்கொண்டார். தொடர்ந்து " இலட்சியப் பெரியார் இலட்சம் கைகளில் என்ற முழக்கத்தோடு தமிழகத்தில் உள்ள நன்செய் பிரசுரம் வெளிட்டிருக்கும் தந்தை பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்? " புத்தகம் திருமிகு. இராஜ்குமார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட்டது. அதனை அடுத்து மேட்டூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்.. அண்ணா..” என்ற பாடலைத் தன் கம்பீர குரலால் பாடி அரங்கத்தை தன் வசப்படுத்டினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் இருக்கை அமைப்பு செயலாளர், முனைவர் திருமிகு. சொர்ணம் சங்கரபாண்டி அவர்கள் "சாமானியர்களின் சாதனைகள்" என்கிற தலைப்பில் திராவிடர் இயக்கமும் திராவிட கட்சியும் செய்த சாதனைகளை புள்ளி விவரங்களுடன் புதுப்புது தகவல்களுடன் ஆற்றிய உரை புது எழுச்சியைத் தந்தது. தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமிகு. கனிமொழி அவர்கள் "தமிழகத்தின் விடிவெள்ளி பெரியார்" என்கிற தலைப்பில் பெரியார் பற்றிய அறிய தகவல்களை அரங்கிற்கு எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இச்சிறப்பான விழாவை திருமிகு.இரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு. ஜெசிபிரியா பிரசாத் ஆகியோர் தம் அழகுத் தமிழாலாலும், இடையிடையே பல அரிய தகவல்களை அரங்குக்குத் தந்தும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் திருமிகு. துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரை கூற அழகுடனும், எழுச்சியுடனும் இனிதே விழா நிறைவுற்றது. டெலவர் பகுதியில் இயங்கிவரும் ரஜினி தென்னிந்திய உணவகம், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மத்திய உணவு வழங்கி மேலும் விழாவை சிறப்பித்தனர். பெரியார் அண்ணா பிறந்தநாள் விழாவில் 165 பேருக்கும் மேலான தமிழ் உணர்வாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதும், 35க்கும் மேலான குழந்தைகள் போட்டிகளில் கலந்துகொண்டதும், அமெரிக்கத் தமிழர்களிடம் பெரியார், அண்ணாவின் கொள்கைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டியாதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 03 Oct 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|