LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பெரியோர் புகழ் மலர்

    124. இளங்கோ அடிகள்

    முத்தமிழும் தித் திக்க முழங்கும் காதை,
    மூவேந்தர் ஆட்சிமுறை அளக்கும் செங்கோல்
    'பத்தினி'யென் றொருசொல்லைப் பகரும்போதே
    பாரெங்கும் வேறெவரும் அல்ல வென்னும்
    உத்தமிஅக் கண்ணகியின் ஒளிஉண் டாக்கி
    உள்ளத்தில் தெள்ளறிவை ஊற்றும் செஞ்சொல்,
    இத்தகைய காவியத்தை எமக்குத் தந்த
    இளங்கோவை உளங்குளிர எண்ண வேண்டும்.

    'நெடுங்காலம் அறம்வழுவாப் பாண்டி நாட்டில்
    நீதிகொன்ற நீதானோ மன்னன்?' என்று
    கடுங்கோபக் கனல்பறக்கக் கடிந்து சொல்லிக்
    கற்பரசி தன்பிழையக் காட்டக் கண்டான் ;
    அடங்காத மானம்வந்(து) அழுத்திக் கொள்ள
    அக்கணமே அரியணையில் உயிரை நீத்த
    இடங்கொணும் தமிழரசின் இயல்பைக் காட்டும்
    இளங்கோவை மறப்போமோ எந்த நாளும்.

    பண்டிருந்த தமிழர்களின் பரந்த வாழ்வில்
    பலகலையும் பரிமளித்த உண்மை பாடிக்
    கொண்டிருந்த அறநெறியின் சிறப்பும் கூறி,
    'கொடுங்கோலை எதிர்த்தகற்றும் திறமும் கொண்ட
    பெண்டினத்தின் வழிவந்தோம் நாங்கள்' என்னும்
    பெருமையையும் தமிழ்மக்கள் பெறுவ தாக்கி
    எண்டிசையும் புகழ்ஒழிக்கும் சிலம்பைச் சொன்ன
    இளங்கோவின் திருநாமம் என்றும் வாழும்.

    125. கம்பன்

    எண்ணிஎண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ!
    எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டி னானோ!
    புண்ணியத்தால் உடன்பிறந்த புலமை தானோ!
    போந்தபின்னர் ஆய்ந்தறிந்து புகன்ற தாமோ?
    தண்ணியல்சேர் தமிழணங்கின் தவமே தானோ!
    தயரதனும் சனகனுமே தரித்த நோன்போ!
    விண்ணமுதின் சுவைகெடுத்த கம்பன் பாடல்
    விரிந்தவிதம் என்றென்றும் வியப்பே ஆகும்!

    சாதிமத விலங்கினம்வாழ் காட்டை மாற்றிச்
    சமனாக்கிச் சமரசமாம் தளத்தின் மேலே
    நீதிநெறி கருணையெனும் நிலைகள் நாட்டி
    நித்தியமாம் சத்தியத்தின் சிகரம் நீட்டிக்
    காதல்அறம் வீரம்எனும் கொடியைத் தூக்கிக்
    கம்பனென்பான் கட்டிவைத்த கனக மாடம்
    ஆதிமுதற் பரம்பொருளின் சக்தி யாகும்
    அன்னையெங்கள் தமிழ்த்தெய்வம் அமரும் கோயில்.

    ஏழையென்று செல்வனென்று பேதம் எண்ணார்
    எல்லோரும் எச்சுகமும் எளிதே பெற்றுக்
    கோழையென்ற குடிசனங்கள் எவரும் இன்றிக்
    கொடுங்கோலும் கடுங்காவல் இல்லா நாட்டில்
    வாழுவதற்கு வேண்டும்எல்லா வளமும் தாங்கி
    வந்தபகை நொந்துவிடும் பொறிகள் வைத்தே
    ஆழியுடன் தமிழ்த்தாயார் அரசு காக்கும்
    அற்புதமாம் கோட்டையன்றோ கம்பன் பாட்டு?

    வேந்தருக்கும் குடிகளுக்கும் பொருத்தம் சொல்லி
    வேற்றரசர் படையெடுக்கா வீரம் கூறித்
    தேர்ந்தபல கலையறிவின் இன்பம் தேக்கித்
    தெய்வபக்தி நட்பிவற்றின் திறமும் சேர்த்துக்
    காந்தனுக்கும் காதலிக்கும் கற்பைக் காட்டிக்
    கட்டாயப் படுத்தாமல் கடமை பேசிச்
    சாந்தமுள்ள சமுதாய அமைப்புக் காகும்
    சாத்திரமாம் கம்பனென்பான் தந்த பாட்டு.

    கம்பனென்ற பெரும்பெயரை நினைக்கும் போதே
    கவிதையென்ற கன்னிகைதான் வருவாள் அங்கே ;
    அம்புவியில் கண்டறியா அழகி னோடும்
    அமரருக்கும் தெரியாத அன்பி னோடும்
    இன்பமென்று சொல்லுகின்ற எல்லாம் ஏந்தி
    இன்னிசையும் நன்னயமும் இணைத்துக் காட்டித்
    துன்பமென்ற மனத்துயரைத் துடைத்து விட்டுத்
    தூங்காமல் தூங்குகின்ற சுகத்தை ஊட்டும்.

    126. கம்பனும் வான்மீகியும்

    கரையறியாக் காட்டாற்று வெள்ளம் போலக்
    கவிபொழிந்து வான்மீகி உலகுக் கீந்த
    திரையறியா ஓட்டத்தைத் தேக்கிக் கட்டித்
    திறமிகுந்த கால்வாய்கள் செய்து பாய்ச்சித்
    தரையறியா இலக்கியக்கா வணத்தைத் தந்தான்
    தனிப்புலமைக் கம்பனெனும் கவிதைத் தச்சன்
    உரையறியாப் பயனளிக்க உதவும் பாட்டை
    உலகமெலாம் அனுபவிக்க உழைப்போம் வாரீர்.

    வனத்திலுள்ள மலர்வகைகள் எல்லாம் கொய்து
    வாசனைவேர் பச்சிலைகள், பலவும் சேர்த்துக்
    கனத்தஒரு பூப்பொதியாம் ராமன் காதை
    வான்மீகி யெனும்தவசி கட்டோ டீந்தான்
    இனத்தையெல்லாம் ஆய்ந்தறிந்தான் இணைத்துக் கோத்தான்
    இடைகிடந்த மாசுமறு யாவும் நீக்கித்
    தனித்தமணம் அறந்திகழும் மாலை யாக்கித்
    தரணிக்கே சூட்டிவைத்தான் கம்பன்தானே.

    மால்கடிந்த தவமுனிவான் மீகிஎன்பான்
    வனத்திடையே தான்கண்டு கொண்டு வந்த
    பால்படிந்து, முள்ளடர்ந்து, பருந்து, நீண்டு
    பரிமளிக்கும் பலவின்கனி பாருக் கீந்தான்
    மேல்படிந்த பிசினகற்றி, மெள்ளக் கீறி
    மெதுவாகச் சுளைஎடுத்துத் தேனும் வார்த்து
    நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
    கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தான்.


    127. இராமகிருஷ்ண தேவர்

    முன்னையோர் நமது நாட்டின்
    முனிவரர் தேடி வைத்த
    முழுமுதல் ஞான மெல்லாம்
    மூடநம் பிக்கை யென்றும்,
    பொன்னையே தெய்வ மென்றும்,
    போகமே வாழ்க்கை யென்றும்,
    புனிதரைக் கொன்று வீழ்த்தும்
    போரையே வீர மென்றும்
    தன்னையே பெரிதா யெண்ணித்
    தனக்குமேல் இருக்கும் வேறோர்
    சக்தியின் நினைப்பே யின்றித்
    தருக்கியே பிறப்பின் மாண்பைத்
    தின்னுமோர் மயக்கம் நீங்கித்
    தெளிந்திட எழுந்த ஞானத்
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    மனிதரின் பாவம் போக்க
    மகிழ்ச்சியோ டுயிரைத் தந்த
    மாபெரும் த்யாக மூர்த்தி
    ஏசுவின் அன்பாம் நெய்யைத்
    தனிவரும் துறவி யென்று
    தரணியோர் யாரும் போற்றும்
    சாந்தனாம் புத்த தேவன்
    தவமெனும் தட்டில் ஊற்றி,
    'இனியரு மனிதர்க் கில்லை
    இத்தனைப் பொறுமை' என்னும்
    எம்பிரான் மஹமத் நீட்டும்
    சமரசக் கைகள் ஏந்த,
    சினமெனும் அரக்கர் கூட்டம்
    திரியென எரியும் ஞான
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    பேயென்றும் மாயை யென்றும்
    பெண்களை இகழ்ந்து பேசிப்
    பெருந்துற வடைந்த பேரும்
    பிழைபுரிந் தவரே யன்றோ!
    தாயென்றும் துணைவி யென்றும்
    தன்னுடை நோக்கம் காக்கும்
    சகதர்ம சக்தி யென்றும்
    சாரதா தேவி தன்னை
    நீயென்றும் மகிழ்ந்து கொண்ட
    நிர்மல வாழ்க்கை தன்னை
    நினைத்திடுந் தோறும் நெஞ்சம்
    நெக்குநெக் குருகும் ஐயா!
    தீயென்னப் புலனைக் காய்ந்த
    தீரனே! ஞான வாழ்வின்
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    'ஜாதியில் உயர்ந்தோம்' என்னும்
    சனியனாம் அகந்தை நீங்கித்
    தாழ்ந்தவர் குடிசை தோறும்
    தலையினால் பெருக்கி வாரும்
    சேதியைத் தெரிந்த அன்னார்
    திகைத்துனைத் தடுத்த தாலே
    தெரியாமல் இரவிற் சென்று
    தினந்தினம் அதனைச் செய்தாய்
    ஆதியின் அருளைத் தேடும்
    அந்தணர்க் கரசே! ஐயா!
    ஆணவம் அழிந்தா லன்றி
    ஆண்டவன் அணுகான் என்றாய்
    தீதுகள் உலகில் நீங்கித்
    திக்கெலாம் ஒளிரும் ஞான
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    'இரும்பினாற் சதையும் நல்ல
    எகினால் நரம்பும் கொண்ட
    இந்திய இளைஞர் தோன்றி
    உழைத்திட வேண்டும்' என்று
    விரும்பினோன் மதன ரூப
    விவேகஆ னந்த ஞானி
    வேடிக்கை யாக வந்து
    'கடவுளைக் காட்டும்' என்ன,
    அரும்பினாய் முறுவல் அங்கே
    அதன்பொருள் அறிவார் யாரோ
    அன்றேஉன் அடிமை யாகி
    அதுமுதல் உன்னை விட்டுத்
    திரும்பிடான் விட்டில் போலத்
    திளைத்தவன் விழுந்த ஞான
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    'காவியை உடுத்தி டாமல்
    கமண்டலம் எடுத்தி டாமல்
    காட்டிடை அலைந்தி டாமல்
    கனலிடை நலிந்தி டாமல்
    பூவுல கதனைச் சுத்தப்
    பொய்யென்றும் புகன்றி டாமல்
    புறத்தொரு மதத்தி னோரைப்
    புண்படப் பேசி டாமல்
    சேவைகளை செய்தாற் போதும் ;
    தெய்வத்தைத் தெரிவோம்', என்று
    தெளிவுறக் காட்டி னாய்உன்
    தினசரி வாழ்க்கை தன்னால் ;
    தீவினை இருட்டைப் போக்கிச்
    செகமெலாம் விளங்கும் ஞான
    தீபமே! ராம கிருஷ்ண
    தேவனே! போற்றி போற்றி!

    128. சமரச சன்மார்க்கத் தந்தை

    எல்லா மதத்தினரும் கூடுவோமே
    ஏகம் கடவுளென்று பாடுவோமே ;
    நல்லார் உலகிலெங்கும் சொன்னதொன்றே
    ராமகிருஷ்ணர் வாழ்க்கையால் கண்டோ மின்றே.

    இற்றைக்கு நூறாண்டு முன்னம்ஒருநாள்
    இந்நாட்டில் தெய்வீகத் தன்மைகளெல்லாம்
    புத்தம் புதுஉருவில் தேவையறிந்தே
    போந்ததென ராமகிருஷ்ண தேவர்பிறந்தார்.

    பள்ளிப் படிப்பெதுவும் இல்லாமலும்
    பாடமும் வேறொருவர் சொல்லாமலும்
    வெள்ளம் பலநிறைந்த கடலேபோல்
    வெவ்வேறு மதங்களுக் கிடமானார்.

    தானே நினைத்தறியும் படிப்பன்றோ
    தன்னைத் தேற்றுவிக்க முடிப்பாகும்?
    ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ
    உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம்?

    ஏட்டுப் படிப்பைமட்டும் கற்றோமே!
    ஏழைக் கிரங்குமன்பைப் பெற்றோமா?
    நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும்
    ராமகிருஷ்ணர் தம்கருணை தொழுதிடுவோம்!

    சோறும் துணியும்மட்டும் தேடினோமே!
    துன்பம் குறைக்குமருள் கூடினோமா?
    கூறும் ராமகிருஷ்ணர் கதைபடிப்போம்
    கூடும் கவலைகளின் முனைஒடிப்போம்.


    வீடும் மனையும்மட்டும் கட்டினோமே!
    விமலன் அருளைக்கொஞ்சம் கிட்டினோமா?
    பாடும் ராமகிருஷ்ணர் சரித்திரத்தைப்
    படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை!

    மக்கள் மனைவிபொருள் நல்லதேதான்
    மற்றும் பெரியசுகம் இல்லையோதான்?
    மிக்க பெரியஇன்பம் கொண்டபெரியார்
    மேலோர் ராமகிருஷ்ணர் கண்டுதெரிவோம்.

    உடலுக் கணிகள்பல பூண்டோமே!
    உயிருக் கழகுசெய்ய வேண்டாமோ?
    கடனுக் கழுதுசெய்யும் பூசனையெல்லாம்
    கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள்.

    129. இசிறீ ரமணரிஷி

    சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து
    சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்.
    எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
    எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்
    அத்தகைய மரபினுக்கிங் காக்கம் தந்தே
    அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
    முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
    முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி.

    வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
    வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
    கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
    கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
    பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
    பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
    நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
    நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவ நாடி.

    அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
    ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
    பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
    பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
    அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
    ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
    குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
    கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.

    இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
    இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
    நன்றிருந்து பேசுகின்ற 'நான்யார்?' என்று
    நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
    'என்றிருந்தோம்? எங்குவந்தோம்? எதுநாம்?' எல்லாம்
    எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
    குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
    குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.

    இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
    இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு
    வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
    வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு
    கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
    காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
    வந்துதித்த நாள்முதலாய்ப் பரத்தை நாடும்
    வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.

    சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
    துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
    வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
    விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
    உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
    உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
    சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
    சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.

    130. வீரத் துறவி

    ஆண்மை உருக்கொண்ட அந்தணன்--எங்கள்
    அண்ணல் விவேகா னந்தனின்
    மாண்பை அளந்திட எண்ணிணால்--இந்த
    மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்.

    காமனைப் போன்ற அழகினான்--பொல்லாக்
    காமத்தை வென்று பழகினான் ;
    சோமனைப் போலக் குளிர்ந்தவன்--ஞான
    சூரியன் போலக் கிளர்ந்தவன்.

    வீரத் துறவறம் நாட்டினான்--திண்ணை
    வீணர்வே தாந்தத்தை ஓட்டினான்;
    தீரச் செயல்களை நாடினான்--இந்தத்
    தேச நிலைகண்டு வாடினான்.

    கர்மத் தவநெறி காட்டினான்--நல்ல
    காரியம் வீரியம் ஊட்டினான் ;
    மர்மம், பலிதரும் பூசைகள்--ஹிந்து
    மதமல்ல என்றுண்மை பேசினான்.

    'உலகை வெறுத்துத் துறந்தவர்--தெய்வ
    உள்ளக் கருத்தை மறந்தவர்
    கலக நடுவிலும் தங்குவேன்'--என்று
    கர்ஜனை செய்திட்ட சிங்கமாம்.

    பெண்ணின் பெருமையைப் போற்றினான்--ஆண்கள்
    பேடித் தனங்களைத் தூற்றினான்
    மண்ணின் சுகங்களை விட்டவன்--ஏழை
    மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான்.

    ஏழையின் துன்பங்கள் போக்கவும்--அவற்(கு)
    எண்ணும் எழுத்தறி வாக்கவும்
    ஊழியம் செய்வதே ஒன்றுதான்--தேவை
    உண்மைத் துறவறம் என்றுளான்.

    தேசத் திருப்பணி ஒன்றையே--உண்மை
    தெய்வத் திருப்பணி என்றவன் ;
    மோசத் துறவுகள் போக்கினான்--பல
    மூடப் பழக்கத்தைத் தாக்கினான்.

    அடிமை மனத்தை அகற்றினான்--உயர்
    அன்பின் உறுதி புகட்டினான்
    கொடுமை அகற்றிட முந்திடும்--தவக்
    கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன்.

    ஐம்பது வருடங்கள் முன்னமே--செல்வ
    அமெரிக்கச் சிக்காக்கோ தன்னிலே
    நம்பெரும் இந்திய நாட்டவர்--கண்ட
    ஞானப் பெருமையைக் காட்டினான்.

    வெள்ளையர் பாதிரி மாரெல்லாம்--கேட்டு
    வெட்கித் தலைகுனிந் தார்களே!
    தெள்ளிய ஞானத்தைப் போதித்தான்--அவர்
    திடுக்கிட உண்மைகள் சாதித்தான்.

    சத்திய வாழ்க்கையைப் பேசினான்--அருள்
    சாந்தத் தவக்கனல் வீசினான் ;
    யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம்--அந்த
    உத்தமன் சொன்னதை வந்திப்போம்.

    131. இயேசு கிறிஸ்து

    தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
    துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
    மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
    மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
    ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
    அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
    மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
    நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

    நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
    நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
    கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
    காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
    புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
    புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
    கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
    குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

    ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
    ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
    தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
    தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
    பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
    பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
    ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
    இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

    132. திலகர்
    [திலகர் இறந்த சேதியைக் கேட்ட தினம் பாடியவை]

    இடியது விழுந்த தோதான் இரும்பினைப் பழுக்க காய்ச்சி
    இருசெவி நுழைத்த தோதான்!
    தடியது கொண்டே எங்கள் தலையினில் அடித்த தோதான்
    தைரியம் பறந்த தோதான்!
    கொடியது சாய்ந்த தோதான் கொடுவிஷம் உச்சிக்கேறிக்
    குறைந்திடுங் கொள்கை தானோ,
    திடமுள தீர வீரர் திலகனார் மாண்டா ரென்ற
    தீயசொற் கேட்ட போது!

    'என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம்' என்னுமொரு
    மந்திரத்தை எங்கட் கீந்த
    மன்னவனே! திலகமுனி மஹாராஜா எம்முடைய
    மராட்டியர்தம் மடங்க லேறே!
    உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்தி லணிவகுத்தே
    உத்தரவை எதிர்பார்த் திங்கே
    இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற
    இச்சமயம் இறக்க லாமோ!

    அன்னியர்கள் தொட்டிழுக்க அவமானம்
    நேர்ந்ததென அழுது நின்றாள்
    அன்னை யுன்றான் பாரதத்தாய்; அவள்மானம்
    காப்பதற்கே அவத ரித்தாய்;
    சின்னஉன்றன் வயதுமுதல் இதுகாறும்
    அப்பிடியைத் தளர்த்து விட்டாய்
    இன்னுமவள் சிறைநீங்கி வருவதற்குள்
    எம்மைவிட்டே ஏகி னாயே!

    பகையென நினைத்த பேரும்
    பக்தியோ டஞ்சி நிற்பார்;
    மிகையெனச் சொல்லு வோரும்
    மெய்சிலிர்த் திடுவர் கண்டால்;
    நகைமுகங் கண்ட போதும்
    நடுங்குவார் வெள்ளைக் காரர்;
    தகையவன் பிரிந்து போகத்
    தரிக்குமோ இந்த நாடு?

    வசைகூறி உனையிகழ்ந்த வாலண்டைன் சிர்ரலெனும்
    வகையி லோனை
    வழிகூற அவன்மேலே நீதொடுத்த
    வழக்கிற்பல வஞ்ச மாற்றி,
    அசைகூறி ஆங்கிலர்கள் அவன்பக்கம் தீர்ப்பளித்த
    அவதி நோக்கி,
    அங்கவர்கள் நீதிதனில் வைத்திருந்த நம்பிக்கை
    அறவே நீங்கி.
    இசைகூற உலகமெலாம் இருந்தாலும்
    பெருங்கடவுள் இருமன் றத்தில்
    எடுத்துரைப்போம் இக்குறையும் இந்தியர்கள்
    பலகுறையும்; என்றுசொல்லிப்
    பசைகூறித் தேவரிடம் பண்ணினையோ
    விண்ணப்பம் பரிவு கூறிப்
    பாங்குடனே அவர்விடுத்த ஓலைக்குப்
    பதிலுரைக்கப் போயி னாயோ!

    நிலையிழந்து பரிதவிக்கும் நீபிறந்த
    இந்நாட்டின் நிலைமை நோக்கி,
    நீபட்ட கொடுந்துயரம் இன்னொருவர்
    படுவரென நினைக்கப் போமோ?
    கலையிழந்த மதியானோம்! கண்ணிழந்த
    முகமெனவே கலங்கி நின்றோம்!
    காரிழந்த பயிரெனவே சோறிழந்த
    வயிறெனவே சோர்ந்து விட்டோம்?
    தலையிழந்த உடலமெனத் தவிக்கின்றோம்
    இதுஉனக்குத் தருமந் தானோ?
    தஞ்சமென முன்னின்று தைரியத்தோ
    டுழைக்குமுன்றன் சத்த மோய
    அலையிழந்த கடலேபோல் ஆட்டிழந்த
    பம்பரம்போல் அடங்கி வீழ்ந்தோம்!
    ஆரினிமேல் எங்களையிங் கன்னையென
    முகந்துடைத்தே அறிவு சொல்வார்!

    'இருப்பாய்நீ சிறைவாசம் இருமூன்று
    வரு‡ம்' என இசைந்து கூறி,
    'இதுபோதா துன்றனக்கு; மிகக்குறைத்தேன்
    நானிதனை' என்ற, உன்றன்
    சிறப்பறியப் போதாத தேவாரென்
    றொருஜட்ஜூ செப்புங் காலை,
    சிரித்தமுகம் கோணாமல் சினத்தஅகம்
    காட்டாமல் செப்ப லுற்று
    மறுப்பதுண்டு; குற்றமிலேன், மகிதலத்தை
    ஆளுகின்ற சக்தி வேறே
    மறைத்திருந்து நானடையும் கஷ்டத்தின்
    பயனான மர்ம மாகச்
    சிறப்பென்றன் தேசமென்று தெய்வத்தின்
    திருவுள்ளத் தீர்ப்போ? என்று
    செப்பினசொல் அழியாமல் எம்மனத்தில்
    பச்செனவே திகழு மென்றும்.

    அஞ்சாத நெஞ்சம் வேண்டின்
    அசையாத ஞானம் வேண்டின்
    ஆடாத கொள்கை வேண்டின்
    ஓடாத உறுதி வேண்டின்
    கெஞ்சாத வாழ்க்கை வேண்டின்
    கேடிலா எண்ணம் வேண்டின்
    கேளாத கலைகள் வேண்டின்
    மாளாத உழைப்பு வேண்டின்
    நஞ்சான பேர்கள் யாரும்
    நடுங்குமோர் நடத்தை வேண்டின்
    நாணாத செயல்கள் வேண்டின்
    கோணாத குணங்கள் வேண்டின்
    செஞ்சாறு வார்த்தை வேண்டின்
    திலகனார் சரிதை தன்னில்
    தெரியாத நீதி யெல்லாம்
    தெரியலாம் தெளிவா யங்கே.

    கருத்ததெல்லாம் நீராமோ? வெளுத்ததெல்லாம்
    பாலாமோ? கண்ணிற் கண்ட
    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே யாமோ?
    பருத்ததெல்லாம் கரியாமோ? பாய்ந்ததெல்லாம்
    சிங்கமாமோ? பளப ளப்பாய்ப்
    பளுவிருந்தால் தங்கமெனப் பகர லாமோ?
    விரித்தநிலாக் கதிர்பரப்பி வெள்ளியோடு
    பலமீன்கள் விளங்கி னாலும்
    வெங்கதிரோன் வந்ததென விளம்ப லாமோ?
    தெருத்தெருவாய் மேடையிட்டுத் திசைமுழங்கப்
    பலபேசித் திரிந்திட் டாலும்
    திலகர்பிரா னாவரெனச் செப்ப லாமோ?

    கருமமது செய்தல் வேண்டும்
    கலங்காமல் உழைத்தல் வேண்டும்
    கண்ணபிரான் கீதையிலே
    சொன்னமொழி கடைப்பி டித்த
    பெருமையுள்ள திலக ரைநீ
    பிரித்தாயே யெம்மை விட்டு!
    பெம்மானே! ஒருவ ரம்நீ
    பிழையாது தருதல் வேண்டும் ;
    தருமமது குறையும் போதும்
    தப்பிதங்கள் நிறையும் போதும்
    தப்பாம லவத ரிப்பேன்
    தரணி யில்நா னென்றபடி
    அருமறைகள் அறிய மாட்டா
    அரும்பொருளே வருதல் வேண்டும்,
    அன்பு டன்நீ அப்போதும்
    திலககுரு அடைதல் வேண்டும்.

    133. தாதாபாய் நவரோஜி

    நேற்றுதித்த தேசமெல்லாம் நினைத்தபடி
    பலபேசி நிந்தை கூறி
    நின்றிடவே குன்றிடநாம் நெஞ்சுருகிப்
    பஞ்சையராய் நித்த மேங்க
    வேற்றரசர் நேசரெல்லாம் வேடிக்கை
    பார்த்தவராய் விந்தை பேச
    வெட்கமதால் தலைகுனிந்து வெருண்டுமன
    மருண்டஎமை வெருளே லென்றும்
    'ஆற்றலுள்ள முன்னோர்கள் அவர்வழியில்
    பிறந்தநமக் கவதி யுண்டோ?
    அடைந்திடுவோம் சுயராஜ்யம்; அஞ்சாதீர்!'
    எனமொழிந்தும் அன்பினாலே
    தேற்றிடவே முன்னின்றாய் தெளிவுடையாய்
    தாதாபாய் நவரோ ஜீயே!
    தேவருடன் கலந்தனையோ எங்குறையை
    அங்கவர்க்குச் செப்ப வேண்டி?

    'இருங்கிழவி பெருந்தேவி இந்தியநா
    டெம்மையெலாம் ஈன்ற தாயின்
    உறுங்கிழமை சுதந்தரங்கள் ஒன்றேனும்
    குறையாமல் வந்தா லன்றி
    நெருங்கியநோய் பஞ்சங்கள் ஒருபோதும்
    நீங்கா'வென்றுறுதி சொன்ன
    பெருங்கிழவா! தாதாபாய் நவரோஜி!
    உன்பெருமை பெரிதே யாகும்.

    'பேசுவதால் பெறுவதில்லை பிதற்றுவதால்
    பெருமையில்லை பிறரை நொந்தே
    ஏசுவதால் நேசமில்லை இழித்ததனால்
    களித்ததில்லை என்று சொல்லித்
    தாசனென உழைத்திடவே வேண்டுமென்று
    தளராமல் உழைத்துக் காட்டி
    ஆசையுடன் நீயுரைத்த அம்மொழியை
    எக்காலும் மறவோம் ஐயா!

    உடலமது தளர்ந்தாலும் உன்னுறுதி
    தளராமல் உழைத்து நின்றாய்;
    சடலமது மானிடராய்ப் பிறந்தவர்கள்
    இதைவிடவும் சாதித் தாரோ?
    கடலுலகில் பிறந்தவர்கள் கணக்கற்றா
    ரென்றாலும் கருதில் நீயே
    அடைவரிய ஜென்மத்தின் அரும்பயனை
    அறிந்தவரை அடைந்தாய் ஐயா!

    பணமிருந்தும் பெருமையில்லை; பந்துஜன
    மித்திரர்கள் பரந்து சூழும்
    கணமிருந்தும் கண்டதில்லை ; காடிருந்தும்
    வீடிருந்தும் கனதை யுண்டோ?
    குணமிருந்து பொறுமையுடன் குறையிரந்தார்
    ஏழைகளைக் குறித்து வாடும்
    மனமிருந்தார் அடைந்திடுமோர் மாட்சிமைக்கு
    நீயுமொரு சாட்சி யானாய்.

    134. கோபாலகிருஷ்ண கோகலே

    படிப்பெனும் கடலை நீந்திப்
    பணமெனும் ஆசை போக்கிக்
    கடிப்புடன் மமதை யென்னும்
    களையிலா தொழுகி நின்று
    துடிப்புடன் இந்து தேசத்
    தொண்டனாம் தலைமை பூண்டு
    கொடிப்படை யில்லா தாண்டான்
    கோகலே என்னும் வேந்தன்.

    ஜாதிமத பேதமெல்லாம் கடந்து நின்றான்
    தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன்
    'மேதினியில் உடன்பிறந்த உயிர்க ளெல்லாம்
    மெலிவின்றிப் பசிநீங்கிக் களிப்ப தொன்றே
    ஊதியமாம்', எனக்கருதி உழைப்ப தற்கே
    உடலோடு பொருளாவி உதவி நின்றான்
    கோதிலனாம் கோபால கிருஷ்ண னெங்கள்
    கோகலே யவன்பெருமை கூறப் போமே!

    தன்சுகமாம் தன்னாட்டார் சுகமே யென்றும்
    தன்னறிவாம் தன்னாட்டார் அறிவே யென்றும்
    தன்பெருமை தன்னாட்டார் பெருமை யென்றும்
    தன்சிறுமை தன்னாட்டார் சிறுமை யென்றும்
    மன்பெரிய சபைதனிலும் மறவா னாகி
    மலைபோல நிலையாகப் பாடு பட்டான்
    என்சொலுவோம் கோகலே பெருமை தன்னை
    இறந்தாலும் இறவாதான் இவனே யாவான்.

    தருமமும் கரும மெல்லாம்
    தனித்தனி மறந்து மிக்க
    தரித்திரம் பிணிக ளெல்லாம்
    தங்கியே இங்கு நிற்கப்
    பெருநிலக் கிழவி யிந்தப்
    பேதையாம் இந்து தேசம்
    பலபல துன்ப முற்றுப்
    பஞ்சையாய் வாடி நிற்க
    வெறுமனே யிருந்து நாங்கள்
    வீணரா யலைந்து கெட்டோம்
    வேண்டினோம் தேச பக்தி
    விமலனார் எமக்குத் தந்த
    பெருமனே! கோக லேநீ
    பின்னையும் பிறந்து வந்து
    பெற்றதாய் இந்துமாதின்
    பிணியெலாம் அறுத்து வைப்பாய்.

    135. வ. வே. சு. ஐயர்

    தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்தறைந்த
    தனிப்பறையின் பேரோசை தணிந்த தேயோ!
    துமியுரைத்த கவியரசன் சுவைவிளக்கக் கம்பனுக்காய்த்
    தூதுவந்த பாதமவை துவண்ட வேயோ!

    அமிழ்ந்துறங்கும் தமிழர்களை அடிமைஇருள் அகன்றதென
    அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்த தேயோ!
    குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்
    சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை.

    சுழிந்தோடி மடுக்கள்மிகும் உலகநடைச்
    சுழல்கள்பல நீந்தி ஏறி
    வழிந்தோடும் மலையருவிச் சுழல்விழுந்து
    கரையேற மாட்டாய் ஏனோ!
    கொழுந்தோடிப் படர்கலையின் குளிர்ஞானக்
    குன்றே! ஓர் குன்றி னின்றும்
    ஒழிந்தோடி மறைந்தனையே! உடன்போந்த
    சிறுவர்களின் உணர்ச்சி ஓட.

    தேனாட்டும் தென்மொழியும் தெருளூட்டும்
    வடமொழியும் தெளியத் தேர்ந்து
    மேனாட்டுப் பலமொழியும் மிகக்கூட்டிக்
    கடைந்தெடுத்த அறிவை யெல்லாம்
    தாய்நாட்டின் விடுதலைக்கே தனிநாட்டித்
    தவம்புரிந்த தகைமை யாளா!
    வானாட்டிற் சிறந்ததென்பாய் தமிழ்நாட்டை
    விட்டுப்போய் வாழ்வ தெங்கே?


    'ஐயரெனில் அந்தணராய் அனைத்துயிர்க்கும்
    செந்தண்மை அருள்வோர்', என்று
    செய்யதிரு வள்ளுவனார் செய்தமொழித்
    திருக்குறளின் சீல னாகி
    மெய்யறிவைப் பெறநாடி மெய்வருத்திப்
    பொய்வெறுத்த மேன்மை யாலோ
    'ஐயர்' என்று தனியுரைத்தால் உனையன்றித்
    தமிழுலகம் அறியா தையா!

    முழுமதி மயிர்த்தா லன்ன
    முகந்திகழ் கருணை நோக்கும்
    மூர்க்கரும் நேரிற் கண்டால்
    முகந்திடும் சாந்த வீச்சும்
    குழலினும் இனிய தான
    குழந்தையின் மழலைப் பேச்சும்
    குவிந்திடும் உதட்டிற் கூடக்
    கூத்திடும் சிரிப்பின் கூட்டும்
    தழலினும் தூய வாழவும்
    தாயினும் பெரிய அன்பும்
    சத்திய நிலையும் முன்னாள்
    தவமுனி இவனே என்னப்
    பழகிய பேயும் போற்றும்
    படித்தொரு வடிவம் தன்னைப்
    பாரிடை இனிமேல் வேறு
    யாரிடைப் பார்ப்போம் ஐயா!

    136. கவி தாகூர்

    கலைமகள் கண்ணீர் சோரக்
    கவிமகள் கலங்கி வீழத்
    தலைமகன் இறந்தா னென்றே
    இந்தியத் தாய்த விக்க
    அலைகடற் கப்பா லுள்ள
    அறிஞர்கள் யாரும் ஏங்க
    மலைவிளக் கவிந்த தென்ன
    மறைந்தனன் கவிதா கூரே.

    சந்திரன் கிரணத் தோடு
    சூரியன் ஒளிசேர்ந் தென்ன
    செந்தணல் நெருப்பில் நல்ல
    சிலுசிலுப் பிணைந்த தென்ன
    அந்தணர் அமைதி யோடே
    அரசரின் ஆண்மை கூட்டும்
    சுந்தரக் கவிகள் பாடும்
    சொல்வள முடையோன் தாகூர்.

    கருணையின் உருவு காட்டும்
    கவிரவீந் திரநாத் தாகூர்
    அருணனாய் உலகுக் கெல்லாம்
    அறிவொளி பரப்பி வாழ்ந்தான்
    மருணெறி மாற்ற இந்த
    மாநில மக்கட் கெல்லாம்
    பொருணெறி சாந்தி சொல்லும்
    புத்தக மாக நிற்பான்.

    அரசியல் போராட் டத்தில்
    ஆழ்ந்திலன் என்றிட் டாலும்
    புரைசெயும் அடிமை வாழ்வின்
    புண்ணையே எண்ணி எண்ணிக்
    கரைசெய முடிந்தி டாத
    கவலையால் கண்ணீர் பொங்க
    உரைசொலி அடிமைக் கட்டை
    உடைத்திடத் துடித்தோன் தாகூர்.

    'ஒத்துழை யாமை' என்று
    காந்தியார் உரைக்கும் முன்னால்
    இத்துரைத் தனத்தார் தம்மோ
    டிணங்கிடப் பிணக்கி விட்டோன்
    பற்றுகள் அவர்முன் தந்த
    பட்டமும் பரிசும் வீசிச்
    சுத்தியை முதலிற் செய்த
    சுதந்தர தீரன் தாகூர்.

    காந்தியும் 'குருதேவ்' என்று
    கைகுவித் திறைஞ்சும் தாகூர்
    மாந்தருள் பலநாட் டாரும்
    மதங்களும் மருவி வாழ்ந்து
    தேர்ந்தநல் லறிவை அன்பைச்
    செகமெலாம் பரப்ப வென்றே
    'சாந்திநி கேதன்' என்ற
    சமரச சங்கம் தந்தோன்.

    கலைகளின் வழியே தெய்வக்
    கருணையைக் காண்ப தென்னும்
    நிலையினைப் படிக்க வென்றும்
    நிறுவிய நிலையம் ஈதாம்
    சிலைதரல் ஆடல் பாடல்
    சித்திரம் நடிப்ப ரங்கம்
    பலவித வித்தை எல்லாம்
    பயிலுதற் கிடமாய் நிற்கும்.

    தாய்மொழிப் பற்றும் தங்கள்
    கலைகளைத் தாங்கி நிற்கும்
    ஆய்மையும் வங்கா ளிக்கே
    அதிகமாம்; அதனால் எல்லாச்
    சீமையும் தாகூர்ப் பாட்டைச்
    சிறப்புறப் பரப்பி னார்கள் ;
    வாய்மையைத் தமிழர் போற்றி
    ளர்ப்பரோ தமிழின் மாண்பை?

    137. தேசிகவிநாயகம் பிள்ளை

    தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
    தினமும் கேட்பதென்றன் செவிப்பெருமை ;
    ஆசிய ஜோதியெனும் புத்தர்போதம்
    அழகுத் தமிழில்சொன்னான் அதுபோதும்.

    கோழி குலவிவரும் ; கிளிகொஞ்சும் ;
    குழந்தை எழுந்துதுள்ளிக் களிமிஞ்சும் ;
    ஏழை எளியவர்கள் யாவருக்கும்
    இன்பம் கொடுக்கஅவன் பாவிருக்கும்.

    உழுது தொழில்புரியும் பாட்டாளி
    உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும் ;
    தொழுதே அடிமைப்படும் துயரமெல்லாம்
    தூரத் தள்ளமனம் உயருமடா!

    படித்துப் பழகாத பாமரருக்கும்
    பாடிப் பருகஅதில் சேமமிருக்கும் ;
    ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை ;
    ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமல்ல.

    காடும் மலையும்அதில் கலைபேசும் ;
    கடலும் ஞானம்தர அலைவீசும் ;
    பாடும் தேசிகவி நாயகத்தின்
    பழமை பாடிடஎன் நாஉவக்கும்.

    நோய்நொடி யாவையும் விட்டோடி
    நூறு வயதும்சுகக் கட்டோடு
    தாய்மொழி வளர்த்தவன் கவிகாணும்
    தனிவரம் தெய்வம் தரவேணும்.

    138. வ. உ. சிதம்பரம் பிள்ளை

    சிதம்பரம் பிள்ளையென்று பெயர்சொன்னால்--அங்கே
    சுதந்தர தீரம்நிற்கும் கண்முன்னால் ;
    விதம்பல கோடிதுன்பம் அடைந்திடினும்--நாட்டின்
    விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே.

    அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும்--நல்ல
    ஆற்றல் கொடுக்கும்அவன் சரித்திரமே ;
    கொடுமை பலசகிக்கும் குணம்வருமே--நாம்
    கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம்.

    திலக மகரிஷியின் கதைபாடும்--போது
    சிதம்பரம் பிள்ளைவந்து சுதிபோடும் ;
    வலது புயமெனவே அவர்க்குதவி--மிக்க
    வாழ்த்துக் குரிமைபெற்றான் பெரும்பதவி.

    திருக்குறள் படித்திட ஆசைவரின்--புதுச்
    சிதம்பரம் பிள்ளைஉரை பேசவரும் ;
    தருக்கிடத் தக்கபெருந் தமிழ்ப்புலமை--கற்றார்
    தலைவணங் கிப்புகழும் தனிநிலைமை.

    சுதேசிக் கப்பல்விட்ட துணிகரத்தான்--அதில்
    துன்பம் பலசகித்த அணிமனத்தான் ;
    விதேச மோகமெல்லாம் விட்டவனாம்--இங்கே
    வீரசு தந்தரத்தை நட்டவனாம்.

    நாட்டின் சுதந்தரமே குறியாக--அதை
    நாடி உழைப்பதுவே வெறியாக
    வாட்டும் அடக்குமுறை வருந்துயரை--வெல்ல
    வாழும் சிதம்பரத்தின் பெரும்பெயராம்.

    139. சிதம்பரம் பிள்ளை நினைவு

    மடமையதோ பிறநாட்டார் மயக்கந் தானோ
    மக்களெல்லாம் சுதந்தரத்தை மறந்தா ராகி
    அடிமைஇருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி
    யாரும்தலை நீட்டவொண்ணா அந்த நாளில்
    திடமனத்துச் சிதம்பரப்பேர் பிள்ளை யாவான்
    செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால்
    உடல்சிலிர்க்கும் உயிர்நிமிர்ந்தே உணர்ச்சி பொங்கும்
    உள்ளமெல்லாம் நெக்குநெக்காய் உருகு மன்றோ?

    எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில் ;
    எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார் ;
    சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத்
    துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில் ;
    வல்லாளர் சிதம்பரனார் சிறையிற் பட்ட
    வருத்தமெலாம் விரித்துரைத்தால் வாய்விட் டேங்கிக்
    கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டிக்
    கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்.

    சாதிகுலச் சமயமெலாம் கடந்த தக்கோர்
    சமரசமும் சன்மார்க்கம் தழுவும் சான்றோர்
    நீதிநெறி மிகப்பயின்ற பலபேர் சேர்ந்து
    நிறுவியநம் காங்கிரசை நிதமும் போற்றிப்
    பேதமுற்றுப் பிணங்கிவிட நேர்ந்த போதும்
    பெரியசபை அதைஇகழ்ந்து பேசா நேசன்
    ஓதிஅதன் வளர்ச்சியையே விரும்பி வாழ்த்தி
    உள்ளளவும் சிதம்பரந்தான் உவப்பான் உள்ளம்.

    பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று
    பெரியபல தீர்மானக் கோவை செய்து
    காசுபணப் பெருமையினால் தலைவ ராகிக்
    காங்கிரஸை நடத்தியதைக் கண்டு நொந்து
    'தேசநலம் தியாகமின்றி வருமோ?' என்று
    திலகர்பிரான் செய்தபெருங் கிளர்ச்சி சேர்ந்தே
    ஓசைபடா துழைத்தசில பெரியோர் தம்முள்
    உண்மைமிக்க சிதம்பரனும் ஒருவ னாகும்.

    'உழுதுபல தொழில்செய்தே உழைப்போ ரெல்லாம்
    உணவும்உடை வீடின்றி உருகி வாடப்
    பழுதுமிக அன்னியர்க்குத் தரக ராகிப்
    பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்!' என்றே
    அழுதுருகித் தொழிலாளர் இயக்கம் கண்டே
    அந்நாளில் சிதம்பரன்முன் நட்ட வித்தாம்
    விழுதுபல விட்டபெரு மரமாய் இன்று
    வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்.

    கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்கும் ;
    கறுப்பெனினும் சிரிப்புமுகம் கருணை காட்டும் ;
    குள்ளமென்னும் ஓர்உருவம் இருகை கூப்பிக்
    குண்டெடுத்துக் கடைந்ததெனக் குலுங்க நிற்கும் ;
    வெள்ளையன்றி வேறுநிறம் அறியா ஆடை
    வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும் ;
    கொள்ளைகொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்
    குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.

    140. பாரதி ஓர் ஆசான்

    பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்
    பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
    உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
    வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
    கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்' என்று
    கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
    தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
    தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

    அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே
    அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
    வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்
    விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
    நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
    நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
    விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
    வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

    சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு
    சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
    நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை
    நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
    போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்
    புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
    சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்
    சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!

    கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்
    கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
    பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்
    பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
    பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்
    பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
    எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த
    ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.

    'மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த
    மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை'
    எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி
    இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
    நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து
    நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
    புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன
    புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.

    உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்
    ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
    பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்
    பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
    தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்
    தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்
    செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
    செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.

    கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்
    கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
    கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்
    காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
    நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து
    நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
    தலையாய தமிழறிவை நமக்குத் தந்த
    தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!

    தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்
    தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
    இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
    இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
    அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி
    அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
    அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்
    ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

    141. பாரதிக்கு வெற்றி மாலை

    சுப்ரமண்ய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்
    சொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்
    இப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே
    இன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.

    சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்
    சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
    சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி
    சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

    ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை
    அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
    பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்
    பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

    அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்
    அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
    கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்
    கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.

    அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான்
    அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்
    சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்
    சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.

    142. பாரதி நினைவு

    சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்
    சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
    இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;
    '
    இந்தியன்நான்' என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
    எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;
    எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
    ஒப்பரிய 'தமிழன்'எனும் உவகை ஊறும் ;
    உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

    அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும் ;
    அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும் ;
    துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்
    சுதந்தரத்தை விட்டுவிடாத துணிவு தோன்றும் ;
    கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்
    கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும் ;
    மெச்சிடுநம் தாய்நாட்டின் நாக ரீகம்
    மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால் மேவும்.

    தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்
    தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
    சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்
    தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணித்
    தெருத்தெருவாய்த் தேசீய பஜனை பாடிச்
    சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
    உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை
    ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.

    பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்
    பெருமையவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
    மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்
    மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப் பாடிக்
    கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்
    காத்ததுநம் பாரதியின் கவியே யாகும் ;
    எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்ற மாகும் ;
    பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க!

    எங்கேயோ எட்டாத உலகம் தன்னில்
    இருப்பரென நாம்படித்த தெய்வம் எல்லாம்
    இங்கேயே எம்முடனே எவரும் காண
    ஏழைமக்கள் குடிசையிலும் இருப்ப தாக்கும்
    சிங்காரப் புதுக்கவிகள் பாடி பலம்முத்
    தேவரெல்லாம் தமிழ்நாட்டின் திரியச் செய்தோன்
    மங்காதாம் பாரதியின் நினைவைப் போற்றி
    மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.

    143. பாரதி எனும் பெயர்

    பாரதி எனும்பெயரைச் சொல்லு--கெட்ட
    பயமெனும் பகைவனை வெல்லு.
    நேரினி உனக்குநிகர் இல்லை--உடன்
    நீங்கும் அடிமைமனத் தொல்லை.

    சுப்ரமண்ய பாரதியின் பாட்டு--பாடிச்
    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
    ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்--அதுவே
    உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

    துள்ளிக் குதித்துவரும் சந்தம்--செயல்
    தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
    அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்--நம்
    அருமைப் பாரதியை மறவோம்.

    அன்பு நிறைந்ததமிழ் மொழியில்--செயல்
    ஆண்மை குறைந்ததெனும் வழியின்
    தென்பு மறைந்துழன்ற போதில்--நல்ல
    தீரம் கொடுக்கவந்த தூதன்.

    அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்--பல
    ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
    நமது பாரதியின் பாட்டே--தமிழ்
    நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

    இனிமை யான தமிழ்ப் பா¨‡--அதில்
    'இல்லை வேகம்' எனும் ஓசை.
    முணகிப் பேசும்ஒரு வகையை--வென்று
    முழங்கும் பாரதியின் இசையே.

    முன்னோர் பெருமைமட்டும் பேசிப்--புது
    முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
    சின்னா பின்னமுற்று வாடும்--நாம்
    சீர்திருந்தக்கவி பாடும்.

    அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்--வெறும்
    அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
    கொடுமை கண்டுமனம் கொதித்தான்--கவி
    கொட்டி வீரியத்தை விதைத்தான்.

    ஊனைப் பெரியதெனக் கொண்டோம்--ஆன்ம
    உணர்வை விற்றுருசி கண்டோம்.
    மானம் போகும்என்ற நிலமை--தனை
    மாற்றும் பாரதியின் புலமை.

    பண்டைச் சிறப்புகளைப் பாடிக்--கிழப்
    பாட்டிகள் கூட்டமெனக் கூடி
    அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்--நவ
    ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

    தீரன் அறிவுரையை இகழ்ந்து--வெறும்
    திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
    பேரைக் கெடுத்துவிட மாட்டோம்--எனும்
    பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

    கவிஞன் வாக்குறுதி பலிக்கும்--நம்
    கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
    புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்--வெகு
    புதுமை யாகஅர சாள்வோம்.

    வாழ்க பாரதியின் அருமை--அதில்
    வளர்க தாய்மொழியின் பெருமை.
    வாழ்க வையகத்தில் யாரும்--பிணி
    வறுமை அச்சமற்று வாழ்க.

    144. வல்லபாய் பட்டேல்

    இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
    எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
    கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
    குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்
    கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
    கலங்காத தெளிவுடைய கர்ம வீரன்
    வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதை விரித்துரைக்க வார்த்தை யுண்டோ?

    காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
    கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
    சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
    சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்.
    மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
    மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
    வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.

    அன்புமுறை தவறாத அமைச்ச னாகும் ;
    அரசுநிறை குறையாத ஆற்ற லுள்ளோன் ;
    துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
    துளங்காமல் துணிவுரைக்கும் துணைவ னாகும்
    இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
    இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான் ;
    நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
    நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.

    காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
    கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
    சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
    சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
    நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
    நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
    சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
    சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.

    பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
    பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
    அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞ ராவர்
    அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
    திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
    திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
    மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
    மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.

    145. உ. வே. சாமிநாத ஐயர்

    பேச்செல்லாம் தமிழ்மொழியின் பெருமை பேசிப்
    பெற்றதெல்லாம் தமிழ்த்தாயின் பெற்றி யென்று
    மூச்செல்லாம் தமிழ்வளர்க்கும் மூச்சே வாங்கி
    முற்றும்அவள் திருப்பணிக்கே மூச்சை விட்டான்.
    தீச்சொல்லும் சினமறியாச் செம்மை காத்தோன்
    திகழ்சாமி நாதஐயன் சிறப்பை யெல்லாம்
    வாய்ச்சொல்லால் புகழ்ந்துவிடப் போகா துண்மை ;
    மனமாரத் தமிழ்நாட்டார் வணங்கத் தக்கோன்.

    அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
    அலைந்தலைந்தே ஊருராய்த் திரிந்து நாடிச்
    செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடிச்
    சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து
    சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கிச்
    சோர்வறியா துழைத்தஒரு சாமி நாதன்
    இல்லையெனில் அவன்பதித்த தமிழ்நூ லெல்லாம்
    இருந்தஇடம் இந்நேரம் தெரிந்தி டாதே.

    சாதிகுலம் பிறப்புகளாற் பெருமை யில்லை ;
    சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடே
    ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உயர்ந்தோர் என்னும்
    உண்மைக்கோர் இலக்கியமாய் உலகம் போற்ற
    ஜோதிமிகும் கவிமழைபோல் பொழிமீ னாட்சி
    சுந்தரனாம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி
    வேதியருள் நெறிபிசகாச் சாமி நாதன்
    விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கி நிற்கும்.

    மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே
    மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார்; ஞானப்
    பால்கொடுத்த தமிழ்த்தாயார் மிகவும் நொந்து
    பலமிழந்து நிலைதளர்ந்த பான்மை பார்த்துக்
    கோல்கொடுத்து மீட்டுமவள் கோயில் சேர்த்துக்
    குற்றமற்ற திருப்பணிகள் பலவும்செய்து
    நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த
    நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமி நாதன்.

    146. வாழ்க முதலியார்

    சலியாத சேவையும் தளராத ஊக்கமும்
    தணியாத ஆர்வ முள்ளோன் ;
    நலியாத சொற்களால் நவசக்தி யூட்டிடும்
    நயமிக்க தேச பக்தன் ;
    நிலையான கல்வியின் நெளியாத கொள்கையின்
    நேரான நெறியில் நிற்போன் ;
    கலியாண சுந்தர முதலியார் தமிழன்பர்
    கண்ணான ஒருவ னாகும்.

    பாடெலாம் தான்பட்டுப் பலனெலாம் பிறர்கொள்ளப்
    பங்கின்றி உதவு பண்பன் ;
    ஏடெலாம் மேல்எனும் 'என்கடன் பணிசெய்தல்'
    என்பதே எண்ணி யெண்ணி
    நாடெலாம் வாழவே நாளெலாம் தன்சுகம்
    நாடாது பாடு படுவோன் ;
    வீடெலாம் தமிழ்மக்கள் கலியாண சுந்தரன்
    வெற்றிகொண் டாட வேண்டும்.

    கொல்லாமை பொய்யுரை கூறாமை என்பதே
    குறியாகக் கொண்ட தமிழைக்
    கல்லாத பேர்களும் களிகொள்ளத் தந்திடும்
    கலியாண சுந்த ரத்தின்
    செல்லான அறுபதாம் ஆண்டுதிரு நாளிலே
    தெய்வத்தைச் சிந்தை செய்து
    வல்லாண்மை குறையாமல் நூறாண்டும் அவன்வாழ
    மனமார வாழ்த்து கின்றோம்!

    147. உள்ளங் கவர்ந்த பண்டிதர்

    'பண்டிதர்' என்றால் பள்ளிக் கூடப்
    பையன் களுக்குப் பரிகா சச்சொல்.
    ஆங்கிலப் பாடத்(து) ஆசான் மாரும்
    கணக்குப் போடக் கற்பிப் பவரும்
    பூகோள சாத்திரம் புகட்டு வோரும்
    விஞ்ஞான அறிவை விளக்கு பவரும்
    சரித்திரம் சொல்லித் தருகிற பேரும்
    சித்திரம் வரையச் செய்கிற வாத்தியும்
    தேகப் பயிற்சி 'ட்ரில்மாஸ்டர்' கூட
    ஓட்டமும் நடையும் உருட்டும் மிரட்டுமாய்க்
    கண்டிப்பு தண்டிப்புக் கடுபிடி காட்டி
    வருவார் போவார் வார்த்தைகள் பேசுவார்
    பார்த்த உடனே பயபக்தியோடு
    மாணாக்கர் அவர்களை மதித்து வணங்குவார்.
    ஆனால்,
    பண்டித ரிடத்தில் மாத்திரம் பயப்படார்.
    வடமொழிப் பண்டிதர் வைதீக மானவர் ;
    அநித்திய உலகில் அசட்டை போலத்
    தம்முடைக் கடமையைத் தாம்முடித் திட்டே
    எவரென்ன செய்யினும் ஏனென்றும் கேளார் ;
    அவரைப் பற்றிநான் அதற்குமேல் அறியேன்.
    தமிழ்மொழிப் பண்டிதர் தண்மையே உருவாய்
    'அடக்கம்' என்பதன் அறிகுறி யாமென
    'அமைதி' என்னும் சொல்லின் அர்த்தமாய்ச்
    சாந்த மயமாய்ச் சந்தடி யின்றி
    இருக்கிற இடமே தெரியா திருப்பார்.
    சிறியோர் பெரும்பிழை செய்திட் டாலும்
    அடிக்கவோ பிடிக்கவோ அவர்கை கூசும்.
    வழுக்கியும் அவருடை வாயி லிருந்தோர்
    இழுக்குடை வார்த்தை எதுவும் வராது.
    சொற்பொழி வென்று சொல்லவந் தாலும்
    'பண்டிதர்' பேச்சுப் பழங்கதை யாகவே
    பக்தியைக் குறித்தும் முக்தியைப் பற்றியும்
    ஞானம் என்றும் மோனம் என்றும்
    அன்பைப் பற்றியும் அருளைப் பற்றியும்
    சத்தியம் என்றும் சாந்தம் என்றும்
    இளைஞர் காதுக் கின்பம் தராது.
    அதனால் தானோ, என்னவோ அறியேன்.
    பண்டிதர் என்றால் பயமற்றுப் போனது!
    நான் படித்திட்ட நாளில்நான் அறிந்த
    பண்டிதர் அனைவர்க்கும் பான்மை இன்னதே.
    இப்போது பண்டிதர் எப்படி என்றிட
    அவர்களைப் பற்றிநான் சிறிதும் அறியேன்.
    மற்ற மாணவர் மரியாதை குறையினும்
    பண்டித ருக்குநான் பணிந்தே பயின்றேன்.
    எனினும்; பண்டித ரென்றால் இளக்கமாய்
    ஏளனம் செய்பவர் இடையே வளர்ந்தவன்.
    ஆகையி னாலே, தீயஅப் பழக்கம்
    எனக்கும் தெரியாமல் இருந்தது போலும்!
    அப்படி யிருக்க,
    உலகுக் கெல்லாம் உணவு கொடுத்து
    வந்தவர்க் கெல்லாம் வடித்துக் கொட்டி
    ஞானமும் ஊட்டி நல்வழி காட்டிக்
    கல்வியும் கலைகளும் கற்கச் செய்து
    வீரமும் தீரமும் வெற்றியும் கண்டே
    அன்பின் முறைகளில் அரசு புரிந்து
    சாந்தி மிகுந்த தனிச்சிறப் புள்ளதாய்,
    வந்து பார்த்தவர் வாழ்த்தி வணங்கும்
    நாடா வளந்திகழ் நாடா யிருந்தும்
    பேரும் புகழும் பெருமையும் கெட்டுத்
    தன்னர சிழந்து தரித்திரம் மிஞ்ச
    அன்னிய நாட்டுக் கடிமைப் பட்டும்,
    அறிவும் ஆற்றலும் ஆண்மையும் மறைந்து
    நொந்து கிடக்கும் இந்தியத் தாயின்
    சுதந்தரப் போரைத் தொடங்கிய தூயோன்.
    தெய்வத் திருக்குறள் திருவாய் மலர்ந்த
    வள்ளுவ முனிவனே வந்துவிட் டதுபோல்
    உழவும் உழைப்புமே உயர்ந்த தொழிலாய்
    வாழ்ந்து காட்டும் நவீன வள்ளுவன்.
    'ஏழையின் துயரம் என்துயர்' என்போன்
    நல்லற மாகிய இல்லறத் தவசி
    பக்தருக் கெல்லாம் பக்த சிகாமணி
    ஐம்புலன் வென்ற அருந்தவ சித்தன்.
    ஞாலத் துக்கொரு ஞான ஜோதியாய்
    அறந்தரு வாழ்க்கை அந்த ணாளனாம்
    காந்தி அடிகள்எம் கருணா மூர்த்தி--
    சத்தியமே சாந்தமே கத்திகே டயமாய்க்
    கொல்லா விரதமே வில்லாய் வளைத்திட்(டு)
    அன்பே அதற்கோர் அம்பாய்ப் பூட்டி
    அறப்போர் தொடுத்தஅவ் வாரம்ப நாளில்,
    அன்னவன்,
    சேனையில் ஒருவனாய் யானும் சேர்ந்தேன்.
    காந்தி மகானின் கருத்தைச் சொல்லிப்
    பாமர மக்களின் படைப்பலம் திரட்ட
    ஒவ்வோர் ஊராய் ஓடித் திரிந்து
    வீடு வாசல் வேலைகள் விட்டு
    அதுவே பணியாய் அலைந்த நாட்களில்--
    "அயலூர் ஒன்றில் அரசியற் கூட்டம்,
    பெருத்த கூட்டம் பெரியகொண் டாட்டம் ;
    பட்டண மிருந்தொரு பண்டிதர் வருகிறார் ;
    செந்தமிழ் நடையில் தித்திக்கப் பேசுவார் ;
    போவோம் அதற்குப் புறப்படுங் கள்" என
    என்னையும் சிலரையும் எனக்கொரு நண்பர்
    கந்த சாமியார் கனிவுடன் அழைத்தார்.
    இதனைக் கேட்டார் இன்னொரு நண்பர் ;
    "பண்டிதர் பேச்சா? பழைய சோறுதான்.
    சளசள சளவென்று சப்பிட் டிருக்கும்.
    வெண்டைக் காயும் விளக்கெண் ணெயுமாய்
    வழவழ வென்றுதான் பேச்சு வளரும்.
    நேற்றொரு பண்டிதர் நீளமாய்ப் பேசினார்
    போதும் போதும் போதுமென் றாச்சு"
    என்று சொல்லி ஏளனம் செய்தார்.
    என்னுடன் இருந்த ஏழெட்டுப் பேரும்
    ஆங்கிலப் பள்ளியின் அனுபவ முள்ளோர்
    பண்டிதர் பேச்சைப் பரிகாசம் பண்ணிய
    அந்தக் கேலியை ஆமோ தித்தனர்.
    கூடச் சேர்ந்து குறைசொலா விடினும்
    பண்டிதர் என்பதைப் பரிகாசம் செய்ததைக்
    கண்டிக் காமல்நான் கம்மென் றிருந்தேன்.
    சேர்ந்து கொஞ்சம் சிரித்தும் விட்டேன்.
    அதனால், என்னிடம் அதிக மதிப்புடன்
    கூவி யழைத்தவர் கோபங் கொண்டார்.
    அதன்மேல் எனக்கும் அறிவு பிறந்தது.
    பண்டிதர் என்றால் பரிகாசம் செய்வதைக்
    கண்டனம் செய்து கனிந்து பேசிக்
    கந்த சாமியின் கருத்தின் படிக்கே
    எல்லோரும் சேர்ந்து போய்வர இசைந்தோம்.
    போனோம்,
    பண்டிதர் அவர்களைப் பார்த்தேன் ; பார்த்தால்
    தாட்டிகம் இல்லை; தடபுடல் காணோம்!
    உயரமும் இல்லை; உருவமும் ஒல்லி ;
    மாநிற மென்ன மதிக்கத் தகுந்தவர்
    கல்வித் தெய்வம் கலைமகள் வண்ணமாய்
    வெள்ளை வெளேரென வெளுத்த வேட்டியும்
    அதனிலும் வெளுத்த அங்கச் சட்டையும்
    அங்கியின் மேலோரு அங்கவஸ் திரமும்,
    தலையில் துல்லிய வெள்ளைத் தலைப்பா
    கண்ணாடி மூடிய கனற்பொறி போன்று
    குளிர்ச்சியும் கூடிய கூர்ந்த கண்கள்.
    மகிழ்ச்சி ஊட்டும் மலர்ந்த முகத்துடன்
    'பண்டித' ராகவே பண்டிதர் இருந்தார்.
    இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி
    கருத்துக் கேற்பக் கையை ஆட்டி
    வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச்
    சங்கீத மத்தியில் சாப்புப் போல
    அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
    சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப்
    பதம்பத மாகப் பதியும் படிக்கே
    அணிஅணி யாக அடுக்கிய கருத்தொடும்
    இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்
    தங்கு தடையெனல் எங்குமில் லாமல்
    எத்தனை தூரம் எட்டநின் றாலும்
    கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி
    செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்
    கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்
    காதாற் காணும் கனவே போலத்
    தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்
    சங்க நூல்களின் சாறு வடித்துச்
    சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்
    திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்
    திருமந் திரத்தின் பெருமை திரட்டிக்
    கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து
    தேவா ரத்தின் திருவருள் கூட்டித்
    திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத்
    திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி
    எம்மத மாயினும் சம்மதம் என்னும்
    சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப்
    பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்
    பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத
    அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக்
    கள்ளமில் லாத உள்ளத் தெளிவுடன்
    அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக்
    கற்றவர் மனத்தை முற்றிலும் கவர்ந்து
    பாமர மக்களைப் பரவசப் படுத்தி,
    'காந்தீ யத்தின் கருத்துகள் எல்லாம்
    தமிழன் இதயம் தழுவிய வாழ்வே'
    என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய
    அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனைக்
    கேட்டேன் ; இன்பக் கிறுகிறுப் புற்றேன்.
    இரண்டரை மணியும் இப்படிப் பேசிக்
    கடைசியில் பேச்சின் கருத்துரை யாக,
    முறைபிற ழாமல் உரைதள ராமல்
    சொன்னதை யெல்லாம் சுருக்கிச் சொல்லி
    இறைத்த முத்தை எடுத்துச் சேர்த்துத்
    தொடுத்த மாலைபோல் தொகுத்துக் கூறிக்
    கேட்டவர் நெஞ்சில் கிடந்து புரளக்
    கூப்பிய கையுடன் குனிந்து கொடுத்து
    உரையை முடித்து உட்கார்ந்து விட்டார்.
    சொப்பன இன்பத் தொடர்ச்சி நிற்கவே,
    திடுக்குற விழித்துத் திகைப்பவன் போலும்,
    சங்கீதம் மத்தியில் தடைப்பட் டதுபோல்,
    ஓடின சினிமா ஒளிப்படம் கேடுற்(று)
    இடையில் அறுந்தே இருட்டடித் ததுபோல்
    என்னுடை உணர்ச்சிகள் இடைமுறிந் தேங்கினேன்.
    இன்னான் எனவெனை ஏதும் அறியாப்
    பண்டிதர் அவரையே பார்த்துப் பார்த்துப்
    புருடனைக் கண்ட புதுப்பெண் போல--
    அன்போ ஆசையோ அடக்கமோ ஒடுக்கமோ
    அச்சமோ நாணமோ மடமையோ அறியேன்--
    என்னையும் மறந்து என்னுடை மனது
    பண்டிதர் இடத்தில் படிந்து விட்டது.
    இன்பத் தமிழ்மொழி இலக்கியம் சொல்வதே
    காந்தீ யத்தின் கருத்துகள் என்பதை
    என்னைப் போலவே எண்ணிய பண்டிதர்
    என்னிலும் அழகாய் இணைத்துச் சொன்னதை
    எண்ணிக் கொண்டே தலைகுனிந் திருந்தேன்.
    சிறிது நேரம் சிந்தனை செய்தபின்,
    பண்டிதர் அவர்களைப் பார்க்கும் ஆசையால்
    மீண்டும் நிமிர்ந்து மேடையைப் பார்த்தேன்.
    அந்தப் பண்டிதர் அங்கே இல்லை.
    எவரோ பேசுதற்(கு) எழுந்து நின்றார்.
    "எங்கே? பண்டிதர் எங்கே?" என்றுநான்
    பக்கத்தி லிருந்த பலரையும் கேட்டேன்.
    "பிரிதோர் ஊரிற் பேசுதற் கருதி
    அவசர மாக அவர்போய் விட்டார்"
    என்றொரு நண்பர் என்னிடம் சொன்னார்.
    கூட்டம் முடிந்தபின் கொஞ்சிக் குலவிக்
    கலந்து பேசிக் களிப்பெலாம் சொல்லிப்
    பண்டித ரோடு பழக நினைத்தஎன்
    ஆசை கெட்டதால், அவதி மிகுந்தது.
    மற்றவர் பேச்சில் மனங்கொள் ளாமல்
    உடனே புறப்பட்(டு) ஊருக்கு வந்தேன்.
    கண்ட பண்டிதர் கண்ணி லிருந்தார்.
    கேட்ட பேச்சும் நெஞ்சில் கிளர்ந்தது.
    அந்தப் பண்டிதர் அவரே அவர்தாம்
    கலியாண சுந்தர முதலியார் காண்க.
    அவரை முதல்முதல் பார்த்த(து) அப்படி.
    அந்நாள் தொடங்கி இந்நாள் அளவும்
    என்னுடை நினைவில் என்றும் நின்றுளார்.
    எண்ணும் போதெலாம் இன்பம் ஊறும்.
    நினைக்கும் பொழுதெலாம் நெஞ்சம் குளிரும்.
    ..................................................................
    பத்தாண் டுகள் தாம் பறந்தபிற் பாடு
    பட்டணம் சென்றுநான் நேரிற் பழகினேன்,
    அதன்மத் தியிலே அவரும் நானும்
    கடிதத் திலேதான் கலந்து மகிழ்ந்தோம்.
    என்னுடைப் பாட்டென எதுபோ னாலும்
    'தேச பக்தன்' தினசரி அதனிலும்
    'நவசக்தி' தன்னிலும் நன்றாய் அமைத்துச்
    சிறப்புடன் வெளிவரச் செய்வரச் செம்மல்.
    பக்கத்தில் அவருடன் பழகிய போதுதான்
    சீலம் நிறைந்த செம்மனக் குன்றாம்
    ஒழுக்கம் உயர்ந்த உத்தம சீலர்
    முதலியார் பெருமையை முற்றிலும் அறிந்தேன்.
    தமிழ்நாடு தந்த தலைவர்கள் தம்முள்
    காந்தீ யத்தின் உட்பொருள் கண்ட
    சிலருள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்
    முதலியார் என்பது முற்றிலும் உண்மை.
    'தேசபக் த'னில் அவர் செய்த சேவையும்
    'நவசக்தி' மூலமாய் நாட்டிற் குழைத்ததும்
    புகழ்ந்தால் அதுபெரும் புத்தக மாகும்.
    தமிழிலே எண்ணித் தமிழிலே பேசித்
    தமிழருக் காகவும் தனித்தொண் டாற்றுவார்.
    சந்தி விகாரச் சந்திடைச் சிக்கிய
    வழக்கற்றுப் போன வார்த்தைகள் மலியப்
    'பழந்தமிழ்' என்று பலபேர் பேசின
    அந்தத் தமிழையும் அழகுறச் செய்து
    புத்தம் புதுப்பல சொற்றொடர் புகுத்திக்
    கேட்கக் கேட்கக் கிளர்ச்சி யுண்டாகும்
    தனியரு தமிழ்நடை தந்தவர் சுந்தரர்.
    இந்தியத் தாயின் விடுதலை எண்ணமே
    நிறைந்த அவருடை நெஞ்சம் குமுற,
    காந்தீ யத்தையே கடைப்பிடித் தவராய்ச்
    சாது வாகவே தம்கடன் தாங்கி
    அச்சுத் தொழிலும் அச்சாணி போலவே
    கண்ணிற் படாமல் கடமையைச் செய்து
    பழமையும் புதுமையும் படியும் சந்தியாய்ப்
    பாட்டாளி மக்களின் பக்கத் துணையாய்ப்
    பெண்குலப் பெருமைக்குப் பெருத்த காவலாய்ச்
    சைவ நெறிக்கொரு சமரசத் தூதனாய்ப்
    பட்டணத் திருந்தும் பகட்டில் லாமல்
    ஓசையில் லாமல் ஓய்வற உழைக்கிறார்.
    முத்தமிழ்க் கலியாண சுந்தர முதலியார்
    அவருடை அறுபதாம் ஆண்டு நிறைவைப்
    பரவிப் புகழ்ந்து பல்லாண்டு பாடி
    நலம்குறை யாமல் இன்னமும் நாற்ப(து)
    ஆண்டுக ளேனும் அவர்வாழந் திருக்கச்
    சிவத்தைக் கோரித் தவத்தைச் செய்வோம்.
    நந்தமிழ் மக்கள் நல்வாழ்வு பெற்வே.
    வாழி கல்யாண சுந்தரன் வாழி!
    வாழிபல் லூழி வாழிவா ழியவே!

    148. சத்தியமூர்த்திக்கு வரவேற்பு

    நித்திய அறங்கள் நாட்டில் நிலைத்திட உலகம் வாழ
    உத்தமன் காந்தி காட்டும் ஒருவழி ஒன்றே உண்டு ;
    சத்திய சாந்த நோன்பின் தவச்சிறை யிருந்து வந்தாய்
    சத்திய மூர்த்தி எங்கள் தலைவனே! வருக! ஐயா!

    உடல்நலம் குறைந்தி ருந்தும் ஒருசிறு தயக்க மின்றிக்
    கடன்என ஓடி அண்ணல் காந்தியின் ஆணை தாங்கித்
    திடமுடன் தேச சேவை தீரர்கள் இனத்தைச் சேர்ந்தே
    இடரிடைக் காத்தாய் பெற்ற இந்தியத் தாயின் மானம்.

    ஏழைகள் துயரம் போக எளியவர் களைப்பு நீங்கப்
    பாழ்பட உலகை வாட்டும் பகைமைகள் குறைய வென்றே
    வாழிய காந்தி சாந்த வாய்மையின் வழியில் நின்று
    ஊழியம் செய்யு முங்கள் உதவியை உலகம் போற்றும்.

    தீனரை வதைத்து வாட்டித் தின்றுடல் சுகித்து வாழும்
    மானமில் லாத வாழ்க்கை மலிந்த(து) உலகில்; மற்ற
    ஞானநல் வழியில்செல்ல நடத்திடும் காந்தி சாந்தச்
    சேனையில் சேர்ந்த பேரைச் செகமெலாம் சிறப்புச் செய்யும்.

    தஞ்சம்வந் தவரை நம்பித் தன்னர சிழந்து நொந்துப்
    பஞ்சமும் பிணியும் வாட்டப் பலதுயர் பட்டா ளேனும்
    எஞ்சிய 'சாந்தி' ஞானம் இன்னமும் குறைவி லாத
    வஞ்சியாம் பார தத்தாய் வாழ்த்துவள் வாரித் தூக்கி.

    பணத்தினை இழந்திட் டாலும் பலத்தினிற் குறைந்திட் டாலும்
    குணத்தினிற் குறையக் கூசும் குலத்தினிற் பிறந்தோ மன்றோ?
    கணத்தொடும் சிறையில்நொந்தும் கண்ணியம் குறைந்தி டாத
    மணத்தொடும் வருவீர் தம்மை மாநிலம் மறவா தென்றும்.

    வள்ளுவன் குறளும் வேத வடமொழி வகுத்த யாவும்
    தள்ளரும் 'சாந்தி' என்ற தனிப்பதக் கருத்தே யாகும்
    கள்ளமில் லாமலெண்ணின் காந்திசொல் அதுவே; காண்போம்
    எள்ளரும் அதுவே யாகும் இந்திய நாக ரீகம்.

    வருகவே சத்யமூர்த்தி! வாழ்கஉன் இனத்தோ ரெல்லாம்
    பெருகிநம் சாந்தி சேனை பெற்றதாய் நாட்டை மீட்கும்
    அருகிலே அடையும் சொந்த அரசினை அழைத்துக் கொள்ளத்
    தருகஉன் திறமை முற்றும் தமிழகம் பெருமை கொள்ளும்.

    149. யோக சமாஜ குரு

    பள்ளியில் மாணவனாய்ப் படிக்கும் போதே
    பரமார்த்த சிந்தனைகள் பற்றிக் கொள்ளத்
    துள்ளிவரும் வாலிபத்தின் துடிப்ப டக்கித்
    துறவறமே மேற்கொள்ளத் துணிவு கொண்டோன்
    தள்ளரிய ஆசைகளைத் தணிப்ப தற்காய்த்
    தமோரஜத்தாம் உணவுகளைத் தள்ளக் கற்றோன்
    உள்ளமதை ஒருநிலையில் ஒடுங்கச் செய்ய
    உப்பின்றி உண்டவனாம் சுத்தா னந்தன்.

    தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான்
    திசைமொழியும் ஆங்கிலத்தில் திறமை மிக்கான்
    மென்மைமிகும் பிரஞ்சுமொழி விரும்பிக் கொண்டான்
    மேதினியில் இலக்கியத்தின் மேன்மை யுள்ள
    பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தா னந்த
    பாரதியார் மெய்ஞ்ஞானப் பண்பில் மிக்க
    தன்மொழியே தலைசிறந்த மொழியா மென்று
    தமிழுக்கே பணிபுரியும் தவசி யானான்.

    கானகத்தே மறைந்துவிடத் துறந்தா னல்லன்
    கண்மூடிக் கருத்தடக்கும் மெளனி யல்லன்
    ஞானமொழி மக்களுக்கு நாளும் சொல்லி
    நாட்டிற்குச் சேவைசெய்யும் நாட்டம் ஒன்றே
    ஊனெடுத்த பயன்என்னும் உறுதி கொண்டான்
    ஓயாமல் உழைத்துவரும் சுத்தா னந்தன்
    தேனிருக்கும் தமிழுக்கோர் கவிஞ னாகித்
    திகழ்கின்ற இலக்கியங்கள் பலவும் செய்தான்.

    இல்லறமோ துறவறமோ எதற்கா னாலும்
    எல்லார்க்கும் யோகமுறை இருக்க வேண்டும்
    அல்லல்தரும் பிணியேதும் அணுகா வண்ணம்
    ஆரோக்ய வாழ்க்கைபெறும் அறிவை யூட்டும்
    நல்லதொரு யோகநெறி சமாஜம் தன்னை
    நடத்திடவே நாடிநிற்கும் சுத்தா னந்தன்
    வல்லமைகள் மிகச்சிறந்து மெய்ஞ்ஞா னத்தின்
    வழிகாட்ட நீடுழி வாழ்க மாதோ.

    150. வாழ்க ராஜாஜி

    சாதிமதச் சழக்குகளைக் கடந்து நிற்போன்
    சமதர்ம சன்மார்க்க சாந்த சீலன்
    நீதிநெறி முறைதெரிந்த நேர்மை யாளன்
    நிந்தையற்ற வாழ்க்கைதரும் நியம முள்ளோன்
    ஓதிஉணர்ந் தச்சமற்ற உண்மை கூறி
    உலகநலம் காப்பதற்கே உழைக்கும் யோகி
    மேதினியில் அறிவறிந்த மக்கள் யாரும்
    மெச்சுமெங்கள் ராஜாஜி மேதை வாழ்க!

    கூரிய அறிவால் கொண்ட
    கொள்கையின் உயர்வால் கூறும்
    சீரிய ஒழுக்கம் காத்த
    சிறப்பினால் எதையும் செய்யக்
    காரியத் திறமை வாய்ந்து
    கடனறி கார ணத்தால்
    யாரினும் ராஜா ஜீயை
    அறிஞர்கள் போற்று வார்கள்.

    நஞ்சினில் மிகவும் தோய்த்து
    நாசமே கருதிப் பாய்ச்சி
    வெஞ்சின வசைகள் கோத்து
    விட்டன பாணம் எல்லாம்
    பஞ்சினிற் பட்ட வேல்போல்
    பயனற, ராஜா ஜீயோ
    கொஞ்சமும் கோப தாபக்
    குறியிலாக் குணக்குன் றானான்.

    பொதுநலம் ஒன்றே யன்றிப்
    புகழ்ச்சியில் மயங்க மாட்டான் ;
    எதுநலம் என்ற பேச்சில்
    எதிர்ப்புகள் எதற்கும் அஞ்சான் ;
    மதிநலத் தெளிவு கொண்ட
    மாபெரும் கர்ம யோகி
    துதிபெறத் தமிழர் மேன்மை
    துலக்கினோன் ராஜா ஜீயே.

    வேங்கைகள் சூழ்ந்த மான்போல்
    விடுபட வழியில் லாமல்
    தீங்குகள் சுற்றி நின்று
    திடுக்கிடச் செய்த போதும்
    ஆங்குமான் கல்லோ! என்ன
    அசைவிலா உறுதி காட்டும்
    பாங்குளான் ராஜா ஜீயே ;
    பகைவரே பணியும் பண்பன்.

    தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்று
    ஜாதியால் குறித்தல் பாபம்
    மாந்தருள் தீண்டல் என்றல்
    மடமையுள் மடமை என்று
    காந்தியை நாமெல் லாரும்
    காண்பதன் வெகுநாள் முன்பே
    சாந்தமாய் வாழ்க்கை தன்னில்
    சாதித்தோன் ராஜா ஜீயே.

    பழுதிலா வாழ்க்கை தந்த
    பயமிலா நெஞ்சத் தாலே
    எழுபது வயதின் மேலே
    இன்னமும் இளைஞ னேபோல்
    எழுதரும் மேலோன் காந்தி
    இடையறாப் பக்த னாக
    வழுவிலா அரசு காட்டும்
    ராஜாஜி வாழ்க வாழ்க!

    151. காமராஜர் வாழ்க

    ஒருவருக்கும் பொல்லாங்கு நினையா நெஞ்சன்
    உரிமையுள்ள யாவருக்கும் உதவும் பண்பன்
    அருவருக்கும் வாதுகளில் அலையாச் சொல்லன்
    அமைதியுடன் பணிபுரியும் அன்புத் தொண்டன்
    திருவிருக்கும் காந்திமகான் கொள்கை தாங்கும்
    தேசபக்தன் உழைப்பதனால் உயர்ந்த செம்மல்
    மறுவிருக்கும் ஆசைகளால் மனம்கெ டாத
    முதலமைச்சர் காமராஜர் மகிழ்ந்து வாழ்க.

    152. ஜவஹர்லால் மன்னன்.

    மன்னுயிரைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தி
    மலைமலையாய்ப் பிணக்குவியல் குவித்த தாலே
    மன்னரெனப் பலர்வணங்கத் தருக்கி வாழ்ந்தோர்
    மாநிலத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் ;
    தன்னுயிரை மன்னுயிர்க்காத் தத்தம் செய்து
    தருமநெறி தவறாத தன்மைக் காக
    இன்னுயிர்கள் மனங்குளிர இளங்கோ என்றே
    எதிர்கொள்ளும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

    பணம்படைத்த சிலபேர்கள் தனியே கூடிப்
    பட்டாளம் சுற்றிநின்று பாரா செய்ய
    மணம்படைத்தாம் வரவளிக்க மகிழ்ந்து போகும்
    மன்னரென்பார் எத்தனையோ பேர்கள் உண்டு ;
    குணம்படைத்துக் கருணைமிகும் கொள்கைக் காகக்
    கோடானு கோடிமக்கள் எங்கும் கூடிக்
    'கணம்பொறுங்கள்! கண்டாலும் போதும்' என்று
    களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

    எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி
    இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும்
    இச்சகத்தால் மதிமயங்கி இறுமாப் புற்ற
    இருள்மனத்தார் எத்தனையோ அரசர் கண்டோம் ;
    மெச்சுகின்ற பிறர்மொழியை மிகைசெய் யாமல்
    மெய்யறிவும் பொய்வெறுப்பும் துணையாய் மேவ
    அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள்
    ஆசைசெய்யும் அரசனெங்கள் ஜவஹர் லாலே.

    சேனைகளை முன்செலுத்திப் பின்னால் நின்று
    'ஜெயித்துவிட்டேன்!' என்றுசொல்லிச் செருக்கி லாழும்
    ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர்
    உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் ;
    தீனர்களின் துயர்துடைக்க முன்னால் நின்று
    தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக் காக
    மானமிகும் வீரரென எவரும் வாழ்த்த
    மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே.

    கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள்
    காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணிப்
    பஞ்சணையில் படுத்திருந்த படியே இந்தப்
    பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம் ;
    தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத்
    தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம்
    அஞ்சலென்ற மொழிகூறி ஆண்மை யூட்டும்
    அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

    ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி
    அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப்
    பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றி யேபோல்
    பிறர்நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு ;
    போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டிப்
    புதையல்வந்து கிடைத்ததுபோல் பூரிப் பெய்தித்
    தாயெதிர்ந்த குழந்தைகள்போல் ஜனங்கள் பார்க்கத்
    தாவிவரும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.

    ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி
    இந்திரியச் சொந்தசுகங் களுக்கே வீசிக்
    கோழையராய்ப் பிறர்உழைப்பில் கோலங் கொள்ளும்
    கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு ;
    வாழையைப்போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி
    வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக் காக
    வாழிஜவார் வாழிஜவார் வாழி யென்று
    வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.


    153. ஜவஹர் நினைவு

    நேருவை நினைத்தவுடன்
    நேர்மைக்குணம் என்னும்
    மேருவை நிகர்த்தஒளி
    மின்னிவரும் முன்னால்
    பாரிலுள்ள யாவரும்நம்
    பந்துஜன மென்றே
    கோரும்ஒரு மெய்யுணர்வின்
    கொள்கைவரும் அன்றோ?

    ஜவஹரை நினைத்தவுடன்
    ஜாதிநிற பேதம்
    அவனியில் அழிந்தொழிய
    ஆர்வம்நம தாகும்.
    நவநவ உணர்ச்சிகளின்
    நன்னெறியை ஊட்டும்
    நல்லதுணை வல்லனென
    நம்மறிவு காட்டும்.

    தீமையை எதிர்க்கும்ஒரு
    தீரனுளன் என்றும்
    வாய்மையை வளர்க்குமொரு
    வள்ளலிவன் என்றும்
    தூய்மைதவ றாத முறை
    சொல்வளவன் என்றும்
    சீமைதொறும் வாழ்த்துஜவ
    ஹர்அரிய சீலன்.

    சொந்தமுள தன்னுடைய
    சொத்துசுக மெல்லாம்
    வந்தநில மக்கள்சுக
    வாழ்வுபெற வென்றே
    தந்தைதர மைந்தனிவன்
    தானமெனத் தந்தான்
    எந்தமொழி எந்தக்கதை
    ஈடுசொல உண்டு?

    தன்னல மறுப்பினுயிர்
    தன்மையிது வென்ன
    இன்னல்களை இன்பமென
    ஏற்க ஒளிமின்னும்
    பொன்னில்மணி வைக்கஉயிர்
    பெற்றசிலை போலும்
    என்னசொலிப் போற்றிடுவோம்
    எம்ஜவஹர் லாலை!

    ஏழையின் மனக்குறைகள்
    இன்னவெனக் காட்டிக்
    கோழைகளைக் கண்டுகொதி
    கொண்டதுயர் கூட்டி
    ஊழ்வினையை வெல்லுமொரு
    ஓவியமும் ஆகும்
    வாழிஜவ ஹர்மகிபன்
    வாழிநெடுங் காலம்!

by Swathi   on 26 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
21-Feb-2016 09:27:02 இனியன் said : Report Abuse
1964 ; ம் ஆண்டுகளில் சிறுவர்பாடல்கள் தமிழ்பாடத்தில் இருந்தன... அதில் ராஜாதேசிங்கு பற்றிய பாடலும் ஒன்று..அதனை தெரிந்தவர்கள்..பதிவிட வேண்டுகிறேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.