|
|||||
சர்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயஸ்ரீ |
|||||
விளையாட்டுத்துறையில் எத்தனை விளையாட்டுகள் இருந்தாலும் பளு தூக்குதல் என்பது மிகவும் கடினமான ஒன்று. உடல் பலம் கொண்ட ஆண்களே பளு தூக்குதலில் திணறும்போது, அதில் ஈடுபடும் பெண்களின் சிரமம் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெயஸ்ரீ உள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேசப் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 320 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனது இரண்டு பிள்ளைகள், கணவர் எனக் குடும்பத்துடன் வசித்து வருகிறார் 39 வயதாகும் ஜெயஸ்ரீ. சிறுவயதிலேயே பளு தூக்குதலில் ஆர்வம் கொண்ட இவர், தனது பள்ளிப் பருவத்திலேயே தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2002-ம் ஆண்டிலேயே 190 கிலோ வரை தூக்கி வந்துள்ளார். ஆனால் வீட்டில், ஆண் பிள்ளைகளின் விளையாட்டு பெண் பிள்ளைக்கு எதற்கு? என விளையாட்டை நிறுத்தியுள்ளனர். மேலும் அவர் வாங்கிய பதக்கங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் வீட்டின் மேல் உள்ள பரணையில் தூக்கிப் போட்டுள்ளனர்.
தனது 19 வயதில் குடும்ப சம்மதத்தோடு காதல் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயஸ்ரீ. பின்னர் ஜெயஸ்ரீயின் தந்தை இறந்துள்ளார். அப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது இவரின் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அவரது கணவர் பார்த்துள்ளார். உடனே வந்து மீண்டும் விளையாடுகிறாயா எனத் தனது மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆன மூன்று பிரசவங்களும் அறுவை சிகிச்சை மூலமே நடைபெற்றுள்ளது.
எனவே பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டால், உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடும் என ஜெயஸ்ரீயின் அம்மா கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஜெயஸ்ரீயின் கணவர், என் மனைவியை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி பளு தூக்குதல் பயிற்சியில் ஜெயஸ்ரீயை சேர்த்துள்ளார்.
20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், 35 வயதில் ஒருவித பதற்றத்துடன் இருந்துள்ளார் ஜெயஸ்ரீ. ஆனாலும் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு 20 வயது பெண்ணுக்கு எதிரான போட்டியில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் பதக்கத்தைத் தவறவிட்டுள்ளார்.
பளு தூக்குதலில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் ஜெயஸ்ரீயே சொந்தமாக உடற்பயிற்சியகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். உடற்பயிற்சியகத்திற்கு உரிமையாளராக இருந்தாலும், பெட்ரோல் பங்கிலும் பணியாற்றி வந்துள்ளார். உடற்பயிற்சியகப் பொருட்கள் அனைத்தும் கடனிலேயே வாங்கியுள்ளதாகவும், மேலும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகவும் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்குச் செல்கிறாராம்.
காலை 4 மணிக்கு உடற்பயிற்சியகம், 7 மணிக்குக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்புதல் எனத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இதில் இடையில் இருக்கும் நேரத்தை வீணாக்காமல் வேலைக்குச் செல்கிறார். கணவர் உடற்பயிற்சியகத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறாராம்.
வறுமைக்காக முதலில் வேலைக்குச் செல்லவில்லை. காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால், இவ எப்படி வாழப்போறா எனக்கூறியவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற மன தைரியம்தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறியுள்ளார் ஜெயஸ்ரீ. அதனால் வறுமை தனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை எனவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். தான் இதுவரை உதவி என யாரிடமும் சென்று நின்றதில்லை எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேசப் பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட ஜெயஸ்ரீ, 320 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு அதில் முதலிடமும் பிடித்தார். முதலிடம் பிடித்த ஜெயஸ்ரீக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஜெயஸ்ரீ தங்கப்பதக்கம் வென்றது, தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பெண்கள் சமூகத்திற்குமே சொந்தமானது.
|
|||||
| by hemavathi on 12 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|