LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- தேவிபாரதி

பிறகொரு இரவு

யாரோ தன் அறையின் கதவைத் தள்ளித் திறப்பதை அவற்றின் மெல்லிய கிரீச்சிடலைக் கொண்டு அறிந்துகொண்டார் காந்தி. பிறகு மிகக் கவனமாக அடியெடுத்துவைத்து நெருங்கிவரும் பாதங்களின் அதிர்வுகள். கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவதைப் போலப் பாவனை செய்தார்.
தனிக்லால்தான் அது. பிர்லா மந்திரில் வாழும் ஜீவன்களிலேயே அதிக எச்சரிக்கை உணர்வுகொண்ட கிழவர்; காந்தியின் முதன்மைச் செயலாளர். செயலாளர் என்பதைவிடச் சீடன் எனச் சொல்லிக்கொள்வதில் அதிகப் பெருமை கொள்பவர். அவருக்குப் பணிவிடை செய்வதையே தேச சேவையாக நம்பிக்கொண்டிருப்பவர். மகாத்மாவின் அறைக்கு நேரெதிரே உள்ள அறையில் இருந்தபடி விடிய விடியத் தூங்காமல் அவரை ஓயாமல் கண்காணித்துக்கொண்டிருப்பதுதான் அவருடைய பணி. ஒரு இரவில் குறைந்தபட்சம் மூன்றுமுறையாவது காந்தியின் அறைக்குள் வந்து அவர் நன்றாக இருக்கிறாரா என நிச்சயப்படுத்திக்கொள்வார் தனிக்லால். அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு சிறு முனகல்கூட காந்தியைப் பெரும் பதற்றத்திற்குள்ளாக்கிவிடும். ஒருமுறை விளையாட்டாக அவரிடம் சொன்னார் காந்தி "இந்தக் கண்காணிப்பும் உறக்கமின்மையும் எதற்காக தனிக்லால்ஜி? நெருங்கிவரும் என் மரணத்தை நேரடியாகப் பார்க்கும் ஆசையோ?"
பாதி விளையாட்டாகவும் பாதி உண்மையாகவும். பதறிவிட்டார் தனிக்லால்.
"தங்களுக்கு மரணமென்பதில்லை பாபுஜி. இந்தத் தேசத்தின் எதிர்காலம் கருணை மிகுந்த தங்கள் கரங்களில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது."
பெருமூச்செறிந்தார் காந்தி.
"நான் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் செத்துப்போய்விடமாட்டேன் தனிக்லால்ஜி. என் கடமைகள் இன்னும் முடியவில்லை. என் போராட்டங்களும் மிக நீண்டவை. தேவைப்படும்வரை வாழும்படி சபிக்கப்பட்டிருப்பவன் நான். ஒருவேளை கடவுள் என்னை முன்கூட்டியே அழைத்துக்கொள்ளத் தீர்மானிப்பாரெனில் யாராலும் அந்தத் தருணத்தை முன்னுணர முடியாது. உங்களாலும்கூட. இருமலும் முனகலும் என் மரணத்தின் சமிக்ஞைகளாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. என் மரணம் சப்தங்களற்றதாகவே இருக்கும்! அநேகமாக ஒரு வசந்தகாலத்தின் அதிகாலைப் பொழுதில். அப்பொழுது எல்லாத் தாவரங்களும் பூக்கத் தொடங்கியிருக்கும். தில்லியின் மையத்தில் ஆயிரம் வருடங்களாக இருந்துவரும் மிக உயர்ந்த தேவதாரு மரத்தின் உச்சியில் வசிக்கும் சிறு பறவை முதலாவதாக விழித்துக்கொண்டு என் மரணத்தை உலகுக்கு அறிவிக்கும். தனிக்லால்ஜி, அப்பொழுது நீங்கள் உட்பட எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பீர்கள்! கவலைகளை விட்டுவிட்டுச் சற்றுத் தூங்குங்கள்."
ஆனால், தனிக்லாலால் ஒருபோதும் தூங்க முடிந்ததில்லை. அதிகாலையில் எழும்பொழுது அவர் தன் கட்டில் விளிம்பில் தலையைச் சாய்த்தவாறு உறங்கிக்கொண்டிருப்பதைக் காண்பார் காந்தி. அவர் விழித்துவிடக் கூடாதே என்பதற்காகத் துளியும் சப்தம் எழுப்பாமல் குளியலறைக்குள் போவார். அன்றைய கடிதங்களை எழுதி முடிக்கும்வரை ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பார் தனிக்லால். ஆனால் உள்ளுணர்வின் தூண்டுதலாலோ என்னவோ காந்தி நடைப்பயிற்சிக்காகக் கிளம்புவதற்குச் சற்று முன்பாக விழித்துக்கொண்டுவிடுவார். பிரார்த்தனைகளின்போதும் காந்தி தன் அறையில் விவாதங்களில் ஈடுபட்டிருக்கும் தருணங்களிலும் தனிக்லாலுக்குக் கண்கள் சொருகும். அதைக் காணும் மகாத்மாவின் மனம் எல்லையற்ற கருணையாலும் இரக்கத்தாலும் ததும்பும்.
ஆனால் ஓயாத இந்தக் கண்காணிப்புகள் தரும் பதற்றத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்திக்கொள்ளும் தன் ஆற்றல் குறைந்து வருகிறதோ எனச் சந்தேகித்தார் காந்தி. மனத்தைப் புண்படுத்தும்படியான சொற்களை உச்சரித்துவிடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பது குறித்த கவலைகளோடு அவரது பின்னிரவு நேரங்கள் உறக்கமின்றிக் கழிந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும்விடத் தனிக்லால் தன் அறைக்குள் பிரவேசிக்கும் தருணங்களில் அவரது கேள்விகளின் குடைச்சல்களிலிருந்து தப்புவதற்காகத் தூங்குவதைப் போல் பாவனைசெய்ய நேர்வது குறித்தே அதிகம் வருந்தினார் காந்தி. தனிக்லாலைக் காணும்பொழுது அவரது கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன. இதைக் குறித்து ஆழ்ந்து பரிசீலிக்கவும் செய்தார். இந்த வெறுப்பு தனிக்லாலின் மீதானது மட்டுமன்று. நேருவின் மீதானது; பட்டேலின் மீதானது; மனப்பிறழ்வுகளுக்குள்ளானவர்களைப் போல் கலவரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எல்லோரது மீதானதுமாகும். உண்மையில் இது சுய வெறுப்பின் அடையாளமும் கூடத்தான்.
தனிக்லாலின் காலடியோசை தன்னை நெருங்கியதும் விழித்துக்கொண்டார் காந்தி.
"நீங்கள் இன்னும் தூங்கவில்லையா தனிக்லால்ஜி? நள்ளிரவு நேரத்தில் எதற்காக இப்படி நடமாடிக்கொண்டிருக்கிறீர்கள்? என் பொருட்டு நீங்கள் இப்படி உங்களைத் துன்புறுத்திக் கொள்ளாதீர்கள் எனப் பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் என்னைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்! தீராத துயரத்தில் மூழ்கியிருக்கும் நம் மக்களுக்கு எதாவது செய்வதே நம் இப்போதைய பணி. எனக்குப் பணிவிடைசெய்வதைக் காட்டிலும் அது எவ்வளவோ மேலானது தனிக்லால்ஜி"
"என்னை மன்னியுங்கள் பாபுஜி! பனி மிக அதிகமாக இருந்ததால் இங்கு வந்தேன். நீங்கள் இந்தக் கதரைப் போர்த்திக்கொள்ளலாம் அல்லவா?" எனக் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு கனத்த போர்வையை அவருக்குப் போர்த்திவிட்டார்.
போர்வையை விலக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தார் காந்தி.
"தூக்கமே வரவில்லை. எல்லோரும் வீணாக என்னைத் தடுத்துவைத்திருக்கிறீர்கள். இன்று முழுவதும் பயனுள்ள ஒரு காரியத்தையும் செய்யவில்லை. சந்திப்புகள், உரையாடல்கள், பேட்டிகள் எனச் சலித்துப்போய்விட்டது. தொண்டர்களுடன் இணைந்து முகாம்களில் வசிக்கும் எளிய மனிதர்களுக்காகப் போர்வைகளைச் சேகரிக்கப் போயிருக்கலாம். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் சொல்ல முடியாத துயரில் மூழ்கிக் கிடக்கும்பொழுது நான் இங்கே ஒரு பாதுஷாவைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.''
"தொண்டர்கள் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கிறார்கள் பாபுஜி, நீங்கள் வருந்த வேண்டாம். அகதிகளுக்கு இன்று மட்டும் நூற்றுக்கணக்கான போர்வைகளும் கம்பளிகளும் விநியோகிக்கப்பட்டன."
"ஒரு நல்ல தகவலைச் சொன்னதற்காக உங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் அவை சமமாக வழங்கப்பட்டிருக்கின்றன அல்லவா?"
"ஆமாம், பாபுஜி எல்லா முகாம்களுக்கும் சமமாகவே வழங்கப்பட்டன"
காந்தி புன்னகைத்தார். "மக்கள் மனமுவந்து உதவுகிறார்கள் அல்லவா? கேட்பதற்கே நிறைவாக இருக்கிறது. கடவுள் கருணை மிகுந்தவர் என நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன்.'' ஓயாது அலைக்கழிக்கும் கலவரங்களால் வெதும்பிக்கிடந்த அவர் மனத்தில் நம்பிக்கையின் ஒளிபடரத் தொடங்கியது. அண்மையில் தான் மேற்கொண்ட உண்ணா நோன்பு வீணாகிவிடவில்லை. சோர்விலிருந்தும் உறக்கமின்மையின் களைப்பிலிருந்தும் விடுபட்டவராக எழுந்தார், "தனிக்லால்ஜி, கொஞ்சம் வெந்நீர் குடிக்கிறீர்களா? நாம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமே" என்றவாறு சமையலறையை நோக்கி நடந்தார் மகாத்மா. தனிக்லால் பதற்றத்துடன் பின்தொடர்ந்துபோய் அவருக்கு உதவ முற்பட்டார், "சரி, எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள். அவற்றைக் கேட்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்."
தனிக்லாலை உற்சாகம் தொற்றிக்கொண்டது. அன்றைய நிகழ்வுகளில் மகாத்மாவுக்குச் சந்தோஷமளிக்கக்கூடியது எனத் தான் கருதிய ஒவ்வொன்றையும் மிக விரிவாக எடுத்துரைக்க முற்பட்டார். துர்க்மான் கேட்டிலும் சாந்தினிச் சௌக்கிலும் இருந்த முகாம்களில் இருந்த அகதிகள் தொண்டர்களைக் கண்டதும் எவ்வளவு உற்சாகமடைந்தார்கள் என்பதை விவரித்தார்.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அங்குப் போயிருந்த மகாத்மா அவர்களுடைய வாழ்வின் இழிநிலையை நேரில் பார்த்திருந்தார். துர்க்மான் கேட்டில் ஏராளமான சிறுமிகள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். அவரைச் சந்தித்த பன்னிரண்டே வயதான ஒரு இஸ்லாமியச் சிறுமியை அவரால் மறக்கவே முடியவில்லை. கண் முன்னால் தன் பெற்றோர் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதையை அவள் மகாத்மாவுக்குச் சொல்லியிருந்தாள். கலவரக்காரர்கள் நள்ளிரவில் அவர்களது குடியிருப்புகளைச் சூழ்ந்துகொண்டார்களாம். சத்யாக்கிரஹியான அவளுடைய தந்தை குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களது பாதங்களில் விழுந்து தம் மக்கள்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினாராம். ஆயுதமேந்திய அக்கொடியவர்களுக்கு முன்னால் தன் இரு கைகளையும் கூப்பிநின்ற தந்தையின் முகத்தைத் தன்னால் மறக்கவே முடியவில்லை என்றாள் அந்தச் சிறுமி. பிறகு அவர்கள் கும்பிட்டு நின்ற அவருடைய கைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டினார்கள்.
தாய் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட முயன்றாள். அவசர அவசரமாக அவளுடைய நெற்றியில் குங்குமத்஬த் தீற்றினாள். 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிடும்படி யோசனை சொன்னாளாம். அப்படிச் செய்தால் கலவரக்காரர்கள் அவளை விட்டுவிடுவார்கள், அதன் பிறகு தப்பித்து எங்காவது போய்ப் பிழைத்துக்கொள் என்றாள் தாய். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். மாறாக 'அல்லாஹு அக்பர்' என்பதே அவர்களிடம் அவள் சொன்னது,
"அவர்கள் உன்னை விட்டுவிட்டார்களா?"
"அவர்களுக்கு என் உடல் தேவையாக இருந்தது. என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். ஒன்பது நாள்கள்வரை தம் வாகனத்திலேயே அடைத்துவைத்து என் உடலைச் சூறையாடினார்கள். நான் இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவோரம் வீசிவிட்டுப்போய்விட்டனர். பிறகு நானாக இந்த முகாமுக்கு வந்தேன். அப்பொழுது எனக்கு எந்த அடையாளமும் இருக்கவில்லை. என்னைப் போன்ற பல சிறுமிகளை நான் சந்தித்தேன். எல்லோரும் ஒரே மாதிரிதான் தென்பட்டோ ம். குருதி கசியும் ஒரேவிதமான மனங்கள். என் பெயர்கூட எனக்கு மறந்துபோயிருந்தது."
"அந்தக் குழந்தையைச் சந்தித்தீர்களா? தனிக்லால்ஜி" எனக் கேட்டதும் அவர் தடுமாறினார். ஞாபகங்களை மீட்டுக் கொள்வதற்கு முயன்றதைப் பார்த்ததும் எங்கே அவர் பொய் சொல்லிவிடுவாரோ என்னும் பதற்றம் ஏற்பட்டது காந்திக்கு. "சரி, நீங்கள் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள், எனக்கு மிகக் களைப்பாக இருக்கிறது'' என அவசர அவசரமாக விடைகொடுத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தார். கிளம்புவதற்குத் தயாரான தனிக்லாலின் முகத்தில் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது, 'எதை நினைத்துக்கொண்டீர்கள் தனிக்லால்ஜி?"
"மன்னித்துக்கொள்ளுங்கள் பாபுஜி, என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அடக் கடவுளே... எப்பபடிப்பட்ட ஆள் இந்தப் பகவதிசரண். வியந்துபோய்விட்டேன். அப்படியே அச்சு அசலாக அல்லவா இருந்தான். இப்படியும் நடக்குமா என்ன? நல்ல ஆள் இந்தப் பகவதிசரண்." என வயிறு குலுங்கச் சிரித்தார்.
மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் காந்தி. பிறகு இருண்டு அடங்கியது தனிக்லாலின் முகம். சிரசைக் கவிழ்த்து முழங்கால்களுக்குள் புதைத்துக்கொண்டு ஒரு கதைபோல எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்அவர்.
"அவரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அந்த இளம் வங்காளி உங்கள் சீடர். உங்களைப் பார்ப்பதற்காகவே தில்லிக்கு வந்தவர். கல்கத்தாவில் அவர் புரிந்த சேவைகளைப் பலரும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். இளைஞர். அநேகமாகத் தன் முப்பதுகளின் இறுதியில் இருக்கக்கூடும். நாள்தோறும் மொட்டையடித்துக்கொள்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அந்த மீசையும் புருவங்களும் ..." சொல்லச் சொல்லச் சிரிப்புப் பொங்கியது தனிக்லாலுக்கு.
"கேளுங்கள் பாபுஜி. நேற்று நாங்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தோம். யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை. மிகவும் வசதிபடைத்த குஜராத்திகளும்கூட. மாளிகைகளின் வாசல்களில் நாங்கள் இசைத்த பாடல்கள் யாருடைய இதயத்தையும் தொடவில்லை. பிற்பகல்வரை சில கந்தல்களை மட்டுமே திரட்ட முடிந்திருந்தது. நாங்கள் மிகச் சோர்ந்துபோனோம். கலவரத்தால் பாதிப்புக்குள்ளாகி முகாம்களில் அவதிப்படும் எளியவர்களுக்குக் கருணை காட்டுமாறு மன்றாடி நின்றோம். யாருமே இரக்கம் காட்டவில்லை, பாபுஜி. பரம ஏழையாகத் தென்பட்ட ஒரு முதியவன் தன் மேலாடையைத் தந்தான். நாங்கள் கேட்காத போதிலும் வலிய முன்வந்து அவன் அந்த உதவியைச் செய்தான். அது ஒரு மகத்தான தருணம். அந்தத் தருணத்தில்தான் நாங்கள் எங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துக்கொண்டோ ம் பாபுஜி."
"ஆமாம், மகத்தான தருணம்தான் அது. அந்தக் கந்தல்தான் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் என்பதற்கான அடையாளம். இல்லையா தனிக்லால்ஜி?" என உவகையோடு குறுக்கிட்டார் மகாத்மா. அதைப் பொருட்படுத்தும் மனநிலை தனிக்லாலுக்கு இல்லை. தன் கதையின் பரபரப்பான ஒரு கட்டத்தை நெருங்கும் பதற்றம் அவர் முகத்தில் தென்பட்டது.
"பிறகு அவர் சிலுவைக் குறியிட்டுக்கொண்டதை நாங்கள் பார்த்தோம். எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்ன நன்றியைப் பொருட்படுத்தாமல் இயேசுவைக் குறித்த தோத்திரம் ஒன்றை முணுமுணுத்துக்கொண்டே அவன் சென்றுவிட்டான். நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பனிக்கால வெயில் எங்கள் முகங்களை எரித்தது. முந்தையதைவிடவும் கொடுமையாக இருந்தது அந்தப் பயணம். யாருமே எங்களைப் பொருட்படுத்தவில்லை. பிறகு நடந்தவைதான் நம்பவே முடியாதவையாக இருந்தன, பாபுஜி. கேளுங்கள் இதை! அப்பொழுது நாங்கள் தில்லியின் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்தோம். வேடிக்கை பார்ப்பதற்காகப் பலர் எங்களைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். ரகுபதி ராகவ ராஜாராம் என்னும் பிரார்த்தனை கீதத்தை இசைத்தபடி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களுக்குப் பின்னால் கேட்ட 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்னும் பெருத்த ஆரவாரத்தைக் கேட்டு ஆச்சரியமுற்றவர்களாக நாங்கள் திரும்பிப் பார்த்தோம். கடவுளே, இன்னும்கூட அந்தக் காட்சியை எங்களால் நம்ப முடியவில்லை. கிறித்துவைப் போல எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார் அவர்! மகாத்மா! எங்களில் யாருக்குமே அவரை அடையாளம் காண முடியவில்லை. அச்சு அசல் உங்களைப் போலவே தென்பட்டார். தீராத ஆச்சரியத்துடன் 'பாபுஜி' என எல்லோரும் அவரை வணங்கினோம். மிகக் கருணையுடன் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே குழுமியிருந்த மக்களுக்குத் தன் வந்தனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தார். மக்கள் அவரை வேட்கையுடன் நெருங்கினார்கள். அவர் போர்த்தியிருந்த தூய வெண்ணிறக் கதராடையையும் அவரது மெலிந்த கரங்களையும் தீண்டிப்பார்த்துத் தாளாத சந்தோஷமுற்றதை நான் பார்த்தேன். பிறகு எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்க முற்பட்டார்கள். வீடுகளினுள்ளிருந்தும் சந்துகளிலிருந்தும் ஓடோ டியும் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.''
குழப்பத்தோடும் வியப்போடும் தனிக்லால் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி. குறுக்கிட்டு ஏதோ கேட்கவும்கூட முயன்றார். ஆனால் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் விவரித்துக் கொண்டிருந்த தனிக்லாலின் கவனத்தை அவரால் தன் பக்கம் ஈர்க்க முடியவில்லை.
"பிறகு அவர் கூட்டத்தினரிடையே உரையாற்றத் தொடங்கினார். உங்களுடையதைப் போன்றே மிகச் சன்னமான, உறுதியான அந்தக் குரல், கொடுமைகளுக்குள்ளாகித் துரத்தப்பட்டு அடைக்கலம் புகுந்திருப்பவர்களுக்கு உதவுமாறு எல்லோரையும் வற்புறுத்தியது. வாழ்வின் அறம் குறித்து நீங்கள் சொல்லியிருந்த அதே வாக்கியங்களை உங்களுடைய குரலிலேயே திருப்பிச் சொன்னார் அந்த மனிதர்! நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், நம் பொறுப்புகள், பதற்றமான தருணங்களில் வெளிப்பட வேண்டிய விவேகம், நெருக்கடியான தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய பொறுமை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயல்படவேண்டிய குற்ற உணர்வு என உங்களின் உன்னதமான எல்லா வாக்கியங் களையும் அப்படியே திருப்பிச் சொன்னார் அவர்! தொனி மாறாமல் அச்சு அசல் அப்படியே...! கீதோபதேசம் எனவோ கிறித்துவின் மலைப் பிரசங்கம் எனவோ நான் அதைக் கற்பனை செய்துகொண்டேன். நம்பவே முடியாமல் எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள் மக்கள். எல்லோரும் மந்திரத்திற்குக் கட்டுண்டதுபோல் தம்மிடம் உள்ளவற்றிலேயே சிறந்தவையெனக் கருதத்தக்க போர்வைகளையும் கம்பளிகளையும் கொண்டுவந்து அவரது பாதங்களுக்குக் கீழே குவிக்கத் தொடங்கினர். அவரோ மாறாத புன்னகையுடன் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார்!"
மிகச் சோர்ந்துபோயிருந்தார் தனிக்லால். எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிடும் வேகம் அவரைப் பேசவைத்துக்கொண்டிருந்தது.
"அதற்கு மேல் எனக்குப் பொறுமை இருக்கவில்லை. முண்டியடித்துக்கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கி மிகச் சிரமப்பட்டு நான் அவரை நெருங்கினேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் பாபுஜி! நான் அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். அவருக்கு மிக அருகில் நெருங்கி நின்றுகொண்டு 'நீங்கள் பகவதிசரண் அல்லவா?' என அவரது செவிகளுக்குள் கிசுகிசுத்தேன். பதில் சொல்லாமல் மிகச்சாந்தமாகப் புன்னகைத்தார் அவர். பாபுஜி, அச்சு அசல் தங்களுடையதே போன்ற புன்னகை அது!"
mmm
பேரமைதியுடன் விளங்கிற்று மாளிகை. நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்தது. பனியின் கடுமையும் தீவிரமடைந்திருந்தது.
மிகக் களைப்பாக இருந்தார் காந்தி; படுத்துக்கொள்ள விரும்பினார். சற்று நேரமாவது உறங்க வேண்டும். இன்னும் நடக்கலாமா எனவும் நினைத்தார். எண்ணற்ற விஷயங்களைக் குறித்து யோசிக்க வேண்டியிருந்தது. முடிவேயில்லாமல் நடைபெற்றிருந்த அன்றைய விவாதங்கள் அவரைச் சோர்வடையச் செய்திருந்தன. எல்லாமே கைமீறிப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றியது காந்திக்கு. சிறிதளவு நம்பிக்கையும் மீந்திருந்தது. எல்லாவற்றுக்கும் எதாவதொரு தீர்வு இருக்கக்கூடும். அன்றைய முற்பகலில் பட்டேலுடன் விவாதித்துக்கொண்டிருந்தபொழுது அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. "நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சர்தார்?" என இருக்கையிலிருந்து எழுந்து நின்றுவிட்டார் மகாத்மா. அந்தச் சமயத்தில் தன் உடல் எப்படி நடுங்கியது என்பதையும் முகம் எப்படி வியர்த்துக்கொட்டியது என்பதையும் அருவருப்புடன் நினைவுகூர்ந்தார்.
பயந்துபோய்விட்டார் அந்த இரும்பு மனிதர். விளக்க மளிப்பதற்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதற்கும் முற்பட்டார்.
"பாபுஜி, நாம் இவற்றைப் பற்றி மறுபடியும்கூட விவாதிக்க முடியும் என நம்புகிறேன். தங்களிடமிருந்து மறைப்பதற்கு உண்மையிலேயே எங்களிடம் எதுவுமில்லை" என்றார் பட்டேல். அவர் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. எழுந்து நின்று தன் கைக்கடிகாரத்தை அப்பொழுதுதான் அதை முதல்முறையாகப் பார்ப்பவரைப் போலத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தார். பார்த்தபடியே பேசவும் தொடங்கியிருந்தார். அவருடைய செயலாளர், தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் கோப்புகளிலிருந்து பிரித்தெடுத்து உடனுக்குடன் அமைச்சரிடம் தந்துகொண்டிருந்தார். அவசரத்தின் காரணமாக ஓரிரு தாள்களைப் பிய்த்தெடுக்கவும் நேரிட்டது. செயலாளரின் அந்தச் செய்கை காந்தியின் மனத்தில் பெரும் துக்கத்தை மூளச்செய்தது. ஒரு குழந்தையின் கரத்தை அதன் உடலிலிருந்து பிய்த்தெடுப்பதைப் போன்ற ஒரு கற்பனையை அது அவருக்குத் தூண்டியது. அதைப் பற்றிப் பட்டேலிடம் சொல்லவும் செய்தார். அதைத் தொடராமலிருக்கும்படியும் கேட்டுக்கொண்டார், "தாள்களை மென்மையாகக் கையாள்வதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளனவே?" என மகாத்மா கூறியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பட்டேல்.
செயலாளரிடமிருந்து அந்தக் கோப்புகளை வாங்கி மிக மென்மையாகத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார் பட்டேல். ஆனால் விளக்கமளிக்கத் தொடங்கிய பொழுது அவரால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. சில நிமிடங்களில் செயலாளரைவிடவும் அதிக வேகத்துடன் தாள்களைப் பிய்த்தெடுக்கத் தொடங்கி யிருந்தார் அந்த இரும்பு மனிதர்.
"நேரமாகிக்கொண்டிருக்கிறதே...!" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல முணுமுணுத்தபடி அவற்றை மகாத்மாவின் முகத்துக்கெதிராக விரித்துப் பிடித்து முக்கிய மான வரிகளின் மீது தன் சதைப்பற்று மிகுந்த ஆட்காட்டி விரலை ஓடவிட்டும் சில சொற்றொடர்களை உரத்த குரலில் வாசித்துக் காண்பித்தும் தன் கூற்றுகளுக்கு வலுவூட்ட முயன்று கொண்டிருந்தார் பட்டேல்.
பணிவையும் நிதானத்தையும் கடைபிடிப்பதற்கு ஓயாமல் முயற்சித்தார். எனினும் அவ்வப்பொழுது அவர் குரல் உயர்ந்தது. ஒவ்வொரு முறையும் காந்தியிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதைத் தவிர அவரால் வேறெதுவும் செய்யமுடியவில்லை.
சற்று நேரத்திற்குள் மேலும் சில செயலாளர்களும் பல உதவியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவரும் தம்முடன் எண்ணற்ற கோப்புகளைக் கொண்டுவந்திருந்ததைப் பார்த்தார் மகாத்மா. நம்பவே முடியாத ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோ டும் காட்சியளித்த அவர்கள் யாரும் யாருட னும் ஒருவார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை; யாரும் யாரையும் பார்த்துக்கொள்ளவுமில்லை. எனினும் அவர் களிடம் மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பு நிலவியதைக் கவனித்தார் காந்தி. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் பணியாளர்களிடம் காணப்படும் பதற்றங்களும் தயக்கங்களும் துளிகூட அவர்கள் யாரிடமும் தென்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் தோற்றத்திலும் வயதிலும் பட்டேலை மிகவும் ஒத்திருந்தனர். அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே ஆங்கிலப் பாணியிலான கோட்டுகளும் கழுத்துப்பட்டி களும் அணிந்திருந்தனர், "கதராடைகளையே உடுத்துமாறு நம் அரசு ஊழியர்களிடம் நீங்கள் கேட்டுக்கொள்ள வில்லையா?" எனக் கேட்டதற்கு ஒரு பெண்ணைப் போல வெட்கப்பட்டுக்கொண்டார் பட்டேல்.
பிறகு தன் விளக்கங்களைத் தொடர்ந்தார்.
கடைசியில், "நீங்களே இவற்றுக்கொரு தீர்வு சொல்லுங்கள் பாபுஜி. நடைமுறையில் செயல்படுத்தத்தக்க ஒரு தீர்வினைச் சொல்லுங்கள். உடனடியாகச் செயலில் இறங்குவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று கிட்டத்தட்ட மன்றாடினார் பட்டேல், "எங்களுக்கு வேறு வழியே இல்லை பாபுஜி! இவை தவிர்க்க முடியாதவை. வேண்டுமானால் என் பொறுப்புகளை வேறொருவருக்குக் கொடுக்கலாம். ஆனால், அந்த வேறொருவருக்கும் இவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும்".
"தவிர்க்க முடியாதவை, வேறு வழியற்றவை . . . நல்ல சொற்றொடர்கள்!" எனத் தன் அறையின் இருளுக்குள் தனித்துவிடப்பட்டிருந்த காந்தி முணுமுணுத்துக்கொண்டார். முந்தைய இரவு, விடைபெறும்பொழுது தனிக்லாலும் அதே சொற்றொடர்களைத்தான் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அந்தச் சொற்றொடர்களும் அந்த 'வேடிக்கை'யான கதையை அவர் விவரித்த விதமும் அவரது நினைவுக்குவந்தன. தனிக்லாலின் குரலும் முகபாவங்களும் முடிவாக அவரிடமிருந்து பீறிட்டுவந்த சிரிப்பும் குலுங்கும் வயிறும் அப்படியே அவர் மனக்கண் முன் தோன்றின. 'மகாத்மா' பகவதிசரணின் அத்தோற்றமும்கூட அவரது கற்பனையில் தோன்றிற்று.
அச்சு அசல் தன்னைப் போலவே தோற்றமளிக்கிற இளம் வங்காளி. எவ்வளவு நுட்பமாகப் பகவதிசரணைப் பற்றி வர்ணித்தார் தனிக்லால்! அவர் வர்ணித்த விதத்தில் இதுவரை பார்த்தறியாத அந்த மனிதரை மகாத்மாவால் துல்லியமாகக் கற்பனை செய்ய முடிந்திருந்தது. அவரது மென்மையான குரலையும் கனிவான புன்னகையையும் சாந்தமான பார்வையையும் தவிர அந்த இளைஞனின் வயிற்றில் தென்படும் சுருக்கங்களையுங்கூடத் தன் கற்பனையில் கண்டார் காந்தி.
இதோ மக்கள் பகவதிசரணைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; வாழ்த்துகிறார்கள்; முழக்கங்கள் எழுப்புகிறார்கள், "மகாத்மா காந்திக்கு ஜே! மகாத்மா காந்திக்கு ஜே!" மகாத்மா பகவதிசரண் அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். கூட்டம் பரவசமடைகிறது. ஆர்ப்பரிக்கிறது, கத்துகிறது, கண்ணீர் பெருக்குகிறது. மகாத்மா அவர்களிடையே உரையாற்றுகிறார், அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார், கட்டளையிடுகிறார். பலரும் அவரை நோக்கி ஓடுகிறார்கள், தொட்டுப் பார்க்கிறார்கள். ஒரு மனிதன் அவருடைய மேலாடையைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான். அவர் அவனை அழைத்து அவனுக்குத் தன் உள்ளாடையையும் வழங்குகிறார். இப்பொழுது அவர் அனைவரின் முன்பாகவும் முழுநிர்வாணமாக நிற்கிறார், "ஆண்டவரே, அழகிய இத்தோட்டத்தினுள் என்னை ஏன் நிர்வாணமாக அலையவிட்டிருக்கிறீர்?" அவர் வெட்கமடைகிறார். அவர்களிடமிருந்து தப்ப முற்பட்டு ஓடுகிறார். எல்லோரும் அவரைத் துரத்துகிறார்கள். ஒருவன் அவருடைய மீசை ரோமங்களைப் பிய்த்தெடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்கிறான். மற்றொருவன் அவரது விரல் நகங்களைப் பெயர்த்துக்கொண்டு ஓடுகிறான். இன்னொருவனோ மகாத்மாவின் பற்களைப் பிடுங்க யத்தனிக்கிறான்.
மகாத்மாவுக்கு வலி பொறுக்க முடியவில்லை. அவர் 'அய்யோ' என ஓலமிடுகிறார். அபயக்குரல் எழுப்புகிறார். தொலைவில் நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் வெகு நிதானமாக அவரை நோக்கி நடந்துவருகிறான். "எதற்காக இப்படிக் கத்துகிறாய்?" எனக் கேட்டுக்கொண்டே அவரது இடது கன்னத்தில் ஓங்கி அறைகிறான். மகாத்மா அவனுக்குத் தன் வலது கன்னத்தைக் காட்டுகிறார். அவன் அவருடைய வலது கன்னத்திலும்கூட அறைகிறான். அவர் தன் இரு கன்னங்களையும் மாறிமாறி அவனுக்குக் காண்பிக்கிறார். அவனும் சளைக்காமல் அடிக்கிறான். குருதி தெறிக்கிறது. அவருடைய பொக்கை வாயில் எஞ்சியிருந்த சில பற்களும் விழுந்துவிடுகின்றன, விழிக்கோளங்களிரண்டும் தெறித்து விழுகின்றன. அவற்றைச் சேகரிப்பதற்காக முண்டியடிக்கிறது மக்கள் கூட்டம். அவருக்குப் பார்வை இருண்டது. எங்கும் ஒரே இருள்; காரிருள், "நான் மகாத்மா காந்தி அல்ல. சரண், பகவதிசரண் என்னும் வங்காளி!" அனிச்சையாகக் கண்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார் மகாத்மா.
அவருக்கு மூச்சிரைத்தது. மிகக் களைத்துப்போனவராகப் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.
பிறகு கண்களைத் திறந்து பார்த்தபொழுது அறை பிரகாசமாக இருந்தது. சீரற்ற ஒளிக்கற்றைகள் தன் அறையினுள் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காந்தி. விடிந்துவிட்டதோ? வெகு காலத்திய வழக்கத்திற்கு மாறாக இன்று நெடுநேரம் தூங்கிவிட்டோ மோ? அப்படியானால் மரணம் நெருங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி முதுமையை ஒப்புக்கொண்டுவிட வேண்டியதுதான். எழுபத்தெட்டு வயது ஆகிவிட்டதல்லவா! புன்னகைத்துக்கொண்டார் மகாத்மா.
தனிக்லாலை எங்கே? மனுவையும் காணவில்லையே? அந்தச் சிறுமி அவருக்கு முன்பாகவே எழுந்துவிடக் கூடியவளாயிற்றே?
படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களைத் தொடங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தருணத்தில் எங்கோ பதற்றம்கொண்ட குரல்கள் ஒலிப்பதைக் கேட்டார் காந்தி. என்னவாக இருக்கும் என யோசித்தபடியே ஜன்னலொன்றின் தாளை நீக்கிப் பார்த்தவர் அதிர்ச்சியால் உறைந்துவிட்டார். நெடிதுயர்ந்த அம்மாளிகைக்கு வெளியே, சிறிது தூரத்திற்கப்பால் பற்றியெரிந்துகொண்டிருந்தது தில்லி.
நாலாப்புறங்களிலும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர் மக்கள். மிகக் கொடிய ஆயுதங்களுடன் தென்பட்ட பத்துப் பதினைந்து பேர் கொண்ட ஒரு கும்பல் தீராத கொலைவெறியோடு அவர்களை விரட்டிச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தார் காந்தி. தாள முடியாத வேதனையுடன் கண்களை இறுக மூடிக்கொண்டார். எல்லா நம்பிக்கைகளையும் இழந்தவராக அங்கிருந்த ஒரு மர நாற்காலியில் சரிந்து விழுந்தார்.
எங்கே தவறு நிகழ்ந்தது?
யார் பொறுப்பாளி? இந்துக்களா? இஸ்லாமியர்களா? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் பலியாகப் போகிறார்கள்? யார் மிஞ்சுவார்கள்? எந்தக் கணக்கைச் சரி செய்வதற்காக இந்த வெறித்தனம்? ஆயிரமாண்டுகளின் வரலாறுதான் தவறிழைத்ததா? அதைத் தாண்டி வெகுதூரம் வந்தாகிவிட்டதே! ஆயுதமெடுக்காமல் தம் ஆன்ம பலத்தால் சுதந்திரத்தை வென்றெடுத்தவர்கள் என உலகம் நம்மைக் கொண்டாடிக்கொண்டிருக்கிற தருணத்தில் மூண்டெழுந்துள்ள இவ்வன்முறைகளுக்கு யார் பொறுப்பு? நானேதானா? ஒரு தத்துவவாதியாக நான் உண்மையைப் புறக்கணித்துவிட்டேனோ? அவரவர் வழியில் விட்டிருந்தால் தீர்வு எட்டப்பட்டிருக்குமோ? கொலைகள் அமைதியைக் கொண்டு வந்திருக்குமா? ஒருவகையில் அது சாத்தியமாகியிருந்திருக்கும்தான். மற்றவர்களை முற்றாக அழித்தொழித்துவிட்டால் அமைதிக்கென்ன குறைச்சல்? பிறகு உள்ளுறையும் ரத்தவெறியைச் சொந்தச் சகோதரன் மீதே அல்லவா பிரயோகிக்க வேண்டியிருக்கும்? வன்முறை மனித இயல்போ? இயற்கை நியதிக்கெதிரானதோ சத்யாக்கிரஹம்? எந்தத் தத்துவத்தை நம்பி இம்மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டோ மோ அந்தத் தத்துவமே பிழையானதோ? இன்றளவும் அறத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் எவ்வளவு வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன! அவற்றின் மீது தீர்ப்பளிக்கும் அருகதை எனக்கோ என்னையொத்த மற்ற சத்யாக்கிரஹிகளுக்கோ உள்ளதா? அப்படியானால் நம் அரசாங்கம் தன் சொந்த மக்களின் மீது பிரயோகிக்கிற வன்முறைகளைக் குறித்தும் நான் பேசியாக வேண்டுமே? கலவரங்களை ஒடுக்குவது என்னும் பெயரால், அமைதியை நிலைநாட்டுவது என்னும் பெயரால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்வது என்னும் பெயரால் மேற்கொள்ளப் பட்டுவரும் சட்டபூர்வமான வன்முறைகளைக் குறித்து அமைதியாய் இருப்பவன் தன்னை ஒரு சத்யாக்கிரஹி என அழைத்துக்கொள்வதற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவன்.
கடவுளே, ஒரு சத்யாக்கிரஹியாக நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
"தனிக்லால்ஜி, எங்கே போய்விட்டீர்கள்? மனுவையும் எழுப்புங்கள். பதற்றம் நிறைந்த இத்தருணத்தில் உங்களில் யாரையும் காண முடியவில்லையே?" எனக் கூவிக்கொண்டே எழுந்து கதவைத் திறக்க முற்பட்டார் காந்தி. அவரால் அதைத் திறக்க முடியவில்லை. யாரோ அவரது அறையை வெளிப்புறமாகத் தாளிட்டிருந்தார்கள்.
"எங்கே போய்விட்டீர்கள் தனிக்லால்ஜி...? யார் இதைச் செய்தது?"
அறையின் வலப்புற ஜன்னலைத் திறந்து அதன் வழியாக மாளிகையின் பிரதான நுழைவாயிலைப் பார்த்தவருக்குக் குருதி உறைந்துவிட்டது. அதன் மிகப்பெரிய இரும்புக் கதவின் மறுபுறத்தில் எண்ணற்ற மனிதர்கள் குழுமியிருந்தனர். தாக்குதலுக்குள்ளாகிக் குற்றுயிராய்த் தப்பிவந்த நூற்றுக் கணக்கான ஏழைகள்.
"பாபுஜி... பாபுஜி..."
"எங்களைக் காப்பாற்றுங்கள் பாபுஜி..."
"அய்யோ..."
"பாபுஜி இங்கிருக்கும்பொழுது நாம் எதற்காகக் கலங்க வேண்டும்? காவலர்களே தயவுசெய்து பாபுஜியை அழையுங்கள்."
"மூடனே, கதவைத் திற... பிறகு பாபு உங்களை மன்னிக்கவேமாட்டார்"
மீண்டும் கதவை நோக்கி ஓடினார் காந்தி.
"தனிக்லால்... யாரங்கே? இந்தக் கதவை எதற்காகப் பூட்டினீர்கள்? தயவுசெய்து இதைத் திறந்துவிடுங்கள். அவர்கள் அனைவரையும் உள்ளே அழையுங்கள்...! என்மீது தீராத பழியைச் சுமத்திவிடாதீர்கள்...! தனிக்லால், யாரங்கே?"
மீண்டும் திறந்திருந்த ஜன்னலை நோக்கி ஓடினார்.
வாயிலருகே விறைப்பாக நின்றுகொண்டிருந்த காவலர்கள் இருவரும் அபயம் கோரி வாயிலில் திரண்டிருந்தவர்களைப் பார்த்து அலட்சியமாக எதையோ சொல்வதையும் கைவிடப்பட்ட அந்த மக்கள் பெருங்குரலெடுத்துக் கதறுவதையும் அங்கிருந்தபடியே பார்த்தார் காந்தி.
தீவட்டிகளோடும் கொடிய ஆயுதங்களோடும் துரத்திவந்திருந்த கலவரக்காரர்கள் நிராயுதபாணிகளான அந்த அப்பாவிகளை இரக்கமே இல்லாமல் வெட்டிக் கொன்றதையும் ரத்தவெள்ளத்தினூடாகவும் சிதறிக் கிடந்த உடல்களினூடாகவும் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதையும் ஜன்னல் கம்பிகளைப் பற்றி, அவற்றின் மீது தன் முகத்தைத் தாங்கிக்கொண்டு ஒரு சடலமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கு மட்டுமே அவரால் முடிந்திருந்தது.
"பாபுஜி, பாபுஜி, எங்களை ஏன் கைவிட்டீர்கள், பாபுஜி?"
கடைசியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாளிகையினுள்ளிருந்து தாளாத துயரத்துடன் அங்கு வந்து சேர்ந்தார் மகாத்மா பகவதி சரண்! அம்மாளிகையின் நெடிய கதவுகள் இப்பொழுது அவருக்காக அகலத் திறந்து வைக்கப்பட்டன. காவலர்கள் சூழ மிக மெதுவாக நடந்து சிதறிக் கிடந்த உடல்களை அடைந்தார் மகாத்மா. குற்றுயிராய்க் கிடந்த இரண்டு மூன்று மனித உடல்கள் அவரைக் கண்டு எழ முற்பட்டதையும் அவர் அவர்களுக்குக் கருணை மிகுந்த தன் வாக்கியங்களால் ஆறுதலளிக்க முயன்றதையும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.
அவருக்குப் பிரக்ஞை தப்பிக்கொண்டிருந்தது.
mmm
மிகக் குறைந்த பக்கங்களையே உடைய மரணத்தின் கடைசி அத்தியாயம் தன் முன் விரித்துவைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார் காந்தி. வாசித்து முடிக்கும்பொழுது மரணம் தேடி வந்துவிடும். தேடி வருமா? தேடியடைய வேண்டுமா? வாழ்வு பற்றிய கற்பனைகள் முற்றுப்பெறும் பொழுது மரணத்தைத் தேடத் தொடங்குகிறான் மனிதன். வாழ்வின் மூலம் உணர்த்த முடியாததை மரணத்தின் மூலம் உணர்த்துவதற்கு ஆசைப்படுகிறான்; தன் மரணத்தைத் தானே தேர்வுசெய்கிறான் என நினைத்தார் காந்தி.
வாழ்தலை ஒரு கடமையாகவே கருதியிருந்தார் அவர். முழு ஆயுட்காலத்தையும் வாழ்ந்து தீர்க்க வேண்டும். அதாவது 125 வருடங்கள்.
எப்போதுமே அவருக்கு அது வெறும் ஆசையாக மட்டும் இருந்ததில்லை. அதற்கேற்றாற் போலவே தன் வாழ்வியல் நடைமுறைகளையும் அமைத்துக்கொண்டிருந்தார். ஆன்மாவைப் போலவே உடல்மீதும் தீராத நம்பிக்கை கொண்டவராக இருந்தார் மகாத்மா. மரணத்தைக் கண்டு ஒரு போதும் அவர் அஞ்சியதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பாகப் பிரார்த்தனைக் கூடத்திற்கருகே குண்டு வெடிக்கும் ஓசை கேட்டபொழுது மனு பதறிப்போனாள். மிகப் பயந்து போயிருந்த அக்குழந்தைக்கு அப்பொழுது அவர் ஆறுதல் சொன்னார். அது அருகில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சியின்போது வெடிக்கப்பட்ட குண்டின் ஓசையாயிருக்கலாம் எனச் சொல்லித்தான் அவளைத் தேற்ற வேண்டியிருந்தது. ஆனால், அது தன்னைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இருக்கவில்லை. கொலையாளிகள் தனக்கு மிக அருகில் இருக்கிறார்கள்.
காலடிச்சுவடுகளைப் பற்றிப் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது மரணம். அதனிடம் தன்னை ஒப்புவிக்க அவர் தயாராகவே இருந்தார். மரணம் அவருக்கு அனுப்பிக்கொண்டிருந்த ரகசியமான செய்திகளை அவர் புன்னகையுடன் எதிர்கொண்டார். அதைக் கேலிசெய்தார்; சவால் விடுத்தார். இம்முதிய வயதில் அவர் மேற்கொள்ளும் உண்ணா நோன்புகள்கூட மரணத்திற்கெதிரான அவரது அறை கூவல்கள்தாம். எங்கே செத்துப்போய்விடுவாரோ என ஒவ்வொருவரும் பதற்றமடைகிறார்கள். மருத்துவர்கள் அவரைப் பரிசோதிக்கிறார்கள். சிறிதளவு பழச்சாறை அருந்துவதற்கு அவர் என்ன நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள்; அமைதி ஊர்வலங்களை நடத்துகிறார்கள்; கைகுலுக்கிக்கொள்கிறார்கள்; கட்டித் தழுவிக்கொள்கிறார்கள்; பிரார்த்திக்கிறார்கள். பிறகு எல்லோரும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பழச்சாறைக் கொடுத்து அதைக் குடிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். அவரும் மனநிறைவோடு அதைக் குடித்து மரணத்தோடு சமரசம்செய்துகொள்கிறார். பிறகு மகாத்மா கனவுகளில் மூழ்கிப்போகிறார். ராமராஜ்யம் குறித்த கனவிலும் 125 வருடங்கள் உயிர் வாழ்வது குறித்த கனவிலும்.
முந்தையவை ஒவ்வொன்றும் மாற்றமின்றித் தொடர்கின்றன. வழக்கம்போலவே அவர் அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுகிறார், காலைக் கடன்களை முடிக்கிறார், கடிதங்கள் எழுதுகிறார், ஹரிஜனுக்காகவும் வேறுசில பத்திரிகைகளுக்காகவும் கட்டுரைகள் எழுதுகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் சாப்பிடுகிறார், தன்னைத் தேடி வருபவர்கள் அனைவரையும் சந்திக்கிறார், சிலரை வாழ்த்துகிறார், சிலரைப் பாராட்டுகிறார், சிலரைக் கண்டிக்கிறார், சிலருக்கு அறிவுரை சொல்கிறார், எல்லோருக்கும் ஆசி வழங்குகிறார். வழக்கம்போலவே அமைச்சர்கள் அவரைச் சந்திக்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள், தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள். பிரதமர் நேரு அவரைச் சந்திக்கிறார், சர்தார் பட்டேல் சந்திக்கிறார். இருவரும் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதைப் பார்த்துப் பூரித்துப்போய்விடுகிறார் மகாத்மா. மாலைப் பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். குரானிலிருந்தும் பைபிளிலிருந்தும் கீதையிலிருந்தும் வசனங்கள் படிக்கப்படுகின்றன, கேட்கப்படுகின்றன. பிறகு அவை ஒருமித்த குரலில் பாடப்படுகின்றன.
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீதப் பாவன சீதாராம்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்...
மரணத்தின் பல்வேறு பாவனைகள், வெவ்வேறு ஒப்பனைகள்.
பிறகு எங்கிருந்தாவது யார் மூலமாகவாவது கலவரம் பற்றிய ஒரு செய்தி வருகிறது. எரிக்கப்படும் மனித உடல்களிலிருந்து மேலெழும் கரும்புகை தன் அறையின் ஜன்னல்கள்மீது படர்வதை அவர் பார்க்கிறார். வெடியோசைகளையும் கூக்குரல்களையும் அவர் கேட்கிறார். பிறகு தான் வைத்துள்ள குரங்கு பொம்மைகளைப் போலவே மவுனமாகிறார், ஊமையாகிறார், கண்களை மூடிக்கொள்கிறார், செவிகளையும் பொத்திக்கொள்கிறார். ஆனால், செவிகளைத் துளைத்துக்கொண்டு செய்திகள் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியதிகாரம் பெற்ற சத்யாக் கிரஹிகள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதைப் பற்றிய செய்திகளை, நேருவுக்கும் பட்டேலுக்குமிடையேயான பூசல்கள் அதிகரித்துவருவதைப் பற்றிய செய்திகளைச் செவிகளைப் பொத்திக்கொண்ட நிலையிலும் அவர் கேட்கத்தான் செய்கிறார். 'ஒன்று நான் அல்லது அவர்...'அறைகூவல்கள், மிரட்டல்கள், புகார்கள், எச்சரிக்கைகள், சவால்கள்...!
சத்யாக்கிரஹிகள் தாம் செய்த தியாகங்களுக்குக் கூலிகேட்கிறார்கள்.
எல்லாவற்றையும்விடத் தில்லியினதும் சுயராஜ்யத்தினதும் எதிர்காலம் குறித்தே அதிகம் கவலைப்பட்டார் காந்தி. தன் அறையிலுள்ள குரங்கு பொம்மைகள் தன்னையே கேலி செய்வதாகப்பட்டது அவருக்கு. ஆக, விதவிதமான ஒப்பனைகளைப் போட்டுப் பார்த்துச் சலித்துப்போன மரணம் இப்பொழுது 'அச்சு அசல்' அவராகவே வந்து நிற்கிறது,
'மகாத்மா பகவதிசரணுக்கு ஜே! மகாத்மா பகவதிசரணுக்கு ஜே!'
'இது ஒரு மலிவான தந்திரம்' என வாய்விட்டுச் சொன்னார் மகாத்மா.
மலிவானது, கோழைத்தனமானது. இது அவரது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவாலும்கூட. அவரது வாழ்வை, மரணம் தன்னுடைய செய்தியாக மாற்ற முயல்கிறது! இந்தச் சவாலை எதிர்கொள்வதில்தான் வாழ்வின் உள்ளுறையான அர்த்தம் பொதிந்திருக்கிறது. வாழ்வைப் போன்றதே மரணமும். அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை விட்டுக்கொடுப்பதைப் போல வாழ்வை அவமதிக்கும் வேறொரு காரியம் இருக்கவே முடியாது என நினைத்தார் மகாத்மா.
மரணத்தைப் பற்றி அதுவரை எவ்வளவோ கற்பனைகளில் மூழ்கியிருந்திருக்கிறார் மகாத்மா. அது கவித்துவமும் துணிவும் நிரம்பிய ஒரு நிகழ்வாயிருக்க வேண்டும். தான் மேற்கொண்டு வரும் நெடிய உண்ணா நோன்புகளிலொன்று தன் வாழ்வை முடித்து வைக்க வேண்டுமென்பதுதான் மரணம் பற்றிய அவரது நெடுங்காலக் கற்பனையாய் இருந்தது. ஒரு சத்யாக் கிரஹிக்கு அதைவிட மேலான ஒரு வாய்ப்பு இருக்க முடியாது என நினைத்தார் காந்தி? தான் கொல்லப்படலாம் என நினைத்தார். பிரார்த்தனை மண்டபத்திற்கருகே கேட்ட குண்டுவெடிப்புச் சப்தத்தை அவர் பொருட்படுத்தவேயில்லை. அந்தத் தருணத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது மிக உன்னதமான மரணமாகவே இருந்திருக்கும் என நினைத்தார் மகாத்மா. அவர்களுக்கு முன்னால் வெற்றுடம்புடன் நிற்பதற்கு அவர் இன்னும்கூடத் தயாராகவே இருந்தார். மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் துணிவே ஒரு சத்யாக்கிரஹி கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் முக்கியமானது. மகான்கள் மரணத்தைப் புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். மரணம் அவர்களிடம் தோற்றுப்போகிறது. பிறகு அவர்கள் உயிர்தெழுகிறார்கள். சாகாவரம் பெற்றவர்களாகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவைப் போல, அவரது குரு டால்ஸ்டாயைப் போல. அவர்களது வாழ்வே அவருக்கு ஆதாரம். அவர்களது வாழ்வும் அவர்களது மரணமும்.
இருவருமே மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். தமக்கான கொலையாளிகளைத் தம் வாழ்விலிருந்து உருவாக்கியவர்கள். இயேசு மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு கல்வாரி மலைக்கு மேற்கொண்ட பயணத்திற்கு இணையானதே யாஸ்னயா போல்யானாவிலிருந்து அஸ்டபோவாவை நோக்கி டால்ஸ்டாய் மேற்கொண்ட பயணமும். அந்தப் பயணத்தைப் பற்றிப் படித்த முதல் தருணங்களை நினைவுகூர்ந்தார் காந்தி. பெருமூச்சுகளோடும் துக்கத்தோடும்தான் அப்பொழுது அவரால் அந்தப் பக்கங்களைக் கடந்து செல்ல முடிந்திருந்தது.
பிறகு அவை அவருக்கு வேறுவிதமாய்த் தென்பட்டன. திரும்பத் திரும்ப அவற்றைப் படித்தார். அதைவிடச் சிறப்பான முறையில் டால்ஸ்டாயால் தன் மரணத்தைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது எனத் தோன்றியது அவருக்கு. உலகின் மற்ற எல்லா மரணங்களையும்விடக் கவித்துவமானது அது. அவர் தன் மாளிகையிலிருந்து வெளியேறிய பனிப்பொழிவு மிகுந்த அந்த அதிகாலையை மகாத்மாவால் ஒருபோதும் மறக்க முடிந்ததில்லை.
அதிகாலையில் துயிலெழும் ஒவ்வொரு தருணத்திலும் டால்ஸ்டாயின் நினைவுவரும் மகாத்மாவுக்கு. அநேகமாக அந்த நேரத்தில்தான் யாஸ்னயா போல்யானாவின் புகழ்பெற்ற அந்த மாளிகையிலிருந்து வெளியேறினார் டால்ஸ்டாய். பிர்லா மாளிகைக்கு அழைத்துவரப்பட்ட பிறகு காந்தியின் மனத்தில் அந்தச் சித்திரம் முன்பிருந்ததைவிட அழுத்தமான கோடுகளுடன் உயிர்த்தெழுந்தது. யாஸ்னயா போல்யானாவின் அந்த மாளிகையைப் போன்றதுதான் பிர்லா மாளிகையும். டால்ஸ்டாயைப் போலவே அவரும் இந்த மாளிகையில் ஒரு கைதியின் நிலையில்தான் இருத்திவைக்கப்பட்டிருந்தார். டால்ஸ்டாயைப் போலவே அவருக்கும் வெளியேறிவிட வேண்டுமென்ற வேட்கை இருந்தது.
வெளியேறிவிட வேண்டும். முன்பு தான் வசித்துவந்த துப்புரவாளர் குடியிருப்புக்கோ ஆசிரமத்திற்கோ சென்றுவிட வேண்டும். ஆனால், எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து வந்துவிடுவார்கள். கைதியைப் போலவோ கடவுளைப் போலவோ அடைத்துவைத்து வாயிலில் ஆயதமேந்திய காவலர்களை விறைப்பாக நிற்கவைத்துவிடுவார்கள். பிறகு பழைய கதைதான். கடிதங்கள், சந்திப்புகள், ஆசிகள், அறிவுரைகள். மாலையானால் பிரார்த்தனைக் கூட்டம். நல்ல ஏற்பாடுதான்!
கடவுள்! கைதியாக்கப்பட்ட கடவுள்! வெளியேறுவதனால் டால்ஸ்டாயை அப்படியே பின்பற்ற வேண்டும். தனக்கான ரயில் நிலையத்தை, புராதனச் சிறப்புடைய இம்மாநகருக்கு வெளியே தன் அஸ்டபோவாவைக் கண்டுபிடிக்க வேண்டும்!
சந்தேகமே இல்லை, வரலாறு தன்னையே பிரதியெடுத்துக்கொள்கிறது! வரிக்குவரி அப்படியே, ஒரு எழுத்தையும் விட்டுவிடாமல்!
mmm
1910ஆம் வருடம் அக்டோ பர் மாதம் அதிகாலை 5 மணிக்குத் தன் 83ஆம் வயதில் தான் பிறந்ததிலிருந்து வாழ்ந்துவந்த தன் மாளிகையிலிருந்து வெளியேறினார் டால்ஸ்டாய். அப்போது பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. உறவுகளைத் துறந்து தன் நீண்டநாள் பணியாளரான மக்கோவ்ஸ்க்கியின் துணையோடு துலா குபேர்னியாவின் இருப்புப் பாதைகளில் அலைந்து திரிந்துவிட்டு நவம்பர் 3ஆம் தேதி வோலாவோவிலிருந்து ரஸ்டோ வ்-ஆன்-டாணை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் வண்டியின் மிக மோசமான நிலையிலிருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது கண்டுபிடிக்கப்பட்டு, பாதியிலேயே அஸ்டபோவா என்னும் மிகச்சிறிய ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார்.
நிமோனியாவின் தாக்குதலுக்குள்ளாகி அவதியுற்றுக்கொண்டிருந்த டால்ஸ்டாயை ஸ்டேஷன் மாஸ்டரின் உதவியோடும் அவரைத் தேடிக்கொண்டு வந்திருந்த மகள் வார்வாரா மிகெய்லேனாவின் உதவியோடும் கீழே இறக்கினான் மக்கோவ்ஸ்க்கி. ஸ்டேஷன் மாஸ்டரின் அறையில் மூன்று நாள்கள்வரை அவரைத் தங்கவைத்திருந்தார்கள். முழு உலகின் கவனமும் அப்போது அந்த மிகச் சிறிய ரயில்வே ஸ்டேஷனின் மீது கவிந்தது. உலகின் மகத்தான மனிதனொருவனின் மரணத்தை முன்னறிவிப்புச் செய்வதற்காக அய்ரோப்பா முழுவதிலுமிருந்து அஸ்டபோவாவுக்கு வந்திருந்த செய்தியாளர்கள் அங்கு மூன்று நாட்கள்வரை காத்திருந்தார்கள். அவர்களுடைய ஆசிரியர்கள் தம் அலுவலகங்களில் அவருக்கான இரங்கல் கட்டுரைகளைத் தயாரித்து வைத்திருந்தார்கள். தந்தி நிலையங்கள் இடையறாது இயங்கிக்கொண்டிருந்தன. நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 6 மணி 5 நிமிடத்திற்கு "என்னைத் தனியே விட்டுவிடுங்கள். யாருமே என்னைப் பொருட்படுத்தாத ஒரு இடத்தை நோக்கி நான் போகிறேன்...!" என்னும் வாக்கியங்களோடு மகத்தான அந்த மனிதரின் இறுதி மூச்சு அடங்கியது.
காந்தி பிர்லா மாளிகையைவிட்டு வெளியேறியபொழுது அதிகாலை 3 மணி 45 நிமிடம். தன் குருவைப் போலல்லாமல் அவர் தன்னந்தனியே புறப்பட்டார். தனிக்லாலையும் அழைத்துச்செல்வது எனத் தீர்மானித்திருந்தவர் பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டார். அன்றிரவு பதினொரு மணிக்கு மேல் காந்தியால் அவரைக் காண முடியவில்லை. தன் அழைப்புகளுக்குப் பதிலில்லாமல் போகவே தனிக்லாலைத் தேடிக் கொண்டு அவரது அறைக்குப் போனார் காந்தி. அப்பொழுது மனுவுங்கூட அங்கிருக்கவில்லை. முந்தைய நாளிரவு சுசீலா அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
காலையில் அங்கிருந்து திரும்பியவுடன் தன்னைக் காணாமல் குழந்தை தவித்துப்போய் விடுவாளோ என நினைத்தார்.
மற்றவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மாளிகை பேரமைதிகொண்டதாயிருந்தது. கீதையின் ஒரு பிரதியை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார் காந்தி. வாயிலில் காவலர்கள் யாரும் தென்படக் காணோம். கதவும் திறந்திருந்ததால் அவரால் மிகச் சுலபமாக வெளியேற முடிந்தது. அவர் வழக்கமாக உடுத்தும் அரையாடையோடும் ஊன்றுகோலுடனும் விசாலமான தெருவில் இறங்கிக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ எனப் பதற்றத்துடன் விரைந்து நடந்தார். ஆள் நடமாட்டமே இல்லாத தெருக்கள் அவருக்கு மிக உதவியாயிருந்தன. மரங்களிலிருந்து பனித்துளிகள் இடையறாது சொட்டிக்கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்ட விளக்குக் கம்பங்களிலிருந்து கசிந்துகொண்டிருந்த ஒளியைப் போர்த்தி மூடியிருந்தது பனிப்படலம். எலும்பைத் துளைக்கும் குளிர். கம்பளியொன்றை எடுத்து வந்திருக்கலாம் எனத் தோன்றியது அவருக்கு.
யாஸ்னயா போல்யானாவில் பனி இன்னும் அடர்த்தியாக இருந்திருக்கும்.
புறப்படும் தருணத்தில் எந்தத் திட்டத்தையும் வகுத்துக்கொள்ளவில்லை. அருகிலுள்ள ரயில் நிலையம் ஒன்றை அடைந்து பிறகு அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்திருந்தார். அவருக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரமே அவகாசம். அதற்குள் 'கிளி கூட்டைவிட்டுப் பறந்துவிட்ட' செய்தியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். டால்ஸ்டாய் சோபியா அந்திரேயவ்னாவுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டதுபோலத் தானும் தன் வெளியேற்றத்துக்கான காரணங்களை விளக்கி யாருக்காவது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றியது மகாத்மாவுக்கு.
அப்படிச் செய்யாததற்குக் காரணம் வெறுப்போ?
வெறுப்பல்ல, அன்பே இவ்வெளியேற்றத்திற்கும் ஆதாரமாய் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இவ்வெளியேற்றம் பொருளுடையதாக இருக்கும் என நினைத்தார் காந்தி. வெறுப்பின் விளைவானது இவ்வெளியேற்றம் எனில் தான் உண்மையான சத்தியாக்கிரஹி அல்ல. முழுமைபெறாத ஒரு ஆன்மா என்றே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ள வேண்டும் என நினைத்தார் காந்தி.
சாலையின் இருபுறங்களிலுமுள்ள நடைபாதைகளில் எண்ணற்ற மனிதர்கள் உடுத்துக்கொள்வதற்கேகூடப் போதிய ஆடைகள் இல்லாதவர்களாய் நடுங்கவைக்கும் இக்குளிருக்குள் முடங்கிக் கிடப்பதைப் பார்த்தார் காந்தி. தன் வெளியேற்றம் பரிதாபமான இந்த மக்களின் நிலையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருமா என யோசித்தார். அவருக்குக் குழப்பமாக இருந்தது. பகவதிசரண் செய்தது சரியோ? அவர் திரட்டிக்கொண்டு வந்த போர்வைகளும் கம்பளிகளும் இப்பரிதாபகரமான மனிதர்களில் சிலரது துன்பத்தைப் போக்கியிருக்கும் என்றால் அவரது செயலை எப்படி விமர்சிக்க முடியும்? அவர் பொய்சொல்லியிருக்கிறார் என்பதையும் தன்னைப்போல் வேடமிட்டுக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதையும் அவற்றின் நல்விளைவுகளைக்கொண்டு மறுமதிப்பீடுசெய்ய முடியுமா எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் மகாத்மா. அவரிடம் அதற்கு உடனடியான பதில் இல்லை. ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய கேள்வி இது என நினைத்தபடி வேகமாக நடந்தார்.
தில்லியின் புகழ்பெற்ற அந்த நாற்சந்தியில் தன் ஊன்றுகோலுடன் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பனிமூட்டத்தை விலக்கி அருகில் வந்து நின்றது ஒரு மோட்டார் கார். நீண்ட கம்பளிக் கோட்டு அணிந்திருந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீருடைக்கு மேல் இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக்கொண்டிருந்த அந்த மோட்டார் காரின் ஓட்டுநரும் அதிலிருந்து இறங்கினர்.
'பெரியவரே யார் நீங்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?' என அதிகார தோரணையுடன் காந்தியை விசாரித்தார் போலீஸ் அதிகாரி.
'நானா? காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'
"காலையிலேயே தொடங்கிவிட்டது பாருங்கள்!" எனச் சிரிக்கத் தொடங்கினார், அந்த ஓட்டுநர்,
"இந்தக் கதையெல்லாம் வேண்டாம் அப்பனே...! வயதான காலத்தில் எதற்காக இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறீர்? விறைத்துப்போய்விடுவீர்...! பேசாமல் வீட்டைப் பார்த்துப் போய்ச் சேரும். உம்மைப் போன்றவர்களால் நாங்கள் படும் அவஸ்த்தை இருக்கிறதே...! இப்படியெல்லாம் வேடம்போட்டுக்கொண்டு திரிந்தால் அவர்களிடமிருந்து தப்பித்துவிடலாம் என நினைக்கிறீரா? சுட்டுவிடுவார்களய்யா, அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன!"
இவ்வளவு அறியாமையோடு இருக்கிறாரே என நினைத்துக்கொண்டார் காந்தி. இந்திய அரசின் அதிகாரம்பெற்ற அதன் ஓர் பிரதிநிதி என்னும் முறையில் அவர் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியது ஒரு குடிமகனான தன் கடமை என நினைத்தார் காந்தி.
"மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை அய்யா! அப்படியொரு மரணம் வாய்க்குமானால் நான் மகிழ்சியடைவேன். மரணத்தைத் தேடியே இப்பொழுது நான் போய்க்கொண்டிருக்கிறேன். அரைமணிநேரத்திற்கு முன்புதான் பிர்லா மாளிகையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி வந்தேன். மனத்தில் எந்தத் திட்டமும் இல்லை. மீரட்டுக்குப் போகலாம் என்பது என் எண்ணம். பக்கத்தில் ஏதாவது ரயில் நிலையம் இருக்குமானால்..."
"இது ஒரேயடியாக முற்றிப்போய்விட்ட கேஸ் போலிருக்கிறது!" எனச் சிரிக்கத் தொடங்கினார் அந்த போலீஸ்காரர், "திருத்த முடியாத அளவுக்கு முற்றிப்போய்விட்ட கேஸ்."
கடுங்கோபம் கொண்டவரானார் உயரதிகாரி.
"கிழவரே, சும்மா உளறிக்கொண்டிருக்காமல் பேசாமல் வீடு போய்ச்சேர்வதற்கான வழியைப் பாரும்! இல்லை செத்தொழிவதுதான் விருப்பமென்றால் மீரட்டுக்கோ வேறு எங்காவது போயோ செத்தொழி...! அதோ பார் அந்த விளக்குக் கம்பத்திலிருந்து வலது புறம் திரும்பி இடதுபுறம் செல்லும் குறுகிய சந்தின் வழியாகச் சென்றாயானால் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். ரயில் எப்பொழுது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நீர் சொன்னதுபோல் மரணத்தைத் தேடிப் போவதாக இருந்தால் அங்கு சென்று காத்திரும். ரயில் வந்தால் உமக்கு அதிர்ஷ்டம் தான்! சும்மா இங்கே நடமாடிக்கொண்டிருக்காதீரும். இது நாட்டின் மிக முக்கியமான மனிதர்கள் வசிக்கும் பகுதி. யார் எந்த நேரத்தில் வருவார்கள் எனச் சொல்ல முடியாது. மகாத்மாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இதில் உங்களைப் போன்ற ஆசாமிகளையும் சமாளித்தாக வேண்டியிருக்கிறது."
"எனக்காகத் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவேண்டாம் என நேருவிடமும் பட்டேலிடமும் பலமுறை சொல்லிவிட்டேன், அவர்கள் கேட்பதாயில்லை!" எனக் காந்தி வருத்தத்துடன் அளித்த பதிலைக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்குக் கண்கள் சிவந்துவிட்டன. தன் உயரதிகாரி கோபம்கொள்வதைப் பார்த்த ஓட்டுநர் உடனே செயலில் இறங்கினார், "கிழவா, இப்போது நீ இடத்தைக் காலிசெய்யப் போகிறாயா இல்லையா?" என லத்தியைச் சுழற்றிக் காந்தியை அங்கிருந்து விரட்ட முற்பட்டார்.
துளியும் அச்சமில்லாமல் ஒரு கைத்த புன்னகையுடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பைத்தியகாரக் கிழவனை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் அவ்விருவரும் திணறினர்.
mmm
காலையில் தகவல் கிடைத்ததும் தேடத் தொடங்கிவிடுவார்கள். தனிக்லால்தான் அதை உலகுக்கு முன்னறிவிப்பவராய் இருப்பார் என நினைத்தார் மகாத்மா. பிறகு விசாரணைகள் தொடங்கும். எல்லோரும் கேள்விகளால் குடைந்தெடுக்கப்படுவார்கள். தென்படும் எல்லா வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும். மீரட்டை எளிதாக யூகித்துவிடுவார்கள். வழியிலேயே இறங்கிக்கொண்டுவிட வேண்டும். தில்லிக்கும் மீரட்டுக்குமிடையே ஏதாவதொரு இடத்தில் கடவுள் தனக்கான அஸ்டபோவாவைக் குறித்துவைத்திருப்பார் என நம்பினார் காந்தி.
குறுகலான பல சந்துகளைக் கடந்து ரயில் நிலையத்தை அடைந்தபொழுது குளிர் தீவிரமடைந்திருந்தது. புகை மண்டிய பிளாட்பாரத்தில் கந்தல் கூளங்களால் போர்த்தி மூடப்பட்ட உடல்களுடன் நூற்றுக்கணக்கான பயணிகள், மூட்டை முடிச்சுகளைச் சுமந்தபடி அலைந்து திரிந்தனர். மூன்றாம் வகுப்புப் பயணிகளாக இருக்க வேண்டும். தூக்கக் கலக்கம் நிரம்பிய முகங்களிலிருந்தும் துர்நாற்றம் வீசும் உடல்களிலிருந்தும் அவர்கள் பல நாள்களாகப் பசியோடும் தாகத்தோடும் அங்கு காத்திருக்கக்கூடுமென நினைத்தார் காந்தி. இந்தி, உருது, வங்கம், குஜராத்தி எனப் பல்வேறு மொழிகளையும் சேர்ந்த சொற்கூட்டங்கள் அந்த ரயில் நிலையத்தின் கரிப்புகை மண்டிய சுவர்களில் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்தன. அங்குள்ள கிராதிகளில் சாம்பல் வண்ணமுடைய நூற்றுக்கணக்கான புறாக்கள் தென்பட்டன. ஒப்பனையிடப்பட்டவை போல அனைத்துக்கும் ஒரே தோற்றம்.
யாருமே அவரைப் பொருட்படுத்தவில்லை. படிக்கட்டுகளில் ஏறி நடந்தபொழுது ஒரு சிறுமி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள்; யாருடனோ பேசிக்கொண்டிருந்த தன் தாயை அழைத்து அவரைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னாள். அவள் அவரை நிமர்ந்து பார்த்துவிட்டு வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவர்களுடன் பேச வேண்டும் என்னும் விருப்பம் உண்டானது காந்திக்கு.
முதலில் பயணச் சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.
மீரட்டுக்குச் செல்வதற்கு இப்பொழுது ஏதாவது வண்டி இருக்கிறதா எனக் கேட்டதற்கு மாடத்துக்குள்ளிருந்து அவரைக் கேலியாகப் பார்த்தார் பயணச் சீட்டு வழங்குபவர், "இப்பொழுது எந்த வண்டியுமே புறப்படப்போவதில்லை" என்று உதட்டைப் பிதுக்கினார், "எந்த வண்டியுமே வந்து சேராததுதான் காரணம். மூன்று நாள்களாக இதுதான் நிலைமை. நீங்களே பார்க்கிறீர்களல்லவா? இவர்கள் எல்லோரும் பல்வேறு வண்டிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் வசமிருக்கும் பயணச் சீட்டுகளை ஓய்வேயில்லாமல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், மக்களும் சலிப்பேயில்லாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வண்டி வரவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆமாம், நீங்கள் எங்கே போக வேண்டும்? மீரட்டுக்கா? ஆமதாபாத்துக்கா? மீரட் என்றுதானே சொன்னீர்கள்?"
"உண்மையில் என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை. முதலில் எந்த வண்டி வருகிறதோ அதில் ஏறிக்கொள்ளலாமென நினைக்கிறேன்"
"அது தெரிந்த கதைதான்! உங்கள் ஆட்கள் எல்லோருமே அப்படித்தானே? எந்த வண்டி முதலில் வருகிறதோ அதில் தொற்றிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவருமே பயணச் சீட்டு எடுப்பதில்லை. பரிசோதகர்களும்கூட அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான். சர்தாரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அது நடக்கட்டும் என்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் முகத்துக்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது நடக்கட்டும், பிறகுதான் இருக்கிறது வேடிக்கை!"
"அய்யா, என்னை மன்னியுங்கள். நீங்கள் சொல்வது எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமானால்..."
பயணச் சீட்டு வழங்குபவர் உரக்கச் சிரித்தார்,
"அய்யோ என்னை விட்டுவிடுங்கள் பாபுஜி! எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதோ ஒரு வண்டி வந்துகொண்டிருக்கிறது. அமிர்தசரஸ்வரை செல்லக்கூடியது. ஆடி அசைந்து போகும். வழியில்தானே ஜாலியன் வாலாபாக் இருக்கிறது? நீங்கள் போயிருக்கிறீர்களா? உங்களுக்கெல்லாம் புண்ணிய பூமி ஆயிற்றே? பயணச் சீட்டுக்கூட வேண்டாம். உங்கள் ஆட்கள் யாருமே வாங்குவதில்லையே? எல்லாம் கொஞ்ச நாட்கள்தான். அது நடக்கும்வரை..."
எல்லோரும் இவ்வளவு இயல்பாக இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டார் காந்தி.
"அமிர்தசரஸுக்கு ஒரு பயணச் சீட்டுக்கொடுங்கள்." என்று ரூபாய்த்தாள் ஒன்றை நீட்டினார்,
'ஜாலியன் வாலாபாக்குக்கா?'
"ஆமாம்...! அங்குதான். பார்த்து எவ்வளவோ நாள்களாகிவிட்டனவே!" என்று பயணச் சீட்டு வழங்குபவரைப் பார்த்துக் கனிவாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னார் காந்தி. அப்போது மகாத்மாவின் கண்களை நேராகச் சந்திக்க நேர்ந்த அவருக்கு மனம் பதறிவிட்டது.
mmm
அமிர்தசரஸுக்குப் போகும் ரயிலின் நெரிசல் மிகுந்த பெட்டியொன்றினுள் அடித்துப் பிடித்து ஏறிக்கொண்டிருந்த ஐந்தாறு காந்திகளைக் கண்டதும் தீராத வியப்புடன் அவர்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைந்தார் மகாத்மா. கூட்டம் மிக அதிகமாக இருந்தது. காத்திருந்த அனைவரும் ஒரே சமயத்தில் பெட்டிக்குள் ஏற முயன்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களை இழுத்துக் கீழே தள்ளிவிட்டுத் தாம் நுழைய முற்பட்டனர். சிலர் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். வசைகளாலும் கூக்குரல்களாலும் நிரம்பித் தளும்பிக்கொண்டிருந்தது அந்த ரயில் நிலையம்.
கதவருகிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தார் காந்தி. ஆனால் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. தன்னால் ஏற முடியாமல் போய்விடுமோ என நினைத்தார். நல்ல வேளையாக அங்கு வந்துசேர்ந்த பயணிகள் கூட்டம் அவரைத் தள்ளிக்கொண்டுபோய்ப் பெட்டிக்குள் விட்டது. பெட்டியினுள் அதன் கொள்ளளவைக் காட்டிலும் நான்கைந்து மடங்கு கூடுதலான பயணிகள் அடைந்து கிடந்தனர்.
எந்த முயற்சியும் செய்யாமலேயே எல்லோரும் ஏதோ ஒரு இடத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டிருந்தனர். சோர்ந்துவிட்டார் காந்தி. முழங்கால்களில் தாள முடியாத வலி. பிறகு ரயில் நகரத் தொடங்கியது. "அய்யா காந்தியாரே, இப்படி வாரும்! இங்கே உமக்குக் கொஞ்சம் இடமிருக்கிறது! உண்மையிலேயே வயதானவராகத்தான் தென்படுகிறார். அவருக்குக் கொஞ்சம் இடம்கொடு. பாவம், என்ன இருந்தாலும் நம்முடைய ஆள்!"
பக்கவாட்டு இருக்கையொன்றில் இடம்பிடித்திருந்த காந்திகள் அவரை அழைத்துத் தம்மருகே உட்காரவைத்துக்கொண்டனர்.
"வெகுதொலைவிலிருந்து வருகிறார் போலிருக்கிறது! உமது திருநாமம் எதுவோ?"
தன்னைப் போலவே தோற்றமளித்த அவர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே அதற்குப் பதிலளித்தார் மகாத்மா.
"காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி..."
எல்லோரும் பெருங்குரலெடுத்துச் சிரித்தனர்.
"அதுதான் தெரிந்த கதை ஆயிற்றே! நான் உமது உண்மையான பெயரைக் கேட்டேன். அதாவது பெற்றவர்கள் உமக்குச் சூட்டிய பெயர் "
"பெற்றவர்கள் எனக்கு அந்தப் பெயரைத்தான் வைத்தனர்"
"சொந்த ஊருங்கூட போர்பந்தர்தானோ?"
"ஆமாம் நான் அங்குதானே பிறந்தேன்? இப்பொழுது சில மாதங்களாக பிர்லா மாளிகையில் வசிக்கும்படி ஆயிற்று. இன்று அதிகாலையில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். வெளியேறும்பொழுது திட்டமெதுவுமில்லை என்றாலும் இப்பொழுது அமிர்தசரஸுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். ஜாலியன் வாலாபாக் போக வேண்டும்"
"மறை கழண்ட ஆள் போலிருக்கிறது"
"நீ தெரிந்துவைத்திருப்பது அவ்வளவுதான். கிழவர் விவரமான ஆள்! இப்பொழுது அந்த மாதிரி இடங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இப்படியொரு வேடம் புனைந்துகொண்டு அங்கே போய்ச் சும்மா சுற்றிக்கொண்டிருந்தால் போதும்! ஒரே மாதத்திற்குள் போதுமான அளவுக்குக் காசு பார்த்துவிடலாம்"
அருவருப்புத் தாளாமல் கண்களை மூடிக்கொண்டார் மகாத்மா. ஆக இப்படி முடிந்திருக்கிறது. பகவதிசரண் தனி மனிதரல்ல. அதிகாலையில் அவர் சந்தித்த காவல்துறை அதிகாரிகளும் பயணச்சீட்டு வழங்குபவரும் ரயில் நிலையத்தில் தென்பட்ட பரிதாபத்திற்குரிய மக்களும் இவர்களைப் போன்ற எண்ணற்ற காந்திகளைப் பார்த்திருக்கக் கூடுமென நினைத்தார் மகாத்மா.
"ஆனால் காந்தியாரே, எங்களையும் உம்மைப்போல் பிச்சையெடுப்பதற்காக இந்த ஒப்பனையைச் செய்துகொண்டுள்ளதாக நினைத்துவிடாதீர்" என மகாத்மாவை எச்சரிக்கும் தொனியில் சொன்னார் நடுத்தர வயதுடைய ஒரு காந்தி.
"இதோ இருக்கிறாரே, இவர் ஒரு குஜராத்தி. பெரும் நிலச்சுவான்தார், பல வருடங்களாகக் காங்கிரசில் இருந்தவர். ஒருதரம் சிறைக்குக்கூடப் போயிருக்கிறார். சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் இந்த ஒப்பனையைப் போட்டுக்கொண்டார். இவர் இன்னும் அசல் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் பேச்சு, நடைத் தோரணை எல்லாம் அசல் காந்தியினுடையதைவிட எடுப்பாகவே இருக்கும்!"
"பிச்சையெடுக்கும் நோக்கம் இல்லையென்றால் எதற்காக இந்த ஒப்பனை? எனக்குப் புரியவே இல்லை" என்றார் மகாத்மா. அவருக்குக் குரல் நடுங்கிற்று.
"நல்ல கேள்வி கேட்டீர், தேர்தலில் நிற்க முடிவுசெய்திருக்கிறார் நம்முடைய ஆள். வெற்றிபெறுவதற்கு இதைவிடச் சுலபமான வழி இல்லை அய்யா! ரோமங்களை மழித்துத் தலையை மொட்டையாக்கிக்கொள்ளுங்கள், தோளிலும் இடுப்பிலும் கதரைச் சுற்றிக்கொள்ளுங்கள். கீதையின் புத்தம்புதிய பிரதியொன்றைக் கையில் பிடித்துக்கொள்ளுங்கள். பிறகு தெருவில் இறங்கி நடந்து செல்லுங்கள். அவரைப் போலவே வேகமாக நடக்க வேண்டும்..."
கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது மகாத்மாவுக்கு. அந்த மனிதர் பெருமிதத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். நடுத்தர வயதைத் தாண்டாத அவர் வயதான தோற்றத்தை வரவழைத்துக்கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் தொப்பை இருந்ததால் அதை மறைப்பதற்காக எப்போதும் வயிறை எக்கி வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பற்கள் இல்லை. மகாத்மாவைப்போல் தோற்றமளிப்பதற்காக அவற்றைப் பிடுங்கி எடுத்துவிட்டிருப்பார் போலிருக்கிறது.
"இதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியுமா என்ன?" என வியப்பு மேலிட்டவராய் அவரைக் கேட்டார் மகாத்மா.
"இது சும்மா கவனத்தை ஈர்ப்பதற்கு. எதிரிகளை வழிக்குக் கொண்டுவர வேறு வழிகளைத்தான் கையாள வேண்டும்"
"அஹிம்சை முறையில்தான் இல்லையா?" எனப் பேராசை மிகுந்த கண்களால் அவரைப் பார்த்துக் கேட்டார் மகாத்மா.
"அஹிம்சை வழியா? நல்ல கதை!" எனச் சொல்லிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு ஒரு ரகசியம்போலத் தணிந்த குரலில் சொன்னார்,
"இன்னும் சில நாள்கள்தான்! அது மட்டும் நடந்து முடியட்டும், பிறகு நான் மகாராணா பிரதாப்சிங் போலாகிவிடுவேன். அவர்கள் எல்லோரையும் இமய மலைக்கப்பால் துரத்தியடிப்பார்கள் என் ஆட்கள்! ஆனால், காந்தியாரே... நீர் போய்ப் பிச்சையெடும்! உமது பிழைப்பைப் பாரும்! இந்தக் கதையையெல்லாம் எதற்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்?"
தன் அஸ்டபோவா குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார் மகாத்மா.
தென்பட்ட எல்லா இடங்களிலும் அலுக்காமல் நின்று புறப்பட்டது ரயில். பகல் முழுக்கப் பயணம் செய்தும் அந்த வண்டியால் தன் தூரத்தில் பாதியைக்கூடக் கடந்திருக்க முடியவில்லை. காலையில் அவர் வண்டியில் ஏறும்போதிருந்த நெரிசல் முற்றாகக் குறைந்திருந்தது. காந்திகள் தில்லியைத் தாண்டி நான்கைந்து நிறுத்தங்கள் கடந்து சென்றதும் விடை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில புதிய காந்திகள் ஏறினர். கண்ணாடி, கதர், கையில் கீதையின் ஒரு பிரதி. உண்மையிலேயே இந்த ஒப்பனை மிகச் சுலபமானதுதான் என நினைத்தார் மகாத்மா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக இந்த ஒப்பனையைப் போட்டுக்கொள்கிறார்கள். பல சாதாரண மனிதர்களும்கூடத் தன்னைப் போல் ஒப்பனை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தார் மகாத்மா. கலவரக்காரர்களிடமிருந்தும் போலீசாரிடமிருந்தும் தப்புவதற்கு இந்த வேடம் உதவுகிறது எனத் தெரிவித்தான் பழ வியாபாரியான ஒரு இளைஞன்.
"வேடம்தான் எனத் தெரிந்தாலுங்கூட ஒன்றும் பிரச்சினையில்லை. இவ்வேடத்திலிருக்கும் ஒருவரைக் கொல்வது பாவம் என நினைக்கிறார்கள். இந்த வேடத்தைப் போடாமலிருந்திருந்தால் சென்ற மாதம் எங்கள் குடியிருப்புப் பகுதி தீக்கிரையாக்கப்பட்டபொழுது என் குடும்பத்தின் பெற்றோருடன் நானும் கொல்லப்பட்டிருப்பேன்" என்றான். "பழ வியாபாரத்திற்கும்கூட இந்த வேடம் பயன்படுகிறது. சாதாரண வியாபாரியிடமிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை வாங்குவதைவிட மகாத்மாவிடமிருந்து வாங்குவது விஷேஷமானதல்லவா?" என்று சொல்லிச் சிரித்தான் அவன்.
அவனிடமிருந்து ஓரிரு வாழைப் பழங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் காலியாகக் கிடந்த ஒரு இருக்கையில் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டார் காந்தி. உடல் சுடுவது போலிருந்தது. நிமோனியாவின் அறிகுறியோ? அஸ்டபோவா நெருங்கிக்கொண்டிருக்க வேண்டும்!
mmm
பிற்பகல் இரண்டு மணிக்குப் பனிப்பொழிவு தொடங்கியது. குளிரிலிருந்து தப்புவதற்காக மகாத்மாவின் எதிரில் உட்கார்ந்திருந்த காந்திகளில் ஒருவர் புகைபிடிக்கத் தொடங்கினார். மற்றொருவர், வேடத்தைத் தற்காலிகமாகத் துறந்துவிட்டு நீண்ட கம்பளிக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டார்.
ரயில் பானிபட்டை அடுத்துள்ள ஒரு மிகச் சிறிய ஸ்டேஷனை அடைந்து நின்றபொழுது இருள் சூழத் தொடங்கியிருந்தது. துப்பாக்கி ஏந்திய, சுமார் இருபது போலீஸ்காரர்கள் தான் பயணம் செய்துகொண்டிருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியினுள் தாவி ஏறியதைப் பார்த்தார் காந்தி. பிடிபட்டுவிட்டோ ம் எனத் தோன்றியது அவருக்கு. காலையில் தகவல் கிடைக்கப்பெற்றதுமே நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பார்கள்.
ஒவ்வொரு பயணியையும் துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்துக் கேள்விகளால் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தனர் போலீசார்.
எந்த வற்புறுத்தலுக்கும் பணிந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்தார் காந்தி. நேருவோ பட்டேலோ நேரில் வந்து அழைத்தாலும்கூடத் தன் முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாது. யாராவது வந்திருக்கிறார்களா எனப் பிளாட்பாரத்தைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே அற்றுக் கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. நைந்துபோய்விட்ட சீருடையுடன் தென்பட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். கொடிகளைச் சுருட்டிக் கக்கத்தில் இடுக்கியவாறே ஒவ்வொரு பெட்டியையும் ஆராய்ந்துகொண்டிருந்தார்.
"உமது பெயரென்ன?" எனக் கடுப்புடன் தன்னைப் பார்த்துக் கேட்ட காவல் துறை அதிகாரியை எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்றியது மகாத்மாவுக்கு,
"காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி"
"எந்த ஊரிலிருந்து வருகிறீர்?"
"தில்லியிலிருந்து..."
"எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்?"
"அமிர்தசரசுக்கு, ஜாலியன் வாலாபாக்போகத் திட்டம்"
"அங்கே எதற்காகப் போகிறீர்?"
"பார்த்து நீண்ட காலமாகிவிட்டதே, அதனால்தான்"
"எங்கே உமது உடமைகளைக் காட்டும்"
"நான் எதையும் என்னுடன் எடுத்துவரவில்லையே! கொஞ்சம் பணம் இருக்கிறது. வேட்டியில் முடிந்துவைத்திருக்கிறேன். எனக்கு ராட்டை ஈட்டித் தந்த தொகை. தவிர கீதையின் ஒரு பழைய பிரதியும் உள்ளது. "
காவல் துறை அதிகாரி வேட்டி முடிச்சைப் பிரித்துக் காட்டச்சொல்லிப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.
மிக ஏமாற்றமாக இருந்தது மகாத்மாவுக்கு. பெட்டியில் பத்துப் பன்னிரெண்டு பயணிகளே இருந்தனர். குப்பைக்கூளங்களால் முற்றாக உருக்குலைந்து போயிருந்தது அந்தப் பெட்டி. இருக்கைகளுக்குக் கீழே பலவிதமான பழத்தோல்களும் உணவுப்பண்டங்களின் எச்சங்களும் நிரம்பிக் கிடந்தன. பெட்டியைச் சுத்தமாக வைத்திருப்பது நம் எல்லோருக்குமான கடமை என அவர் சொன்னபோது பயணிகள் சிரித்தனர். பிற்பகலில் காந்தி தனி ஆளாக அதைச் சுத்தம்செய்யத் தொடங்கினார். குப்பையைப் பெருக்கி வெளியே கொட்டிவிட்டுத் திரும்பியவரின் முன்பாகச் சில்லறைக் காசுகளை வீசியெறிந்தனர். மிக அமைதியாக அவற்றைச் சேகரித்துத் தன் வேட்டி முடிச்சில் வைத்துக் கொண்டார். காந்திகளும்கூட இப்பொழுது அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தனர். ஒப்பனைகள் கலைந்திருந்தன. இளம் காந்திகளின் சவரம் செய்யப்பட்ட முகங்களில் கரிய ரோமங்கள் அரும்பத் தொடங்கியிருந்தன. வழக்கமான அவரது பிரார்த்தனை நேரம் கடந்துசென்றுகொண்டிருந்தது. வண்டி புறப்படுவதற்கு நெடுநேரமாகலாம் எனச் சொல்லிவிட்டுப் போனான் ஒரு கடலை வியாபாரி.
அஸ்டபோவாவை வந்தடைந்துவிட்டோ மோ?
சற்று நடக்கலாம் எனக் கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் தனியாக நடந்தார்.
கூடடையும் தருணத்திற்குரிய ராகங்களை இசைத்துக்கொண்டிருந்தன பறவைகள். படபடக்கும் சிறகுகளுடன் கூடடையத் தவித்துக்கொண்டிருந்த அச்சிறு பறவைகள் அவரைக் கண்டதும் பதற்றமடைந்தன. அவற்றின் தனிமையைக் குலைத்துவிடக் கூடாது எனக் கருதியவராக அங்கிருந்து விலகி நடந்தார். யாருமே தன்னைப் பொருட்படுத்தாத இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோ ம் எனத் தோன்றியது அவருக்கு. முன்னெப்போதும் அனுபவித்திராத சுதந்திரம் இது! மங்கலான வெளிச்சத்தைக் கசிய விட்டுக்கொண்டிருந்த விளக்குக் கம்பத்திற்குக்கீழ் பறவைகளின் எச்சங்களால் நிரம்பிக் கிடந்த ஒரு சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார் காந்தி.
னீனீனீ
"எதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் பெரியவரே? நீங்கள் பயணியோ?" எனக் கேட்டபடி தன்னெதிரே வந்து நின்ற ஸ்டேஷன் மாஸ்டரைக் கண்டு எழ முற்பட்டார் மகாத்மா.
"ஆமாம், அமிர்தசரஸ் போக வேண்டும். வண்டி புறப்படுவதற்குத் தாமதமாகுமெனக் கேள்விப்பட்டதால் பிரார்த்தனை செய்வதற்காக வந்தேன். எப்பொழுது புறப்படும் என ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா அய்யா?"
"இல்லையே, எனக்குத் தெரியாது! வேறு யாருக்குமேகூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்டவாளங்களைப் பெயர்த்துப் போட்டிருக்கிறார்களாம். செய்தி வந்திருக்கிறது" எனச் சொல்லிவிட்டு அவரை வினோதமாகப் பார்த்தார், "நீங்கள் அமிர்தசரஸுக்கா போக வேண்டும்? பயணச் சீட்டு வைத்திருக்கிறீர்களா?" புன்னகையைத் தன் இயல்பாகக்கொண்ட அவர், மிகச் சிரமப்பட்டுக் கண்டிப்பாக இருப்பது போன்ற பாவனைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது காந்திக்கு.
"இதோ" என வேட்டி முடிச்சை அவிழ்த்துப் பயணச் சீட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் மகாத்மா. பெற்றுக்கொண்டு ஓரிரு அடிகள் தள்ளி நின்று அதைப் பரிசோதித்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அவரைப் பின்தொடர்ந்து வந்து அருகில் நின்ற மகாத்மாவைக் கண்டதும் அவர் கலவரமுற்றார்.
"அய்யா தங்கள் பெயர் என்ன? தயவுசெய்து சொல்லுங்கள்"
எப்போதும்போல் உண்மையையே பேசினார் அவர்.
"மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி"
அவரைக் கூர்ந்து பார்த்த ஸ்டேஷன் மாஸ்டரின் முகத்தில் பதற்றம்.
"பாபுஜி... என்னை மன்னியுங்கள் இதோ வந்துவிட்டேன். பரிசீலிக்க வேண்டும்" எனப் பயணச் சீட்டுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.
அநேகமாக உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோ ம் போலிருக்கிறது என நினைத்தார் மகாத்மா. திடீரென அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. முன்னெப்போதும் உணர்ந்திராத களைப்பு. மூட்டுகளில் தாள முடியாத வலி. உரிய இடமும் உரிய நேரமும் இதுதான் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டார் மகாத்மா.
கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் தளர்ந்து உட்கார்ந்தார். இன்னுமா பரிசீலித்துத் தீரவில்லை? கொஞ்சம் கண்ணயர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது அவருக்கு. மேலாடையை உதறிப் போர்த்துக்கொண்டு கால்களைக் குறுக்கிப் படுத்தார். எதிரே சடலம்போல அசைவற்றுக் கிடந்தது அவரை இங்கேகொண்டுவந்து சேர்த்திருந்த ரயில் வண்டி. நெடிதுயர்ந்த தேவதாரு மரங்களால் சூழப்பட்ட அந்த மிகச் சிறிய ரயில் நிலையம் வனம்போல் காட்சியளித்தது. சற்றுத் தள்ளியிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் பழுப்புநிறச் சுவர்களாலான மிகச் சிறிய அறையையும் விளக்குக் கம்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வனம்தான். பறவைகள் ஓயாது கூவிக் கொண்டிருந்தன.
விளக்குக் கம்பத்தின் உச்சியில் தன் கரிய சிறகுகளை விரித்து உட்கார்ந்திருந்த ஒரு பெரிய பறவை அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. தன் மரணத்தை இவ்வுலகிற்குச் சொல்லவிருக்கும் பறவையாயிருக்கும் இது என நினைத்தார் காந்தி!
தனிக்லால்தான் முதலில் வந்து சேர்பவராய் இருப்பார். மனுவையுங்கூடத் தன்னுடன் அழைத்து வரக்கூடும். தன் கடைசி வாக்கியத்தை அவளிடத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டார் மகாத்மா.
தன் இறுதி வாக்கியத்தைப் பற்றிய யோசனைகளில் மூழ்கத் தொடங்கினார் அவர். கவித்துவமானதாகவும் தன் வாழ்வின் செய்தியாகவும் இருக்க வேண்டும் அது. வாழ்வின் செய்தியையும் மரணத்தின் செய்தியையும் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடுவதற்கு முடிந்தால்!
நேருவும் படேலுங்கூடத் தன் இறுதிக் கணங்களில் பக்கத்தில் இருப்பார்கள் என நினைத்தார். அவர்களிடமும்கூட ஏதாவது சொல்லலாம்தான். வாழும்பொழுது சொல்லும் வாக்கியங்களுக்கு இருக்கும் மதிப்பைவிட மரணத்தின் பொழுது சொல்லும் வாக்கியங்களுக்கு அதிக மதிப்பு உண்டு.
இந்தத் தருணத்தில் பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவரது வாக்கியங்களின் அர்த்தத்தைக் கஸ்தூர் பா ஒருபோதும் முழுமையான அளவில் புரிந்துகொண்டதில்லை. ஆனால் அவரது மௌனத்தை பா அளவுக்குப் புரிந்துகொண்டவருங்கூட யாரும் இல்லை. அவர் மௌன விரதம் மேற்கொள்ளும் திங்கட்கிழமைகளே பாவுக்கு மிகப் பிடித்தவை. மகாத்மாவை விட்டு ஒரு கணமும் பிரியாமல் பக்கத்திலேயே இருந்துகொண்டிருப்பதற்கான வாய்ப்புகளை அவருக்கு அளித்தவை அவை. அவர் பக்கத்தில் இருந்திருந்தால் கடைசி வாக்கியமாகக்கூட எதையும் சொல்ல வேண்டியிருக்காது என நினைத்தார் மகாத்மா. அவரளவில் ஈடுசெய்யவே முடியாத இழப்பு அது! கண்கள் தளும்பின அவருக்கு.
"பாபுஜி... தயவுசெய்து எழுந்திருங்கள், தங்கள் வண்டி புறப்பட்டுக்கொண்டிருக்கிறது. பாபுஜி... பாபுஜி...! கடவுளே இப்பொழுது நான் என்ன செய்வேன்? உதவிக்குக்கூட இங்கே யாருமில்லையே! பாபுஜி... பாபுஜி... அடக் கடவுளே...!"
ஸ்டேஷன் மாஸ்டரின் பதற்றமான குரலையும் ரயில் என்ஜினின் நீண்ட விசில் சப்தங்களையும் கேட்டார் மகாத்மா. அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. பிரக்ஞை நூலிழையில் தவித்துக்கொண்டிருந்தது. யாருடைய வண்டி? எங்கிருந்து புறப்படுகிறது? எங்கு நோக்கி? இந்தக் குரல் யாருடையது? இந்தச் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன? கஸ்தூருடையதா? தேவதாரு மரத்தின் உச்சியில் வசிக்கும் அச்சிறு பறவையினுடையதா? இல்லை, விளக்குக் கம்பத்தின் மேல் வந்தமர்ந்ததே கரிய சிறகுகளையுடைய ஒரு பறவை, அது எழுப்பும் சப்தங்களோ இவை?
கண்களைத் திறக்க முயன்றார் மகாத்மா. எந்த வாக்கியத்தையும் சொல்லாமல் விடைபெற்றுக்கொண்டுவிட முடியாதே!
கம்பளியொன்றைக் கொண்டுவந்து போர்த்திவிட்டு விட்டுப் புறப்பட்டுக் காத்திருக்கும் அமிர்தசரஸ் ரயிலுக்கு விடைகொடுப்பதற்காகப் பச்சை விளக்கைத் தூண்டியெடுத்துக்கொண்டு ஓடினார் ஸ்டேஷன் மாஸ்டர். பிறகு அவருக்காகக் கொஞ்சம் வெந்நீர் தயாரித்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபொழுது எழுந்து உட்கார்ந்திருந்தார் மகாத்மா. அவரைக் கண்டதும் தன் பொக்கைவாய் திறந்து சிரித்தார்.
"உங்களுடைய வண்டி புறப்பட்டுப் போய்விட்டதே பாபுஜி...! அமிர்தசரஸுக்கான அடுத்த வண்டிக்காக நீங்கள் இன்னும் பதினெட்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்"
மகாத்மா பெருமூச்செறிந்தார். வெந்நீர் தந்த தெம்பில் இப்பொழுது அவரால் நன்றாக எழுந்து உட்கார முடிந்திருந்தது.
"நன்றி உங்களுக்கு. கடவுளின் சித்தம் இதுதான் போலிருக்கிறது. அவர் என் அஸ்டபோவாவை எங்கு தயாரித்து வைத்திருக்கிறாரோ அந்த இடத்தைத் தாண்டிச் சென்றுவிட முடியாதல்லவா?"
ஸ்டேஷன் மாஸ்டருக்கு முகம் வெளிறிவிட்டது.
"பாபுஜி, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். தீராத பழிக்கு ஆளாகிவிடாமலிருப்பதற்கு எனக்கு உதவுங்கள். இங்கே யாருமே இல்லை! உங்களுடைய கடைசி வாக்கியத்தைக்கூட நீங்கள் என்னிடம்தான் சொல்ல வேண்டியிருக்கும் பாபூ . அதைத் தாங்கிக்கொள்வதற்கான வலிமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்னை மன்னியுங்கள்! தில்லி ரயில் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் வந்துவிடும். தயவுசெய்து தில்லிக்குத் திரும்பிச் சென்றுவிடுங்கள். அங்கேதான் எல்லாம் நடக்க வேண்டும்."
அதற்கும் சிரித்தார் மகாத்மா.
"எல்லாம் முடிவாகிவிட்டதே! ஆனால் தயவுசெய்து எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள். எடுத்த எடுப்பிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டீர்களே, அது எப்படி? நீங்கள் ஏராளமான பாபுஜிக்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?"
ஸ்டேஷன் மாஸ்டர் சிரித்தார்,
"அது மிகச் சுலபமான காரியம் பாபு. அந்த ஏராளமான பாபுஜிக்களில் ஒருவர்கூடப் பயணச் சீட்டு எடுத்ததில்லை. கேட்டால் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தேனே, அது போதாதா என மல்லுக்கட்டுவார்கள். தவிர ..."
குறுக்கிட்டார் மகாத்மா.
"தவிர, எல்லாவற்றையும் நீங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தீர்கள், இல்லையா? உங்களுக்கு என் பயணமும் அதன் நோக்கமும் முன்னரே தெரிந்திருக்கிறது"
அவர் பதற்றமடைந்தார்.
"ஆனால் பாபுஜி. தயுவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்! இவ்விதமாய் முடிந்துவிடக் கூடாது அது. இது உங்கள் செய்தியாய் ஒருபோதும் இருக்கக் கூடாது"
சுட்டுவிரலை உயர்த்தி அவரைப் பேசாமலிருக்கச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார் மகாத்மா.
"இல்லை. என் அன்புக்குரிய சகோதரரே, என்னால் பின்வாங்க முடியாது. நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். இவ்வெளியேற்றத்திற்கும் நான் இங்கு வந்து சேர்ந்ததற்குமான நியாயங்களை இவ்வுலகம் நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் என நான் உறுதியாக நம்புகிறேன் சகோதரரே! ஆனால் இங்கே டாக்டர்கள் யாருமில்லையா? நிமோனியா முழு வீச்சில் என்னைத் தாக்கத் தொடங்கிவிட்டது!" என மறுபடியும் படுத்துக்கொண்டார்.
"இல்லை பாபுஜி, நிமோனியா என்றால் என்னவென்றே இங்குள்ள யாருக்கும் தெரியாது. தயவுசெய்து என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாம் அங்குதான் நடக்க வேண்டும்" எனச் சொல்லிக்கொண்டே தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார், "கடவுளே, இன்னும் பத்தே நிமிடங்கள்தான் எஞ்சியிருக்கின்றன, அதற்குள் என்னால் என்ன செய்ய முடியும்?" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல் முணுமுணுத்துவிட்டு "இது குறித்து வேறு யாரையும்விட நீங்கள்தான் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும் பாபுஜி. மரணத்திற்கான விருப்பத்தோடு அல்ல, வாழ்வதற்கான ஆசையுடனேயே நீங்கள் வெளியேறியிருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கவும் பணியவைக்கவும் நிகழ்ந்ததே இவ்வெளியேற்றம். நீங்கள் இதற்கு முன்பு மேற்கொண்ட உண்ணாவிரதங்களைப் போல்."
இதற்குத் தன்னிடம் பதில் இல்லை என்பதுபோல் மௌனமாக இருந்தார் காந்தி,
"ஆனால் இப்பொழுது அவர்கள் அனைவருமே இதை வேறுவிதமாகத்தான் எதிர்கொள்வார்கள் பாபூ. அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள்! நேற்றோ அதற்கு முன்தினமோ அவர்கள் தோற்றுப்போயிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள். இன்று அல்லது நாளை. நாளை அல்லது நாளை மறுநாள்... வெறும் நாள் கணக்குதான்."
"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எங்கே தவறு நிகழ்ந்தது? அதைத்தான் கடந்த மூன்று நாள்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்! நான் எல்லோரையும் சகோதரர்களாகவே கருதினேன். வரலாற்றுரீதியில் எனக்கு எதிரிகளாக நேர்ந்துவிட்ட வெள்ளையர்களையும்கூட நான் நேசித்தேன். அதையே நம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முற்பட்டேன். சத்தியத்தின் செய்தியையும் அஹிம்சையின் செய்தியையும் சொல்வதற்கு முயன்றேன்... ஒருவகையில்"
தயங்கினார் மகாத்மா.
"ஒருவகையில் கிறித்துவின் செய்தியைச் சொன்னீர்கள்! அதனால்தான் பிரிட்டிஷ் அரசால் உங்களைக் கொல்ல முடியவில்லை. கிறித்தவராக அல்ல, கிறித்துவாகவே நீங்கள் அவர்களுக்குத் தென்பட்டீர்கள் பாபுஜி..."
"ஆம், நான் ஒரு உண்மையான கிறித்தவன். கிறித்தவர்களைக் காட்டிலும் உண்மையான கிறித்தவன்"
புன்னகைத்தார் மகாத்மா. அவருடன் பேசுவது தன் மனசாட்சியிடம் பேசுவதைப் போல் இருந்தது காந்திக்கு. மனசாட்சி, வெகுதொலைவில் பெயர் தெரியாத ஒரு கிராமத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பதுதான் வேடிக்கை.
"அதனால்தான் தம் ஆயுதங்களை உங்கள் காலடியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் காலனியாட்சியாளர்கள்! அவர்களால் கிறித்துவை, தம் கடவுளை எதிர்க்க முடியவில்லை"
"நான் இந்து, மெய்யான இந்து... ராமனே என் கடவுள்! கீதையே என் தத்துவம்"
"அப்படி நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள் என யாராவது உங்களைக் குற்றம் சுமத்தினால் உங்கள் பதில் என்ன மகாத்மா?"
மௌனமாக இருந்தார் காந்தி.
"சொல்லுங்கள் பாபூ... உங்களுடைய தத்துவங்களை எதிலிருந்து வடிவமைத்துக்கொண்டீர்கள்? நம் மண்ணின் எந்தக் கடவுளிடமிருந்து அஹிம்சையைக் கற்றுக்கொண்டீர்கள்? நம் கடவுளர்களில் ஆயுதமெடுக்காதவர் என யார் இருக்கிறார்கள்? யார் தன் எதிரிகளை மன்னித்திருக்கிறார்கள்? யார் தன் மேலாடையைக் கேட்பவர்களுக்கு உள்ளாடையைக் கொடுத்திருக்கிறார்கள்? தன் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவர் யார்? அல்லது நீங்கள் வலியுறுத்திய எளிமையையாவது எந்தக் கடவுளாவது பின்பற்றியிருக்கிறதா? சொல்லுங்கள் பாபுஜி..."
நெடிய பெருமூச்சொன்று மகாத்மாவிடமிருந்து வெளிப்பட்டது.
"ஒரு சத்யாகிரஹியாக நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் சகோதரரே" என்றார் காந்தி. அவரது கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
"தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள் பாபூ..." மன்றாடினார் அவர்.
"இல்லை, மரணத்திற்கொப்பானது அது" எனத் தன் குரு டால்ஸ்டாயின் வாக்கியத்தை அவர் திருப்பிச் சொன்னார்.
மனசாட்சிக்குக் கோபம் வந்துவிட்டது.
"நீங்கள் உங்களுடைய சொந்த வாக்கியத்தைப் பேசுங்கள் பாபூ...! எங்களை உங்கள் சொந்த வழியில் எதிர்கொள்ளுங்கள். நாங்கள் உங்களைக் கொலைசெய்வதற்காகக் காத்திருக்கிறோம். ஒருவரையொருவர் பழி தீர்ப்பதற்கான யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறோம். வரலாற்றோடு எங்களுக்குக் கணக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டும். தில்லியின் தெருக்களில் இன்னும் உலராமலிருக்கிறது ஆயிரமாண்டுகளின் குருதி. எங்களுக்கு உங்கள் தத்துவங்களின் மேன்மையைக் கற்றுக்கொடுங்கள் அல்லது எங்களுடைய துப்பாக்கிகளிலிருந்து வெளிவரும் தோட்டாக்களைப் பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்..."
மூச்சு வாங்கியது அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு.
"விரும்பியது போன்ற ஒரு கவித்துவமான மரணத்தைப் பெயர் தெரியாத இந்தக் கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் அடைவீர்கள். உங்கள் வழியைப் பின்பற்றும் நாங்கள் ஒன்று உங்கள் மரணத்திற்குப் பிறகு உங்களுக்குத் துரோகம் செய்வோம் அல்லது கொல்லப்படுவோம். உங்களைப் போல் வேடமிட்டுக்கொண்டு உங்கள் தத்துவத்தை அழிப்போம். பகவதிசரண்களால் நிரம்பி வழியப்போகிறது இந்தப் புண்ணிய பூமி. நீங்கள் கடவுளாக்கப்படுவீர்கள்! எதையும் மாற்றச் சக்தியற்ற வெறுங்கடவுள். பிறகு அக்கடவுளின் பெயரால் கணக்குத் தீர்க்கும் யுத்தம் தொடங்கும். அது வெகுகாலம் நீடிக்கும் பாபுஜி"
பிறகு இருவரும் மௌனமாயினர்.
விளக்குக் கம்பத்தின் உச்சியிலிருந்து அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்த கரிய சிறகுகள் கொண்ட அப்பெரிய பறவை பிலாக்கணமெழுப்பியபடி அங்கிருந்து பறந்தது. நெடுந்தொலைவுவரை கேட்டுக்கொண்டிருந்தது அதன் பிலாக்கணம்.
"தீர்க்கதரிசனமென்றோ மூடநம்பிக்கையென்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்... ஆனால் இவை நடக்கும் பாபூ..."
ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் காந்தி. கண்களை மூடிக்கொண்டார்.
"இல்லை, என்னால் தோல்வியை ஏற்க முடியாது. என் எதிர்ப்பாளர்களுக்கு அஹிம்சையின் கவித்துவத்தை உணரவைப்பேன் நான்!"
"பாபூ... நீங்கள் உங்களுடைய முழு வாழ்க்கையையும் வாழ்ந்து தீர்க்க வேண்டும்"
"அதாவது 125 வருடங்கள்..."
"பாபூ... தில்லி ரயில் வந்து சேர்ந்துவிட்டது!"
மகாத்மா எழுந்தார்.
தில்லிக்குச் செல்லும் ரயிலின் நெரிசல் மிகுந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்றில் அதில் பயணம்செய்த எண்ணற்ற காந்திகளுடன் தானுமொருவராக உட்கார்ந்துகொண்டார் மகாத்மா. ஒரு குவளை ஆட்டுப் பாலுடனும் கொஞ்சம் வேர்க்கடலையுடனும் மூச்சிறைக்க ஓடிவந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.
"நீங்கள் நலமாக இருக்க வேண்டும் பாபுஜி...! தங்கள் மரணம் எங்கள் வாழ்வின் செய்தியாக இருக்க வேண்டும்" எனத் தீராமல் பெருகிய கண்களைத் துடைத்தபடி மகாத்மாவிடம் சொன்னார் அவர்.
mmm
இரண்டு நாள்களுக்குப் பிறகு 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மிகத் தாமதமாகத் தில்லியை வந்தடைந்தது காந்தி பயணம்செய்த ரயில் வண்டி. அங்கிருந்து கால்நடையாக பிர்லா மாளிகையை அடைந்தபொழுது நேரம் 4 மணி 50 நிமிடம்.
பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதே எனப் பின்புற வாயிலின் வழியே அவசர அவசரமாக பிர்லா மாளிகைக்குள் நுழைந்தார் மகாத்மா. அதன் மிகப் பெரிய தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மகாத்மா பகவதிசரண், காந்தி வந்ததைக் கவனித்தாரா எனத் தெரியவில்லை. அறைக்குத் திரும்பி, குளியலறையினுள் நுழைந்து முகம் கழுவிக்கொண்டிருந்தபொழுது வெளியிலிருந்து தனிக்லால் தன்னை அழைப்பது கேட்டது காந்திக்கு.
"பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது பாபுஜி, அவர் வந்துவிட்டார்!"
உரத்த குரலில் அவருக்குப் பதிலளித்தார், மகாத்மா.
"இதோ வந்துவிட்டேன் தனிக்லால்ஜி. அவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள்"

by Swathi   on 05 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
கருத்துகள்
26-Jan-2020 15:50:36 vinoth said : Report Abuse
எனக்கு உதவ vnkbd
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.