LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

தோழர் நல்லக்கண்ணு

 

இளமைகாலம்:திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1923ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18-வது வயதிலேயே .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 
தன்னை இணைத்துக் கொண்டவர்.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் 
எழுதினார். முதல் நடவடிக்கை:அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய 
முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் 
வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் 
இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது
சாதி எதிர்ப்புப் போராளி:இவருடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து“ கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து 
கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை 
விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் 
வாழ்க்கையை சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சாதீய ஒடுக்கு முறைகள் 
மேலோங்கியிருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் பிரிவில் பிறந்தவர். ஆனால், தான் பிறந்த முக்குலத்தோர் சாதிக்கு எதிராகவே களம் 
இறங்கியவர் நல்லக்கண்ணு.

வாழும் வரலாறு தோழர் இரா.நல்லகண்ணு

 

காந்தியின் கைத்தடியைவிட, இங்கிருக்கும்  நிலவுடைமையாளர்களின் குண்டாந்தடிகளுக்குத்தான் வலு அதிகம் என்பதை உணர்ந்தார் நல்லகண்ணு.இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, சுதந்திர தினத்துக்கும் குடியரசு அறிவிப்புக்கும் இடைப்பட்ட காலம் சோதனை மிகுந்தது. பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள்… விவசாயிகள் பலி… இதனை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டங்கள் வெடித்தன. கம்யூனிஸ்ட் இயக்கம் இதற்குத் தலைமை தாங்கியது. இதனால் 1948_ம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்கள் தலைமை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு போராட்டத்தை வழிநடத்தினர். இந்தக் காலகட்டத்தில் நல்லகண்ணு கிராமம் கிராமமாகச் சென்றார். விவசாயிகளைச் சந்தித்து வெப்பமேற்றினார். பகலில் தோழர்களுடன் சந்திப்பு… இரவில் கிடைக்குமிடத்தில் ஓய்வு.

 

வீரம்:

1949, டிசம்பர் 20ம் தேதி. திருநெல்வேலி மாவட்டத்தில் புலியூர்க்குறிச்சி என்ற ஊரில், தலித் தோழர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக்கு வெடிகுண்டுகளுடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. சுற்றி வளைத்தது போலீஸ். நல்லகண்ணு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரிடமிருந்து வந்த ஒரே பதில் ‘தெரியாது’ மட்டும்தான். இன்ஸ்பெக்டர், தனது கனத்த பூட்ஸ் கால்களால் அவரது கால்களில் ஏறி மிதிக்கிறார். வலியில் துடித்த போதும், நல்லகண்ணுவிடமிருந்து தொடர்ந்து வெளிவந்த பதில் ‘தெரியாது’. பொறுமையிழந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டைப் பற்ற வைத்தார். குனிந்தார். சிகரெட் நெருப்பை தோழரின் மீசையில் வைத்து அழுத்தினார். நல்லகண்ணு வலியால் துடித்தார். மீசை கருகி, நெருப்பு சதையையும் பொசுக்க ஆரம்பித்தது. ஆனால், அந்த இரும்பு மனிதரிடமிருந்து போலிஸக்குத் தேவையான ஒரு பதிலும் வந்து சேரவில்லை.

 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் நல்லகண்ணு மீசைக்கு விடை கொடுத்தார். மீசை வீரத்தின் அடையாளம் என்பார்கள். தோழருக்கு வீரத்தின் அடையாளம் மீசையல்ல; அவரது துணிச்சலான மனசல்லவா!கைது செய்யப்பட்ட நல்லகண்ணு சிறையிலடைக்கப்பட்டார். அவர் உட்பட 95 பேர் மீது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. இதில் 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம். நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததால் ஆயுள் தண்டனையுடன் மேலும் ஆறு வருட சிறைத்தண்டனை. பின்னர் வந்த ராஜாஜி அரசு ஆயுள் தண்டனையை ரத்து செய்து மற்றவர்களை விடுவித்தது. ஆனால், வெடி மருந்துச் சட்டத்தின் கீழ் நல்லகண்ணு தண்டிக்கப்பட்டதை மட்டும் திரும்பப் பெற முடியாதென்று கூறிவிட்டதால், 1951லிருந்து 1956 வரை ஏழாண்டு காலம் சிறைவாசம். சிறையை அவர் தண்டனைக் கூடமாக நினைக்கவில்லை. பள்ளிக்கூடமாய் நினைத்தார். ஏராளமான புத்தகங்கள் படிக்க, படிக்க, அவரது சிவப்புச் சிந்தனை மேலும் அடர்த்தியானது. சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் ஜனசக்தியில் வெளிவந்து தோழர்களுக்கு எழுச்சியூட்டின. 1956 டிசம்பர் மாதம் சிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தது. ‘பதவி வரும்போது, பணிவு வர வேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழா!’ என்பது பாடலென்றால், பணிவும் துணிவும் இருந்ததால் இந்தத் தோழருக்கு கட்சியில் பல பதவிகள், பொறுப்புகள் தேடி வந்தன.

 

நிதானம்!

1980_களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகளில் பெரிய வகுப்புக் கலவரம் வெடித்துக் கிளப்பியது. பல இடங்களில் கொலை, கொள்ளை… இந்த நிலையில், கலவரத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதற்காக, சர்வகட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தலைவர்களும் சுற்றுப்பயணம் செய்து இருதரப்பு ஜாதியினரையும் சந்தித்து, சமரசப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று முடிவானது. இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க நல்லகண்ணு .சென்னையிலிருந்து நெல்லை வந்து சேர்ந்தார். அதே நேரம் அமைதி திரும்பி விடுமோ என்று நடுங்கிய கலவரக்காரர்கள், கலவர வெப்பம் குறைந்துவிடக் கூடாதென்பதற்காக நல்லகண்ணுவின் வயோதிக மாமனார் அன்னசாமியைக் கொடூரமாய்க் கொன்றனர்.

 

தோழர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப்போய்விடுவார் என்று பலர் நினைக்க… அதற்கு மாறாக, சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டபடி நிகழ்த்தினார். காவல் துறையினர், ‘இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்குச் சென்றால், மேலும் கலவரம் பெரிதாகும்’’ என்று அச்சம் தெரிவித்த போதும், அதை ஒதுக்கி விட்டு சுற்றுப்பயணத்தை அஞ்சாமல் மேற்கொண்டார். அமைதியை வலியுறுத்தினார். ‘‘மாமா அப்பகுதியில் தொடர்ந்து வசித்து வருகிறார். அப்பகுதியைச் சார்ந்த தலித்துகள் நிச்சயம் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை மோதலை வளர்க்கவேண்டுமென விரும்பி, ஆதிக்கம் செலுத்த விரும்புவோரே இதனைச் செய்து தலித்துகள் வெட்டி விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். மாமனார் கொலை செய்யப்பட்டதற்கு உணர்ச்சிவயப்பட்டு அவர் பொங்கியிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். மாறாக, அவர் நிதானத்தைக் கடைப்பிடித்தது உணர்ச்சிவயப்படாத தலைமையின் அடையாளம்!

 

பொறுமை!

நல்லகண்ணு கோபப்படவேமாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம். ‘கோபமாகப் பேசி, பிறரை ஏன் துன்புறுத்த வேண்டும்? பிறர் மனம் புண்படக் கூடாது’. ஆனால், இவருக்கும் கோபம் வரும். உயிராக நினைக்கும் கட்சியை யாரேனும் கடுமையாய் விமர்சிக்கும்போது. இருபதாண்டுகளுக்கு முன் திருப்பத்தூர் இடைத்தேர்தல். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஒரு காரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, தரக் குறைவான முறையில் பிரசாரம் செய்து கொண்டு போனார்கள். காவல் துறையிடம் முறையிட்டும் பயனில்லை. நல்லகண்ணுதான் அங்கு தேர்தல் பொறுப்பேற்றிருந்தார். மோசமான அந்தப் பிரசாரத்தால் பொறுமையிழந்து கோபமடைந்த நல்லகண்ணு இளைஞர்களை அழைத்து அந்த காரை தடுத்து நிறுத்தும்படி கூறியதுடன், தானும் கையில் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு பாய்ந்தார். பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்ட பிறகுதான் அவரது கோபம் தணிந்தது.

 

தோழர்கள் பணம்!

கட்சிப் பணம் அநாவசியமாய்ச் செலவு செய்யப்படுவதை இவரால் சகிக்க முடியாது. பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து அம்பத்தூர் திருமுல்லைவாயிலுக்கு இவர் வீட்டை மாற்றிய பிறகு ரயிலிலேயே சென்று வந்தார். எல்லாத் தோழர்களும் காரில் போகச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் ‘என் ஒருவனுக்காக மட்டுமே இவ்வளவு தூரம் காரில் சென்று வந்தால், நிறைய செலவாகிறதே. பணம் என்ன கொட்டியா கிடக்கு? நம்ம ஏழைத் தோழர்கள் ஒவ்வொரு ரூபாயா சேர்த்துக் கொடுக்கற நிதியை இப்படி விரயம் செய்யக் கூடாது’ என்று கூறி மறுத்து விட்டார். ஆனால், ரயில் பயணம் கொஞ்சநாள்தான். அப்புறம் காரில் போக ஆரம்பித்தார். ரயிலில் போகும்போது பலர் அவரது காலில் விழுந்து வணங்கி சங்கடப்படுத்துகிறார்களாம்.

 

இன்னொரு முகம்!

பார்க்க ஒரு கிராமத்தான் போல தோற்றம். ஆனால், பேச ஆரம்பித்தாலோ இவரது இன்னொரு தோற்றம் பிடிபட்டு வியக்க வைக்கும். சிவப்புச் சித்தாந்தத்தைப் போலவே இவருக்கு இலக்கியத்தின் மீதும் அலாதி காதல் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து சமீப இலக்கியம் வரை இவருக்கு அத்துப்படி. ஆங்கில மொழியில் புலமை; தேர்ந்த பேச்சாற்றல்; படைப்புத்திறன் இவையெல்லாம் நல்லகண்ணுவின் இன்னொரு முகங்கள். பாரதியின் கவிதைகள் பள்ளி நாட்களிலிருந்தே இவர் இதயம் கவர்ந்தவை. இப்போது கூட, நல்லகண்ணு பேசும் போது, பாரதி கவிதைகளை மேற்கோள் காட்டுவார். திராவிடக் கவிஞர் என்று பாரதிதாசனை காம்ரேட்டுகள் தள்ளி வைத்த போதும், இலக்கியச் சுவை மிகுந்த அவரது புரட்சிப் பாடல்கள் நல்லகண்ணுவின் நெஞ்சு கவர்ந்தவை.

 

எளிமை!

கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றால், கையில் ஒரு துணி பை மட்டும்தான். அதில் மாற்றுக்கு உடை இருக்கும். பெரும்பாலும் கட்சி ஆபீஸ்களிலேயே தங்கி விடுவார். வெளியில் வாடகை அறைகளில் தங்க ஒப்புக்கொள்ள மாட்டார். அங்கேயே தனது அழுக்குத் துணிகளைத் தானே துவைத்து காயவைத்து மடித்து தலையணைக்குக் கீழே வைத்து தூங்குவார். காலையில் எழுந்து பார்த்தால் அயர்ன் செய்த சட்டை ரெடி! ஒரு முறை நல்லகண்ணு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ‘‘என் குடும்பத்துக்கு நான் பொருளாதார ரீதியில் எந்த உதவியும் செய்ததில்லை. அளப்பரிய அன்பை மட்டுமே செலுத்தியுள்ளேன். அவர்களும் எதையும் எதிர்பார்க்காமல் என்மீது அன்பு செலுத்தி வருகிறார்கள்…’’

 

ரெட் சல்யூட்!

அரசியலுக்கு வந்து அறுபதாண்டுகளுக்கு மேலாகியும் நல்லகண்ணுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது என்பது தெரியுமா? அவர் இப்போது வசித்துக் கொண்டிருப்பது தனது மகள் டாக்டர் ஆண்டாளின் வீட்டில். நினைப்பெல்லாம் கட்சி, தோழர்கள், போராட்டம் என்றே இருந்ததால், பணம் சேர்க்கும் நினைப்பே தோழருக்கு வரவில்லை போலும். அவரது எண்பதாவது வயது நிறைவு விழாவில் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ‘எனக்கெதுக்கு பணம்? கட்சி நிதிக்கு அதைக் கொடுத்துடறேன்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறிய அந்த உயர்ந்த, ஒப்பில்லாத, தங்கமான மனசு யாருக்கு வரும்?

 

திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.  சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர்.

நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள்.  புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு.  நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம். நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார். காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும். ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும். அரசுக் குடியிருப்பில் 6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை 4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் 2012ல் கொண்டாடிய வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராக தோழர் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

 

’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒளி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

 

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள். தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர். தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு தமிழ் அரசியல் பொது வாழ்வில் ஈடுபட நினைக்கும் மனிதர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

 

by Swathi   on 21 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
எல். கணேசன் எல். கணேசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.