LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- விமலாதித்த மாமல்லன்

போர்வை

ராவ்ஜி பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.

கீழே பத்தர் வீட்டிலிருந்து ‘ஐயோ மாமா’ என்ற பெருத்த அலறல் கேட்டது. ராவ்ஜியை இந்தக் கூக்குரல் கொஞ்சம் அதிகப்படியாகவே திடுக்கிட வைத்து விட்டிருக்க வேண்டும். கையிலிருந்த பிரஷ் தவறிக் கீழே விழுந்துவிட்டது. அதை தரையில் விழுந்து விடாதபடி பிடிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் கைகளிலும் வேஷ்டியிலும் நுரை பூசிக்கொண்டது. பல் தேய்ப்பை அத்துடன்  முடித்துக் கொண்டு அவசரமாய் வாய் கொப்பளித்து சட்டை அணிந்து கொண்டு படிகளில் இறக்கிக் கீழே ஓடினார். அடுப்படியில் காப்பி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ராவ்ஜியின் மனைவி எல்லா ஜோலிகளையும் அப்படியே போட்டுவிட்டு ஸ்டவ்வை மட்டும் அணைத்துவிட்டு கீழே ஓடி வந்தாள்.

பத்தர் ஈஸிச்சேரில் படுத்தபடி செத்துப் போயிருந்தார். மருமகளின் அழுகை  இல்லாமல் இருந்தால்  அவர்  விசேஷ  கவனத்தைப் பெறாதவராகத்தான் இருப்பார்.அந்த வீட்டிற்கு குடிவந்து முழுசாக ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பதாலும், சாவு விழுந்த வீட்டார் பிரமாணர்களல்ல என்பதாலும் ராவ்ஜியால் அருகில் செல்ல முடியவில்லை. பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இப்போது அழ ஆரம்பித்துவிட்டிருந்தனர். பிள்ளையையும் மருமனையும் எப்போது நடந்தது, எப்படி நடந்தது என்று விசாரித்தார். அழுகையில் உடைந்த குரலில் பத்தரின் பிள்ளை சொன்ன எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த அர்த்தத்தையும் தந்துவிடாத நாலைந்து வார்த்தைகளில் தேறுதல் சொன்னார். அது அங்கிருந்த சத்தத்தில் யாருக்காவது கேட்டிருக்குமா என்பது சந்தேகம்.

மாடிக்கு வந்த ராவ்ஜியின் பின்னாலேயே அவர் மனைவியும் வந்து விட்டாள். படுக்கையில் ராவ்ஜியின் பையன் மலங்கமலங்க விழித்தபடி எழுந்து உட்கார்ந்திருந்தான். அப்பா அம்மாவைக் கண்டதும் அழத்தொடங்கினான். ராவ்ஜியின் மனைவி பையனை, அணைத்துத் தேற்றினாள். படுக்கையும் பையனின் நிஜாரும் ஈரமாக இருந்தன. அந்த ஈரம் சமீபத்தியதாக இருக்க வேண்டும். பாயையும் பெட்ஷீட்டையும் எடுத்தபோது தரை சொதசொதவென்று இருந்தது.

சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு ஷேவிங் செட்டை எடுத்து ஜன்னலில் வைத்துக் கொண்டு பிளேடுக்காகத் தேடினார். அப்போதே ஒரு சந்தேகமும் வந்தது. மனைவியை விசாரித்தார். அவள் ஏதும் பேசாமல் ஆணியில் மாட்டியிருந்த மாத்வபந்து பஞ்சாங்கத்தை எடுத்துக் காட்டினாள். அன்றைக்கு அமாவாசை என்று அதில் போட்டிருந்தது. ”சரி சரி காபி தே” என்றார்.

பில்டரில் டிகாஷன் பாதி இறங்கியிருந்தது. வாங்கி வந்த பால் காய்ச்சப்படாமல் ஸ்டவுக்குப் பக்கத்தில் இருந்தது. மண்ணெண்ணெய் குப்பியிலிருந்து ’காக்கடாவை’ எடுத்தவள் ’காய வோ’ என்று கணவனைக் கூப்பிட்டாள். பையனுக்கு டிரௌசர் மாற்றிக் கொண்டிருந்த ராவ்ஜி சமையலறைக்கு வந்தார். இழவு வீட்டில் அடுப்பு பற்ற வைக்கக் கூடாததைப் பற்றி அவள் சொன்னாள். ராவ்ஜி பூணூலை அப்படியும் இப்படியுமாக அரக்கியபடி யோசனை செய்தார். பிறகு முன் அறைக்கு வந்து அலமாரியைத் திறந்து பார்த்தார். நான்கு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. மூன்று பேருக்குமாக டிபனுக்கு ஒரு மாதிரியாகத் தேறிவிடும். மத்தியான சாப்பாடுதான் சிக்கல்.

டிபன் வாங்கிவரக் காசிருந்தாலும் அதைக் கொண்டு வருவது ஒருவிதத்தில் சிக்கல்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிணத்தை நடுக்கூடத்தில் கிடத்தி விடுவார்கள். மாடிப்படியை அடைய, கூடத்தைக் கடந்துதான் வந்தாக வேண்டும். மாடிப்படியில் வந்து தலையை மட்டும் நீட்டிப் பார்த்தார். அக்கம்பக்கத்து வீட்டார்கள் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள். என்னதான் பையில் போட்டுக் கொண்டு வந்தாலும் டிபன் பொட்டலங்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்துவிடும். அது அவ்வளவு நன்றாக இருக்காது.

பக்கத்து மதில் சுவருக்கு மேலிருந்து குரல் வந்தது. ”என்ன சார் என்னமோ சத்தம் கேட்டுதே” - பக்கத்து வீட்டு ஐயர். அவர் கஸ்டம்ஸில் வேலையாய் இருந்தார். ராவ்ஜி சென்ட்ரல் எக்ஸைஸ் என்பதால் அவர்களுக்குள் நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. ராவ்ஜி தாழ்ந்த குரலில் சேதியைச் சொன்னார். கூடவே தம் பிரச்சனையும் சொல்லிக் கொண்டார்.

”எங்காத்துல அடுப்புப் பத்தவைக்கக் கூடாதுன்னு ஒண்ணும் இல்லை. ஏன்னாக்க இந்த செவர் எங்காத்த சேர்ந்தது. அந்த செவர்தான் பத்தர் ஆத்துது. ஸோ பக்கத்தாத்துல இருக்கிறவாதான் அடுப்புப் பத்த வைக்கக் கூடாது. பைதிவே எங்காத்துலயும் இப்ப அடுப்பு பத்த வெக்கிற வேலை ஒண்ணும் இல்லை”. ஐயர் மனைவி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குப் போயிருந்தாள். ஐயர் அடுத்த தெருவிலிருக்கும் தம் அக்கா வீட்டில் சாப்பிட்டு வந்தார்.

ஐயர்தான் பிரச்சனையைத் தீர்க்க உதவினார். அவர் தம்வீட்டுச் சுவருக்கு அருகில் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். ராவ்ஜி படிக்கெட்டிலிருந்து மதிலுக்குத் தாவி நாற்காலி வழியாகத் தரையில் இறங்கினார். மூச்சு வாங்கியது. ராவ்ஜி அதுவரை ஏறியிருந்த அதிகபட்ச உயரமெல்லாம் அவர் வீட்டிலிருக்கும் ஸ்டூல் மேல்தான் ப்யூசான பல்பைக் கழற்றி புது பல்ப் மாட்டவேண்டி.

குளித்து முடித்து டிபன் சாப்பிட்டதும் இலைகளை என்ன செய்வதென்று புரியவில்லை. எவ்வளவு ஜாக்ரதையாக அப்புறப்படுத்தினாலும் அவ்வளவு கும்பலில் நிச்சயம் சிலரேனும் பார்த்துவிடக்கூடும். தெருத் திண்ணையில் நிறைய பெஞ்சுகள் போடப்பட்டு நிரம்பி, விளக்குக்கம்பம் கொறடு என்று எங்கு பார்த்தாலும் நின்றுகொண்டு இருந்தார்கள். பத்தருக்கு நிறையவே செல்வாக்கு இருந்திருக்கிறது என்று ராவ்ஜீக்குத் தோன்றியது. அப்புறம் எப்படியாவது அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று ராவ்ஜியின் மனைவி ஸத்யத்திற்கு சமையலறையில் அம்மிக்குப் பக்கத்தில் பாத்திரம் தேய்க்க என்றிருந்த குழிவான இடத்தில் போட்டு வைத்தாள்.

ராவ்ஜியின் தாய் தந்தையர் எல்லாம் க்ஷேமமாக ஊரில் இருந்தபடியால் அன்றைய அமாவாசை ஷேவ் பண்ண விடாமல் தடுத்தது தவிர அதிகம் சங்கடப்படுத்தவில்லை. ஆனால் அமாவாசைக்கு இருந்த பெருந்தன்மைகூட பேண்டிற்கு இருக்கவில்லை. ஆபீஸ் செல்ல படிக்கட்டில் இறங்கி மதில்மேல் ஏறும்போது பேண்ட், தொடையை இறுக்கிப் பிடித்து ஏகமாக வலிக்கச் செய்தது.

ஒருமாதிரியாக ’தம்’ பிடித்து மதிலில் இருந்து இறங்கினார். நாற்காலி சரியாக பாவி நிற்காமல் ஆடி ராவ்ஜியை ஏகமாக பயமுறுத்தியது.

ஐயர் தம் ஆபீஸூக்கு ராவ்ஜியின் ஆபீஸைத் தாண்டித்தான் செல்ல வேண்டுமாதலால் இருவரும் ஒன்றாகவே கிளம்பினர். ராவ்ஜியே பேச்சை ஆரம்பித்தார்.

”இன்னக்கி அமாவாசையாமே, ஷேவ் பண்ணிக்கப் போம்போதுதான் தெரிஞ்சது. வய்ஃப் சொன்னா. நல்லவேளை முன்னாடியேத் தெரிஞ்சிது. இல்லேன்னா இருக்கிற பாவம் போதாதுன்னு அது வேற”.

ஐயர் அன்று காலையில் தான் ஷேவ் பண்ணி இருந்தார். ராவ்ஜி தம் அவசரத்தில் காலையில் பத்தர் இறந்துபோனது பற்றி பேசிய போது ஐயர் ஷேவ் பண்ணாமல் இருந்ததைக் கவனிக்கத் தவறியிருந்தார். ஐயர் கொஞ்சம் சங்கடப்பட்டு சிரித்தபடி, இது தெரிந்து தாம் நேற்றே ஷேவ் பண்ணிக் கொண்டு விட்டதாகத் தெரிவித்தார்.

“ஆமா பாடியை எப்போ எடுக்கப் போறாளாம்”.

”சாயரட்சைக்கு எடுத்துடுவா”.

”பொண்ணு பிள்ளைகள் எல்லாம் உள்ளூர்லதானே இருக்கா”.

கொஞ்சம் அவசரமாக பேச்சைத் தொடர்ந்தார் ராவ்ஜி. பத்தரைப்பற்றி, பேச்சை எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்தபடிதான் அவர் வந்து கொண்டிருந்தார். அவர்கள் பத்தர்கள் என்கிறபடியால் பிணத்தை உட்காரவைத்துதான் எடுத்துப் போவார்கள் என்று ராவ்ஜி சொல்ல, தம் ஊரில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் எப்படி ஒருவனுக்கு உயிர் வந்துவிட்டது என்பது பற்றி ஐயர் சுவாரசியத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார். அவருடைய பேச்சைக் கேட்கவே இந்த உலகில் தாம் ஜனித்திருக்கிறோம் என்பது போன்ற முகபாவத்துடன் ஐயரின் முகம் பார்த்தபடியே நடந்து வந்து கொண்டு இருந்தார். தம் ஆபீஸ் நெருங்கிய நேரத்தில் ராவ்ஜி மிகவும் அன்யோன்யமான குரலில்,

”மத்யானம் டிபன் கேரியர்ல சாப்பாடு கொண்டாரணும். அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல இருக்கு”. என்று பேச ஆரம்பித்ததும் ஐயரின் கை அனிச்சையாக பாண்ட் பாக்கெட்டைத் தடவிக் கொண்டது.

ராவ்ஜி ”உங்காத்து சாவியைக் கொஞ்சம் ஸ்ரமம் பாக்காம குடுத்தேள்னா ரொம்ப உதவியா இருக்கும்”. என்று முடித்ததும்தான் ஐயருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சட்டைப் பாக்கெட்டிலிருந்து சாவியை உடனே எடுத்துக் கொடுத்தார். ராவ்ஜி நன்றி தெரிவித்தார். அவர் மட்டும் சாவியைக் கொடுக்காத பட்சத்தில் தாம் எப்படியெல்லாம் அவதிப்பட நேரும் என்பது பற்றிக் கூறி மறுபடியும் ஒரு தடவை நன்றி தெரிவித்தபடி விடை பெற்றுக் கொண்டு தம் ஆபீஸிக்குள் நுழைந்தார்.

தம் சேரில்போய் உட்கார்ந்து சிறிது நேரத்திற்கு எதுவும் செய்யாமல் சும்மா இருந்தார். தினமும் தமது சேரில் உட்காரும் முன்னால் கர்சீப்பால் இரண்டுமுறை தூசியேதும் இல்லாவிட்டாலும் தட்டிவிட்டு உட்காருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. காலியாக இருந்த சேர்களைப் பார்த்ததும் அந்தந்த சேர்களுக்கு உரியவர்களின் முகங்கள் நினைவிற்கு வந்தன. அந்த அறையில் ராவ்ஜியையும் சேர்த்து நான்கு ஆண்களும் வயதேறி ஸ்தூலப்பட்ட ஒரு லேடி டைப்பிஸ்டும் இருந்தனர். எல்லோருமே ராவ்ஜியைவிட வயதில் சிறியவர்கள். இதில் ராவ்ஜிக்குக் கொஞ்சம் திருப்தி.

கொஞ்ச நேரம் கழிந்ததும் அந்த செக்ஷனில் பணிபுரியும் மற்றவர்கள் தத்தம் சேர்களை நோக்கிச் சென்றபடி அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். எல்லோருக்கும் முன்னதாக - ரெண்டு நிமிஷமாவது முன்னதாக - ஆபீஸுக்கு வந்து விடுவது ராவ்ஜிக்கு வழக்கம்தான். வீட்டில் இவ்வளவு களேபரம்நடந்தும்கூட தாம் எல்லோருக்கும் முன்னதாக வந்து விட்டிருந்ததில் கொஞ்சம் கெத்தாக உணர்ந்தார்.

பத்து நாட்களுக்கு முன்னதாகத்தான் அவசரத்திக்கென்று இரண்டுபேரிடமும் ஒன்றும் இரண்டுமாக வாங்கி இருந்தார். மூன்றாவது ஆசாமிக்கு சேர் இல்லை. அவன் ராவ்ஜியைவிட வயதில் ரொம்ப சிறியவன், அந்தஸ்திலும். அந்த அறையில் அவனைத் தவிர அனைவரும் யூ.டி.சிக்கள், அவன் ப்யூன். அந்த அறையிலேயே ராவ்ஜிதான் அதிக ஸெர்வீஸானாவர்.

தம்முடைய வயதிற்கும் ஸெர்வீஸிற்கும் மற்றவர்கள் கொஞ்சம் தள்ளி நின்று பேச வேண்டும் என்கிற ராவ்ஜியின் எதிர்பார்ப்பை மிக லாவகமாக ஒதுக்கி எல்லோரிடமும் பேசுவது போலவே ராவ்ஜியிடமும் உல்லாசமாகப் பேசுவான் அவன். அந்த சமயங்களில் ராவ்ஜி கொஞ்சம் சங்கடமாக உணர்வதுண்டு. அவர், சமயம் கிடைக்கிற போதெல்லாம் அவனை மட்டம் தட்டுகிற விதமாகவே பேசியும் நடந்தும் வந்தார். இதுவே அவர்களுக்குள் ஒருவித நெருக்கத்தை உண்டுபண்ணிவிட்டிருந்தது. அந்தமாதிரி சமயங்களில் அதை உவப்புடன் சிரித்தபடியே ஏற்றுக் கொண்டு அவன் தனது இயல்புப்படியே பழகி வந்தான். அவன் பிரமணனாக இல்லாதிருந்தாலும் பரவாயில்லை. பறையனாக வேறு இருந்தான். ஆனால் அவனை பார்ப்பவர்கள் யாரும் அப்படி சொல்ல முடியாது. அவன் தன்னுடைய ஜாதி வெளியில் தெரியாதபடி வேஷம் கட்டித் திரிவதாக ஒரு தடவை முன்னால் இந்த செக்1ஷனிலிருந்த வைத்யநாத ஐயரிடம் ராவ்ஜி சொல்லியிருந்தார். அவனிடம் கடன் கேட்பது அவனுக்கு அதிகம் பிடி கொடுத்ததாக ஆகிவிடும் என்று தோன்றியது. அவர் அதுவரை லேடிடைபிஸ்டிடம் கடன் வாங்கியதில்லை. முதல் தடவையாகக் கேட்க தயக்கமாக இருந்தது.

பைல்களைப் புரட்டியபடி ஏதேதோ யோசனை செய்துகொண்டு இருந்தார். ஒரு சமயம் ஐயரிடமே கேட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. ஐயர் இவ்வளவு செய்ததே பெரிய காரியம். ஐயரும் அவர் மனைவியும் ரொம்ப கெட்டி என்று மனைவி சொல்லியிருந்தாள். கேட்டதும் சாவியைக் கொடுத்துவிட்டார். பணம் என்றால் சந்தேகம்தான் கேட்டு இல்லையென்று அவர் சொல்லியிருந்தால் அது அவ்வளவு நன்றாக இருந்திருக்காது. கேட்காமல் இருந்து விட்டது நல்லது என்றே பட்டது.

அவன் வந்தான். டெரிகாட்டன் துணியில் சீருடை அணிந்திருந்தான். சீருடையில்கூட அவன் நன்றாக இருப்பது ராவ்ஜியைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியது.

கொஞ்சம் கிண்டல் தொனிக்கும்படியான விறைப்புடன் ராவ்ஜிக்கு சலாம் வைத்தான்.

“என்னப்பா இன்னிக்கு ஜம்முனு வந்திருக்கே என்ன விஷயம்”.

“என்னா சார் கார்த்தாலேயே கலாட்டா பண்ண ஆரம்பிச்சிட்டிங்களே”.

“இந்தா இந்த பைலை ஆடிட் செக்1ஷன்லக் குடுத்துட்டு கேண்டீனுக்கு வா. அங்க இருக்கறேன்”.

அவன் பைலை எடுத்துக் கொண்டு நகர்ந்ததும் மேஜை டிராயரைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கேன்டீனை நோக்கிப் போனார். காலையில் டிபன் வாங்கியது போக ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. கௌண்டரில் இரண்டு டீகளுக்கு டோக்கன் வாங்கும் போது அவன் வந்தான். இரண்டு டீ கிளாஸ்களை வாங்கிக் கொண்டு கேண்டீனின் மூலையை நோக்கி நடந்தார்.

ராவ்ஜி டீ வாங்கித் தருவது பற்றிய சந்தோஷம் அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் அவருக்கு எதிரில் அமர்ந்தான். கொஞ்ச நேரம் ராவ்ஜி மௌனமாக இருந்து தாம் சொல்கிறதை அவன் தட்டாமல் செய்வான் என்று மனசுக்குப் பட்டதும் பேச ஆரம்பித்தார்.

”வீட்ல கொழந்தைக்கு உடம்பு சரியில்லை மணி. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். ஒரு பத்து ரூபா இருந்தா...” - அவர் பேசிக் கொண்டிருக்கையிலே அவன் இடைமறித்து,

“ஏன் சார் இதை மொதல்லியே சொல்லக் கூடாதா, இன்னா சார் நீங்க எங்கிட்டக் கூடவா மூணாம் மனுஷன்கிட்டக் கேக்கறா மாதிரி தயங்கித்தயங்கிக் கேக்கணும்” என்றபடி சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

ராவ்ஜி கொஞ்சம் சங்கடத்திற்கு உள்ளானவராக ”உன் செலவுக்கு என்னப்பா செய்வே” என்றார்.

அவர் கைகளில் பணத்தை வைத்து அழுத்தியபடி, ”நான் இன்னா சார் ஒண்டிக்கட்டை. வெட்டியா செலவாவறது முக்கியமானதுக்கு செலவானா நல்லதுதானே சார்” என்றான்.

அரைமணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு மத்தியானம் அவர் அவசரமாக வீட்டிற்குப் போனார். மனைவி டிபன் கேரியரை நன்றாகக் கழுவி தயாராக வைத்திருந்தாள். ஓட்டலிருந்து சாதமும் குழம்பும் பொறியலும் அடைக்கப்பட்ட கேரியருடன் மதில்மேல் ஏறுவது சிரமமாகவே இருந்தது. சாப்பிட்டு முடித்து ஆபீஸ் வந்தபோது மணியைக் காணவில்லை. விசாரித்ததில் கலெக்டர் வீட்டிற்குப் போயிருப்பது தெரிந்தது. அவனை உடனடியாகப் பார்த்து உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் போல் இருந்தது. அவன் கலெக்டர் வீட்டிலிருந்து அப்படியே போய் விட்டிருக்க வேண்டும். ஆபீஸ் விட்டபின்னர் அரைமணி நேரம் காத்திருந்தும் அவன் வரவில்லை.

சாயங்காலமே பிணத்தை எடுத்துவிட்டிருந்தார்கள். ராத்திரி, மனைவி சுண்டைக்காய் கொத்சு பண்ணியிருந்தாள். சாப்பிடும்போது, கீழ்வீட்டில் அவ்வளவு பேருக்கும் ஓட்டலிலிருந்து வரவழைத்தால் ரொம்ப செலவாகும் என்று தன்னிடம் அண்டா கேட்டு வாங்கி வீட்டிலேயே சமைத்து விட்டார்கள் என்று பேச்சோடு பேச்சாகத் தெரிவித்தாள். ராவ்ஜி தலையை உயர்த்தி சமையலறையின் மூலையைப் பார்த்தார். பாத்திரம் தேய்க்கும் குழியில் காலை டிபன் சாப்பிட்ட இலைகளும் பிரிந்து கிடந்த டிபன் கேரியரும் இருந்தன.

*”உஷ்ட பான்பணி காடும் பிர்காவ்னாஸ்க்க காய் கர்தாய்ச பாஷ்டதரீங்கு”.*

அவர் குரலில் இருந்த எரிச்சல் அவளைக் கொஞ்சம் சுணங்க வைத்தது. முணுமுணுத்தபடி இலைகளைச் சன்னல் வழியாகத் தெருவில் விட்டெறிந்தாள்.

ராவ்ஜி படுத்துக் கொண்டார். இரண்டு மூன்று தடவை பேண்ட்டுடன் மதிலேறிக் குதித்ததால் தொடைகள் ரொம்ப வலித்தன. இருட்டில் உத்திரத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால் மணியிடம் பொய் சொன்னது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று தோன்றியது.

போர்வையை இழுத்துவிட்டுக் கொண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டார், கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன்.

by Swathi   on 25 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சூழல், சூழல் சூழல், சூழல்
கடைசி கடிதம் கடைசி கடிதம்
அவ்வளவுதானா...! அவ்வளவுதானா...!
மனம் தேடும் ஆசை மனம் தேடும் ஆசை
பழி உணர்ச்சி பழி உணர்ச்சி
சூழல், சூழல் சூழல், சூழல்
இளம் மாங்கன்று இளம் மாங்கன்று
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.