|
மானுட வரலாறு முழுவதும் வறுமை மிகப் பெரிய சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. வறுமை ஒன்று மட்டுமே இடத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பம், முற்போக்கு சிந்தனைகள், பொது நலன் என எல்லாம் வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும், 9.2 சதவிகித மக்கள், கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பழம், இரண்டு மரங்கள், முப்பால், 42 உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு, 133 அதிகாரங்கள். 1330 குறள்கள் மற்றும் 6338 தனித்துவமான சொற்கள் என்று பல சிறப்புகள் கொண்ட வளமான இலக்கியத்தில் வறுமை பற்றி ஏதேனும் பேசப்பட்டு இருக்குமா என்று முதலில் தயங்கினேன். ஆனால் யோசித்துப் பார்த்தால் வள்ளுவம் வறுமையை அலசி ஆராய்ந்து இருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்கும் பிரச்சினை குறித்து பொய்யாமொழி புலவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்.
எது வறுமை?
இந்தக் கேள்வியை அணுகுவதற்கு முன்னர் வறுமை அல்லது ஏழ்மை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட இல்லாது உயிர் வாழும் துன்ப நிலையைத் தான் நாம் ஏழ்மை என்று அழைக்கின்றோம். வறுமையின் கொடுமையை விவரிக்க "நல்குரவு" என்ற ஒரு முழு அதிகாரத்தையே இயற்றியுள்ளார் திருவள்ளுவர். இந்த அதிகாரத்தின் முதல் குறளில் ஒருவரின் வாழ்வில் கொடியது எது என்றால் அது வறுமைதான் என்று விவரிக்கிறார்.
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது (குறள்- 1041)
தெய்வப்புலவரே ஏழ்மையை விடக் கொடிய துன்பம் ஒன்றைக் கண்டுசொல்ல முடியாமல் தள்ளாடி இருக்கிறார். இக்குறளின் மூலம் வறுமையைப் போலத் துன்பம் தருவது வறுமை மட்டுமே என்ற சோகமான உண்மையை அப்பட்டமாகத் தெரிவிக்கிறார்.
வறுமை தரும் வலி
பாவேந்தர் பாரதிதாசன் இந்த பாடலில் ஏழ்மையின் வலியினை நமது கண் முன்பு காட்சிப் படுத்துகிறார்.
கந்தை அணிந்தோம் - இரு கையே விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம் மொந்தையிற் கூழைப் - பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
(பாரதிதாசன் கவிதை தொகுதி 1 தொழிலாளர் விண்ணப்பம்)
அதைப் போலவே நெருப்பில் கூட கண் மூடி தூங்கிவிடலாம். ஆனால் வறுமை வசப்பட்டவன் தூங்கவே முடியாது என்பதனை:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. (குறள் 1049)
எனும் குறளில் தெரிவிக்கும் வள்ளுவர் எனக்கு ஏழைப் பங்காளனாகவே தோற்றம் அளிக்கிறார். தீயைத் தீண்டினால் சுடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. தீயினால் வரும் வலியை விடக் கொடுமையானது வறியவர்களின் வயிற்றில் உண்டாகும் பசி. நெருப்பை விட அதிகம் சுடக்கூடியது வறுமை தரும் அவமானங்கள். வறுமை நிலையை ஒருநாளும் அனுபவிக்காத எவருக்கும் இந்த ஒப்பீடு கொண்டு எளிதில் வறுமையின் வலியை விளக்க முடியும் என்று நம்புகிறார் வள்ளுவர்.
வறுமையின் வீச்சு உலகில் அதிகமாகக் காற்று மாசுபட்ட நகரங்களில் ஒன்றான இந்தியத் தலைநகரம் புதுதில்லியில் அன்மையில் நடத்தப்பட்ட ஆய்வினைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் இதழில் படித்தேன். யமுனை நதிக்கரையில் அடுப்பு மற்றும் வாகனப் புகைகள் சூழ்ந்த குடிசைப் பகுதியில் வறுமையில் வாழும் மோனு ஒருபக்கம், காற்று மாசினை அகற்றும் தொழில்நுட்பம் கொண்ட வீட்டிலும் பள்ளியிலும் புழங்கும் வசதி வாய்ந்த ஆம்யா மறுபக்கம். ஏழையான மோனு 149 புள்ளிகள் மற்றும் வசதியான ஆம்யா 37 புள்ளிகள் அளவிற்குச் சராசரியாக ஒருநாளில் காற்று மாசிற்கு ஆளாகிறார்கள் என்று அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது. அதாவது ஆம்யாவை விடக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு மாசுபட்ட காற்றை மோனு சுவாசிக்கிறார். மோனுவின் நிலையிலேயே ஒருவர் தொடர்ந்து வாழ்ந்தால் அவர்களின் வாழ்விலிருந்து நான்கைந்து ஆண்டுகளை இழக்க நேரிடும்.
வறுமை என்பது உணவு, உடை மற்றும் வசிக்க இடத்தை மட்டும் பாதிப்பதில்லை. அது நல்ல குடிநீர், தரமான காற்று என்று உயிர்வாழத் தேவையான அனைத்தையும் சேர்த்தே தாக்குகிறது என்பதே இந்த ஆய்வு சொல்லும் சோகமான உண்மை. வறுமையின் வீச்சை நன்கறிந்த வள்ளுவர்:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் (குறள் - 1042)
என்று எழுதி உள்ளார். வாழும் இடத்தில் காற்று, நீர் மற்றும் உணவு என எல்லாமே குறைபட்டு இருப்பதால் வறியவர்கள் பெரிதும் நோய் வசப்பட்டே வாழ்கின்றனர். குறிப்பாக இளமையில் வரும் வறுமை உடல்நிலை. கல்வி, வேலைவாய்ப்புகள் என எல்லாவற்றையுமே பாதித்து விடுகிறது. வறுமை என்பது அவர்களின் வாழ்வின் அடிக்கல்லையே அசைத்துவிடுவதால், அந்த துன்பம் தலைமுறைகள் தாண்டியும் வந்து தாக்கும் என்கிறார்.
ஏழையின் சொல் இந்த இடத்தில் எனக்கு ஒரு கதைதான் நினைவிற்கு வருகிறது. அது ஒரு சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இடம்பெறும் கதை அந்த தொழிற்சாலையிலிருந்து பல சோப்பு டப்பாக்கள் உள்ளே சோப்பு இல்லாமலேயே கடைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் பலரும் இந்தப் பிரச்சனை குறித்து புகார் அனுப்புகின்றனர். அந்த நிர்வாகத்தின் மேலதிகாரிகள் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களின் மூலையைக் கசக்கிப் பிழிந்தும் எந்த நல்ல யோசனையும் அவர்களுக்குத் தென்படவே இல்லை.
அவர்களின் சந்திப்பு அறைக்கு காலி தேநீர் கோப்பைகளை எடுத்துச் செல்லத் துப்புரவுப் பணியாளர் ஒருவர் வருகிறார். அதிகாரிகள் பேசுவதைக் கவனித்துக் கேட்டார். "ஐயா, நான் ஒன்று சொல்லலாமா என்று கேட்டார். அதிகாரிகள் அவரை அருவருப்புடன் பார்த்துவிட்டு, பேச அனுமதி தந்தனர். உற்பத்தியான சோப்பு டப்பாக்கள் இருக்கும் கிடங்கின் ஒரு மூலையில் ராட்சத மின்விசிறிகள் சிலவற்றை வைத்தீர்கள் என்றால், சோப்பு இல்லாத காலி டப்பாக்கள் எல்லாம் காற்றில் பறந்துவிடும். அதன் பிறகு மீதம் இருக்கும் சோப்பு உள்ள டப்பாக்களை மட்டும் கடைகளுக்கு அனுப்பலாம்" என்றார். இது ஒரு நல்ல சிந்தனை தான் ஆனாலும் உயரதிகாரிகள் யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. அவரை வெறுப்புடன் பார்த்து வாயை மூடிக்கொண்டு போ என்று விரட்டினார்கள். ஏழை என்ற ஒரே காரணத்தினால் அவரை யாரும் மதிக்கவும் இல்லை அவரது சிந்தனையை யாரும் ஏற்கவும் இல்லை.
சமுதாயத்தில் நாம் பொதுவாகவே ஒரு ஏழை மனிதன் நன்கு ஆராய்ந்து அறிந்த கருத்துகளைச் சொன்னாலும் அவரின் ஏழ்மை நிலையினால் மட்டுமே அவர் சொன்னதை யாரும் கருத்தில் கூடக் கொள்வதே இல்லை. சமுதாயத்தில் உள்ள இந்த குறைபாட்டை நன்கு உணர்ந்த வள்ளுவர் கீழுள்ள குறளில் இந்த நிலையைத் தெளிவாகப் பதிவிட்டுள்ளார்.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். (குறள் - 1046)
இந்த குறள் ஏழை மக்களுக்கும் பணம் படைத்தோருக்கும் இடையே உள்ள வர்க்கப் பிரிவினை காலம் போகப் போகப் பெரிதாகிக் கொண்டே தான் போகிறது என்பதை உறுதி செய்கிறது. சரி, ஏழை மக்கள் சொல்வதையே யாரும் கேட்கவில்லை என்றால் எப்படித்தான் வறுமையாகிய கொடிய பிணியைத் தீர்ப்பது?
வறுமைக்குக் காரணம் ஏழை மக்களின் துன்பத்தையும் துயரத்தையும் உணர்ந்து விவரித்த தெய்வப் புலவர், வறுமையை ஒழிப்பதற்குத் தேவையான சிந்தனைகளை வள்ளுவத்தில் விதைத்து இருக்க மாட்டாரா என்ன? வறுமையை ஒழிக்க வேண்டுமானால் மக்கள் வறுமையில் வாடுவதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வறுமைக்குப் பல காரணங்கள் இருந்தாலும் சில முக்கியமானவற்றை மட்டும் இங்கே பார்ப்போம். மக்கள் நலனில் அக்கரை இல்லாத அரசாங்கம், அறத்தின் வழியில் நடக்காத வாணிகம், உழவு போன்ற அடிப்படை உற்பத்தி தொழில்களின் தேக்கநிலை மற்றும் பொருள் படைத்தோர் பகிர்ந்து கொடுக்க மறுக்கும் சுயநலம் ஆகிய நான்கு வழிகளையும் சரிசெய்தால், வறுமையை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவிற்குக் குறைக்க முடியும். இந்த குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் நிச்சயமாக வள்ளுவத்தில் உள்ளன.
அரசும் அதிகாரமும்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (குறள் - 1062)
இந்த குறளின் பொருள், பிச்சை எடுத்துத்தான் சிலர் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால் அவர்களின் அரசும் ஆளும் தலைவர்களும் அலைந்து திரிந்து கெட்டு ஒழியட்டும் என்று கோபத்தில் திட்டி தீர்க்கிறார். இந்த சூழல் அன்று மட்டும் அல்ல இன்றைக்கும் அப்படியே பொருந்தும். சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களாலும் ஊழல் நிறைந்த அரசாங்க அதிகாரிகளாலும் தான் இந்த காலத்தில் பலர் பசியில் வாடுகின்றனர். இந்த குறள் சொல்வதைப் போல் வறுமையை எதிர்த்துப் போராடக் கூடிய அரசாங்கங்களை அமைப்பது தான் வறுமை ஒழிப்பை நோக்கிய முதல் படி
தொழிலில் நேர்மை எந்த துறையாக இருந்தாலும் கலப்படம் இல்லாமல், பதுக்குதல் இல்லாமல், நேர்மையான விலையில் வியாபாரம் செய்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளை எளிதில் தீர்த்து விட முடியும்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் (குறள் - 120)
என வியாபாரத்தில் நேர்மை வேண்டும் என்று அய்யன் வள்ளுவன் வலியுறுத்துகிறார். சுருக்கமா சொன்னால் எடுத்துக்காட்டுக்கு உணவகத்தின் உரிமையாளர் தன் உணவகத்தில் இருக்கும் உணவைத் தன் பிள்ளைகளுக்கு தயங்காமல் பரிமாறும் நிலைமை வேண்டும். வளரும் பருவத்திலேயே நேர்மையான வாணிகத்தின் தேவையை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் அடுத்துவரும் காலங்களில் வறுமையைக் கட்டுப்படுத்த முடியும். பணவீக்க விகிதம் அதிகம் இருப்பதுதான் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஆன இடைவெளியை அதிகரிப்பதாகப் பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள். பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சட்டங்களை இயற்றி அதனைச் செயல்படுத்தவும் வேண்டும்.
உழவும் தொழிலும் அடிப்படைத் தேவைகளைத் தணிக்கும் உற்பத்தி தொழில்களுக்கு முக்கியத்துவம் தருவதால் ஏழ்மையை மட்டுப்படுத்த முடியும். இதிலும் விவசாயத்தைப் பெருக்கி உணவுப் பொருள் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்தால், பஞ்சம் பறந்தே போகும். விவசாயம் நலிந்தும், குறிப்பாகப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பன்னைகளும் பெரும் தொழிற்சாலைகளும் சிறு விவசாயிகளையும் சிறு தொழில் வைத்திருப்போரின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடுகிகின்றன.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் - 1031)
உழவை விட மேலான தொழில் எதுவும் இல்லை என்று திருக்குறளே சொல்கிறது. எவ்வளவுதான் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இங்கே ஏற்பட்டு இருந்தாலும் உழவு இல்லாமல் எதுவுமே நடக்காது. அதனால் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஏழ்மை நிலையை போக்கவும், உழவையும் உழவு சார்ந்த தொழில்களையும் செழிக்க வைக்க வேண்டும்
ஈகை இன்பம் எல்லாவற்றையும் விட ஈகை மட்டும்தான் வறுமையைத் தீர்க்கும் சக்தி கொண்டது. வறியவரின் பசியைத் தீர்ப்பதே பொருள் கொண்டவர் தான் சேர்த்த பொருளை எதிர்காலத்தில் தனக்குப் பயன்படுமாறு வைக்கச் சரியான இடமாகும் என்று கூறுகிறது இந்த குறள்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் - 226)
வறுமையை விரட்டுவோம் அமெரிக்க வல்லரசின் ஒரு சாலை ஓரத்தில் 20 டிகிரி பாரன்ஹீட் குளிரில் கையுறை கூட இல்லாமல் ஒரு சிலர் பிச்சை கேட்டு நிற்பதைப் பார்த்த போது தான் வறுமை கொடியது என்றும் அதைத் தீர்ப்பது நமது கடமை என்றும் நான் உணர்ந்தேன். தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் சோப்பு டப்பா கதையை எனது தாய் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குச் சொன்னார். இளம் வயதில் நான் கேட்ட அல்லது கற்ற குறள்களும் குறள் சார்ந்த கதைகளும் உலகம் பற்றிய எனது பார்வையைப் பரவலாக்கியது. வள்ளுவத்தின் சில பகுதிகள் தற்போதைய காலத்திற்கு ஒவ்வாததாக இருந்தாலும், பெரும்பாலான குறள்கள், வறுமை போன்ற உலக பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றிப் பேசுவதால் தான் திருக்குறள் உலகப்பொதுமறை ஆகிறது என்று நினைக்கிறேன் வள்ளுவத்தின் வழி நின்று வறுமையை விரட்டுவோம்.
கட்டுரையாளர்: அத்விகா சச்சிதானந்தன்,மிசெளரி, அமெரிக்கா
நன்றி: அமெரிக்காவில் திருக்குறள் கட்டுரைப் போட்டி 2021 - வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
|