|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம்: முதுவேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்– 33 |
||||||||
![]() இந்த வாரம் முது வேனில் (பின் கோடை – Mid June to Mid August) காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களைப் பார்க்கப் போகின்றோம்.
முது வேனில் காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்
இளவேனில் காலத்தில் உடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை விட சற்று மாறுபட்டிருக்கும். இளவேனில் காலத்தில் உடலில் இருந்த நீர்த்துவம் முதுவேனில் காலத்தில் குறைந்துவிடும். நீர்த்துவத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பின்பற்றாவிடில் உடலில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியின் காரணமாக வளி என்கிற உயிராற்றல் (காற்று – வாயு – உயிர் என்ற தலைப்பில் விளக்கப் பட்டுள்ளது) கூடி வளி நோய்கள் உண்டாகும். இக்காலத்தில் ஏற்படும் நோய்கள் வறட்சியாலும் வளி (காற்று) அதிகப்படுவதாலும் ஏற்படும்.
உடல் சோர்வு, பசிக் குறைவு, உணவில் விருப்பமில்லா நிலை, மலச்சிக்கல் ஏற்படும். மனம் உற்சாகமற்றிருக்கும். காரணமில்லாமல் மனக் குழப்பம், எரிச்சல், நினைவுக் குறைவு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் புத்தி தடுமாற்றம் ஏற்படும்.
முது வேனில் காலத்தில் செய்ய வேண்டியவை
1. அதிக வெப்பத்தினால் உடல் வறட்சி ஏற்பட்டு வளி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகும். எனவே இக்கால தொடக்கத்தில் வளி என்கிற உயிராற்றலை (விளக்கம் தனியே உள்ளது) இயல்பு நிலையில் இயங்கச் செய்ய பேதி மருத்துவத்தை மேற் கொள்ளல் வேண்டும்.
2. வாரம் 2 முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். நல்லெண்ணையுடன் சிறிய வெங்காயம், சீரகம் போட்டுக் காய்ச்சி பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் சிறிய வெங்காயம் சோற்றுக் கற்றாைழச் சாறு கலந்து காய்ச்சிய எண்ணெயைத் தேய்த்துக் குளிக்கலாம். இதே எண்ணெயை தினமும் 10 சொட்டு வீதம் இரவு உறங்கும் முன் குடிக்கலாம்.
3. குளிர்ச்சியான நீர்த்துவம் உள்ள காய்களைப் பச்சையாகச் சாறு எடுத்துப் பருகலாம். சுரை, வெண்பூசணி (தடியங்காய்), பூசணி, (பரங்கிக் காய்) வெள்ளரிப் பிஞ்சு, வாழைத்தண்டு, பாகற்காய் (மிதிபாகல், நிலப்பாகல் மட்டும் பயன்படுத்த வேண்டும்; கொம்புப் பாகல் கூடாது), வெண்டைக்காய் போன்ற ஏதேனும் ஒரு கையுடன் சிறிய இஞ்சி மற்றும் கல் உப்பு போட்டு அரைத்து மோர் கலந்து பருகலாம்.
4. பன்னீர்ப்பூ (ரோசா இதழ்) பனங்கல்கண்டு தேன் கலந்து வைத்துக் கொண்டு (குல்கந்து) தினமும் ஒரு தேக்கரண்டி உட்கொள்வதால் உடல் குளிர்ச்சியடையும். வறட்சி நீங்கும். மலச்சிக்கல் இருக்காது. வளி நோய்கள் வருவதைத் தடுக்கும்.
5. இக்காலத்தில் புளிப்பு, கார்ப்புச் சுவையுடைய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. குளிர்ச்சியும், நெயப்புத்தன்மையும் (பசுநெய், ஆமணக் கெண்ணெய் போன்றவை) உடைய பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. மூங்கிலரிசி, திணை, வெண்சாமை போன்ற தானியங்களாலான கஞ்சி மிகவும் சிறந்ததாகச் சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.
8. தானியப் பாயாசம் (காட்டாக பாசிப்பருப்பு, அரிசி, தங்கை, வெல்லப்பாகு, நெய் சேர்த்தது) உடல் சோர்வினை நீக்கி உற்சாகத்துடன் இருக்கச் செய்யும். மன மகிழ்வைத் தரும்.
9. நெல்லிக்காய் ஊறிய நீரில் சிறிது தேன் கலந்து பருகலாம் அல்லது 1 லிட்டருக்கு ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் போட்டு வைத்திருந்து பருகலாம்.
10. பேயன் வாழை, மலை வாழை, பலாப்பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை போன்ற பழங்கள் இக்காலத்தில் உடலிற்கு வலுவைக் கொடுக்கும்.
அதிக வெப்பத்தை தடுக்கும் உபாயங்கள்
தண்ணறிய பன்னீரில் நனைந்த சீலை
சாளரங்கள் வாயில்கள் மறைய நாற்றி
வெண்ணறிய வெட்டி வேரின் படல்கள் தூக்கி
மேனிலையில் தொட்டி கட்டி மணல் நீர் தேக்கி
நுண்ணியதாய்ப் பீச்சிடவே பொறிகள் நாட்டி
நுண்வலை தூவவிரு கவரிவீசப்
பண்ணி வெம்மைச் சாந்த மாக்கிப் பசலை போக்கும்
பண்புரைத்தார் பண்டுவத்தில் கலை வல்லாரே
பன்னீர் அல்லது தூய நீரில் நனைத்த பருத்தித் துணிகளை சாளரங்களிலும் (சன்னல்களிலும்) வாயில்களிலும் மறையும் படியாகப் போட வேண்டும். வெட்டி வேரினைக் கொண்டு செய்த தட்டிகளை சூரிய ஒளி வரும் இடங்களில் வைத்து மறைக்க வேண்டும். வீட்டின் மேற்புறத்தில் தொட்டி போன்ற அமைப்பு செய்து (அல்லது மணல் தொட்டி) நீர்த் தேக்கம் செய்தல் வேண்டும். அங்கு வீட்டிற்கு உபயோகமாகும் செடிகள் வைக்கலாம். மூலிகை விசிறிகளைக் கொண்டு காற்று வரும்படி விசிறுதல் நன்று.
இப்படிச் செய்வதால் வெப்பம் உடலைத் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம் என சித்தர் பாடல் கூறுகின்றது. இதனால் உடல் கட்டுக்களும் உயிராற்றலும் முது வேனில் பருவத்தால் மாறுபாடடையாமல் பாதுகாக்கப் படும்.
நலப்பயணம் தொடரும்......................................
|
||||||||
by Swathi on 28 Apr 2015 0 Comments | ||||||||
Tags: Summer Tips in Tamil Body Care tips for Summer Siddha Maruthuvam சித்த மருத்துவம் கோடை கோடை கால உணவுகள் கோடை கால சரும பராமரிப்பு | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|