|
|||||
விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் |
|||||
![]()
நில அளவைகளைத் துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக இத்திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நில வரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்ஷா) திட்டம் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம்- காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாநகராட்சி 7 வார்டுகள், விருதுநகர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை நில அளவை ஆவணங்களும், நகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இணைய வழியில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கான அளவுகள் மற்றும் பரப்புகளை அமைவிடப் புள்ளி விவரங்களுடன் மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழா விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நவீன ட்ரோன் மூலம் நகர நில அளவைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார்.
நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் மதுசூதனன் ரெட்டி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர். சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
|
|||||
by hemavathi on 17 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|