கத்தி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் புலி. இந்த படத்தை இயக்குகிறார் சிம்புதேவன்.
விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரம், கதை களம் என படத்திற்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டன. அது மட்டுமல்ல.. சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.
புலி படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
இந்த படத்தில் விஜய்க்கு, இரண்டு வேடமாம். ஒன்று புலி எனும் போர்ப்படைத்தளபதி வேடம். மற்றொன்று நிகழ்கால கதாபாத்திரம்... இந்த கதாபாத்திரம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
போர்ப்படைத்தளபதி விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். நிகழ்கால விஜய்க்கு ஜோடியா சுருதிஹாசன் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி ஆகும் ஸ்ரீ தேவி இந்த படத்தில் மகாராணியாகவும், ஹன்சிகாவுக்கு தாயாகவும் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆறும் அருமையாக உருவாகி விட்டதாம். இதில் விஜய், வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே என்ற பாடலை பாடியுள்ளாராம்.
நட்டி என்கிற நட்ராஜ் படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஐந்து கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாம்.
போரும், காதலும் என்பது தான் படத்தின் ஒருவரி கதை. காதல், போர் இரண்டிலும் வெற்றி தோல்வி சகஜம். போரில் தோற்றால் மீண்டும் ஜெயிக்கலாம், ஆனால் காதலில் தோற்றால் மீண்டும் ஜெயிக்க முடியாது.
புலி படத்தின் வாள் சண்டையை வடிவமைத்திருப்பது சீன சண்டைக் கலைஞர்கள். இந்த சண்டைக் காட்சியில் விஜய் சுமார் ஐந்து கிலோ எடைக்கொண்ட நிஜமான வாளை தூக்கி சண்டை போட்டிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் சுதீப். விஜய் - சுதீப் இடையேயான சண்டைக் காட்சிகளில் அனல் பறக்குமாம்.
பிரபு, நந்திதா, தம்பி ராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர், தெலுங்கு நடிகர் ஆரி, இந்தி நடிகர் டினு ஆனந்த் ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்கள்.
மகதீரா, நான் ஈ ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த கமல் கண்ணன் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் செய்கிறார். படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளதாம் புலி. ஆகையால் படத்தின் ரிலீஸ் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை விஜயின் மக்கள் தொடர்பாளர் பி.டி செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
|