|
||||||||||||||||||
புளிய மரம் |
||||||||||||||||||
புளிய மரம்
அம்மாசி கிழம் இழுத்து கொண்டிருக்கிறது. போகிற வழியை காணோம். பேத்தி மாசிலாமணி தனக்குள் புலம்பிக்கொள்கிறாள். ஊருல போட்டது போட்டபடி வந்து பத்து நாளாச்சு, மகள் தெய்வானை சமர்த்து பெண்தான், அப்பனையும் தம்பியையும் கவனித்து கொள்வாள், இருந்தாலும் மாடு கன்னை வைத்து பால் கறந்து வீடு வீடாய் ஊற்றுவதற்கு வீட்டுக்காரனுக்கு உதவ அவளால் முடியுமா? சோத்தை ஆக்கி வச்சு தம்பிக்கும் சோத்தை போட்டு ஸ்கூலுக்கு கூட்டியும் போகணும், அவனை ‘நாலாப்புல’ விட்டுட்டு ‘ஏழாவது வகுப்புக்கு’ போய் உட்காரணும். மிஸ் கொஞ்சம் ‘லேட்டானாலும் நறுக்குனு’ கையோ, கால்லயோ போட்டு கிள்ளி விட்டுடும், அங்க எதும் பேசாத மூதி, இங்க வந்து அம்மாகிட்டே சண்டை போடும். என்ன பண்ணறது, டீச்சராண்டை போயி சண்டை போட முடியுமா? உங்க அய்யன் இப்பவோ அப்பவோன்னு கிடக்கறாரு, பந்தலூர் ஆயா வந்து சொல்லிட்டு அப்படியே நாலு தேங்காயை பையில திணிச்சுட்டு போனா. இவளுக்கு மனசு கேக்கலை, அம்மாசி தனியா இவளை வளர்த்து பக்கத்து ஊரானுக்கு கட்டி கொடுத்து வாழ்க்கையை கொடுத்திருக்கான், அவனுக்கு ஒண்ணுன்னா மனசு கேக்குமா? அப்பனும் ஆத்தாளும் திருவிழாக்கு போன இடத்துல ஆத்துல விழுந்துட்ட இவளை காப்பாத்த அவங்க குதிக்க, இவ எப்படியோ தப்பிச்சு அவங்க இரண்டு பேரும் ஆத்தோட போயிட்டாங்க. ஊர்ல இவளை அத்தனை பேரும் வஞ்சாங்க, அப்பனையும், ஆத்தாளையும் அனுப்பிச்ச மகராசி அப்படீன்னு அவளை கரிச்சு கொட்டிட்டு இருந்தாங்க. அம்மாசை கிழவன் மட்டும் அந்த நேரத்துல அவளை தன்னோட குடிசைக்கு கூட்டிட்டு போய் வச்சு காப்பாத்தாம இருந்தா…! இதுக்கும் அம்மாசை கிழவன் ஒண்டிக்கட்டை, வயசு அப்பவே அறுபதுக்கும் மேல, பத்து செண்ட் இடம் இருக்கும், அதுலயும் இரண்டு புளிய மரம் வச்சு பரந்து விரிஞ்சு கிடக்கும். வருசத்துக்கு புளிய எடுத்து கொடுத்து வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தவன். மாசிலாமணி வந்த பின்னாலதான், ஆடு, கோழி வளர்த்த ஆரம்பிச்சா, அதைய வளர்த்தி வித்து காசாக்கி கிழவன் கிட்டே கொடுப்பாள். அவன் கம்முனு வை. உன் கல்யாணத்துக்கு இப்பவே சேர்த்துக்கோ, பதவிசாய் சொல்லி விடுவான். பத்து வருடங்களில் அவள் சேர்த்து வச்ச பணம், அம்மாசிகிழவன் புளி வித்த பணம் எல்லாத்தையும் போட்டு மாசிலாமணியை பக்கத்து ஊரு பரமனுக்கு ஏழெட்டு ஆட்டு குட்டி வாங்கி கொடுத்து கல்யாணம் முடிச்சு வச்சான். அம்மாசியையும் தன்னோடு வர சொல்லி சொல்லி பார்த்தாள் மாசிலாமணி, அவன் புளிய மரத்தை விட்டு வரவே மாட்டேனென்று சொல்லி விட்டான். வாரம் ஒரு தடவை பேத்தியை போய் பார்த்து புளியம்பழம் வித்த காசை கொடுத்து வருவான். மாசிலாமணி சொல்லி பார்த்தாள். இந்தா சும்மா சும்மா பேத்திக்குனு வந்து கொடுக்காதே, உனக்குன்னு நான் என்ன செஞ்சிருக்கேன், என் கூட வந்து பேசாம கிடன்னாலும் கேக்க மாட்டேங்கறே, மூக்கை சிந்துவாள். அசரமாட்டான் அம்மாசை, பேத்தி அவனுக்கு கோழி அடித்து ரசம் வைத்து கொடுப்பாள். மூன்று வேளையும் திருப்தியாய் சாப்பிட்டு பேரக்குழந்தைகளுக்கு கையில் வைத்திருந்ததை எல்லாம் கொடுத்து விட்டு தன் ஊருக்கு நடக்க ஆரம்பித்து விடுவான். மாசிலாமணி கணவனை விரட்டுவாள், தாத்தனை கொண்டு போய் விட்டுட்டு வந்துடு. சில நேரங்களில் அம்மாசையை சைக்கிளில் உட்கார வைத்து ஊருக்குள் விட்டு செல்வான் மாசிலாமணி புருசன். ஏய் மாசிலாமணி உன்ற தாத்தன் ஏன் இப்படி இழுத்துகிட்டிருக்காரு, மண் கரைச்சு ஊத்தி பாத்தியா? என்ன மனசுல நினைச்சு இப்படி இழுத்துகிட்டிருக்குது, அவனை வந்து பார்த்து விட்டு கேட்டு போனார்கள். குடிசை முன்னாள் புளியமரத்துக்கு அடியில்தான் அவனை படுக்க வைத்திருந்தது. விழித்து மேலே மரத்தை பார்த்தபடியே கிடப்பான் அம்மாசை கிழவன். அவன் கண்களில் மட்டும் அந்த உயிர் ஒளி கொத்தாய் தொங்கும் புளியம்பழங்களை பார்த்தபடியே இருக்கும். நெஞ்சு மேலும் கீழும் இறங்க மூச்சு திணறலாய் வந்து போய்க் கொண்டிருக்கும். எத்தனை நாள் இவன் அவஸ்தையை பார்த்து கொண்டிருப்பது என்று மாசிலாமணிக்கு புரியவில்லை. சட்டென அவளுக்கு ஒரு யோசனை வந்தது, பக்கத்து குடிசை கன்னையனையும், அவன் பொஞ்சாதி ராக்காயையும் அழைத்தவள் அந்த யோசனையை சொன்னாள். முதலில் தயங்கிய அவர்கள் சரி இதையும் செஞ்சு பார்ப்பமே, சரி என்று சொல்ல, இரவில் கிழவன் படுத்திருந்த கட்டிலை அப்படியே அழுங்காமல் தூக்கி புளியமரத்தை விட்டு தள்ளி கொண்டு போய் வைத்து விட்டார்கள். காலை படபடப்புடன் அவர்கள் அம்மாசி கிழவனை பார்க்க, அவன் விழிகள் மேலே எதையோ தோடுவது போல அங்கும் இங்கும் அலைய மாசிலாமணி மெல்ல அவனருகில் உட்கார்ந்து பாவி மழை வந்து புளிய மரம் இரண்டும் சாஞ்சு போச்சே, வாய் விட்டு அழுதாள். வச்ச மரம், வளர்த்த மரம், நட்ட மரம் வாழ வச்ச மரம் சாஞ்சு போச்சே…. அழுகையாய் அவள் அந்த பாடலை அம்மாசை அருகில் பாடிக்கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவன் கண்கள் மங்க ஆரம்பிக்க வெஞ்சுக்கூடு மெல்ல தணிந்து கண்களில் அதுவரை இருந்த பிரகாச ஒளி மங்கி “விலுக்” என தொண்டை குழியில் இருந்து பெரும் சத்தம் வர அப்படியே நிலைகுத்தி போனது அவன் கண்கள்..அதன் பின் அவனிடம் எந்த அசைவுகளும் இல்லை. அதுவரை அவனையே பார்த்து கொண்டிருந்த மாசிலாமணி தன்நெஞ்சில அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். ஆத்தாளையும், அப்பனையும் கொண்டு போன இந்த சிறுக்கி இப்ப உன்னையும் பொய்யை சொல்லி கொன்னு போட்டனே… அவள் கூப்பாடு.. அந்த ஊரை எழுப்பி அம்மாசையை கடைசியாய் பார்க்க வரவழைத்தது. |
||||||||||||||||||
tamarind tree | ||||||||||||||||||
by Dhamotharan.S on 18 Jun 2022 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|