வாழை வளர்ப்பில் சாதனை படைத்துள்ள, தேனீ விவசாயி, குருநாதனுக்கு பஞ்சாப் மாநில அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வாழை விவசாயி, குருநாதன். இவர், சமீபத்தில் தனது ஒரு எக்டேர் நிலத்தில், 165 டன் வாழை விளைச்சல் செய்து, சாதனை படைத்துள்ளார். இந்தியா முழுவதும் இருந்து, விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தற்போது, 150 ஏக்கரில், "ஜி9' திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். சொந்தமாக வாழை விற்பனை நிலையம் நடத்தி வரும் இவர், தன், 8,500 வாழைத்தார்களை, 70 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், மொகாலி நகரில், "பஞ்சாப் விவசாய விழா' நடைபெற்று வருகிறது. இதில், குருநாதனுக்கு, பஞ்சாப் மாநில அரசு விருது, ரொக்க பரிசாக, 51 ஆயிரம் ரூபாயை வழங்கியது. குருநாதன் சார்பாக அவரது மகன் லோகநாதன் பரிசை பெற்றார். மேலும் இந்த விழாவில், தோட்டத்தில் செய்த சாகுபடி முறைகளை, "வீடியோ' மூலம் விளக்கினார் லோகநாதன்.
|