LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 780 - படையில்

Next Kural >

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து. இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்-படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த அரசரின் கண்களில் நீர் பெருகுமாறு, போர்க்களத்திற் சாகப்பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து-அச்சாவு இரந்தாயினும் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையதாம். பொதுவகையான சாவாயின், உறவினரே அழுவர்; விண்ணகப்பேறுங் கிட்டாது. செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் போர் மறவர் சாவாயின், அரசன் கண்ணீர் வடிப்பதும், நாட்டிற்காக உயிர்துறந்தாரென்று நாட்டார் புகழ்வதும், விண்ணுலகத்தில் தேவராய்த் தோன்றி யின்புறுவதும், நடுகல் தோன்றி நினைவுச் சின்னமாக விளங்குவதும்,அரத்தக் காணிக்கை என்னும் இறையிலிக் கொடையேற்படுவதும், சிறந்த பெருமையும் பயனுமாதலின் இரந்தாயினுங் கொள்ளத்தக்க தென்றார். நீர்மல்க என்பதில், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இனி, நீர்மல்கு என்னும் கூட்டுச்சொல் ஒரு சொற்றன்மைப்பட்ட தெனினுமாம். 'சாகிற்பின்' என்பது அதன் அருமை நோக்கி நின்றது. இரத்தலின் இழிவான தொன்றுமில்லை யெனினும், அதுவும் இச்சாவின் பெருமைநோக்கித் தக்கதென்பதாம். இந்நான்கு குறளாலும் படைமறவர் உயிரோம்பாமை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.
Translation
If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain?.
Explanation
If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.
Transliteration
Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu Irandhukol Thakkadhu Utaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >