LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

புரட்சிக்கவி - பகுதி 2

                          புரட்சிக்கவி - பகுதி 2

நொண்டிச் சிந்து

கவிஞன் இவ்வா றுரைத்தான்-புவி 
காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்: 
'குவிந்த உன் உடற்சதையைப்-பல 
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
நவிலுமுன் பெரும்பிழைக்கெ-தக்க 
ராசதண்டனையுண்டு! மாற்ற முண்டோ?

அரசனின் புதல்வி அவள்-எனில் 
அயலவ னிடம்மனம் அடைதலுண்டோ?
சரச நிலையி லிருந்தீர்-அந்தத்
தையலும் நீயும்அத் தருணமதில் 
இருவிழி யாற்பார்த்தேன்!-அறி
விலி, உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சியிலே-ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!'

'கொலைஞர்கள் வருக' என்றான்-அவன் 
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்
'சிலையிடை இவனை வைத்தே-சிரச்
சேதம் புரிக' எனச் செப்பிடுமுனம்
மலையினைப் பிளந்திடும் ஓர்-சத்தம்
வந்தது! வந்தனள் அமுதவல்லி! 
'இலை உனக் கதிகாரம்-அந்த
எழிலுடையான் பிழை இழைக்கவில்லை.

ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம்
உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ?
அரசென ஒருசாதி-அதற் 
கயலென வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால்வருணம்-தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே-நீ
தருவித்த வகையது சரிதா னோ? 

என்மனம் காதலனைச்-சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையிலனாம்! அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும், 
மன்னநின் ஒருமகள் நான்-எனை 
வருத்திட உனக்கதிகாரமில்லை!
உன்குடிக் கூறிழைத்தான்-எனில்
ஊர்மக்கள் இடம்அதை உரைத்தல் கடன்!'

என்றபற் பலவார்த்தை-வான்
இடியென உரைத்துமின் னெனநகைத்தே 
முன்னின்ற கொலைஞர் வசம்-நின்ற 
முழுதுணர் கவிஞனைத்-தனதுயிரை
மென்மலர்க் கரத்தாலே-சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டிகத்தால்.
மன்னவன் இருவிழியும்-பொறி 
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்:

கும்மி

'நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!-என் 
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!' 

என்றுரைத்தான், இருசேவகர்கள்-அந்த 
ஏந்திழை அண்டை நெருங் கிவிட்டார்!-அயல்
நின்ற கொலைஞர், உதாரனை யும்' நட
நீஎன் றதட்டினர்! அச்சமயம்-அந்த
மன்றி லிருந்தவேர் மந்திரிதான்-முடி 
மன்னனை நோக்கி யுரைத்திடுவான்-'நீதி 
அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்; 
அன்னது நீக்கி யருள்க என்றான்.

எண்சீர் விருத்தம்

'காதலனைக் கொலைக்களத்துக்கு அனுப்பக்¢ கண்டும் 
கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
நீதிநன்று மந்திரியே! அவன்இறந்தால் 
நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்!
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும். 
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
ஒதுகஇவ் விரண்டிலொன்று மன்னவன்வாய்! 
உயிர்எமக்கு வெல்லமல்ல!' என்றாள் மங்கை.

என்ஆனை மறுப்பீரோ சபையி லுள்ளீர்!
இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ?
பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர்
என் ஆணை! என் ஆணை !! உதார னோடே 
எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
கன்மீதி லேகிடத்திக் கொலைசெய்வீர்கள்
கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்!! என்றான் மன்னன்.

அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்! 
சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்
தோகையவள் 'என்காதல் துரையே கேளாய்!
எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோம்;
இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த 
நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள் 
நற்பாடம் கற்பியாது இருப்பதில்லை.

இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்!
பருந்தும், கண்மூடாத நரியும் நாயும், 
பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும் 
பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்
பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச்சேற்றை
அருந்தட்டும்!' என்றாள் காதலர்கள் சென்றார்!
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக்கின்றேன்:

கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள் 
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
அனைவருமே வந்திருந்தார் உதார னுக்கும்
சிலைக்குநிகர் மங்கைக்கும் 'கடைசி யாகச் 
சிலபேச்சுப் பேசிடுக' என்று சொல்லித் 
தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;
தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்;

பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் 
நிறைந்துபெருங் காடாக்க, பெருவிலங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி! 
சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் 
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்! 
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேறறம் ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
கக்கும்விஷம் பாம்பினுக்கும் பிலத்தினுக்கும் 
கடும்பசிக்கும் இடையறா நோய்களுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் 
எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
வபுல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?

அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக 
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும் 
சாவதென்றே தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்!
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! 
இருவர்இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின் றீர்கள்!

தன்மகளுக் கெனை அழைத்துக் கவிதை சொல்லித்
தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப்
பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால் 
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்!
என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன்
எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த
மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்; 

'தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் ¢
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என் 
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?
உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல 
அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்!
சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!
அரசன்மகள் தன்நாளில் குடிகட்கு எல்லாம் 
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்! 
அழகியஎன் திருநாடே! அன்பு நாடே!
வையகத்தில் உன்பெருமை தன்னை நல்ல
மணிநதியை, உயர் குன்றைத், தேனை அள்ளிப் 
பெய்யுநறுஞ் சோலையினைத், தமிழாற் பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை! அப்பேராவல்
மெய்யிதயம் அறுபடவும், அவ்விரத்த
வெள்ளந்தான் வெளிப்படவும் தீருமன்றோ? 

வாழியென் நன்னாடு பொன்னா டாக! 
வாழியநற் பெருமக்கள் உரிமை வாயந்தே
வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்! 
ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்
ஆழ்க' என்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்

படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
அடிசேர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்
ஆவென்று கதறினாள்! 'அன்பு செய்தோர்
படிமீது வாழாரோ?' என்று சொல்லிப்
பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள்
கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்
கொலையாளர் உயிர்த்தப்ப ஓடலானார்! 

கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய்' என்றார்கள்! போகா முன்பே,
செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்! 
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே
நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்தது அங்கே!
by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.