|
||||||||||||||||||
புதிதாய் பிறப்போம் |
||||||||||||||||||
“குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து. அவரின் அறிவுக் கூர்மையும், திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மேடையில் பேசிக்கொண்டே போனார் நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம். அருகில் உட்கார்ந்திருந்த ராதாவுக்கு சங்கடமாக இருந்தது. இருக்கையில் இருந்தவாறு நெளிந்தாள். எழுந்து “ப்ளீஸ்” கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் நாகரிகம் கருதி பல்லை இறுக்க கடித்து சூழ்நிலையை சமாளிக்க முயற்சி செய்தாள். அவரையும் குறை சொல்ல முடியாது. அரசு வேலையில் இருந்த ராதாவை மூழ்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த வலு கட்டாயமாக இவர்கள் நிறுவனத்தில் சேர வைத்தவர் சண்முகம் அவர்கள். அவரை பொருத்தவரை ராதாவின் திறமை மீது வைத்திருந்த நம்பிக்கையை அவள் காப்பாற்றி விட்டாள். அந்த பெருமை பிடிபடாமல் மேடையில் தன்னுடைய உணர்ச்சிகளை கொட்டி அவளை புகழ்ந்து கொண்டிருந்தார். அரசாங்க அதிகாரியாய் இருந்த ராதா அந்த அலுவலக ஊழியர்கள் சட்ட விதிகளையும் மீறி நடந்து கொள்வதையும், அதை ஒரு சாதனை செய்து விட்டதைப் போல பெருமை கொள்வதையும் தடுப்பதற்கு அவளிடம் பதவி இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் தடுத்து விடும் சங்கங்களின் செயல்பாடுகள் அவள் மனதை புண்படுத்தி இருந்தன. அப்பொழுது இதே போல் அரசாங்க அதிகாரியாய் இருந்த அப்பாவின் நண்பர் சண்முகம் அதன் செயல்பாடுகள் ஒத்து வராமல் தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தற்சமயம் பெரும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை காப்பாற்ற ராதாவை நிறுவனத்தில் சேர வற்புறுத்தினார். ராதாவின் தந்தையிடமும் சென்று ராதாவை நிர்வாக இயக்குநராக சேர சொல்லி வற்புறுத்தினார். சண்முகமும் ராதாவின் தந்தையும் இளமை காலந் தொட்டே நண்பர்கள். ராதாவின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரே கவலை தன் பெண் வயது முப்பதுக்கும் மேல் ஆகியும் திருமனத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கிறாளே என்றுதான். இது அவர்கள் மனதை இம்சை படுத்திக்கொண்டே இருந்தது. இயற்கையிலேயே திறமையும் புத்திசாலித்தம் நிறைந்திருந்த ராதாவுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாடான செயல்பாடுகள் அவள் கையை கட்டிவிட்டது போல் இருந்தது. சில அலுவலக ஊழியர்களின் செயல்பாடுகளும் அவள் மனதை துன்ப்படுத்திக் கொண்டிருந்தன. சண்முகம் ராதாவை அழைக்கும் போதே சொல்லி விட்டார். நீ மட்டுமே பொறுப்பு, இந்த நிறுவனத்தை நிமிர்த்த வேண்டியது உன்னுடைய கடமை. உன்னுடைய செயல்களில் தலையிட மாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார். அதன்படியே ராதாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு நிம்மதியாய் இருந்தார். ராதா இவர் கொடுத்த உறுதியின்படி அரசுப்பணியில் இருந்து விலகினாள். ஒரு சில நாட்கள் வீட்டில் ஓய்வாக இருந்து, தான் எப்படி ஒரு நிறுவனத்தில் செயல்படவேண்டும் என திட்டமிட்டாள். அதன்படி நிறுவனத்தில் சேர்ந்து தான் திட்டமிட்டபடி நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தாள். முதலில் ஊழியர்களை ஒழுங்கு படுத்த அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை புரிந்து அதனை சரி செய்து கொடுத்தாள். அடுத்து தயாரிப்பு துறையில் கவனம் செலுத்தி தரத்தை உயர்த்த சில யோசனைகளை வல்லுநர்களிடம் கேட்டு அதன் படி தயாரிக்க வைத்தாள். அடுத்ததாக வியாபார சமபந்தமாக அதில் ஈடுபட்டுள்ளோரை வரவழைத்து அவர்களுக்கு தரப்படும் தரகுத் தொகையை உயர்த்த செய்தாள். நிறுவனத்தின் பணி நேரத்தை ஒழுங்கு படுத்தினாள். இவள் மேற்கொண்ட அனைத்து நடவைடிக்கைகளிலும் தலையிடாமல் இருந்த சண்முகம், ஓரிரு வருடங்களில் நிறுவனம் எழுந்து இன்று மத்திய மாநில அரசுகள் அழைத்து பரிசு தரும் அளவுக்கு உயர்ந்துள்ளதை கண்டு மனமாற மகிழ்ந்தார். அதன் பொருட்டே அனைத்து பணியாளர்களையும் அழைத்து ராதாவை புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். அடுத்ததாக அவர் மேடையில் பேசியது ராதாவுக்கு மகிழ்ச்சியை விட பயத்தை கொடுத்தது சண்முகம் “நம் நிறுவனத்தின் இந்த மேடையிலேயே சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் இனிமேல் ராதா இந்த நிறுவனத்தின் நிர்வாகி மட்டுமல்ல “இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் ஆக்குகிறேன் என்று சொல்ல அங்குள்ள அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ராதாவுக்கு வேர்த்து விட்ட்து. இது நல்லதுக்கா ? அவள் மனம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. எழுந்து மறுப்பு சொல்ல துடித்த மனது அவருக்கு அந்த இடத்தில் அசிங்கமாகிவிடும் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். ஒரு வாரம் ஓடி விட்டது, சண்முகம் மேடையில் சொன்னது போலவே ராதாவை பங்குதாரராக ஆக்க சட்ட பூர்வமான ஏற்பாடுகளை செய்து விட்டார். ராதாதான் பிடி கொடுக்காமல் சார் “ப்ளீஸ்” இது ரொம்ப அதிகம், எனக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கிறீர்கள், அதற்கேற்றவாறு வேலை செகிறேன். இதற்கு மேல் நான் எதிர்பார்க்கவில்லை என விழா முடிந்த அன்றே சொல்லி விட்டாள். சண்முகம் அதையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மறு நாளே ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வந்து இதில் கையெழுத்து போடு இன்று முதல் இந்த கம்பெனியில் நீயும் ஒரு பங்குதாரர் ஆகி விடுவாய் என்று சொன்னார். ராதா ஒரு வாரம் கழித்து சொல்லுகிறேன் என்று அப்பொழுது பின் வாங்கி விட்டாள். ஒரு நாள் ஏதோ நிர்வாகத்தின் அலுவல் காரணமாக உரிமையாளர் சண்முகம் வீட்டிற்கு ராதா சென்றாள். அங்கே முதலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவளை “வா” என அழைத்துவிட்டு முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் உள்ளே சென்று விட்டாள். அடுத்ததாக வந்த அவர்கள் மகன் கூட இவளின் முகத்தை கொஞ்சம் கோபத்துடன் பார்த்தது போல இருந்த்து. எப்பொழுதும் அவளை நன்கு வரவேற்கும் சண்முகம் மனைவியின் பாராமுகமும், அவர் மகனின் கோபப் பார்வையும் ராதாவின் மனதை சலனப்படுத்தின. அவளது மன நிலை உற்சாகம் குறைந்தது போல இருந்தது. சண்முகம் மட்டும் எப்பொழுதும் போல் அவளை உற்சாகமாய் வரவேற்றார். அவளால் அது போல அவருடன் உரையாட முடியவில்லை. எப்படியோ பேசி அவசர அவசரமாக விடைபெற்று வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்த பின்பும் அவளின் மனநிலை சரியில்லமலே இருந்தது. எப்பொழுதும் “வாம்மா” என்று அழைத்துப் போய் பேசும் சண்முகம் சாரின் மனைவி அன்று தன்னிடம் ஏன் விட்டேற்றியாய் நடந்து கொண்டாள். ஏறக்குறைய தன்னை விட ஐந்தாறு வயது இளையவனான அவரின் மகன் ஏன் அவளை கோபத்துடன் உறுத்து பார்க்க வேண்டும். நினைக்க நினைக்க அவளின் நெஞ்சு புரியாத பட படப்புடன் அடித்துக்கொண்டது. என்ன தவறு செய்து விட்டேன்? அவர்கள் குடும்பம் தன்னை வெறுப்புடன் பார்ப்பதற்கு? யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டாள். பட்டென அவள் மனதில் உதித்த்து. ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? அதற்காகத்தான் அவர்கள் தன் மீது கோபம் கொண்டிருக்கிறார்களோ? உடனே அவள் மனம் தெளிவானது. அப்ப்டித்தான் இருக்கும் அதனால்தான் அப்படி நடந்து கொண்டார்கள். இனி நான் செய்ய வேண்டியது என்ன மெல்ல யோசிக்க ஆரம்பித்தாள். மறு நாள் வழக்கம்போல் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.ராதா அவள் அலுவலகத்தில் பரபரப்பாயிருந்தாள் சண்முகம் கார் உள்ளே வந்த்து. ராதா எதிர் கொண்டு இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அவரின் அறைக்குள் உட்கார வைத்தாள் “ஐந்து நிமிடம் சார்” என்று அவரிடம் அனுமதி பெற்று சென்றவளை சண்முகம் வியப்புடன் பார்த்தார் இதென்ன வழக்கமில்லா வழக்கம் ! எதிரில் வந்து நின்ற ராதா ஒரு கவரை அவரிடம் கொடுத்தாள் இதென்ன என்று வியப்புடன் கவரை பிரித்து படித்து பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். என்ன ராதா ஏன் இப்படி செய்கிறாய் ? ராஜினாமா செய்யும் அளவிற்கு என்ன வந்து விட்டது இப்போது? ஒரு புன்னகையுடன் மன்னிக்கணும் சார், எனக்கு போதும்னு தோணிடுச்சு, கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்னு விரும்பறேன். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க, பணிவுடன் சொன்னாள். இங்க யாராவது தப்பா உன்னை பேசிட்டாங்களா? இல்லை நான்தான் உங்க கிட்டே ஏதோ தப்பா சொல்லிட்டேனா? குரலில் ஏமாற்றத்துடன் கேட்டர் சண்முகம். சே..சே..அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சார், கொஞ்சம் அதிகப்படியா வேலை செஞ்சதுல ஓய்வு தேவைப்படுது அதுதான் வேற ஒண்ணுமில்லை. நீ வேணா ஓய்வு எடுத்துட்டு எப்ப வேனா வந்து சேர், இந்த ராஜினாமா கடிதம் எல்லாம் வேண்டாம். இல்லை சார் நான் எல்லாத்துல இருந்தும் சுதந்திரமா இருக்க விரும்புகிறேன். அதனால நான் எப்ப திரும்ப வருவேன்னு சொல்ல முடியாது. அதனால தயவு செய்து என்னுடைய ராஜினாமைவை ஏத்துக்குங்க. அதற்கு மேல் அவர் வற்புறுத்தவில்லை. முகத்தில் வருத்தம் தோன்ற கடித்ததை ஏற்றுக்கொண்டதாக கையொப்பமிட்டு தந்தார். சார் இந்தாங்க “நீங்க கொடுத்த பங்கு ஒப்பந்த பத்திரங்க” ஒரு என்று ஒரு பைலை தனியாக எடுத்து அவர் கையில் கொடுத்தாள். அலுவலகம் முடிந்து வெளியே வந்தவளை ஏற்றிச்செல்ல வந்த கார வேண்டாமென்று சொல்லிவிட்டு பொடி நடையாய் கிளம்பினாள். வானம் மேக மூட்டத்துடன் துளித்துளியாய் விழுந்த மழைத்துளிகளை ஆகாயத்தை பார்த்து முகத்தில் வாங்கிக் கொண்டாள். அவள் மனது அவளுக்கு முன் பறவையாய் பறந்து தன் கூட்டுக்கு சென்றது. அவளுக்காக அவள் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். |
||||||||||||||||||
newly born | ||||||||||||||||||
by Dhamotharan.S on 23 May 2022 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|