LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆதவன்

புதுமைப்பித்தனின் துரோகம்

‘ஜூஸ்?’ என்றான்  ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.
’வேண்டாம்’ என்றான் வேணு
‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான்.
‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான்.
‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’
’பிற்பாடு’ என்றான் வேணு.
ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.
வேணு; வெறுமனே புன்னகை.
‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?’
’ஒரு குறு நாவல்’
‘அபௌட் வாட்?’
‘ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி...’
‘ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்.’
‘எனக்கு மச்சினியே கிடையாது.’
‘ஓ! a wish fulfilment story, then.'
’தேவலையே! நீயும் இலக்கிய பரிபாஷையெல்லாம் நிறைய பிக் அப் பண்ணிண்டு வரயே!’
ராம் கடகடவென்று சிரித்தான். ‘யா, யு நோ... தில்லியிலே நான் மூவ் பண்ற சர்க்கிள் அப்படி; லிட்டரேச்சர்லே இண்டரஸ்ட் உள்ளவங்க - அதுவும் மாடர்ன் டமில் ரைட்டிங்க்ஸை குளோஸா ஃபாலோ பண்ற கேரக்டர்ஸ் - அங்கே நிறைய இருக்காங்க... ஒவ்வொருத்தவனும் கதைகளையும் ஆத்தர்ஸையும் எப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறான்கறே! Those guys are fantastic, I tell you! உன் பெயரைக் கூட அவர்கள் மென்ஷன் பண்ணிக் கேட்கிறேன் அடிக்கடி.’
‘அப்படியா?’
‘ஆமாங்கிறேன். நான் உன் கிளாஸ்மேட், குளோஸ் ஃபிரண்ட்னு சொன்னேனோ இல்லையா, என் மதிப்பு அப்படியே உசந்து போச்சு. ஐ பிகேம் எ கிரேட் ஹீரோ. உன் அப்பியரன்ஸ் பத்தி,ம் ஃபேமிலி பத்தி, வொர்க்கிங் ஹாபிட்ஸ் பத்தியெல்லாம் தூண்டித் துருவி என்னென்னெல்லாம் கேள்விகள்! அதுவும்... (கண் சிமிட்டல்) லேடீசுக்கு உன் கதைகள் ரொம்பப் பிடிச்சிருக்கப்பா. மிஸ் ஷோபான்னு ஜே. என். யு.விலே அமெரிக்கன் ஹிஸ்டரி படிக்கிற பெண் ஒருத்தி... அவ அப்படியே உன் கதைகளிலிருந்து வரிக்கு வரி கோட் பண்ணினா, ஏன் அவர் இப்பல்லாம் நிறைய எழுதறதில்லே? அவரை நிறைய எழுதச் சொல்லுங்க சார், அப்படின்னா. உன் எழுத்துன்னா அவளுக்குப் பைத்தியமாம்.’
வேணு சிரித்தான்.
‘என்னடா, பிளஃப் அடிக்கிறேன்னு நினைக்கிறியா?’
‘சேச்சே! சந்தோஷத்தினாலே சிரிச்சேன்.’
’நிஜமாகவே நீ சந்தோஷமாக இருக்கலாம். நிறையப் பேர் ஆங்காங்கே உன் கதைகளை ஃபாலோ பண்ணிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முந்தி உன் ஆபிசிலிருந்து நாம் கிளம்புகிற சமயத்தில் நீ அதைரியப்பட்டியே, எழுதி என்ன பயன், எதற்காக எழுதிண்டே போகணும், என்றெல்லாம் அலுத்துண்டியே, அதெல்லாம் அவாவசியம்  வேணு!  உனக்கு தெரியலை.. வீணே மனசைத் தளரவிடாதே!’
வேணு உலர்ந்த புன்னகை செய்தான். ‘நீ அந்த ஜே.என்.யு. கேர்ளுடைய போட்டோவையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா... அதைப் பார்த்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும்..’
ராம் சிரித்தான். ‘ஐ நோ... நான் சொல்வதை நீ நம்பவில்லை, அல்லவா! அந்தப் பெண் என் கற்பனை என்று நினைக்கிறாய்’ சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கி அணைத்து, மடக்மடக்கென்று தண்ணீர் டம்ளரைக் காலி செய்தான்.
வெயிட்டர் ஜூஸ் தம்ளர்களுடன் வந்தான். அவன் தம்ளர்களை வைத்துவிட்டுச் செல்லும் வரை ராம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்: ‘புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் என்ற சிறுகதையைப் படித்திருக்கிறாயா?’
வேணுவின் முகத்தில் ஆச்சரியம். (இவன் புதுமைப்பித்தன் வேறு படிக்கத் தொடங்கிவிட்டானா?) ‘ஞாபகமில்லை’ என்றான். “என்ன கதை, சொல்லு? சொன்னால் நினைவு வந்துடும்.... படித்து நாளாச்சே! அந்தக் காலத்திலே ஒரு வரி விடாமல் படிச்சிருக்கேன்...”
‘உன்னை மாதிரிதான் அதிலே ஓர் எழுத்தாளன். என் கதைகளை யார் புரிந்து கொள்கிறார்கள். எழுதி என்னதான் பயன், என்றெல்லாம் தன் நண்பனிடம் அலுத்துக் கொள்கிறான். சில நாள் கழித்து ஏதோ முன்பின் தெரியாத ஒருவன் மன மகிழ்ந்து எழுதிய ஒரு பாராட்டுக் கடிதம் எழுத்தாளனுக்கு வருகிறது... எழுத்தாளனுக்கு ஒரே பூரிப்பாகவும் நிறைவாகவும் இருக்கிறது... ஆனால் கையெழுத்தைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது. சே! தன் சோர்வை அகற்ற நண்பன்தான் இப்படி வேறு பெயரில் எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கோபமும் மறுபடி ஆயாசமும் ஏற்படுகிறது.’
‘தெரியும், தெரியும், ஞாபகம் வந்து விட்டது... கடைசியில் எழுத்தாளன், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தன் கதைகளைப் புரிந்துகொள்கிற ஒருத்தன் வருவான்; அப்போது தானில்லாவிட்டாலென்ன, தன் கதைகளிருந்தால் போதும், என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறான்... இல்லையா?’
‘ஆமாம்’
‘சுவையான சிச்சுவேஷன்....’ என்று வேணு அக்கதையை நினைவு கூறுவது போலச் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ‘புதுமைப்பித்தன் பெரிய ஆள்...’ என்றான்.
‘ஹீ இஸ் எ ஜீனியஸ்.’
இட்டிலி வந்துவிட்டது. வேணுவின் பசிக்கு வேண்டியிருந்தது இட்டிலிதான். புதுமைப்பித்தன் அல்ல. ஆனால் வெறுமனே பரக்கப் பரக்க இட்டிலியைத் தின்ன முற்படுவது தன்னை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டும், என வேணு நினைத்தான்.  ராம் தன்னிடம் எதிர்பார்ப்பது இலக்கியக் கருத்துகள் அல்லது குறைந்த பட்சம் இலக்கிய வம்பு, நான் ஆர்ட்டிஸ்ட், அவன் ஸ்பான்சர், impresario, என் ஏஜெண்ட், என் புகழின் ரட்சகன், என் விசிறிகளின் பக்தியைக் குடம் குடமாக, குடலை குடலையாக, என் காலடியில் சமர்பிக்கும் பூசாரி; இந்த இட்டிலி, ஊத்தப்பம், ஜூஸ் எல்லாம் அவன் அடிக்கும் உடுக்கு. டகடும், டகடும், டகடும்! நான் இப்போது ஆடவேண்டும். அவனுக்குப் பிரத்தியட்சம் ஆக வேண்டும்.
அல்லது இது ஒரு சவாலாகவும் இருக்கலாம். எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்...
வேணு இட்டிலித் துண்டைச் சட்டினியுடன் சேர்த்துத் தின்றான். பேஷ்! பிரமாதமாயிருந்தது. இன்னொரு துண்டைச் சாம்பாருடன் சேர்த்து. அதுவும் ஃபஸ்ட் கிளாஸ். திருநெல்வேலி, தென்காசி முதலிய பிரதேசங்களிலெல்லாம் இட்டிலி இன்னமும் கூட நன்றாயிருக்கும். புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எந்தக் கதையிலும் எழுதவில்லை? ஆசாமிக்கு ஸ்வீட்தான் பிடிக்கும் போலிருக்கிறது. ‘அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும்....’
’வெறும் சூத்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வென்று விட முடியாது... ஓர் எழுத்தாளனாலும் கூட’ என்றான் வேணு.
‘புரியவில்லை’
‘நீ அந்தக் கதையைக் குறிப்பிட்டாயே, அதற்காகச் சொன்னேன். ‘எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன்’ என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்கு போஷாக்குத் தரமுடியுமா? இஸ் இட் பிராக்டிகல்? புதுமைப்பித்தன் தேவையேற்பட்டபோது சினிமாவுக்காக எழுதித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வந்தது, என்பதுதானே உண்மை? எழுத்தாளன் என்பது ஓர் உருவகம் மாத்திரம் அல்ல, வயிறும் வாயும் உள்ள ஒரு பிண்டமும் கூட. இந்தப் பிண்டம் ரசிகனுக்கு எதற்காக, அவனுக்குக் கதைதானே வேண்டும், என்கிற நயமான விரக்தியே அக்கதையில் வெளிப்படுகிறது. ‘சிற்பியின் நரகம்’ பிரச்னையின் ஒரு பக்கம் என்றால் இங்கே பார்ப்பது பிரசினையின் மறுபக்கத்தை. பாராட்டு கிடைத்தாலும் மனம் மகிழ்வதில்லை. அந்தப் பாராட்டின் பரிசுத்தத்தைப் பரிசீலிக்க முயல்கிறது. தோழமையைத் தேடுகிறது, அதே சமயத்தில் தோழமையைக் கண்டு மருளவும் செய்கிறது.’
‘ஃபன்டாஸ்டிக்!’ என்றான் ராம் - அவன் முகம் ஆர்வத்தில் ஜொலித்தது. என் ‘ஆட்டம்’ இவனுக்குப் போதையேற்றத் தொடங்கி விட்டது என்று வேணு நினைத்தான். தொடர்ந்து பேசினான். ‘புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுகென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’
‘அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தை தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.'
'ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?’
‘தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி... ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego... you know what I mean?'
’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். -
‘அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை... அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, .... கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்... என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்...’
‘கயிற்றரவு...’
‘கிளாசிக்!’
‘அப்புறம் அமானுஷியக் கதைகள்... காஞ்சனை மாதிரி... புராண நிகழ்ச்சிகள்... சாப விமோசனம் மாதிரி...’
‘தனித்தனிக் கட்டுரைதான் எழுதணும்’ என்று வேணு இட்லியை முடித்துத் தண்ணீர் குடித்தான். ‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும்தான்  புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’
ஊத்தப்பமும் பூரியும் வந்துவிட்டன. ராமுவுக்குப் பூரி, வேணுவுக்கு ஊத்தப்பம். ஊத்தப்பமும் மிக ருசியாயிருந்தது. ராமின் தயவில் இன்று இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டிபன். ஒரு நாள் மனைவியை கூட்டிக் கொண்டு இங்கே வரவேண்டும். முடியுமோ என்னவோ? கணவனும் மனைவியும் பீச்சுகுப் போய் உட்கார்ந்திருப்பது பற்றிய ஒரு புதுமைப்பித்தன் கதை.... என்ன தலைப்பு அது, ஞாபகமில்லை... கணவன் வறட்டு அறிவுஜீவி, மனைவியுடன் எதையும் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறவன்... நானும் அந்தக் கணவனைப் போலத்தான் ஆகிக்கொண்டு வருகிறேனோ?
ராம் ஒரு வேளை அந்தக் கதையைப் படிக்காமலிருக்கலாம். அவ்வளவு பிரபலமான கதை இல்லை. எப்படியோ மனத்தில் தங்கிவிட்டிருக்கிறது... வேணு ராமிடம் அக் கதையைப் பற்றி பிரஸ்தாபித்தான்.
‘தெரியும். படிச்சிருக்கேன்’ என்றான் ராம். வேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபமாகக்கூட இருந்தது. இவனையெல்லாம் யார் புதுமைப்பித்தனைப் படிக்கச் சொல்கிறார்கள்? பிசினஸ்மேனாக லட்சணமாக ஸ்பேர்டைமில் விஸ்கியடித்துக் கொண்டு, பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் போய்க் கொண்டு இருக்க வேண்டியது தானே!
’ ‘இரண்டு உலகங்கள்’ என்பது தலைப்பு நீ சொல்ற கதைக்கு...’ என்றாம் ராம். ‘இதே தீமை, ‘நினைவுப் பாதை’ என்கிற கதையிலே இன்னமும் பவர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார்... மனைவியுடைய பாடை கிளம்பிண்டிருக்கு... கணவனுக்கு அதைப் பார்த்து மணப்பெண்ணாக அவள் நின்ற கோலம் நினைவுக்கு வர... தான் அவளை அறிந்து கொள்ளவேயில்லை என்று அப்பத்தான் உறைக்கிறது... அப்பா! மனத்தை உலுக்கும் ஒரு சிச்சுவேஷன்!’
இப்போது, இதைக் கேட்டதும் வேணுவுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. ஆமாம் இவன் ஷோ ஆஃப்தான் செய்கிறான். இலக்கியமும் இலக்கிய ரசனையும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்னுடைய ஒரே உடுப்பான இலக்கிய உடுப்பையும் தான் பறித்துக்கொண்டு என்னை அம்மணமாக்க முயலும் குரூர விளையாட்டு.
‘ஆமா, உன்னைப் போன்றவர்களுக்கு அது உலுக்கும் சிச்சுவேஷன்தான்’ என்றான் வேணு. இப்போது அவனுக்கும் ராமைப் பதிலுக்குக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. ‘அதாவது உன் மென்மையும், பெண்ணென்ற கவிதையைப் புரிந்து கொண்டுள்ள சூட்சுமமும் உலுக்கப்பட்டதாக நீ சொல்ல வருகிறாய்... இது உன் வர்க்கத்தைத்தான் காட்டுகிறது. மென்மை, ரசனை, இதெல்லாம் கூட ஒரு மட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் லக்ஸூரி, அப்பா! கணவன் வீட்டுக்கு வெளியிலும், மனைவி வீட்டுக்குள்ளேயும் ஒரே நுகத்தடியில் கட்டப்பட்ட இரு மாடுகளாக உழை உழையென்று உழைத்துக் கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போகிற மிடில் கிளாஸ் அவலத்தையே அக்கதை சித்தரிக்கிறது. கம்பேடிபிலிடி, அறிந்து கொள்ளுதல், இதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான்.’
ராமின் முகம் சிவந்தது. கோபமல்ல, வியப்புத்தான் அதில் அதிகம் தெரிந்தது. ‘இருக்கலாம்...’ என்றான். ‘நீ சொல்வது போல இருக்கலாம்... நீ ஏன் இப்படிப் பதற்றப்படுகிறாய்?’
‘பதற்றமில்லை ஓர் உண்மையைச் சொன்னேன்.’
ராம் பூரியை முடித்தான். வேணு ஊத்தப்பத்தை முடித்தான்.
‘காப்பி?’ என்றான் வெயிட்டர்.
ராம் வேணுவைப் பார்த்தான். வேணு தலையசைத்து ஆமோதித்தான். உடனே இரண்டு கப்கள் காப்பி என்று சொல்லிவிட்டு ராம் கண் சிமிட்டினான். ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று சிரித்தான்.
வேணுவும் வேறு வழியின்றிச் சிரித்து வைத்தான்.
‘புதுமைப்பித்தனுடைய கதைகளையெல்லாம் நானும் என் வைஃபுமாக ஒரு மாசமாகப் படித்துக் கொண்டு வருகிறோம்.... அதனாலே மனசிலே புதுமைப்பித்தனே ஓடிண்டிருக்கார்... தப்பா நினைச்சுக்காதே.’
‘படி, படி, நிறையப் படி.’
‘நான் இன்னொன்று சொல்கிறேன் - தயவு செய்து, இதுவும் என் கிளாஸ் மென்டாலிட்டியைக் காட்டுவதாக நினைக்காதே. வெறுமனே ஒரு எண்ணம்...’
‘சொல்லு’
‘புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது...’
’அப்ஸர்ட்’
’அவருடைய தம்பதியரைப் பற்றின கதைகள் எதிலேயும் மனைவி ஃபிகருக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை, கவனிச்சியோ?’
“ஸோ?’
‘ஆனால், குழந்தை பாத்திரமாக வருகிற கதைகளிலெல்லாம் ஒரு பெண்குழந்தை - புதுமைப்பித்தனுக்கும் பெண்தானே! - தவிர்க்க முடியாமல் இடம் பெறுகிறது. கதையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘சிற்றன்னை’, ‘மகாமசானம்’, ‘ஒரு நாள் கழிந்தது’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,  ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’... எனவே குழந்தை அவருடைய சப்கான்ஷியஸ்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட அளவு, மனைவி ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை என்றுதானே ஆகிறது.’
‘இதெல்லாம் ஸ்டுப்பிட் அனாலிசிஸ். ஒரு முடிவை மனத்தில் இருத்திக்கொண்டு, பிறகு அதற்கான சாட்சியங்களை நிறுவும் காரியம்...’
காப்பி வந்துவிட்டது.
‘இருக்கலாம்’ என்றான் ராம். ‘அதுதான் சொன்னேனே... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்பெகுலேடிங்.’
காப்பியில் சீனியைக் கலக்கும்போது சட்டென்று வேணுவுக்கு இரண்டு கதைகள்... மிகவும் பிரபலமான கதைகள்... நினைவுக்கு வந்தன. ‘வாட் அபௌட் காஞ்சனை?’ என்றான். ‘வாட் அபௌட் செல்லம்மாள்?’ - இக்கதைகளில் மனைவி ஃபிகர் நன்றாக அமைந்திருக்கிறதே!’
‘அக்ரீட். ஆனால் இக்கதைகளில் என்ன நடக்கிறது, அதை யோசித்துப் பார், காஞ்சனையில் பிசாசு மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்க்கிறது.. செல்லம்மாளிலோ, மனைவி ஒரு சீக்காளியாக்கப்பட்டு, சாகடிக்கப்படுகிறாள்....’
‘ஸோ?’
‘மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற எழுத்தாளனின் சப்கான்ஷியஸ் வேட்கையைத்தானே இது புலப்படுத்துகிறது?’
'How far fetched! உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.’
‘இருக்கலாம்’ என்று ராம் காப்பியை ஒரு வாய் உறிஞ்சினான். ‘ஆனால் கே. என். எஸ். அவருக்குமா பைத்தியம்?’
‘கே. என் . எஸ். ஸா!’ வேணு மலைத்துத்தான் போனான். ‘கே.என்.எஸ்ஸைப் பார்த்தியா?’
’எப்பவாவது மாசத்திலே ஒரு நாள், இரண்டு நாள் போவேன் அவர் வீட்டுப்பக்கம்’ என்றான் ராம் அலட்சியமாக. ‘பக்கத்திலேதானே! நான் இருப்பது டிஃபன்ஸ் காலனி, அவர் சவுத் எக்ஸ்டென்ஷன்.’
கே. என். எஸ்! வேண்வுக்குப் பேச்சே எழவில்லை. போன மாதம் கூடச் சென்னைக்கு வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். வேணுவுக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் கூடவே ஒரு கூச்சம், தன்னம்பிக்கையின்மை. அவருடைய இலக்கிய ஹோதா தன்னை அரவணைக்குமா, புறக்கணிக்குமா என்று புரியாமல், போகாமலே இருந்து விட்டான். ராம் அதிர்ஷ்டசாலி, அவன் எழுத்தாளன் இல்லை.
‘அவர் புதுமைப்பித்தனுடன் குளோஸா மூவ் பண்ணினவர் ஆச்சே! அவர் என்ன சொன்னார் தெரியுமா? There may be something in what you say, அப்படின்னார்.’ ராமின் முகத்தில் என்ன ஒரு கொக்கரிப்பு, வெற்றிப் பெருமிதம்!
வேணு இப்போது உண்மையிலேயே அம்மணமாகிப் போனான். ‘படவா!’ என்று  பல்லைக் கடித்துக் கொண்டான். காஞ்சனையில் வருகின்ற மோகினிப் பிசாசு இப்போது சட்டென்று இங்கே தோன்றி ராமின் கழுத்தை நெறித்துக் கொன்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அல்லது, ’செவ்வாய் தோஷ’த்தில் வருகிற ரத்தக் காட்டேரி...
மனத்தில் ஒரு பிளாக் அவுட். ரெஸ்டாரென்டிலிருந்து வெளியில் வரும்போதும் டாக்ஸியில் செல்லும் போதும் ராம் பேசிக் கொண்டு வந்த எதுவும் மனதில் பதியவில்லை. ஒரே சுயவெறுப்பு, சுய அனுதாபம் - சே! நான் ஒரு முட்டாள். நானும் இவனைப் போல பிசினஸ்மேனாகப் போயிருக்க வேண்டும். பணம்தான் முக்கியம். அது இருந்தால் பிற ஹோதாக்களும் படங்களும் தானாக ஏற்பட்டு விடும். இலக்கிய ரசிகன், எழுத்தாளன்...
ஆமாம், ராம் இனி கதைகளெழுதவும் கூடும். என் சாம்ராஜ்ஜியமென்று, அவனைப் போன்ற ஒட்டகங்கள் நுழைய முடியாத ‘ஊசித் துவாரமென்று’, நான் இருமாந்திருந்த இடத்தினுள்ளும்  அவன் நுழைந்துவிடப் போகிறான். எனக்கென்று இனி எந்தக் கிரீடமும் மிச்சமில்லை.
வேணு வீட்டருகே மெயின் ரோடில் அவனை இறக்கிவிட்டு வைஃபை மிக விசாரித்ததாகச் சொல்லச் சொல்லிவிட்டு, ‘பை’ சொல்லிவிட்டு, ராம் சென்றான். வேணு அந்த இருளடர்ந்த திருவல்லிக்கேணிச் சந்தினுள் மாடுகளின் மீது தடுக்கி விழாமல் ஜாக்கிரதையாக நடந்து சென்று, தன் இரண்டு ரூம் அரண்மனைக்குள் நுழைந்தான். பிற்பகலில் பார்த்த ராமின் விசாலமான ஹோட்டல் அறை நினைவு வந்தது. எரிச்சலாக இருந்தது. அந்த அறையிலுள்ள அழகிய மஞ்சத்தில் படுத்தபடி, ராம் புதுமைப்பித்தனைப் படிப்பான். அவனுடைய வீட்டிலும் அத்தகைய படுக்கை இருக்கும். அவன், அவன் மனைவி, இருவருமே படுத்துக்கொண்டு புதுமைப்பித்தனைப் படிப்பார்கள்.
‘காப்பி வேணுமா?’ என்ற மனைவியின் விசாரணை எரிச்சலை அதிகமாக்கியது. ‘ப்ச்’ என்று சூள் கொட்டினான். அதற்கு என்ன அர்த்தமென்று புரியாமல் அவள் நின்று கொண்டே இருந்தாள். அவன் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு வேட்டியைத் தேடினான்... பட்டென்று மனத்தில் குமைந்து கொண்டிருந்த எரிச்சலெல்லாம் குப்பென்று வெடித்தது: ‘என் வேட்டியை எங்கே கொண்டு வச்சே?’
அவள் அமைதியாக அவன் அதுவரை தேடிக்கொண்டிருந்த இடத்திலிருந்தே வேட்டியை எடுத்துக் கொடுத்தாள். ‘காப்பி கலக்கட்டுமா?’ என்று மறுபடி விசாரித்தாள்.
‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!’ என்று அவன் மறுபடி வெடித்தான். இந்த இரண்டாவது வெடிப்புடன் கோபம் சட்டென்று வடிந்து போயிற்று. தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. தான் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் கணவனாக நடந்து கொள்வதாகப்பட்டது. தன் மன உளைச்சல்கள், ஏமாற்றங்களுக்குப் பரிகாரமாக மனைவியை அடித்து நொறுக்கும் கணவனின் பிம்பம்...
குழாயடியில் கால் அலம்புகையில் சட்டென்று புதுமைப்பித்தனின் இன்னொரு சிறுகதை நினைவு வந்தது... ஆபீஸில் எளிய குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவுமிருக்கிற கணவனைப் பற்றிய கதை.... ‘மண்ணாங்கட்டி’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன சடையர் வேண்டிக் கிடக்கிறது? ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துக்காக, தன் வர்க்கத்தினரைக் கோமாளிகளாக்குதல்... துரோகி! உனக்கு வேண்டியதுதான். சொஃபிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டித்தானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லைஃபைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை.
வேணு மனத்தில் இப்போது ஒரு சாந்தம். அதைப் பகிர்ந்து கொள்ள அவன் மனைவியைத் தேடிச் சென்றான்.

by Swathi   on 04 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.