|
|||||
2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் |
|||||
ரஷ்யாவில் தற்போது கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏனெனில், உக்ரைனுடனான தொடர்ச்சியான மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள ரஷ்ய அரசு, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் ஒரு மில்லியன் இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் ரஷ்யா முழுவதும் பல்வேறு நகரங்கள் மற்றும் தொழில்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்பை எளிதாக்க, விசா மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறைகளை விரைவுபடுத்த இந்தியாவில் புதிய அமைப்பை ரஷ்யா நிறுவ உள்ளது. உலோகத் தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப முக்கிய ரஷ்ய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த வேலைகள் அனைத்திற்கும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் என்பதால், பணியாளர்களை ஊக்குவிக்கக் கவர்ச்சிகரமான ஊதியங்கள் வழங்கப்படுகின்றன.
இதில் சில சவால்களும் நிரம்பியுள்ளன. ரஷ்யக் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 15 முதல் 20 பாகை செல்சியஸ் வரை குறையக்கூடும். நிச்சயம் இது பெரும் தடங்கலாக இருக்கும்.
கூடுதலாக, உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மொழித் தடைகள் இந்தியப் பணியாளர்களுக்குச் சிரமங்களை உருவாக்கக்கூடும். ஏனெனில், ரஷ்ய மொழியே இங்குப் பெரும்பாலும் பேசப்படுகிறது. அதோடு சைவ உணவு அரிதாகவே கிடைக்கும். இருப்பினும், இந்தியத் தொழிலாளர்கள் தேவையற்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரஷ்ய நிறுவனங்கள் சூடான ஆடைகள், தரமான தங்குமிடம் மற்றும் உணவை வழங்க உறுதிபூண்டுள்ளன.
இதற்கான ஆட்சேர்ப்பு முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, சில இந்தியத் தொழிலாளர்கள் தற்போது ரஷ்யாவில் பணிபுரிந்து வருகின்றனர். முதலில் சென்ற தொழிலாளர்கள் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் முதற்கட்டப் பயிற்சி பெற்று வருகின்றனர். சுமார் 4,000 இந்தியர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், பணியமர்த்தல் செயல்முறையைச் சீராக்க ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் ஆட்சேர்ப்பு முகாம்களைத் தீவிரமாக அமைத்து வருகின்றன.
இந்தியர்கள் மட்டுமின்றி, இலங்கை மற்றும் வடகொரியா போன்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு முன்பு ரஷ்ய மொழி மற்றும் இயந்திரச் செயல்பாடுகளில் பயிற்சி அளிக்கும் வகையில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே சிறப்பு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
|
|||||
| by hemavathi on 26 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|