சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை முதல் தேதியன்று, சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வருட சித்திரை விஷூ பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வரும் 10ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை காட்டுகிறார்.
அன்றைய தினம் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (11ம் தேதி) காலை 5 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன.
ஏப்ரல் 15ம் தேதியன்று, சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஷூ கனி தரிசனம் நடத்தப்படும். அன்று காலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரியும், மேல்சாந்தியும், விஷூ கை நீட்டம் அளிப்பார்கள்.
தொடர்ந்து 19ம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் நடக்கும். 19ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.
|