நெடுங்காடு மற்றும் வயல்பாடி என்னும் இரண்டு கிராமங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சனைத் தான் படத்தின் கதை கரு.
மன்னார்குடி அருகே உள்ள இரண்டு கிராமங்கள் தான் நெடுங்காடும், வயல்பாடியும். நெடுகாட்டில் நல்ல தண்ணீரும், வயல்பாடியில் உப்பு தண்ணீருமே கிடைப்பதால், நல்ல தண்ணீர் கிடைக்கும் கிராமம் வளமாகவும், உப்புத் தண்ணீர் கிடைக்கும் கிராமம் பஞ்சம் பட்டினியாகவும் இருக்கிறது. இதனால் வயல்பாடி மக்கள் நெடுங்காடு மக்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
இதில் நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா(பாரி). நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது.
நெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும், கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சனை பெரிதாகி பிரச்சனை கலவரமாக வெடிக்கிறது. இதில் அதர்வாவின் அப்பா இறக்கிறார்.
வளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஊர் திரும்புகிறார். அப்போது கவுன்சிலரின் மகளான ஆனந்தியைக் காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் கவுன்சிலர் வீட்டுக்கு தெரிய வர, உடனே அதர்வாவை கூப்பிட்டு மிரட்டுகிறார். ஆனால் அதர்வாவோ ஆனந்தியைதான் திருமணம் செய்வேன் என்று சபதம் போட்டு செல்கிறார்.
இந்நிலையில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த நண்பனை சந்திக்க வயல்பாடி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு உப்புத் தண்ணியை குடித்து வரும் ஊர் மக்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த ஊருக்கு தனது சொந்த ஊரில் இருந்து தண்ணீர் கிடைக்க திட்டமிடுகிறார். எப்படியாவது தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார். இதனால் ஊர் தலைவர்களின் பகையையும் சம்பாரிக்கிறார் அதர்வா.
இறுதியில் அதர்வாவின் உதவியால் வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா. அதர்வா, ஆனந்தியின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
கிராமத்து இளைஞராக பக்காவாக நடித்திருக்கிறார் நாயகன் அதர்வா. நாயகி ஆனந்தி, பாவாடை தாவணியுடன் வந்து கிராமத்து பெண்ணிற்கான வேடத்திற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
ஊர் கவுன்சிலராகவும், நாயகியின் அப்பாவாகவும் வரும் லால், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது நண்பராகவும், ஊர் தலைவராகவும் வரும் ரவிச்சந்திரன் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
அதர்வாவின் நண்பராக வரும் இளம்பரிதி, அப்பாவாக வரும் போஸ் வெங்கட், அம்மாவாக வரும் ராஜ ஸ்ரீ ஆகியோர் தனது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மொத்தத்தில் சண்டி வீரன் நல்ல குடும்ப படம்.
|