சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.
மத்திய அரசு 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2532.59 கோடி (ஆண்டுக்கு 230 கோடி) ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு 147.56 கோடி (ஆண்டுக்கு 13 கோடி) மட்டுமே ஒதுக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் வெளிவந்துள்ள இந்தத் தகவல், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 17 மடங்கு அதிகம் என்பதைக் காட்டுகிறது.
இந்த நிதி ஒதுக்கீடு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "ஓட்டுக்குத் தமிழ்; நோட்டுக்குச் சமஸ்கிருதம்" என்று பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும்தான்; நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்குத்தான்" என்று அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
|