LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

சாஸ்திரியின் வியப்பு!

                                      சாஸ்திரியின் வியப்பு !

 நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், "நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச் சந்தியில் இழுத்துத்தானா உங்கள் உத்தியோகம் நடக்க வேண்டும்? நன்றாயிருக்கிறது, நீங்கள் திருடனைப் பிடிக்கிற அழகு!" என்று ஸ்ரீமதி மீனாட்சி அம்மாள் சாஸ்திரியாரை வெகுவாகச் சண்டை பிடித்ததோடு, சில தடவை கண்ணீர் கூடப் பெருக்கிவிட்டாள். அபிராமியையும் தன்னையும் சாஸ்திரியார் அந்த மாதிரி உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு நாடகத்துக்கு அழைத்துப் போனதை நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

     சாஸ்திரியாருடைய மனோ நிலையோ இதற்கு நேர் விரோதமாயிருந்தது. திருடனைப் பிடிக்காவிட்டாலும், அவன் இத்தனை நாளும் இருந்த இடத்தைச் சாமார்த்தியமாய்க் கண்டுபிடித்து விட்டாரல்லவா? அதனால் போலீஸ் இலாகாவில் அவர் மீதிருந்த சந்தேகமும் அடிபட்டுப் போயிற்று. இதனாலெல்லாம் அவருடைய மனத்தில் முன்னைவிட அதிக உற்சாகமிருந்தது. ஆனால் இதைத் தம் மனைவியிடம் காட்டிக் கொள்ளாமல், மன்னிப்புக் கேட்பது போல் பாவனை செய்து அவளை ஒருவாறு சமாதானம் பண்ணி, திருப்பரங்கோவிலில் கொண்டு போய்ச் சேர்த்தார். பிறகு அவர், "இந்த முத்தையன் விஷயம் பைஸலாகும் வரையில் நமக்கு வீட்டில் இனிமேல் அமைதி இராது. ஆகையால் அவனைப் பிடித்துவிட்டுத் தான் வீட்டுக்கு வருகிறது" என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டு வெளிக் கிளம்பினார்.

     மேற்கே கல்லணை முதல், கிழக்கே சமுத்திரம் வரையில் ஆங்காங்கு எல்லை வகுத்துக் கொண்டு கொள்ளிடக் கரைப் பிரதேசத்தைப் போலீஸார் சல்லடை போட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரிக்கும் அவருடைய தலைமையில் இருந்த போலீஸ் படைக்கும் புரசூர் ஸ்டேஷன் முதல் பூங்குளம் வரையில் உள்ள பிரதேசம் விழுந்திருந்தது. கொள்ளிடப் படுகையில், காடு அதிகமுள்ள பிரதேசம் இதுதான். சேர்ந்தாற்போல் ஊர்கள் அதிகமுள்ள இடமும் இதுதான். முத்தையனுடைய சொந்த ஊர் பூங்குளம் ஆகையால், அந்த ஊருக்குச் சமீபமாக அவன் வந்திருக்க மாட்டான் என்று முதலில் கருதப்பட்டது. ஆனாலும் அப்படி அலட்சியம் செய்யக் கூடாதென்று சாஸ்திரியார் கருதி அந்த ஊருக்குப் பக்கத்திலும் நன்றாய்த் தேடிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். இப்படி அவர் தீர்மானம் செய்வதற்கு ஒரு காரணமும் இருந்தது. 

     சாஸ்திரியும் அவருடைய போலீஸ் படையும் காம்ப் செய்திருந்தது புரசூரில். அங்கிருந்து அவர் போலீஸ் சேவகர்களை இரண்டு மூன்று பகுதியாய்ப் பிரித்துப் படுகையில் தேடிவர அனுப்பிவிட்டு, தாம் ஸைக்கிளில் லயன்கரைச் சாலையோடு போவது வழக்கம். ஒரு நாள் அப்படி அவர் போய்க் கொண்டிருந்தபோது, பூங்குளத்துக்கு அருகில் ஒரு வேளாளப் பெண் மத்தியானம் பன்னிரண்டு மணிக்குக் கொள்ளிடத்தில் குளித்து விட்டு இடுப்பில் குடத்துடன் தன்னந்தனியாக லயன் கரைச் சாலையைக் கடந்து ஊருக்குள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தார். "இந்தப் பெண்தான் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?" என்ற எண்ணம் அவரறியாமலே அவர் மனத்தில் தோன்றியது. பிறகு, "அபிராமிக்கும் இந்தப் பூங்குளந்தானே; ஒரு வேளை இந்தப் பெண் அபிராமிக்கு ஏதாவது உறவாயிருந்தாலும் இருப்பாள்" என்று நினைத்தார். அப்புறம் இன்னொரு வியப்பு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. "பக்கத்தில் இராஜன் வாய்க்காலில் தண்ணீர் அலைமோதிய வண்ணம் போய்க் கொண்டிருக்கும் போது, இந்தப் பெண் எதற்காக இந்த உச்சி வேளையில் கொள்ளிடத்துக்குப் போய்க் குளித்துவிட்டு வருகிறாள்?" என்று ஆச்சரியப்பட்டார்.

     இப்படி அவர் எண்ணமிட்டுக் கொண்டே போன போது, கொஞ்ச தூரத்தில், நாம் முதல் அத்தியாயத்தில் சந்தித்த தர்மகர்த்தாப் பிள்ளை எதிர்ப்பட்டார். உழவு தலைக்குப் போய் விட்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஸப்-இன்ஸ்பெக்டர் அவரிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்து, குளித்துவிட்டுப் போகிற பெண்ணின் பெயர் கல்யாணி என்றும் அவளை இப்போது பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரனாக விளங்கும் முத்தையனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக ஒரு காலத்தில் பேச்சு இருந்ததென்றும் தெரிந்து கொண்டார். இப்போது கல்யாணி பெரிய சொத்துக்காரி என்பதையும் அறிந்தார். இதைக் கேட்டது முதல் அவர் மனத்தில் இன்னதென்று விவரம் தெரியாத ஒரு குழப்பம் குடி கொண்டது. நம்முடைய தேட்டத்துக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அவருடைய உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் என்னமாய் அதைக் கண்டு பிடிப்பது? பகிரங்கமாய் விசாரித்துப் பலன் இல்லாமற் போனால் பைத்தியக்காரத்தனமாக முடியுமே?

     அன்று சாஸ்திரி இரவு 11 மணிக்குத்தான் வந்து காம்பில் படுத்தாரானாலும் தூக்கம் என்னமோ வரவில்லை. பூங்குளம், கல்யாணி, முத்தையன், அபிராமி - இப்படியே அவருடைய எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன. மறுநாள் எப்படியும் பூங்குளத்துக்குப் பக்கத்திலுள்ள காடுகளை நன்றாய்ச் சோதனை போடுவது என்று அவர் தீர்மானித்தார்.

     மறுநாள் காலையில், அவர் போலீஸ்காரர்களைப் பிரித்துவிட்டு, அவர்கள் இங்கிங்கே போக வேண்டும், இன்னின்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த போது புரசூர் ரயில்வே ஸ்டேஷனில் சாதாரண உடுப்புடன் ('மப்டி'யில்) இருந்து, இறங்கி ஏறுபவர்களைக் கவனிக்கும்படி உத்தரவு பெற்றிருந்த போலீஸ்காரன் அவரிடம் வந்து அன்று காலை பாஸஞ்சரில் சாயபு ஒருவர் ஒரு கோஷா ஸ்திரீயுடன் வந்து இறங்கிப் பாச்சாபுரம் என்ற ஊருக்கு வண்டி பேசிக்கொண்டு சென்றதாகத் தெரிவித்தான். அதைக் கேட்ட ஸப்-இன்ஸ்பெக்டர் பலமாகச் சிரித்தார். "ஓஹோ! அப்படியா? திருடன் மறுபடி மதராஸுக்குப் போய் அங்கே கோஷா வேஷம் போட்டுக் கொண்டு ஒரு சாயபுவையும் கூட அழைத்துக் கொண்டு நம்மிடம் அகப்பட்டுக் கொள்வதற்காகத் திரும்பி வந்திருக்கிறானோ?" என்றார்.

     இப்போதெல்லாம் சாஸ்திரிக்கு மற்றவர்கள் கொண்டு வரும் துப்பு எதிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை. முத்தையனைப் பற்றிய தகவல் வேறு யாராலும் கண்டு பிடிக்க முடியாதென்றும் தம் ஒருவரால் தான் அவனைக் கண்டுபிடிக்க முடியுமென்றும் ஓர் எண்ணம் அவர் மனத்தில் வேரூன்றி இருந்தது.

     ஆகவே மேற்படி துப்பில் அவருக்கு அதிகச் சிரத்தை ஏற்படவில்லை. ஆனாலும் அதை அடியோடு அலட்சியம் செய்து விடுவதாகவும் அவருக்கு உத்தேசமில்லை. மேற்கண்டவாறு அவர் கேலியாய்ப் பேசிக்கொண்டிருந்தபோதே, மனத்திற்குள், "பாச்சாபுரம், பூங்குளத்துக்குப் பக்கத்தில்தானே இருக்கிறது? அங்கே இந்த கோஷா ஸ்திரீ மர்மத்தையும் விசாரித்து விட்டால் போகிறது!" என்று எண்ணிக்கொண்டார். 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.