LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்தி - சுய சரிதை

சத்திய சோதனை - மறக்க முடியாத அந்த வாரம்! - 1

தென்னிந்தியாவில் சில நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்து விட்டுப் பம்பாய் போய்ச் சேர்ந்தேன். அது ஏப்ரல் 4-ஆம் தேதி என்று நினைக்கிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்களுக்கு நான் பம்பாயில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஸ்ரீ சங்கரலால் பாங்கர் எனக்குத் தந்தி கொடுத்திருந்தார்.  ஆனால், இதற்கு மத்தியில் டில்லி, மார்ச் 30-ஆம் தேதியே ஹர்த்தாலை அனுஷ்டித்து விட்டது. காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி, ஹக்கீம் அஜ்மல்கான்சாகிப் ஆகிய இருவர் சொல்லுவதுதான் அங்கே சட்டம். ஹர்த்தால் தினம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்ற தந்தி அங்கே தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. அதைப் போன்ற ஹர்த்தாலை டில்லி அதற்கு முன்னால் என்றும் கண்டதே இல்லை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மனிதனைப்போல் ஒன்றுபட்டுவிட்டதாகவே தோன்றியது. ஜூம்மா மசூதியில் கூட்டத்தில் பேசும்படி சுவாமி சிரத்தானந்தஜியை அழைத்திருந்தார்கள். அவரும் போய்ப் பேசினார். இவைகளெல்லாம் அதிகாரிகள் சகித்துக்கொண்டு விடக் கூடியவை அன்று. ஹர்த்தால் ஊர்வலம் ரெயில்வே ஸ்டேஷனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது போலீஸார் தடுத்துச் சுட்டதால் பலர் மாண்டு காயமும் அடைந்தார்கள். அடக்குமுறை ஆட்சி டில்லியில் ஆரம்பமாயிற்று.

சிரத்தானந்தஜி, டில்லிக்கு அவசரமாக வருமாறு என்னை அழைத்தார். பம்பாயில் ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்கள் முடிந்தவுடனேயே நான் டில்லிக்குப் புறப்படுவதாக அவருக்குப் பதில் தந்தி கொடுத்தேன். டில்லியில் நடந்த அதே கதையே லாகூரிலும், அமிர்தசரஸிலும் சில வித்தியாசங்களுடன் நடந்தன. அமிர்தசரஸிலிருந்த டாக்டர் சத்தியபாலும்; டாக்டர் கிச்சலுவும் உடனே அங்கே வருமாறு வற்புறுத்தி என்னை அழைத்தார்கள். அச்சமயம் அவர்களுடன் எனக்குக் கொஞ்சமும் பழக்கமே இல்லை. என்றாலும், டில்லிக்குப் போய்விட்டு அமிர்தசரஸு க்கு வர உத்தேசித்திருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆறாம் தேதி காலை பம்பாய் நகர மக்கள் கடலில் நீராடுவதற்காகச் சௌபாத்திக்கு ஆயிரக்கணக்கில் சென்றனர். நீராடிய பிறகு ஊர்வலமாகத் தாகூர்துவாருக்குப் போனார்கள். ஊர்வலத்தில் ஓரளவுக்குப் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். முஸ்லிம்களும் ஏராளமாக ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். ஊர்வலத்திலிருந்த எங்களில் சிலரை, முஸ்லிம் நண்பர்கள், தாகூர் துவாருக்குப் பக்கத்திலிருந்த மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே என்னையும் ஸ்ரீ மதி நாயுடுவையும் பேசும்படியும் செய்தார்கள்.
சுதேசி விரதத்தையும் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞையையும் மக்கள் அந்த இடத்திலேயே எடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விட்டல்தாஸ் ஜேராஜானி யோசனை கூறினார். ஆனால் அந்த யோசனைக்கு நான் சம்மதிக்கவில்லை. பிரதிக்ஞைகளை அவசரத்தில் கூறி, அவற்றை மக்கள் மேற்கொள்ளும்படி செய்யக் கூடாது என்றும், இதுவரையில் மக்கள் செய்திருப்பதைக் கொண்டே நாம் திருப்தியடைய வேண்டும் என்றும் சொன்னேன். ஒரு முறை செய்துகொண்டு விட்ட பிரதிக்ஞையை மீறி நடக்கக் கூடாது. ஆகையால், சுதேசி விரதத்தின் உட்கருத்துக்களை மக்கள் தெளிவாக அறிய வேண்டும் என்றும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப்பற்றிய பிரதிக்ஞையினால் ஏற்படக் கூடிய பெரும் பொறுப்புக்களைச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முற்றும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். முடிவாக ஒரு யோசனையும் சொன்னேன். பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், அதற்காக மறுநாள் காலையில் திரும்பவும் அங்கே கூடவேண்டும் என்றேன். பம்பாயில் ஹர்த்தால் பூரண வெற்றியுடன் நடந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். இதன் சம்பந்தமாக இரண்டு, மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 
பொதுமக்களால் எளிதில் மீறக் கூடியவைகளாக இருக்கும் சட்டங்கள் விஷயத்தில் மாத்திரமே சட்ட மறுப்புச் செய்வது என்று முடிவாயிற்று. உப்பு வரி மீது மக்களுக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது. அச்சட்டத்தை ரத்துச் செய்யும்படி பார்க்க வேண்டும் என்பதற்குப் பலமான இயக்கம் ஒன்றும் கொஞ்ச காலமாக நடந்துவந்தது. ஆகையால், உப்புச் சட்டங்களை மீறி மக்கள் தங்கள் வீடுகளிலேயே கடல்நீரைக் கொண்டு உப்புத் தயாரிக்கும்படி செய்யலாம் என்று யோசனை கூறினேன். என்னுடைய மற்றொரு யோசனை, அரசாங்கம் தடுத்திருக்கும் பிரசுரங்களை விற்கலாம் என்பது. நான் எழுதிய புத்தகங்களில் இரண்டு ஹிந்த் சுயராஜ், சர்வோதயா (ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூலைத் தழுவிக் குஜராத்தியில் எழுதியது) இவை இரண்டையும் அரசாங்கம் தடுத்திருந்தது. இக்காரியத்திற்கு அவ்விரு புத்தகங்களையும் உடனே எடுத்துக் கொள்ளலாம். அவற்றை அச்சிட்டுப் பகிரங்கமாக விற்பனை செய்வது, சாத்விகச் சட்டமறுப்புச் செய்வதற்கு எளிதான வழி என்று தோன்றியது. ஆகவே, இதற்குப் போதுமான பிரதிகள் அச்சிடப்பட்டன. பட்டினி விரதம் முடிந்த பிறகு அன்று மாலை நடக்கவிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அப்புத்தகங்களை விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஆறாம் தேதி மாலை, தடுக்கப்பட்டிருந்த அப்புத்தகங்களைப் பொதுமக்களிடையே விற்பதற்கு அப் பிரசுரங்களுடன் ஏராளமான தொண்டர்கள் வெளி வந்தனர். ஸ்ரீ மதி சரோஜினி தேவியும் நானும் மோட்டாரில் வெளியே சென்றோம். எல்லாப் பிரதிகளும் உடனே விற்றுப்போயின. விற்று வந்த பணத்தைச் சட்ட மறுப்பு இயக்கத்திற்காகவே செலவிடுவது என்பது ஏற்பாடு. இவ்விரு புத்தகங்களுக்கும், பிரதி நான்கு அணா என்று விலை வைத்தோம். ஆனால், அந்தப் பிரதிகளை என்னிடமிருந்து யாரும் நாலணா மாத்திரமே கொடுத்து வாங்கியதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமானவர்கள் தங்கள் கையிலிருந்த பணம் முழுவதையும் அப்படியே கொடுத்துவிட்டு, அப்புத்தகங்களை வாங்கினார்கள். ஒரு பிரதியை வாங்க ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் வந்து குவிந்தன. ஒரு பிரதியை ஐம்பது ரூபாய்க்கு நான் விற்றதாகவும் நினைவிருக்கிறது! தடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகங்களை வாங்குவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்படக் கூடும் என்பதும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், அத் தருணம் அவர்கள், சிறை செல்லும் பயம் முழுவதையுமே அடியோடு ஒழித்திருந்தார்கள்.  தான் தடுத்திருந்த இப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டது சம்பந்தமாக அரசாங்கம் தனக்குச் சௌகரிய மானதோர் கருத்தை மேற்கொண்டது என்பதை நான் பிறகே அறிந்தேன்.
உண்மையில் விற்கப்பட்ட புத்தகங்கள் தன்னால் தடுக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல என்றும், ஆகவே நாங்கள் விற்றவை தடுக்கப்பட்ட புத்தகங்கள் என்ற விளக்கத்தின் கீழ் வந்தவை என்று கருதப்படவில்லை என்றும் அரசாங்கம் கருதியதாம். புதியதாக அச்சிட்டது, தடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின் மறுபதிப்பேயாகையால், அவற்றை விற்பது சட்டப்படி குற்றமாகாது என்று அரசாங்கம் கருதியது. இச்செய்தி பொதுவாக ஏமாற்றத்தையே அளித்தது.  மறுநாள் காலை சுதேசி, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞைகளைச் செய்து கொள்ளுவதற்காக மற்றோர் கூட்டம் நடந்தது. மின்னுவதெல்லாம் தங்கம் ஆகிவிடாது என்பதை முதல் தடவையாக விட்டல்தாஸ் ஜேராஜானி உணர்ந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு மிகச் சிலரே வந்திருந்தார்கள். அச்சமயம் வந்திருந்த சில சகோதரிகளை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அக்கூட்டத்திற்கு வந்த ஆண்களும் ஒரு சிலரே நான் பிரதிக்ஞை நகலை முன்னதாக தயாரித்துக்கொண்டு வந்திருந்தேன். அப்பிரதிக்ஞையை எடுத்துக்கொள்ளுமாறு வந்திருந்தவர்களிடம் சொல்லுவதற்கு முன்னால், அதன் பொருளை அவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொன்னேன். கூட்டத்திற்குச் சிலரே வந்திருந்தது எனக்கு வியப்பையோ, ஆச்சரியத்தையோ உண்டாக்கவில்லை. ஏனெனில், பொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால் பிரியப்படுவார்கள்.
அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.  ஆனால், இவ்விஷயத்தைக் குறித்து நான் ஓர் அத்தியாயமே எழுத வேண்டும். எனவே, தொடர்ந்து கதைக்கே திரும்புவோம். டில்லிக்கும் அமிர்தசரஸு க்கும் போக 7-ஆம் தேதி இரவு புறப்பட்டேன். 8-ஆம் தேதி மதுராவை அடைந்ததும் நான் கைது செய்யப்படலாம் என்ற வதந்திகள் இருப்பதாக முதன் முதலாக அறிந்தேன். மதுராவுக்கு அடுத்தபடி ரெயில் நின்ற இடத்தில் என்னைப் பார்க்க ஆச்சாரிய கித்வானி வந்தார். என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற திடமான செய்தியை அவர் சொன்னதோடு நான் இடும் வேலையைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்காக அவருக்கு நன்றி கூறினேன். அவசியமாகும்போது அவருடைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டேன் என்றும் அவருக்கு உறுதி சொன்னேன். ரெயில், பால்வால் ஸ்டேஷனை அடைவதற்கு முன்னாலேயே எழுத்து மூலமான உத்தரவு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டு விடுமாகையால் பாஞ்சாலத்தின் எல்லைக்குள் நான் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவு கூறியது. ரெயிலிலிருந்து இறங்கும்படியும் என்னிடம் போலீஸார் கூறினர்.
வற்புறுத்தி அழைக்கப்பட்டிருப்பதன் பேரிலேயே நான் பாஞ்சாலத்திற்குப் போகிறேன். நான் அங்கே போவது அமைதியை உண்டாக்குவதற்கே; அமைதியைக் கெடுப்பதற்காக அல்ல. ஆகையால், இந்த உத்தரவுக்கு உடன்பட என்னால் முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறி வண்டியிலிருந்து இறங்க மறுத்து விட்டேன்.  கடைசியாக ரெயில் பால்வாலை அடைந்தது. மகாதேவ் என்னுடன் இருந்தார். டில்லிக்கு நேரே போய், என்ன நடந்தது என்பதைச் சுவாமி சிரத்தானந்தஜியிடம் கூறி, மக்களை அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளுமாறு அவருக்குச் சொன்னேன். எனக்குப் பிறப்பித்த உத்தரவை மீறி, மீறியதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன் என்பதையும், எனக்கு எந்தத் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஜனங்கள் மாத்திரம் பூரண அமைதியுடன் இருந்து வருவார்களானால் அதுவே நமக்கு வெற்றியை அளிக்கும் என்பதையும் மக்களுக்கு அவர் விளக்கிச் சொல்ல வேண்டும் என்றும் கூறினேன்.  பால்வால் ரெயில்வே ஸ்டேஷனில் என்னை ரெயிலிலிருந்து இறக்கிப் போலீஸ் பாதுகாப்பில் வைத்தார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் டில்லியிலிருந்து ரெயில் வந்தது. என்னை ஒரு மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். போலீஸ் கோஷ்டியும் என்னுடன் வந்தது.
மதுராவை அடைந்ததும் என்னைப் போலீஸ் முகாமுக்குக் கொண்டு போனார்கள். என்னை என்ன செய்யப் போகிறார்கள், என்னை அடுத்தபடி எங்கே கொண்டு போகப்போகிறார்கள் என்பதைச் சொல்ல எந்தப் போலீஸ் அதிகாரியாலும் முடியவில்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார்கள். பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சாமான்கள் ரெயில் ஒன்றில் என்னை ஏற்றினார்கள். மத்தியானம் சாவாய் மாதப்பூரில் என்னை இறக்கினர். லாகூரிலிருந்து மெயில் ரெயிலில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பௌரிங், இப்பொழுது என்னைக் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டார். அவரோடு என்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். நான் சாதாரணக் கைதி என்பதிலிருந்து பெரிய மனிதக் கைதி ஆகிவிட்டேன். அந்த அதிகாரி, ஸர் மைக்கேல் ஓட்வியரைக் குறித்து நீண்ட புகழ் மாலை பாட ஆரம்பித்துவிட்டார். ஸர் மைக்கேலுக்கு என் மீது எந்தவிதமான விரோதமும் இல்லை என்றும், பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டுவிடும் என்றுதான் அவர் பயப்படுகிறார் என்றும் கூறினார். இன்னும் ஏதேதோ சொன்னார்.
கடைசியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விட நானாகவே ஒப்புக்கொண்டு விடுவதோடு பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே வருவதில்லை என்பதற்குச் சம்மதிக்கும்படியும் அந்த அதிகாரி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவுக்கு நான் உடன் பட்டுவிட முடியாது என்றும், நானாகத் திரும்பிப் போய் விடவும் தயாராயில்லை என்றும் அவருக்குப் பதில் சொன்னேன். அதன் பேரில் அந்த அதிகாரி, வேறு வழியில்லாது போகவே என் மீது சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததாக வேண்டி இருக்கிறது என்றார். என்னை என்னதான் செய்யப் போகிறீர்கள்? என்று அவரைக் கேட்டேன். அது தமக்கே தெரியவில்லை என்றும், மேற்கொண்டு வரும் உத்தரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார். தற்போதைக்கு உங்களை நான் பம்பாய்க்கு அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறேன் என்றார். நாங்கள் சூரத் போய்ச் சேர்ந்தோம். அங்கே என்னை மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நாங்கள் பம்பாயை அடைந்ததும், இனி நீங்கள் உங்கள் இஷ்டம்போல் போகலாம் என்று அந்த அதிகாரியே என்னிடம் கூறினார். ஆனால், நீங்கள் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இறங்கிவிடுவது நல்லது உங்களுக்காக அங்கே ரெயில் நிற்கும்படி செய்கிறேன். கொலாபாவில் பெருங்கூட்டம் இருக்கக்கூடும் என்றும் கூறினார். அவர் விருப்பப் படியே செய்வதில் எனக்குச் சந்தோஷம்தான் என்று அவருக்குச் சொன்னேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனக்கு நன்றியும் கூறினார். அவர் யோசனைப்படியே நான் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனில் இறங்கினேன். அப்பொழுதுதான் ஒரு நண்பரின் வண்டி அப்பக்கமாகப் போயிற்று. அந்த வண்டியில் ஏறி ரேவாசங்கர ஜவேரியின் வீடு சேர்ந்தேன். நான் கைது செய்யப்பட்ட செய்தி பொது மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டி அவர்களை வெறி கொண்டவர்களாகச் செய்திருக்கிறது என்று அந்த நண்பர் கூறினார். பைதுனிக்கு அருகில் எந்த நேரத்திலும் கலகம் மூண்டுவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள். மாஜிஸ்டிரேட்டும் போலீஸாரும் இதற்குள்ளாகவே அங்கே போய்விட்டனர்! என்றும் அவர் கூறினார்.  நான் ரேவாசங்கரின் வீடு போய்ச் சேர்ந்ததுமே, உமார் ஸோபானியும் அனுசூயா பென்னும் அங்கே வந்து, உடனே பைதுனிக்கு மோட்டாரில் வருமாறு அழைத்தனர். பொது மக்கள் பொறுமை இழந்துபோய் அதிக ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். அவர்களைச் சாந்தப்படுத்த எங்களால் முடியவில்லை. நீங்கள் வந்தால்தான் அதைச் செய்யமுடியும் என்றார்கள். நான் மோட்டாரில் ஏறினேன். பைதுனிக்கு அருகில் பெருங்கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன்.
என்னைக் கண்டதும் மக்கள் ஆனந்தத்தால் பைத்தியம் கொண்டவர்களைப் போல் ஆகிவிட்டனர். உடனேயே ஓர் ஊர்வலமும் உருவாகிவிட்டது. வந்தே மாதரம் அல்லாஹோ அக்பர் என்ற கோஷங்கள் வானை அலாவி ஒலித்தன. பைதுனியில் குதிரைப் போலீஸ் படை ஒன்றைக் கண்டோம். மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியாக இருக்கும்படி கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், கற்கள் மாரியிலிருந்து நாங்கள் தப்ப முடியாது என்றே தோன்றியது. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் தெருவைத் தாண்டிக் கிராபோர்டு மார்க்கெட்டை நோக்கிப்போக இருந்த சமயத்தில், திடீரென்று குதிரைப் போலீஸ் படையொன்று எதிர்த்து நின்றது. ஊர்வலம் கோட்டையை நோக்கி மேலும் போகாதபடி தடுக்கவே அப்படை அங்கே இருந்தது. கூட்டமோ அதிக நெருக்கமானது. போலீஸ் அணியைப் பிளந்து கொண்டும் கூட்டம் புகுந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அப்படிப் பட்ட பிரம்மாண்டமானதோர் கூட்டத்தில் என் குரல் கேட்பதற்கு இடமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் குதிரைப் படைக்குத் தலைமை வகித்த அதிகாரி, கூட்டத்தைக் கலைக்கும்படி அப்படையினருக்கு உத்தரவிட்டார். உடனே குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிய வண்ணம் கூட்டத்தினரைத் தாக்கினர்.
நானும் காயமடைந்து விடுவேன் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால், நான் பயந்தபடி ஆகிவிடவில்லை. குதிரை வீரர்கள் வேகமாகச் சென்றபோது அவர்கள் ஈட்டி எங்கள் மோட்டார்மீதுதான் உராய்ந்தது. ஊர்வலத்தில் மக்களின் வரிசையெல்லாம் சின்னாபின்னமாகி விட்டன. கூட்டத்தில் எங்கும் ஒரே குழப்பநிலை. பிறகு மக்கள், ஓடத் தொடங்கிவிட்டனர். சிலர், குதிரை, மக்கள் இவர்களின் காலடியில் மிதிபட்டுப் போயினர். மற்றவர்களோ, நசுக்குண்டு காயப்பட்டுவிட்டனர். எங்கும் ஒரே ஜன மயமான அக்கூட்டத்திற்கிடையே குதிரைகள் போவதற்கே இடமில்லை. மக்கள் கலைவதென்றால், அவர்கள் வெளியேறுவதற்கும் வழியில்லை. ஆகவே, ஈட்டி வீரர்கள் கண்மூடித்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து சென்றனர். தாங்கள் செய்தது இன்னது என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பதே எனக்குச் சந்தேகம். அங்கிருந்த நிலைமை முழுவதுமே மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. வெறிபிடித்த குழப்பத்தில் குதிரை வீரர்களும் மக்களும் ஒன்றாகக் கலந்து போய் விட்டனர்.  இவ்வாறு கூட்டத்தைக் கலைத்து அது மேற்கொண்டும் போக முடியாதபடி தடுத்துவிட்டனர். எங்கள் மோட்டாரை மட்டும் போக அனுமதித்தார்கள். கமிஷனர் ஆபீசுக்கு எதிரில் மோட்டாரை நிறுத்தச் செய்தேன். போலீஸாரின் நடத்தையைக் குறித்துக் கமிஷனரிடம் புகார் கூற அதிலிருந்து இறங்கினேன்.

by C.Malarvizhi   on 20 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.